மகா கும்பமேளா: நீராடும் பெண்களின் புகைப்படங்களை விற்கும் கிரிமினல் கும்பல்

பெண்கள் குளிப்பது மற்றும் உடை மாற்றுவது போன்ற ரகசியமாகப் பதிவு செய்யப்பட்ட காணொளிகளை வெளியிடும் குழுக்கள் இடம்பெறும் இரண்டு டெலிகிராம் சேனல்களை இந்தியா டுடே கண்டறிந்துள்ளது.

கா கும்பமேளாவில் பெண்கள் குளித்து உடை மாற்றும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்கள் மூலம் பகிரப்படுவதை இந்தியா டுடே உண்மை சரிபார்ப்பு குழு கண்டறிந்துள்ளது. மேலும் இந்த படங்கள் மற்றும் காணொளிகள் விற்பனைக்காக டீசர்களாகவும் பகிரப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஆபாச உள்ளடக்கத்தை ஊக்குவிக்கும் சில முகநூல் பக்கங்கள், “மகா கும்ப் கங்கா ஸ்னான் பிரயாக்ராஜ்” போன்ற தலைப்புகளுடன் பெண்கள் குளிக்கும் காணொளிகளைத் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றன. ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகத் தளங்களில் பெண்கள் ஆற்றங்கரையில் குளித்து உடை மாற்றும் காணொளிகள் ஏராளமாக உள்ளன.

மகா கும்பமேளா தொடர்பான முக்கிய வார்த்தைகளுடன் பகிரப்பட்ட இந்த காணொளிகளை ஆய்வு செய்த அடிப்படையில், பெரும்பாலானவை பழையவை. பிரக்யாராஜிலிருந்து எடுத்தவை அல்ல என்று தெரிகிறது.  இருப்பினும் மகா கும்பமேளாவின் காட்சிகளாகப் பகிரப்படுகின்றன.

பெண்கள் குளிப்பது மற்றும் உடை மாற்றுவது போன்ற ரகசியமாகப் பதிவு செய்யப்பட்ட காணொளிகளை வெளியிடும் குழுக்கள் இடம்பெறும் இரண்டு டெலிகிராம் சேனல்களை இந்தியா டுடே கண்டறிந்துள்ளது. இந்த காணொளிகள் “கங்கை நதி திறந்தவெளி குளியல் குழு”, “மறைக்கப்பட்ட குளியல் வீடியோக்கள் குழு”, “திறந்தவெளி குளியல் வீடியோக்கள் குழு” போன்ற பெயர்களைக் கொண்ட குழுக்களில் பகிரப்படுகின்றன.

டெலிகிராம் தேடுபொறி மற்றும் பகுப்பாய்வு தளமான டெலிமெட்ரியோவின் கூற்றுப்படி, பிப்ரவரி 12 முதல் பிப்ரவரி 18 வரை இந்தியாவில் “திறந்த குளியல்” என்ற வார்த்தையை அதிகம் பேர் தேடியுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த சேனல்களை பார்ப்பதற்கான கட்டணம் ரூ.1,999 முதல் ரூ.3,000 வரை இருக்கும் என்று தெரிகிறது.

பெண்கள் குளிக்கும் காணொளிகள் மற்றும் படங்களைத் தவிர, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களால் பெண்கள் பரிசோதிக்கப்படும் காட்சிகளும் இவற்றில் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றில் பல பெண்களின் அந்தரங்க உறுப்புகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படுவதையோ, பரிசோதிக்கப்படுவதையோ காட்டுகின்றன.


படிக்க: உத்தரப்பிரதேசம் கும்பமேளாவில் 40 பேர் பலி! யோகி ஆட்சியின் கொடூரம்!


இவையனைத்தும் கும்பமேளாவில் பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையிலான எந்த ஏற்பாடுகளும் இல்லையென்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. சமூக விரோதக் கும்பல்கள் அங்கு எந்தவித தங்குதடையுமின்றி, சுதந்திரமாக இந்தக் கேடுகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்வுகள் பெரும் அதிர்ச்சியையும், கண்டனத்தையும் உருவாக்கியுள்ள நிலையில், காணொளிகளை வெளியிட்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அமித்குமார் என்ற யூடியூபரை உ.பி போலீசு கைது செய்துள்ளது.

ஒரு பக்கம் காவி – கார்ப்பரேட் பாசிச கும்பலின் நோக்கத்திற்கேற்ப கும்பமேளா திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டு நடந்து கொண்டிருப்பதைப் பல கட்டுரைகளில் அம்பலப்படுத்தியுள்ளோம்.

பார்ப்பனிய மனுநீதியின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த சமூகத்தில், பெண்களை இழிவாகவும், பாலியல் பண்டமாகவும் பார்க்கும் கண்ணோட்டம் விசம் போல விரவிக் கிடக்கிறது. இன்னொரு பக்கம் தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில், எந்தவிதமான தடைகளுமின்றி ஆபாச இணையதளங்கள், காணொளிகள் போன்றவை சமூக விரோதக் கும்பல்களால் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதன் விளைவாக பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள் சகிக்க முடியாத வண்ணம் அதிகரித்துக் கொண்டுள்ளன. இந்தியாவிற்குச் சுற்றுலா செல்ல வேண்டாம் என்று, வெளிநாட்டுப் பெண்களுக்கு அந்தந்த நாடுகள் கூறுமளவிற்கு கேடு கெட்டுக் கிடக்கிறது.

ஆனால், மனுநீதியைக் கொள்கையாகக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பலுக்குப் பெண்கள் பாதுகாப்பைப்பற்றியெல்லாம் எந்தக் கவலையுமில்லை. அதானி, அம்பானி, அகர்வால் உள்ளிட்ட சேட்டு – மார்வாடி – பனியா கார்ப்பரேட் கும்பல்களுக்கு நாட்டைக் கூறுபோட்டுக் கொடுப்பதில் தடை ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பது மட்டும்தான் அவர்களது கவலை.

செய்தி மூலம்: இந்தியா டுடே


தமிழன்பன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க