கோழிப்பண்ணை விவசாயிகள் |  வாழ்வியல் | பகுதி 1

பல நேரங்களில் கோழி வளர்ப்பிற்கு ஏற்ற தொகை கிடைக்காது. அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் இருக்காது. தொகை குறைவாக வந்தாலும் அதைப் பற்றி மேலும் கம்பெனிக்காரர்களிடம் கேட்க முடியாது. இவ்வளவுதான் தொகை என்று அவர்கள் போட்டு விடுவார்கள்.

ம் நண்பர்களே! நான் ஒரு கறிக் கோழிப்பண்ணை விவசாய குடும்பத்தைச் சேர்ந்த பெண். முட்டைக்கும், கறி கோழிகளுக்கும் பெயர்போன நாமக்கல் மாவட்டத்தில்தான் எங்களது குடும்பம் 15 ஆண்டு காலமாக கோழிப்பண்ணை விவசாயத் தொழிலைச் செய்து வருகிறது. நான் இப்பொழுது மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறேன்.

எனது அப்பா-அம்மா இருவரும் ஒவ்வொரு முறையும் கோழிகள், பண்ணைக்கு வருகை தந்து- செல்லும் வரை கண்ணும் கருத்துமாக எப்படி அதை பராமரித்துக் கொள்கின்றனர், அதற்கான வேலைப்பாடுகளில் எப்படி தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர் என்பதைப் பற்றி உங்களிடம் பகிர உள்ளேன்!

நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது ஒரு நாள் எங்களது விளைநிலத்தில் திடீரென்று பல இயந்திரங்கள் வந்து அவ்விடத்தை முழுமையாக வேறொரு பரிணாமத்திற்கு மாற்றின. அரசின் மானிய உதவியுடன் கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்குள் ஒரு கொட்டகையை அமைத்தார்கள். அடுத்தடுத்து பண்ணையின் உள்கட்டமைப்பை விரைவாக முடித்தனர். அப்பொழுது தெரியவில்லை அதுதான் இன்றுவரை எங்களது குடும்பத்திற்கு குறைந்தபட்ச வருமானத்தை அளித்து வருகிறது என்று.

எங்களது கோழி பண்ணை 2,500 சதுர அடி உடையது. இதில் சுமார் 3,000 கோழிகள் வரை வளர்க்கலாம். கோழிப்பண்ணை அமைத்ததிலிருந்து மாதந்தோறும் கோழிகள் வருவதும் – செல்வதுமாக வருடங்கள் கடந்தன. ஆரம்ப கட்டத்திலிருந்து இன்று வரை கோழி வளர்க்கும் வேலைகளில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.

ஒவ்வொரு “பேட்ச்”-க்கும் கோழிகளின் எடைகளுக்கு ஏற்ப அதன் விலையின் ஏற்ற இறக்கம், கோழிகளின் தரம் மாற்றம், கால சூழலின் மாற்றம், கோழிப் பண்ணை கம்பெனிகளின் மாற்றம், அதிகாரிகளின் மாற்றம், மருந்துகளின் மாற்றம், தீனிகளின் மாற்றம், ஏன்! எனது பள்ளியிலிருந்து கல்லூரிக்கான மாற்றம் கூட…. என எல்லாம் மாற்றமடைந்து கொண்டே இருக்கும். ஆனால், கோழி வளர்ப்பு வேலையில், எனது அப்பா – அம்மாவின் உழைப்பில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. இன்று வரை ஓயாமல் உழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

மாதாமாதம் ஒவ்வொரு பேட்சு-க்கும் கோழிகளை எவ்வாறு பராமரிக்கின்றனர் என்பதைப் பற்றி பகிர்கிறேன்!

ஒரு பேட்சுக்கான காலகட்டம் 35 முதல் 45 நாட்கள் வரை இருக்கும். அதிகபட்சமாக 42 நாட்களுக்குள் கோழிகளைப் பிடித்து விடுவார்கள். கோழிக்குஞ்சுகள் பண்ணைக்குள் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அதற்கான வேலைகளைச் சுறுசுறுப்பாக அப்பாவும் அம்மாவும் ஆரம்பித்து விடுவார்கள்.

