பண்ணைக்குள் வந்திறங்கும் கோழிகளை கட்டங்கட்டமாக பராமரித்து அவற்றை வெளியில் அனுப்பும் வரையுள்ள போராட்டம் ஆகப்பெரியது. அதேபோல், பண்ணைக்கு வெளியில் நடக்கும் போராட்டக் களத்தையும் ஆய்வுக்கு உட்படுத்துவது இன்றியமையாத ஒன்றாக உள்ளது. கோழிப்பண்ணை விவசாயிகளின் வாழ்வியலைப் பார்த்தோம். இப்பொழுது அவர்களின் போராட்ட வரலாறு குறித்து பார்ப்போம்.
தமிழ்நாட்டிலுள்ள “கறிக்கோழிப் பண்ணை விவசாயிகள்” கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் கூலிக்கு கோழி வளர்ப்பு தொழில் செய்து வருகிறார்கள். உணவு, மூலப்பொருட்கள், மின் கட்டணம் ஆகியவற்றின் விலை பல மடங்கு உயர்ந்துவிட்ட நிலையில் தற்போது வரை இந்நிறுவனங்கள் குறைந்தபட்ச வளர்ப்புக் கூலியாக கிலோ ஒன்றுக்கு ரூ.6.50 மட்டுமே வழங்குகின்றன. இதனை, கிலோ ஒன்றுக்கு ரூ.20-ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கடந்த 6 மாதங்களாக விவசாயிகள் பல கட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
குறிப்பாக, தமிழ்நாட்டில் 16,000-க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன. பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் சுமார் 10,000 கறிக்கோழிப் பண்ணைகள் உள்ளன. நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்கள் முட்டை உற்பத்தியில் முக்கிய மையங்களாக விளங்குகின்றன. இந்திய அளவில் கோழிப் பண்ணை எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
இதில், 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் நேரடியாக கோழி வளர்ப்பிலும், பல லட்சம் பேர் கறிக்கடை நடத்துபவர்களாகவும் இவ்வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம், தமிழ்நாட்டில் பல லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக இத்தொழில் உள்ளது.
ஆனால், தமிழ்நாட்டில் கோழிப்பண்ணை விவசாயிகள் போராட்டம் என்பது ஓரிரு நாள் போராட்டமோ அல்லது சில ஆண்டுகால போராட்டமோ அல்ல. இது பல ஆண்டுகளாக வளர்ந்து கொண்டிருக்கும் பொருளாதார, தொழில்துறை மற்றும் அரசியல் பிரச்சினைகளின் தொடர்ச்சி ஆகும்.
கோழிப்பண்ணை விவசாயத் தொழிலானது 1950-களில் தொடங்கியிருந்தாலும் அதன் போராட்ட வரலாறானது புதிய பொருளாதாரக் கொள்கைக்குப் பிறகுதான் துவங்கியது. தமிழ்நாட்டில், குறிப்பாக நாமக்கல், திருப்பூர், ஈரோடு பகுதிகளில் கோழிப்பண்ணைகள் அதிகமாக உருவாகின. பெரிய தனியார் நிறுவனங்கள் (Integrators) மற்றும் சிறு விவசாயிகள் இடையே ஒப்பந்த முறையில் (Contract farming) கோழி வளர்ப்பு நடந்து வருகிறது. தொடக்கக் கட்டத்தில் நுகர்வு மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கான செலவினங்கள் விவசாயிகளுக்கு குறைவாக இருந்தன.
காலப்போக்கில் புதிய பொருளாதாரக் கொள்கை வரவுக்குப் பிறகு கல்வி, மருத்துவம், குடிநீர் என அனைத்தும் காசாக்கப்பட்டது. எனவே, அடிப்படைத் தேவைகளுக்கான செலவு பல மடங்கு உயர்ந்தது. ஆனால், உற்பத்திக்கான கூலி உயர்வு என்பது அதை ஈடு கொடுக்கும்படி உயராமல் இருந்தது. இந்த காலகட்டம் வரவிற்கும் – செலவிற்குமான இடைவெளி அதிகரித்து கோழிப் பண்ணை விவசாயிகளின் போராட்டம் முன்னுக்கு வருவதற்கான தொடக்கப் புள்ளியாக அமைந்தது.
