நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்திற்குள் கடந்த மார்ச் 2 அன்று புகுந்த ஆதிக்கச் சாதிவெறியர்கள், அங்கிருந்த தேநீர் கடையின் மீது பெட்ரோல் குண்டு வீசி கண்ணில் காண்போரை எல்லாம் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில், தலித் சாதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரான ஜான் மார்க் என்பவரும் ஒடிசாவைச் சேர்ந்த 50 வயதுடைய செங்கல் சூளைத் தொழிலாளியும் அநியாயமாகக் கொல்லப்பட்டனர். ஏழு பேர் வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பெரும்பத்து என்பது தலித் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கிராமமாகும். எனவே, தலித் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே தேவர் சாதிவெறியர்களால் திட்டமிட்டு இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்காக, சாதிவெறி கும்பல் இரண்டு நாட்களாக ஊரை நோட்டமிட்டு முகமூடியால் முகத்தை மறைத்துக்கொண்டு கொடூர ஆயுதங்களுடன் ஊருக்குள் நுழைந்துள்ளது. குறிப்பாக, 19 முதல் 20 வயதுடைய இளைஞர்களை இத்தாக்குதலுக்கு கூலிப்படையாகப் பயன்படுத்தியுள்ளது. இதில், நாங்குநேரி சின்னதுரையை வெட்டிய இரண்டு கிரிமினல்களும் அடக்கம்.
இத்துணை தயாரிப்புடனும் அப்பட்டமான சாதிவெறியிலும் நடத்தப்பட்ட இத்தாக்குதலை போதையால் நடந்த தாக்குதல் என போலீசும் தி.மு.க-வும் பா.ஜ.க-அ.தி.மு.க. கும்பலும் அப்பட்டமாக பொய்யுரைத்து வருகின்றது. தென்மாவட்டங்களில் சாதிவெறியாட்டம் தலைவிரித்தாடுகிறது என்ற உண்மை பொதுவெளியில் பேசுபொருளாகும் போதெல்லாம் இத்தகைய திசைதிருப்பல்கள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன. மாறாக, தலித் மக்கள் மீதான சாதியத் தாக்குதல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுப்பதில்லை.
எனவே, “நாங்குநேரி பெரும்பத்து இரட்டைப் படுகொலை: வேண்டும் நீதி” என்ற முழக்கத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் இயக்கத்தை மக்கள் அதிகாரக் கழகம் முன்னெடுத்துள்ளது. அந்தவகையில், நாளை (16.03.2026) தமிழ்நாடு முழுவதும் மனு கொடுக்கும் இயக்கம் கழகத் தோழர்களால் தொடங்கப்படுகிறது.
தென்மாவட்டங்களில் உள்ள ஆதிக்கச் சாதிவெறி சங்கங்களில் ஊடுருவியுள்ள ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத கும்பல், சாதி-மதக் கலவரங்களைத் தூண்டி தமிழ்நாட்டில் காலூன்ற முயன்றுவருகிறது. அதனைத் தடுக்கும் நோக்கத்தில் மக்கள் அதிகாரக் கழகம் முன்னெடுத்துள்ள இவ்வியக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இவ்வியக்கத்திற்கு பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் ஆதரவளிக்க வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











