ஈராயிரம் ஆண்டுகளாக பார்ப்பனியம் இந்தியாவின் பெரும்பான்மை உழைக்கும் மக்களை ‘சூத்திரர்கள்’ என முத்திரை குத்தி தீண்டத்தகாதவர்களாக ஒடுக்கி வருகிறது. இந்தக் கொடூரமான ஒடுக்குமுறையின் அங்கமாகவே பெரும்பான்மை உழைக்கும் மக்களின் கல்வி உரிமையை மறுத்து வருகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடரும் இந்த ஒடுக்குமுறையில் ஆங்கிலேயே ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்டாய பொதுக் கல்விக்கான முயற்சிகள் சிறு அசைவை ஏற்படுத்தின.
ஆயினும், 1947 ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தொடங்கப்பட்ட உயர்கல்வி நிலையங்கள் பார்ப்பன-பனியா பிரிவினரால் ஆக்கிரமிக்கப்பட்டதே தவிர, அது பெரும்பான்மை உழைக்கும் மக்களிடம் சென்று சேர்க்கப்படவில்லை. இதனால், கடந்த சில ஆண்டுகளாகத்தான் சூத்திரர்கள் என ஒதுக்கப்பட்ட மக்கள் முதல் தலைமுறைப் பட்டதாரி என்ற நிலைக்கே நகர்ந்து வருகின்றனர்.
ஆனால், அவ்வாறு உயர்கல்வி பயிலவரும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மீது இந்தப் பார்ப்பனிய சாதிய கட்டமைப்பு இன்று வரையிலும் தீவிரத் தாக்குதல் தொடுத்து வருகிறது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின, சிறுபான்மையின மாணவர்களை சாதி-மத ரீதியாக இழிவுப்படுத்தி கல்வியிலிருந்து வெளியேற்றுவதன் மூலம் கல்வி உரிமையை மறுப்பது எனும் ஒடுக்குமுறையை நவீன முறையில் செலுத்துகிறது. அதிலும், இந்துராஷ்டிர கொடுங்கனவோடு இந்தியாவின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பலின் 11 ஆண்டுகால ஆட்சியில், உயர்கல்வி நிலையங்களில் தீண்டாமைக் கொடுமைகளால் மாணவர்களின் உயிர் காவு வாங்கப்படுவது உச்சத்தைத் தொட்டுள்ளது.
ரோகித் வெமுலா தற்கொலையும்
தீண்டாமைக்கு எதிரான எழுச்சியும்
ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவரும் அம்பேத்கர் மாணவர்கள் கூட்டமைப்பின் (ASA) முன்னணியாளருமான ரோகித் வெமுலா, மோடி அரசின் இந்துத்துவ – மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக மாணவர்களை திரட்டிப் போராடிய காரணத்தால் கடும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டார். விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டார். இந்த அநீதிக்கு எதிராக ஆறு மாதங்கள் வரை போராடி மனமுடைந்த ரோகித் வெமுலா, ஜனவரி 17, 2016 அன்று தனது நண்பரின் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ரோகித்தின் தற்கொலை இந்தியா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மாணவர்களும் புரட்சிகர-ஜனநாயக சக்திகளும் மிகப்பெரும் போராட்டங்களை கட்டியமைத்தனர். கல்வி நிலையங்களில் சாதியக் கொடுமைகளை களைவதற்காக ரோகித் வெமுலா சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது.
இந்நிலையில், 2019-இல் மகாராஷ்டிராவில் முதுகலை மருத்துவ மாணவி பயல் தத்வியின் மரணம் நிகழ்ந்தது. இஸ்லாமியரும் பில் பழங்குடியினத்தை சேர்ந்தவருமான பயல் தத்வி டோபிவாலா தேசிய மருத்துவக் கல்லூரியில் சக மாணவர்களால் சாதிய ரீதியாக இழிவுப்படுத்தப்பட்டு தற்கொலைக்குத் தள்ளப்பட்டார்.
