நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ளது பெரும்பத்து கிராமம். 02.03.2026 அன்று மாலை பெயிண்டிங் வேலைக்கு சென்றுவிட்டு ஊருக்கு வெளியே நின்று சில இளைஞர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது 3 பைக்குகளில் மங்கி குல்லா, முகமூடி, ஹெல்மெட் அணிந்து வந்த 7 பேர் கொண்ட கும்பல், இளைஞர்கள் அருகே வந்து நின்று எதிர்பாராத வகையில், அவர்களின் மீது கொலை வெறி தாக்குதலை நடத்தியது. முதலில் ஒருவன் தன் கையில் வைத்திருந்த 2 பெட்ரோல் குண்டுகளை அந்த இளைஞர்கள் மீது வீசியுள்ளான். நல்வாய்ப்பாக அது வெடிக்கவில்லை.
‘ஏல வெட்டுங்கல’ என்று ஒருவன் கத்த வாள், அரிவாள், கத்தி மற்றும் இரும்பு கைப்பிடி வைத்த கோடாரி ஆகிய கொடூரமான ஆயுதங்களால் சுற்றியுள்ளவர்களைக் கொல்வதற்கு விரட்டத் தொடங்கியது அந்த கொலைகார கும்பல்.
சினிமாவில் வரும் வன்முறை காட்சிகளை விட மிகக் கொடூரமான சம்பவம் சில நிமிடங்களில் அங்கே நடந்து முடிந்தது. அங்கே நின்றிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓட, வீட்டிற்கு வாங்கிய தோசை மாவுடன் பெயிண்டர் ஜான் மார்க் எனும் பறையர் சாதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் தன் கால்களை இழுத்து ஓட முடியாமல் பள்ளத்தில் விழுந்து உருண்டு, பின் மீண்டும் எழுந்து தன் உயிரைக் காக்க ஓடி இருக்கிறார். அனைவரும் தப்பியோட, வெறிபிடித்த கும்பல் மாற்றுத் திறனாளி என்றும் பாராமல் அவரை பிடித்து கீழே தள்ளி, கல்லில் தலையை வைத்து அழுத்தி தலையிலேயே கோடாரியைக் கொண்டு வெட்டி இருக்கிறது. பலமுறை கொலைவெறியோடு வெட்டியதில் அவரது மண்டை பிளந்து மூளை வெளியே வந்து சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
அதன்பின் அவ்வழியாக வேலை முடிந்து சைக்கிளில் வந்த, ஒடிசாவைச் சேர்ந்த திருநாத் கட்டா என்னும் 50 வயதுடைய செங்கல் சூளைத் தொழிலாளியை, வெறிபிடித்த மிருகம் ஒருவன் அரிவாளால் வெட்டியுள்ளான். என்ன நடக்கிறது என அறியும் முன்னே அந்த இடத்திலேயே சைக்கிளோடு சாய்ந்து விழுந்து அவர் பலியானார்.
அதன் பின்னும் வெறி அடங்காமல் டீக்கடையில் இருந்த டீ மாஸ்டரின் முதுகில் அரிவாளால் அக்கும்பல் வெட்டியது. டீ குடித்துக் கொண்டிருந்த பலரை வெட்டுவதற்குத் துரத்தியது. அருகிலிருந்த கடைக்காரர் தன்னுடைய கடை ஷட்டரை உள்ளிருந்து அடைக்க முயன்ற போது, வெறிபிடித்த ஒருவன் ஷட்டரைத் திறந்து அவரை வெட்டியுள்ளான். இவ்வாறு கண்ணில் கண்ட சுற்றி இருந்தவர்களை அந்த கும்பல் வெட்டிக் கொண்டிருக்க, ஒரு வெறிபிடித்த மிருகம் ஒரு இளைஞனைத் துரத்தியது. அவர் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடி, தன்னுடைய உறவினர் வீட்டில் கண்ணாடி துண்டு பதித்த சுவர் மீது ஏறி குதிக்கும்போது அவரது கையிலும், காலிலும் கண்ணாடித் துண்டுகள் கீறியதால் இரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது. அவரது அலறல் சத்தம் கேட்டு மக்கள் கூடிவிட, வெட்டிக் கொண்டிருந்த கொலைகார கும்பல் தாங்கள் வந்த பைக்கில் கிளம்பியுள்ளது. கிளம்பும்போது ‘நவீன் தேவர் வாழ்க, நவீன் தேவர் வாழ்க’ என கோஷமிட்டபடி கிளம்பியுள்ளது.