அந்த ஒரு வாரத்தில், பண்ணையை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும். அதன் சுற்றுப்புறத்தை வண்டுகள், பூச்சிகள் ஏதும் அண்ட விடாமல் இருப்பதற்கு ப்ளீச்சிங் பவுடர் போன்ற மருந்துகளை கொண்டு மருந்து தெளிப்பான் கருவியுடன் அப்பா பண்ணையை சுற்றிலும் ஸ்ப்ரே செய்வார். மேலும் இலை தழைகள் எதுவும் விழாமல் பண்ணையைச் சுற்றிலும் அம்மா கூட்டி விடுவார். கோழிகள் உணவு உண்ணும் தீனி டப்பாக்களையும், தண்ணீர் குடிக்கும் டப்பாக்களையும் சுத்தமாக அம்மா கழுவி வெயிலில் காய வைப்பார்.

எங்கள் வீட்டில் கறிக்கோழி பண்ணையானது கம்பெனி ஒப்பந்த முறையில் (Contract farming) நடைபெறுகிறது. கோழிக்குஞ்சுகளையும் தீவன மூட்டைகளையும் கம்பெனி வண்டியில் கொண்டுவந்து பண்ணையில் அந்த ஒரு வார காலகட்டத்தில் இறக்கி விடுவார்கள். பெரிய லாரியில் கோழிக்குஞ்சுகளுக்கான தீனி மூட்டைகள் வந்திறங்கும். லாரியில் வந்த தொழிலாளர்கள் 50 கிலோ கொண்ட மூட்டைகளை தன் முதுகில் சுமந்து பண்ணைக்குள் அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் வைத்துச் செல்வர்.

எங்கள் பண்ணையின் மேற்பார்வையாளர் (Supervisor) ஆலோசனையின் படி மருந்துகளை வாங்க வேண்டும். அதற்காக அப்பா மருந்து கம்பெனிக்கு 50 கி.மீ. வரை வண்டியிலே சென்று கனமான டப்பாக்களில் தேவையான மருந்துகளை கொண்டு வருவார்.

கோழிகள் தரையில் நடப்பதற்கு ஏதுவாக தேங்காய் நார் டிராக்டரில் வந்திறங்கும். தேங்காய் நாரானது ஒரு பக்கெட் ரூ.2,800 வரை வரும். எங்களது பண்ணைக்கு மூன்று பக்கெட் அளவிலான நார்களை போடுவோம். பண்ணைக்கு வெளியில் கொட்டி கிடக்கும் தேங்காய் நாரை நாங்கள் நால்வரும் சேர்ந்து பண்ணைக்குள் கொட்டிக்கிளறி விடுவோம்.

அந்த ஒரு வாரம் கால்களில் சக்கரத்தை கட்டிக்கொண்டு அப்பா-அம்மா இருவரும் ஓடுவர். கோழிகள் சுத்தமான தண்ணீர் குடிப்பதற்காக பண்ணை உள்ளே இருக்கும் எல்லா குழாய்களிலும் (Water line) மருந்தினை ஊற்றி அப்பா சுத்தம் செய்வார்.

கோழிகளை கதகதப்பாக வைத்துக் கொள்வதற்கு தேவையான படதாக்களை (Tarpaulin – தார்பாய்) பண்ணையைச் சுற்றிலும் கட்டி விடுவார்கள். கோழிக்குஞ்சுகளைப் பிரித்து அடைப்பதற்கான அட்டைகளை தயார் செய்வோம். மேலும், கோழிக் குஞ்சுகள் பாதுகாப்பாக நடப்பதற்கு தேங்காய் நாரின் மேல் நீயூஸ் பேப்பர்களை விரித்து அதை சுற்றிலும் அட்டையினால் கற்களை வைத்து அடைத்து விடுவோம்.

கோழிக்குஞ்சுகள் பண்ணைக்கு வரும் முன்தைய நாளன்று மேற்கூறிய எல்லாவற்றையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பெரும்பாலும் கோழிக்குஞ்சுகளை இரவு நேரத்தில்தான் பண்ணைக்கு கொண்டு வருவார்கள். குஞ்சுகள் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே, தீனி தட்டுகளையும், தண்ணீர் டப்பாக்களையும் நிரப்பி வைக்க வேண்டும். மேலும் கோழிக்குஞ்சுகளை கதகதப்பாக வைத்துக் கொள்வதற்கு மண்பானையில் சிறிதளவு ஆங்காங்கே ஓட்டைகளை போட்டு, அதில் அடுப்புக் கரித்துண்டுகளை நிரப்பி, நெருப்பை மூட்ட வேண்டும். அன்றைய நாளில் நானும் என் தம்பியும் போட்டி போட்டுக்கொண்டு அப்பா, அம்மாவுடன் இணைந்து வேலைகளை செய்வோம். சிறிய சிறிய கதைகளுடன் தங்கள் வாழ்க்கை அனுபவத்தையும் கலந்து அப்பாவும் அம்மாவும் நாங்கள் வேலை செய்யும் தருணத்தில் உரையாடுவர். உற்சாகத்தோடு நாங்கள் நால்வரும் வேலைகளை செய்வோம். இதனால் வேலை சிரமம் என்பது அவ்வளவு பெரிய ஒன்றாக தெரியாது.

