நாங்குநேரி பெரும்பத்து இரட்டைப் படுகொலை: நீதி வேண்டி தமிழ்நாடு முழுவதும் மனு அளிப்பு!

“நாங்குநேரி பெரும்பத்து இரட்டைப் படுகொலை: வேண்டும் நீதி” என்ற முழக்கத்தின் கீழ் மார்ச் 16 திங்கட்கிழமை அன்று மக்கள் அதிகாரக் கழகத் தோழர்கள் ஜனநாயக சக்திகளை இணைத்துக்கொண்டு தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

டந்த மார்ச் 2 அன்று நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்திற்குள் புகுந்த ஆதிக்கச் சாதிவெறியர்கள், தலித் மக்கள் மீது சாதிவெறியாட்டத்தைக் கட்டவிழ்த்துவிட்டு இருவரைப் படுகொலை செய்தனர். திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்தச் சாதிவெறியாட்டத்தைக் கண்டித்தும் சாதிவெறி சங்கங்களைத் தடை செய்யக் கோரியும், “நாங்குநேரி பெரும்பத்து இரட்டைப் படுகொலை: வேண்டும் நீதி” என்ற முழக்கத்தின் கீழ் மார்ச் 16 திங்கட்கிழமை அன்று மக்கள் அதிகாரக் கழகத் தோழர்கள் ஜனநாயக சக்திகளை இணைத்துக்கொண்டு தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

நாங்குநேரி பெரும்பத்துச் சாதிவெறியாட்டத்தைப் போதைவெறியில் நடத்தப்பட்ட தாக்குதல் என தி.மு.க. அரசும் பா.ஜ.க. கும்பலும் திசைதிருப்பிவரும் சூழலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிக்கோரி முன்னெடுக்கப்பட்டுள்ள இவ்வியக்கமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலுக்கு எதிரானதும் ஆகும்.

சென்னை

சென்னையில் மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் தலைமையில் தமிழ்நாடு தலைமைச் செயலாளரிடம் மனு அளிக்கப்பட்டது. இதில், மக்கள் அதிகாரக் கழகத்தின் தோழர்கள் கலைமதி மற்றும் தோழர் ஆகாஷ், சாதி ஒழிப்பு முன்னணியின் தோழர் ரமணி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் குமரன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர் சுகுமாரன் மற்றும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் தோழர் அறிவு மற்றும் தோழர் ரிஷி ஆகியோர் கலந்துகொண்டனர்.

மதுரை

மதுரையில் ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட மக்கள் அதிகாரக் கழகத்தின் ஒருங்கிணைப்பில் மக்கள் அதிகாரக் கழகத்தின் மதுரை கிழக்கு மாவட்டச் செயலாளர் தோழர் டங்ஸ்டன் பிரகாஷ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் ராமலிங்கம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மேனாள் மண்டல பொறுப்பாளர் தோழர் மாலின், தமிழ்ப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பேரறிவாளன், திராவிடர் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் சந்துரு, அண்ணா திராவிடர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் பசும்பொன் பாண்டியன், மக்கள் பாதை பேரியக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் அமுதா, தமிழர் எழுச்சிக் கழகத்தின் தலைவர் அருண்பாண்டியன், தமிழ்தேசிய குடியரசு இயக்கத்தின் பொறுப்பாளர் தோழர் மெய்யப்பன் மற்றும் பல ஜனநாயக சக்திகளுடன் மனு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி:

திருநெல்வேலியில் மக்கள் அதிகாரக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் தோழர் தாளமுத்து செல்வா தலைமையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழ்ப் புலிகள் கட்சியின் மாநில துணைச் செய்தித் தொடர்பாளர் தோழர் நெல்லை தமிழரசு, ஆதித் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் குட்டி பாய், மக்கள் அதிகாரக் கழகத்தின் வழக்கறிஞர் அணி தோழர் கின்ஷன் மற்றும் மக்கள் அதிகாரக் கழகத்தின் நெல்லை மாவட்டப் பொருளாளர் தோழர் சந்துரு ஆகியோர் கலந்துகொண்டு மனு அளித்தனர்.