ஆனால், உயர்கல்வி நிறுவனங்களில் சாதியத் தீண்டாமைகளை தடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட யு.ஜி.சி. விதிகள் – 2012 இந்நிறுவனப் படுகொலைகள் எதையும் தடுக்கவில்லை; இப்படியொரு விதி உள்ளது என்பதே மாணவர்களுக்கு தெரியாத வகையில் முடக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்துதான், யு.ஜி.சி. விதிகள் – 2012 போதாமையாக உள்ளது என்றும் வலுவான விதியை நடைமுறைப்படுத்தக் கோரியும் ரோகித் வெமுலா மற்றும் பயல் தத்வியின் தாய்மார்கள் 2019-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுகுறித்து விளக்கமளிக்குமாறு ஒன்றிய அரசு மற்றும் யு.ஜி.சி-க்கு நோட்டீசு அனுப்பியது; பல்கலைக்கழகங்களில் சாதிய பாகுபாட்டைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக, புதிய விதிகளை வகுக்குமாறு உச்சநீதிமன்றம் யு.ஜி.சி-யை வலியுறுத்தியது. இதன் இறுதி வடிவமாகவே கடந்த ஜனவரி 13 அன்று “யு.ஜி.சி. (உயர்கல்வி நிறுவனங்களில் சமபங்கை மேம்படுத்துதல்) ஒழுங்குமுறை 2026” வெளியிடப்பட்டது.
யு.ஜி.சி. விதிகள்
தீண்டாமையை களையுமா?
யு.ஜி.சி. விதிகள் – 2026, “சாதிய பாகுபாடு” என்பதை “பட்டியல் சாதி (SC), பட்டியல் பழங்குடி (ST) மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) எதிரான சாதி அல்லது பழங்குடி அடிப்படையிலான பாகுபாடு” என்று வரையறுக்கிறது. அதேபோல், “பாகுபாடு” என்பதை மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம், இயலாமை அடிப்படையில் பாரபட்சமாக நடத்துவது என்று குறிப்பிட்டுள்ளது.
இப்பாகுபாடுகளை களைவதற்கு யு.ஜி.சி-க்கு கீழ் வரும் அனைத்து மத்திய, மாநில, நிகர்நிலை, தனியார் கல்வி நிறுவனங்களும் சம வாய்ப்பு குழுக்களையும் (Equal Opportunity Centre) அதன் கீழ் சமபங்கு குழுக்களையும் (Equity Committee) அமைக்க வேண்டும் என்று யு.ஜி.சி. விதிகள் தெரிவிக்கிறது. சம வாய்ப்பு குழுக்கள் இவ்விதிகள் நடைமுறைப்படுத்தப்படுவதை உத்தரவாதப்படுத்த வேண்டும். அதேபோல், சமபங்கு குழுவில் பட்டியல், பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், ஆசிரியர் மற்றும் மாணவர் பிரதிநிதிகள் கட்டாயம் இடம்பெற வேண்டும். மேலும், புகார்களின் மீது நடவடிக்கை எடுப்பதற்கான கால வரம்பும் அதனை கண்காணிப்பதற்கான வழிகாட்டுதல்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் பல அம்சங்கள் யு.ஜி.சி. விதிகள் 2012-லேயே இடம்பெற்றிருந்தாலும் அது வெறும் ஆலோசனை வழங்குவதாக அமைந்ததே ஒழிய, நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் வழங்கப்படவில்லை. மாறாக, புதிய விதியில், விதிகளுக்கு கட்டுப்படாத கல்வி நிறுவனங்களுக்கான மானியத்தை நிறுத்துவது முதல் அங்கீகாரத்தை இரத்து செய்வது வரை தண்டனைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
ரோகித் வெமுலா மற்றும் பயல் தத்வியின் தாய்மார்கள் தரப்பு முன்வைத்த 10 முன்மொழிதல்களின் சாரம் யு.ஜி.சி. விதியில் இடம்பெற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே இம்மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தை இதற்கு நிர்பந்தித்தது மாணவர்கள், ஜனநாயக சக்திகளின் போராட்டங்களே ஆகும்.
அதேசமயம், இப்புதிய விதியில் பல்வேறு குறைபாடுகளும் போதாமையும் உள்ளன.
யு.ஜி.சி. சட்டத்தின் கீழ் வராத 23 ஐ.ஐ.டி-கள் மற்றும் 21 ஐ.ஐ.எம்-களுக்கும் நாடு முழுவதுமுள்ள பாலிடெக்னிக், நர்சிங் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி மையங்கள் என 12,002 கல்வி நிறுவனங்களுக்கும் இவ்விதிகள் பொருந்தாது. சாதி, மத, மொழி ரீதியான வன்கொடுமைகள் தலைவிரித்தாடுகின்ற, நூற்றுக்கணக்கான மாணவர்களின் உயிரைக் குடித்துள்ள ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்-களுக்கு இவ்விதி பொருந்தாது என்பது எவ்வளவு பெரிய முரண்? இதன் காரணமாகவே, இந்தியாவின் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் வகையில் ரோகித் வெமுலா சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டுமென்று ஜனநாயக சக்திகள் வலிறுத்தி வருகின்றனர்.
அதேபோல், கல்வி நிலையங்களில் கடைப்பிடிக்கப்படும் தீண்டாமையை யு.ஜி.சி. விதி 2012 “வன்கொடுமை” என்று வரையறுத்ததுடன், யு.ஜி.சி-க்கு கீழ் வரும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் வகையில் 28 வகையான வன்கொடுமைகளை பட்டியலிட்டிருந்தது. ஆனால், யு.ஜி.சி. விதி, 2026 தீண்டாமையை “பாகுபாடு” என மொண்ணையாகக் குறிப்பிடுகிறது. பழைய விதியில் பட்டியலிடப்பட்டிருந்த 28 வகையான வன்கொடுமைகளை எந்தவிதப் பொறுப்புணர்வுமின்றி ஒரேயடியாக நீக்கியுள்ளது. மறுபுறம், “பாகுபாடு” என்பதற்கான நிலையான வரையறையை அளிக்காமல் அதனை வரையறுப்பதற்கான பொறுப்பை சமபங்கு குழுக்களிடம் ஒப்படைத்துள்ளது. இது, வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு இழைக்கப்படும் அப்பட்டமான துரோகமாகும்.
மேலும், கல்வி நிறுவனத்தின் தலைவரே (பல்கலைக்கழகத் துணைவேந்தர் / கல்லூரி முதல்வர்) சமபங்கு குழுவின் தலைவர் என்றும் புகார்கள் மீதான நடவடிக்கைகளும் அவருக்கே பரிந்துரைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாசிச பா.ஜ.க. கும்பலின் ஆட்சியில் இந்தியா முழுவதுமுள்ள கல்வி நிறுவனங்களின் தலைவர்களாக ஆர்.எஸ்.எஸ். சங்கிகளும் அதன் அடிவருடிகளுமே நியமிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் ஒடுக்கப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் மீதான வன்கொடுமைகளுக்குத் துணைபோவதுடன், அதனை நிகழ்த்தும் சாதி-மத வெறியர்களையும் ஏ.பி.வி.பி. குண்டர் படையையும் பாதுகாத்து வருகின்றனர். இவர்களே பாகுபாடுகளை களையும் குழுவின் தலைவர் என்பது எத்துணை மோசடியானது!
மேலும், சமபங்கு குழுவில் தலித், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் இடம்பெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட்டாலும், ரோகித் மற்றும் பயல் தத்வியின் தாய்மார்கள் கோரியது போல அவர்களுக்கு 50 சதவிகிதப் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. இதனால் பார்ப்பனர்கள், ஆதிக்கச் சாதிவெறியர்கள் இக்குழுவில் நிரப்பப்பட்டு வன்கொடுமைக்கு உள்ளானவர்கள் நீதி கிடைக்காமல் வஞ்சிக்கப்படுவது அரங்கேறும்.
அனைத்திற்கும் மேலாக, யு.ஜி.சி-யை கலைத்துவிட்டு உயர்கல்வி ஆணையத்தை அமைப்பதற்கான சட்ட மசோதாவை மோடி அரசு வெளியிட்டுள்ளது. எனவே, யு.ஜி.சி-யுடன் சேர்த்து இவ்விதிகளும் ஒழித்துக்கட்டப்படும் சூழலே நிலவியது. இக்காரணத்தாலும்தான், தீண்டாமையை களைவதற்கான விதிகள் சட்டமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று ஜனநாயக சக்திகள் கோருகின்றனர்.