குறிப்பாக, கோழிப் பண்ணை விவசாயிகளுக்கான தொகையானது தீவன மாற்று விகிதத்தின் (FCR – Feed Conversion Ratio) அடிப்படையில் வழங்கப்படுகிறது. அதாவது, பண்ணைக்கு வந்து இறந்த கோழிகளைக் கணக்கில் கழித்துவிட்டு உயிருடன் இருக்கும் கோழிகள் தீவனம் சாப்பிட்ட அளவிற்கு அவற்றின் எடை உள்ளதா என்ற அடிப்படையில் தொகை நிர்ணயிக்கப்படுகிறது.
கோழிப் பண்ணை விவசாயிகளின் உழைப்பைச் சுரண்டி கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபம் கொழுப்பதற்கான கருவியாக உள்ள இந்த எஃப்.சி.ஆர். முறைக்கு எதிராக 2006-இல் முதல் முறையாக “தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் நலச்சங்கம்” எனும் சங்கத்தை அதிகாரப்பூர்வமாக விவசாயிகள் பதிவு செய்கின்றனர். இதன் மூலம் கோழிப்பண்ணை விவசாயிகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கை தொடங்கியது. இந்தச் சங்கம் எஃப்.சி.ஆர்-க்கு எதிராகவும் விவசாயிகளின் உழைப்புச் சுரண்டலுக்கு எதிராகவும் தொடங்கப்படுகிறது.
தீவிரமடைந்த கோழிப்பண்ணை விவசாயிகள் போராட்டம்
2012–2013-இல் தீவன விலை உயர்வு மற்றும் நிறுவனங்கள் வழங்கிய குறைந்த கூலிக்கு (கிலோ ஒன்றுக்கு ரூ.3.50 – ரூ.4.00) எதிராக பல்லடத்தில் பெரும் போராட்டங்கள் வெடித்தன. வளர்ப்புக் கூலியை கிலோ ஒன்றுக்கு ரூ.4.50-க்கு மேல் உயர்த்தக் கோரி ஒரு வாரத்திற்கும் மேலாகப் பண்ணையாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.
2015–2016-இல் எஃப்.சி.ஆர். முறைக்கு எதிராக முதன்முதலில் சங்கங்கள் குரல் கொடுத்தன. கோடைக் காலங்களில் எஃப்.சி.ஆர். அதிகமாகும் போது விவசாயிகளின் கூலி பிடித்தம் செய்யப்படுவதை எதிர்த்துப் போராட்டங்கள் நடந்தன. அரசு தலையிட்டு முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் (விவசாயிகள், நிறுவனங்கள், அதிகாரிகள்) நடத்தப்பட்டன.
2018-இல் மின்சாரக் கட்டண உயர்வு மற்றும் உமி விலை அதிகரிப்பால் உற்பத்திச் செலவு கூடியது. இதனால் கூலியை ரூ.8 ஆக உயர்த்தக் கோரிக்கை வைக்கப்பட்டது. பல மாவட்டங்களில் கோழிக் குஞ்சுகளை இறக்காமல் பண்ணையாளர்கள் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினர்.
2019–2020 ஊரடங்கிற்குச் சற்று முன்பாக, வளர்ப்புக்கூலியை ரூ.10-க்கு மேல் உயர்த்தக் கோரி பல்லடம் மண்டலத்தில் தீவிர போராட்டங்கள் மற்றும் உண்ணாநிலை போராட்டங்கள் நடந்தன. இதன் விளைவாக சில நிறுவனங்கள் கூலியைச் சற்று உயர்த்தின; இதன் மூலம் போராட்டத்தின் தீவிரத்தைக் குறைத்தன.
இந்த 10 ஆண்டுகளில் விவசாயிகள் சங்கங்கள் நடத்திய முக்கியப் போராட்டங்களின் முக்கியக் கோரிக்கைகளாவன: கோழியின் எடை அதிகரிப்பை மட்டும் கணக்கிட்டு கூலி வழங்க வேண்டும்; தீவனக் கணக்கைக் கொண்டு கூலியைக் குறைக்கக் கூடாது; உற்பத்திச் செலவு (மின்சாரம், கூலி, உமி) அதிகரித்துள்ளதால், ஒரு கிலோவிற்கு ரூ.15 வரை கூலி வழங்க வேண்டும்; கோழிப்பண்ணைத் தொழிலுக்கு எனத் தனி நல வாரியம் அமைக்க வேண்டும் ஆகியவையே ஆகும். தற்போது (2024-2026-இல்) போராட்டங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. சமீபத்தில் பல்லடம் பகுதியில் விவசாயிகள், கோழி வளர்ப்புக் கூலியை கிலோ ஒன்றுக்கு ரூ.20-ஆக உயர்த்தக் கோரியும், எஃப்.சி.ஆர். முறையை முற்றிலுமாக இரத்து செய்யக் கோரியும், பிராய்லர் கோழி வளர்ப்புக்கான கூலியை உயர்த்தக் கோரியும் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
ஒரு கிலோ உடல் எடையைப் பெறுவதற்கு கோழி எவ்வளவு தீவனத்தை உட்கொள்கிறது என்பதே எஃப்.சி.ஆர். (எஃப்.சி.ஆர். பற்றி இத்தொடரின் முதல் பகுதியில் விளக்கியுள்ளோம்) ஆகும். இந்த எஃப்.சி.ஆர். முறைதான் சுகுணா போன்ற பெரு நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு முக்கிய பங்காற்றியது. விவசாயிகளை அவர்களின் கட்டுப்பாட்டில் வைத்து உழைப்புச் சுரண்டலை நடத்துவதற்கு ஏதுவான ஒரு வடிவமாக எஃப்.சி.ஆர். விளங்குகிறது. சுகுணா போன்ற நிறுவனங்களை கார்ப்பரேட் நிறுவனங்களாக, கோடிகளில் லாபம் ஈட்டி ஏகபோகமாக மாற்றமடைய வைத்தது. உற்பத்தி முதல் சந்தை வரை அனைத்தையும் அந்நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு சென்றது.
இந்த எஃப்.சி.ஆர். முறையின் ஊடாக லாபங்களை பெருநிறுவனங்கள் எடுத்துக்கொண்ட போதிலும் பல்வேறு சூழலில் உற்பத்தி பாதிப்புகளுக்கு விவசாயிகளே பொறுப்பேற்க வேண்டிய அவல நிலை உருவானது. குறிப்பாக, பறவைக் காய்ச்சல் (Bird flu – Avian influenza) போன்ற நோய்களின் தாக்கம் காரணமாக பல முறை கோழிகள் அழிக்கப்பட்டன. இந்த இழப்புகளுக்கு முழு இழப்பீடும் கிடைக்கவில்லை. விலைவாசி உயர்வு, கல்வி, மருத்துவச் செலவுகள் போன்ற அடிப்படைத் தேவைகள் அதிகரிக்கின்றன. விவசாயிகள் நெருக்கடிகளுக்குள் சிக்குகின்றனர்.
இவை மட்டுமில்லாமல், மேலும் பல அக, புற காரணிகள் அனைத்தும் விவசாயிகளை போராட்டக் களத்திற்குத் தள்ளுகிறது. இந்த காலத்தில் சில சிறிய அளவிலான போராட்டங்கள் தொடங்கப் பெற்றன. பொதுவெளியில் விவசாயிகள் தங்களின் எதிர்ப்பினை காட்டும் காலகட்டமாக இக்காலகட்டம் இருக்கிறது.
2020–2024-இல் பெரிய அளவிலான போராட்டங்கள் நடைபெற்றன. கோவிட்-19 காலத்தில் பரவிய பல்வேறு வதந்திகள் காரணமாக கோழி விற்பனை குறைந்து பெரும் நட்டம் ஏற்பட்டது. உற்பத்தி நிறுத்தம், சாலை மறியல், தொழிற்சங்கப் போராட்டம் என பல விவசாயிகள் களமிறங்கினர்.
குறிப்பாக, 2020–2021 பெருந்தொற்று காலத்தில் தீவனத் தட்டுப்பாடு மற்றும் வதந்திகளால் (கோழி இறைச்சியால் கொரோனா பரவும் என்ற பொய் செய்தி) பண்ணையாளர்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தனர். இச்சூழலில் மேற்கொண்ட போராட்ட வடிவமானது சிறிய அளவிலான உள்ளூர் ஆர்ப்பாட்டங்கள் ஆகும்.
