தொடரும் தாக்குதல்கள்:
அக்டோபர் 2025-இல் போடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பயங்கரவாத இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி, அப்பாவி மக்களைக் கொன்று குவித்து வருகிறது. மே 30, சனிக்கிழமை மத்திய காசாவின் டெய்ர் அல் – பாலா பகுதியில், இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், யஃபா மருத்துவமனையின் மயக்கவியல் துறைத் தலைவர் டாக்டர் ஜமால் அபு அவுன் கொல்லப்பட்டார். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
மே 30 அன்று மட்டும், காசா பகுதி முழுவதும் பல இடங்களைக் குறிவைத்து இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. காசாவின் 70 சதவீதப் பகுதிகளை இஸ்ரேல் இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர உத்தரவிட்டுள்ளதாக பாசிஸ்ட் நெதன்யாகு இந்த வாரத் தொடக்கத்தில் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த சமீபத்திய தாக்குதல் நடைபெற்றுள்ளது.
பாலஸ்தீனிய மருத்துவ அதிகாரிகளின் கூற்றுப்படி, காசாவில் அக்டோபர் 2023 முதல் நடத்தப்பட்டு வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72,938 ஆக உயர்ந்துள்ளது. 1,72,919 பேர் காயமடைந்துள்ளனர் என பாலஸ்தீனிய மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அக்டோபர் 2025 இல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பின்பு, குறைந்தது 929 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 2,811 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து நடைபெற்று வரும் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் களத்தில் நிலவும் அபாயகரமான சூழ்நிலைகள் காரணமாக, அடையாளம் தெரியாத, அதிக எண்ணிக்கையிலானவர்கள் இடிபாடுகளுக்கு அடியிலோ அல்லது மீட்புக் குழுக்கள் அணுக முடியாத பகுதிகளிலோ சிக்கியிருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.
மேலும், நப்லஸ் பகுதிக்கு தெற்கே உள்ள மடாமா கிராமத்தின் மீது இஸ்ரேலிய சட்டவிரோத குடியேறிகள் நடத்திய தாக்குதலில் ஏழு பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்கச் சென்ற மருத்துவக் குழுவினரை இஸ்ரேலிய இராணுவம் தடுத்துள்ளது. மண் மேடுகளையும், இரும்புக் கதவுகளையும் கொண்டு அணுகு சாலைகளை மறித்து வருகிறது.
ஏப்ரல் மாதத்தில் மட்டும் சட்டவிரோத இஸ்ரேலிய குடியேறிகள் 540 தாக்குதல்களை நடத்தியுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை முழுவதும் பாலஸ்தீனர்கள் மீது, இனவெறி இஸ்ரேல் வன்முறையை நடத்தி வருகிறது. சட்டவிரோதக் குடியேறிகள், பாலஸ்தீனர்களின் விவசாய நிலங்களைச் சேதப்படுத்தியும் மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்தும் வருகின்றனர்.
இஸ்ரேலியப் படைகளும், சட்டவிரோத இஸ்ரேலிய குடியேறிகளும் அக்டோபர் 2023 முதல் இதுவரை ஏறத்தாழ 33,000 பேரை இடம்பெயரச் செய்து, கிட்டத்தட்ட 23,000 பேரைக் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.
“குயுட்ஸ் நியூஸ் நெட்வொர்க்” (Quds News Network) வெளியிட்ட சிறப்பு அறிக்கை பாலஸ்தீனியர்களின் அன்றாட வாழ்வாக கீழ்க்கண்ட நிகழ்வுகளை ஆவணப்படுத்துகிறது.
அன்றாட வாழ்வின் மகிழ்ச்சியை பறிகொடுத்தல்
குழந்தைகளுக்கு ஆடைகள் வாங்குவது, கூடாரங்களை அலங்கரிப்பது, எளிய இனிப்புகளைப் பகிர்ந்து கொள்வது போன்றவற்றின் மூலம் சில பாலஸ்தீனியக் குடும்பங்கள் ஈத் பண்டிகைப் பாரம்பரியத்தின் கூறுகளைப் பாதுகாக்க முயன்றாலும், ஈத் பண்டிகையின் உணர்வுப்பூர்வமான அடித்தளங்கள் சிதைந்துவிட்டதாகவே பலர் கூறுகின்றனர். காசா பகுதி முழுவதும், கிட்டத்தட்ட 3,00,000 குடும்பங்கள் தொடர்ந்து கூடாரங்களில் வசித்து வருகின்றனர். வறுமையும், பசியும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இஸ்ரேல் தாக்குதலால், தன் குடும்ப உறுப்பினர்களில் 17 பேரை இழந்த 22 வயதான மஹ்மூத் சுக்கர், தனது வீட்டின் இடிபாடுகளில் அமைக்கப்பட்ட ஒரு கூடாரத்தில் தனியாக ஈத் பண்டிகையைக் கழித்த நினைவுகளைத் துயரத்தோடு பகிர்கிறார். முன்பொரு ஈத் பண்டிகையின் காலையில் அவரது தாயின் புன்னகையும், விடியற்காலைத் தொழுகைக்கு முன் அவரது சகோதர, சகோதரிகளுடன் ஒன்று கூடியதும் அவரது மனதில் பசுமையாக உள்ளன. அவரது கதை காசாவின் பரந்த யதார்த்தத்தைப் பிரதிபலிக்கிறது.
ஒரு காலத்தில் ஈத் பண்டிகையின் அடையாளமாக விளங்கிய உறவினர்களுடன் பிரார்த்தனை செய்தல், தாத்தாவின் வீட்டில் ஒன்றுகூடுதல், வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்ளுதல் மற்றும் தூரத்து உறவினர்களைச் சந்தித்தல் போன்ற மரபுகள் இப்போது ஒவ்வொரு குடும்பத்திலும் இறந்தவர்களை நினைவு கூர்வதாக மாற்றப்பட்டுள்ளன.
குழந்தைகளின் அனுபவங்கள்
போரினால் வாழ்க்கை நிரந்தரமாக மாறியுள்ள குழந்தைகளின் அனுபவங்களையும் “குயுட்ஸ் நியூஸ் நெட்வொர்க்” அறிக்கை எடுத்துக் காட்டுகிறது. 2023 டிசம்பரில், இஸ்ரேலிய குண்டுவீச்சுத் தாக்குதலில், ஒன்பது வயது அப்துல் கரீம் அஜீஸ் தனது வலது காலை இழந்தான். ஓராண்டு கழித்து அவனது தந்தை இஸ்ரேலின் ஒரு தாக்குதலில் கொல்லப்பட்டார். காலை நீக்கிய பிறகான வாழ்க்கைக்குத் தன்னைத் தகவமைத்துக் கொண்டான். ஆனால், அவன் இழந்த குழந்தைப் பருவத்திற்கான ஏக்கத்தை அழிக்கவில்லை. அந்தக் குழந்தை, தன்னால் மீண்டும் ஓட முடிந்தால் நன்றாக இருக்கும் என்று தன் தாயிடம் கூறி வருகிறான். அவனது அனுபவம் ஒரு மிகப்பெரிய நெருக்கடியின் ஒரு பகுதியாகும். சமீபகால வரலாற்றில் உடல் உறுப்புகளை இழந்த குழந்தைகளின் மிகப்பெரிய மக்கள் தொகை ஒன்று காசாவில் உருவாகியுள்ளது.
இஸ்ரேல் இராணுவத்தால் சிறையிலடைக்கப்பட்டுப் பல ஆண்டுகளாக தங்களது மகன்களைக் காணாமல் தவிக்கும் பெற்றோர்கள், சிறுவனாக இருந்தபோது போரில் கொல்லப்பட்ட தங்களது குழந்தைகளின் நினைவுகளில் அன்றாடம் துயருறும் பெற்றோர்கள் என பாலஸ்தீனம் மீதான ஆக்கிரமிப்புப் போரானது அன்றாட வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் கொடிய துயரமாக மாற்றியுள்ளது.
பல குழந்தைகளுக்கு சிகிச்சை போதுமானதாக இல்லை. போரினால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாடு சென்றால்தான் காலை பாதுகாக்க முடியும் இல்லாவிட்டால் காலை இழக்க நேரிடும் என்ற நிலையில் தவித்து வரும் இமான் ஃபரஜல்லா என்ற பெண்ணின் கதையை செய்தியறிக்கை விவரிக்கிறது. ஆனால், சிகிச்சைக்கு வெளிநாடு செல்வது எளிதல்ல. இது, காயம், இடப்பெயர்வு, நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றுக்கு இடையே வாழ்வு ஊசலாடிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களின் கதை. ஈத் பண்டிகை தற்போது, மகிழ்வின் அடையாளமாக இல்லாமல், துயரங்களை நினைவு கூர்வதாக மாறியுள்ளது.
என்ன செய்யப் போகிறோம்?
அகமும், புறமுமாக நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள பாலஸ்தீனத்தின் நிலைமைகள் நம் மனதை நொறுக்குகின்றன. போர் நிறுத்தத்திற்குப் பின்பும் தொடரும் இஸ்ரேலின் இனப்படுகொலை, இதுதான் யதார்த்தம் என்று சர்வதேச சமூகத்தில் திணிக்கத் துடிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் இஸ்ரேலின் பயங்கரவாத நடவடிக்கைகள், இவர்களை எதிர்க்கத் துணியாத பாசிச மோடி அரசு உள்ளிட்ட உலகளாவிய அமெரிக்க அடிமைகள் என ஒருசேர நம் கண்முன்னே நிகழ்வுகளை எதிர்கொள்கிறோம்.
ஆனால், கழிவிரக்கத்துக்கான காலம் இதுவல்ல, “பாலஸ்தீனத்தின் மீதான இனப்படுகொலைப் போரை நிறுத்து, போர்க்குற்றவாளிகளை கூண்டிலேற்றுவோம், ஏகாதிபத்தியப் போர்களை ஒழித்துக் கட்டுவோம்” என்ற குரல் முன்னிலும் வேகமாக உலகம் முழுக்க ஓங்கி ஒலிக்க வேண்டும். ஏனென்றால், அந்தக் குரல்தான் மனித குலத்தை அழிவிலிருந்து காப்பதற்கான குரலாகும்.
![]()
அய்யனார்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











