பாசிச மோடி ஆட்சியில் அதிகரிக்கும் பத்திரிகையாளர்கள் மீதான ஒடுக்குமுறை!

இந்தியப் பிரதமர் பத்திரிகையாளர் சந்திப்புகள் நடத்துவதில்லை. அவரது ஆட்சிக்குச் சாதகமாகப் பேசும் ஊடகங்களுக்கே பேட்டி அளிக்கிறார். ஆட்சிக்கு எதிராக விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள் பா.ஜ.க இணையதள குண்டர்களால் மிரட்டல்களுக்கும், கைது மற்றும் நேரடி தாக்குதல்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

0

ப்ரல் 30 ஆம் தேதி அன்று உலக பத்திரிகையாளர் சுதந்திரத்தைக் கண்காணிக்கும் எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் (Reporters Without Borders – RSF) என்ற அமைப்பு 2026-ஆம் ஆண்டிற்கான உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டை (World Press Freedom Index) வெளியிட்டுள்ளது. அதில் 180 நாடுகளில் இந்தியா 157-வது இடத்தைப் பிடித்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் இந்தியா 151-வது இடத்திலிருந்தது. தற்போது அது ஆறு இடங்கள் சரிந்துள்ளது. இது பத்திரிகை சுதந்திரம் ஒடுக்கப்பட்டு வருவதை எடுத்துக்காட்டுகிறது.

ஊடகக் கண்காணிப்பு அமைப்பு, கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 180 நாடுகளின் சராசரி மதிப்பெண் மிகக் குறைவாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. வரலாற்றிலேயே முதல்முறையாக, பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் பத்திரிகை சுதந்திரத்தில் “கடினமான” அல்லது “மிகவும் மோசமான” பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் 2002ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர் ஊடக சுதந்திரம் “நன்றாக” உள்ள நாடுகளில் வாழ்ந்தனர்; இன்று அது ஒரு சதவீதத்திற்கும் குறைவாகச் சுருங்கிவிட்டது. என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

180 நாடுகளைக் கொண்ட பட்டியலில் இந்தியா 157-வது இடத்திற்குச் சரிந்துள்ளது. பாலஸ்தீனம் 156-வது இடத்தில் உள்ளது. அதாவது கடந்த ஆண்டு 151-வது இடத்திலிருந்த இந்தியா, 163-ல் இருந்த பாலஸ்தீனத்தை விட முன்னிலையிலிருந்தது. தற்போது தஜிகிஸ்தான் (155), லாவோஸ் (154), பாகிஸ்தான் (153), பங்களாதேஷ் (152) மற்றும் கம்போடியா (151) ஆகிய நாடுகளுக்கும் கீழே இந்தியா தள்ளப்பட்டுள்ளது. 180 நாடுகளில் இந்தியாவுக்குப் பின்னால் வெறும் 23 நாடுகள் மட்டுமே உள்ளன.

இதனைப் போன்று அமெரிக்கா, பாசிச டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியில் 7 இடங்கள் சரிந்து 64-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் ஊடக நிறுவனங்களை முடக்கியதே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

2023 அக்டோபர் முதல் காசாவில் 220- க்கு மேற்பட்ட பத்திரிகையாளர்கள் இனவெறி இஸ்ரேலால் கொல்லப்பட்டுள்ளனர். மற்றொரு அமைப்பான சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு (International Federation of Journalists) மொத்தம் 262-க்கு மேற்பட்ட ஊடகப் பணியாளர்கள் கொல்லப்பட்டதாகக் குறிப்பிடுகிறது. மேலும் பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு (Committee to Protect Journalists), 2025ஆம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 129-பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.


படிக்க: 2025ஆம் ஆண்டு: உலகம் முழுவதும் 128 பத்திரிகையாளர்கள் படுகொலை!


குறிப்பாக பாசிச இஸ்ரேலின் இனப்படுகொலை காரணமாக காசாவின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. மக்கள் உணவின்றி பட்டினி கிடக்கின்ற அவலநிலை தீவிரமடைந்துள்ளது. வேலையின்மை 77 சதவீதமாக உள்ளது. ஊடக அலுவலகங்கள் தகர்க்கப்பட்டுள்ளன. பத்திரிகையாளர்கள் செல்வதற்குத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பேரழிவுகளுக்கு நடுவே பாலஸ்தீனம் 156வது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்நிலையில் ஆர்.எஸ்.எஃப் அளித்துள்ள விளக்கத்தின்படி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஏற்பட்ட போர் நிறுத்தத்தின் அடிப்படையில் பொருளாதார சூழலும், அரசியல் சூழலும் சற்று முன்னேறியுள்ளதால் இந்த இடத்தினை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. ஆனால் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன.