கோவை

கோவையில் மக்கள் அதிகாரக் கழகத்தின் மாவட்ட செயலாளர் தோழர் ராஜன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் மாறன், ஜெய் பீம் அறக்கட்டளை தோழர் தமிழ்குமரன், விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் தோழர் ஆனந்தி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத் தோழர் மணிகண்டன், தமிழ்நாடு திராவிடர் சுயமரியாதைக் கழகத் தோழர் நேரு தாஸ் மற்றும் மக்கள் அதிகாரக் கழகத்தின் தோழர் சங்கர், தோழர் அன்பு, தோழர் குமார் மற்றும் தோழர் ஜான் ஆகியோர் இணைந்து மனு அளித்தனர்.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரியில் மக்கள் அதிகாரக் கழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் தோழர் இரஞ்சித், எஸ்.டி.பி.ஐ. மாவட்டத் தலைவர் தோழர் அஸ்கர், எஸ்.டி.பி.ஐ. மாவட்ட பொதுச்செயலாளர் தோழர் ஜாவித் பாஷா, மே 17 இயக்கத் தோழர் மோகன்ராஜ், சி.பி.ஐ. கட்சியின் தோழர் சுரேஷ் பாபு ஆகியோர் இணைந்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் அதிகாரக் கழக மாவட்ட இணைச் செயலாளர் தோழர் லெனின் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மக்கள் அதிகாரக் கழக மாவட்டச் செயலாளர் தோழர் ஆசாத், விடுதலை சிறுத்தை கட்சியின் மண்டல துணைச் செயலாளர் தோழர் சீமா மகேந்திரன், மக்கள் அதிகாரக் கழக மாவட்டக் குழு உறுப்பினர்கள் தோழர் முரளி, தோழர் குமரகுரு, கிராமிய நாடக இசைக் கலைஞர் தோழர் பக்ரீத் தாஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டையில் மக்கள் அதிகாரக் கழகத்தின் ராணிப்பேட்டை மாவட்டப் பொருளாளர் தோழர் மோகன் தலைமையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் (மாநில ஒருங்கிணைப்புக் குழு) தோழர் சுந்தர் மற்றும் தோழர் சரவணன் ஆகியோர் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

விருத்தாச்சலம்:

விருத்தாச்சலத்தில் மக்கள் அதிகாரக் கழகத்தின் நகரச் செயலாளர் தோழர் அசோக் குமார் தலைமையில் மக்கள் அதிகாரக் கழகம், சி.பி.ஐ.(எம்.எல்) லிபரேஷன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விவசாயிகள் விவசாயத் தொழிலாளர் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள், அமைப்புகளின் தோழர்கள் இணைந்து விருத்தாச்சலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சியில் மக்கள் அதிகாரக் கழகத் தோழர் வினாயகம் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர் அருள், தோழர் அஜித், தோழர் பாலாஜி, தோழர் வெங்கடேசன், தோழர் மணி மற்றும் பி.எஸ்.பி. கட்சி நிர்வாகிகள் இணைந்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

விழுப்புரம்:

விழுப்புரத்தில் மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் தோழர் சாந்தகுமார் தலைமையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் விழுப்புரம் மாவட்டக் கொள்கை பரப்புச் செயலாளர் தோழர் ஏழுமலை மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழர்கள் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மனு கீழ்கண்டாறு:

பொருள்: சாதிவெறி மற்றும் சமூகப் பிளவைத் தூண்டும் ஆதிக்கச் சாதி சங்கங்களை, அமைப்புகளைத் தடை செய்யக் கோரி மனு

வணக்கம்.

