2026 சட்டமன்றத் தேர்தல்:

  • மானாமதுரை சிப்காடில் உள்ளமருத்துவக் கழிவு சுத்திகரிப்புநச்சு ஆலையை அகற்று!
  • ஆகாஷ் டெலிசனை லாக்கப் படுகொலை செய்த 16 போலீசு குற்றவாளிகளைக் கைது செய்!
  • டாஸ்மாக்கை மூடு!

வேண்டும் ஜனநாயகம்

அன்பார்ந்த மானாமதுரை வாழ் பொது மக்களே!

தேர்தல் என்றாலே நாம் யாருக்கு ஒட்டு போட வேண்டும் அவர் நல்லவரா, கெட்டவரா; அந்த கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கை என்ன? என்பதையெல்லாம் நாம் கவனிப்பது உண்டு. ஆனால், அதை எல்லாம் தாண்டி நமது பிரச்சனைகள் சரி செய்யப்படுமா? நமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? நமது உரிமைகள் காக்கப்படுமா? என்பது தேர்தலில் விவாதப் பொருள் ஆவதுமில்லை, அதை வெற்றிபெறுபவர்கள் நிறைவேற்றுவதும் இல்லை. மீடியாக்கள் பெயருக்கு நமது பிரச்சனைகளை பேசி விட்டு காணாமல் போகின்றன. இதற்குப் பெயர்தான் தேர்தல் திருவிழா.

* வெட்கக்கேடு, அப்படித்தான் நமது மானாமதுரையில் சிப்காட் வளாகத்தில் மருத்துவக் கழிவை சுத்திகரிக்கும் நச்சு ஆலையை நிறுவ அரசு அனுமதித்துள்ளது. மக்கள் மத்தியில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தும் போது மக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து “நச்சு ஆலை வேண்டாம்” என சொன்ன பிறகும் நச்சு ஆலையை கொண்டு வந்து நிறுவ அரசு அனுமதி அளித்துள்ளது. தற்போது நச்சு ஆலையில் 99 சதவீத பணிகள் முடிவடைந்து இயங்கும் நிலையில் தயாராக உள்ளது.

மானாமதுரை சுற்றுவட்டாரத்தில் கொன்னக்குளம், நவாத்தாவு, உடைகுளம், கல்குறிச்சி போன்ற பல்வேறு பகுதிகளும் இந்த நச்சு ஆலையால் பாதிக்கும் அபாயம் உள்ளது. தமிழ்நாட்டில் ஒரு நாளில் வெளியேற்றப்படும் மருத்துவக் கழிவுகள் 45 டன்கள் என்கிறார்கள். இந்தியாவில் இது ஆறாவது இடம் என்கிறது புள்ளிவிவரம். அந்த வகையில் 12 மாவட்ட கழிவுகள் மானாமதுரை சிப்காட் வளாகத்திற்கு கொண்டுவர இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நச்சு ஆலைக்கு அருகில் செவன்த் டே மேல்நிலைப்பள்ளி, கொன்னக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவை உள்ளன. இப்பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வந்து படிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்கள் மானாமதுரை மக்கள் என ஒரு லட்சம் மக்கள் இந்த நச்சு ஆலையால் பாதிக்கப்படுவர்.

இந்த ஆலையை திறப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். எனினும் நச்சு ஆலையைத் திறப்பதற்கான எல்லா பணிகளும் நடந்து வருகிறது. தற்போது இந்த நச்சு ஆலையை ஆட்சியில் இருக்கும் திமுக தான் கொண்டு வருகிறது. இதைப் போலவே விருதுநகர் மாவட்டத்தில் அ.முக்குளம் கிராமத்தில் ராம்கி என்ற மருத்துவக் கழிவு நச்சு ஆலை அதிமுக ஆட்சிக் காலத்திலும் செயல்பட்டது. ஆகையால் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மானாமதுரையில் நச்சு ஆலை வருவதைத் தடுக்கப்போவதில்லை.

* மானாமதுரையைச் சேர்ந்த இளைஞர் ஆகாஷ் டெலிசனை போலீசு லாக்கப்பிலேயே அடித்துக் கொன்றுள்ளது. இக்கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட 16 போலீஸ் காரர்களின் பெயர்கள் வழக்கில் சேர்க்கப்பட வேண்டும்! அவர்களைக் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும்!

* மேலும் மானாமதுரை முழுவதும் 24 மணி நேரமும் சாராயம் ஆறாக ஓடுகிறது. இதை அரசு தடுப்பதில்லை. சாராயம் விற்பவர்களை அரசே வளர்த்து விடுகிறது. விளைவு காலை 5 மணிக்கே குடிக்கும் குடி நோயாளிகள் ஏராளமானோர் உருவாகியுள்ளனர். இளைஞர்கள் கஞ்சா போதையில் மிக மோசமான சீரழிவுகளில் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் சமூகக் குற்றங்கள் அதிகரிக்கின்றன. பல்லாயிரம் குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. ஆகையால் அரசு டாஸ்மாக் சாராயக் கடைகளை மூட வேண்டும்!

ஆகவே, மேற்கண்ட மூன்று பிரச்சனைகளும் மானாமதுரை மக்களின் உடனடிக் கோரிக்கைகளாகும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற நாம் தொடர்ந்து போராடி வருகிறோம். தேர்தல் என்பது ஒட்டுக் கட்சிகளுக்குத் தான் திருவிழா! மக்களாகிய நமக்கு அதுவும் ஒரு போராட்ட களம் தான். இந்த மூன்று கோரிக்கைகளுக்காக நாம் களத்தில் இறங்குவோம்.

ஆகவே, சாதி, மதம் கடந்து நாம் அனைவரும் ஒற்றுமையாக களத்திற்கு வந்தால்தான் நாம் நமது உரிமைகள் அனைத்தையும் நிலைநாட்டப்படும் என்பதை தெரிவித்துக் கொண்டு உங்களையும் போராட்டக் களத்திற்கு அழைக்கிறோம்.

  • மானாமதுரை சிப்காட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நச்சு ஆலையை உடனே அகற்று!
  • ஆகாஷ் டெலிசனை லாக்கப் படுகொலை செய்த 16 போலீஸ் குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்!
  • டாஸ்மாக்கை மூடு! கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை தடை செய்!
  • வேண்டும் ஜனநாயகம்

மக்கள் அதிகாரக் கழகம்,
மதுரை கிழக்கு மாவட்டம்,
சிவகங்கை, மானாமதுரை – 9442269220, 8438631587

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads