42-வது புத்தகக் காட்சியையொட்டி புதிய வரவாக இரண்டு சிறு நூல்களை கொண்டுவந்திருக்கிறது, கீழைக்காற்று வெளியீட்டகம். அதில் ஒன்று, “கோவிலுக்குள் காவிப் பாம்பு’’. வினவு இணைய தளம், புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் இதழ்களில் வெளிவந்த தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக இவ்வெளியீடு அமைந்திருக்கிறது.

“கோவிலுக்குள் காவிப் பாம்பு’’ என்ற நூலில், “சபரிமலைத் தீர்ப்பு: எது மத உரிமை? வழிபடும் உரிமையா, தடுக்கும் உரிமையா?’’, “தேவதாசி முறை: நியாயப்படுத்தும் குற்றவாளிகள் !’’, “ஜீன்ஸ் பயங்கரவாதம்: தினமணியின் திருக்கோவில் லூலாயி’’, “கோவில் கடைகள் – மண்டபங்களில் நாத்திகர்களுக்கு உரிமை இல்லை’’, “இந்து அறநிலையத்துறையை ஒழிக்கும் பார்ப்பனிய சதி’’, “அச்சப் பத்து (தெருவில் அருளியது)” – துரை. சண்முகம் கவிதை ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன.

… பூரி ஜெகன்னாதர் கோவிலில் தேவதாசி முறையை நீட்டிக்க முயற்சிகள் நடந்த 1996-ம் ஆண்டில் புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்த கட்டுரை இது. தேவதாசி முறை குறித்த வரலாற்றுப் புரிதலை இக்கட்டுரை ஏற்படுத்தும்.

ஜெகன்னாதபுரி, தீண்டாமையை ஆதரித்தும், பெண்கள் வேதம் படிக்கக் கூடாது என்றும், இன்றுவரை குரலெழுப்பித் திரியும் பூரி சங்கராச்சாரியின் திருத்தலம். இவ்வூர்க் கோயிலின் தெய்வமான பூரி ஜெகன்னாதருக்கு விமரிசையாக நடத்தப்படும் நாபகலிபார் என்ற திருவிழா 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வருடம் (1996) கொண்டாடப்பட இருக்கிறது.

இவ்விழாவில் ஜெகன்னாதருக்காகக் கதறி அழுது, 10 நாட்கள் விதவையாக வாழும் சடங்கு ஒன்றிற்கு தேவதாசிகள் தேவை. கோவிலின் கடைசி தேவதாசியான கோகிலபிரபா 1993-இல் மறைந்த போது தனக்கென்று வாரிசாக யாரையும் நியமிக்கவில்லை. தற்போது உயிருடன் வாழும் பரஸ்மணி, சசிமணி என்ற முன்னாள் தேவதாசிகளும் வாரிசுகள் யாரையும் நியமிக்காமல், கோவில் சேவைகளிலிருந்து விலகி வாழ்கின்றனர்.

இப்படி தேவதாசிகள் இல்லாமல் போனால் நாபகலிபார் திருவிழாவை எப்படி நடத்துவது? பழி பாவத்துக்கு அஞ்சிய போவில் நிர்வாகம் உடனடியாக வேலையில் இறங்கியது. பதிவேடுகளைப் புரட்டியது. 1988-ஆம் ஆண்டில் கஜால் குமாரி ஜெனா என்ற பெண்ணும், அவரது சீடர்களான ஏனைய நான்கு பெண்களும் தேவதாசி சேவைக்கு விண்ணப்பித்திருந்தனர். தூசி தட்டிய விண்ணப்பங்களை 7 ஆண்டுகளுக்குப் பிறகு கையிலெடுத்த நிர்வாகம் ஐவரையும் நேர்காணலுக்கு வருமாறு அழைத்தது.

இந்த நூற்றாண்டின் (20-1ம் நூற்றாண்டு) தொடக்கம் வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் இருந்ததாக தெரிய வருகின்றது. பல நூறு ஆண்டுகள் வலுவாக நீடித்திருந்த தேவதாசி முறை தேவதாசி ஒழிப்புச் சட்டம் மூலம் ஏனைய கோவில்களில் ஒழிக்கப்பட்டாலும் பூரியில் மட்டும் இன்று வரை உயிருடன் உள்ளது ஏன்?

‘’ஏனென்றால் தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் தேவதாசி முறை விபச்சாரமாகப் பரிணமித்தது போல் பூரியில் நடக்கவில்லை. இங்கு மட்டும் தான் உண்மையாக உள்ளது’’ என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.

