நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் கோழிப்பண்ணை விவசாயிகளின் வாழ்வியலையும், அவர்களுக்குத் தீர்வு கிடைக்காத போராட்ட வரலாற்றையும் முதல் இரண்டு பாகங்களில் பார்த்தோம். அதற்கான அரசியல் காரணியையும் தீர்வுக்கான திசைவழியையும் இப்பகுதியில் பார்ப்போம்.
பசுமைப் புரட்சியும் புரதச்சத்துத் தேவையும்
பசுமைப் புரட்சியில் தொடங்கி, இன்று நாம் காணும் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ள கோழிப்பண்ணைத் தொழில் வரையிலான பரிணாம வளர்ச்சி, இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் இரத்தமும் சதையுமான வரலாறு ஆகும். உணவுப் பாதுகாப்பிற்காக இந்தியா மேற்கொண்ட பயணத்தின் முக்கிய மைல்கற்கள் இவை என்று பெருமையாகக் கூறப்பட்டாலும், இதன் உண்மையான விளைவுகளை ஆராய்ந்து பார்த்தால் அவை எதிர்விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளன.
1960-களின் நடுப்பகுதியில், இந்தியா கடுமையான உணவுப் பஞ்சத்தை எதிர்கொண்டது. அந்த உணவுப் பஞ்சத்தைப் போக்கிக் கொள்வதற்காக, அமெரிக்க அரசு கொண்டு வந்த “அமைதிக்கான உணவுத் திட்டம்” என்ற ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் குட்டை ரகக் கோதுமை விதைகள் இறக்குமதி செய்யப்பட்டன. இத்திட்டம் தற்காலிகமாகப் பஞ்சத்தைத் தீர்த்தாலும், இது உணவுக்காக மற்றொரு நாட்டை கையேந்தி நிற்கும் நிலையை ஏற்படுத்திவிடும் என்பதால், இந்தியாவிலேயே உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் பசுமைப் புரட்சித் திட்டம் (Green Revolution) அறிமுகப்படுத்தப்பட்டது. இது கோதுமை மற்றும் நெல் உற்பத்தியில் தன்னிறைவு பெற உதவியது. (ஏகாதிபத்திய நிறுவனங்களிடம் இந்திய விவசாயத்தை எவ்வாறு அடகு வைத்தது என்பது தனிக் கதை)
பசுமைப் புரட்சி அமல்படுத்தப்பட்ட 1960 முதல் 1980 வரையிலான காலகட்டம் “இந்திய விவசாயத்தில் மறுமலர்ச்சி காலம்” எனவும் இத்திட்டம் “ஒரு புரட்சிகர நடவடிக்கை” எனவும் பலராலும் கொண்டாடப்பட்டது. ஒரு வகையில் பசுமைப் புரட்சி கோதுமை, அரிசி உற்பத்தியில் தற்காலிகமாகச் சாதித்தாலும், அது வேறு சில மோசமான விளைவுகளை நாட்டிற்கு அறிமுகம் செய்தது. குறிப்பாக, மரபு சார்ந்த விவசாயம் மற்றும் இயற்கை உரம் போன்றவற்றுக்குப் பதிலாகப் பூச்சி மருந்து, மரபணு மாற்றப்பட்ட விதைகள், இரசாயன உரம் ஆகியவற்றைப் பயன்படுத்தியதன் விளைவாக மண்வளம் பெரிதளவில் பாதிக்கப்பட்டது.
மறுபுறம், பசுமைப் புரட்சி பசியை முழுமையாகத் தீர்க்கவில்லை எனினும், கோதுமை மற்றும் அரிசியின் உற்பத்தியை ஓரளவிற்குப் பெருகச் செய்தது. ஆனால், பருப்பு வகைகள், சிறுதானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் போன்ற புரதச்சத்து நிறைந்த பயிர்கள் பயிரிடப்படுவது புறக்கணிக்கப்பட்டது. அரிசியும் கோதுமையும் வயிற்றை நிரப்பினாலும், உடலில் தசை வளர்ச்சிக்கும் மூளை வளர்ச்சிக்கும் தேவையான புரதச்சத்து (Protein) பற்றாக்குறை மக்களிடையே நீடித்தது.
