ஐ.டி விதிகள் திருத்த முன்மொழிவு: கருத்துச் சுதந்திரத்தின் மீதான பாசிசத் தாக்குதல்!

வரைவு விதிகள், “இண்டர்மீடியரி” எனப்படும் முகநூல், எக்ஸ், யூடியூப் போன்ற நிறுவனங்களை மட்டுமின்றி ஆன்லைனில் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் குறித்த உள்ளடக்கத்தைப் பகிரும் பயனர்களையும் (மக்களையும்) உள்ளடக்கும் வகையில் கண்காணிப்பு வழிமுறைகளை விரிவுபடுத்துகிறது.

0

மார்ச் 29 ஆம் தேதி அன்று பிரபல உண்மை சரிபார்ப்பாளரும், ஆல்ட் நியூஸ் இணை நிறுவனருமான முகமது ஜுபைரின் (Mohammed Zubair) எக்ஸ் பக்கப் பதிவுகள் பாசிசக் கும்பலினால் தடை செய்யப்பட்டது.

அந்தப் பதிவுகளில் மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ராம நவமி ஊர்வலத்தின் போது நடந்த வன்முறை தொடர்பான காணொளிகள் மற்றும் பா.ஜ.க தலைவர்களின் கூற்றுகளையும் அறிக்கைகளின் உண்மைத் தன்மையையும் அம்பலப்படுத்தியுள்ளார்.

எக்ஸ்-இலிருந்து மின்னஞ்சல் வந்ததாகவும் அதில் இந்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பிரிவு 69A-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பித்திருப்பதாகத் தெரிவித்திருந்ததாகவும் தனது எக்ஸ் பக்கத்தில் ஜுபைர் பதிவிட்டுள்ளார்.

மேலும் “பொய் பிரச்சாரத்தையும் பொய்க் கதைகளையும் அம்பலப்படுத்தும் பதிவுகளை இனி அனுமதிக்க மாட்டார்களா?” என்று எக்ஸ் தளத்திடம் கேள்வியும் எழுப்பியுள்ளார்.

அதற்கு, இந்தியாவுக்குள் அந்த உள்ளடக்கத்தை அணுகுவதைத் தடை செய்ய சட்டப்படி கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், இந்தியாவுக்கு வெளியே அந்த பதிவுகள் பார்க்கக்கூடியதாக இருக்கும் என்றும் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் அதிக விவரங்களைப் பகிர முடியாது என்றும், இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றம் அல்லது அமைச்சகம் மூலம் வழக்குத் தொடரலாம் என்றும் தெரிவித்துள்ளது.

அன்றைய தினமே மெட்டா (META) நிறுவனம் முகநூலில் 6.6 லட்சத்துக்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்களைக் கொண்ட நையாண்டி எழுத்தாளர் ராஜீவ் நிகமின் (Rajeev Nigam) முகநூல் பக்கங்களைத் தடை செய்தது. முன்பு, அவரால் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட “காணாமல் போன சிலிண்டர்” (missing cylinder) என்ற நகைச்சுவை காணொளி “இந்தியாவில் காட்டப்படமாட்டாது” என்று முகநூல் நிறுவனன் கூறியதால் அவரே அதை நீக்கி விட்டார்.