பண்ணைக்கு கோழிக்குஞ்சுகள் இரவு நேரத்தில் பெரியதொரு டெம்போவில், சிறிய சிறிய பெட்டிகளில் வந்திறங்கும். உடன் வரும் மேற்பார்வையாளர் குஞ்சுகளுக்குக்கென அடைக்கப்பட்டிருக்கும் இடத்தில் நின்றுகொண்டு கோழிக்குஞ்சுகளை எண்ணி எண்ணி அட்டை பகுதிக்குள் தூக்கிப் போடுவார். கோழிக்குஞ்சுகளின் எடை 30-இலிருந்து 40 கிராம் வரை இருக்கும். கீச் கீச் என்ற சத்தம் காதை கிழிக்கும். அவற்றுள் கைக்கால்கள் சரியில்லாமல் சிலது இருக்கும். அதனை உடனே நாங்கள் பார்த்து மாற்றிக்கொள்ள வேண்டும். அதை கண்டுபிடிக்க எங்களின் கண்கள் ஓரிடத்தில் நிற்காது.

பிறந்த மூன்று நாட்களேயான கோழிக்குஞ்சுகள் ஒன்றின் மீது ஒன்றாக ஏறி கூட்டம் கூட்டமாக கதகதப்பை தேடி ஓடும். அவற்றை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள நாங்களும் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.

பெரும்பாலும் கோழிக்குஞ்சுகள் வரும் வேளையில், அதாவது இரவு நேரங்களில் நான் முழித்திருக்க மாட்டேன். காலை எழுந்ததும் பண்ணைக்குள் ஒரே அலைப்பறிக்கும் சத்தம் காதை கிழிக்கும். உள்ளே சென்று பார்த்தால் மஞ்சள் நிறத்தில் ஆயிரக்கணக்கான மிகவும் சிறிய குஞ்சுகள் அங்கும் இங்கும் ஓடி விளையாடி, கதகதப்பிற்காக ஒன்றின் மீது ஒன்றாக ஏறி அடையும். மேலும் கோழிக்குஞ்சுகள் சுறுசுறுப்பாக ஓடுவதற்கு பண்ணைக்குள் எப்போதும் ரேடியோ இசை ஒலித்துக் கொண்டே இருக்கும்.

கோழிக்குஞ்சுகள் வந்த நாள் தொடங்கிய இரவும் பகலுமாக அப்பாவிற்கும் அம்மாவிற்கும் வேலை ஆரம்பிக்கும். வந்த இரண்டு நாட்களில் அக்கோழிக்குஞ்சுகள் வளர தொடங்கிவிடும், நமது குரலுக்கு செவி சாய்த்து சுறுசுறுப்பாக நாம் நகரும் திசை எங்கும் கூட்டம் கூட்டமாக ஓடிவரும். மூன்று நேரமும் அதற்கான தீனி- தண்ணீர் வைத்து பார்த்துக் கொள்வர் . பள்ளி முடிந்து வந்தால் நானும் என் தம்பியும் இந்த வேலைகளை செய்த பின்னரே படிக்க ஆரம்பிப்போம்.

கோழிக்குஞ்சுகளின் எதிர்ப்பு சக்திக்காக வந்த ஐந்து நாட்களுக்குள் மேற்பார்வையாளரின் ஆலோசனைப்படி ஒரு தடுப்பூசி போடுப்படும். இந்த தடுப்பூசி அட்டவணைகள் கோழி பண்ணையின் கம்பெனிகளுக்கு ஏற்றவாறு மாற்றப்படும். இதில் முக்கியமாக ஊசியை கூட போட்டு விடலாம், ஆனால் ஊசி போடுவதற்கான ஆட்களை தேடி பிடிப்பதுதான் பெரும் சிக்கலாகிவிடும். அவ்வப்போது கோழி நாறுகளை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். கோழி நாறுகளில் ஈரம் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏதேனும் தெரியாமல் தண்ணீர் ஊற்றி விட்டால் உடனே அதை சுத்தம் செய்து புதிய நாரை அவ்விடத்தில் கொட்ட வேண்டும். கோழி வளர வளர அதற்கு தடுப்பாக போட்டு உள்ள அட்டைகளை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

முதல் 10 நாள்

கோழிக்குஞ்சுகள் வந்த முதல் 10 நாட்கள் மிகவும் முக்கியமானவை. பிறக்கும் போது ஒரு குஞ்சின் எடை சுமார் 30 – 40 கிராம் இருக்கும். கம்பெனிகளுக்கு ஏற்றவாறு இந்த எடைகள் மாறும். எடை குறையான கோழிக்குஞ்சுகளின் வளர்ச்சி என்பது சற்று கடினம்தான். அவ்வப்போது இறக்கவும் நேரிடும்.