இப்போராட்டங்களில் நட்டத்தில் இருக்கும் பண்ணையாளர்களுக்கு வங்கிக் கடன் வட்டித் தள்ளுபடி கோரப்பட்டது. அப்போது வளர்ப்புக் கூலி கிலோ ஒன்றுக்கு ரூ.4.50–ரூ.5.00-ஆக இருந்தது. சிறிய போராட்டங்கள் எல்லாம் பெருமளவில் உருமாற்றம் அடைந்தன. இந்த நேரத்தில் கோழிப்பண்ணை விவசாயிகள் சங்கங்கள் என பல உருவாகின. இந்த காலகட்டமானது விவசாயிகள் தங்களை சங்கமாகத் திரட்டிக் கொண்ட காலமாக அமைகிறது.
2022–2023 என்பது கட்டண உயர்வு கோரிக்கையின் தீவிரமான காலகட்டம் ஆகும். உற்பத்திச் செலவு (மின்சாரம், கூலி, தேங்காய் நார்) அதிகரித்ததால், “தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்” போன்ற அமைப்புகள் போராட்டங்களை ஒருங்கிணைக்கத் தொடங்கின. 2023-இன் இறுதியில் பல்லடம் மற்றும் கோவையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. வளர்ப்புக் கட்டணத்தை ரூ.10-க்கு மேல் உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால், ஒருங்கிணைப்பு நிறுவனங்கள் ரூ.1-ஐ உயர்த்தி கிலோ ஒன்றுக்கு ரூ.6.50 வழங்குவதாகப் பேச்சுவார்த்தையை முடித்தன.
விவசாயிகளின் தற்போதைய போராட்டமும்
தி.மு.க. அரசின் துரோகமும்
இந்நிலையில்தான், தற்போதைய (2025–2026) தமிழ்நாடு கோழிப்பண்ணை விவசாயிகளின் போராட்டம் முன்னுக்கு வந்துள்ளது.
2025 செப்டம்பர் மாதம் முதல், கோழி வளர்ப்பு விவசாயிகள் மத்தியில் அதிருப்தி அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பாக, கோழி வளர்ப்பு கட்டணம் (Rearing rate) கிலோ ஒன்றுக்கு ரூ.6.50-ஆக உள்ள நிலையில், தீவனம், மின்சாரம், தொழிலாளர் செலவு, விவசாயிகளின் அடிப்படைத் தேவைகள் ஆகியவற்றுக்கான செலவினங்கள் அதிகரித்துள்ளன. இதனால் விவசாயிகளுக்கு நட்டம் – கடன் சுமை அதிகரித்ததால் போராட்ட சூழல் உருவானது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தலைமையில், 2026 ஜனவரி 1 முதல் மாநிலம் முழுவதும் பெரியளவில் போராட்டம் தொடங்கியது. இதன் முக்கிய நடவடிக்கையாக கோழி உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான பண்ணைகள் வேலைநிறுத்தம் செய்தன. தினசரி சுமார் 10 லட்சம் கோழி உற்பத்தி பாதிப்புக்குள்ளாகியது.
கோழி வளர்ப்புக் கூலியை கிலோ ஒன்றுக்கு ரூ.6.50-இலிருந்து ரூ.20-ஆக உயர்த்த வேண்டும்; நாட்டுக்கோழிக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.25 வழங்க வேண்டும்; காடை வளர்ப்புக்கு ரூ.7 வழங்க வேண்டும்; இலவச மின்சாரம்; வருடாந்திர விலை திருத்தம் ஆகியனவே இப்போராட்டத்தில் விவசாயிகள் வைத்த முக்கிய கோரிக்கைகளாகும். மேலும், “ஒப்பந்த அடிமைத்தனத்திற்கு” (Contract farming exploitation) முடிவுக் கட்டுவோம் என்ற முக்கிய முழக்கமும் முன்வைக்கப்பட்டது.