எது உண்மை? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன கடைசி தேவதாசி கோகில பிரபா உண்மையில் தனது உறவுப் பெண்கள் இருவரை தத்தெடுத்து தேவதாசியாவதற்குரிய அனைத்துப் பயிற்சிகளையும் அளித்துள்ளார். இருப்பினும் அந்தப் பெண்கள் இருவரும் தேவதாசியாவது அவமானகரமானது என்பதை உணர்ந்து இறுதியில் மறுத்துவிட்டனர். மேலும், 1954, 55-இல் கோவில் நிர்வாகத்தை அரசாங்கம் எடுத்துக்கொள்ளும் போது 30-க்கும் மேற்பட்ட தேவதாசிகள் கடவுளுக்கு சேவை செய்து வந்தனர். அவர்கள் அனைவரும் சமூக வாழ்க்கைக்குத் திரும்பி விட்டனர். தேவதாசிகளது ஆரம்பமும் முடிவும் வறுமையோடு பிணைந்திருக்கிறது என்பது ஆச்சரியமில்லா உண்மை. (நூலிலிருந்து பக்.19-21)

1930 களில் தேவதாசி முறையை எதிர்த்துக் கிளம்பிய இயக்கத்தை அறியும்போது வாழையடி வாழையாக சனாதனிகளின் குரல் இன்றைக்கிருப்பது போல் ஒலிப்பதைக் கேட்க முடியும். பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கமும், காங்கிரசாரும் இந்தியப் பெண்கள் சங்கத்தைச் சேர்ந்தவருமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் தேவதாசி முறையை ஒழிக்க போராடி வந்தார்கள்.

தேவதாசி ஒழிப்பு மசோதாவைக் கொண்டு வந்தபோது, இராஜாஜி அதில் அக்கறையில்லாமல் நடந்து கொண்டார் என்பதை முத்துலட்சுமி கூறுகிறார். காங்கிரசில் ராஜாஜிக்கு போட்டியான சத்திய மூர்த்தி அய்யர், ‘’ இன்றைக்கு தேவதாசி முறையை ஒழிக்கச் சொல்வீர்களானால் நாளைக்கு பார்ப்பனர்களை அர்ச்சகராக்குவதையும் எதிர்க்கலாம். தேவதாசிகளை ஒழித்துவிட்டால் பகவானின் புண்ணிய காரியங்களை யார் செய்வார்’’ என்று வாதிட்டார்.

‘’ பகவானுடைய புண்ணியத்தை இதுவரை எங்கள் குலப் பெண்கள் பெற்றுவந்தனர். வேண்டுமானால் இனி அவரது (சத்திய மூர்த்தி அய்யர்) இனப் பெண்கள் அந்தப் புண்ணியத்தை ஏற்றுக்கொள்ளட்டுமே? அது என்ன எங்கள் குலத்திற்கே ஏகபோக காப்பிரைட்டா?’’ என்று திருப்பிக் கேட்டார் முத்துலட்சுமி ரெட்டி.

இந்துத்துவ முகங்களில் மிதவாதத்தை காங்கிரசும், தீவிரவாதத்தை பாரதீய ஜனதாவும் இன்றைக்கு பிரதிநிதித்துவம் செய்வது போன்று அத்னைக்கு ராஜாஜியும், சத்தியமூர்த்தியும் விளங்கினார்கள்.

இச்சூழலில்தான் 1882-இல் தாசி குலத்தில் பிறந்து, இளவயதிலேயே பொட்டுக் கட்டிவிடப்பட்டுவிட்ட இராமாமிர்தம் அம்மையார், தன் சொந்த அனுபவங்களைக் கொண்டு, தேவதாசி ஒழிப்பை வலியுறுத்தி ‘’ தாசிகள் மோசவலை’’ எனும் நாவலை மிகுந்த சிரமத்துகிடையில் 1936-இல் வெளியிட்டார். (நூலிலிருந்து பக்.25-26)

இந்துக்களின் கோவில்களில் மதச்சார்பற்ற அரசுக்கு என்ன வேலை?’’ என்பது புதிய முழக்கமல்ல. தொண்ணூறுகளின் துவக்கத்தில் இருந்தே சங்கரிவார அமைப்புகள் குறிப்பாக இந்து முன்னணி, இந்த முழக்கத்தை எழுப்பி வந்துள்ளது. கடந்த 2-ம் தேதி (பிப்ரவரி, 2018) மதுரை மீனாட்சியம்மன் கோவில் வளாகத்தில் ‘ஏற்பட்ட’ தீ விபத்தைத் தொடர்ந்து தற்போது இக்கூச்சல் காதை அடைக்கிறது.

