திருநர் சமூகத்தைப் பின்னோக்கி இட்டுச்செல்லும் “திருநர் சட்டம் 2026”

புதிய வரையறையானது கின்னர், ஹிஜ்ரா, அரவாணி மற்றும் ஜோக்தா போன்ற குறிப்பிட்ட சமூக-கலாச்சார அடையாளங்களைக் கொண்டவர்களையும் இடைப்பாலினத் தன்மை கொண்டவர்களையும் மட்டுமே திருநர் என அங்கீகரிக்கிறது. இதன் மூலம் திருநம்பிகள், திருநங்கைகள் சட்ட வரையறையிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளனர்.

டந்துமுடிந்த நாடாளுமன்ற நிதிநிலை கூட்டத்தொடரில் “திருநர் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2026”-ஐ பாசிச மோடி அரசு எதேச்சதிகாரமாக நிறைவேற்றியது. இச்சட்டமானது இந்தியாவில் பல நூற்றாண்டுகளாகப் போராடி திருநர் மக்கள் பெற்ற சிறு சிறு முன்னேற்றங்களையும் உரிமைகளையும் ஒரேயடியாகப் பறித்து அவர்களை 200 ஆண்டுகள் பின்னோக்கி இட்டுச் செல்கிறது.

2014-ஆம் ஆண்டு “நல்சா” (NALSA) வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் ஒருவரது பாலின அடையாளத்தைத் தாமாகவே முன்வந்து முடிவு செய்யும் உரிமையை அங்கீகரித்த போது, அது இந்தியாவின் திருநர் உரிமைகளுக்கான ஒரு மைல்கல்லாகக் கொண்டாடப்பட்டது. ஆனால், புதிய சட்டத்திருத்தம் அந்த முன்னேற்றத்தைத் தலைகீழாக மாற்றக்கூடும் என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதாவது, சுய அடையாளத்திற்குப் பதிலாக மருத்துவப் பரிசோதனைகளைக் கட்டாயமாக்குவதன் மூலம் சட்டம் யாரைத் திருநராக அங்கீகரிக்கிறது என்பதை இது சுருக்குகிறது.

குறிப்பாக, இச்சட்டமானது முந்தைய 2019-ஆம் ஆண்டு சட்டத்தில் பெரும் மாற்றங்களைப் பரிந்துரைக்கிறது. நல்சா தீர்ப்பில் உறுதிப்படுத்தப்பட்ட சுய பாலின நிர்ணயக் கொள்கையை இந்தத் திருத்தம் பலவீனப்படுத்துகிறது என்றும், திருநம்பிகள், பாலின இருநிலைக்கு அப்பாற்பட்டவர்கள் (non-binary) மற்றும் பலரைச் சட்ட வரம்பிலிருந்து முற்றிலுமாகப் புறக்கணிக்கிறது. சமூக அமைப்புகள், இடதுசாரி கட்சிகள் மற்றும் பாலின உரிமை கூட்டமைப்புகள் என நாடு முழுவதும் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதுடன், சட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

சட்டம் உண்மையில் என்ன சொல்கிறது?

நல்சா தீர்ப்பின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட திருநர் சட்டம், 2019-ஆனது “திருநர்” என்பதைப் பரந்த அளவில் வரையறுத்தது – இதில் திருநம்பிகள் (Transmen), திருநங்கைகள் (Transwomen), இடைப்பாலினத் தன்மை கொண்டவர்கள் (Intersex), பாலின புதுமையினர் (Gender Queer) மற்றும் கின்னர், ஹிஜ்ரா, அரவாணி, ஜோக்தா போன்ற சமூக-கலாச்சார அடையாளங்களைக் கொண்டவர்கள் அனைவரும் உள்ளடக்கப்பட்டனர். மிக முக்கியமாக, பிரிவு 4(2) ஒருவரது சுய பாலின அடையாளத்திற்கான உரிமையை உறுதி செய்தது.

