
26.05.2026
கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை அருகே
டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்!
பத்திரிகைச் செய்தி
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே, தளி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இருதுகோட்டை கிராமத்தின் முக்கிய பேருந்து நிறுத்தம் அருகிலேயே அரசு மதுபான கடை செயல்பட்டு வந்தது.
அரசு மதுபான கடையை மூட வலியுறுத்தி, பொதுமக்கள் நேற்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலேயே அரசு மதுபானக் கடை நடத்தி வந்ததை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்த பேருந்து நிறுத்தத்தைப் பயன்படுத்தி தான் இருதுகோட்டை, சம்பந்தகோட்டா, போகசந்திரம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தினசரி பல்வேறு இடங்களுக்குச் சென்று வருகின்றனர்.
பொதுமக்களுக்கும், பெண்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் இந்த டாஸ்மாக் மதுபான கடையை உடனடியாக இங்கிருந்து அப்புறப்படுத்தி, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அந்த பகுதி கிராம மக்கள் கடந்த பல மாதங்களாகவே அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இருப்பினும், அதிகாரிகளின் தரப்பில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள், இன்று திடீரென இருதுகோட்டை டாஸ்மாக் கடை முன்பு ஒன்று திரண்டனர்.
கடையை நிரந்தரமாக மூடக்கோரி அவர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பான சூழல் நிலவியது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
பொதுமக்களின் கோரிக்கை குறித்து பரிசீலித்து, இன்னும் இரண்டு நாட்களில் உரிய தீர்வு ஏற்படுத்தப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. அதிகாரிகளின் இந்த சமாதான வாக்குறுதியை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள், தங்களது போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இருப்பினும், இரண்டு நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், மீண்டும் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என அப்பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர்.
அரசு அதிகாரிகள் இருதுகோட்டை மலைக் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையைப் பரிசீலிக்காமல் புறக்கணித்த செயல்பாடானது இம்மக்களை அவர்கள் மனிதர்களாக மதிக்கவில்லை என்பதைத்தான் உணர்த்துகிறது.
அரசு மதுபான கடையை இழுத்து மூட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை மீது மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
![]()
இவண்,
தோழர் இரஞ்சித்,
கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர்
மக்கள் அதிகாரக் கழகம்.
8754674757
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