இருப்பினும், பட்டினியாலும் தாக்குதலாலும் வாடும் பாலஸ்தீனம் பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியாவை விட ஒரு படி மேலே இருக்கிறது என்றால், இந்தியாவின் பத்திரிகை சுதந்திரச் சூழல் எந்த அளவிற்கு மோசமாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி பதவியேற்றதிலிருந்து, மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொள்ளப்படும் இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் அதிக தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.

இதனை “2014ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய ஊடகங்கள் ‘அறிவிக்கப்படாத அவசரநிலை’ போன்ற சூழலில் உள்ளன” என்று எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு குறிப்பிடுகிறது. பா.ஜ.க கட்சியுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள பெரிய ஊடக நிறுவனங்களை “கோடி மீடியா” (godi media) என்று ஆர்.எஸ்.எஃப் குறிப்பிடுகிறது.

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்டீரிஸ் குழுமம் 70க்கும் மேற்பட்ட ஊடகங்களை வைத்திருக்கிறது. அதேபோல் கவுதம் அதானி என்.டி டிவி செய்தி ஊடகத்தை 2022ஆம் ஆண்டில் வாங்கியது உள்ளிட்டு பெரும்பாலான பத்திரிகை நிறுவனங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளில் குவிந்துள்ளதாகவும் பிரதான ஊடகங்களில் பன்முகத்தன்மை குறைந்துள்ளதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது.

மேலும் இந்தியப் பிரதமர் பத்திரிகையாளர் சந்திப்புகள் நடத்துவதில்லை. அவரது ஆட்சிக்குச் சாதகமாகப் பேசும் ஊடகங்களுக்கே பேட்டி அளிக்கிறார். ஆட்சிக்கு எதிராக விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள் பா.ஜ.க இணையதள குண்டர்களால் மிரட்டல்களுக்கும், கைது மற்றும் நேரடி தாக்குதல்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

அத்துடன் தொலைத்தொடர்புச் சட்டம் – 2023, தகவல் தொழில்நுட்பத் திருத்த விதிகள் மற்றும் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் போன்ற சட்டங்கள் மூலம் அரசுக்கு எதிரான ஊடகங்களின் விமர்சனங்களை ஒடுக்கியும் வருகிறது. பத்திரிகையாளர்களை தேசத்துரோகம், அவதூறு மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் மூலம் கைது செய்து சிறைக் கொட்டடியில் அடைத்துத் துன்புறுத்தி வருகிறது.

குறிப்பாக இந்திய ஊடகங்கள் பெரும்பாலும் விளம்பர வருவாயைச் சார்ந்துள்ளன; அவற்றில் அரசாங்கம் முக்கிய விளம்பர வழங்குநராக இருப்பதால், ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுத்து தங்களுக்கு எதிரான விமர்சனங்கள் ஊடகங்களில் வெளியாவதைத் தடுக்கிறது. பாசிச மோடி தலைமையிலான அரசு விளம்பரங்களுக்கு மட்டும் பில்லியன் டாலர்கள் செலவிட்டுள்ளதாக அறிக்கை அம்பலப்படுத்துகிறது.

உயர்சாதி இந்து ஆண்களே ஊடகங்களின் முக்கியப் பொறுப்புகளில் உள்ளனர். தொலைக்காட்சி விவாதங்களில் 15 சதவீதத்திற்கும் குறைவான பெண்களே பங்கேற்கின்றனர். சில சங்கி ஊடகங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் செயல்படுகின்றன.

இந்து தேசியவாதம் ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது. குறிப்பாக இந்தி சேனல்கள் மத அடிப்படையிலான செய்திகள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகளை ஒளிபரப்புகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முதல் மூன்று பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவதால், இந்தியா பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்றாக உள்ளது. பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு குறித்தான கேள்வியை அறிக்கை எழுப்புகிறது.

குறிப்பாகப் பெண் பத்திரிகையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிட்டுத் தாக்குதல் நடத்துவது மற்றும் காஷ்மீர் அல்லது சுற்றுச்சூழல் குறித்துச் செய்தி சேகரிப்பவர்கள் பெரும் அடக்குமுறைக்கு ஆளாகிறார்கள் என்று அந்த அறிக்கை எச்சரிக்கிறது. சிலர் நீண்டகால “தற்காலிக” காவலில் வைக்கப்படுகின்றனர்.

எனவே உலகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்டு வருகின்ற தாக்குதல்களுக்கு எதிராகவும் குறிப்பாக பாசிச மோடி கும்பலினால் இந்திய பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல்களுக்கு எதிராகவும் குரல் எழுப்ப வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க