
26.05.2026
மேகதாது அணை விவகாரம்:
கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் திமிரை அடக்குவோம்!
கண்டன அறிக்கை
மேகதாது அணை விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேகதாது அணை கட்ட ஒப்புதல் அளிக்குமாறு கர்நாடகா அரசு வைத்திருந்த கோரிக்கையை ஏற்று திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது.
திட்ட அறிக்கை தயாராகியுள்ள இந்தச் சூழலில் மேகதாது அணை கட்டுவதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அந்த அறிக்கை ஒன்றிய பா.ஜ.க அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழ்நாட்டிற்கு எந்த விதமான உரிமையும் இல்லை என்றும் கர்நாடக மாநிலத்தின் துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
ஒரு நதியின் உரிமையானது அதன் கடைமடைப் பகுதிக்குச் சொந்தமானதாகும் என்பது இதுவரை உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதி. இதனை கர்நாடகம் ஒருபோதும் ஏற்றுக் கொண்டதும் இல்லை; மதிப்பதும் கிடையாது.
காவிரி மேலாண்மை வாரியத்தால் இதுவரை கொடுக்கப்பட்ட எந்த வழிகாட்டுதல்களையும் கர்நாடகா அரசு ஏற்றுக் கொண்டதும் நடைமுறைப்படுத்தியதும் கிடையாது. இந்திய ஒன்றியத்தில் நதிநீர் உரிமைக்காகவும் இன உரிமைக்காகவும் அதிகமாக வஞ்சிக்கப்படும் இனமாக தமிழ்த் தேசிய இனமும் தமிழ்நாடும் உள்ளது.
காவிரி நதிநீர் விவகாரத்தில் இதுவரை ஆண்டு வந்த அனைத்து ஒன்றிய அரசாங்கங்களும் (governments) தமிழ்த் தேசிய இனத்திற்கு எதிராகவே செயல்பட்டுள்ளன. குறிப்பாக மோடி அரசு பதவி ஏற்ற பிறகு கர்நாடகத்தில் குறுகிய தேசிய இனவெறியூட்டி அதன் மூலம் தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது.
கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியும் தேசிய இனவெறியை ஊட்டி அதன் மூலம் மேகதாது அணையை அடாவடியாகக் கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் கட்சியானது தமிழ் மக்களின் பக்கம் நிற்போம் என்று பசப்பு சொற்களைக் கூறிக் கொண்டிருக்கிறது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையோ அமைதியாக இனவெறி நடவடிக்கைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இராகுல் காந்தியும் மோடியும் அமைதியாக இருப்பது எதற்காக இந்த கேள்வியை நாம் எழுப்ப வேண்டும்.
மேகதாதுவில் அணை கட்டுவதை ஒருபோதும் நாம் அனுமதிக்க முடியாது. ஒருவேளை அனுமதித்தால் ஒன்றிய அரசு, கர்நாடக அரசு, காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, உச்சநீதிமன்றம் ஆகியவை இணைந்து மேகதாது அணை கட்ட அனுமதி அளித்து காவிரியில் தமிழரின் உரிமையைப் பறிப்பதற்கான தொடக்கமாக மாறிவிடும்.
ஆகவே காவிரி நதிநீர் உரிமை என்பது தமிழ்நாட்டின், தமிழ்த் தேசிய இனத்தின் உரிமையாகும். அதைக் காப்பதற்கான போராட்டங்களில் தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் உடனடியாக ஈடுபட வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
![]()
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