மேலும், யு.ஜி.சி. விதி 2012-இன் முக்கியப் பிரச்சினையே அது நடைமுறைப்படுத்தப்படாமல் முடக்கப்பட்டதுதான். பா.ஜ.க. ஆட்சியில் அனைத்து கல்வி நிறுவனங்களும் காவிமயமாகிவரும் சூழலில் இப்புதிய விதி மட்டும் நடைமுறைப்படுத்தப்படுமா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
உச்சநீதிமன்றத்தின் துரோகமும்
எதிர்க்கட்சிகளின் சந்தர்ப்பவாதமும்
யு.ஜி.சி. விதிகள் வெளியான உடனேயே, இவ்விதிகள் தங்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் என்றும் தாங்களும் சாதிய ரீதியாக ஒடுக்கப்படுவதாகவும் பார்ப்பன கும்பல் அப்பட்டமான பொய் பிரச்சாரத்தில் இறங்கியது. கர்ணி சேனா, பிராமன மகாசபா, காயஸ்தா மகாசபாக்கள் மற்றும் பல வைசிய அமைப்புகள் “சவர்ண சமாஜ் ஒருங்கிணைப்புக் குழு”வின் கீழ் வன்முறைப் போராட்டங்களை முன்னெடுத்தன. யு.ஜி.சி. விதிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பார்ப்பன கும்பலுக்கு அடிபணிந்த உச்சநீதிமன்றம் ஜனவரி 29 அன்று எந்தவொரு அடிப்படையுமின்றி யு.ஜி.சி-யின் புதிய விதிக்கு இடைக்காலத் தடை விதித்து பாசிச கும்பலுக்கு கரசேவை ஆற்றியது.
உச்சநீதிமன்றத்தின் அயோக்கியத்தனமான, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விரோதமான இந்த உத்தரவை தி.மு.க., சி.பி.ஐ(எம்.எல்) லிபரேஷன் ஆகிய கட்சிகளை தவிர ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மையான கட்சிகள் அதிகாரப்பூர்வமாகக் கண்டிக்கவில்லை; தி.மு.க-வும் இத்தடையை கண்டித்து போராட்டங்களை முன்னெடுக்கவில்லை. சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரசு, திரிணாமுல் காங்கிரசு மற்றும் உத்தவ் தாக்கரே சிவசேனா ஆகிய கட்சிகளின் தலைவர்கள் அயோக்கியத்தனமாக இத்தடையை வரவேற்றுள்ளனர். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்பதாக காட்டிக்கொள்ளும் ராகுல் காந்தி மறந்தும் இதுகுறித்து வாய்திறக்கவில்லை. பகுஜன் மக்களுக்கான கட்சி என்று சொல்லிக்கொள்ளும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, யு.ஜி.சி. விதி சமூக பதற்ற சூழலை உருவாக்கியதாகவும், அனைத்து பங்குதாரர்களுக்கும் நம்பிக்கை ஏற்படுத்தத் தவறிவிட்டதாகவும் கூறி வெட்கக்கேடான முறையில் இத்தடையை வரவேற்றுள்ளார்.
இவையெல்லாம், இக்கட்சிகள் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்பதாக சொல்வதெல்லாம் அப்பட்டமான வாக்குவங்கி அரசியலே ஒழிய, மக்கள் மீதான அக்கறையில்லை என்பதை பட்டவர்த்தனமாகக் காட்டுகிறது.
தீண்டாமைக்கு எதிராகக்
கிளர்ந்தெழும் மாணவர்கள்
பாசிச கும்பல் இவ்விதிக்கு தடை விதித்தாலும் கல்வி வளாக தீண்டாமைக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் ஓய்ந்துவிடவில்லை. சொல்லப்போனால், அது முன்னிலும் தீவிரமடைந்துள்ளது.
யு.ஜி.சி. விதிகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததையடுத்து, மாணவர்கள், ஆசிரியர்கள், அறிவுஜீவிகள் மற்றும் சமூக இயக்கங்கள் பிப்ரவரி 8 அன்று டெல்லியில் ஒன்றுகூடினர். இக்கூட்டத்தின் மூலம் “அனைத்திந்திய சமத்துவ மன்றம் – யு.ஜி.சி. விதிமுறைகள் சமதா அந்தோலன்” (All India Forum for Equity – UGC Regulations Samta Andolan) என்ற கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. இதில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கம் (JNUSU), அகில இந்திய மாணவர் சங்கம் (AISA), இந்திய மாணவர் சங்கம் (SFI), தேசிய மாணவர் சங்கம் (NSUI), அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு (AISF), பிர்சா அம்பேத்கர் பூலே மாணவர் சங்கம் (BAPSA) உள்ளிட்ட பல்வேறு மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்துள்ளன. மாணவர்கள், ஜனநாயக சக்திகளின் இம்முன்னெடுப்பு வரவேற்கத்தக்கதாகும்.
