உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு மே 3 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை ஒன்றின்படி, பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிரான இணையவழி வன்முறைகள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன. இத்தாக்குதல்கள் அவர்களின் உடல் நலம் மற்றும் மன ரீதியாக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் பெண்கள் (UN Women) மற்றும் அதன் கூட்டாளர்கள் இணைந்து வெளியிட்ட இந்த ஆய்வறிக்கை பொது வாழ்வில் உள்ள பெண்களுக்கு எதிரான இணையவழி வன்முறைகள் செயற்கை நுண்ணறிவு (AI) காலத்தில் தொழில்நுட்ப ரீதியாக முன்னேறி மேலும் அதிக ஆபத்துக்களை ஏற்படுத்துவதைச் சுட்டிக்காட்டுகிறது.
பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான அமைப்பின் குழு தலைவர் கல்லியோபி மிங்கெரோ (Kalliopi Mingerou) கூறுகையில், “ஏ.ஐ தொழில்நுட்பம் வன்முறைகளை எளிதாகவும், அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியதாகவும் மாற்றி வருகிறது. இது ஜனநாயக பின்னடைவு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட பெண் விரோத மனப்பான்மையுடன் சேர்ந்து, பெண்கள் அடைந்த உரிமைகளைச் சிதைக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
“திருப்புமுனை: ஏ. ஐ காலத்தில் இணையவழி வன்முறையின் தாக்கங்கள், வெளிப்பாடுகள் மற்றும் தீர்வுகள்” (Tipping point: Online violence impacts, manifestations and redress in the AI age) என்ற தலைப்பிலான இந்த அறிக்கை 2025 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 119 நாடுகளிலிருந்து 641 பேர் பங்கேற்றுள்ளனர்.
12 சதவீத பெண் மனித உரிமை ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் தங்களின் அனுமதியின்றி தனிப்பட்ட அல்லது நெருக்கமான படங்கள் வெளியிடப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
6 சதவீதம் பெண்கள் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட போலியான படங்கள் (Deef Fake) மூலம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். மூன்று பெண்களில் ஒருவருக்கு இணையவழியாகத் தேவையற்ற பாலியல் சீண்டல்கள் நடந்துள்ளன.
இதுபோன்ற இணைய வன்முறைகளுக்கு அஞ்சி 41 சதவீதம் பெண்கள் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்கின்றனர். 19 சதவீதம் பேர் தங்களது தொழில்முறைப் பணிகளில் தங்களது கருத்துகளை எழுதுவதைத் தவிர்க்கின்றனர்.
இதனைப் போன்று 45 சதவீதம் பெண் பத்திரிகையாளர்கள், தனிப்பட்ட முறையில் சமூக ஊடகங்களில் (Facebook, X, Instagram) எதைப் பதிவிட வேண்டும் என்பதில் மிகுந்த பயத்துடன் இருக்கின்றனர். ஏதேனும் ஒரு கருத்தைச் சொன்னால், அதற்குப் பதிலாக ஆபாசமான வசவுகளோ அல்லது மிரட்டல்களோ வரக்கூடும் என்பதால், தங்கள் உண்மையான கருத்துக்களைப் பகிராமல் தவிர்த்துவிடுகின்றனர். இது 2020 ஆம் ஆண்டை விட 50 சதவீதம் அதிகரித்துள்ளது.
மேலும் 22 சதவீதம் பெண் பத்திரிகையாளர்கள் தங்கள் தொழில்முறை வேலையிலேயே (செய்திக் கட்டுரைகள் எழுதுவது அல்லது புலனாய்வு செய்வது) கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்கின்றனர். சான்றாக ஒரு அரசியல்வாதியைப் பற்றி எழுதுவதற்கு முன்பாக ஆபத்து வரும் எனத் தெரிந்தால், அந்தச் செய்தியை எழுதாமல் தவிர்ப்பது, வன்முறையைத் தூண்டும் குழுக்களைப் பற்றிப் பேசுவதைத் தவிர்ப்பது என்று தங்களைத் தாமே கட்டுப்படுத்திக் கொள்கின்றனர்.
படிக்க: பாசிச மோடி ஆட்சியில் அதிகரிக்கும் பத்திரிகையாளர்கள் மீதான ஒடுக்குமுறை!
இணைய வன்முறையால் பாதிக்கப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த ஒரு சுற்றுச்சூழல் பத்திரிகையாளர் “இணையத்திலுள்ள வலதுசாரி குழுக்கள் என்னை ஒரு ‘துரோகி’ என்று முத்திரை குத்தும் போதும், ஆயிரக்கணக்கான வாட்ஸ்அப் (WhatsApp) செய்திகள் அந்தப் பொய்க் குற்றச்சாட்டுகளைப் பரப்பும் போதும், எனது சொந்த நாட்டிலேயே வாழ்வது என்பது மிகவும் அச்சமூட்டுவதாக மாறுகிறது.” என்று கூறியுள்ளார்.
“எங்களை நாங்களே தணிக்கை செய்து கொள்ளத் தொடங்கிவிட்டோம்; புலனாய்வுச் செய்திக் கட்டுரைகள் எழுதுவதிலிருந்தும் பின்வாங்குகிறோம். ஏனெனில், இந்தப் பதிவுகளால் தூண்டப்பட்ட உள்ளூர் வலதுசாரி செயல்பாட்டாளர்கள், எனது உறவினர்களை நேரில் சந்தித்து மிரட்டுவதும் அவர்களிடம் அவமரியாதையாகப் பேசுவதுமாக இருக்கின்றனர். சுதந்திரமாக வாழ்வது எளிதானதல்ல; நாங்கள் மௌனமாக இருக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறோம்,” என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் பெண்கள் இணைய வன்முறை தொடர்பாக போலீசில் புகார் அளிப்பது 11 சதவீதத்திலிருந்து தற்போது 22 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனைப் போன்று குற்றவாளிகள் மற்றும் அவர்களுக்கு உதவி செய்தவர்கள் (சான்றாக தொழில்நுட்ப நிறுவனங்கள்) மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் பெண்களின் எண்ணிக்கையும் 8 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இணைய வன்முறையால் 24.7 சதவீதம் பெண்கள் மன அழுத்தத்தால் (depression) பாதிக்கப்பட்டுள்ளனர். 13 சதவீதம் பெண்களுக்கு அதிர்ச்சிக்குப் பிந்தைய மன அழுத்தக் கோளாறு (PTSD – Post-Traumatic Stress Disorder) இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஒரு பெண் பத்திரிகையாளர் கூறுகையில் “ஜனநாயகத்தைப் பற்றி நாம் சத்தமாகப் பேசும்போது, ஜனநாயகத்தின் ‘உணர்வு’ அங்கு இல்லை – ‘பைத்தியக்காரத்தனத்தின் டெமோ’ (demo of craziness) மட்டுமே உள்ளது. இடைவிடாத அழுத்தத்தைச் சமாளிக்க முடியாமல், டிசம்பர் 2023-ல் எனது வேலையை ராஜினாமா செய்தேன். இப்போது வீட்டிலிருந்தபடியே, எனது மனநலத்தை மீட்டெடுப்பதில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வருகிறேன்.” என்று தன்னுடைய வேதனைகளை வெளிப்படுத்தியுள்ளார். இந்த நிலைமை கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அரிசிக் கஞ்சியை மட்டுமே நம்பி அவர் வாழ்ந்து வருகிறார். இது அவர் மௌனமாக்கப்பட்டு வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டதன் நேரடி விளைவாகும்.
குறிப்பாக உலக வங்கியின் தரவுகளின்படி 40 சதவீதத்திற்கும் குறைவான நாடுகளிலேயே பெண்களுக்கு எதிரான இணையவழிக் குற்றங்களிலிருந்து பாதுகாப்பதற்கான சட்டங்கள் உள்ளன. இதிலிருந்தே உலக நாடுகள் பெண்களின் கருத்துகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
ஐ.நா மகளிர் உரிமை அமைப்பின் கல்லியோபி மிங்கரோ (Kalliopi Mingerou) கூறுகையில்: “இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணும் வகையில் சட்டங்களும், அமைப்புகளும், தளங்களும் அவசரமாகச் செயல்படுவதை உறுதி செய்வது நமது பொறுப்பு”, என்று தெரிவித்துள்ளார்.
முக்கியமாக பெண்கள் என்பதால் மட்டுமில்லாமல் அவர்களின் சாதி, மதம் அல்லது பாலின அடையாளம் (LGBTQ+) ஆகியவற்றைக் குறிப்பிட்டு மிகவும் கீழ்த்தரமான முறையில் அவதூறுகள் பரப்பப்படுகின்றன. சான்றாக ஒரு தலித் பெண் பத்திரிகையாளர் அல்லது சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒரு செய்தியைச் சொன்னால், அந்தச் செய்தியை விவாதிப்பதற்குப் பதிலாக அவரின் அடையாளத்தை வைத்து இழிவாகப் பேசுவது, சமூக வலைத்தளங்களில் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கீழ்த்தரமான பின்னூட்டங்கள் இடுவது என்ற பெண்களுக்கு எதிரான இணைய வன்முறைகள் செயற்கை நுண்ணறிவால் இன்னும் தீவிரமடைந்து கொண்டிருக்கின்றன.
சமூகத்தில் நடக்கும் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் பெண் பத்திரிகையாளர்கள் இணைய வன்முறைகளால் தாக்கப்படுகின்றனர். இதன் மூலம் உளவியல் ரீதியாகத் துன்புறுத்தி அவர்களை பொது வாழ்விலிருந்து தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உலகம் முழுவதும் தீவிரமடைந்து கொண்டிருக்கின்றன.
![]()
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads










