மக்கள் அதிகாரக் கழகம் பொதுக்குழுத் தீர்மானங்கள் 2026
1. மே 25: மாபெரும் நக்சல்பாரி உழவர் எழுச்சியின் 60ஆம் ஆண்டு!
1967 மே 25, அன்றைக்கு மேற்குவங்கம் மாநிலம், டார்ஜிலிங் மாவட்டத்தில் இருந்த நக்சல்பாரி உள்ளிட்ட கிராமங்களில் எழுந்த விவசாயிகளின் இயக்கத்தின் எழுச்சி நாளாகும். பண்ணையாதிக்கத்திற்கும் நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்திற்கும் எதிராக, “உழுபவருக்கே நிலம் சொந்தம், உழைப்பவருக்கே அதிகாரம்” என்ற முழக்கத்தின் கீழ் விவசாயிகள் மாபெரும் இயக்கமாக எழுந்தனர். இது, போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்புக்கு வெளியே மக்கள் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டத்தை முன்னெடுத்தனர். கம்யூனிச இயக்கத்தில் பீடித்திருந்த நாடாளுமன்ற சுய அழிவுப் பாதைக்கு எதிராக புரட்சி திசையைக் காட்டிய இவ்வியக்கம், ஆயிரக்கணக்கான இளைஞர்களைப் புரட்சியின் பால் ஈர்த்தது.
இன்று, நமது நாட்டில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. அம்பானி-அதானி பாசிசக் கும்பல் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி சட்டவழிமுறைகளைப் பயன்படுத்தி பாசிசத்தை அரங்கேற்றி வருகிறது. பாசிசத்தை இந்த நாடாளுமன்றக் கட்டமைப்பைப் பயன்படுத்தி வீழ்த்த முடியாது. மாறாக, பாசிச சக்திகள் அரசியல் அதிகாரத்திற்கு வருவதைத் தடுக்கும் வகையிலான பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை நிலைநாட்டுவதன் மூலமாக மட்டுமே பாசிசத்தை வீழ்த்த முடியும். அந்தவகையில், பாசிசத்தை வீழ்த்த நக்சல்பாரி எழுச்சியின் 60-ஆம் ஆண்டில் உறுதியேற்போம்!
2. சரிந்து வரும் தன் உலக மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும், அமெரிக்காவுக்குப் போட்டியாகச் சீனா வளர்ந்து வருவதைத் தடுப்பதற்காகவும் டிரம்ப்-மஸ்க் பாசிசக் கும்பல் வெறிகொண்டு அலைகிறது. அது இதுநாள் வரை உலகைக் கொள்ளையடிப்பதற்குத் தான் பின்பற்றி வந்த தாராளமய, உலகமயக் கொள்கைகளையும், அதன் கருவிகளாக விளங்கிய உலக வர்த்தகக் கழகம் (WTO), உலக வங்கி (WB), சர்வதேச நாணய நிதியம் (IMF), நேட்டோ (NATO) போன்றவற்றின் கட்டுப்பாடுகளையும் தூக்கியெறிந்துவிட்டு, “அமெரிக்காவுக்கே முன்னுரிமை” (America First) என்ற பாசிசக் கொள்கையைத் தீவிரமாகப் பின்பற்றத் தொடங்கியிருக்கிறது.
தன்னுடைய மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ள அமெரிக்கா உலக நாடுகளின் இறையாண்மை மீது காட்டுமிராண்டித்தனமானத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. தனக்கு அடிபணிய மறுத்த வெனிசுலா அதிபரைக் கடத்திக் கைதி செய்து சிறையிலடைத்துள்ளது; கியூபா மீது கொடூரமானப் பொருளாதாரத் தடைகளை விதித்து, அந்த நாட்டை இருட்டிலும் பட்டினியிலும் தள்ளியுள்ளது. கனிம வளங்களைக் கொள்ளையடிக்கக் கிரீன்லாந்து நாட்டைத் தன் சொத்து என அறிவித்தது அடிமைப்படுத்தி வருகிறது; லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஆட்சிக் கவிழ்ப்புகளை அரங்கேற்றி வருகிறது.
பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் நடத்தும் கொடூரமான இனப்படுகொலைக்கு உற்ற துணையாக நிற்கும் டிரம்ப் அரசு, தற்போது இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மற்றும் லெபனான் மீதும் போர் தொடுத்துப் பச்சிளம் குழந்தைகளையும் மக்களையும் கொத்துக்கொத்தாகக் கொன்றொழித்து வருகிறது. இப்போரின் விளைவாக உலகெங்கும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு விலைவாசி உயர்ந்துள்ளது. குறிப்பாக, ஈரானிய எண்ணெய் வயல்கள் மீது அமெரிக்க-இஸ்ரேல் கூட்டணி நடத்தி வரும் வான்வழித் தாக்குதலால் எழும் நச்சுப் புகையானது, பூமியின் சுற்றுச்சூழலுக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி, உலக நாடுகளை மீள முடியாத பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.
அமெரிக்காவின் பல மாகாண அரசுகளின் எதிர்ப்புகளையும் மீறி, ராணுவத்தை ஏவிப் புலம்பெயர்ந்த குடியேற்ற மக்களைக் குற்றவாளிகளைப் போலக் கைது செய்து நாடு கடத்துகிறது. இதன் மூலம், அந்நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தைத் தூக்கியெறிந்துவிட்டு ஒரு மன்னராட்சியைப் போல டிரம்ப் அரசு ஒற்றைச் சர்வாதிகாரத்தைத் திணிக்கிறது. உழைக்கும் மக்கள் தங்களுக்கு எதிராக ஒன்று திரள்வதைத் தடுக்கத் தேசவெறி, வெள்ளை நிறவெறி, போர்வெறி மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பு மதவெறியைத் திட்டமிட்டுத் தூண்டிவிடுகிறது. தொழிலாளர்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் பால் புதுமையர்களின் (LGBTQ+) அடிப்படை உரிமைகளைப் பறித்து வருகிறது.
பாசிச டிரம்ப் கும்பலின் இத்தகைய அடக்குமுறைகளுக்கு எதிராக இன்று அமெரிக்கா முழுவதும் மக்கள் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. டிரம்பின் சர்வாதிகாரத்திற்கு எதிராக ஒட்டுமொத்த அமெரிக்காவையும் உலுக்கி வரும் “வேண்டாம் அரசன்” (No King) மக்கள் போராட்டத்தை மக்கள் அதிகாரக் கழகம் வரவேற்கிறது. மேலும், உலகெங்கும் உழைக்கும் மக்களின் உரிமைகளை நசுக்கி, பாசிச ஆட்சியை அரங்கேற்றி வரும் டிரம்ப் – மஸ்க் பாசிசக் கும்பலின் அமெரிக்க மேலாதிக்கத்தை முழுமையாக வீழ்த்துவதற்கான சர்வதேசப் போராட்டங்களை நாம் ஒன்றிணைந்து கட்டியமைக்க வேண்டும் என ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்திற்கும், புரட்சிகர ஜனநாயகச் சக்திகளுக்கும் மக்கள் அதிகாரக் கழகம் அறைகூவல் விடுக்கிறது!
3. சரிந்து வரும் தனது உலக மேலாதிக்கத்தைத் தக்கவைக்கவும், மத்திய கிழக்கில் தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும் இஸ்ரேலுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு, அமெரிக்கா ஈரான் மீது அடாவடித்தனமாகப் போர் தொடுத்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி தொடங்கிய இப்போரானது, கடந்த மூன்று மாதங்களாக நீடித்து வருகிறது. ஈரானிய சுகாதார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, இந்த அநீதியான போரில் இதுவரை 3,468 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்; 26,500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். போரின் முதல் நாளிலேயே ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி, பாதுகாப்பு அமைச்சர், ஐஆர்ஜிசி (IRGC) தளபதி உள்ளிட்ட 7 முக்கியத் தலைவர்கள் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டனர்.
இவ்வளவு இழப்புகளைச் சந்தித்த பிறகும், ஈரான் நாடு அமெரிக்காவின் மேலாதிக்கத்தை எதிர்த்துத் தொடர்ந்து உறுதியுடன் போரிட்டுக் கொண்டிருக்கிறது. “அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம்” என்பதை உலகிற்குப் பறைசாற்றும் விதமாக, ஈரான் உழைக்கும் மக்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தை எதிர்த்து போரிட்டுவரும் ஈரானை மக்கள் அதிகாரக் கழகம் ஆதரிக்கிறது. அமெரிக்காவின் அடாவடித்தனமான போரை எதிர்த்து மக்கள் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
மேலும், ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலின் போரைக் கண்டிக்கத் துப்பில்லாமல், அமெரிக்காவின் ஆதிக்கத்திற்குக் பயந்து வக்கற்றுப் போயிருக்கும் பாசிச மோடி அரசை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது!
4. தனது மேலாதிக்க நோக்கத்திற்கு கியூபாவை அடிபணிய வைக்க மனிதாபிமானமற்ற பொருளாதார முற்றுகையை அமெரிக்கா தொடுத்து வருகிறது. கியூபாவிற்கு சர்வதேச நாடுகளிலிருந்து வரும் கச்சா எண்ணெய் இறக்குமதி 90 சதவிக்தம் வரை திட்டமிட்டு முடக்கப்பட்டுள்ளதால், அந்நாடு தற்போது ஒரு மீள முடியாத பொதுச்சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. மின்சாரம் மற்றும் அத்தியாவசிய மருந்துத் தட்டுப்பாட்டின் காரணமாக, சுமார் 11,000 குழந்தைகள் உட்பட 96,000-க்கும் மேற்பட்ட கியூப மக்கள் அவசரக் கால அறுவைசிகிச்சைகள் செய்ய முடியாமல் தற்பொழுது உயிருக்குப் போராடி வருகின்றனர்.
நாட்டின் பல பகுதிகளில் 24 மணி நேரமும் தொடர் மின்தடை நிலவுவதால், 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு மற்றும் உணவுப் பஞ்சத்தை எதிர்கொண்டு மரண விளிம்பில் தவித்து வருகின்றனர். அமெரிக்காவின் இந்த வஞ்சகப் பொருளாதாரப் போரை எதிர்த்து உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள் குரல் எழுப்ப வேண்டும்! கியூபாவின் மீதான மனிதாபிமானமற்றப் பொருளாதார முற்றுகையை அமெரிக்கா உடனே கைவிட வேண்டும்! உலக நாடுகள் கியூபாவிற்குத் தேவையான எரிபொருள், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உணவு உதவிகளை உடனே மேற்கொள்ள வேண்டும்! போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் போரட்டங்களை கட்டியமைக்க வேண்டும் என்று கழகம் கேட்டுள்கொள்கிறது.
5. இஸ்ரேலின் இன அழிப்புப் போரால் பாதிக்கப்பட்டிருக்கும் காசாவில் பசியாலும், போர்க் கொடுமைகளாலும் தவித்து வரும் பாலஸ்தீன உழைக்கும் மக்களுக்கான அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற “குளோபல் அமுல்” (Global Amal) கப்பலைச் சர்வதேசக் கடல் பகுதியில் வைத்து வஞ்சகமாகச் சிறைபிடித்துள்ள இனவெறிப்பிடித்த இஸ்ரேல் அரசின் கொடுஞ்செயலை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிப்பதுடன் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
6. இந்த மே தினத்தில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகப் போர்வெறிக்கும், உலகெங்கும் தலைதூக்கி வரும் கார்ப்பரேட்-பாசிசக் கொடுமைகளுக்கும் எதிராக உலகம் முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான உழைக்கும் மக்கள் வீதிகளில் இறங்கி மாபெரும் போராட்டங்களைக் கட்டியமைத்துள்ளனர். பிரான்சில் பட்ஜெட்டிற்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டம், கியூப மற்றும் பாலஸ்தீன முற்றுகைகளுக்கு எதிரான கண்டனக் குரல்கள் என உலக உழைக்கும் மக்கள் ஓரணியில் திரண்டு முன்னெடுத்த இப்போராட்டங்களை மக்கள் அதிகாரக் கழகம் வரவேற்கிறது.
7. பன்னாட்டுத் தொழில்நுட்ப நிறுவனமான மெட்டாவில் (Meta) உலகமுழுவதுமிருந்து சுமார் 78,000 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். இவர்களில் சுமார் 10 விழுக்காடு ஊழியர்களை, அதாவது ஏறத்தாழ 8,000 தொழிலாளர்களை அந்நிறுவனம் தற்பொழுது பணிநீக்கம் செய்துள்ளது. மேலும், பல ஆயிரம் ஊழியர்கள் அவர்களின் விருப்பத்திற்கு மாறாகக் கட்டாயப்படுத்தி வேறு பிரிவுகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். முதலில் ‘வீட்டில் இருந்தே பணி செய்ய உத்தவிட்டு’ (Work from Home), தொழிலாளர்களைத் தங்களின் நேரடிச் சங்கிலியிலிருந்து தனிமைப்படுத்திவிட்டு, அதைத் தொடர்ந்து இத்தகையப் பணிநீக்க நடவடிக்கையை மெட்டா நிறுவனம் தந்திரமாக மேற்கொண்டுள்ளது. செயற்கை நுண்னறிவு வளர்ச்சியைப் பயன்படுத்திக் கொண்டு, பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்துள்ள மெட்டா நிறுவனத்தின் இந்த அடாவடித்தனமான, தொழிலாளர் விரோதப் போக்கை மக்கள் அதிகாரக் கழகம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. கார்ப்பரேட்டு நிறுவனங்களின் இத்தகைய வேலைப்பறிப்புகளுக்கு எதிராக தொழிலாளர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
000
8. சர்வதேச சந்தையைக் காரணம் காட்டி, கடந்த ஒரே வாரத்திற்குள் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ₹3.90 வரை உயர்த்தியுள்ள பாசிச மோடி அரசை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. ஏற்கனவே நிலவி வரும் சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் கடுமையான விலை உயர்வால் உணவகங்கள், விடுதிகள் முடங்கி வருகின்றன; புலம்பெயர் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்பும் அவலமும், சிலிண்டர் வாங்குவதற்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த சாமானிய மக்கள் உயிரிழக்கும் துயரமும் அரங்கேறி வருகிறது.
