சிறுபான்மையினருக்கு எதிரான ஒடுக்குமுறைகளைத் தொடர்ச்சியாக நிறுவனமயமாக்கிவரும் பாசிச மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, அதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக, திருநர் மக்களின் சிற்சில முன்னேற்றங்களையும் உரிமைகளையும் ஒட்டுமொத்தமாக பறிக்கும் “திருநர்கள் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்த சட்டம், 2026”-ஐ நிறைவேற்றியுள்ளது.
இம்மசோதாவை திரும்பப்பெறக் கோரி திருநர் மக்கள் களத்தில் தீவிரமாக போராட்டங்களை முன்னெடுத்த போதிலும், ஜனநாயகமற்ற முறையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இம்மசோதாவை மோடி அரசு நிறைவேற்றியது. தற்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்று இப்பாசிச மசோதா சட்டமாகிவிட்டது.
நால்சா தீர்ப்பின் உரிமைகள் பறிப்பு
இந்தியாவின் பார்ப்பனிய – சாதிய – ஆணாதிக்கச் சமூகத்தில் திருநர் மக்கள் பன்னெடுங்கால ஒடுக்குமுறைக்கும் தீண்டாமை கொடுமைகளுக்கும் அப்பட்டமான உழைப்புச் சுரண்டலுக்கும் உள்ளாகி வருகின்றனர். அதிலும், ஒவ்வொரு குழந்தையையும் அதன் வெளித்தோற்றத்திலிருந்து ஆண், பெண் என்ற இருமைக்குள் இறுத்துவதற்கு ஆயிரமாயிரம் சடங்குகள், வழக்கங்களை கொண்டுள்ள இந்தியப் பார்ப்பனிய சமூகத்தில், தங்களின் பாலினத்தை தாங்களே தீர்மானிக்கும் உரிமைக்காகவே திருநர் மக்கள் நூற்றாண்டுக்கும் மேலாக போராடி வந்துள்ளனர். இப்போராட்டத்தின் விளைவாகவே கடந்த 2014-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தின் நால்சா தீர்ப்பு வெளிவந்தது.
ஏப்ரல் 15, 2014 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய “தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு (NALSA) எதிர் இந்திய ஒன்றியம்” வழக்கின் தீர்ப்பு, திருநர்களைச் சட்டப்பூர்வமாக ‘மூன்றாம் பாலினம்’ என அங்கீகரித்தது. பாலினம் என்பது பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் வெறும் உடல் சார்ந்த காரணி மட்டுமல்ல; அது ஒருவரின் மனம், உளவியல் மற்றும் சுய-உணர்வு சார்ந்தது என்பதை இத்தீர்ப்பு நிலைநிறுத்தியது. எந்தவொரு மருத்துவ அறுவைச் சிகிச்சையோ அல்லது உளவியல் சான்றிதழோ இன்றி, ஒருவர் தன்னை ஆண், பெண் அல்லது மூன்றாம் பாலினமாக சுயமாகத் தீர்மானிக்கும் உரிமை அவருக்கு உண்டு; இது அரசியலமைப்புச் சரத்துகள் 14, 19 மற்றும் 21 (வாழும் உரிமை)-இன் கீழ் ஓர் அடிப்படை உரிமை என்பதை இத்தீர்ப்பு உறுதி செய்தது. இதனடிப்படையில், திருநர் சமூகத்தின் சட்டப்பூர்வ அங்கீகாரத்தையும் நலனையும் உறுதி செய்யும் பொருட்டு உரிய சட்டம் இயற்றுமாறு ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், பாசிச மோடி அரசோ நால்சா தீர்ப்பு உத்தரவாதப்படுத்திய திருநர் மக்களின் சுய-பாலின அடையாள உரிமையைப் பறிக்கும் வகையில் 2016-ஆம் ஆண்டில் சட்டம் இயற்றியது. இதற்கெதிராக இந்தியா முழுவதும் கடும் போராட்டம் எழுந்த நிலையில் மோடி அரசு வேறு வழியின்றி அம்மசோதாவை திரும்பப்பெற்றுவிட்டு, திருநர் சட்டம் 2019-ஐ நிறைவேற்றியது. திருநர் சமூகத்தினரின் ஆலோசனையின்றி உருவாக்கப்பட்ட இச்சட்டம் நால்சா தீர்ப்பை முழுவதுமாக நடைமுறைப்படுத்துவதாக இல்லையெனினும், ஒப்பீட்டளவில் முற்போக்கான வரையறையையும் அம்சங்களையும் கொண்டிருந்தது.