10-வது நாளில் கோழிக்குஞ்சி 200 கிராம் வரை எடை கூடும். இந்த காலத்தில் என் அப்பா வெப்பநிலையை சரியாக பராமரிப்பார். குளிர் அதிகமாக இருந்தால் குஞ்சுகளுக்கு சளி பிடிக்கும் அபாயம் ஏற்படும். அம்மா தினமும் தண்ணீர் பாத்திரங்களை சுத்தம் செய்து, நேரத்திற்கு தீவனம் வைப்பார்.

இந்த காலத்தில் இளங்கோழி தீவனத்தை (Starter feed) மட்டுமே உணவாகக் கொடுக்க வேண்டும். கம்பெனியின் முதல் 10 நாள் தீனிகள் குஞ்சுகள் எளிதாக சாப்பிடுவதற்காக பொடியாக இருக்கும். முதல் 3–5 நாட்கள் தீனியைத் தட்டுகளில் அல்லது பேப்பரில் பரப்பி வைப்பர். பின்னர் சிறிய தீனி டப்பாக்களில் (Feeder) நிரப்பி கொடுக்க வேண்டும். தினமும் 4–5 முறை சிறுசிறு அளவில் அம்மா நிரப்புவார். அதேவேளையில், பழைய தீனி ஈரமாகிவிட்டால் அதனை உடனே அகற்ற வேண்டும். முதல் 10 நாட்களில் ஒரு குஞ்சு சுமார் 150–200 கிராம் வரை தீனி சாப்பிடும்.

முதல் நாளிலிருந்து சுத்தமான, மிதமான தண்ணீர் அவசியம். ஆரம்ப 2–3 நாட்கள் கம்பெனி ஆலோசனையின்படி வைட்டமின் / குளுக்கோஸ் தண்ணீரில் கலந்த கொடுப்பார் அப்பா. தண்ணீர் பாத்திரங்களை (Water tray) தினமும் சுத்தம் செய்ய வேண்டும். மேலும் தண்ணீர் குறைந்தால் குஞ்சுகள் உடனே பலவீனமாகிவிடும். அதனால் தண்ணீர் எப்போதும் காலியாக இருக்க விட மாட்டார்கள்.

குளிர் பிடித்தால் குஞ்சுகள் கூட்டமாக ஒன்று சேர்ந்து நிற்கும். அதிக வெப்பம் இருந்தால் வாயைத் திறந்து மூச்சு விடும். ஆதலால் வெளிச்சூழலுக்கு ஏற்றவாறு கோழிப்பண்ணையின் உள்ளே வெப்பநிலையை பராமரித்துக் கொள்வர்.

11 – 20 நாட்கள்

இந்த நாட்களில் கோழிகள் வேகமாக வளர ஆரம்பிக்கும். 20-ஆவது நாளில் அவை 700–900 கிராம் எடையை அடையும். இந்த நேரத்தில் தீவனச் செலவு அதிகமாக இருக்கும். அப்பா தினமும் எடையை பார்த்து வளர்ச்சி சரியாக இருக்கிறதா என்று கண்காணிப்பார். இந்த கட்டத்தில் கம்பெனியின் வழிகாட்டுதலின் படி இளங்கோழி தீவனத்திலிருந்து (Starter feed) வளர்ச்சி கோழி தீவனத்திற்கு (Grower feed) மாற்றுவார்கள். கோழிகள் இப்போது அதிகமாக சாப்பிட ஆரம்பிக்கும். தினமும் 2-3 முறை தீனி டப்பாக்களை நிரப்ப வேண்டும். தீனி டப்பா எப்போதும் காலியாக இருக்கக் கூடாது. ஈரப்பதம் படாமல் மூட்டைகளை உலர்ந்த இடத்தில் வைத்திருக்க வேண்டும்.

