காவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்டெடுப்போம் !
அரங்கக் கூட்டம் – புமாஇமு – திருச்சி

”அதிகரிக்கும் சாதி – மத – இன ரீதியான தாக்குதல்கள், திணிக்கப்படும் புராண – இதிகாச குப்பைகள், காவிமயமாகும் உயர்கல்வி நிறுவனங்கள் காவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வியை மீட்போம்” என்னும் தலைப்பில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சார்பில் கடந்த டிச-12 அன்று திருச்சியில் அரங்கக்கூட்டம் நடைபெற்றது.

உரையாற்றும் பிரித்திவ், அரங்கத்தில் பேராசிரியர் மன்சூர் மற்றும் தோழர் கணேசன்.

பு.மா.இ.மு.வின் மாவட்ட அமைப்பாளர் தோழர் பிருத்திவ் தலைமையில் நடைபெற்ற இந்த அரங்கக்கூட்டத்தில், CCCE அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், பேராசிரியர் பி.மு.மன்சூர் மற்றும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் ஆகியோர் உரையாற்றினர்.

தோழர் பிருத்திவ் தனது தலைமை உரையில், ”இன்று அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. சார்பு ஆட்களையே முதல்வர்களாகவும் துணைவேந்தர்களாகவும் நியமித்து வருகிறார்கள். காவி பிடியில் கல்வி செல்கிறது என்றால் இன்னொரு பக்கம் கார்ப்பரேட்டுகள் கல்வியையே கொள்ளை அடித்து செல்கிறார்கள். இந்த கார்ப்பரேட் கொள்ளையையும் வேலையின்மையையும் பற்றி சிந்திக்கவிடாமல் இந்துத்துவா பிரச்சாரத்தை கிளப்பி மக்களை திசைதிருப்பி விடுகிறார்கள்.” என்பதை அம்பலப்படுத்தினார்.

பேராசிரியர் பி.மு.மன்சூர்.

திருச்சி CCCE அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் தமிழ்த்துறைத் தலைவருமான பேராசிரியர் பி.மு.மன்சூர் பேசுகையில், ”நாட்டில் தற்போது நிலவும் வேலையின்மை மிக மோசமாகவுள்ளது. பட்டபடிப்பு படித்து வந்தாலும் இங்கு வேலையில்லை. ஆனால் இவர்கள் கொண்டு வரும் புதிய தேசிய கல்விக்கொள்கை ஏழை, கிராமப்புற மாணவர்கள்  இனி படிக்கவே முடியாத அளவுக்கு மாற்ற போகிறது. பார்ப்பனியம் அந்த காலத்தில் எவ்வாறு நம்மை அடிமை படுத்தி வந்ததோ, அதே போல் இன்று மீண்டும் அதற்கான வேலைகளை பல வழிகளில் செய்து வருகிறது” என்பதனை விரிவாக விளக்கினார்.

தோழர் கணேசன் .

இதனைத்தொடர்ந்து உரையாற்றிய, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன், ”இந்த காலகட்டத்தில் நம் நாடு முழுக்க அச்சம் குடிகொண்டு இருக்கிறது. இந்த அச்சத்திற்கு எதிராக JNU மாணவர்கள் போராட்டம் முன்னுதாரணமாக இருக்கிறது. மாணவர்கள் மாபெரும் பேரணி சென்று பாராளுமன்றத்தையே முற்றுகையிட்டு போராடுகின்றனர்.  சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்திப் தற்கொலை, பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தில் RSS-ன் அராஜகம், உயர் கல்வி நிறுவனங்கள் முழுக்க காவிபிடியில் சென்று கொண்டிருக்கிறது. இவ்வேளையில் இதனை முறியடிக்க JNU மாணவர்கள் போராட்டம் நமக்கு வழிகாட்டுகிறது. அந்த வகையில் இந்த காவிக் கும்பலை விரட்டுவோம்” என்றார்.

தோழர் சுரேஷ்.

இறுதியாக புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் திருச்சி மாவட்ட  பொருளாளர் தோழர் சுரேஷ் வழங்கிய நன்றியுரையோடு அரங்கக்கூட்ட நிகழ்வுகள் நிறைவுற்றன. பேராசிரியர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த அரங்கக்கூட்ட நிகழ்வுகள், காவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கு, ஆசிரியர்கள் – மாணவர்கள் – பெற்றோர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டியதன் அவசியத்தை இக்கூட்டம் உணர்த்தியது.

படிக்க:
அதிகரிக்கும் வங்கி மோசடிகள் : மோடி ஆட்சியின் சாதனை !
அமித் ஷாவின் குடியுரிமை மசோதா இந்து ராஷ்டிரத்துக்கானது !


தகவல்: புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
திருச்சி.
தொடர்புக்கு : 99431 76246.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க