ஆனால், 2026 சட்டம் இவை அனைத்தையும் ஒரே அடியில் தகர்க்கிறது. புதிய வரையறையானது கின்னர், ஹிஜ்ரா, அரவாணி மற்றும் ஜோக்தா போன்ற குறிப்பிட்ட சமூக-கலாச்சார அடையாளங்களைக் கொண்டவர்களையும் இடைப்பாலினத் தன்மை கொண்டவர்களையும் மட்டுமே திருநர் என அங்கீகரிக்கிறது. இதன் மூலம் திருநம்பிகள், திருநங்கைகள் சட்ட வரையறையிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளனர். மேலும், “பல்வேறு பாலின ஈர்ப்புகள் மற்றும் சுய பாலின அடையாளங்களைக் கொண்ட நபர்களை இந்தச் சட்டம் ஒருபோதும் உள்ளடக்காது” என்று வெளிப்படையாகக் கூறுவதன் மூலம் பால் புதுமையினர் (LGBTQ+) சமூக மக்களும் சட்ட வரையறையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும், ஒருவருக்கு தனது பாலினத்தைத் தானே முடிவு செய்யும் உரிமையை வழங்கிய பிரிவு 4(2) முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. சமூக-கலாச்சார அடையாளங்கள் இல்லாதவர்கள், திருநராக அங்கீகாரம் பெற வேண்டுமென்றால் அவர்கள் அறுவை சிகிச்சை மற்றும் ஹார்மோன் சிகிச்சைகளை மேற்கொண்டிருக்க வேண்டும் என்பதே ஒரே வழியாக மாற்றப்பட்டுள்ளது. “பல்வேறு பாலின அடையாளங்களைக் கொண்ட அனைவரையும் பாதுகாப்பதற்காக அல்லாமல், உயிரியல் காரணங்களால் புறக்கணிக்கப்படும் நபர்களை மட்டுமே பாதுகாப்பதே இந்தச் சட்டத்தின் நோக்கம்” என்று சட்டம் அறிவியலுக்குப் புறம்பான பிற்போக்கான விளக்கமளிக்கிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள செயற்பாட்டாளர் கிரேஸ் பானு, “தொடக்கத்திலிருந்தே, எங்களைப் பற்றிய ஒரு தீவிர பார்ப்பனிய – மேலாதிக்க, ஆணாதிக்கக் கண்ணோட்டத்தையே அவர்கள் கொண்டுள்ளனர்” என்று அம்பலப்படுத்துகிறார். “2016-இல் கொண்டுவரப்பட்ட (திருநர் மக்களின் எதிர்ப்பால் அம்மசோதா திரும்பப் பெறப்பட்டது) மசோதாவில் திருநங்கை என்றால் பாதி ஆண் என்பதை குறிக்கிறதே தவிர பகுதியளவு பெண் என குறிப்பிடவில்லை என்று கூறினார்கள். இப்போது மீண்டும் அதே போன்ற கருத்தியலுடன் வந்துள்ளனர். நாங்கள் திருநங்கையர் என்று கூறினோம். ஆனால், அவர்கள் நாங்கள் ஹிஜ்ரா, அரவாணி மட்டுமே என்று கூறுகிறார்கள். “அரவாணி” என்ற சொல் எங்கள் சமூகத்தால் கைவிடப்பட்ட ஒன்று, அதையே ஏன் மீண்டும் பயன்படுத்துகிறார்கள்? தமிழ்நாட்டில் “திருநங்கை” மற்றும் “திருநம்பி” என்ற சொற்களே அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை ஏன் முற்றிலும் தவிர்த்துவிட்டனர்?” என்று கேள்வி எழுப்பிய கிரேஸ் பானு, இதற்கான விடை சித்தாந்த ரீதியானது என்று கூறுகிறார். “இது ஒரு முழுமையான இந்துத்துவ மசோதா. அவர்களின் நூல்களில் ஹிஜ்ரா மற்றும் கின்னர் போன்ற சொற்கள் இருப்பதால் அவை பட்டியலிடப்பட்டுள்ளன. எங்களின் உண்மையான அடையாளங்கள் அவர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்டவை என்பதால், அவை அழிக்கப்படுகின்றன.” என்று பாசிச மோடி கும்பலின் பார்ப்பனிய நரித்தனத்தை அம்பலப்படுத்துகிறார்.

“நாங்கள் எங்கே பொருந்துவோம்?”:
திருநம்பிகள் மற்றும் பாலின இருநிலைக்கு அப்பாற்பட்டவர்களின் அழிப்பு

இந்த மறுவரையறையினால் முதலில் பாதிக்கப்படுபவர்கள் திருநம்பிகளும், பிறக்கும்போது பெண்ணாக அடையாளம் காணப்பட்டுப் பின்னர் பாலின மாறுபாடு அடைந்தவர்களுமே (AFAB). மணிப்பூரின் “நுபாமன்பா” (Nupamanba) அடையாளத்தைத் தவிர, இந்தியாவின் பிற பகுதிகளில் திருநம்பிகளுக்குத் தனிப்பட்ட சமூக-கலாச்சார அடையாளங்கள் எதுவும் இல்லை என்று சென்னையில் வசிக்கும் பிரெட் ரோஜர்ஸ் கூறுகிறார். இச்சட்டத்தின் பார்வையில், நாட்டில் உள்ள திருநம்பிகள் ஒரு பொருட்டாகவே கருதப்படவில்லை.