இந்த வயதில் கோழிகளுக்கு தண்ணீர் தேவையும் அதிகமாகும். தண்ணீர் டப்பாக்களை தினமும் இரு முறை கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சில சமயம் கம்பெனியின் ஆலோசனைப்படி வைட்டமின் / மருந்துகளை ஊட்டச்சத்திற்காகவும், எதிர்ப்பு சக்திக்காகவும் தண்ணீரில் அப்பா கலந்துவிடுவார். இந்த நாட்களிலும் தண்ணீர் குறைந்தால் வளர்ச்சி பாதிக்கப்படும்.

இந்த காலகட்டத்தில் பண்ணையில் காற்றோட்டமாக இருக்க வேண்டும். கோழிகள் சுறுசுறுப்பாக சாப்பிட்டு நடமாடுகிறதா என்று தினமும் அப்பா கவனித்துக்கொள்வார். நோய் அறிகுறிகள் இருந்தால் உடனே கம்பெனி மேற்பார்வையாளருக்கு தகவல் தந்து அதற்கேற்ற நடவடிக்கைகளை எடுப்பார். ஒருவேளை கோழி குஞ்சுகளுக்கு சளி எதுவும் பிடித்துவிட்டால் அதற்கென இஞ்சி, பூண்டு, துளசி போன்ற மூலிகைகளை அரைத்து சளி போவதற்காக நாட்டு வைத்தியங்களை மேற்கொள்வார்.

21 – 30 நாட்கள்

இப்பொழுது கோழிகள் சந்தைக்குத் தயாராகும் காலம். 30-வது நாளில் கோழிகள் 1.5 கிலோ வரை எடை கூடும். இந்த நேரத்தில் பண்ணை முழுவதும் வேலை சுறுசுறுப்பாக இருக்கும். இந்த கட்டத்தில் வளர்ச்சி தீவனத்திலிருந்து (Grower feed) இறுதி தீவனத்திற்கு (Finisher feed) மாற்றுவார்கள். தீனிகளின் அளவும் பெரிதாக இருக்கும். கோழிகள் மிகவும் அதிகமாக தீனி சாப்பிடும் வயது இது. தினமும் இரு முறை தீனி டப்பாக்களை முழுமையாக நிரப்புவர். தீனி எப்போதும் டப்பாக்களில் குறையாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஒரு கோழி இந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 1–1.2 கிலோ வரை தீனி சாப்பிடும். 30-வது நாளில் கோழி 1.5 – 2 கிலோ வரை எடை அடையும். இந்த வயதில் தண்ணீர் தேவையும் அதிகரிக்கும். சுத்தமான தண்ணீர் தொடர்ந்து கிடைக்க செய்வர். தண்ணீர் குழாய் அல்லது தண்ணீர் பாத்திரங்களை தினமும் 2 -3 முறை கழுவ வேண்டும். வெயில் அதிகமாக இருந்தால் கோழிகள் அதிகம் தண்ணீர் குடிக்கும்; அதனால் தண்ணீரை எப்போதும் நிரம்பி இருக்க வேண்டும்.

அதேபோல், இந்த நாட்களிலும் பண்ணைக்குள் காற்றோட்டம் நல்லபடியாக இருக்க வேண்டும். அதிக வெப்பம் இருந்தால் மின்விசிறி போட வேண்டும் அல்லது படதாக்களை திறந்து வைக்க வேண்டும்.

அதேபோல், பண்ணைக்குள் இருக்கும் நார்களில் ஈரம் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏதேனும் ஈரம் பட்டு விட்டால் உடனடியாக அதை மாற்ற வேண்டும். இல்லையென்றால் அதில் புழு பூச்சிகள் வந்து கோழிகளுக்கு நோய் தொற்று பாதிப்பினை ஏற்படுத்தும்.

கோழிகள் சுறுசுறுப்பாக இருக்கிறதா? சாப்பிடாமல் தனியாக உட்காருகிறதா? வயிற்றுப்போக்கு, சளித் தொல்லை ஏதேனும் உள்ளதா? நாட்களுக்கு ஏற்றவாறு எடை கூடுகிறதா? இப்படி ஒவ்வொன்றையும் அப்பா தினந்தோறும் கவனித்துக்கொள்வார்.

இரவு நேரத்தில் மருந்து தெளிப்பான் டேங்கில் மருந்தை ஊற்றி பண்ணை முழுவதும் ஸ்பிரே செய்வார். நோய் தாக்காதவாறு, பூச்சிகள் எதுவும் அண்டாதவாறு கடைசி பத்து நாட்கள் கூடுதல் கவனம் கொடுத்து பராமரிப்பார்.

