“சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை! ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பேராசிரியர் சுதர்சன் ப‌த்மநாபனை கைது செய்யாதது ஏன்? காவிகளின் பிடியிலிருந்து உயர் கல்வி நிறுவனங்களை மீட்போம்!” – என்ற தலைப்பில் மதுரை ஒத்தக்கடை பகுதியில் புரட்சிகர மாணவர்‍ இளைஞர் முன்னணி மற்றும் மக்கள் கலை இலக்கிய கழகம் இணைந்து 25.11.2019 அன்று கண்டனத் தெருமுனைக்கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்திற்கு பு.மா.இ.மு-வின் தோழர் ரவி தலைமை தாங்கினார்.

அவர் தன்னுடைய தலைமையுரையில், “பாத்திமா ஒரு முஸ்லீம் மாணவி, இந்துக்களுக்கு பிரச்சினை எனும் போது மவுனமாக இருக்கும் தமிழ்நாட்டு எதிர்கட்சிகள் முஸ்லீம் என்றவுடன் ஓட்டு வங்கிக்காக எல்லோரும் இதை கையில் எடுத்து போராட ஆரம்பித்து விடுகின்றனர்” என்று இந்து முஸ்லீம் பிரிவினையை உருவாக்கும் விதத்தில் பாஜக பரிவாரங்கள் பேசுகின்றனர். இப்படி பேசும் இவர்கள் அனிதா மரணத்தின் போது எங்கே போயிருந்தனர். அனிதா ஒரு இந்து மாணவிதானே. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மாணவ மாணவிகள் எத்தனையோ பேர் தொடர்ச்சியாக ஐஐடி-ல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால் அதில் ஒரு பார்ப்பன உயர் சாதி மாணவரும் இல்லாததன் மர்மம் என்ன? என்று கேள்வி எழுப்பியதோடு ஐஐடி என்பது ஒரு பார்ப்பன அக்ரஹாரத்தை போல ‘அவாள்’ வைத்ததுதான் சட்டம் என்பதாகத்தான் செயல்பட்டு வருகிறது. இந்த பார்ப்பன பாசிசத்தை முறியடிக்க வேண்டிய அவசியத்தை மக்களுக்கு உணர்த்தவே இந்த கூட்டம்” என்று பேசினார்.

படிக்க:
♦ மார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு !
♦ சீமான் சிங்கள ராணுவத்தின் தலையை உருவாமல் இட்லியை உருட்டியது ஏன் ? ஒரு சட்னிக் கதை !

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் ராமலிங்கம் பேசும்போது “பாத்திமா மட்டுமல்ல கடந்த 10 ஆண்டுகளில் ஐஐடி -யில் மட்டும் 58 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எல்லாரும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள்தான். ஒரு பார்ப்பன வகுப்பை சேர்ந்தவர்கள் கூட கிடையாது. இது மட்டுமல்ல இம்மாணவியின் தற்கொலை குறிப்பில் சுதர்சன பத்மநாபன்தான் தன்னுடைய மரணத்திற்கு காரணம் என்று தெளிவாக உள்ள நிலையில் அவர் மேல் ஒரு வழ‌க்கு கூட பதிவு செய்து விசாரிக்கவில்லை எனும்போது, பார்ப்பன பாசிசம் எந்த அளவிற்கு நம் நாட்டில் ஊடுருவியுள்ளது என்பதை புரிந்துகொள்ளலாம்.

இது ஐஐடி-யில் மட்டுமல்ல இனி நாடு முழுவதும் நடைபெறப் போகிறது. புதிய கல்வி கொள்கை என்று இவர்கள் கொண்டுவருவதில் மூன்றாம் வகுப்பு முதல் பொது தேர்வு வைக்கும் முறையை கொண்டுவருகிறார்கள். ஏற்கனவே 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கூட பொது தேர்வு தரும் மன‌ அழுத்தத்தை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும்போது மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு என்ன நிலை வரும்? இனி நம் குழந்தைகள் பொது தேர்வில் தோல்வி அடைந்தோ அல்லது பயந்தோ படிப்பில் இருந்து விலகி விட வேண்டும். கல்வி மற்றும் நிர்வாக வேலையில் உயர்சாதியினர் மட்டுமே இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இத்திட்டத்தை செயல்படுத்துகிறார்கள். இதற்கு நல்ல ஒரு உதாரணம் மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு உயர்சாதியினருக்கு மட்டும் இட ஒதுக்கீடு கொடுக்கப்படுவதை சொல்லலாம்” என்று நடைபெறுவது பார்ப்பன பாசிசமே என்று உணர்த்தும் விதமாக பேசினார்.