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தலித் மக்கள் மீது ஆதிக்கச் சாதி வெறியர்களின் தாக்குதல்கள் பல்வேறு வடிவங்களில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. சின்னதுரை என்ற தலித் மாணவன் நன்றாகப் படித்தார் என்பதற்காகவே அவருடன் படித்த சக ஆதிக்கச் சாதி மாணவர்களால் வெட்டி கொலைவெறி தாக்குதல் தொடுத்தது; கபடி விளையாட்டில் தலித் மாணவன் தேவேந்திரராஜா நன்றாக விளையாடினார் என்பதற்காகவே அந்த மாணவனை ஆதிக்கச் சாதி இளைஞர்கள் கடுமையாகத் தாக்கியது; கோவில்பட்டி அருகே நாயுடு சாதிச் சங்கத்தினர் எங்கள் சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கபடி விளையாட வேண்டும் என வெளிப்படையாகவே சுவரொட்டி ஒட்டி கபடிப் போட்டி நடத்துவதாகக் கூறி வெளிப்படையாகவே சாதிவெறி நடவடிக்கையைச் செய்தது, இதை நீதிமன்றமும் அனுமதித்தது.

சமீபத்தில் நாங்குநேரி அருகே பெரும்பத்து என்ற கிராமத்திற்குள் புகுந்த ஒன்பது பேர் கொண்ட ஆதிக்கச் சாதிவெறிக் கும்பல் பெட்ரோல் குண்டு மற்றும் பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதில் ஒரு தலித் உட்பட இருவர் படுகொலையானார்கள்.

இந்தக் கொலையாளிகள் அனைவரும் 18 முதல் 21 வயதுக்கு உட்பட்டவர்கள். இதில் இரண்டு பேர் சின்னதுரை என்ற மாணவனைத் தாக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களிடம் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள், கஞ்சா சாராயம் போன்ற போதை வஸ்துகள், கொடூரமான ஆயுதங்கள் எப்படி வந்தன? இது போன்ற எண்ணற்ற நடவடிக்கைகளுக்குப் பின்னால் ஆதிக்கச் சாதிவெறி சங்கங்களின் செயல்பாடுகள் உள்ளன. இந்த சங்கங்கள் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த மாணவர்கள் இளைஞர்களைக் குறிவைத்துச் சாதிவெறியூட்டி திட்டமிட்டு வேலை செய்கின்றன. இவர்களைப் போதைக்கு அடிமையாக்குவது, சாதிப் பெருமை பேச வைப்பது, இதன் மூலம் அவர்களை உசுப்பேற்றி விடுவது தனக்கு அடியாளாக வைத்துக் கொள்வது, தலித் மக்கள் மீது ஆணவப் படுகொலைகள் உட்பட பல்வேறு தாக்குதல்களை ஏவி விடுவது, ஆதிக்கச் சாதித் தலைவர்கள் சாதிப் பெருமையைப் பேசும் வீடியோக்கள் வெளியிடுவது, ஆதிக்கச் சாதிவெறியைத் தூண்டும் சுவரொட்டிகள் பேனர்களை ஒட்டுவது போன்ற நடவடிக்கைகளை வெளிப்படையாகவே செய்து வருகின்றன.

இந்த நடவடிக்கைகள் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும், சாதிய மோதல்களை ஏற்படுத்தும் என்று தெரிந்தே போலீசு இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது; மாறாக, ஏதோ ஒரு வகையில் இந்த ஆதிக்கச் சாதி வெறியர்களுடன் போலீசு உறவு வைத்துக் கொள்வது நடந்து வருகிறது. தொடர்ச்சியாகத் தலித் மக்கள் மீது நடத்தப்படும் ஆதிக்கச் சாதிவெறி தாக்குதலுக்கு இந்தச் சங்கங்களின் செயல்பாடுகளே அடிப்படை காரணமாக உள்ளது. இளைஞர்கள் மாணவர்களின் வாழ்க்கையைச் சீரழிப்பது மட்டுமல்லாமல் தலித் மக்களை எப்போதும் அச்சத்தில் வைத்திருப்பது போன்ற மோசமான சமூகச் சூழல் நீடிக்காமல் இருக்க வேண்டும் என்றால் ஆதிக்கச் சாதி வெறி சங்கங்களின் செயல்பாடுகளைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல் இந்தச் சங்கங்களைச் சட்டவிரோத சங்கங்களாக அறிவித்து நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும். சமூக நலன் மற்றும் தலித் மக்களின் நலன் கருதி இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க