24.05.2026

உற்சாகமாக நடந்து முடிந்த ம.அ.க.வின்
ஐந்தாவது பொதுக்குழு கூட்டம்

பத்திரிகைச் செய்தி

அன்பார்ந்த ஜனநாயக சக்திகளே, உழைக்கும் மக்களே!

மக்கள் அதிகாரக் கழகத்தின் ஐந்தாவது பொதுக்குழு கூட்டம் இன்று (24-05-2026) மிகவும் உற்சாகமாக நடந்து முடிந்தது.

வழக்கமாக, ஆண்டு தொடக்கத்தில் நடக்க வேண்டிய பொதுக்குழு கூட்டம், இந்த ஆண்டு தமிழ்நாட்டு பண்பாட்டுப் பெருவிழா மற்றும் சட்டமன்றத் தேர்தல் இயக்கம் போன்ற முக்கியமான இயக்கப் பணிகள் காரணமாக தற்போது நடைபெற்றது.

மூத்த தோழரும் கழகத்தின் தென்கிழக்கு மண்டல இணைச் செயலாளருமான, தோழர் குருசாமி கொடியேற்றியவுடன் தோழர்களின் செவ்வணக்கத்துடன் பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியது. தியாகிகளுக்கு வீர வணக்கத்துடன் இந்த ஆண்டில் மறைந்த கடலூர் கிளை கழக தோழர் கார்த்திகேயனுக்கு சிவப்பு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த ஓராண்டில் கழகம் கடந்து வந்த பாதையை பரிசீலனைக்கு உட்படுத்தி விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடத்தப்பட்ட கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடில் அமைப்பாக இருந்த கழகம், பாசிசத்தை வீழ்த்தும் கட்சியாக உருவெடுத்தது என்பது தோழர்களுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் பெரும் நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. மாநாட்டின் இந்த முடிவை பலரும் வரவேற்று பேசினர்.

அதுவரை, ஐந்து மண்டலங்களாக மட்டுமே செயல்பட்டு வந்த கழகம் எட்டு மாவட்டங்களாக வளர்ச்சியடைந்தது, புதிய இளைஞர்கள் தலைமைப் பொறுப்புக்கு கொண்டுவரப்பட்டனர். புதிய பொறுப்புகள் உருவாக்கப்பட்டன. இவை அனைத்தும் கழகத்தை ஆதரிக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் மக்களுக்கும் பெரும் நம்பிக்கையளித்த அம்சங்களாகும்.

மாநாடு கொடுத்த அதே உற்சாகத்தில் கழகத்தின் புதிய கொள்கை அறிக்கையான “மாபெரும் ஆயுதம்” பல மாவட்டங்களில் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து வெளியிடப்பட்டது. பாசிசத்திற்கு எதிரான மாற்றை சரியான வகையில் கொள்கை அறிக்கை முன்வைத்துள்ளது என சொல்லி ஜனநாயக சக்திகள் பெரிதும் வரவேற்றனர். பல இயக்கத்தினர், இந்தக் கொள்கை அறிக்கை அனைவரையும் தழுவி ஏற்கும் வகையில் இருப்பதாகக் கூறினர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் எழுந்த திருப்பரங்குன்றம் பிரச்சினையில் தொடக்கம் முதல் தற்போது வரை, சங்கப் பரிவாரக் கும்பலுக்கு எதிராக, எமது தோழமை அமைப்புகளுடன் இணைந்து கழகம் முன்னெடுத்த போராட்டங்களானது தனித்துவமானவை; தமிழ்நாட்டின் பார்ப்பனிய எதிர்ப்பு மரபை உயர்த்திப் பிடிப்பவை. இந்த இயக்கத்தை மதுரைக்கு வெளியே தமிழ்நாடு தழுவிய அளவிலான இயக்கமாக வளர்த்தது கழகத்தின் முக்கியமான பங்களிப்பாகும் என ஜனநாயக சக்திகளே உணர்ந்து வரவேற்றுள்ளனர். சங்கப் பரிவாரக் கும்பலுக்கு எதிராக, “முருகனை மீட்போம்! கருப்பனைக் காப்போம்!” என்று முன்வைத்த முழக்கங்கள், பார்ப்பனிய, சாதி ஆதிக்க எதிர்ப்புணர்வு கொண்டவர்களுக்கும் தமிழ்த்தேசிய உணர்வு கொண்டவர்களுக்கும் பெரிதும் நம்பிக்கையளிப்பதாக இருந்தது. இவ்வியக்கம், பாசிச எதிர்ப்பு களத்தில் முன்னணி சக்தியாக கழகத்தினை அனைவர் மத்தியிலும் அடையாளப்படுத்திக் காட்டியது.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் தொடர்ந்து அரங்கேறி வரும் சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக கழகம் முன்னெடுத்த ஆணவப் படுகொலைக்கு எதிரான பண்பாட்டுப் போர் முழக்கம் தான் “சாதி மதம் கடந்து காதலிக்க மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம்!” இந்த முழக்கத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட, சாதி மறுப்பு புரட்சிகர மணவிழா தமிழ்நாட்டின் பார்ப்பனிய எதிர்ப்பு பண்பாட்டுத் தளத்திலும் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

பல நூற்றுக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள், ஜனநாயக சக்திகள் தன்முனைப்பாக இந்த இயக்கத்தில் பங்கேற்று, பல பணிகளை எடுத்துச் செய்தனர். முக்கியமான ஐந்து தலித் கட்சிகளின் தலைவர்கள் மேடையில் எம்முடன் கைகோர்த்து நின்றனர்! சாதி ஒழிப்புக்கும் ஆணவப் படுகொலைகளுக்கும் எதிரான எமது முன்னெடுப்பைப் பாராட்டி வரவேற்றனர்.