அடுத்ததாக பேசிய மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் சரவணன் தன்னுடைய உரையில் “பாத்திமாவின் மரணம் தமிழ்நாட்டில் வாழும் நம்மை வெட்கித் தலை குனிய வைத்துள்ளது. அவருடைய தாய் “கும்பல் கொலைகள் நடக்கும் வட நாட்டிற்கு தன்னுடைய மகளை அனுப்புவதற்கு பயந்து தமிழ்நாடுதான் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பானது என்றுதான் தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்தோம்” என்கிறார்.

அதே போல் பார்ப்பன உயர்சாதினர் ஆர்.எஸ்.எஸ் ஆதரவோடு என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் அவர்கள் மீது வழக்கோ, விசாரணையோ இருக்காது என்பது சொல்லப்படாத நடைமுறையாக இருக்கிறது. எஸ்.வி.சேகர், எச்.ராஜா, குருமூர்த்தி போன்றோர் கைது செய்யப்படுவதில்லை. தற்போது சுதர்சன பத்மானாபனும் ஒரு விசாரணைக்குக் கூட உட்படுத்தப்படவில்லை. ஆனால் நம்மை போன்ற ஒடுக்கப்பட்ட பிரிவிலுள்ள மக்களை இந்த அரசு எப்படி நடத்துகிறது?

சமீபத்தில் ஊமச்சிகுளத்தில் ஒரு சிறிய திருட்டு வழக்கில் சம்பந்தபட்ட இளைஞர்களை கைது செய்ததோடு இல்லாமல் விசாரணை என்ற பெயரில் அவர்களின் குடும்ப பெண்களை எல்லாம் இரண்டு நாட்களாக எந்த ஆவணமும் இல்லாமல் லாக்கப்பில் வைத்து அடித்து சித்திரவதை செய்துள்ளது போலீசு. ஆனால் இவர்களுக்கு சுதர்சம் பத்மனாபனையோ அல்லது எச்.ராஜாவையோ கைது செய்ய தைரியமிருக்கா?” என்று கண்டன உரையாற்றினார்.

படிக்க:
♦ காவிகளின் பிடியில் இருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் ! கடலூர் கண்டன கூட்டம் !
♦ முசுலீம் சமஸ்கிருத பேராசிரியரை நீக்கக் கோரி யாகம் வளர்க்கும் காவிகள் !

“இந்தக் குற்றத்தில் சம்பந்தப்பட்ட சுதர்சன பத்மனாபனை நாம் பேராசிரியர் என்று அழைக்க கூடாது அவரை குற்றவாளி என்றுதான் அழைக்க வேண்டும். பாத்திமாவே கடைசியாக இருக்கட்டும். இன்னொரு பாத்திமாவை நாம் பறிகொடுத்து விடகூடாது. அதற்கான உத்திரவாதத்தை இந்த அரசு கொடுக்க வேண்டும் மேலும் இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து தண்டனை கொடுக்க வேண்டும்.” என அப்துல் கலாம் ஆட்டோ சங்க ஆலோச‌கர் திரு ராஜேஷ் கோரிக்கை வைத்தார்.

மதுரை காமராஜர் பல்கலையின் முன்னாள் தமிழ்துறை தலைவர் பேராசிரியர் தோழர் சீனிவாசன் பேசும்போது “பாத்திமா சாதாரணமான மாணவி கிடையாது. ஐஐடி -யில் சேர்வதற்காக நடைபெறும் நுழைவுத்தேர்வில் அகில இந்திய அளவில் முதல் மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அந்தளவிற்கு திறமை வாய்ந்த மாணவி ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்? மேலும் அதில் சம்பந்தப்பட்ட அந்த பேராசிரியரை ஏன் இதுவரை கைது செய்து விசாரணை செய்யவில்லை? மேலும், கல்வி நிலையங்களில் மதம் மற்றும் சாதி பாகுபாடு நிலவுவது பலதரப்பட்ட கலாச்சார மக்கள் வாழும் நாட்டிற்கு மிகப்பெரும் கேடு விளைவிக்கும். இந்தியா முழுவதும் அரசு கல்லூரி பேராசிரியர் அல்லது துணைவேந்தர் ஆக வேண்டும் என்றால் பல கோடிகள் கொடுத்துத்தான் அந்த பதவிக்கு வரமுடியும். இதுதான் நடைமுறையாக உள்ளது. இதை தடுக்காத வரை இப்படிப்பட்ட மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது” என்று பேசினார்.

