நவம்பர் 25 அன்று “சர்வதேச பெண்களுக்கு எதிரான கொடுமை ஒழிப்பு நாள்” (International Day for the Elimination of Violence against Women) அனுசரிக்கப்பட்டது. இந்த தினத்தன்று ஐ.நா பெண்கள் அவை வெளியிட்ட அறிக்கையில் உலகம் முழுவதும் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு பெண் படுகொலை செய்யப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தினம் 16 நாட்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துகிற பிரச்சாரம் உள்ளிட்ட பல வடிவங்களில் அனுசரிக்கப்படுகிறது. சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 அன்று முடிவடைகிறது.
இந்த தினத்தையொட்டி நவம்பர் 25 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் 2023 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 73.6 கோடி பெண்களில் மூன்றில் ஒரு பெண் தனது பெற்றோர், கணவர், காதலர் அல்லது குடும்ப உறுப்பினர் மூலமாக உடல் அல்லது பாலியல் ரீதியான கொடுமைகளை அல்லது இரண்டு கொடுமைகளையும் அனுபவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டில் உலகளவில் கடத்தப்படும் மனிதர்களில் 10 நபர்களில் நான்கு பேர் வயது வந்த பெண்களாகவும், இரண்டு பேர் பதின்பருவ பெண்களாகவும் உள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, பாலியல் சுரண்டலுக்காகக் கடத்தப்பட்டவர்களில் 90 சதவிகிதம் பெண்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
படிக்க: ஈராக் புதிய சட்ட மசோதா: பெண்கள் மீதான சட்டப்பூர்வ பாலியல் தாக்குதல்!
“பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வீடு கூட மிகவும் ஆபத்தான இடமாக மாறிவிட்டது. கடந்த ஆண்டில் ஒரு நாளைக்கு சராசரியாக 140 பெண்கள், சிறுமிகள் தங்களது கணவர், காதலர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் சுமார் 51,100 பெண்கள், சிறுமிகளின் படுகொலைக்கு கணவர், காதலர் அல்லது உறவினர் காரணமாக இருந்துள்ளனர். இந்த படுகொலைகள் 2022 ஆம் ஆண்டில் 48,800 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. பெண்கள் வேலை செய்யும் இடங்கள் துவங்கி சமூக ஊடகங்கள் வரை அவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து விட்டன. காலநிலை மாற்றம், போர்கள் ஆகியவற்றால் பெண்களுக்கு எதிரான வன்முறை முன்பைவிட தீவிரமடைந்துள்ளன” என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
ஆப்பிரிக்காவில் 2023 ஆம் ஆண்டில் 21,700 பேர் தங்களது கணவர், காதலர் பெற்றோர் உள்ளிட்ட உறவினரால் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்பிரிக்கா மக்கள் தொகையின் அளவோடு ஒப்பிடும்போது பாதிக்கப்பட்ட பெண்களின் சதவிகிதம் அதிகமாகும். அதாவது 1 லட்சம் ஆப்பிரிக்கப் பெண்களில் 2.9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 1 லட்சம் பெண்களில் 1.6 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2024 ஆம் ஆண்டுக்கான பிரச்சாரம், “ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு பெண் கொல்லப்படுகிறாள். பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிணைவோம். எந்த சமரசமும் இல்லை (#NoExcuse)” என்ற முழக்கங்களின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. பெண்கள், மாற்றுத்திறனாளி பெண்கள் மற்றும் வயதான பெண்களுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்க அதிக கவனம் செலுத்து வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.
தினேஷ்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram