ஆன்லைன் மருந்து விற்பனையைத் தடை செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மருந்து வணிகர்கள் சம்மேளனம் (AIOCD) மற்றும் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தினர் இணைந்து மே 20 அன்று ஒரு நாள் அடையாள கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நாடு முழுவதும் சுமார் 12.4 லட்சம் மருந்தக உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 40,000-ரத்திற்கும் மேற்பட்ட மருந்துக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இப்போராட்டத்தில் தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கத்தினர் பங்கேற்றுள்ளனர். நோயாளிகளின் நலன் கருதி மருத்துவமனைக்கு அருகிலிருந்த மருந்தகங்கள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன.
குறிப்பாக ஆன்லைன் மருந்து (e-Pharmacy) விற்பனையை முறைப்படுத்துவதற்காக ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் 2018 ஆம் ஆண்டு ஜி.எஸ்.ஆர் 817 இ (GSR 817 E) என்ற சட்ட வரைவு விதிகளை (Draft Rules) வெளியிட்டது. அது தற்போது வரை நடைமுறைப்படுத்தவும் இல்லை; திரும்பப் பெறப்படவும் இல்லை. கொரோனா பெருந்தொற்று காலத்தில், மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாத நிலையில் தற்காலிகமாக நோயாளிகளின் வீட்டிற்கு அருகில் உள்ள பதிவு செய்யப்பட்ட சில்லறை மருந்தகங்கள் ஆன்லைன் மூலம் மருந்து சீட்டைப் பெற்று அவர்களின் வீட்டிற்கே டெலிவரி செய்யலாம் என்ற ஜி.எஸ்.ஆர் 220 இ GSR 220(E) அரசாணையை ஒன்றிய அரசு வெளியிட்டது.
இரண்டு அரசாணைகளில் உள்ள சட்ட ஓட்டையினை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஆன்லைன் நிறுவனங்கள் (e-Pharmacies) செயலிகள் மற்றும் மற்றும் இணையதளங்கள் மூலம் ஆர்டர்களைப் பெற்று மருந்துகளை விற்பனை செய்ய ஆரம்பித்தன. ஆனால் கொரோனா காலம் முடிந்த பிறகும் ஆன்லைன் மூலம் மருந்துகள் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மருந்தகங்களைப் போன்று ஆன்லைன் நிறுவனங்களுக்கும் சட்ட அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
சட்டப்படி மருந்துக் கடைகளில் மருந்தாளுநர் மருந்து சீட்டை சரிபார்த்து தேவையான மருந்தினை வழங்குவார். ஆனால் ஆன்லைனில் மருந்து சீட்டுகள் யாராலும் சரிபார்க்கப்படுவதில்லை. இதன் மூலம் மருந்துகளைப் பெறுவதற்காகவே சிலர் போலி மருந்து சீட்டுகளை உருவாக்கி வருகின்றனர். இதனால் கட்டுப்படுத்தி வைக்கக்கூடிய தூக்க மாத்திரைகள், ஆண்டிபயாடிக் (Antibiotics), வலி நிவாரணிகள் போன்ற போதை மருந்துகள் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு எளிதாகக் கிடைக்கின்றன. இவை மாணவர்கள், இளைஞர்களைச் சீரழிக்கின்றன. மேலும் ஆன்லைன் வர்த்தகம் மூலம் போலியான, தரமற்ற, உயிருக்கு ஆபத்தான மருந்துகள் சர்வசாதாரணமாக விற்கப்படுகின்றன. இதனால் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, புற்றுநோய், இதய நோய் போன்ற உயிர்காக்கும் மருந்துகளைத் தரமற்ற முறையில், காலாவதியான மருந்துகளை விற்று மக்கள் உயிரோடு விளையாடும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
வெளிநாட்டு நிதியுதவி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஆன்லைன் மருந்தகங்கள், அதிகப்படியான தள்ளுபடிகளை (Deep Discounting) வழங்குகின்றன. இதனால் இந்தியாவில் உள்ள சுமார் 12.4 லட்சம் சிறு மற்றும் உரிமம் பெற்ற சில்லறை மருந்து வணிகர்கள், ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் என 40 லட்சம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
ஆன்லைன் விநியோகச் சங்கிலியில் மருந்துகளின் தரம், குறிப்பாகக் குளிர்பதன வசதி (Cold Storage) தேவைப்படும் உயிர்காக்கும் மருந்துகள் (புற்றுநோய், நீரிழிவு மருந்துகள்) அதாவது தட்பவெப்ப நிலை மாறாமல் பாதுகாக்கப்பட வேண்டிய மருந்துகள் முறையாகப் பராமரிக்கப்படாமல் நுகர்வோருக்குச் சென்றடைவதாகச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
முக்கிய கோரிக்கைகள்:
- ஆன்லைன் (Online) மருந்து விற்பனையை முற்காலமாகத் தடை செய்ய வேண்டும்.
- கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட ஆன்லைன் மருந்து விநியோக விதிகளான GSR 220E மற்றும் GSR 817E ஆகிய அரசாணைகளை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
- பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மருந்துகள் மீது வழங்கும் அதிகப்படியான தள்ளுபடியால் (Deep Discount) சிறு கடை வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்; இதனைத் தடுத்து முறைப்படுத்த வேண்டும்.
- போலி மருந்துகள் மற்றும் தரமற்ற மருந்துகள் விற்பனையைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
- மருத்துவர்களின் முறையான பரிந்துரைச் சீட்டு (Prescription) மற்றும் மருந்தாளுநர் (Pharmacist) இல்லாமல் ஆன்லைனில் இ-பார்மசிகள் (e-Pharmacies) மூலம் மருந்துகள் விற்கப்படுவதை முற்றிலும் தடை செய்ய வேண்டும்.
- மருத்துவர்களின் கண்காணிப்பு இன்றி, இளைஞர்கள் மற்றும் பள்ளி/கல்லூரி மாணவர்களுக்குக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட வேண்டிய தூக்க மாத்திரைகள், வீரியமிக்க ஆன்டிபயாட்டிக்ஸ் மற்றும் போதை தரும் வலி நிவாரணிகள் எளிதாகச் சென்றடைவதைத் தடுக்கக் கடுமையான விதிகளைக் கொண்டு வர வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.. செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கத்தின் தலைவர் ரமேஷ், மக்கள் நலன் காக்கும் வகையிலான மருந்து வணிகர்களின் இந்த நியாயமான கோரிக்கைகளை ஏற்று, உடனடியாக ஆன்லைன் மருந்து விற்பனைக்கு ஒன்றிய அரசு நிரந்தர தடை விதிக்க வேண்டும். இல்லையெனில், அடுத்த கட்டமாக காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தை அறிவிக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.
பாசிச பா.ஜ.க ஆட்சியில் மருத்துவத்துறை கார்ப்பரேட்மயமாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் ஆன்லைன் மருந்து விற்பனைக்குத் தடை விதிக்கக் கோரி போராடுகின்ற மருந்து நிறுவனங்களின் போராட்டமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
எனவே இத்தகையப் போராட்டங்கள் மருத்துவத் துறையை கார்ப்பரேட்மயமாக்குவதற்கு எதிரான போராட்டங்களாக வளர்த்தெடுக்கப்படுவதன் மூலமே கோடிக்கணக்கான ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க முடியும்.
![]()
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