நவீன் என்கிற சாதிவெறி, கூலிப்படை ரௌடி நாங்குநேரி மறுகால் குறிச்சி எனும் கிராமத்தைச் சேர்ந்தவன். இவன் நெல்லை கேடிசி நகரில் கொல்லப்பட்ட தீபக் ராஜா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக அறியப்படுகிறான். (தனக்கும், இதற்கும் சம்பந்தமில்லை என அவன் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளான்).
போதை காரணமா?
சிறிய மண்பாதை தடத்தின் வழியாக அக்கும்பல் ஊரிலிருந்து வெளியேறியுள்ளது. தெளிவான அத்தடமானது அவர்கள் மிதமிஞ்சிய போதையில் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டியுள்ளது. திட்டமிட்டு முகமூடி அணிந்து முகத்தை மறைத்துக் கொண்டு அக்கும்பல் வந்துள்ளது. மேலும் சரியாக ஏழை, எளிய உழைக்கும் மக்களைப் பார்த்தே அவர்களின் அரிவாள் வீசப்பட்டுள்ளது. இது சாதிவெறியினால் நடத்தப்பட்டதாகவே இருக்கிறது. மறவர் சாதியினர் எவரையும் வெட்டவில்லை. அவர்கள் கொண்டு வந்த அரிவாளுக்கும் சாதி தெரிந்திருக்கிறது. அந்தளவுக்கு வந்தவர்கள் நிதானமாக இருந்திருக்கிறார்கள் என்பதை நாம் அறிய முடிகிறது.
மீண்டும் கொலைவெறித் தாக்குதல்!
பெரும்பத்து கிராமத்திலிருந்து கிளம்பிய அக்கும்பல் வெறிபிடித்துப் போய், களக்காடு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட கடம்போடு வாழ்வு கிராமத்திற்கும் சென்று சாலையில் நின்ற இரண்டு பேரை கொடூரமாக வெட்டியுள்ளது. வெறிபிடித்த நாய் கண்ணில் கண்டவரை எல்லாம் கடிப்பது போல் இந்த சாதிய, கொலைகாரக் கும்பல் கண்ணில் கண்டவரை எல்லாம் வெட்டியுள்ளது. வெட்டிய இந்த கும்பலுக்கும், வெட்டுப்பட்டவர்களுக்கும் எந்த விதமான முன் பகையும் கிடையாது.
மருத்துவமனையில் அனுமதி!
இதில் நெல்சன் என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றும் கணேசன் என்பவர் தலையில் வெட்டப்பட்டு பாளை மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இருவர் வள்ளியூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் 7 பேர் வெட்டப்பட்டுள்ளனர். தற்போதைய தகவலின்படி மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். வெட்டப்பட்டவர்களில் பலர் நாடார் சாதியினர். வடமாநிலத் தொழிலாளி உள்ளிட்டு கோனார் மற்றும் பறையர், ஆசாரி சாதியினரும் இதில் அடக்கம்.
சகித்துக் கொள்ள முடியாத துயரம்!
கொலை செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி ஜான் என்பவரின் மனைவி வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி. தன் கணவர் சம்பவ இடத்திலேயே இறந்து போனதை அறியாமல் மறுநாள் காலை, அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகக் கருதிக் கொண்டு அவருக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு கிளம்பி உள்ளார். 8 மற்றும் 9 வயதுள்ள இரண்டு பெண் குழந்தைகள் தன்னுடைய அப்பாவிற்கு என்ன நடந்தது என்பதைக் கூட முழுவதும் அறிந்து கொள்ள முடியாமல் நிற்கின்றனர். ஜானின் வயதான அம்மா ‘அய்யோ எனக்கு என் புள்ள வேணும்’ என சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார். இவையெல்லாம் மனிதாபிமானம் உள்ளவர்களின் நெஞ்சை உருக்கும் காட்சிகள்.
படுகொலை செய்யப்பட்ட ஜானின் உடலை வாங்க மறுப்பு தெரிவித்து பெரும்பத்து குடோன் அருகே அமர்ந்து மக்கள் தொடர்ந்து போராடினர்.