ஆனால், ஆளும் தி.மு.க. விவசாயிகளை எதிரிகளை போலவே அணுகியது. குறிப்பாக, 2026 ஜனவரி–பிப்ரவரி உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை அத்துமீறி கைது செய்தது. திருப்பூர் பகுதியில் நடைபெற்ற உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்ட 22 விவசாயிகளை போலீசு கைது செய்தனர். தமிழக விவசாய பாதுகாப்பு சங்கத் தலைவர் ஈசன் முருகசாமி கைது செய்யப்பட்டார்.
இந்த கைது நடவடிக்கையைக் கண்டித்து கோழிப் பண்ணை விவசாயிகளைத் தாண்டி மற்ற விவசாயிகளும் இந்த போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவிநாசி, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் இப்போராட்டம் தீவிரமாக பரவியது. ஆயிரக்கணக்கில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு, “கோழிப்பண்ணை விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்!”, “கைது செய்த விவசாய சங்கத் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும்!” என்று போராடத் தொடங்கினர்.18,000-க்கும் மேற்பட்ட மனுக்கள் மாநிலம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கொடுக்கப்பட்டன. இந்த காலகட்டம் கோழிப்பண்ணை விவசாயிகளின் எழுச்சிக்கான காலகட்டம் ஆகும்.
இதனால் தவிர்க்க முடியாமல் அரசியல் கட்சிகளும் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தன. வேறு வழியின்றி தி.மு.க. அரசு பேச வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டது.
மாநில கால்நடை பராமரிப்பு அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு சட்டசபையில், கோழிப்பண்ணை விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்க மாவட்ட மட்டக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தி.மு.க. அரசானது, மாவட்ட அளவிலான குழுக்களை அமைத்தது. விவசாயிகள் பிரச்சினை ‘ஆய்வு’ செய்யப்பட்டது. ஆனால், உடனடி தீர்வு எதுவும் கிடைக்கவில்லை.
அதாவது, தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 1 முதல் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கோழி வளர்ப்பாளர்களின் கோரிக்கைக்கு ஒருவழியாக அரசு பதிலளித்தது. ஆனால், அந்தப் பதில் கோழிப் பண்ணை விவசாயிகளை மேலும் நம்பிக்கை இழக்கச் செய்தது.
கோழி வளர்ப்பு கட்டணத்தை உயர்த்துவது சாத்தியமில்லை என்று கோழிப் பண்ணையாளர்கள் ஒழுங்குமுறை குழு (Poultry Farmers Regulatory Committee) மறுப்பு தெரிவித்தது. கோயம்புத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த குழு உறுப்பினர்கள், “90 சதவிகித பிராய்லர் கோழி வளர்ப்பாளர்கள் கிலோ ஒன்றிற்கு ரூ.7.50 முதல் ரூ.12 வரை பெறுகின்றனர்; அவர்கள் ரூ.6.50 மட்டுமே பெறுகிறோம் என்பது முற்றிலும் தவறான தகவல்” என தெரிவித்தனர்.
விவசாயிகளின் பிரச்சினையை ஆய்வு செய்வதற்காக வந்த கமிட்டியானது கோழி உற்பத்தி நிறுவனங்களின் கையாளாக மாறி அந்நிறுவனங்கள் எழுதிக் கொடுத்த அறிக்கையை வாசித்து விட்டு விவசாயிகளுக்கு துரோகம் இழைத்தது. கிலோ ஒன்றிற்கு ரூ.20 வரை கட்டணத்தை உயர்த்துவது சாத்தியமில்லை எனக் குழு அறிவித்தது.
“பிராய்லர் கோழி வளர்ப்பு ஒரு கூட்டு வணிகம். விவசாயி சம்பளத் தொழிலாளி அல்ல, முதலீட்டின் அடிப்படையில் லாபம் ஈட்டும் தொழில்முனைவோர்” என்றது. இதன் மூலம், விவசாயிகளை முதலாளிகளைப் போல் சித்தரிக்கும் இந்த குழுவானது, முதலாளிகளை ஏதோ வாழ வழியற்றவர்களை போல் காட்டி அவர்களின் லாபத்திற்கு சேவையாற்றியது.