குறிப்பாக, பசுமைப் புரட்சித் திட்டங்களை அதிகளவில் ஏற்றுக்கொண்ட மாவட்டங்களில் பயிர் பன்முகத்தன்மை பெருமளவு குறைந்ததுடன், கிராமப்புற மற்றும் குறைந்த வருமானம் கொண்ட மக்களிடையே புரதம் மற்றும் நுண்ணூட்டச்சத்து உட்கொள்ளல் குறைந்தது. ஒரு கலோரிக்கான புரதம் கிடைக்கும் தன்மை 3 சதவிகிதம் வரை சரிந்ததாக ஆய்வுகள் தெரிவித்தன. இது, மறைமுகப் பசியையும் (Hidden Hunger) ஊட்டச்சத்துக் குறைபாடுகளையும் மேலும் மோசமாக்கியது. இதன் விளைவாக இந்தியாவில் ஏற்கெனவே நிலவிவந்த புரதச் சத்து குறைபாடு தீவிரமடைந்தது.
இதனால், மலிவான மற்றும் தரமான புரதச்சத்தை மக்களுக்கு வழங்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டது.
மக்கள் உணவில் “புரதம்” குறைபாடு
நாட்டின் பெரும்பான்மையான உழைக்கும் மக்களிடம் புரதக் குறைபாடு காணப்பட்டதன் விளைவாக, “வெள்ளைப் புரட்சி” (பால்) மற்றும் “வெள்ளிப் புரட்சி” (முட்டை/இறைச்சி) ஆகியவை கொண்டுவரப்பட்டன.
“புரதச்சத்துப் புரட்சி” (Protein Revolution) கோழி வளர்ப்புத் தேவையின் முக்கியத்துவத்தை உருவாக்கியது. அதற்கான மூன்று முக்கிய வழிகளாகக் கோழி இறைச்சி (100 கிராமிற்கு 25–30 கிராம் புரதம்), மீன் (100 கிராமிற்கு 20–25 கிராம் புரதம்), பால் (100 கிராமிற்கு 3–4 கிராம் புரதம்) ஆகியவை இருந்தன.
இவற்றுள் கோழி இறைச்சி என்பது மிக முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. ஏனென்றால், அது விரைவாக வளரக்கூடியது (6–8 வாரங்கள்), குறைந்த செலவுடையது, அதிக புரதச்சத்து உடையது மற்றும் அனைத்து மதத்தினரும் பயன்படுத்தக் கூடியது ஆகும்.
சிதறிய உற்பத்தியில் இருந்து
ஒருங்கிணைந்த பண்ணை வளர்ப்பு முறை
1950-க்கு முன்பு கோழி உற்பத்தி சிதறிய உற்பத்தியாகவே இருந்தது. அப்போது கோழிகள் இறைச்சிக்காகவோ அல்லது முட்டைக்காகவோ ஒரு பண்ணையில் வைத்து வளர்க்கப்படவில்லை, கொல்லைப்புற வளர்ப்பாகவே இருந்தது. ஒவ்வொரு வீட்டிலும் 5 முதல் 10 கோழிகள் வரை இருக்கும். அவை வீட்டு வாசலில் சிதறிக் கிடக்கும் தானியங்களையும் புழு பூச்சிகளையும் உண்டு, தானாக வளரும்.
நாட்டு ரகங்களான (Indigenous Breeds) “அசீல்” (Aseel), “கடக்நாத்” (Kadaknath) மற்றும் “சிட்டகாங்” (Chittagong) போன்ற உள்ளூர் ரகங்களே வளர்க்கப்பட்டன. இவை நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டவை. ஆனால், மிகக் குறைவாகவே முட்டை உற்பத்தி செய்யும் (ஆண்டுக்கு 60-70 முட்டைகள் மட்டுமே). அன்றைய சூழலில் காய்ச்சல் வந்தவர்களுக்கும் உடல்நிலை சரியில்லாதவர்களுக்கும் கொடுக்கப்படும் “மருந்து” போன்ற பொருளாகவே கோழி இறைச்சியும் முட்டையும் பார்க்கப்பட்டன.