“நாங்கள் எங்கே பொருந்துவோம்? இந்த மசோதா எங்களை முற்றிலுமாகத் துடைத்தெறிகிறது,” என்கிறார் அவர். “2019 சட்டம் திருநம்பிகள், திருநங்கைகள் மற்றும் பால் புதுமையர் (ஜெண்டர் குயர்) நபர்களை உள்ளடக்கியிருந்தது. ஆனால், இந்த மசோதா அவர்கள் மூவரையும் நீக்கிவிட்டது.”

கல்வித்துறையில் பணியாற்றும் ராட்ஸ், மருத்துவமயமாக்கலினால் ஏற்படும் சிக்கல்களைச் சுட்டிக்காட்டுகிறார். “(இந்த மசோதா,) உயிர்பிழைக்க வேண்டுமானால் எங்களை ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருங்கச் சொல்கிறது, இரட்டை பாலின கட்டமைப்பில் அடக்குகிறது. இது நாங்கள் விரும்பாத அல்லது எங்கள் மனநலனைப் பாதிக்கக்கூடிய மருத்துவச் சிகிச்சைகளை மேற்கொள்ள எங்களை வற்புறுத்துகிறது. குறிப்பாக திருநம்பிகளுக்கு இந்தியாவில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் மிகவும் சிக்கலானவை மற்றும் விலை உயர்ந்தவை. திருநம்பிகளுக்கான எந்த ஒரு அங்கீகாரமும் இந்த மசோதாவில் இல்லை.”

இந்த மசோதா ஒரு பின்னோக்கிய விளைவையும் (retroactive sting) கொண்டுள்ளது. சுய அடையாளங்களின் அடிப்படையில் ஏற்கெனவே வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் இதனால் செல்லாததாகலாம். மருத்துவரான டாக்டர் கார்கி இதுகுறித்து எச்சரிக்கிறார். “இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு பெறப்பட்ட அடையாள அட்டைகள் பறிக்கப்பட வாய்ப்புள்ளது. நீதிமன்றப் போராட்டங்கள் மூலம் அடையாள அட்டை பெற்றவர்கள் மீண்டும் போராட வேண்டியிருக்கும். எங்களிடம் உள்ள உரிமைகளையும் நாங்கள் இழக்கும் அபாயம் உள்ளது.” என்கிறார்.

ஐந்து கட்டங்களில் அடையாளம் நிரூபித்தல்:
புதிய நிர்வாக சிக்கல்

2019 சட்டத்தின் கீழ், ஒரு திருநங்கை சுய உறுதிமொழிப் பத்திரம் மற்றும் ஆதார் அட்டை மூலம் அடையாளச் சான்றிதழைப் பெற முடிந்தது. ஆனால், 2026 சட்டத்தின் கீழ், இது ஒரு பெரும் சிக்கலான செயல்முறையாக மாற்றப்பட்டுள்ளது என்று வழக்கறிஞர் கண்மணி ராயி விவரிக்கிறார்.

“மருத்துவ சிகிச்சை மருத்துவக் குழு மாவட்ட ஆட்சியர் கூடுதல் நிபுணர்கள் இறுதி முடிவு”

முதலில் விண்ணப்பதாரர் மருத்துவச் சிகிச்சையை முடித்திருக்க வேண்டும்; பின்னர் மருத்துவக் குழுவின் முன் ஆஜராக வேண்டும்; அவர்களின் பரிந்துரை மாவட்ட ஆட்சியருக்குச் செல்ல வேண்டும்; ஆட்சியர் திருப்தியடையவில்லை என்றால், அவர் மீண்டும் வேறு சில மருத்துவ நிபுணர்களுக்கு அனுப்பலாம்; அதன் பிறகே சான்றிதழ் வழங்கப்படும்.

“மருத்துவக் குழு, மாவட்ட ஆட்சியர், மீண்டும் மருத்துவ நிபுணர்கள் என ஐந்து நிலைகளை ஒரு திருநங்கை கடக்க வேண்டியுள்ளது. அதிகாரம் திருநங்கையின் கையில் இருக்க வேண்டும் என்பதுதான் அடிப்படை. ஆனால், இப்போது அது அந்தத் துறை சார்ந்த அதிகாரிகளின் கைகளுக்கு மாற்றப்பட்டுள்ளது,” என்கிறார் கண்மணி.