இதனடிப்படையிலேயே, அனைத்து அதிகாரப்பூர்வ படிவங்களிலும் மூன்றாம் பாலினம் (மற்றவை) என்ற அம்சம் சேர்க்கப்பட்டது. மேலும், திருநர் மக்களுக்கு திருநர் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டைகள் வழங்குவதற்கான வழிமுறையை உருவாக்கியது; இவை திருநர் மக்கள் அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்கின (ஏறக்குறைய 4.88 லட்சம் திருநர்கள் உள்ள இந்தியாவில் 32,424 அடையாள அட்டைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன என்பது தனிக்கதை). அதனைத் தொடர்ந்து ஒன்றிய சமூக நீதி அமைச்சகமும் மாநிலங்களும் திருநங்கைகள் நல வாரியத்தை அமைத்தன.
இத்தகைய தொடர் போராட்டங்களின் விளைவாகவே சமூகப் புறக்கணிப்புகள், அவமானங்கள், ஒடுக்குமுறைகளை கடந்து திருநர் மக்களில் மிகச் சிறு பிரிவினர் கல்வி கற்றுள்ளனர். தங்களை அமைப்பாக்கிக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டே திருநர் சமூக முன்னேற்றத்திற்காகக் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால், திருநர் மக்கள் போராடிப் பெற்ற சிற்சில உரிமைகளையும் முன்னேற்றங்களையும் ஒரேயடியாகப் பறித்து அவர்களை 200 ஆண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்துச் செல்லும் நோக்கில் திருநர் சட்டம், 2026-ஐ நிறைவேற்றி அவர்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது பாசிச மோடி அரசு.
திருநர்கள் வரையறை மாற்றமும்
உரிமைப் பறிப்பும்
திருநர் சட்டம் 2019-இன் பிரிவு 2(k), பிறப்பின்போது நிர்ணயிக்கப்பட்ட பாலினமும் (Assigned Sex at Birth), அந்த நபரின் தற்போதைய உணர்வுப்பூர்வமான பாலினமும் பொருந்தாத எவரையும் திருநர் எனப் பரந்த நோக்கில் வரையறுத்தது. இதன் மூலம் திருநம்பிகள் மற்றும் திருநங்கைகள், இடைப்பாலினத் தன்மை கொண்டவர்கள் (Intersex), பாலினப் புதுமையினர் (Gender queer), கின்னர், ஹிஜ்ரா, அரவாணி மற்றும் ஜோக்தா போன்ற சமூக-பண்பாட்டு அடையாளங்களைக் கொண்டவர்கள் அனைவரையும் திருநர் எனக் குறிப்பிட்டு அவர்களை சட்ட வரையறைக்குள் கொண்டுவந்தது.
ஆனால், 2026 சட்டமானது, மிகவும் பிற்போக்குத்தனமான மற்றும் அறிவியலுக்கு முரணான புதிய வரையறையைத் திணிக்கிறது. திருநங்கைகள், திருநம்பிகள் மற்றும் பாலினப் புதுமையினர் ஆகிய வார்த்தைகளை சட்டத்தின் வரையறையிலிருந்தே முற்றிலுமாக நீக்கிவிட்டு, சமூக-பண்பாட்டு அடையாளங்களைக் கொண்டவர்களையும் (கின்னர், ஹிஜ்ரா, அரவாணி, ஜோக்தா, அலி), குறிப்பிட்ட “பாலினப் பண்பு மாறுபாடுகள்” (Intersex variations) அல்லது “பிறவி பாலின வேறுபாடுகளுடன்” (Congenital variations) பிறந்தவர்களையும் மட்டுமே திருநர் என்று வரையறுக்கிறது.
கின்னர், ஹிஜ்ரா போன்றவை வட மாநிலங்களில் வசிக்கின்ற, பண்பாட்டு மத சடங்குகளுடன் பிணைக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட திருநர் சமூகத்தினர் ஆவர். ஆனால், இவ்வாறான சமூகத்தினருக்கு வெளியே, சுயமாகப் படித்து நகர்ப்புறங்களில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான திருநர்கள் இந்தியாவெங்கும் வசிக்கின்றனர். அவர்களை எல்லாம் திருநர் என்ற வரையறைக்குள்ளிருந்து வெளியேற்றி அவர்களை மீண்டும் பழைய பிற்போக்கு நிலைக்குத் தள்ள எத்தனிக்கிறது மோடி அரசு. இது திருநர் சமூகத்திற்குள் புதிய அதிகாரப் படிநிலைகளையும் முரண்பாடுகளையும் உருவாக்கி, ஒற்றுமையைக் குலைக்கும் சதியாகும். மேலும், திருநங்கைகளை இழிவுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ‘அரவாணி’, ‘அலி’ போன்ற சொற்களை மீண்டும் சட்டப்பூர்வமாகப் பயன்படுத்த அனுமதியளிக்கிறது.