மக்கள் சிவில் உரிமை கழகத்தின் மாநில செயலாளர் தோழர் முரளி பேசும் போது ஐஐடி-யின் தரத்தை கேள்விக்குட்படுத்தினார். “ஐஐடி சில கண்டுபிடிப்புகளை செய்துள்ளது உண்மைதான். ஆனால் அவை பத்தாண்டுகளுக்கு முன்புதான். நேரு இத்தகைய தொழில் நுட்பக் கல்வி, எதிர்கால இந்தியா வல்லரசாவதற்குத் தேவை என்று கருதினார். ஆனால் அவர் தற்போதைய ஐஐடி-யின் போக்கை பார்த்தால் மிகவும் வருத்தப்படுவார். தொழில்நுட்ப திறமையை கற்றுக் கொடுக்கும் ஐஐடி ஒருபோதும் தம் மாணவர்களை சமூக பிரச்சினைகளை கையாளும் அளவிற்கு ஆளுமைகளாக உருவாக்குவதில்லை. அங்கே உள்ளே அவ்வளவு சாதாரணமாக யாரும் சென்று விட முடியாது. இரவு முழுவதும் ஏதாவது ஒரு தேர்வு என்று இயந்திரங்களை போல மாணவர்களை பிழிந்தெடுப்பதுதான் ஐஐடி-யின் போக்கு” எனவே இத்தகைய கல்வி முறையில் இது போன்ற தற்கொலைகளைத் தடுக்க முடியாது. எனவே ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களை சமூக நோக்க கல்வி நிறுவனங்களாக மாற்றுவதே தீர்வு என்று பேசினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் தோழர் காளிதாஸ் அவர்கள் பேசும் போது “உலகமெங்கும் வரலாறு சொல்வது என்னவென்றால் அறிவுஜீவிகள் அனைவரும் தங்கள் காலத்தின் ஆளும் வர்க்க தத்துவத்திற்கு முட்டு கொடுத்து பேசினார்கள் என்றால் அவர்கள் வானளாவ புகழப்படுவார்கள். இல்லையேல் அவர்கள் கொல்லப்படுவார்கள். கலிலியோ தொடங்கி கெப்ளர், புருனே, ஐன்ஸ்டீன் மற்றும் கல்புர்கி, பன்சாரே, ரோகித்வெமுலா, மாணவி அனிதா மற்றும் தற்போது பாத்திமா வரை இதுதான் நடக்கிறது” என்று நிலப்பிரபுத்துவ மற்றும் முதலாளித்துவ‌ வர்க்க சித்தாந்தத்தின் கொலை வரலாறுகளை பட்டியலிட்டு பொதுமக்களின் ஜனரஞ்சகமான மொழியில் தன்னுடைய அனுபவ செரிவோடு உரையாற்றினார்.

இறுதியாக சிறப்புரையாற்றிய மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் ஆசை “நாம் சாதரண வகுப்பை சேர்ந்த ஏழை மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதை பற்றியே எவ்வளவு நாள்தான் பேசிகொண்டிருப்பது. இதற்குத் தீர்வுதான் என்ன? அனைத்து வகுப்பை சேர்ந்தவர்களும் படித்து முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான் இட ஒதுக்கீடு முறையை கொண்டுவந்தார்கள் ஆனால் அவாள்கள் மட்டுமே கோலோச்சும் ஐஐடி அக்கிரகாரங்களில் இட ஒதுக்கீடு முறையே அமுல்படுத்தப் படவில்லை என்பது தற்போதைய தகவல்களின் மூலம் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

அதே சமயம் உயர்சாதியினருக்கான பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு, சிறு தடை கூட இல்லாமல் பின்பற்றப்படுகிறது. எனில் இந்த நாடும் அரசும் உயர் சாதியினருக்கானது மட்டும்தானா? இந்த நிலையை இந்த அரசுக்கட்டமைப்பில் மாற்ற முடியுமா?” என்று கேள்வி எழுப்பி, இத்தகைய சூழலை முறியடிக்க நாம் அனைவரும் சாதி கடந்து, மதம் கடந்து ஒன்றிணைய வேண்டிய அவசியத்தை மக்கள் உணரும் விதத்தில் உரையாற்றினார்.

சுற்றி இருந்த வணிகர்கள், மக்கள் என பலபேர் இந்க்த கூட்டத்தை கவனித்து கொண்டிருந்தது, அச்சுறுத்தும் பார்ப்பன பாசிசத்தை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்தது.

இறுதியாக பு.மா.இ.மு-வின் தோழர் ஆனந்த் நன்றியுரையாற்றினார். கூட்டம் நிறைவடைந்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
மதுரை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க