ந்தியாவின் விவசாயிகளில் பெரும்பான்மையினர் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால் நாட்டின் பெரும்பாலான இடங்களில் தலித் மக்கள் இன்னமும் கூலி விவசாயிகளாகவே உள்ளனர் என்று 2011-ல் வெளிவந்த இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு தகவல்கள் கூறுகின்றன.

நிலத்திற்கு உரிமையுள்ளவர்கள் மற்றும் பிறரது நிலத்தில் கூலிக்கு வேலை செய்பவர்கள் என இரண்டு பிரிவாக கணக்கெடுக்கப்பட்டது. தலித் அல்லாத கூலி விவசாயிகளை விட அதிகமான எண்ணிக்கையில் தலித் கூலி விவசாயிகள் உள்ளனர் என்றும் இந்தியாவெங்கும் இந்த சூழல் ஒன்று போலவே இருக்கிறது என்றும் 2011  கணக்கெடுப்பு தகவல்கள் கூறுகின்றன.

பழங்குடி மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும், இராஜஸ்தான், சட்டிஸ்கர் மற்றும் ஜார்கண்டு ஆகிய மாநிலங்களில் சில பகுதிகளிலும் உள்ள தலித் மக்கள் அரிதாகவே விவசாயக் கூலியாக உள்ளனர். (இம்மாநிலங்களில் தலித் அல்லாத மக்களே அதிகம் கூலி விவசாயிகளாக உள்ளனர். மேலும் இவை செழிப்பான விவசாயம் நடக்கும் பகுதிகள் அல்ல. இது பற்றி தனியே எழுத வேண்டும் – வினவு செய்திப் பிரிவு)

“நிலவுடைமை சமூகங்களை விட பழங்குடி சமூகங்களில் நிலம் அனைவருக்கும் சமமாக இருக்கிறது” என்று டெல்லியைச் சேர்ந்த ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் பொருளாதார ஆய்வுகள் மற்றும் திட்டமிடல் மையத்தின் (Centre for Economic Studies and Planning) பேராசிரியர் ஹிமான்சு கூறுகிறார்.

நிலபிரபுத்துவ வரலாறு கொண்ட மாநிலங்களில் தலித்துக்கள் பெரும்பாலும் விவசாயக் கூலிகளாக உள்ளனர். பீகார், அரியானா, பஞ்சாப், குஜராத், ஆந்திரபிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் கிட்டத்தட்ட அனைத்து தலித் மக்களும் விவசாய கூலிகளாகவே உள்ளனர். அம்மாநிலங்களில் பெரும்பாலான மாவட்டங்களில் இந்த நிலைமையே 90 விழுக்காடுக்கு மேல் நிலவுகிறது. (இம்மாநிலங்களில் விவசாயம் ஓரளவுக்கு செழிப்புடன் நடைபெறுகிறது என்பதை கணக்கில் கொள்க.)

படிக்க:
தலித் மக்களைக் காயடிக்கும் தலித் முதலாளிகள் திட்டம் !
சில வருடங்களில் தஞ்சையில் விவசாயம் இருக்காது – கள ஆய்வு

ஆண்டு வரவு செலவு திட்டத்தில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் அனைத்தும் நிலமற்ற கூலி விவசாயிகளை விட நிலமுள்ள விவசாயிகளுக்கே பெரும்பாலும் செல்கிறது என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். அதாவது தலித் விவசாயிகளுக்கு எதுவுமே கிடைப்பதில்லை. (தலித் அல்லாத விவசாயிகளுக்கும் கிடைப்பதில்லை.)

நன்றி : ஹிந்துஸ்தான் டைம்ஸ்
பெரும்பாலான தலித் விவசாயிகளுக்கு நிலம் கிடையாது

“விவசாய மக்களை ஒரே சமூகமாகவும், அவர்கள் அனைவருக்கும் பல்வேறு சலுகைகளை கொடுப்பதாகவும் நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால், சலுகைகள் அனைத்தும் நில உரிமையாளர்களுக்கே செல்கிறது மாறாக கூலி விவசாயிகளுக்கு அல்ல. அவர்களுக்கு என நாம் எதுவுமே கொடுக்கவில்லை” என்று கொல்கத்தாவை சேர்ந்த அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளை (Observer Research Foundation) எனும் சிந்தனைக்குழாமின் பொருளாதாரத்துறை தலைவர் நிலஞ்சன் கோஷ் கூறுகிறார். மற்ற பொருளாதார வல்லுனர்களும் இதை ஒப்புக்கொள்கின்றனர்.