ராஜீவ் நிகம் கூறுகையில் “முன்பு எனது பக்கத்தில் விதிக்கப்பட்ட தடைகள் தற்காலிகமானவையாகவும், தளத்தாலேயே விதிக்கப்பட்டவையாகவும் இருந்தன. ஆனால் இந்த முறை அரசு உத்தரவை மேற்கோள் காட்டிய அறிவிப்பைப் பெற்றது இதுவே முதல் முறை” என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுத் தலைவர்களுடனான உரையாடல்களை நையாண்டி செய்யும் ஸ்டாண்ட்-அப் காமெடியன் புல்கிட் மணியின் (Pulkit Mani) காணொளி 1.6 கோடி (16 மில்லியன்) பார்வைகளைப் பெற்றிருந்தது. இந்த காணொளியும் சட்டப்பூர்வ கோரிக்கையின் பேரில் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 2026 முதல் பகுதியில், கார்ட்டூனிஸ்ட் சதீஷ் ஆச்சார்யா தனது இரண்டு கார்ட்டூன்கள் இந்தியாவில் அரசு உத்தரவின் பேரில் தடை செய்யப்பட்டதாகத் தெரிவித்தார். அந்தக் கேலிச்சித்திரங்கள் இந்தியா மற்றும் மேற்கு ஆசியா தொடர்பான இராஜதந்திர வளர்ச்சிகளை விமர்சித்தவை ஆகும்.

இந்தக் கணக்குகளை அணுக முயன்ற பயனர்களுக்கு “சட்டப்பூர்வ கோரிக்கையால், இந்தியாவில் இந்தக் கணக்கு தடை செய்யப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைய சுதந்திர அறக்கட்டளை (Internet Freedom Foundation – IFF) பாதிக்கப்பட்ட பல கணக்குகள் நையாண்டி (satire), அரசியல் விமர்சனம் மற்றும் அரசு கொள்கைகளுக்கு எதிரான விமர்சனங்களைப் பதிவிட்டவை என்று சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு பெரும்பாலும் பொதுவான அறிவிப்புகள் மட்டுமே அனுப்பப்படுவதாகவும், தெளிவான காரணம் எதுவும் தெரிவிக்கப்படுவதில்லை என்றும் கூறியுள்ளது.

குறிப்பாக தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-ன் பிரிவு 69A இந்திய அரசுக்கு இணைய உள்ளடக்கங்களைத் தடை செய்யும் அதிகாரத்தை வழங்குகிறது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 79 (3)(b) பல்வேறு அமைச்சகங்களுக்கு சமூக ஊடக தளங்களுக்கு நேரடியாக உள்ளடக்கத்தை அகற்ற உத்தரவிடும் உரிமையை அளிக்கிறது. இந்த உத்தரவுகள் பெரும்பாலும் சஹ்யோக் (Sahyog) போர்ட்டல் மூலம் சமூக ஊடகத் தளங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

இணைய சுதந்திர அறக்கட்டளை (IFF), தடை உத்தரவுகள் குறித்த அறிவிப்புகள் முன்பே பயனர்களுக்குத் தெரிவிக்கப்படுவதில்லை; அவர்கள் தங்களின் பதிவுகள் குறித்து விளக்கம் அளிப்பதற்கும் கால அவகாசம் வழங்கப்படுவதில்லை என்று தெரிவித்துள்ளது.


படிக்க: ”வாட்ஸ் ஆப்”பிற்கு மோடி அரசு நெருக்கடி – கருத்து சுதந்திரத்தை நசுக்கும் பாசிச நடவடிக்கை


உள்துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2024 மார்ச் முதல் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் சராசரியாக நாளொன்றுக்கு 290 தடை உத்தரவுகளை அனுப்பியுள்ளது. 2024-25 ஆண்டு அறிக்கையின்படி, 2025 மார்ச் 31 வரை 1,11,185 உள்ளடக்கங்கள் பிரிவு 79 (3)(b) கீழ் தடை செய்யப்பட்டுள்ளன.

மேலே குறிப்பிட்ட இணைய உள்ளடக்கங்கள் மீதான தடைகளை, மார்ச் 30 ஆம் தேதி அன்று பாசிச மோடி அரசு வெளியிட்ட மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ற்கான திருத்த முன்மொழிதலுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

அதாவது, வரைவு விதிகள், “இண்டர்மீடியரி” எனப்படும் முகநூல், எக்ஸ், யூடியூப் போன்ற நிறுவனங்களை மட்டுமின்றி ஆன்லைனில் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் குறித்த உள்ளடக்கத்தைப் பகிரும் பயனர்களையும் (மக்களையும்) உள்ளடக்கும் வகையில் கண்காணிப்பு வழிமுறைகளை விரிவுபடுத்துகிறது. முன்மொழியப்பட்ட இந்த மாற்றங்கள், விதிகள் 14, 15 மற்றும் 16-ன் கீழ் உள்ள முடக்கும் ஏற்பாடுகளை (blocking rules) பயனர்கள் உருவாக்கும் உள்ளடக்கத்திற்கும் பொருந்தச் செய்யும்.