இத்தகைய சூழலில், மக்களின் கழுத்தை நெரிக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடியை பாசிச மோடி அரசு மக்கள் மீது மீண்டும் திணித்துள்ளது. இந்த பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் காய்கறி, பால், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயரும்; பேருந்து கட்டணங்கள், வாடகை வாகனக் கட்டணங்கள் உள்ளிட்ட போக்குவரத்துச் செலவுகள் கடுமையாக அதிகரிக்கும். உணவகங்களில் உணவின் விலை சாமானியர்களின் கைக்கு எட்டாத உயரத்திற்குச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 75 முதல் 80 டாலராக வீழ்ச்சியடைந்த போதும், மலிவு விலை ரஷ்ய எண்ணெயால் அம்பானியின் ரிலையன்ஸ் உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டியபோதும், இந்தியாவில் சில்லறை விற்பனை விலை பைசா அளவிற்குக் கூட குறைக்கப்படவில்லை. சர்வதேச சந்தையில் விலை குறையும் போது அதன் பலனை மக்களுக்குக் கடத்தாத மோடி அரசு, விலை உயரும் போது மட்டும் அந்தச் சுமையை உடனடியாக மக்கள் தலைமீது சுமத்துவது அநீதியாகும். மேலும், மோடி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து பெட்ரோலியப் பொருட்கள் மீதான கலால் வரியைத் தொடர்ந்து அதிகரித்து, மக்கள் மீது கடும் வரிச்சுமையைத் திணித்துக் கொள்ளையடித்து வருகிறது.
மறுபுறம், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கட்டளைக்கு அடிபணிந்து, ஈரான் மற்றும் ரஷ்யாவிடமிருந்து மலிவு விலையில் எண்ணெய் வாங்குவதை மோடி அரசு நிறுத்தியது. இந்தியா யாரிடம் எண்ணெய் வாங்க வேண்டும் என்பதை அமெரிக்கா முடிவு செய்வது நம் நாட்டிற்கு ஏற்பட்டிருக்கும் இழிநிலையாகும்.
எனவே, பாசிச மோடி அரசின் இந்த மக்கள் விரோதச் செயல்பாடுகளையும் கையாலாகாத்தனத்தையும் இனியும் நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. பெட்ரோல், டீசல் மீதான மக்கள் விரோத வரிகளை உடனடியாகத் திரும்பப் பெறு! நம் நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பை அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் அடமானம் வைக்காதே! உள்ளிட்ட முழக்கங்களை முன்வைத்து, இந்த சுரண்டலுக்கு எதிராக ஒட்டுமொத்த உழைக்கும் மக்களும் அணிதிரண்டு, போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் அறைகூவல் விடுக்கிறது!
9. டிரம்பின் கட்டளைக்கு அடிபணிந்து, பல்வேறு அடிமை ஒப்பந்தங்களில் பாசிச மோடி அரசு தொடர்ந்து கையெழுத்திட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி 6, 2026 அன்று அவசர அவசரமாக இந்தியா – அமெரிக்கா இடையே ஓர் இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட அதிகாரப்பூர்வத் தரவு அறிக்கையின் மூலம், இந்தியச் சந்தைக்குள் அமெரிக்காவின் விவசாயப் பொருட்களான பருப்பு வகைகள், சோளம் மற்றும் மரபணு மாற்றப்பட்ட மாட்டுத் தீவனங்களை எவ்விதத் தடையுமின்றி அனுமதிக்க மோடி அரசு அனுமதியளித்துள்ளது அம்பலமாகியுள்ளது.
இதேபோல், கடந்த மே 19, 2026 அன்று 428 மில்லியன் டாலர் (சுமார் ₹3,500 கோடி) மதிப்புள்ள ராணுவத் தளவாடப் பராமரிப்பு ஒப்பந்தம் இந்தியா – அமெரிக்கா இடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்திய ராணுவம் எல்லையில் பயன்படுத்தும் ”அப்பாச்சி” ரகத் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் ‘M777 ஹோவிட்சர்’ பீரங்கிகளின் தொழில்நுட்பப் பராமரிப்பு, உதிரிபாக விநியோகம் ஆகியவற்றை முழுமையாக அமெரிக்காவின் போயிங் (Boeing), லாக்ஹீட் மார்ட்டின் (Lockheed Martin) போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளில் மோடி அரசு ஒப்படைத்துள்ளது.
இவ்வாறான அடிமை ஒப்பந்தங்களின் மூலம் நம் நாட்டை தீவிரமாக மறுகாலனியாக்கிவரும் பாசிச மோடி அரசை எதிர்த்து விவசாயிகள், தொழிலாளர்கள் என உழைக்கும் மக்களை அணித்திரட்டி ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பலை வீழ்த்துவதற்கு உறுதியேற்போம்.
10. இந்திய அரசு அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்துச் சூரிய ஒளி மின்சார ஒப்பந்தங்களை முறைகேடாகக் கைப்பற்றியதாக கார்ப்பரேட் முதலாளி கௌதம் அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் தொடுக்கப்படிருந்த வழக்கிலிருந்து அதானி மற்றும் அவரது மருமக்ன் சாகர் அதானி விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த மோசடி வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவர, அமெரிக்காவில் 10 பில்லியன் டாலர் (96,000 கோடி ரூபாய்) முதலீடு செய்வது உள்ளிட்டு சில ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய திரைமறைவு இடைத்தரகுப் பேச்சுவார்த்தைகளின் மூலமே இந்தச் சரணாகதி உடன்பாடு கைக்கூடியுள்ளது., கார்ப்பரேட் கொள்ளையர்களைப் பாதுகாக்கப் பாசிச மோடி அரசு எந்த எல்லைக்கும் துணியும் என்பதும் இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது.
மேலும் அதானி குழுமம் அமெரிக்காவில் செய்ய ஒப்புக்கொண்டுள்ள இந்த 96,000 கோடி ரூபாய் முதலீடு என்பது அதானியின் சொந்தப் பணம் அல்ல, பாரத ஸ்டேட் வங்கி (SBI) மற்றும் ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) மூலம் இந்திய உழைக்கும் மக்கள் சிறுகச் சிறுகச் சேமித்த பொதுப் பணமாகும். தன் மீதான கிரிமினல் வழக்கை முடிவுக்குக் கொண்டுவர, இந்திய மக்களின் சொத்தை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கஜானாவிற்குத் தாரை வார்த்துள்ளார் அதானி.
எனவே, இந்திய மக்களின் 96,000 கோடி ரூபாய் பொதுப் பணத்தை அமெரிக்காவிற்குத் தாரை வார்ப்பதைத் தடுத்து நிறுத்தவும், ஊழல் குற்றவாளி கௌதம் அதானியைக் கைது செய்து அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் கழகம் வலியுறுத்துகிறது.
11. தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்குவங்கம், கேரளா, அசாம் ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இதில் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்கடித்து த.வெ.க ஆட்சியை பிடித்துள்ளது; கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி காங்கிரசு ஆட்சிக்கு வந்துள்ளது; மேற்கு வங்கம், அசாமில் பா.ஜ.க ஆட்சியும், புதுச்சேரியில் பா.ஜ.க-வின் என்.டி.ஏ கூட்டணியும் ஆட்சியும் அமைந்துள்ளது. இந்த வெற்றியைக் காட்டி குதுகலித்துவரும் பாசிச கும்பல் மோடி அலை மீண்டும் வந்துவிட்டதாகவும், இனி பா.ஜ.க-வை யாரும் வீழ்த்த முடியாது என்றும் கூச்சலிட்டு வருகிறது. ஆனால், கள எதார்த்தமோ வேறாக உள்ளது. பாசிச கும்பலி தோல்விமுகம் தொடர்ந்து வருகிறது. பா.ஜ.க-விற்கு எதிரான மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. பாசிச எதிர்ப்பிற்கான நம்பிக்கை கீற்றாக இப்போராட்டங்கள் விளங்குகின்றன. தேர்தல் மூலமாக மட்டுமே பாசிஸ்டுகளையும், பாசிசக் கட்சியையும், ஆட்சி அதிகாரத்தையும் வீழ்த்த முடியாது. நாடு முழுவதும் பாசிச ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி., அம்பானி – அதானி பாசிசக் கும்பலுக்கு எதிரான மக்கள் போராட்டங்களைக் கட்டியமைத்து, பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசை அமைப்பதை நோக்கி முன்னேறுவோம்.
12. மேற்கு வங்கத்தில் சுமார் 90 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்; அவர்களுள் பெரும்பான்மையானவர்கள் இசுலாமியர்கள் ஆவர். இதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று முறையீடு செய்தும் கூடப் பயனற்றுப் போனது. மேற்கு வங்கத் தேர்தலில் பி.ஜே.பி. நிர்வாகிகள் வெளிப்படையாகவே இசுலாமிய மக்களுக்கு எதிரான கடும் வெறுப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். 90 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது மற்றும் இசுலாமியருக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதித்தது எனப் பாசிசத்தின் ஏவலாளியாகச் செயல்படும் தேர்தல் ஆணையத்திற்கு மக்கள் அதிகாரக் கழகப் பொதுக்குழு தன் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. மேலும், மோசடியாக நடத்தப்பட்டுப் பாசிச பி.ஜே.பி. வென்றுள்ள இந்தத் தேர்தல் முடிவுகளை ஒருபோதும் மக்களாகிய நாம் அங்கீகரிக்கக் கூடாது என்று கழகம் தெரிவித்துக்கொள்கிறது.
13. அசாமில் எதிர்க்கட்சிகளை ஒடுக்கி, இசுலாமியர்கள் மீது கடும் வெறுப்புப் பிரச்சாரத்தைத் தூண்டி, தொகுதி மறுவரையறை மூலம் இசுலாமியர்கள் பெரும்பான்மையாக இருந்த தொகுதிகளையெல்லாம் அபகரித்துப் பாசிச நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதன் மூலம் மட்டுமே பாசிச பி.ஜே.பி. மூன்றாவது முறையாக வென்றுள்ளது. இதனை நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்., அசாமில் நடத்தப்பட்ட மோசடியான தேர்தலுக்கு எதிராகப் போராடும் மக்களுக்கு மக்கள் அதிகாரக் கழகப் பொதுக்குழு தன் ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.
14. உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டா தொழில்துறைப் பகுதியில் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை முன்வைத்து, கடந்த ஏப்ரல் மாதம் தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, போலீசை ஏவித் தொழிலாளர்கள் மீது கடுமையான ஒடுக்குமுறைகளை செலுத்தியது யோகி ஆதித்யநாத் அரசு. மேலும், இப்போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கைது செய்தது. போராட்டத்தை ஒருங்கிணைத்த போராட்டக் குழுத் தலைவர் ஆதித்யா ஆனந்த் அவர்கள் மீதும் பாசிச யோகி அரசு,தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையிலடைத்துள்ளது. பாசிச யோகி அரசின் போலீசு வெறியாட்டத்தையும், ஜனநாயக விரோதக் கைதுகளையும் மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
மேலும், ஆதித்யா ஆனந்த் மற்றும் கைது செய்யப்பட்டுள்ள தொழிலாளர்களை எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்; பொய் வழக்குகளை இரத்து செய்ய வேண்டும்; நொய்டா தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையான குறைந்தபட்ச ஊதிய உயர்வை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்;தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் புதிய நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அனைத்துத் தொழிற்சங்கங்களும், ஜனநாயகச் சக்திகளும் ஓரணியில் திரண்டு போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் அறைகூவி அழைக்கிறது!
15. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், வழக்கு விசாரணை ஒன்றில் வேலையில்லாமல் சமூக ஊடகங்கள், பத்திரிகைத்துறை மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்ட (RTI) செயல்பாடுகளில் ஈடுபடும் இளைஞர்களை கரப்பான்பூச்சிகள் என்றும், சமூகத்தின் ஒட்டுண்ணிகள்’ என்றும் மிக இழிவாக பேசினார். தலைமை நீதிபதி சூரியகாந்தின் இந்த திமிர்த்தனமான, அநாகரிகப் பேச்சை மக்கள் அதிகாரக் கழகம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
மேலும், நீதிபதியின் இப்பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஒன்று தொடங்கப்பட்டு, அதில் இலட்சக்கணக்கான இளைஞர்கள் சேர்ந்துவருகின்றனர். இது ஆட்சியிலிருக்கும் பாசிச பா.ஜ.க மீதான எதிர்ப்புணர்வையும் இக்கட்டமைப்பின் மீதான கோவத்தையும் காட்டுகிறது. எனவே, சமூக ஊடகங்களில் எதிர்ப்பு தெரிவிக்கும் இந்த இளைஞர்களை பாசிச எதிர்ப்பு என்ற கொள்கை ரீதியான பாதையில் வளர்த்தெடுக்க வேண்டிய மாபெரும் கடமையும் பணியும் நம்முன் உள்ளது என்பதை கழகம் வலியுறுத்துகிறது.
16. ஒன்றிய அரசின் “பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு” (CCEA), வரும் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள 2026-2027 அரவைப் பருவத்திற்கான கரும்பின் “நியாயமான மற்றும் லாபகரமான விலையை” (FRP) அறிவித்துள்ளது. அதன்படி, 10.25 விழுக்காடு சர்க்கரைச் சத்து (Recovery Rate) கொண்ட கரும்பின் விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ.365 (ஒரு டன்னுக்கு ரூ.3,650) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது நடப்பு ஆண்டை (2025-2026) விட ஒரு டன்னுக்கு வெறும் ரூ.100 மட்டுமே அதிகமாகும்! உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் டீசல் விலைகள் தொடர்ந்து உயர்ந்து, கரும்பு உற்பத்திச் செலவு பன்மடங்கு அதிகரித்து வரும் இக்கட்டான சூழ்நிலையில், ஒரு டன் கரும்புக்குக் குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.5,500 வழங்க வேண்டும் என விவசாயிகள் போராடி வருகின்றனர்.
ஆனால், நாடு முழுவதும் உள்ள ஐந்து கோடி கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பற்றிக் கவலைப்படாமல், அடுத்த ஆண்டிற்கான கரும்பு விலையில் ஒரு டன்னுக்கு வெறும் ரூ.100 மட்டுமே உயர்த்தி விவசாயிகளின் வயிற்றில் அடித்துள்ள பாசிச பா.ஜ.க. அரசின் இந்த வஞ்சகப் போக்கை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
இவற்றுக்கு நடுவே, உள்நாட்டுச் சந்தையில் விலையைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற போர்வையில், இந்தியாவில் இருந்து சர்க்கரை ஏற்றுமதி செய்வதற்கான தடையை வரும் 2026 செப்டம்பர் 30 வரை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உலகிலேயே இரண்டாவது பெரிய சர்க்கரை உற்பத்தியாளரான இந்தியா விதித்துள்ள இந்தத் தடையால், சர்வதேசச் சந்தையில் சர்க்கரை விலை கணிசமாக உயர்ந்தாலும், அதன் பொருளாதாரப் பலன் இந்திய விவசாயிகளுக்குக் கிடைக்காமல் மோடி அரசு திட்டமிட்டு முடக்கியுள்ளது.
எனவே, கரும்பு விவசாயிகளின் நியாயமான கோரிக்கையான ஒரு டன் கரும்பிற்கு ரூ.5,500 குறைந்தபட்ச விலையாக உடனே வழங்கிடு; விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடக்கும் சர்க்கரை ஏற்றுமதித் தடையை உடனடியாக நீக்கு; எம். எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகளை நிபந்தனையின்றி முழுமையாக அமல்படுத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, மோடி அரசின் இந்த விவசாய விரோத போக்குகளை எதிர்த்து கரும்பு விவசாயிகள், விவசாய சங்கங்கள், புரட்சிகர ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும் என கழகம் கேட்டுக் கொள்கிறது.
17. இந்தியா முழுவதும் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான கொடூரமான சாதியத் தாக்குதல்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. உத்தரப் பிரதேசத்தில், பொதுக் குழாயில் குடிநீர் குடித்தற்கான தலித் சமூகத்தைச் சேர்ந்த சிறுவன் ஆதிக்கச் சாதிவெறியர்களால் கொடூரமான கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில், வழிபாட்டு உரிமைக்காகவும், சாதிப் பஞ்சாயத்தின் கட்டுப்பாடுகளுக்கு எதிராகவும் கேள்வி எழுப்பியதற்காக ஒரு தலித் குடும்பத்தின் மீது சாதி ஆதிக்கக் கும்பல் கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வலுக்கட்டாயமாக அரை நிர்வாணமாக்கப்பட்டு, தலைமுடி வெட்டப்பட்டு ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் வெளியாகிப் பார்ப்போர் நெஞ்சை உலுக்குகிறது.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் தங்களின் திருமண ஊர்வலத்தின் போது தலித் மக்கள் குதிரை மீது ஏறிச் செல்வதைக்கூடச் சகித்துக் கொள்ள முடியாத ஆதிக்கச் சாதிவெறிக் கும்பல், அவர்கள் மீது தொடர் வன்முறைத் தாக்குதல்களை நடத்துவது தொடர்கதையாக மாறியுள்ளது.
இத்தகையச் சாதியத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த வேண்டுமெனில், சாதிய வன்கொடுமைகளையும் மதவெறியையும் திட்டமிட்டுத் தூண்டுகின்ற ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிசக் கும்பலை உடனடியாகத் தடை செய்ய வேண்டும்! மக்களிடையே பிறப்பின் அடிப்படையில் பிரிவினையை உண்டாக்கி, உழைப்பவர்களை அடிமைகளாக வைத்திருக்கத் துடிக்கும் பார்ப்பனிய ஆதிக்கச் சிந்தனை சமூகத்திலிருந்து முற்றிலும் வேரறுக்கப்பட வேண்டும் என கழகம் வலியுறுத்துகிறது.
18. நாடு முழுவதும் கடந்த மே 3-ஆம் தேதி நடத்தப்பட்ட இளநிலை நீட் தேர்வை, வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் காரணமாகத் தேசிய தேர்வு முகமை (NTA) இரத்து செய்துள்ளது. நீட் தேர்வில் தொடர்ச்சியாக வினாத்தாள் கசிவு, மதிப்பெண் முறைகேடுகள் உள்ளிட்ட பல்வேறு மோசடிகள் அரங்கேறி வருகின்றன. ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவைப் பறிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு என்பது, அப்பட்டமான கார்ப்பரேட் கொள்ளைக்கானது என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி வருகிறது. இதற்கெதிரான மாணவர்களின் போராட்டமும் தீவிரமடைந்து வருகிறது. தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும்; ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நாடுமுழுவதும் மானவர்கள் நடத்திவரும் போரட்டத்திற்கு மக்கள் அதிகாரக் கழகம் ஆதரவு தெரிவிக்கிறது. இப்போராட்டத்தை நீட் தேர்வை ரத்து செய்வதற்கான போரட்டமாக வளர்த்தெடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.
19. மத்தியப் பிரதேச மாநிலம், தார் நகரில் உள்ள போஜ்சாலா வளாகத்தை ”சரஸ்வதி தேவி கோயில்” தான் என்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள அநீதியானத் தீர்ப்பை மக்கள் அதிகாரக் கழகம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. பாதிக்கப்பட்ட இஸ்லாமியத் தரப்பினர் இத்தீர்ப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.
அயோத்தி பாபர் மசூதி இடிப்பு மற்றும் தீர்ப்பிற்குப் பிறகு, திட்டமிட்ட முறையில் அடுத்தடுத்து மசூதி-கோயில் சர்ச்சைகளைக் கிளப்பி, தங்களுக்குச் சாதகமான ஆர்.எஸ்.எஸ் சிந்தாந்தப் பின்புலம் கொண்ட நீதிபதிகளைக் கொண்டு இத்தகையத் தீர்ப்புகளைக் காவிக் கும்பல் பெற்று வருகிறது. நாட்டை இந்து ராஷ்டிரமாக மாற்றத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் கும்பல், அதற்கான முதன்மைக் கருவியாக இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலங்களைத் திட்டமிட்டுத் தாக்கி வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் மட்டும் இதே போன்று 299 புதிய புகார்களைக் கிளப்பி மதக் கலவரங்களை உருவாக்க முயற்சித்து வருகிறது.
வாராணசி ஞயானவாபி மசூதி, மதுரா ஷாகி ஈத்கா மசூதி எனத் தொடங்கி, இந்தியா முழுவதும் சுமார் 1,800 இடங்களில் மசூதி-கோயில் சர்ச்சைகளை ஆர்.எஸ்.எஸ் கும்பல் வேண்டுமென்றே பரப்பி வருகிறது. காவிக் கும்பலின் இந்த உழைக்கும் மக்கள் விரோத, மதவெறிப் பிரிவினைவாதச் சதிகளுக்கு எதிராக ஜனநாயக அமைப்புகளும், முற்போக்குச் சக்திகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என கழகம் வலியுறுத்துகிறது.
20. ஒடிசா மாநிலம், சிஜிமாலி பழங்குடியினக் கிராமங்களில் வேதாந்தா நிறுவனத்தின் பாக்சைட் சுரங்கத்திற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை எதிர்த்துக் கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களை ஒடுக்குவதற்குப் போலீஸ் தடியடி, துப்பாக்கிச்சூடு போன்ற கொடூரமான அடக்குமுறைகளை ஏவி வருகிறது. ஒடிசா போலீசின் இந்நடவடிக்கையைக் கழகம் வன்மையாகக் கண்டிப்பதுடன், வேதாந்தாவின் பாக்சைட் சுரங்கத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்துகிறது.
21. மணிப்பூரில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க., பாசிச கும்பல் இனக் கலவரத்தை கட்டவிழ்த்துவிட்டு மூன்றாண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இன்றுவரை அங்கு அமைதி திரும்ப வில்லை. சமீபத்தில் குக்கி இனத்தைச் சேர்ந்த மூன்று கிறித்தவ மதத் தேவாலயத் தலைவர்கள் நாகா கிளர்ச்சிக் குழுக்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த மே 13-ஆம் தேதி நடந்த இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம், மணிப்பூரில் மீண்டும் இனக்கலவரத்தை வேகம் எடுக்க வைத்துள்ளது. குக்கி மக்கள் மீதான இத்தாக்குதலைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. மணிப்பூரின் மலைவளங்களையும் இயற்கை வளங்களையும் கொள்ளையடிக்கக் காத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. – அம்பானி – அதானி பாசிசக் கும்பலின் சதிவேலைகள்தான் மணிப்பூரில் தொடர்ந்து நடைபெற்று வரும் கலவரத்திற்கு அடிப்படையாக உள்ளன. ஆகவே, மணிப்பூர் கலவரத்தைத் தடுத்து நிறுத்த வக்கற்ற மோடி அரசினை எதிர்த்து, நாடு முழுவதும் உழைக்கும் மக்களும் ஜனநாயகச் சக்திகளும் குரலெழுப்பிப் போராட வேண்டிய தேவையைக் கழகம் வலியுறுத்துகிறது.
22. மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் 2006-இல் மசூதி மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 37 இசுலாமியர்கள் கொல்லப்பட்டனர். இக்குண்டுவெடிப்பில் சங்பரிவார் கும்பலைச் சேர்ந்த 4 பேர் குற்றவாளிகள் என உறுதியான பின்பும், தற்போதைய தேசிய புலனாய்வு முகமை (NIA) ஆதாரங்களைச் சமர்ப்பிக்காமலும் சாட்சிகளைக் கொண்டு வந்து நிறுத்தாமலும் அக்குற்றவாளிகள் நான்கு பேரையும் விடுதலை அடைய வைத்துள்ளது. இது, தேசிய புலனாய்வு முகமை போன்ற அமைப்புகள் இந்து மதவெறிப் பாசிச அமைப்புகளின் ஏவலாளர்களாக மாறியுள்ளதைக் காட்டுகிறது. இதனைத் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. மக்களுக்கு எதிராக மாறியுள்ள தேசிய புலனாய்வு முகமை போன்ற பாசிச நிறுவனங்களைக் கலைக்க வேண்டும் எனக் கழகம் வலியுறுத்துகிறது.
23. பா.ஜ.க. ஆளும் உத்தராகண்ட் மாநிலத்தைத் தொடர்ந்து, தற்போது குஜராத் மாநிலத்திலும் அவசர அவசரமாகக் கொண்டுவரப்பட்டிருக்கும் ”பொது சிவில் சட்டம்” (Uniform Civil Code – UCC) என்பது அப்பட்டமான உழைக்கும் மக்கள் விரோதச் செயலாகும். இச்சட்டம் மக்களின் சிவில் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகக் கொண்டுவரப்படவில்லை; மாறாக, இசுலாமிய, கிறித்தவச் சிறுபான்மை மக்களின் தனிநபர் சட்டங்களை (Personal Laws) அடியோடு ஒழித்துக் கட்டி, அவர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக மாற்றுவதற்கே ஆகும். குஜராத்தில் உள்ள பல லட்சக்கணக்கான பூர்வகுடிப் பழங்குடியின மக்களின் பாரம்பரியப் பண்பாட்டு நடைமுறைகளையும், அவர்களின் தனித்துவமானச் சமூகச் சட்டங்களையும் இச்சட்டம் முற்றிலுமாகச் சிதைக்கிறது. மக்களைத் துண்டாடி மதவெறியை வளர்க்கும் நோக்கில் குஜராத் பா.ஜ.க அரசால் கொண்டுவரப்பட்டிருக்கும் பொது சிவில் சட்டத்த உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என கழகம் வலியுறுத்துகிறது.
000
24. பார்ப்பனிய எதிர்ப்பு மரபையும் பாசிச பா.ஜ.க எதிர்ப்பு அரசியலையும் தன்னகத்தே கொண்டுள்ள தமிழ்நாடு, நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் பாசிச பா.ஜ.க-வை மீண்டும் தோற்கடித்துள்ளது. கடந்த முறை நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் வென்ற பாசிச பா.ஜக., இந்த முறை ஒரே ஓர் இடத்தில் மட்டுமே வென்றுள்ளது. பாசிச பா.ஜ.க-விற்கு எதிராக மக்கள் அதிகாரக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தமிழ்நாடு முழுவதும் மேற்கொண்ட பரப்புரை வெற்றி பெற்றுள்ளது என்பதை கழகம் தெரிவித்துக்கொள்கிறது.
25. தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தலில் விஜய் வென்று தமிழ்நாட்டின் முதல்வராகவும் ஆகியுள்ளார். தமிழ்நாட்டில் சுமார் 59 ஆண்டுகளுக்குப் பிறகு திராவிடக் கட்சிகள் இல்லாத ஒரு கட்சி ஆட்சி அமைத்திருப்பது என்பது குறிப்பிடத்தக்கதாகும். தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக, அதாவது 108 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது; எனினும், சட்டமன்றத்தில் தேவையான தனிப் பெரும்பான்மையான 118 இடங்களைப் பெற முடியவில்லை. சட்டமன்றத்தில் தனிப்பெரும் இடங்களைப் பெற்றுள்ள கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பதுதான் சரியானது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளதைச் சிறிதும் மதிக்காமல், தமிழ்நாட்டின் ஆளுநர் பாசிச பி.ஜே.பி.யின் ஊதுகுழலாகச் செயல்பட்டுள்ளார். இதற்கு எதிராக மக்கள் அதிகாரக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன என்ற போதிலும் கூட விஜய் அமைதி காத்தார். அனைத்துக் கட்சிகளின் எதிர்ப்பு காரணமாகவே ஆளுநர், விஜய்யை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். கொள்கை கோட்பாடற்ற, அறமற்ற கட்சியான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் இருப்பதைப் பாசிச பா.ஜ.க. பயன்படுத்திக்கொண்டு, தனது பாசிசத் திட்டங்களை நடைமுறைப்படுத்தப் பல்வேறு சதித்தனங்களையும் பின்பற்றுவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன. தமிழ்நாட்டு மக்கள் பாசிச பா.ஜ.க.வுக்கு எதிராகவே வாக்களித்துள்ளனர். எனவே, தமிழ்நாட்டு முதல்வர் விஜய், பாசிச பா.ஜ.க-வின் நடவடிக்கைகளுக்கு அடிபணியக் கூடாது என்றும், மக்களுக்குத் துரோகம் இழைக்கக் கூடாது என்றும் மக்கள் அதிகாரக் கழகப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.
26. மதுரை திருப்பரங்குன்றத்தில் மதக்கலவரத்தைத் தூண்டுவதற்காக சிக்கந்தர் தர்காவில், பல தலைமுறைகளாகப் பாரம்பரியமாக நடந்து வந்த ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தும் வழிபாட்டு முறையை சங்கிக் கும்பல் அதிகார வர்க்கத்தின் துணையுடன் தடுத்து நிறுத்தியது. மேலும், தர்கா நிர்வாகம் தங்களின் சொந்தக் கட்டிடங்களையும், தர்காவிற்குச் செல்லும் பாதையையும் புனரமைக்கும் மராமத்துப் பணிகளைச் செய்யவிடாமல் தொடர்ந்து முட்டுக்கட்டைப் போடப்பட்டு வருகிறது. கலவர நோக்கத்தில் இச்சதித்திட்டத்தை அரங்கேற்றிவரும் சங்கி கும்பல் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழர்களின் பண்பாடான ஆடு, கோழி பலியிடும் உரிமை நிலை நாட்டப்பட வேண்டும்; மதுரையின் மதநல்லிணக்க மரபு பாதுகாக்கபட வேண்டும்; கலவரத்தைத் தூண்டும் இந்துமுன்னணி, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க உள்ளிட்ட சங்கப் பரிவாரக் கும்பல் தடை செய்யப்பட்ட வேண்டும் என கழகம் வலியுறுத்துகிறது.
27. தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள், மாஃபியாக்கள், பன்னாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்களால் ஒன்றிய-மாநில அரசுகளின் ஆசியோடு அப்பட்டமாகச் சூறையாடப்பட்டு வருகின்றன. காவிரி, பாலாறு, தென்பெண்ணையாறு, தாமிரபரணி உள்ளிட்ட முதன்மை ஆற்றுப் படுகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி 30 முதல் 40 அடி ஆழம் வரை சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் நூற்றுக்கணக்கான அடிகள் பாதாளத்திற்குச் சென்றுள்ளது. 2026-ஆம் ஆண்டின் தற்போதையத் தரவுகளின்படி, தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் நிலத்தடி நீர் உவர்ப்புத் தன்மையாக மாறி, லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் சாகுபடித் திறனை இழந்து கருகி வருகின்றன.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, மற்றும் கோவை மாவட்ட எல்லைகளில் இருந்து தினந்தோறும் 3,500-க்கும் மேற்பட்ட மாபெரும் கனரக லாரிகளில் எவ்விதச் சட்டபூர்வ அனுமதியுமின்றி கபிலா பாறைகள், நீலக்கற்கள் மற்றும் செம்மண் ஆகியவை கேரளா நோக்கிக் கடத்தப்படுகின்றன.
இந்த கனிமவளச் சுரண்டலுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் மக்கள் போராடி வருகின்றனர். மறுபுறம் ஒன்றிய, மாநில அரசுகள் கார்ப்பரேட் சேவையை மையப்படுத்தி பல்வேறு நாசகரத் திட்டங்களை தமிநாட்டில் நடைமுறைப்படுத்த துடிக்கின்றன. கன்னியாகுமரி அணுக்கனிமச் சுரங்கத் திட்டம், தூத்துக்குடியில் ரூ.40,000 கோடியில் அமையவுள்ள புதிய பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளத் திட்டம், மதுரை மேலூரில் டங்ஸ்டன் கனிமம் எடுப்பதற்கானத் திட்டம், அதானி காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத் திட்டம், டெல்டாவை அழிக்கும் நிலக்கரி மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டங்கள்; பரந்தூர் விமான நிலையத் திட்டம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் நீர், நில வளத்தை உறிஞ்சும் கார்ப்பரேட் திட்டங்கள் உடனடியாக முழுமையாக இரத்து செய்யப்ப வேண்டும் என கழகம் வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டின் வளங்களை பாதுக்காக்க போராடும் மக்களுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைந்து குரலெழுப்ப வேண்டும் என கழகம் கேட்டுக்கொள்கிறது.
28. ஆயுஷ் மருத்துவ மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் ”நெக்ஸ்ட்” தேர்வை (தேசிய உரிமத் தேர்வை) உடனடியாக இரத்து செய்ய வேண்டும். சித்த மருத்துவ முறையின் தனித்துவத்தைப் பாதுகாக்கவும், அதன் உலகளாவிய வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிகளை மேம்படுத்தவும் தமிழ்நாட்டிற்கெனத் தனியாகச் சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்தை மாநில அரசு உருவாக்கி, செயல்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்.
சித்த மருத்துவப் பட்ட மேற்படிப்பில் புதிய துறைகள் உருவாக்கப்படும் போது, குறைவான இடங்களே ஒதுக்கப்படுவதால் தமிழகத்தின் 69 சதவிகித இடஒதுக்கீட்டுக் கொள்கையை முழுமையாக அமல்படுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. இதனால் பட்டியல் மற்றும் பழங்குடியின மாணவர்களின் உயர்கல்விக் கனவு பறிக்கப்படுகிறது. எனவே, இடஒதுக்கீட்டுப் பலன்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் மாணவர் சேர்க்கை இடங்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்த வேண்டும். ‘Electives’ என்னும் இணையவழிப் பாடமுறைக் கட்டாயமாகத் திணிக்கப்படுவதோடு, அதற்கு ஒரு கல்வியாண்டுக்கு ரூ.1,500 மற்றும் GST ரூ.275 என மொத்தம் ரூ.1,775 வலுக்கட்டாயமாக வசூலிக்கப்படுவதைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். இந்த இணையவழிப் பாடமுறையை மாணவர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்க வேண்டும்; இல்லையெனில், இத்திட்டத்தை உடனடியாகப் பாடத்திட்டத்திலிருந்து நீக்க வேண்டும்.
சித்த மருத்துவர்களுக்கு போதுமான வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். சித்த மருத்துவம் படித்தவர்களுக்கு வழங்கவேண்டிய அரசு வேலைவாய்ப்புக்கள், இயற்கை & யோக மருத்துவம் (BNYS) படித்தவர்களுக்கு வழங்கப்படுகிறது, இதனை தடுக்க வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சித்த மருத்துவப் பிரிவு உருவாக்கப்பட வேண்டும். அதற்கான அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
பாளையங்கோட்டை அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி மாணவியர் விடுதியில் மின்கட்டணம் என்னும் பெயரில் ஆண்டுக்கு சுமார் ரூ.8,000 முதல் ரூ.10,000 வரை ஒரு மாணவிகளிடம் வசூலிக்கப்படுகிறது. இந்த மின்கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும் என கழகம் கேட்டுக்கொள்கிறது.
29. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடச் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும். ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைச் சுட்டுக்கொன்ற போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரைத்த போதிலும், இதுவரை அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடர்புடைய போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது உடனடியாகக் கைது நடவடிக்கையை மேற்கொண்டு, அவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும்.
மேலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்களைச் சுட்டுக்கொன்ற வழக்கில் அப்போதைய முதலமைச்சர், காவல்துறைத் தலைவர் (DGP), தலைமைச் செயலாளர் உள்ளிட்டோரின் பங்கு குறித்து முழுமையாக விசாரித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு, போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட தியாகிகளுக்குத் தூத்துக்குடியில் நினைவிடம் அமைக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை மக்கள் அதிகாரக் கழகப் பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
30. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சஞ்சய் என்ற இளைஞர் கடந்த 17.5.2026 அன்று ஆணவ படுகொலை செய்யப்பட்டார். கவின், சிவமதி உள்ளிட்டோர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டவர்களின் மரணங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. உடனடியாக ஆணவப் படுகொலைகளைத் தடுக்கச் சிறப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும். ஆணவ படுகொலைக்கு காரணமானவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். ஆதிக்கச் சாதிவெறி சங்கங்களையும், ஆர்.எஸ்.எஸ் – பா..ஜ.க. பாசிச கும்பலையும் தடை செய்ய வேண்டும்
காதலிக்கவும் மணமுடிக்கவும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அனைத்து விதமான உரிமைகளும் நிலைநாட்டப்பட வேண்டும். சாதி, மத மறுப்புத் திருமணங்களை அரசே முன்நின்று நடத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை மக்கள் அதிகாரக் கழகப் பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
சாதி மத மறுப்பு திருமணங்களை மேற்கொள்வோருக்கு அரசு பாதுகாப்பு அளித்து அவர்களுக்கு உரிய சலுகைகள் வழங்க வேண்டும் என்றும் சாதி மதமற்றோர் என்று பதிவு செய்து கொள்வதற்கு உரிய வழிவகைகள் செய்து சாதி மதமற்றோருக்கென்று தனியாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் சாதி மத மறுப்பு திருமணங்களுக்கு எதிரான அனைத்து வகையான கலை, பண்பாடு நிகழ்வுகள் படங்கள் நாடகங்கள் மற்றும் அமைப்புகள் என அனைத்தும் தடை செய்யப்பட வேண்டும் என்றும் மக்கள் அதிகார கழகப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
31. டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்பது தமிழ்நாட்டு மக்களின் மிக முக்கியமான கோரிக்கையாகும். எனவே, டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து வகையான போதைப்பொருட்களையும் முழுமையாகத் தடை செய்ய வேண்டும்.
பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பெண்கல்வி, பெண் சுதந்திரத்தை மறுக்கும் மற்றும் பெண்களைப் போகப்பொருளாக்கும் ஆபாச இணையதளங்கள், சமூக ஊடகப் பக்கங்கள், ஆபாச இலக்கியங்கள், புராண இதிகாசங்கள், திரைப்படங்கள், விளம்பரங்கள் போன்றவை பெண்கள் மீதான வன்முறைகளை அதிகரிக்கின்றன. ஆகையால், இவை அனைத்தும் உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டும். பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கத் தவறும் அல்லது நடவடிக்கை எடுக்க மறுக்கும் போலீஸ் அதிகாரிகளைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.
அரசுப் பணிகளுக்குத் தேர்வு செய்யப்படும் ஊழியர்கள், மக்கள் தொண்டு செய்தவர்களாகவும் பாலியல் ஒழுக்கம் மிக்கவர்களாகவும் இருப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகப் பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது. இக்கோரிக்கைகளுக்காகப் புரட்சிகர, ஜனநாயகச் சக்திகளும் தமிழ்நாட்டு மக்களும் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்பர் என்றும் மக்கள் அதிகாரக் கழகப் பொதுக்குழு தெரிவித்துக்கொள்கிறது.
32. வரலாற்றுக் காலத்திற்கு முன்பிருந்து இன்றுவரை இயங்கிவரும் தமிழ்நாட்டின் தொன்மையான மதுரை மண்டலத்தைத் ‘தமிழ்ப் பண்பாட்டின் தலைநகராக’ அறிவித்துப் பாதுகாக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகப் பொதுக்குழு தெரிவித்துக்கொள்கிறது.
இயற்கைச் சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்கான மக்கள் கூட்டமைப்புகளை அனைத்துப் பகுதிகளிலும் கட்டியமைக்க வேண்டும். அதன் மூலமாக, நமது நிலத்தையும் இயற்கையையும் பண்பாட்டையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனத் தமிழ்நாட்டு மக்களை மக்கள் அதிகாரக் கழகப் பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
33. மானாமதுரை இளைஞர் ஆகாஷ் லாக்அப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றம் கொலை வழக்கு மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டும், சி.பி.சி.ஐ.டி. விசாரணை என இழுத்தடித்து, இதுவரை இவ்வழக்கில் குற்றவாளிகளான 16 போலீசாரின் பெயர்கள் சேர்க்கப்படவில்லை. இதனைத் கழகம் வன்மையாகக் கண்டிப்பதுடன், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது. 70 நாட்களுக்கும் மேலாக உடலை வாங்காமல் போராடி வரும் மானாமதுரை மக்களின் போராட்டத்திற்குத் கழகம் என்றும் துணை நிற்கும்.
![]()
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





