27.05.2026

தாம்பரம் மாநகராட்சியில் குடிநீருக்கான கட்டண உயர்வை ரத்துசெய்!

மக்கள் அதிகாரக் கழகம் கண்டனம்!

பத்திரிகைச் செய்தி

தாம்பரம் மாநகராட்சியில் பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் முறையாகச் செய்யப்படவில்லை. இதனால், மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். ஆங்காங்கே காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் செய்து வருகின்றனர். இந்நிலையில், குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தாததுடன், பொதுமக்களிடம் எவ்வித ஆலோசனையும் நடத்தாமல், குடிநீர் கட்டணத்தை மூன்று மடங்கு உயர்த்தியது மாநகராட்சி நிர்வாகம். மக்களிடம் கடுமையான எதிர்ப்பு நிலவிய சூழலில் இந்த கட்டண உயர்வைத் திரும்பப் பெறாமல், வாய்வழியாகக் குறைத்துக் கொள்வதாக தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.

இதனால், சில வார்டுகளில் இன்னும் உயர்த்தப்பட்ட கட்டணத்தையே மாநகராட்சி நிர்வாகம் வசூலித்து வருகிறது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய மாநகராட்சி வாய்மொழியாக ஒப்புக் கொண்டிருந்தாலும், 2025 நவம்பர் 28-ஆம் தேதி வெளியிடப்பட்ட செங்கல்பட்டு மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீட்டில் இன்னும் அமலில் உள்ளது. அந்த அறிவிப்பின் மூல துணை விதி கொண்டு கட்டண உயர்வை அமல்படுத்த மாநகராட்சிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது” என்கின்றனர்.

மேலும், பல பகுதிகளில் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படும் அவலநிலை இருக்கிறது. மாநகராட்சி குடிநீரையே சார்ந்திருக்கும் சாதாரண ஏழை எளிய மக்கள் இதனால் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான, குடிநீர் விநியோகத்தை அரசு முறையாக மேற்கொள்ளாதது கிரிமினல் நடவடிக்கைக்கு ஒப்பானதாகும். தனியார்மயத்தின் விளையாகப் பெருநகரங்களில் குடிநீர் விநியோகத்தைத் தனியாருக்கு ஒப்படைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதே இந்த முறைகேடுகளுக்குக் காரணமாகும்.

தாம்பரம் மாநகராட்சியின் இத்தகைய மக்கள் விரோத போக்கை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

தாம்பரம் மாநகராட்சியே!

தாம்பரம் மாநகராட்சியில் குடிநீர் கட்டண உயர்வை ரத்து செய்! அரசிதழ் அறிவிப்பைத் திரும்பப் பெறு!

வாரத்திற்கு மூன்று நாள் குடிநீரை இலவசமாக வழங்கு!

மக்களிடம் கருத்துக் கேட்காமல் தன்னிச்சையாக குடிநீர் கட்டண உயர்வை அமல்படுத்திய மாநகராட்சி ஆணையரின் மீது நடவடிக்கை எடு!

தண்ணீரை தனியார்மயமாக்கும் நடவடிக்கையைக் கைவிடு!


இவண்,
மக்கள் அதிகாரக் கழகம்,
சென்னை மாவட்டம்.
7358482113

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க