சம்பவ இடத்திலேயே பலியான ஒடிசா தொழிலாளி இறந்த இடத்தில் அவர் சிந்திய ரத்தம் இளஞ்சிவப்பில் பரந்து கிடக்கிறது. “அந்த தொழிலாளிக்கு ஊரில் ஒரு பெண் குழந்தை இருக்கிறதாம்” என்று அவ்விடத்தைச் சுட்டிக்காட்டிய ஒரு அம்மாவின் கண்கள் கண்ணீரால் நிரம்பியது. உழைக்கும் வர்க்கத்தினர் ஒருவரின் துயர வாழ்வை இன்னொரு உழைக்கும் வர்க்கத்தினர் புரிந்து கொண்டதனால் வந்த கண்ணீர்தான் அது.
ஒடிசா தொழிலாளியின் உடல் அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டு நெல்லையில் எரியூட்டப்பட்டது. பிழைக்க வழியின்றி, மொழி தெரியாத ஊரில் தன் உழைப்பு ஒன்றையே மூலதனமாக்கி தனது குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார் அந்த வடமாநிலத் தொழிலாளி. இன்று சாதிவெறியினால் ஒரு தொழிலாளியின் குடும்பம் நிர்க்கதியாக நிறுத்தப்பட்டுள்ளது.
பெயிண்டர், டீக்கடைக்காரர், விவசாயிகள் உள்ளிட்டு இதில் பாதிக்கப்பட்ட அனைவரும் உழைக்கும் மக்கள்.
திட்டமிட்டுத் தூண்டிவிடப்படும் சாதிவெறி!
கொலைகாரர்கள் இரண்டு நாட்களாக இப்பகுதியை நோட்டமிட்டு, டீக்கடையில் யார், யார் வருகிறார்கள் என்ற நோட்டம் பார்த்து அதன்பின் ஊருக்குள் புகுந்து வெட்டியதாக செய்தி வெளியாகி உள்ளது. மேலும் கொலைகாரர்கள் வந்தது எம்.டி பிளாக் கலர் மற்றும் டூ 20 (ட்வொண்டி) ப்ளூ கலர் பைக்கில். இவை இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த பைக்குகள். இப்பகுதி தொழில் வளம் நிறைந்த பகுதி அல்ல. மிகவும் பினதங்கிய உழைக்கும் மக்கள் வாழக்கூடிய பகுதி இது. இந்த இரட்டைக் கொலை மற்றும் பொதுமக்கள் மீதான கொலை முயற்சியில் ஈடுபட்ட கொலையாளிகள் அனைவரும் 18 வயதிலிருந்து 21 வயதுக்குள் இருப்பவர்கள். இவர்களிடம் விலை உயர்ந்த பைக்குகள், கஞ்சா, சாராயம், கைகளில் ஆயுதங்கள் எப்படி வந்தது. இதற்கு பின்னால் உள்ள சதிகாரர்கள் யார் என்பதை விசாரிக்க வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன் நெல்லை மேலப்பாட்டம் மனோஜ் வெட்டப்பட்ட போது நம்மிடம் பேசிய தேவர் ‘சாதி’ இளைஞர்கள், சாதித் தலைவர்களால் கோவில் திருவிழாக்களிலும், குருபூஜை என்கிற பெயரிலும், ஊருக்குள் இளைஞர்கள் மத்தியில் சாதிவெறி தூண்டிவிடப்படுகிறது என்பதைக் கூறினர். மேலும் இளைஞர்களுக்குத் தேவையான பணம், சாராயம் உள்ளிட்டு சாதிவெறி போதையும் ஆதிக்க சாதிவெறி பிடித்த தலைவர்களால் திணிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் வெட்டியவர்கள் அனைவரும் மறவர் சாதியினர். கண்ணன் (21), உச்சி மாகாளி (எ) மிட்டாய் (20), வசந்தகுமார் (21), அந்தோணி மைக்கேல் (18), சுப்பையா (எ) சுபாஷ் (19), கல்யாணி (19), ராஜா (19) ஆகிய 7 பேர் மக்கள் போராடியதன் காரணமாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட 7 பேரில் மாணவன் சின்னதுரையை வெட்டிய கல்யாணி, சுபாஷ் ஆகிய இரண்டு கிரிமினல்களும் அடக்கம். இந்த கட்டமைப்பில் சிறைக்குச் சென்றாலும் குற்றவாளிகள் திருந்துவதில்லை. சிறைக்குச் சென்றவர்கள் தங்களுக்குள் வாட்ஸ்அப் க்ரூப் உருவாக்குவது, சாதிரீதியாக அணி சேர்வது, தொடர் குற்றங்களில் ஈடுபடுவது ஆகியவை தொடர்கிறது.
சாதி ஆதிக்கம்!
நாங்குநேரி சின்னதுரை மீதான தாக்குதல் உள்ளிட்டு தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சாதிய தாக்குதல்கள், பயிர் விளைந்த வயற்காட்டில் மாடுகளை மேய விடுவது, தனியாக வரும் ஆண்களிடம் பணம் பறித்து விட்டு தாக்கிவிட்டு ஓடுவது என மறவர் சாதியைச் சேர்ந்த சிலரால் திட்டமிட்டு பதற்றமான ஒரு சூழல் இப்பகுதியில் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்ட இது போன்ற தாக்குதல்கள் உழைக்கும் மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, இப்பகுதி வாழ் உழைக்கும் மக்களுக்கு சாதி ரீதியாக பல இன்னல்கள் தற்போது வரை கொடுக்கப்பட்டுள்ளது.
சாதி வெறியாட்டத்தின் புதிய நிலை!
ஒரு கலவரம் நடக்கும்போது கண்ணில் கண்டவர்களை எல்லாம் வெட்டுவது, கொல்வது நடக்கும். ஆனால் இங்கு நடத்தப்பட்ட தாக்குதல், கலவரத்தைத் தூண்டிவிடும் உள்நோக்கத்தில் நடத்தப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாகப் பதற்றமான சூழல் நிலவும் இடமாக இருந்தாலும் இது ஒரு புதிய நிலைமையாக தற்போது இருக்கிறது.
தென் மாவட்டங்களில் நடைபெற்ற பல கலவரங்களில் பதிலுக்குப் பதில் எண்ணிக்கைக்காகக் கொலை செய்வது உண்டு. தேவர் சாதியைச் சேர்ந்த ஒருவர் பலியானால் பதிலுக்கு ஒரு பள்ளர் சாதியைச் சேர்ந்தவரை வெட்டுவது நடந்துள்ளது. இங்கே முன்பகை தேவையில்லை. எண்ணிக்கையே முக்கியமாக இருக்கும். மேலும் ஒருவரைப் பலர் கூடி வெட்டுவது என்பதும் நடந்துள்ளது. ஆனால், முகமூடி அணிந்து கொண்டு கண்ணில் பட்டவர்களை எல்லாம் வெட்டுவது என்பது இதுவரை நடக்காதது. தன்னெழுச்சியாக இன்றி தூண்டுதலின் பேரிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
போலீஸ், அதிகார வர்க்கம், சாதிவெறி…
போராடும் மக்களை ஒடுக்கும் போலீஸ், தனது கடமையை ஒழுங்காகச் செய்யவில்லை. டீக்கடையிலிருந்து 100 மீட்டருக்கு அருகே போலீஸ் செக் போஸ்ட் உள்ளது. சாதாரணமாக வருபவர்களை எப்பொழுதும் சோதனையிடும் போலீஸ், சம்பவம் நடந்த அன்று அந்த கொலைகார கும்பல் முகமூடி அணிந்து, பயங்கர ஆயுதங்களுடன் ஊருக்குள் நுழைகையில் அங்கே இல்லை. அருகில் மாட்டப்பட்டிருந்த ஒரு சி.சி.டி.வி கேமரா வேலை செய்யவில்லை. தெருவிளக்குகள் எப்பொழுதும் எரிவதில்லை. பதற்றம் நிறைந்த இப்பகுதியில் போலீசும், மாவட்ட நிர்வாகமும் மிகவும் அஜாக்கிரதையாக நடந்து கொண்டுள்ளது.
கவின் கொலை வழக்கில் குற்றவாளிகளுடன் நெருங்கிய தொடர்புடையவர் என பேசப்பட்ட தேவர் சாதியைச் சேர்ந்த பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் விசாரிக்கப்படாததோடு, அருகாமைப் பகுதியான தூத்துக்குடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக தேவர் சாதிவெறிச் சங்கங்கள் வரிந்து கொண்டு வக்காலத்து வாங்கின. போலீசு, உளவுத்துறை உள்ளிட்டு பல அதிகாரிகள் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்கள், அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை இதுவரை நடைமுறைக்கு வரவில்லை.