அது மட்டுமல்லாமல், “கோழி தீவனத்திற்கு தேவையான சோயாபீன் மாவு முழுவதும் மத்தியப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து வருகிறது. மேலும் 75 சதவிகிதம் மக்காச்சோளம் பீகார் மற்றும் கர்நாடகாவில் இருந்து வருகிறது. இதனால் உற்பத்தி செலவு அதிகரித்து, தமிழ்நாடு நிறுவனங்கள் சில, மற்ற மாநிலங்களுக்கு மாற்றம் செய்யத் தொடங்கியுள்ளன” என விவசாயிகளை அச்சுறுத்தி மிரட்டியது. மேலும் ஒருபடி மேலே போய், “இது அரசு நிர்ணயிக்கும் விலை அடிப்படையிலான தொழில் அல்ல; கோழி நிறுவனங்களுக்கும் வளர்ப்பாளர்களுக்கும் இடையிலான ஒப்பந்த வணிகம். இரு தரப்புக்கும் ஏற்ற தீர்வு கிடைக்க வேண்டும். விவசாயிகள் நேரடியாக நிறுவனங்களை அணுகி தங்கள் பிரச்சினைகளை தெரிவிக்க வேண்டும்” அரசு தனது பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டு விவசாயிகளின் நலனையும் கோரிக்கைகளையும் கைகழுவியது.
இதில், இரு தரப்பு என்று அரசு கூறுவது யாரை?
ஒரு தரப்பு சாலையில் நின்றுகொண்டு தங்களது வாழ்வாதாரத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கிறது! மற்றொரு தரப்பு ஏகபோகமாக மாறி ஆண்டிற்கு ஆயிரக்கணக்கான கோடிகளில் வருவாய் ஈட்டி வருகிறது. குறிப்பாக சுகுணா நிறுவனத்தின் ஆண்டு வருவாய் மட்டும் 2023–2024 நிதியாண்டில் ரூ.9,380 கோடி; 2024–2025 நிதியாண்டில் ரூ.8,750 கோடி; 2025–2026 நிதியாண்டில் 9 மாதத்தில் மட்டும் சுமார் ரூ.6,638 கோடி.
இத்தகைய ஏகபோக நிறுவனத்தையும் அன்றாடங்காய்ச்சிகளாக உள்ள கோழிப்பண்ணை விவசாயிகளையும் சமன்படுத்துவதானது, தமிழ்நாடு அரசின் குழுவின் பேச்சுவார்த்தை நடவடிக்கைகள் முற்றிலும் அயோக்கியத்தனமானது என்பதை வெளிப்படுத்துகிறது. விவசாயிகளுக்கு தீர்வைக் கொடுப்பதற்காகக் அரசாங்கம் அமைத்த குழுவோ விவசாயிகளின் போராட்ட உணர்வை மட்டுப்படுத்தி, ‘ஆகப் பெரும் ஆய்வுகளை செய்து’, கோழி நிறுவனங்களுக்கும் வளர்ப்பாளர்களுக்கும் இடையிலான ஒப்பந்த வணிகத்தில் அரசிற்கு எந்தப் பங்கும் இல்லை என்று கூறி மோசடி செய்துள்ளது. இது, மறுகாலனியாக்கம் முன்தள்ளும் “வணிகத்தில் அரசுக்கு எந்தப் பங்கும் கிடையாது; அனைத்தையும் சந்தையே தீர்மானிக்கும்” என்பதை தி.மு.க. அரசு கண்ணும் கருத்துமாக பின்பற்றுவதை காட்டுகின்றது.
கிலோவிற்கு ரூ.7 முதல் ரூ.12 வரை தருவதாக இக்குழு கூறுவதே ஒரு மோசடி. அதாவது கிலோவிற்கு ரூ.6.50 என்பது அடிப்படை ஆதார விலையாகும். ஆனால், இவர்கள் கூடுதலாக கொடுப்பதாக சொல்லப்படும் தொகை என்பது விவசாயிகள் கோழி வளர்ப்பில் எடுக்கும் கூடுதல் முயற்சி. அதாவது தங்களது சொந்த செலவில் மருந்து மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான தீவனங்களை வாங்கி போட்டு கூடுதல் கவனம் கொடுத்து வளர்க்கிறார்கள். கோழிகளுக்கு அவர்கள் சொன்னதைக் காட்டிலும் கூடுதலாக எடை உருவாகும் போது இந்த தொகை அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. ஆகையால், விவசாயிகள் கேட்கும் அடிப்படை ஆதார விலையான கிலோவிற்கு ரூ.20 என்பதற்கும் இவர்களின் வாதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
உண்மையில், விவசாய உற்பத்தியில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக, விவசாயிகளுக்கு ஒரு மாற்று என்ற வகையில் கோழிப் பண்ணை அமைக்கும் தொழிலுக்கு மானியம் கொடுத்து விவசாயிகளை இழுத்து வந்ததே அரசுதான். ஆனால் இன்று மாறியுள்ள இந்த புதிய நிலைமைக்கு தகுந்தாற்போல் தங்களுக்கான கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைக்கும் போது இதில் அரசாங்கம் தலையிட முடியாது என்று அரசின் குழு சொல்வது விவசாயிகளை முழுவதுமாக கைகழுவி வஞ்சிப்பதாகும்.
இறுதி நிலை (பிப்ரவரி 2026)
நீண்ட போராட்டம், பேச்சுவார்த்தை, அரசியல் அழுத்தம் ஆகியவற்றிற்கு பின், கிலோவிற்கு ரூ.8 என்ற அளவில் மட்டும் கோழி வளர்ப்புக் கூலி நிர்ணயிக்கப்பட்டது. அதாவது ரூ.1 உயர்வு மட்டும் வழங்கப்பட்டது.
கண்துடைப்புக்கு இவற்றையெல்லாம் செய்த பிறகு கைது செய்யப்பட்ட விவசாயிகள் 22 பேர் மற்றும் விவசாய சங்கத் தலைவர் ஈசன் முருகசாமி விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையான அடுத்த நாளே விவசாய சங்கத் தலைவர் ஈசன் முருகசாமி ஒரு காணொளியை வெளியிடுகிறார். அதில், “கறிக்கோழி விவசாயிகள் போராட்டம் இனி மேலும் தொடர்வது என்பது சரியாக இருக்காது. தேர்தல் முடிந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம், தற்காலிகமாக கோழிக் குஞ்சுகளை இறக்கலாம்” என்று தன்னெழுச்சியாக ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார். அதன் பிறகு அடிமை அ.தி.மு.க-வின் தலைவர் எடப்பாடியை சந்தித்து கோரிக்கை வைக்கிறார். பிறகு இத்தேர்தலில் தி.மு.க-வை புறக்கணிப்போம் என்று அறிவிப்பு வெளியிடுகிறார்.
இந்த நடவடிக்கை இதுநாள்வரை போராடி வந்த கறிக்கோழி விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. நம்பிக்கையின்மையை உருவாக்கி போராட்டத்தை பின்வாங்கச் செய்தது. இச்சம்பவம் போராடிய விவசாயிகளுக்கு சங்கம் இழைத்த துரோகமாகும்.
தற்போதைய நிலை (2026 மார்ச் மாத நிலவரம்)
பெரிய அளவிலான வேலைநிறுத்தம் முடிவடைந்தது. ஆனால், விவசாயிகளின் அதிருப்தி தொடர்கிறது. விவசாயிகள் இன்னும் கிலோ ஒன்றுக்கு ரூ.20 என்ற கோரிக்கையில் நிலைத்து நிற்கின்றனர்.
இந்தப் போராட்ட வரலாறானது ஒவ்வொரு கட்டத்திலும் சங்கங்களின் கையாலாகாதத்தனத்தை வெளிப்படுத்துகிறது. மேலும், அரசியல் தொலைநோக்குப் பார்வையற்று கோரிக்கைகளுக்காக களத்தில் இறங்கி போராடும் விவசாயிகளுக்கு, அரசியல் புரிதலை ஏற்படுத்துவதற்கான – அடுத்த கட்டத்திற்கு வளர்த்தெடுப்பதற்கான மாற்று புரட்சிகர அரசியல் தலைமை இல்லாததால் விவசாயிகளை நம்பிக்கையற்ற நிற்கதியான நிலையில் நிறுத்தியுள்ளது.
(தொடரும்…)
![]()
சைரா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