இவற்றையும் உள்ளடக்கி, இந்த ஆண்டில் இடைவிடாது மேற்கொள்ளப்பட்ட அரசியல் பணிகள் முக்கியமானவை. இவற்றில், இமானுவேல் சேகரனை சாதி ஒழிப்புப் போராளியாக முன்வைத்து எடுத்த இயக்கம் அரசியல் முக்கியத்துவமுடையது. காசா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிரான இயக்கம், பாசிச பா.ஜ.க.வின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான இயக்கங்கள் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்டன.

முக்கியமாக, இந்திய ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்க டிரம்ப் அரசின் 50 சதவிகித வரிவிதிப்புக்கு எதிரான இயக்கமானது, மோடி அரசின் அமெரிக்க அடிமைத்தனத்திற்கு எதிராக அறைகூவுவதாகவும் இருந்தது.

இசுலாமியர்கள் மீதான தாக்குதல்கள், தலித் மக்கள் மீதான அடக்குமுறைகள், போலீசு நிலைய கொட்டடிக் கொலைகள், டாஸ்மாக் அராஜகங்கள், கிரானைட் கொள்ளை போன்ற பல பிரச்சினைகளுக்கு தோழர்கள் உடனுக்குடன் களத்திற்குச் சென்று மக்களைத் திரட்டிப் போராடியுள்ளனர். ஜனநாயக சக்திகள் முன்னெடுத்த போராட்டங்களுக்கு ஆதரவாக உடனிருந்து உதவியுள்ளனர்.

நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் மறைவை ஒட்டி கழகத்தின் சார்பாக ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்பட்டது. தோழர் சம்பத்தின் அளப்பரிய பணிகளை, தியாகத்தை ஜனநாயக சக்திகளிடம் மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் தமிழ்நாடு முழுவதும் இரங்கல் கூட்டங்கள் நடத்தப்பட்டது. இதன் மூலம், ஜனநாயக சக்திகள், மக்களிடம் தோழரின் பங்களிப்பு கொண்டு சென்று சேர்க்கப்பட்டது.

கடந்த ஓராண்டில் கழகம் உடனுக்குடன் வெளியிட்ட பத்திரிகைச் செய்திகள், தலைமைக்குழு, மாவட்ட கிளை தோழர்கள் வெளியிட்ட வீடியோக்கள், தீர்மானங்கள், 8-க்கும் மேற்பட்ட வெளியீடுகள் பாசிச எதிர்ப்பு சக்திகளுக்கு நம்பிக்கை அளிப்பதாகவும் பாசிச எதிர்ப்பில் முன்னணி பாத்திரம் ஆற்றுவதாகவும் அமைந்திருந்தது.

இவற்றுடன், பல பகுதிகளில் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை கழகம் முன்னெடுத்ததன் விளைவாக, பலரும் கழகத்தில் உறுப்பினராக இணைந்துள்ளனர். எப்போதும் இல்லாத அளவிற்கு மக்கள் மத்தியிலான இயக்கப் பணிகள் முன்னேறி வருகின்றன.

இவ்வாறு, கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட கழகத்தின் பணிகள், ஒரு பாய்ச்சலான வளர்ச்சியைக் காட்டுகின்றன. இவற்றின் அனுபவங்கள் மீதான விரிவான பரிசீலனை பொதுக்குழு தோழர்கள் அனைவருக்கும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் மேலும் வளர்த்தெடுப்பதாக இருந்தது. அடுத்த கட்ட பணிகளுக்கு துடிப்புடன் களமிறங்கத் தயாராகி உள்ளனர்.

இந்த ஓராண்டு நடைமுறைகளின் செறிவான அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டு அடுத்த ஆண்டுக்கான நடவடிக்கைகள் திட்டமிடல்கள் குறித்த விவாதங்களும் தோழர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இந்தியாவிலேயே யாரும் எதிர்பாராத வகையில், தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க. வெற்றி அமைந்துள்ளது. அடுத்து, தமிழ்நாட்டில் என்ன நடக்கும்? பாசிச பா.ஜ.க. தமிழ்நாட்டில் காலூன்றி விடுமா? என்ற கேள்விகள் ஜனநாயக சக்திகள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் அதிகரித்துள்ளது. இந்த அச்சங்களைப் போக்கி, பாசிசத்தை முறியடிக்கும் திசையைத் தெளிவுபடுத்தும் வகையில் “தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது?” என்ற தலைப்பின் அடிப்படையில் மைய இயக்கத்தை எடுத்துச் செல்வது பற்றி விவாதிக்கப்பட்டது. இந்த இயக்கத்தை ஜனநாயக சக்திகள் மத்தியில் வீச்சாகக் கொண்டு செல்வதென முடிவெடுக்கப்பட்டது.

இறுதியில், கழகப் பொதுச்செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் இன்றைய அரசியல் நிலைமை குறித்தும் பாசிசத்தை வீழ்த்துவதற்கான போராட்டத்தில் தொடர்ந்து முன்னேறுவோம் என்று உறுதி கூறியும் நிறைவுரை ஆற்றினார்.

பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் கழகத்தின் ஐந்தாவது பொதுக்குழு கூட்டம் நிறைவடைந்தது.

 


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க