மறுபுறம், ஏற்கெனவே சட்டத்திலும் சமூகத்திலும் இருட்டடிப்பு செய்யப்பட்டுவரும் திருநம்பி சமூகத்தினரை இச்சட்டம் சட்ட வரையறையிலிருந்தே முற்றிலுமாக நீக்கியுள்ளது. இது திருநம்பிகள் மீதான இன அழிப்பு – பாசிசத் தாக்குதல் என இச்சட்டத்திற்கு எதிராகப் போராடிவரும் திருநம்பிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல், பல்வேறு பாலின அடையாளங்கள் (various gender identities), சுய-உணர்தல் அடிப்படையிலான பால் (self perceived sex), நிலையற்ற பாலின அடையாளம் (gender fluidities) கொண்டவர்கள் ஒருபோதும் திருநர்கள் என்ற வரையறைக்குள் வரமாட்டார்கள் என இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 2019 சட்டத்தின் மூலம் சட்ட வரையறைக்குள் கொண்டுவரப்பட்டிருந்த பால் புதுமையினரை (LGBTQ+) இப்புதிய சட்டம் வெளியேற்றியுள்ளது.
மேலும், இடைப்பாலினத் (Intersex) தன்மை கொண்டவர்களின் உடற்கூறியல் மாற்றங்களையும், திருநர்களின் மனநிலை சார்ந்த பாலின அடையாளத்தையும் இச்சட்டம் அறிவியல் அடிப்படையின்றி ஒன்றாகக் குழப்புகிறது. இதன் மூலம் திருநர் அடையாளத்தையே சிதைக்க முற்படுகிறது. திருநர்கள் என்பவர்கள் உயிரியல் ரீதியான குறைபாடுகளால் உருவானவர்கள் என்ற பழைய பிற்போக்கு மருத்துவக் கண்ணோட்டத்தையே இது மீண்டும் திணிக்கிறது.
தனியுரிமை மீறலும் அதிகாரக் குவிப்பும்
2019 சட்டத்தின்படி திருநர் அடையாள அட்டையைப் பெற ஒருவர் நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து திருநர் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். ஆனால், புதிய சட்டமானது திருநர்களில் ஒரு பெரும் பிரிவினரை சட்ட வரையறையிலிருந்து வெளியேற்றி இருப்பதால், அவர்கள் பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு மருத்துவக் குழுவின் முன் தங்களை நிர்வாணப்படுத்தி பாலினத்தை ‘நிரூபித்து’ சான்றிதழ் பெற வேண்டிய இழிநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது திருநர் மக்களின் கண்ணியத்தை பறித்து சட்டப்பூர்வமாகவே அவர்களை பாலியல் மற்றும் உளவியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கும் தாக்குதலாகும்.
புதிய சட்டத்தின் படி, இந்தச் சான்றிதழைப் பெற ஒவ்வொரு திருநரும், தலைமை மருத்துவ அதிகாரி அல்லது துணை மருத்துவ அதிகாரி தலைமையிலான ஒரு மருத்துவக் குழுவின் முன் நேரில் சென்று தங்களை ‘நிரூபிக்க’ வேண்டும்; அந்த மருத்துவக் குழுவின் பரிந்துரை அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்குவது குறித்து தீர்மானிப்பார்; அறிக்கை ‘திருப்திகரமானதாக’ இல்லையெனில் “பெயர் குறிப்பிடப்படாத” ‘மருத்துவ நிபுணரிடம்’ பரிந்துரைக்கப்படும். ஒரு அடையாள சான்றிதழை வாங்குவதற்கு இத்துணை இழிவான – இக்கட்டான நடைமுறையை உருவாக்குவதே சமூக – பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள திருநர் மக்களை அரசின் சில நலத்திட்டங்களிலிருந்து கூட வெளியேற்றி ஒடுக்குவதற்கே ஆகும்.
மேலும், ஒடுக்கப்பட்ட மக்களைக் கண்காணித்து அடக்கிவைக்கும் கருவியாகச் செயல்படும் அரசு இயந்திரத்திடமே திருநர்களின் அடிப்படை உரிமைகளைத் தீர்மானிக்கும் அதிகாரத்தைக் கொடுத்து, அவர்களைக் கையேந்தி நிற்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது இச்சட்டம். அதிலும், இந்தியா முழுவதும் அதிகார வர்க்கத்திலும் உயர் பொறுப்புகளிலும் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளும் அதன் அடிவருடிகளுமே புகுத்தப்பட்டுள்ள நிலையில் இது திருநர்களை அப்பட்டமான வன்கொடுமைக்கு உள்ளாக்கும்.
மேலும், திருத்தப்பட்ட பிரிவு 7, பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் எவரின் விவரங்களையும் மருத்துவ நிறுவனங்கள் நேரடியாக மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்துகிறது. மருத்துவ இரகசியத்தன்மையையும் தனியுரிமையையும் அப்பட்டமாக மீறும் இச்சட்டப்பிரிவு திருநர்களை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவந்து ஒடுக்குவதற்கு வழிவகைச் செய்கிறது.