மேலும், அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்களோ அல்லது ஹார்மோன் நிபுணர்களோ (Endocrinologists) இல்லை என்பதும் ஒரு பெரிய நடைமுறைச் சிக்கலாகும்.

பாலின அடையாளச் சான்றிதழ் பெறுவதில் உள்ள நடைமுறை அவலங்களைப் பிரெட் விவரிக்கிறார். உதாரணமாக, தனது குடும்பத்தினரிடம் இன்னும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாத, தனது பாலின வெளிப்பாட்டிற்கு ஏற்ப ஆடை அணிய முடியாத ஒரு திருநம்பிக்கு, தோற்றத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஒரு மனநல மருத்துவரால் சான்றிதழ் மறுக்கப்படலாம். “இதன் காரணமாக, அவருக்கு சுகாதாரப் பாதுகாப்பும், அரசியலமைப்பின் 14, 15, 19 மற்றும் 21 ஆகிய பிரிவுகளின் பாதுகாப்புகளும் மறுக்கப்படலாம். எங்களைப் பற்றிச் சிறிதும் புரிந்துகொள்ளாத மருத்துவ நிபுணர்களிடம் நாங்கள் யார் என்பதை நிரூபிக்க வேண்டிய கூடுதல் சுமையை இந்த மசோதா எங்கள் மீது சுமத்துகிறது.” என்று ஃப்ரெட் குறிப்பிடுகிறார்.

மருத்துவத் துறைக்குள்ளிருந்தே பேசிய கார்கி, இந்தப் பாரபட்சத்தை உறுதிப்படுத்தினார்: “குறிப்பாக நாங்கள் பெரும்பாலும் ஆண் தோற்றமுடையவர்கள் என்பதால் எந்த மருத்துவரும் ஒரு கோத்தி நபருக்கு ஒருபோதும் சான்றிதழ் வழங்க மாட்டார். தோற்றத்தின் அடிப்படையிலேயே அவர்கள் மதிப்பிடுகிறார்கள். அவர்களின் தகுதி அளவுகோல்களைப் பூர்த்தி செய்யவில்லை என்றால், சான்றிதழ் கிடைக்காது.

இதனுடன் புதிய “மருத்துவக் கண்காணிப்பு” முறையும் சேர்க்கப்பட்டுள்ளது. பாலின மாற்ற அறுவை சிகிச்சை செய்பவர்களின் விவரங்களை மருத்துவமனைகள் நேரடியாக மாவட்ட ஆட்சியருக்குத் தெரிவிக்க வேண்டும் என்று பிரிவு 7 கட்டாயப்படுத்துகிறது. இது தனி மனித உரிமையைப் பறிப்பதாகும்.” என்று கூறியுள்ளார்.

பாதுகாப்பைக் குற்றமாக்குதல்:
“தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்கள்” மீதான தாக்குதல்

பிரிவு 18, “கட்டாயப்படுத்தப்பட்ட திருநர் அடையாளம்” (Forced transgender identity) என்ற பெயரில் கடுமையான தண்டனைகளைப் பரிந்துரைக்கிறது. ஒரு குழந்தையைக் கடத்திச் சென்று அவர்களைத் திருநர் அடையாளத்தை ஏற்க வற்புறுத்துவது ஆயுள் தண்டனைக்குரிய குற்றமாக மாற்றப்பட்டுள்ளது. இது ஆள் கடத்தலைத் தடுப்பது போலத் தோன்றினாலும், திருநர் தங்களின் குடும்பங்களால் கைவிடப்படும்போது அவர்களுக்குப் புகலிடம் அளிக்கும் “ஜமாத்” அல்லது “கரானா” (Gharana) முறை போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்ப அமைப்புகளை இது சிதைக்கும் என்று ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர்.

“சமூக ஆதரவு அமைப்புகளை இந்த மசோதா குற்றமாக்குகிறது. வன்முறையிலிருந்து தப்பித்து வரும் ஒரு சிறுவனுக்கு யாராவது புகலிடம் அளித்தால், அவர்கள் கடத்தல் வழக்கில் ஆயுள் தண்டனை பெற நேரிடும்” என்கிறார் பிரெட். புகழ்பெற்ற ஆர்வலர் கௌரி சாவந்த் போன்றவர்கள் பல குழந்தைகளை வளர்த்து ஆளாக்கியுள்ளனர். ஆனால், இன்றைய சூழலில், இது போன்ற நபர்கள் மீது பொய்ப் புகார்கள் சுமத்தப்பட இந்தச் சட்டம் வழிவகை செய்யும். இதனால், பாதிக்கப்பட்ட திருநங்கையர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப் பல தன்னார்வ அமைப்புகள் இப்போது தயங்குகின்றன.

