8000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யும் மெட்டா நிறுவனம்

முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றின் தாய் நிறுவனமான மெட்டா வருகின்ற மே மாதம் தனது ஊழியர்களில் 10 சதவிகிதத்தினரை, அதாவது சுமார் 8,000 ஊழியர்களை, பணி நீக்கம் செய்ய இருப்பதாகக் கூறியுள்ளது.

முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றின் தாய் நிறுவனமான மெட்டா வருகின்ற மே மாதம் தனது ஊழியர்களில் 10 சதவிகிதத்தினரை, அதாவது சுமார் 8,000 ஊழியர்களை, பணி நீக்கம் செய்ய இருப்பதாகக் கூறியுள்ளது.

சேவைத்துறைப் பணிகளை மென்மேலும் எளிமையாக்கி நேரத்தை மைக்ரோ மணித்துளிகளாகக் குறைக்க செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஏராளமான முதலீட்டைக் குவித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றது மெட்டா நிறுவனம். ஊழியர்களைக் குறைத்து இலாபத்தைப் பெருக்கும் திசையில் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகின்றது.

அவ்வகையில் ஏற்கெனவே 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் சற்றேறக்குறைய 21,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ள மெட்டா நிறுவனம் மீண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது.

கடந்த காலத்தைப்போலன்றி மெட்டா நிறுவனம் தற்போது கொழுத்த லாபத்தில் இயங்கி வருகிறது. எனினும், தொழில் எதிரிகளை வீழ்த்தி போட்டி போட்டுக் கொண்டு லாபத்தைப் பெருக்கும் வழிகளை ஆராய்ந்த வண்ணம் இருப்பதே கார்ப்பரேட் நிறுவனங்களின் இருத்தல் விதி என்பது எவரும் அறிந்ததே.

ஆனாலும் ஐ.டி துறையில் பெரும் கார்ப்பரேட் முதலாளியான மார்க் ஜூகர் பெர்க் தனது லாப வெறியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மெட்டா நிறுவனத்தின் நிர்வாக அடுக்குகளைக் குறைத்து கட்டமைப்பை மாற்றியமைக்க விரும்புவதாக இதற்குக் காரணம் கூறுகின்றார்.

அவ்வகையில் தமது ஊழியர்களுக்கான சவக்குழிகளை அவர்களே தோண்டிக் கொள்ளும் வகையில், தமது பொறியாளர்களையே அப்ளைட் ஏ.ஐ (Applied AI) போன்ற புதிய பிரிவுகளுக்கு மாற்றி தானியங்கி முறையில் வேலை செய்யும் ஏ.ஐ கருவிகளை உருவாக்குவதில் மும்முரமாக இறங்கி வெற்றி கண்டதன் விளைவே இந்த ஆட்குறைப்பு.

உலகச் சந்தை முழுவதையும் ஒரே கைக்குள் அடக்கி கொண்டுவிடும் பேராசை, மொத்த லாபத்தையும் தான் மட்டுமே அள்ளிக் குவித்துக் கொள்ளும் இலாப வெறிதான் இவர்களை எப்போதும் இயக்குகிறது. எந்தத் துறையானாலும், ஆதிக்கம் செலுத்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இதே பேராசையுடன் இதே திசையில் தான் செயல்பட்டு வருகின்றன. மனிதர்களை முற்றாக விலக்கி விட்டு இயந்திர ஆற்றலைக் கொண்டே எல்லாவற்றையும் உற்பத்தி செய்து குவித்துக் கொள்ளும் திசையிலேயே முன்னேறி வருகின்றன. முதலாளிகளின் முடிவே இல்லாத இந்த லாப வெறிப் பயணத்தில் வாழ்வை இழப்பவர்கள் கோடான கோடி மக்கள்.

வரலாற்றின் இந்த திசை வழியை உழைக்கும் மக்கள் உணர்ந்து கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை.


சுந்தரம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க