முதல் நாள் தொட்டு கடைசி நாள் வரையில் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் ஐந்து கோழிகளாவது இறக்க நேரிடும். கோழியின் எடை அதிகரிக்க, கடைசி நாள் நெருங்க நெருங்க இறப்பின் சதவிகிதம் அதிகமாக இருக்கும். தரமற்ற கோழிகள் சரியாக தீனி உட்கொள்ளாமல் இருந்தாலோ, ஒழுங்காக தண்ணீர் குடிக்காமல் இருந்தாலோ, தீனியோ தண்ணீரோ தரமற்றதாக இருந்தாலோ இறப்புகள் நேரிடும்.

கம்பெனி அளித்த கோழிகளின் தரம் சரியில்லை என்றால் ஒரு நாளைக்கு 100 முதல் 200 கோழிகள் வரை கூட இறக்க நேரிடும். இறந்த கோழிகளை மூட்டையில் அள்ளி பக்கத்தில் இருக்கும் வயல்களில் குழி தோண்டி புதைப்பர். இந்த வேலையானது பெரும் வேதனை அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கும். இதனை நினைத்து அப்பா எங்களிடம் புலம்பாத நாளில்லை.

ஊனமுற்ற அல்லது கை கால்களில் ஏதேனும் அடிபட்ட கோழிகளை, அவை எதற்கும் உதவாது என்று கூறி தினமும் பார்வையிட வரும் மேலாளர் அதன் தலையில் அடித்து உடனே சாகடித்து விடுவார். அதனை மேற்கொண்டு உபயோகப்படுத்த இயலாதபடி செய்துவிடுவார்கள். பார்ப்பதற்கே மனவேதனையாக இருக்கும்.

கோழிகள் வளர வளர பண்ணைக்குள் தூசி – மாசுக்கள் அதிகரிக்கும். முகமூடிகள் இல்லாமல் வேலை பார்ப்பது சுவாசக் கோளாறு போன்ற பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆனால், தன்னைப் பற்றியும் தன் உடம்பை பற்றியும் கவனித்துக்கொள்ள அவர்களுக்கு நேரம் ஏது? சொன்னாலும் கேட்க மாட்டார்கள். இரவும் பகலும் கோழிகளைப் பராமரிப்பதிலே அவர்களின் கவனம் முழுமையாக இருக்கும்.

அப்பாவுடன் எப்பொழுது நான் தொலைபேசியில் பேசினாலும் கோழிகளைப் பற்றியே அதிகம் பேசுவார். கோழிக்குஞ்சுகள் வரும்பொழுதே, அதன் தன்மையைப் பார்த்து அது தரமானதா இல்லையா என்று கூறிவிடுவார். “தரமற்றதாக இருந்தாலும் வேறு வழி இல்லை. வளர்த்துதான் ஆக வேண்டும். வருவது வரட்டும்!” என்று கூறி பல சிரமங்களோடு மனதை தேற்றிக்கொண்டு வேலையில் ஈடுபடுவார்.

கோழி பிடிப்பதற்கான நாள் நெருங்கும் காலங்களில் வீட்டில் அப்பாவும் அம்மாவும் மன உறுத்தலுடனே வேலைகளை மேற்கொள்வர். கோழிகளை சற்று அதிகம் கவனம் கொடுத்து கண்காணித்துக் கொள்வர்.

கோழிகளின் மேற்பார்வையாளர் கோழிகளை பிடிப்பதற்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து விடுவார். பிடிப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு பண்ணைக்குள் இருக்கும் எல்லா தீனி டப்பாக்களையும் அகற்ற வேண்டும்.

பண்ணையின் மேற்பார்வையாளர், “இன்று இரவு உடுமலைப்பேட்டை, ஊத்தங்கரை போன்ற பகுதியிலிருந்து வண்டிகள் வரும்” என்று கூறுவதை அதிகம் கேட்டிருக்கிறேன். பொதுவாக இரவு நேரம்தான் கோழிகளைப் பிடிப்பதற்கு சரியான நேரம் என்பதால் 7-8 வண்டிகள் ஒன்றின் பின் ஒன்றாக வீட்டின் முன் வந்த வண்ணம் இருக்கும். இரவு முழுவதும் கோழிகளைப் பிடிப்பார்கள்.