“இத்திட்டங்களினால் (நிலமுள்ள விவசாயிகளுக்கு பயன் தரும் திட்டங்களால்) பெறப்பட்ட சலுகைகள் விவசாய கூலிகளுக்கு அதிகக் கூலியாக கிடைப்பதில்லை. இத்திட்டங்கள் எதுவும் ஒட்டுமொத்தமாக விவசாய கூலிகளை தொடக்கூட இல்லை என்று கூற முடியும்” என்கிறார் டெல்லி பல்கலைக்கழகத்தின் பொருளாதார பயிலகத்தின் பேராசிரியர் அஷ்வினி தேஷ்பாண்டே.

பின்குறிப்பு:

இந்தியாவில் பெரும்பாலான தலித் மக்களுக்கு சொந்தமாக நிலம் இல்லை என்று கணக்கெடுப்பு கூறுவது சரியானது. ஆனால், அதே நேரத்தில் இந்த கணக்கெடுப்பு விவசாயிகளை நிலமுள்ள மற்றும் கூலி விவசாயிகள் என இரண்டு வர்க்கங்களை நேரெதிராக நிறுத்துகிறது. நிலமுள்ள விவசாயிகளில் சிறு குறு, நடுத்தர மற்றும் பணக்கார விவசாயிகள் என வர்க்கங்களாக பிரிந்து இருக்கிறார்கள். இதில் சிறு குறு விவசாயிகளும் பிறரது நிலங்களில் கூலி வேலைக்கு செல்வது இயல்பு. மேலும் இந்திய அளவில் தலித் அல்லாத விவசாயிகளில் நிலமற்றோர் 41% பேர் இருக்கின்றனர். இந்திய அளவில் நிலமற்றோர் 47.3 எனும் போது மேற்கண்ட எண்ணிக்கையும் கணிசமானதுதான். இதை இந்த செய்தியோடு இணைத்துப் பார்க்க வேண்டும்.

90 களுக்கு பிறகு தனியார்மயம் தாராளமயம் உலகமயத்தின் கொள்கைகளை இந்திய அரசுகள் அமல்படுத்த தொடங்கிய பின் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை இலட்சக்கணக்கில் கூடிக்கொண்டே செல்கிறது. இது ஒட்டுமொத்த விவசாயத்துறை கட்டமைப்பே நெருக்கடியில் இருப்பதாக காட்டுகிறது. இந்நிலையில் ஏற்கனவே விவசாயிகளுக்கான சலுகைகள் அனைத்தையும் காலி செய்து விட்ட நிலையில் மோடி அரசுக்கு எதிராக நடந்த விவசாயிகள் போராட்டத்தில் சிறு, நடுத்தர, கூலி விவசாயிகள் கலந்து கொண்டனர். மத்தியப் பிரதேசத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களில் கொஞ்சம் நிலம் உள்ளவர்களும், நிலம் இல்லாதவர்களும் உண்டு.

ஏற்கனவே அரசு நடவடிக்கைகள் [மானியத்தை நீக்குதல், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யாதது…] சிறு, நடுத்தர விவசாயிகளுக்கும் எதிராக இருக்கும் போது இங்கே விவசாய சலுகைகள் தலித் விவசாயிகளுக்கு மட்டும் செல்லவில்லை என்று சொல்வது முழு உண்மையாக இருக்காது. மேலும் தலித் அல்லாத கூலி விவசாயிகளுக்கும் அந்த சலுகைகள் சேர்வதில்லை. தலித் மக்களில் ஆகப்பெரும்பான்மையினர் நிலமற்றவர்களாக இருக்கிறார்கள் என்போது தலித் அல்லாத மக்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் நிலமற்றவர்களாக இருக்கிறார்கள். விவசாயம் என்று பார்க்கும் போது ஒட்டு மொத்த விவசாயமும் திட்டமிட்டு நலிவடைய வைக்கும் போது, இத்தகைய அடையாள அரசியல் ஆய்வுகளின் நோக்கம் என்ன என்ற கேள்வி எழுகிறது.
-வினவு செய்திப் பிரிவு

தமிழாக்கம்: சுகுமார்
நன்றி: இந்துஸ்தான் டைம்ஸ்
கட்டுரையாளர்: ஹாரி ஸ்டீவன்ஸ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க