அப்போதைய சந்தை மற்றும் விற்பனை முறையைப் பொறுத்தவரை, 1950-க்கு முன் முறையான விற்பனைச் சங்கிலி (Supply Chain) இல்லை. கிராமங்களில் வளர்க்கப்படும் கோழிகள் மற்றும் முட்டைகள் கூடைகள் மூலம் வாரச் சந்தைகளுக்குக் (Shandies/Markets) கொண்டு வரப்பட்டு விற்கப்பட்டன.
கோழிகள் உணவாகப் பார்க்கப்பட்டதை விட, “அசீல்” போன்ற ரகங்கள் சேவல் சண்டைக்காகவே (Cockfighting) அதிகம் வளர்க்கப்பட்டன. இதுவே அக்கால கோழி வளர்ப்பின் முக்கிய நோக்கமாக இருந்தது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், அவர்களது உணவுத் தேவைக்காக இராணுவ முகாம்களுக்கு அருகில் சிறிய அளவில் சில பண்ணைகள் உருவாக்கப்பட்டன. ஆனால், அவை பொதுமக்களுக்கானவை அல்ல. அப்போது வரை அது சிறிய அளவிலான உற்பத்தியாகவே இருந்தது.
1950-க்குப் பிறகு அரசின் தலையீட்டுடன் கோழி வளர்ப்பில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாகத் தொடங்கியது.
அதேசமயம், இக்காலகட்டத்தில் அரசு கோழி வளர்ப்பை ஒரு பெரிய தொழிலாகப் பார்க்காமல், கிராமப்புற மேம்பாட்டுக்கான ஒரு கருவியாக மட்டுமே பார்த்தது.
1950–1965 காலகட்டத்தின் ஆரம்பகாலத் திட்டங்களாக:
சமூக மேம்பாட்டுத் திட்டம் (Community Development Programme – 1952): இத்திட்டத்தின் மூலம் முதன்முதலில் கிராமங்களில் சிறு கோழிப் பண்ணை அலகுகள் (Small Poultry Units) உருவாக்கப்பட்டன.
பசுமைப் புரட்சி அமல்படுத்தப்பட்டு, உணவு உற்பத்தியை அதிகரிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் கோழி உற்பத்தியில் நவீன முறைகள் புகுத்தப்பட்டன.
அரசே இலவசமாகக் கோழிக் குஞ்சுகளை விநியோகித்து, விவசாயிகளுக்குக் குறுகிய கால வளர்ப்புப் பயிற்சியை அளித்தது.
இவற்றின் மூலம், கிராமப்புற ஏழைகளுக்குத் தேவையான புரதச்சத்தை (Protein Supplementation) அவர்களின் வீட்டின் புழக்கடையிலேயே கிடைக்கச் செய்வதாக அரசு கூறியது.
1950-களுக்குப் பிறகுதான் இது ஒரு “விவசாயத் தொழிலாக” மாறத் தொடங்கியது. அதற்கான முக்கிய காரணம் மக்கள் தொகை பெருக்கம் ஆகும். குறிப்பாக, 1960-களில் அறிவியல் ரீதியான அணுகுமுறை கோழி வளர்ப்பில் புகுத்தப்பட்டது. இது “நாட்டுக்கோழி” வளர்ப்பிலிருந்து “வீரிய ரக” வளர்ப்பிற்கு இந்தியாவை மாற்றியது.
அமெரிக்காவின் யு.எஸ். எய்ட் (USAID) மற்றும் ஐ.நா. சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) இணைந்து, இந்தியாவிற்கு நவீனக் கோழி வளர்ப்புத் தொழில்நுட்பங்களைக் கொண்டு வந்தன. ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா பகுதிகளில் நவீனப் பண்ணை முறைகள் பரிசோதிக்கப்பட்டன.
இவற்றின் மூலம், அதுவரை இருந்த நாட்டுக் கோழிகளுக்குப் பதிலாக, அதிக முட்டையிடும் “வெள்ளை லெகார்ன்” (White Leghorn – Egg Purpose) மற்றும் முட்டை-இறைச்சிக்காக “ரோட் ஐலண்ட் ரெட்” (Rhode Island Red – Dual Purpose) போன்ற வெளிநாட்டு ரகங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.