ஒவ்வொரு ஆட்டோவிலும் கோழி பிடிப்பவர்கள் வந்திறங்குவர். இந்த நேரத்தில் எடை கருவி என்பது மிகவும் முக்கியமானது. வண்டியிலிருந்து கோழிகளை எடுத்துச் செல்லும் காலிக்கூண்டுகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைப்பர். 5-6 காலி கூண்டுகளை முதலில் எடை போட்டு இறக்கி வைப்பார்கள். ஒவ்வொரு கூண்டிலும் 11 கோழிகள் வரை அடைத்து மீண்டும் எடை போடுவார்கள். இதன் அடிப்படையில் கோழிகளின் மேற்பார்வையாளர் கணக்கெடுப்பார். மேலும், மாதம் முழுவதும் இறந்த கோழிகளை கணக்கில் கழித்துவிட்டு தீவன மாற்ற விகிதத்தின் (FCR) அடிப்படையில், அதாவது கோழிகள் தீவனம் சாப்பிட்ட அளவிற்கு அதன் எடை உள்ளதா என்ற அடிப்படையில் தொகையை நிர்ணயிப்பர். எனவே, எஃப்.சி.ஆர்-ஐ நினைத்து சற்று சலனத்தோடு அப்பாவும் அம்மாவும் இருப்பர்.

கறிக்கோழி ஒப்பந்தப் பண்ணை முறையில், பண்ணையாளர்களுக்கு வழங்கப்படும் வளர்ப்பு கட்டணம் (Growing Charges) என்பது சில குறிப்பிட்ட காரணிகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. இதைப் பற்றி மேலும் பகிர்கிறேன்….

  1. அடிப்படை வளர்ப்பு கட்டணம் (Standard Growing Charges)

ஒவ்வொரு கிலோ உயிருள்ள கோழிக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை நிறுவனம் பண்ணையாளருக்கு வழங்குகிறது. இது பண்ணையின் உள்கட்டமைப்பு மற்றும் பராமரிப்புக்காக வழங்கப்படும் நிலையான ஊதியமாகும்.

  1. தீவன மாற்ற விகிதம் (Feed Conversion Ratio – FCR)

இதுவே வளர்ப்பு கட்டணத்தைத் தீர்மானிப்பதில் மிக முக்கியமான காரணியாகும். ஒரு கிலோ உடல் எடையைப் பெறுவதற்கு கோழி எவ்வளவு தீவனத்தை உட்கொள்கிறது என்பதே எஃப்.சி.ஆர். ஆகும்.

எஃப்.சி.ஆர். குறைவாக இருந்தால் (அதாவது குறைந்த தீவனத்தில் அதிக எடை), அது பண்ணையாளரின் திறமையான வளர்ப்பைக் குறிக்கிறது. இதற்கு ஊக்கத்தொகை (Incentives) வழங்கப்படும். எஃப்.சி.ஆர். அதிகமாக இருந்தால் வளர்ப்பு கட்டணத்தில் பிடித்தம் செய்யப்படும்.

  1. கோழிகளின் இறப்பு விகிதம் (Mortality Rate)

பண்ணையில் கோழிகள் இறக்கும் சதவிதம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (பொதுவாக 3-5 சதவிகிதம்) இருக்க வேண்டும்.

நோய் மேலாண்மை மற்றும் பராமரிப்பு சரியாக இருந்து, இறப்பு விகிதம் குறைவாக இருந்தால் பண்ணையாளருக்கு கூடுதல் போனஸ் கிடைக்கும்.

அதிகப்படியான இறப்பு ஏற்பட்டால், அது வளர்ப்பு கட்டணத்தைப் பாதிக்கும்.

  1. உற்பத்தி குறியீடு (Performance Efficiency Factor – PEF)

நவீன பண்ணை முறைகளில் “ஐரோப்பிய உற்பத்தி திறன் குறியீடு” (EPEF) பயன்படுத்தப்படுகிறது. இது வளர்ப்பு கால அளவு, எடை மற்றும் பிழைப்பு விகிதம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து கணக்கிடப்படுகிறது.

இந்த குறியீடு அதிகமாக இருந்தால் பண்ணையாளருக்கு வழங்கப்படும் ஊதியம் உயரும். இந்தக் குறியீடுகள் மூலம் அடுத்த கட்டமாக பண்ணையாளர்களை உற்சாகப்படுத்துவதற்கு பயன்படுத்துவர்.

ஒரு கோழியின் எடை 2–2.5 கிலோ வரும் தருவாயில் அவற்றை பிடித்து விடுவார்கள். அவ்வபோது தாமதமாகவும் பிடிப்பார்கள். அப்போது கோழி தன்னுடைய தாங்க முடியாத எடையினால் இரத்த அழுத்தத்திற்கு உள்ளாகி தானே இறக்கவும் நேரிடும். ஆகவே கோழியை சரியான நேரத்தில் பிடிப்பது என்பது மிகவும் அவசியமாக இருக்கும். ஒரு சில கம்பெனிகள் கோழிகளை சரியான நேரத்திற்கு பிடிக்காமல் இழுத்து அடிப்பார்கள். இதனால் விவசாயிகளுக்கே அதிக வேதனை உண்டாகும்.

