கரும்பு விவசாயிகளை வஞ்சிக்கும் பாசிச மோடி அரசு!

10.25 சதவிகிதம் சர்க்கரைச் சத்து கொண்ட ஒரு டன் கரும்புக்கான சாகுபடி செலவு ரூ.1,820 என்று ஒன்றிய அரசு கணக்கிட்டுள்ளது. ஆனால், ஒரு டன் கரும்பு சாகுபடி செய்ய உண்மையில் ஏறக்குறைய ரூ.3,500 வரை செலவாகிறது என்பதை கரும்பு விவசாயிகளும் உழவர் சங்கங்களும் அம்பலப்படுத்துகின்றன. இம்மோசடியின் மூலம் மோடி அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நாசமாக்குகிறது.

ன்றிய அரசின் “பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு” (CCEA), வரும் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள 2026-2027 அரவைப் பருவத்திற்கான கரும்பின் “நியாயமான மற்றும் லாபகரமான விலை”யை (FRP) அறிவித்துள்ளது.

அதன்படி, 10.25 சதவிகிதம் சர்க்கரைச் சத்து கொண்ட கரும்பின் விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ.365 (ஒரு டன் கரும்பு விலை ரூ.3,650) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது நடப்பு ஆண்டை (2025-2026) விட டன்னுக்கு ரூ.100 மட்டுமே அதிகமாகும்.

9.5 சதவிகிதம் மற்றும் அதற்குக் குறைவான சர்க்கரைச் சத்து கொண்ட கரும்பின் விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ.338.30 (ஒரு டன் கரும்பு விலை ரூ.3,383) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது நடப்பு ஆண்டை விட டன்னுக்கு ரூ.93 மட்டுமே அதிகம்.

சர்க்கரைச் சத்து 10.25 சதவிகிதத்திலிருந்து அதிகரிக்கும் அல்லது குறையும் ஒவ்வொரு 0.1 சதவிகிதத்திற்கும் குவிண்டாலுக்கு ரூ.3.56 வீதம் கூட்டப்படும் அல்லது குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உள்ளிட்ட பெரும்பாலான இந்திய மாநிலங்களில் கரும்பின் சர்க்கரைச் சத்து 10 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது. எனவே, 10.25 சதவிகித சர்க்கரைச் சத்துக்கான ரூ.100 உயர்வு என்பது பெரும்பாலான விவசாயிகளுக்குக் கிடைக்காது. மேலும், 9.5 சதவிகிதத்திற்கும் குறைவான சர்க்கரைச் சத்து கொண்ட கரும்புக்கு, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.139 உயர்த்திக் கொடுக்கப்பட்டது. ஆனால், வரும் ஆண்டிற்கு (2026-2027) வெறும் ரூ.93 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் உயர்வில் பாதியளவே ஆகும். இதன் மூலம், பாசிச மோடி அரசு விவசாயிகளைத் திட்டமிட்டே வஞ்சித்துள்ளது.

அதேபோல், 10.25 சதவிகிதம் சர்க்கரைச் சத்து கொண்ட ஒரு டன் கரும்புக்கான சாகுபடி செலவு ரூ.1,820 என்று ஒன்றிய அரசு கணக்கிட்டுள்ளது. எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைப்படி, சாகுபடி செலவுடன் 50 சதவிகிதம் லாபம் சேர்த்து விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். ஒன்றிய அரசோ 100.5 சதவிகிதம் லாபம் சேர்த்து விலையை நிர்ணயித்துள்ளதாகக் கூறுகிறது. இது கரும்பு விவசாயிகளை ஏமாற்றும் வெற்று அறிவிப்பாகும்.

ஏனென்றால், ஒன்றிய அரசு கரும்பு சாகுபடிக்கான செலவுகளைக் கணக்கிடுவதிலேயே ஏமாற்றுகிறது. வேளாண் செலவுகள் மற்றும் விலைகள் ஆணையத்தின் (CACP) பரிந்துரைகளின் அடிப்படையிலும், மாநில அரசுகள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்தும்தான் இந்த விலை (FRP) நிர்ணயிக்கப்படுவதாக ஒன்றிய அரசு கூறுகிறது. ஆனால் உண்மையில், தனியார் சர்க்கரை ஆலை அதிபர்களின் லாபத்தைக் கருத்தில் கொண்டு, கரும்பின் சாகுபடி செலவை ஒன்றிய அரசு மிகக் குறைவாகக் காட்டுகிறது. அந்தவகையில், ஒரு டன் கரும்பு சாகுபடிக்கு ரூ.1,820 மட்டுமே செலவாவதாக அரசு மோசடியாகத் தெரிவிக்கும் நிலையில், ஒரு டன் கரும்பு சாகுபடி செய்ய உண்மையில் ஏறக்குறைய ரூ.3,500 வரை செலவாகிறது என்பதை கரும்பு விவசாயிகளும் உழவர் சங்கங்களும் அம்பலப்படுத்துகின்றன. இம்மோசடியின் மூலம் மோடி அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நாசமாக்குகிறது.

ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பு தொடர்பாக தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உரம், டீசல் விலைகள் உயர்ந்து கரும்பு உற்பத்தி செலவு தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில், ஒரு டன் கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ.5,500 வழங்க வேண்டும். ஆனால் நாடு முழுவதும் உள்ள ஐந்து கோடி கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் அடுத்த ஆண்டு கரும்புக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு ஒரு டன்னுக்கு வெறும் ரூ.93 மட்டுமே விலையை உயர்த்தியுள்ளதை தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.” என்று தெரிவித்துள்ளார். மேலும், சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதாக ஒன்றிய பா.ஜ.க. அரசு கூறிவரும் நிலையில், கடந்த பத்தாண்டு காலமாக அது அமல்படுத்தப்படவில்லை என்பதையும் அம்பலப்படுத்துகிறார்.

உண்மை நிலை இவ்வாறு இருக்கையில், மோடி அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் இந்த விலை உயர்வின் மூலம் 5 கோடி கரும்பு விவசாயிகளுக்கும், சர்க்கரை ஆலைகள் மற்றும் அது தொடர்பான துணை நடவடிக்கைகளில் பணிபுரியும் 5 லட்சம் தொழிலாளர்களுக்கும் நன்மை கிடைக்கும் என பொய் உரைத்திருக்கிறது.

இந்நிலையில், கடந்த மே 13 அன்று, உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வது, விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட காரணங்களைக் கூறி செப்டம்பர் 30, 2026 வரை சர்க்கரை ஏற்றுமதிக்கு மோடி அரசு தடை விதித்துள்ளது. (அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான குறிப்பிட்ட சிறிய கோட்டா ஒதுக்கீட்டிற்கு மட்டும் இதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது). ஏற்கெனவே, உரம், வெட்டுக்கூலி போன்ற கரும்பு சாகுபடிச் செலவுகளால் விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிவரும் நிலையில், இத்தடையால் ஆலைகளில் சர்க்கரை தேக்கமடைந்து உள்நாட்டுச் சந்தையில் சர்க்கரையின் விலை வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகளுக்கு வழங்கும் கரும்பு கொள்முதல் விலையைக் குறைப்பது அல்லது விலையை உயர்த்த மறுப்பது; விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்காமல் தள்ளிப்போடுவது என விவசாயிகள் மேலும் வஞ்சிக்கப்படுவர்.

இவ்வாறு பாசிச மோடி அரசானது, பாசிச மோடி அரசு தனது கார்ப்பரேட் ஆதரவு வேளாண் கொள்கையிலிருந்து, கரும்பின் விலையை உயர்த்துவதாக மோசடியான அறிவிப்புகளை வெளியிடுவது, விவசாயிகளுடன் எந்த ஆலோசனையும் நடத்தாமல் ஏற்றுமதியை முடக்குவது என கரும்பு விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.

ஆகவே, கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளான ஒரு டன் கரும்பிற்கு ரூ.5,500 வழங்கப்பட வேண்டும்; எம். எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, மோடி அரசின் இந்த விவசாய விரோத போக்குகளை எதிர்த்து கரும்பு விவசாயிகள், விவசாய சங்கங்கள், புரட்சிகர ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும். இப்போராட்டங்களை, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசிற்கான போராட்டமாக வளர்த்தெடுக்க வேண்டும்.

மக்கள் அதிகாரக் கழகம்,
கோவை மாவட்டம்.
94889 02202

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க