மேலும், இந்தியாவில் மருத்துவ அறிவியல் முறைகளுக்கு புறம்பான முறையில் பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்டதால் எண்ணிலடங்கா திருநர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால், இச்சட்டமானது திருநர் சான்றிதழுக்காக பெரும் எண்ணிக்கையிலான திருநர்களை அறுவைச் சிகிச்சை நடைமுறைக்குள் தள்ளுவதன் மூலம் இப்பேராபத்தை மீண்டும் உருவாக்கியுள்ளது. மேலும், இந்த அறுவை சிகிச்சைக்கான வசதிகள் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் இல்லாததால் கார்ப்பரேட்-தனியார் மருத்துவமனைகள் மிகப்பெரிய கொள்ளையில் ஈடுபடும்.
இது வெறும் சான்றிதழ் நடைமுறை மாற்றம் மட்டுமல்ல, திருநர் சமூகத்தின் அடித்தளத்தையே சிதைக்கும் மீளமுடியாத பாதிப்புகளை உருவாக்கக் கூடியதாகும். ஏனெனில், 2019 சட்டத்தின் கீழ் சுய-உணர்தல் அடிப்படையில் சான்றிதழ் பெற்றவர்களின் நிலையும் புதிய சட்டத்தின் மூலம் கேள்விக்குறியாகியுள்ளது. பழைய சான்றிதழ்களை இரத்து செய்துவிட்டு, மீண்டும் மருத்துவக் குழு முன் தங்களை நிரூபிக்க நிர்பந்திப்பது, அவர்கள் ஏற்கெனவே கடந்து வந்த உளவியல் சித்திரவதையை மீண்டும் தூண்டும். திருநர்களின் உடல்களை மருத்துவர்கள் ‘சோதிப்பது’ என்பது மனித உடலின் மீதான சுயாட்சி மற்றும் தனிமனித உரிமை மீதான தாக்குதலாகும். மேலும், திருநர் மக்களின் சட்டப் பாதுகாப்பை பறித்து கண்ணியமான வாழ்வை மேற்கொள்வதைத் தடுத்து விபச்சாரம், பிச்சை எடுத்தல் போன்ற தொழிலிலேயே இறுத்துவதற்கான பாசிச கும்பலின் சதித்திட்டமாகும்.
மூடிமறைக்கப்படும் அறிவியல் உண்மை!
இவை அனைத்திற்கும் மேலாக ஒருவர் தன்னை ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ உணர்வதை, அரசு நியமிக்கும் மருத்துவக் குழு எவ்வாறு அளவிட முடியும்?
இதுகுறித்து இந்தியாவின் முதல் திருநங்கை மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் பிராச்சி ரத்தோர் கூறுகையில், “ஒருவர் திருநங்கையா என்பதை மருத்துவ ரீதியாக நிரூபிப்பது என்பது சாத்தியமற்றது. திருநங்கைகள் நோயாளிகள் அல்ல, அவர்கள் எந்த மருத்துவப் பரிசோதனைகள் மூலமும் கண்டறியப்பட வேண்டிய எந்த நோயாலும் பாதிக்கப்படவில்லை” என்று கூறுகிறார். ஸ்வதந்த்ரா அமைப்பின் நிறுவனரும் திருநர் உரிமைச் செயற்பாட்டாளருமான சனா சுமன், “மரபான வகைப்பாடுகளுக்கு அப்பாற்பட்டவர்கள், பாலின மாற்று அறுவைச் சிகிச்சைகளைச் செய்து கொள்ளாதவர்கள் அல்லது அதற்கான செலவை ஏற்க முடியாத ஏழை, எளியவர்கள் என்ன செய்வார்கள்?” என்ற நியாயமான கேள்வியை எழுப்புகிறார்.
திருநர் அல்லது மாற்றுப் பாலின அடையாளம் என்பது மனித சமூகத்தில் மட்டுமே நிலவும் ஒரு செயற்கையான கூறு என்ற பொதுப்புத்தி நம் சமூகத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே, இதுபோன்ற சட்டங்கள் இவர்களை இயற்கைக்கு முரணானவர்களாக சித்தரித்துக் குற்றவாளிகளாக்க முனைகின்றன. பாலினப் பன்முகத்தன்மை என்பது ஒட்டுமொத்தப் பல்லுயிர்ப் பெருக்கத்திலும் இயல்பாகவே ஊடுருவியிருக்கும் இயற்கையின் பிரிக்க முடியாத அங்கமாகும். க்ளோன் மீன்கள், கடல் குதிரைகள், நத்தைகள், மண்புழுக்கள் உள்ளிட்ட 1,500-க்கும் மேற்பட்ட உயிரினங்களில் தன்பாலின ஈர்ப்பும், பாலினம் மாறும் தன்மையும் இயற்கையாகவே நிகழ்வது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. திருநர் என்பது ஏதோ மேற்கத்திய கலாச்சாரத்தின் விளைவோ, நோயோ அல்லது ஒருவரால் மூளைச்சலவை செய்து கட்டாயப்படுத்தி உருவாக்கப்படும் ஒன்றோ அல்ல; அது மனிதக் குலமும் உள்ளடங்கிய இயற்கையின் பரிணாமத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான உயிரியல் சாத்தியங்களில் ஒன்று. இந்த அடிப்படையான அறிவியல் மற்றும் இயற்கை உண்மையை முற்றிலுமாக நிராகரித்துவிட்டுத்தான், இச்சட்டம் திருநர் சமூகத்தை ஒடுக்குகிறது.
குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும்
திருநர் சமூகம்
திருநர் மக்கள் தங்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீடு ஆகியவற்றை உத்தரவாதப்படுத்தித் தர வேண்டும்; தங்கள் மீதான உடல் – உளவியல் – பாலியல் தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். ஆனால், திருநர் மக்களின் நலன், பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து இச்சட்டத்தில் மோடி அரசு வாய்திறக்கவில்லை. அவர்கள் மீதான வன்முறைகளுக்கு ஆறு மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் வரையே தண்டனை விதிக்கிறது. மாறாக, இச்சட்டம் திருநர்களை சமூகக் குற்றவாளிகளாக சித்தரிப்பதிலேயே முனைப்புக் காட்டுகிறது.
ஒருவரை வற்புறுத்தியோ, கடத்தியோ அல்லது அறுவைச் சிகிச்சை மற்றும் ஹார்மோன் ஊசிகள் மூலமாகவோ ‘கட்டாயப்படுத்தி’ திருநர் அடையாளத்தை ஏற்க வைத்தால், பாதிக்கப்பட்டவர் 18 வயதிற்கு மேற்பட்டவர் எனில் 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனையும் கடும் அபராதமும் விதிக்கவும், குழந்தை எனில் ஆயுள் தண்டனையுடன் குறைந்தபட்சம் 5 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கவும் இச்சட்டம் வழிவகை செய்கிறது.
இது குழந்தைகளையும் இளைஞர்களையும் மூளைச்சலவை செய்தும், வற்புறுத்தி, கடத்தி அறுவைச் சிகிச்சை செய்தும் திருநர்களாக மாற்றுகிறார்கள் என்ற உண்மைக்கு மாறான பொதுபுத்தியிலிருந்தே முன்வைக்கப்படுகிறது. ஆனால், அவ்வாறு நடப்பதாக அரசிடம் எந்த புள்ளிவிவரமும் இல்லை. ஒருவரின் பாலின மாற்றம் என்பது பல ஆண்டுகள் நீடிக்கும் உளவியல் மற்றும் மருத்துவ ஆலோசனைக்கு உட்பட்ட ஒரு தொடர் செயல்முறையே தவிர, யாரோ ஒருவரால் ஒரே இரவில் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படும் அறுவைச் சிகிச்சை நிகழ்வு அல்ல.
எனவே, கட்டாயப் பாலின மாற்றம் என்ற பெயரில் கொண்டுவரப்படும் இந்தக் கடுமையான பிரிவுகள், வீட்டை விட்டு வெளியேறி வரும் இளம் திருநர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் தனியார் அமைப்புகள், திருநர் தங்குமிடங்கள் மற்றும் குரு-சிஷ்ய அமைப்பு போன்ற திருநர் சமூகத்தின் பாரம்பரியமான ஆதரவு அமைப்புகளுக்கும், திருநர்களுக்குப் பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய முன்வரும் மருத்துவர்களுக்கும் நேரடி அச்சுறுத்தலாக அமையும். தம்மைத் திருநராக உணர்பவருக்கு உதவுபவர்கள் மீது கட்டாய மதமாற்றம் அல்லது பாலின மாற்றம் என்ற பெயரில் பொய்க் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து, ஆயுள் தண்டனை பெற்றுத்தர இந்தச் சட்டப் பிரிவு வழிவகுக்கும்.
இது திருநர் சமூகத்தின் சொந்தப் பாதுகாப்பு வலைப்பின்னலை அறுத்தெறிந்து, அவர்களை முழுமையாக முடக்கும் சதியாகும்.
கிடைமட்ட இடஒதுக்கீடே
திருநர் சமூகத்தின் இன்றைய தேவை!
திருநர் சமூகத்தின் கோரிக்கைகளில் முக்கியமானது தங்களின் கண்ணியமான வாழ்க்கையை மேற்கொள்ளத் தேவையான கிடைமட்ட இடஒதுக்கீடு ஆகும். சாதியப் படிநிலைகளுள்ள இந்திய சமூகத்தில் ஆதிக்கச் சாதி மற்றும் தலித் திருநர்கள் சந்திக்கும் ஒடுக்குமுறைகள் வெவ்வேறானவை என்பதால், செங்குத்து இடஒதுக்கீடு வழங்கப்பட்டால் ஒரு தலித் திருநரால் பட்டியல் பிரிவினர் மற்றும் திருநர் இடஒதுக்கீட்டை ஒரே நேரத்தில் பெறமுடியாமல் ஆதிக்கச் சாதியினரே ஆக்கிரமிக்க நேரிடும். மாறாக, கிடைமட்ட இடஒதுக்கீடு என்பது, பெண்களுக்கு வழங்கப்படுவதைப் போல, ஒவ்வொரு சாதிப் பிரிவுக்குள்ளும் (பட்டியல் பிரிவு, இதர பிற்படுத்தப்பட்ட, பொதுப்பிரிவு) திருநர்களுக்கென ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை (உதாரணமாக 1 சதவிகிதம்) வழங்குவதாகும். திருநர்களின் இந்தக் குறைந்தபட்ச பொருளாதார மேம்பாட்டிற்கான கோரிக்கைகளைக் காதுகொடுத்துக் கேட்காத பாசிச பா.ஜ.க, பிற்போக்கான சட்டங்களை இயற்றுவதிலேயே குறியாக உள்ளது.
திருநர் உரிமைகளும் கார்ப்பரேட் சுரண்டலும்:
பிங்க் முதலாளித்துவத்தின் பின்னணி
அரசு வேலைவாய்ப்புகளில் போதிய பிரதிநிதித்துவம் இல்லாததாலும், பிச்சை எடுப்பது மறைமுகமாகக் குற்றமாக்கப்பட்டுள்ளதாலும் திருநர் சமூகம் வேறு வழியின்றி தனியார் துறையைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தரவுகளின்படி, 92 சதவிகித திருநர்களால் முறையான பொருளாதார அமைப்பிற்குள் வரமுடியவில்லை. திருநர்களுக்கான பாலின மாற்று அறுவைச் சிகிச்சைகள் மற்றும் ஹார்மோன் சிகிச்சைகளை வழங்க வேண்டிய பொறுப்பு அரசிற்கு உள்ளது. ஆனால், ஒரு சில அரசு மருத்துவமனைகளைத் தவிரப் பெரும்பாலான இடங்களில் இதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதனால் தனியார் மருத்துவமனைகளை நாடும் திருநர்கள், ஒரு அறுவைச் சிகிச்சைக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை செலவழிக்க வேண்டியுள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள அரசின் காப்பீட்டுத் திட்டங்களும் இலாபகரமான பிங்க் மருத்துவச் சந்தையை பெருக்கியுள்ளதே தவிர, திருநர்களின் அடிப்படை மருத்துவ உரிமையை முழுமையாக உறுதி செய்யவில்லை.
இந்தியாவின் நகர்ப்புற மேல்தட்டு மற்றும் நடுத்தர வர்க்க பால் புதுமையினர் சமூகத்தினரின் வாங்கும் சக்தியானது சுமார் ரூ.13.94 லட்சம் கோடியாக உள்ளது. இது பிங்க் பொருளாதாரம் (Pink Economy) என்று குறிப்பிடப்படுகிறது. குடும்பம், குழந்தை வளர்ப்பு போன்ற பெருஞ்செலவுகள் இல்லாத இப்பிரிவினரின் உபரி வருமானத்தை வேட்டையாடவே கார்ப்பரேட் நிறுவனங்கள் துடிக்கின்றன. மறுபுறம், 92 சதவிகித விளிம்புநிலைத் திருநர்கள் முறையான வேலைவாய்ப்போ, பொருளாதாரப் பாதுகாப்போ இன்றி வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர். இந்த அடித்தட்டுத் திருநர்களின் துயரங்களைக் கண்டுகொள்ளாத பெருநிறுவனங்கள், அந்த ரூ.13.94 லட்சம் கோடி சந்தையைச் சுரண்டுவதற்காக மட்டுமே ரெயின்போ முதலாளித்துவம் (Rainbow Capitalism) என்ற பகட்டான நாடகத்தை அரங்கேற்றுகின்றன. இது விளிம்புநிலை மக்களைப் பகடைக்காயாகப் பயன்படுத்தி லாபம் ஈட்டும் அப்பட்டமான கார்ப்பரேட் சுரண்டலாகும்.
டியூரக்ஸ் (Durex), டாபர் (Dabur), ஃபாஸ்டிராக் (Fastrack), ஹெச்&எம் (H&M), லெவிஸ் (Levi’s) போன்ற பல நிறுவனங்கள், ஜூன் மாதத்தில் மட்டும் தங்களின் நிறுவனச் சின்னங்களை வானவில் நிறத்திற்கு மாற்றுவதும், சமூக வலைத்தளங்களில் விளம்பரம் தேடுவதும் வாடிக்கையாக உள்ளது. மேலும், சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் அரசின் “ஸ்மைல்” (SMILE – Support for Marginalized Individuals for Livelihood and Enterprise) மற்றும் “கரிமா க்ரே” தங்குமிடத் திட்டங்கள் மூலம் திருநர்களுக்குப் பயிற்சியளித்து, வேலைவாய்ப்பு முகாம்களில் குறைந்த ஊதியத்திற்குத் தங்களது நிறுவனங்களிலேயே பணியமர்த்திக் கார்ப்பரேட்டுகள் இரட்டிப்பு லாபம் அடைகின்றன. இப்போது 2026 சட்டத்தில் முற்போக்கான வரையறையை நீக்குவதால், அரசு கொள்கைகளின் கீழ் பல தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்துவரும் பல்லாயிரக்கணக்கான திருநர்கள் தங்கள் வேலையையும் காப்பீட்டையும் இழக்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளது.
பாசிஸ்டுகளின் உலகளாவிய சதி
இந்தியாவில் பாசிசத்தின் அடித்தளமாக இருப்பது ஆர்.எஸ்.எஸ்-இன் பார்ப்பனியச் சித்தாந்தமாகும். இது சாதியத் தூய்மையைக் கட்டிக்காக்கத் தன் சாதிக்குள்ளேயே திருமணம் செய்யும் அகமண முறையையும், அதைத் தாங்கிப்பிடிக்கும் மரபான ஆணாதிக்கக் குடும்ப அமைப்பையும் தீவிரமாக வலியுறுத்துகிறது. தற்போதுவரை, இந்தியாவில் திருமண உறவுக்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமை (Marital Rape) சட்டப்படி குற்றமாக அங்கீகரிக்கப்படவில்லை என்பதும் இதன் அடிப்படையிலேயே ஆகும். பெண்கள் உடலின் மீது அதிகாரம் செலுத்துவதற்கு ஆணுக்கு முழுயுரிமை உள்ளது என்பதுதான் பார்ப்பனியச் சித்தாந்தம்.
பாலின இருமையையும் (ஆண்-பெண்), இந்த மரபான குடும்ப அமைப்பையும் தங்களின் வாழ்வியலால் நிராகரிக்கும் திருநர்களும் குயர் (Queer) சமூகத்தினரும், இந்தப் பார்ப்பனியச் சுரண்டல் கட்டமைப்பின் ஆணிவேரை அசைக்கிறார்கள். அதனால்தான், சாதியத் தூய்மையைப் பாதுகாக்கப் பாசிசம் திணிக்கும் பார்ப்பனிய ஆணாதிக்கக் கட்டமைப்பைத் தகர்க்கும் குயர் சமூகத்தினரைப் பாசிசம் தனது நேரடிச் சித்தாந்த எதிரிகளாகவே கருதி ஒடுக்கத் துடிக்கிறது. திருநர்கள், பால் புதுமையினரின் உடலின் மீது அதிகாரம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்ட இச்சட்டம் பாலினம் என்பது ஒருவரின் உள்ளார்ந்த உணர்வு அடிப்படையிலானது என்பதை மூடிமறைக்கிறது.

நாட்டில் நிலவும் வேலையின்மை, விலைவாசி உயர்வு, விவசாய நெருக்கடி, அம்பானி-அதானி போன்ற பெருமுதலாளிகளுக்கான பொதுத்துறை கார்ப்பரேட்மயமாக்கல் மற்றும் கார்ப்பரேட் கொள்ளை போன்ற கள நெருக்கடிகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப, மத, இன, மொழி, சாதி அடிப்படையிலான வெறுப்பு அரசியலைப் பயன்படுத்துவதை போல தற்போது பாலின சிறுபான்மையினர் மீது பண்பாட்டுப் போர் தொடுத்து பலிகடாவாக்கி வருகிறது மோடி கும்பல்.
இது ஏதோ இந்தியாவில் மட்டும் நடக்கும் தனித்த நிகழ்வல்ல; மாறாக முதலாளித்துவ நெருக்கடியை மூடிமறைக்க, சர்வதேச ஏகாதிபத்திய அரசுகள் திட்டமிட்டு அரங்கேற்றும் உலகளாவிய வலதுசாரித் திட்டத்தின் இந்தியப் பதிப்பே இச்சட்டமாகும். அமெரிக்காவில் டிரம்ப் தலைமையிலான பாசிச கும்பல், மரபான குடும்ப அமைப்பைக் காப்பதாகக் கூறிக்கொண்டு திருநர்களின் மருத்துவ உரிமைகளை அப்பட்டமாகப் பறிப்பதும், இங்கிலாந்து ஏகாதிபத்திய அரசு பால் புதுமையினரின் சுய-அடையாள உரிமையைச் சட்டப்பூர்வமாகத் தடுப்பதும் இதே பாசிச அச்சில் வார்க்கப்பட்டவைதான். ஹங்கேரியின் விக்டர் ஓர்பன் மற்றும் இத்தாலியின் நவ-பாசிச ஜார்ஜியா மெலோனி ஆகியோரின் அரசுகள் ‘பாலினச் சித்தாந்தம்’ என்ற கற்பனைப் பூதத்தை உருவாக்கி மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்புவது போல, இங்கும் திருநர்களைச் சமூக விரோதிகளாகச் சித்தரித்து இந்துத்துவ முலாம் பூசி மோடி அரசு தாக்குகிறது.
பாசிசம் எந்த வடிவத்தில் வந்தாலும் அது மத, இன, சாதி மற்றும் பாலினம் என அனைத்து விதமான சிறுபான்மையினருக்கும் எதிரானதே என்பதை இந்த உலகளாவிய நிகழ்ச்சிநிரல் அம்பலப்படுத்துகிறது.
வீதிகளில் எழும் விடுதலையின் முழக்கம்
ஒடுக்கப்பட்ட மக்களின் மாண்பைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, அவர்களின் உடல்களைக் கார்ப்பரேட் மருத்துவமனைகளின் லாப வேட்டைக்கும், வாழ்வாதாரத்தை மலிவான உழைப்புச் சுரண்டலுக்கும் தாரைவார்க்கும் கள்ள ஒப்பந்தமே இந்த திருநர் சட்டம் – 2026.
இதன் மூலம் திருநர்கள் பல ஆண்டுகால இரத்தக்களரியான போராட்டங்களின் வழியே ஈட்டிய குறைந்தபட்ச உரிமைகளையும் பறித்தெறிந்து, அடையாள அழிப்பை நிகழ்த்தத் துடிக்கிறது. அரசே உருவாக்கியுள்ள திருநர்களுக்கான தேசிய கவுன்சில் (NCTP) உறுப்பினர்களிடம் கூட எவ்வித ஆலோசனையும் நடத்தாமல் எதேச்சதிகாரமாகக் கொண்டுவரப்பட்ட இச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதலே நாடு முழுவதிலும் உள்ள திருநர் சமூகத்தினர், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் முற்போக்குச் சிந்தனையாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
“எங்கள் உடல்கள் உங்கள் அதிகாரத்தின் பரிசோதனைக் கூடங்கள் அல்ல!” என்ற முழக்கத்தோடு இச்சட்டத்தை முழுமையாகத் திரும்பப் பெற வலியுறுத்தி, சென்னை, புனே, ஹைதராபாத், டெல்லி என நாடு முழுவதும் தொடர் வீதிப் போராட்டங்களை முன்னெடுத்துவரும் திருநர் அமைப்புகளின் போர்க்குரல் நமக்கு உணர்த்துவது ஒன்றைத்தான்: இச்சட்டத்தில் சிறுசிறு திருத்தங்களைக் கோருவது என்பது நச்சு மரத்தின் கிளைகளை நறுக்குவதற்குச் சமம், அதை வேரோடு பிடுங்கி எறிவது ஒன்றே தீர்வு. ஆனால் பா.ஜ.க-வை கடுமையாக எதிர்ப்பதாகக் கூவிவரும் எதிர்க்கட்சிகளோ, மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பாதது ஒன்றையே பெரும் தவறாக விமர்சித்து, வழக்கம் போல் வெறும் வெளிநடப்பு நாடகத்தை மட்டும் அரங்கேற்றிவிட்டு ஒதுங்கிக் கொள்கின்றன.
எனவே இனியும் எதிர்க்கட்சிகளை நம்பியிராமல், திருநர் சட்டம் 2026-ஐ திரும்பப் பெறு! எவ்வித அதிகாரத்துவத் தலையீடுகளும் இல்லாத சுய-அடையாள நிர்ணய உரிமை மற்றும் கல்வி, வேலைவாய்ப்பை உறுதி செய்யும் கிடைமட்ட இடஒதுக்கீட்டு நடைமுறையை உடனடியாக அமல்படுத்திடு! உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து திருநர் சமூகத்தினர் களப்போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும்.
திருநர்களின் இந்தப் போராட்டம் தனித்ததல்ல; இது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலால் தொழிலாளர்கள், தலித்துகள், மற்றும் சிறுபான்மையினர் மீது ஏவப்படும் ஒட்டுமொத்தப் பாசிச தாக்குதலின் ஒரு பகுதியே. எனவே, இந்தப் போராட்டங்களை ஒன்றிணைத்து வீரியமிக்க வெகுசனப் பேரியக்கமாக மாற்றுவதே இன்றைய தேவை.
![]()
ஜென்னி லீ
(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2026 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