இந்த இரட்டைக் கொலையில் சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் அரிவாளுடன் பதிவிட்டு, ‘இங்க நாங்கதான் கிங்’, ‘அண்ணன்தான் ராஜா’ என போஸ்ட் போட்டுள்ளனர். அப்பொழுதே இவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுத்திருந்தால் இவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது என பொதுமக்கள் கூறுகின்றனர். கவினை படுகொலை செய்த சுர்ஜித்-தும் கொலை செய்வதற்கு முன் இவ்வாறான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தான்.
தொடர்ச்சியான சாதியப் படுகொலைகள், தாக்குதல்களை கைகட்டி போலீஸ், மாவட்ட நிர்வாகமும் வேடிக்கை பார்க்கிறது. சொல்லப் போனால் முறையான நடவடிக்கையின்றியும், குற்றத்தை மூடிமறைப்பதன் மூலமாகவும் இக்குற்றங்களுக்குத் துணை போகிறது.
சாதிவெறியைத் திசைதிருப்பும் முயற்சி!
முதலில் இச்சம்பவத்தில் சாதிவெறியின் பங்கை மறைத்து தி.மு.க-வுக்கு எதிராக, டாஸ்மாக் போதைக்கு எதிரான பிரச்சனையாக அடையாளப்படுத்தப்பட்டு மடைமாற்றப்பட்டது. அடுத்ததாக முன்பகை மற்றும் கூலிப்படையினருக்கு இடையிலான பிரச்சினைகள்தான் காரணம் என்று தற்போது குறிப்பிடப்படுகிறது. ஆனால் இதில் பாதிக்கப்பட்டது பொதுமக்கள். நாடார், கோனார், பறையர், வட மாநிலத் தொழிலாளி என அனைவரும் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் மீது திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அப்படி எனில் இந்த வன்முறை கலவரத்தை தூண்டும் நோக்கிலேயே செய்யப்பட்டுள்ளது. போலீஸ், அ.தி.மு.க, பா.ஜ.க, அவர்களை ஆதரிக்கும் ஊடகங்கள் திட்டமிட்டே இது போன்ற செய்திகளைப் பரப்பி வருகின்றன.
தி.மு.க-வும் ஓட்டு அரசியலுக்காகக் கடுமையான நடவடிக்கை எடுக்காமல், இது போன்ற குற்றங்களை முளையிலே கிள்ளி எறியாமல் மொண்ணையான போக்கை கடைப்பிடிக்கிறது. கடுமையான நடவடிக்கை எடுத்தால் ஆதிக்கச்சாதி வெறியர்கள், அ.தி.மு.க, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல்கள் தங்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து ஆதிக்கச் சாதியினரின் ஓட்டுக்களை தங்களுக்கு விழாமல் தடுத்து விடுவார்கள் என அஞ்சி தீவிரமான நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்படும் உழைக்கும் மக்களைக் கைகழுவி விடுகிறது.
சாதிவெறியைத் தூண்டும் சாதிவெறிச் சங்கங்கள்!
உற்பத்தி சக்திகளின் முன்னேற்றத்தாலும், நகரமயமாக்கலின் விளைவாலும் அனைத்துச் ‘சாதி’ மக்களும் ஒன்றாகக் கூடி, சாதி கடந்து புழங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் சாதி இருந்தாக வேண்டும் என்கிற கருத்தாக்கம் மற்றும் சாதியின் பெயரால் திணிக்கப்பட்ட ஆதிக்கம் மெல்ல, மெல்ல ஆட்டம் காணத் தொடங்குகிறது. இதனால் பதற்றமாகும் சாதி வெறியர்கள் தங்கள் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ள, இது போன்று மூர்க்கமாகத் தாக்குகின்றனர். அதனால் தாக்குதல்கள் இது போன்ற புதிய வடிவங்களை எடுக்கின்றன. இக்கும்பல் சமூகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி பின்னால் இழுக்க முயல்கிறது. இப்படி செய்யத் தூண்டுபவர்கள் ஆதிக்கச் சாதி வெறிச் சங்கங்களாக தங்களைக் கட்டமைத்துக் கொண்டு தங்கள் சொந்த சாதி இளைஞர்களையே தங்களது சுயநலத்திற்குப் பலியாக்குகின்றனர். பகுதியில் நடைபெற்ற எண்ணற்ற கொலைகளுக்கும், சாதிவெறி சங்கங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
மக்கள் போராட்டம்!
இதே நாங்குநேரியில் சில ஆண்டுகளுக்கு முன் மறவர் சாதி மாணவர்களால், மாணவன் சின்னதுரை வெட்டப்பட்ட நினைவை மீண்டும் இச்சம்பவம் மக்கள் மத்தியில் நினைவு படுத்தியுள்ளது. அதற்கும் சேர்த்தே தற்பொழுது போராடுகின்றனர். போராடும் மக்களைத் தடுக்கும் போலீஸிடம் “எங்கள் உயிருக்கு கேரன்டி தருகிறோம் என எழுதித் தர உங்களால் முடியுமா” என மக்கள் கேட்கின்றனர்.
நடந்த கொலைவெறி சம்பவத்தைக் கண்டித்து சாதி கடந்து, பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒற்றுமையாகக் கூடி, ஏர்வாடி – நாங்குநேரி பிரதான சாலையில் இந்திரா காலனி அருகே சாலை மறியல் செய்தனர். ஆனால் போலீஸ் அதைத் தடுத்து கலைத்தது. ஆயினும் குற்றவாளிகளைக் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும், இதற்குப் பின்னணியாக இருந்து செயல்படுபவர்களைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மக்கள் மற்றொரு இடத்தில் ஒன்றாக இணைந்து போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
இந்த சம்பவத்திற்குப் பின் உழைக்கும் மக்களின் சாதி கடந்த ஒற்றுமை நிறுவப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டதன் அடிப்படையில் இணைந்த இந்த ஒற்றுமை நீடிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்காக மறவர் சாதியைச் சேர்ந்தவர்கள் இரத்தம் கொடுத்ததாகச் செய்திகள் வருகிறது. இதை நாம் வரவேற்க வேண்டும். ஆதிக்கச் ‘சாதியைச்’ சேர்ந்த உழைக்கும் மக்கள், தங்கள் பெயரைச் சொல்லிக் கொண்டு பிற ‘சாதி’ உழைக்கும் மக்களைத் தாக்கும் சாதிவெறியர்களை அம்பலப்படுத்தி, அவர்களைத் தனிமைப்படுத்த வேண்டும்.
தாங்கள் நிம்மதியாக வாழ வேண்டுமெனில் சாதியின் பெயரால் நடத்தப்படும் அநீதிகள் தடுக்கப்பட வேண்டும். அனைத்து சாதியைச் சேர்ந்த கூலிப்படையினரையும் கைது செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். தேவர் சாதியைச் சேர்ந்த மணக்கரை பாயாசம் (எ) பரமசிவம், லெஃப்ட் முருகன், நவீன், பள்ளர் சாதியைச் சேர்ந்த எஸ்டேட் மணி, குமுளி ராஜ்குமார், நாடார் சாதியைச் சேர்ந்த ராக்கெட் ராஜா, ஜேக்கப்… உள்ளிட்ட அனைத்து சாதியிலும் உள்ள கூலிப்படையினரும் களையெடுக்கப்பட வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிசக் கும்பல்!
வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன், “தென்மாவட்டங்களில் சாதி வெறியைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட சங்பரிவாரங்கள் முயல்கின்றனர் என ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதற்கு ஒத்திகையோ இந்த செயல் என்று எண்ணத் தோன்றுகிறது. இதன் பின்னணியை முழுமையாக ஆய்ந்தறிய வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகிறோம்” என்று கூறியிருப்பது கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.
தமிழ்நாட்டில் காலூன்ற தருணங்களை எதிர்பார்த்திருக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க இந்துத்துவ கும்பல், ஆதிக்க சாதிவெறிச் சங்கங்களின் மூலமாக தலித் மற்றும் உழைக்கும் மக்களின் மீது தாக்குதல் தொடுத்து, உழைக்கும் மக்கள் மத்தியில் சாதி ரீதியான பிளவுகளை ஏற்படுத்தி வருகிறது. இதன்மூலம் தனது ஆளுகைக்குக் கீழ் தமிழ்நாட்டைக் கொண்டு வரத் துடிக்கிறது. ஆனால் அதன் திட்டம் பலிக்காது. ஏனெனில் இது தமிழ்நாடு.
உழைக்கும் மக்கள், புரட்சிகர, ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகக் களமிறங்குவோம். ஆதிக்கச் சாதி வெறிச் சங்கங்களையும், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலையும் தடை செய்யப் போராடுவோம். உழைக்கும் மக்கள் போராட்டம் வெல்லட்டும்.
பதிவு
மக்கள் அதிகாரக் கழகம்,
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள்.
9385353605.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