நாட்டுக் கோழிகள் ஆண்டுக்குச் சராசரியாக 70 முட்டைகள் மட்டுமே இட்ட நிலையில், மேம்படுத்தப்பட்ட ரகங்கள் ஆண்டுக்கு 150 முதல் 220 முட்டைகள் வரை இட்டன. இது முட்டை உற்பத்தியை இரண்டு மடங்கிற்கும் மேலாக உயர்த்தியது.
1960-இல் தொடங்கப்பட்ட “தீவிர விவசாய மாவட்டத் திட்டம்” (IADP) மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகளுக்கு நவீனக் கோழிக் குஞ்சுகள் மற்றும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. எனினும், 1960-களில் பண்ணைகள், இன்று இருப்பது போல பிரம்மாண்டமாக இல்லை. அவை ஆரம்பிக்கட்ட அறிவியல் பரிசோதனைகளாகவே இருந்தன.
வைக்கோல் அல்லது மரத்தூள் பரப்பி கோழிகளைத் தரையில் விட்டு வளர்க்கும் முறை (Deep Litter System) 1960-களில்தான் பிரபலமானது. இது கோழிகள் அதிக முட்டையிடவும், நோய்த் தொற்று குறையவும் உதவியது. அப்போதைய பண்ணைகள் பொதுவாக 100 முதல் 500 கோழிகளைக் கொண்ட சிறிய கொட்டகைகளாகவே இருந்தன.
அதுவரை தானியங்களை மட்டுமே உண்டு வளர்ந்த கோழிகளுக்கு, முதன்முதலில் “சமச்சீர் தீவனம்” (Balanced Mash Feed) எனும் அறிவியல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
அரசுத் திட்டங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், அதை ஒரு மாபெரும் வணிகச் சங்கிலியாக மாற்றிய பெருமை டாக்டர் பி.வி.ராவ் (பண்டா வாசுதேவ் ராவ்) அவர்களையே சாரும். இவரே “இந்தியக் கோழிப்பண்ணைத் துறையின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார். இவர் 1970-களில் கோழி வளர்ப்பை ஒரு கொல்லைப்புறத் தொழிலில் இருந்து ஒரு நவீனத் தொழிலாக (Organized Industry) மாற்ற அடித்தளமிட்டார். 1971-இல் அவர் தொடங்கிய வெங்கடேஸ்வரா ஹேட்சரீஸ் (VH Group) இந்தியாவின் கோழி வளர்ப்பு வரலாற்றையே மாற்றியது. அதற்கு முன் கோழி வளர்ப்பு என்பது ஒரு லாபகரமான தொழிலாகக் கருதப்படவில்லை.
அமெரிக்காவின் “வென்காப்” (Vencobb) போன்ற உலகத்தரம் வாய்ந்த கோழி இரகங்களை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தினார். முன்னர் 70-80 நாட்களுக்கு வளர்க்கப்பட்ட கோழிகளை, அறிவியல் தொழில்நுட்பம் மூலம் 40 நாட்களுக்குள் வளர்க்கும் முறையை ஊக்குவித்தார்.
1980-களில் முட்டை விலை வீழ்ச்சியடைந்த போது, விவசாயிகள் நட்டமடைவதைத் தடுக்க “தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு”வை (NECC- National Egg Coordination Committee) 1982-இல் உருவாக்கினார்.
கோழிகளுக்கு ஏற்படும் நோய்களைத் தடுக்க வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதில் இருந்த சிக்கல்களைப் போக்கி, உள்நாட்டிலேயே தடுப்பூசி தயாரிக்கும் தொழிற்சாலைகளை (Ventri Biologicals) நிறுவினார்.
வெளிநாட்டிலிருந்து குஞ்சுகளை இறக்குமதி செய்வதில் இருந்த சிரமங்களைக் குறைக்க, இந்தியாவிலேயே “கோழிக்குஞ்சு பொரிப்பகங்கள்” (Hatcheries) தொடங்கப்பட வேண்டும் என்பதற்கான முயற்சிகள் இவர் மூலம் மேற்கொள்ளப்பட்டன.
1960-1970 காலகட்டம் என்பது இந்தியக் கோழிப்பண்ணைத் துறையின் “கருவறை” காலம். அரசின் திட்டமிடலும், பி.வி.ராவ் போன்றவர்களின் தனிநபர் உழைப்பும் இணைந்து, ஒரு சாதாரணக் கொல்லைப்புறத் தொழிலை பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு மாபெரும் பொருளாதாரச் சக்தியாக மாற்றியது.
தொகுப்பாக, சிதறிக் கிடந்த இந்தியக் கோழி வளர்ப்பு உற்பத்தி ஒரு கட்டமைப்புக்குள் கொண்டுவரப்பட்டு, ஒருங்கிணைந்த பண்ணை வடிவமாக மாற்றப்பட்டது. அதாவது கோழிக்குஞ்சுகள் உற்பத்தி, தீவன உற்பத்தி, தடுப்பூசி உற்பத்தி என இவை அனைத்தும் ஒருங்கிணைந்த முறையில் ஒரே இடத்தில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டு, ஒழுங்குபடுத்தி ஒரு வடிவத்திற்குள் கொண்டு வரப்பட்டது.
இந்தக் கட்டமைப்புதான் கார்ப்பரேட்டுகள் சுலபமாக உள்ளே வந்து இதைக் கைப்பற்றிக் கொண்டு தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பை உருவாக்கியது. இந்த கார்ப்பரேட்டுகளின் வருகையால், நாட்டின் புரதச்சத்து பற்றாக்குறையைப் பூர்த்தி செய்யும் தேவைக்கான உற்பத்தி என்று கூறப்பட்ட கறிக்கோழி உற்பத்தி, முற்றிலும் லாபத்திற்கான உற்பத்தியாக மாறத் தொடங்கியது.
விவசாயிகளைச் சுரண்டும்
லாபத்திற்கான உற்பத்தியின் துவக்கம்
தமிழ்நாட்டின் பல்லடத்தில் சுகுணா (Suguna) போன்ற நிறுவனங்கள் “ஒப்பந்தப் பண்ணை” (Contract Farming) முறையை அறிமுகப்படுத்தின.
இந்நிறுவனங்களே கோழிக்குஞ்சுகள், தீவனம் மற்றும் மருந்துகளை விவசாயிகளுக்கு வழங்கிவிடும். விவசாயி பராமரிப்பை மட்டும் கவனிப்பார். வளர்ப்பு முடிந்ததும் நிறுவனம் கோழிகளை எடுத்துக்கொண்டு விவசாயிக்கு “வளர்ப்பு கூலி” வழங்கும். 1990-களில் புதிய பொருளாதாரக் கொள்கைக்குப் பிறகு, இவ்வகையிலான கோழி உற்பத்தி முழுக்க முழுக்க லாபத்திற்கான உற்பத்தியாகப் பரிணமிக்கத் தொடங்கியது.
1970-களில் இரண்டு கிலோ எடையை அடைய 60-70 நாட்கள் எடுத்துக்கொண்ட கோழிகள், மரபணு மேம்பாடு (Genetic Improvement) மூலம் 1990-களில் 40-45 நாட்களிலேயே அந்த எடையை எட்டின.
இந்த நாட்டின் புரதச்சத்தை மேம்படுத்த வேண்டும் என்று கூறி உருவாக்கப்பட்ட வெள்ளிப் புரட்சியானது, இன்று மக்களின் ஆரோக்கியம், விவசாயிகளின் வாழ்வாதாரம், தொழிலாளர்களின் வாழ்க்கை என அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு, சுகுணா, சாந்தி போன்ற பெரும் கார்ப்பரேட் பிராய்லர் கம்பெனிகளின் ஆதிக்கத்திற்கும் அவர்களின் நலனுக்கும் இந்த கட்டமைப்பை அடகு வைத்து, விவசாயிகளை நிர்க்கதியாக்கியுள்ளது. தற்போதைய நிலைமையில் இத்துறை ஒரு முழுமையான கார்ப்பரேட் கட்டமைப்பைப் பெற்றுள்ளது.
தட்பவெப்ப நிலையைத் தானாகவே கட்டுப்படுத்தும் குளிர்சாதன வசதி கொண்ட கொட்டகைகள் (EC Sheds) அறிமுகமாயின. இதனால் கோடைகாலத்திலும் கோழிகள் இறப்பது தடுக்கப்பட்டது.
சுகுணா, சாந்தி, வெங்கீஸ் போன்ற நிறுவனங்கள் சந்தையின் 70 சதவிகித பகுதியைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளன.