முக்கியமாக சமூக வலைத்தளங்கள் பயனர்களின் தரவுகளை குறிப்பிட்ட காலம் வரை கட்டாயம் சேமித்து வைக்க வேண்டும். அரசு கொடுக்கும் அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதலுக்கு இணங்க வேண்டும். இந்த விதிகளுக்கு இணங்காத சமூக ஊடக தளங்கள், தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 79-ன் கீழ் பாதுகாப்பை இழக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் உரிமை அமைப்புகள் இந்த முன்மொழிவைக் கடுமையாக விமர்சித்துள்ளன. இணைய சுதந்திர அறக்கட்டளை (IFF) இந்தத் திருத்தங்களை “ஆன்லைன் பேச்சுரிமை மீதான நிர்வாக அதிகாரத்தின் கட்டுப்பாட்டை அதிகரிக்கும் ஆபத்தான விரிவாக்கம்” என்று விவரித்துள்ளது. மேலும், கண்காணிப்பு (surveillance) அபாயங்கள் அதிகரிக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

இந்த வரைவு விதிகள் மீது ஏப்ரல் 29, 2026 வரை மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


படிக்க: மகாராஷ்டிரா: கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்கும் பாசிச கரங்கள்!


தனி முன்மொழிவு ஒன்றில் (தி இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கையின்படி), தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உள்ளடக்கத் தடை அதிகாரத்தை உள்துறை, வெளியுறவு, பாதுகாப்பு, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகங்கள், செபி (SEBI) மற்றும் போலீசு போன்ற ஒழுங்குமுறை அமைச்சகங்களுக்கு வழங்க முன்வந்துள்ளது. இதன் மூலம் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் கோரிக்கை வைக்காமல், நேரடியாக விதி 69A ன் படி அரசைப் பற்றி விமர்சிப்பவர்களின் உள்ளடக்கத்தைத் தடை செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாசிச மோடி ஆட்சியில் கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் தீவிரமடைந்து வருகிறது. தனக்கு எதிராக கருத்துகளைத் தெரிவிக்கும் செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்களைப் படுகொலை செய்தும், ஊபா போன்ற கொடிய சட்டங்கள் மூலம் சிறையில் அடைத்தும் அச்சுறுத்தி வருகிறது. அத்துடன் சமூக ஊடகங்களில் ஒன்றிய மோடி அரசின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்துகின்ற அனைத்து சமூக செயற்பாட்டாளர்களின் பதிவுகள் மற்றும் கணக்குகளை முடக்கி வருகிறது.

தற்போது கொண்டுவந்துள்ள திருத்தத்தின் மூலம் தங்களை விமர்சித்துப் பதிவிடுகின்ற ஒவ்வொருவரின் கணக்குகளையும், அதனைப் பகிர்கின்ற கணக்குகளையும் தன்னுடைய கண்காணிப்பின் கீழ் கொண்டுவந்து, சிறிது சிறிதாகச் செத்துக் கொண்டிருக்கும் கருத்துச் சுதந்திரத்தின் குரல் வலையை மேலும் நசுக்கத் தொடங்கியுள்ளது.

எனவே கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல்களைத் தடுப்பதற்கும் அனைத்து ஜனநாயக சக்திகளும், புரட்சிகர அமைப்புகளும் இந்த தகவல் தொழில்நுட்ப விதிகள் திருத்த முன்மொழிவுக்கு எதிராகப் போராட வேண்டும்.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க