இரவு நேரத்தில் அனைத்து கோழிகளையும் பிடித்துவிட்ட பிறகு மறுநாள் காலையில் கோழிப்பண்ணை வெறிச்சோடி போய் காட்சியளிக்கும். இதுவரை நாள்தோறும் கேட்டுக் கொண்டிருந்த சத்தம் மறைந்து அமைதியான சூழல் இருக்கும்.

அப்பாவும் அம்மாவும் சற்று ஓய்வெடுப்பர். என்னதான் உடலுக்கு சற்று ஓய்வு கொடுத்தாலும் மனதிற்குள் ஒரு சஞ்சலம் இருந்து கொண்டேதான் இருக்கும்.

இம்முறை கோழி வளர்ப்புக்கான தொகை எவ்வளவு வரும்? உடனே கொடுத்து விடுவார்களா இல்லை நாட்களை கடத்துவார்களா? அதை வைத்து வாங்கியுள்ள கடனை எவ்வாறு அடைப்பது? மேலும் அடுத்த கோழி பேட்சுக்கான வேலைகளை தொடங்க கையிருப்புக்கு இருக்குமா? என்றெல்லாம் கவலை கொள்வர். மேலும், என்னுடைய செலவிற்காகவும் அப்பணத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பேன்.. இதனை எல்லாம் யோசித்துக் கொண்டே ஒரு வாரத்தை கடத்துவர். கோழி பண்ணையின் தேங்காய் நாரை வயலுக்கு உரமாக போட்டு விடுவர்.

பல நேரங்களில் கோழி வளர்ப்பிற்கு ஏற்ற தொகை கிடைக்காது. அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் இருக்காது. தொகை குறைவாக வந்தாலும் அதைப் பற்றி மேலும் கம்பெனிக்காரர்களிடம் கேட்க முடியாது. இவ்வளவுதான் தொகை என்று அவர்கள் போட்டு விடுவார்கள். போதாக்குறையாக இருக்கும் தொகையை வைத்துத்தான் வீட்டுச் செலவு, வயல் வேலை, கடன் கட்டுவது என்று அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும்.

எதிர்பார்த்ததை விட குறைவான தொகை வரும் போதெல்லாம் மனதைத் தேற்றிக்கொண்டு கையிருப்புத் தொகையில் கொஞ்சம் பணத்தை பண்ணை வேலைக்காக வைத்துக் கொண்டு, மீதியுள்ள தொகையில் இருவரும் கடனை அடைப்பார்கள். பணம் வருவதும் போவதும் தெரியாத வண்ணம் இருக்கும்.

அடுத்த கோழிக் குஞ்சுகள் விடுவதற்கு இரண்டு மூன்று வாரம் எடுக்கும். அதற்குள் இதர வேலைகளை முடித்து மறுபடியும் பராமரிப்பு பணியை தொடங்கிவிடுவர்.

ஆம்! மாதந்தோறும் இது ஒரு சுழற்சி போன்று சுற்றிக்கொண்டே இருக்கும்….

இந்த தொழில், எங்கள் குடும்பத்திற்கு ஒரு வருமான ஆதாரமாக மட்டுமல்ல, வாழ்க்கைப் பாடமாகவும் உள்ளது. தினமும் அதிகாலையில் எழுந்து உழைக்கும் என் அப்பா, அம்மாவைப் பார்த்து உழைப்பின் மதிப்பை நான் கற்றுக்கொண்டேன். தினமும் காலையிலேயே எழுந்து, கோழிகளுக்குத் தீனி, தண்ணீர் அளித்து, அவற்றைக் குழந்தைகளைப் போல கவனிக்கும் என் அப்பா, அம்மாவை பார்த்து நான் பெருமைப்படுகிறேன். பல நேரங்களில் தீவன விலை உயர்வு, நோய் பரவல், சந்தை சிக்கல்கள் போன்ற சவால்கள் வரும்.‌ பெரும்பாலும் கோழிப் பண்ணைகளின் கம்பெனி மீது குற்றம் இருக்கும். இருப்பினும் அவர்கள் மீதும் கருணை காட்டி “அவர்கள் மட்டும் என்ன செய்வார்கள்” என்று கூறிக்கொண்டு இருவரும் அடுத்த வேலையைத் தொடங்குவார்கள்… நாட்கள் போகும்… உழைப்புக்கேற்ற ஊதியம்தான் என்றுமே இருக்காது…

(தொடரும்…)


சைரா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க