இடைப்பாலினத் தன்மை கொண்டவர்களின் குரல்

இந்த மசோதா இடைப்பாலினத் தன்மை (Intersex) கொண்டவர்களைத் திருநர் சட்டத்தின் கீழ் கொண்டுவருவது மட்டுமல்லாமல், அவர்களின் நிலையைத் திருநர் அடையாளத்தைச் சிதைக்க ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. இடைப்பாலினத் தன்மை கொண்டவர்களின் ஆர்வலர் மோமோ (Momo) கூறுகையில், “உயிரியல் ரீதியான பாலின மாறுபாடுகளையும் (Intersex), ஒருவரின் பாலின அடையாளத்தையும் (Gender Identity) இந்த மசோதா குழப்பிக்கொள்கிறது. இவை இரண்டும் வெவ்வேறு யதார்த்தங்கள். இந்தத் தவறான புரிதல் சமூகங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்துகிறது” என்கிறார்.

யாரும் கேட்காத ஒரு சட்டம்

“உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக ஒரு மசோதாவைக் கொண்டுவர முடியுமா? முடியும், ஆனால் அது அடிப்படை உரிமைகளை மீறுவதாக நீதிமன்றத்தில் சவாலுக்கு உள்ளாக்கப்படும்” என்கிறார் கண்மணி ராயி. நல்சா தீர்ப்பில், சுய பாலின நிர்ணயம் என்பது 14, 15, 16, 19 மற்றும் 21-வது சட்டப்பிரிவுகளின் கீழ் ஒரு அடிப்படை உரிமை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த திருநர் கூட்டமைப்புகள் இச்சட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று சாடியுள்ளன. சி.பி.ஐ(எம்) பொலிட்பீரோ, மாவட்ட ஆட்சியரின் புதிய அதிகாரங்கள் “கண்காணிப்பு வன்முறைக்கு” (Vigilantism) ஒத்தவை என்றும், இது ஒரு பிற்போக்குத்தனமான “மனுவாதி” கண்ணோட்டம் என்றும் விமர்சித்துள்ளது.

“சமூகத்தில் யாரும் இதைக் கேட்கவில்லை. அரசு யாரிடம் கேட்டு இதை உருவாக்கியது? 2019-க்குப் பிறகு திருநர் தொடர்பான கடத்தல் வழக்குகள் அதிகரித்துள்ளன என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது?” என்று கண்மணி கேள்வி எழுப்புகிறார்.

கிரேஸ் பானு மிக எளிமையாகச் சொல்கிறார்: “ஒரு மசோதா மக்களுக்காக இருக்க வேண்டும், அவர்களைக் கொல்வதற்காக அல்ல. கல்வி, வேலைவாய்ப்பு அல்லது திருநங்கைக் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றி அவர்கள் பேசவில்லை. அவர்கள் ஒரு வரையறையை உருவாக்குவதிலேயே குறியாக இருக்கிறார்கள், அதையும் அவர்கள் தவறாகவே செய்துள்ளனர்.”

எழுத்தாளர் நாடிகா கூறுகையில், “இந்த மசோதா ‘சரியான’ திருநங்கை யார் என்பதைத் தீர்மானிக்கிறது. நீங்கள் அரசு அங்கீகரித்த ஹிஜ்ரா வகையாக இருக்க வேண்டும். இல்லையெனில் நீங்கள் திருநரே இல்லை என்கிறது.”

ஆனால், திருநர் சமூகத்தினர், பால் புதுமையினர், முற்போக்கு சக்திகள் என அனைவரின் எதிர்ப்புக்கு மத்தியிலும் பாசிச மோடி அரசு இச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இந்தியாவில் இந்துராஷ்டிரத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற கொடுங்கனவை நிறைவேற்ற துடித்துக்கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பல் சாதி, மத, இன சிறுபான்மையினரை ஒடுக்கி அவர்களை இரண்டாம்தர குடிமக்களாக்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது பாலின சிறுபான்மையினர்களான திருநர் மற்றும் பால்புதுமையினர் மீது பாசிச தாக்குதலை தொடுத்துள்ளது. இதற்கெதிராக குரல் கொடுத்து திருநர் மக்களின் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் நிலைநாட்ட வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.


அஜிதா

நன்றி: தி நியூஸ் மினிட்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க