சொல்லப்போனால், கடந்த காலங்களில் கருவறைத் தீண்டாமை கேள்விக்குட்படுத்தப்பட்ட அனைத்து சந்தரப்பங்களிலும் க உறிப்பாக, ம.க.இ.க. நடத்திய கருவறை நுழைவுப் போராட்டம், சிதம்பரம் கோவிலில் தமிழ்பாடும் உரிமைக்கான போராட்டம், இந்து சமய அறநிலையத்துறை சிதம்பரம் கோவிலுக்கு நிர்வாக அதிகாரியை நியமித்தபோது என எல்லா சந்தர்ப்பங்களிலும் மேற்படி எதிர்க் கோரிக்கையை இந்துத்துவ அமைப்புகள் எழுப்பி வந்துள்ளன. (நூலிலிருந்து பக்.44)

படிக்க:
தில்லைக் கோவில் மீட்பு மாநாடு : உரைகள் , தீர்மானங்கள் , படங்கள்
சிறப்புக் கட்டுரை : இந்து அறநிலையத்துறையை ஒழிக்கும் பார்ப்பனிய சதி !

கோவில்களைக் காப்பாற்றுவது என்பது இனிமேலும் மதம் பிரச்சினை அல்ல கோவில்களுக்கு சமூகத்தில் இருக்கும் செல்வாக்கைக் கணக்கில் எடுத்துக் கொண்டு அவற்றின் சொத்து – பாரம்பரிய வரலாற்று மதிப்பை காப்பாற்ற மக்கள் அனைவரும் களமிறங்கியாக வேண்டும். அறநிலையத்துறையை வலுப்படுத்த வேண்டும்.

கோவில் மட்டுமல்ல, அனைத்து ஆதீனங்களும், மடங்களும் கூட அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட வேண்டும். அவை அனைத்திற்கும் தமிழகம் முழுவதும் ஏராளமான நிலங்களும், இதர சொத்துக்களும் உள்ளன. மதங்களில் பக்தி, ஆன்மீகம் மட்டுமே சாமி யார்களுக்கும், கடவுளர்களுக்கும் சொந்தமாக இருக்க வேண்டும். இவை தவிர அனைத்தும் மக்கள் சொத்துக்களாக அங்கீகரிக்கப்பட்டு அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் மன்னர்களும், நம்பூதிரிகளும் அடித்த கொள்ளையை இன்றுவரை தண்டிக்க முடியவில்லை. பாபாராம் தேவ், அஸ்ராம் பாபு, ராம்ரஹீம், நித்தியானந்தா போன்ற சாமியார்கள் பொறுக்கித்தனத்தில் மட்டுமல்ல, ஊழல் முறைகேடுகளிலும் முன்னணி வகிக்கிறார்கள்.

ஆக, வரும் காலத்தில் இவர்களைக் கட்டுப்படுத்துவது என்பது வெறும் சொத்துக்கள் என்ற வகையில் மட்டுமல்ல, தேச விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கே அது முன் நிபந்தனையாக தேவைப்படுகிறது.

தமிழக கோவில்கள் இந்து அறநிலையத்துறையில் இருந்து இந்துமதவெறிக் கும்பல்களின் கையில் செல்லுமானால் இவர்களுக்கு ஊருக்கு ஊர் ஒரு ஆயுத முகாம் உருவாகிவிடும். அங்கே அப்பாவி மக்களை வெறியேற்றுவது, இளைஞர்களை அடியாட் படைகளாக மாற்றும் வண்ணம் பயிற்சி கொடுப்பது என பல முறைகேடுகள் நடக்கும். இவற்றுக்கு கோவில்களில் உள்ள மக்கள் சொத்துக்கள் பயன்படும். அனுமதிக்க போகிறோமா? (நூலிலிருந்து… பக்.53)

பக்கம்: 56
விலை: ரூ.55.00

♦ ♦ ♦

சென்னையில் 42-வது புத்தகக் கண்காட்சியில் குடும்பத்துடன் பங்கேற்று நூல்களை வாங்குங்கள் !

நாள் : 04-01-2019 முதல் 20-01-2019 வரை
நேரம்: வேலை நாட்கள் : மதியம் 2 – இரவு 9 மணி
விடுமுறை நாட்கள் : முற்பகல் 11 – இரவு 9 மணி

இடம் : ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மைதானம், நந்தனம், சென்னை – 35

அனைத்து முற்போக்கு நூல்களையும் ஒரே இடத்தில் உங்களுக்கு வழங்கக் காத்திருக்கிறது…

சென்னை புத்தகக் காட்சியில் நூல் வாங்க…

கீழைக்காற்று வெளியீட்டகம்

கடை எண் : 147, 148

கீழைக்காற்று அலுவலக முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
அலைபேசி: 99623 90277


இதையும் பாருங்க…

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க