தற்போதைய புள்ளிவிவரம் (2024-2026):
- இந்தியா உலகின் 2-வது பெரிய முட்டை உற்பத்தியாளர்.
- உலகின் 3-வது பெரிய கோழி இறைச்சி உற்பத்தியாளர்.
- ஆண்டுக்குச் சுமார் 13,000 கோடி முட்டைகள் இந்தியாவில் உற்பத்தியாகின்றன.
இந்தியக் கோழிப்பண்ணை விவசாயிகள் பிரச்சினை என்பது இந்தியாவின் வேளாண் உற்பத்தி மற்றும் தொழில்துறை உற்பத்தி சார்ந்த அரசின் கொள்கை முடிவோடு தொடர்புடைய பிரச்சினை என்பதை நாம் இதுவரை பார்த்தோம். கறிக்கோழி உற்பத்தியில் கார்ப்பரேட் ஆதிக்கத்தை ஆதரிக்கும் அரசின் கொள்கை முடிவுகளை மாற்றியமைக்காமல், வெறுமனே கூலி உயர்வு போராட்டம் மட்டும் இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துவிடப் போவதில்லை.
இந்தியா போன்ற பின்தங்கிய நாடுகளில், சிதறிய உற்பத்தியில் இருந்த விவசாயிகளின் சிந்தனை மற்றும் வாழ்நிலையை ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வருவது ஒரு நீண்ட காலப் போராட்டமாகும். ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களோ தனது லாபத்தைப் பல மடங்கு பெருக்கிக் கொள்வதற்காகவும், உழைப்புச் சுரண்டலை நேர்த்தியாக நடத்துவதற்காகவும் முன்னேறிய நாடுகளின் அனுபவங்களையும் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்திக் கொண்டு, சாதாரண மக்களால் புரிந்துகொள்ள முடியாத ஒரு உழைப்புச் சுரண்டலை உருவாக்கி நேர்த்தியாக நடத்திக் கொண்டிருக்கின்றன.
கோழிப்பண்ணை விவசாயிகளின் போராட்டமானது தொடர்ந்து நடைமுறையில் பல்வேறு அனுபவங்களைக் கற்றுக்கொண்டு இன்று ஒரு முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளது. இன்னும் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது ஒன்றுதான்: “இந்தக் கார்ப்பரேட்டுகளின் நலனைப் பாதுகாப்பதற்குத்தான் இந்த அரசு கட்டமைப்பு செயல்படுகிறது” என்பதாகும்.
அதை இந்த விவசாயிகள் புரிந்துகொள்ளும் வரை, கோழிப் பண்ணை விவசாயிகளின் போராட்டத்திற்கு பல்வேறு சங்கங்கள் தற்காலிகமாகத் தலைமை தாங்குவதும், அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று தெரியாமல் பிரச்சினையைத் திசை திருப்புவதும், பின்வாங்குவதும் நடந்து கொண்டேதான் இருக்கும்.
அரசின் தனியார்மயம் – தாராளமயக் கொள்கைக்கு மாற்றாக மக்களின் நலன் சார்ந்து, விவசாயிகளின் நலன் சார்ந்து சிந்திக்கக் கூடிய, பலன் அளிக்கக்கூடிய மாற்று அரசியல் பொருளாதாரக் கொள்கையை முன்வைக்கும் அரசியலால்தான் இப்பிரச்சினைக்குத் தீர்வைச் சொல்ல முடியும். கோழிப்பண்ணை விவசாயிகளின் கூலி உயர்வுக்கான அந்தப் போராட்டத்தை அரசின் கார்ப்பரேட் சார்ந்த கொள்கைகளுக்கு எதிராக வளர்த்தெடுக்காமல், கோழிப்பண்ணை உற்பத்தியில் கார்ப்பரேட் ஆதிக்கத்தை விரட்டியடிக்காமல் இப்பிரச்சினையைத் தீர்க்க முடியாது. அப்படிப்பட்ட மாற்று அரசியல் பொருளாதாரக் கொள்கையை முன்னிறுத்தக்கூடிய புரட்சிகர இயக்கங்களின் தலைமையில்தான் கோழிப் பண்ணை விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்.
(முற்றும்..)
![]()
சைரா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