இம்மன்றம் யு.ஜி.சி-யின் புதிய விதிமுறைகள் மீதான உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தடையினைக் கண்டித்ததுடன், புதிய விதிமுறைகளை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும் அதனை ரோகித் சட்டத்தின் அடிப்படையில் வலுப்படுத்த வேண்டும் என்றும் கோரியது. மேலும், பிப்ரவரி 13-ஆம் தேதியை அகில இந்திய போராட்டத் தினமாக அறிவித்து, அன்றைய தினம் 100-க்கும் மேற்பட்ட வளாகங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டது. அந்தவகையில், பல்வேறு கல்வி நிறுவனங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால், பா.ஜ.க-வின் ஊதுகுழல் ஊடகங்கள் இப்போராட்டங்களை மூடிமறைத்தன.
குறிப்பாக, யு.ஜி.சி. விதிகளை நடைமுறைப்படுத்தக் கோரியும் ரோகித் வெமுலா சட்டத்தை நிறைவேற்றக் கோரியும் ஜே.என்.யு. பல்கலைக்கழக மாணவர்கள் மிகப்பெரும் போராட்டங்களை நடத்தினர். இதனை சகித்துக்கொள்ள முடியாத ஆர்.எஸ்.எஸ்-இன் குண்டர் படையான ஏ.பி.வி.பி-யும் போலீசும் மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியது. மாணவர்களை சிறையில் அடைத்து ஒடுக்கப் பார்த்தது. ஆனால், நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பையடுத்து அவர்களுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி விடுவித்தது.

மறுபுறம், ரோகித் வெமுலா சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற கோரிக்கையும் தீவிரமடைந்துள்ளது. கடந்த ஜனவரி 17, 2026 அன்று ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ரோகித் வெமுலாவின் பத்தாவது ஆண்டு நினைவு தின நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், ரோகித் வெமுலாவின் தாய் ராதிகா வெமுலா, 2023-ஆம் ஆண்டு ஐ.ஐ.டி. பாம்பே-வில் மர்ம மரணமடைந்த மாணவர் தர்சன் சோலன்கியின் தந்தை, பயல் தத்வியின் தாய் மற்றும் பல்வேறு ஜனநாயக சக்திகள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில், முக்கியமாக, ரோகித் சட்ட பிரச்சாரக் குழுவின் கர்நாடகப் பிரிவு தயாரித்த “ரோகித் வெமுலா சட்டம் – மக்கள் வரைவை” வெளியிட்டனர். இந்நடவடிக்கை ரோகித் வெமுலா சட்டத்தை நிறைவேற்றுவதற்கான அழுத்தத்தை அதிகரிப்பதாக அமைந்தது.
அதேசமயம், இவ்வாறான சட்டங்கள், புதிய விதிகள் உருவாக்கப்படுவதால் மட்டும் கல்வி நிறுவனங்களில் சாதிய கொடுமைகளையும் தீண்டாமைக் கொடுமைகளையும் களைந்துவிட முடியாது. ஆனால், ஜனநாயக உரிமைகளுக்கான இப்போராட்டமே மாணவர்களையும் ஜனநாயக சக்திகளையும் பாசிசத்திற்கு எதிராகவும் மாற்றை நோக்கியும் நகர்த்தும்.
எனவே, மேற்குறிப்பிட்ட குறைபாடுகள் களையப்பட்டு யு.ஜி.சி. விதிகள், 2026 உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். கல்வி வளாகங்களில் மாணவர்கள் சங்கங்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பது; மாணவர் சங்கத் தேர்தல்களை கட்டாயம் நடத்துவது; மாணவர் அமைப்பு என்ற பெயரில் ரவுடிசம் செய்யும் ஆர்.எஸ்.எஸ். குண்டர் படையான ஏ.பி.வி.பி-க்கு தடை விதிப்பது; சாதி-மத வெறியர்கள், ஆர்.எஸ்.எஸ்-உடன் தொடர்புடையவர்களை கல்வி நிறுவனப் பொறுப்புகளில் அமர்த்துவதற்குத் தடை விதிப்பது உள்ளிட்ட அம்சங்களுடன் ரோகித் வெமுலா சட்டம் இயற்றப்பட வேண்டும். இக்கோரிக்கைகளை முன்வைத்து மோடி அரசை நிர்பந்திக்கும் வகையிலும் தாங்கள் ஆளும் மாநிலங்களில் இச்சட்டத்தை நிறைவேற்றாமல் சந்தர்ப்பவாதமாக கள்ளமௌனம் காக்கும் எதிர்க்கட்சிகளை அம்பலப்படுத்தும் வகையிலும் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டியது புரட்சிகர-ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.
![]()
துலிபா
(புதிய ஜனநாயகம் – மார்ச் 2026 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











