Friday, November 7, 2025
முகப்பு பதிவு பக்கம் 47

லெபனான், காசா மீதான இஸ்ரேலின் போருக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டம் | புகைப்படக் கட்டுரை

0

லெபனான் மற்றும் காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் பயங்கரவாத படுகொலைகளுக்கு எதிராக கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதியன்று உலகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.

போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் காசா-லெபனான் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்து என்று இஸ்ரேலுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதனை ஓர் இனப்படுகொலை என்று முழங்கினர்.

2023 அக்டோபரில் இஸ்ரேல் தனது தாக்குதலை தொடங்கியதில் இருந்து 41,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்களை கொன்றுள்ளது.

பாலஸ்தீனியர்கள் பல பத்தாண்டுகளாக தங்கள் நிலத்தை இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடி வருகின்றனர். 2024 செப்டம்பர் மாத தொடக்கத்தில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து இருப்பது சட்டவிரோதமானது என்றும், விரைவில் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய சில மாதங்களுக்குப் பிறகு இந்தத் தீர்மானம் வந்தது.

படிக்க : “வினேஷ் போகத்” பாசிச கும்பலை நடுங்க வைத்த நெஞ்சுரம்

பாலஸ்தீன மற்றும் லெபனான் கொடிகளை அசைத்து நூற்றுக்கணக்கானோர் ஓடன்பிளானில் இருந்து ஸ்டாக்ஹோமில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு பேரணியாக சென்றனர்.

ஸ்வீடிஷ் கலைஞரும் ஆர்வலருமான சாமுவேல் கிர்மா இஸ்ரேலை “பயங்கரவாத நாடு” என்று அழைத்தார் மற்றும் “பெய்ரூட் மற்றும் லெபனான் மீதான பயங்கரவாத தாக்குதல்களை” தொடர்ந்து இஸ்ரேலுடனான வர்த்தகத்தை புறக்கணிக்க வலியுறுத்தினார்.

ஸ்வீடிஷ் மருத்துவர் யூனோ ஹார்ன் இஸ்ரேலின் செயல்பாடுகளை கண்டித்துள்ளார். “அவர்கள் குழந்தைகளைக் கொல்கிறார்கள்,” “இது போர் அல்ல; இது ஒரு பயங்கரவாத தாக்குதல்.” என்று கூறினார்.

லெபனானில் இஸ்ரேலிய நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு போராடும் மக்கள் கோரியிருந்த ஹெல்சின்கியிலும் இதேபோன்ற முழக்கங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பாரிஸில், இன்னசென்ட்ஸ் நீரூற்றுக்கு அருகில் கூடிய போராடும் மக்கள், “காசாவில் இனப்படுகொலையை உடனே நிறுத்த வேண்டும்” மற்றும் “இஸ்ரேலைப் புறக்கணிக்க வேண்டும்” என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

2022-இல் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்ட பாலஸ்தீனிய பத்திரிகையாளர் ஷிரீன் அபு அக்லேவின் படங்களை பலர் கேஃபியே அணிந்திருந்தனர்.

பாலஸ்தீனிய நடவடிக்கைக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட இஸ்ரேல் அரசுக்கு எதிரான இப்பேரணி லெவென்ட் மெட்ரோ நிலையத்திலிருந்து இஸ்தான்புல்லில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் வரை சென்றது. “கொலையாளி இஸ்ரேல், பாலஸ்தீனத்திலிருந்து வெளியேறு” மற்றும் “கொலையாளி இஸ்ரேல், லெபனானில் இருந்து வெளியேறு” என்று பேரணியில் கலந்துகொண்டவர்கள் முழக்கமெழுப்பினர்.

பெரிய பாலஸ்தீனக் கொடியை ஏந்தியபடி, “பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மக்கள் வெற்றி பெறுவார்கள்” என்று எழுதப்பட்ட பதாகையை ஏந்தியிருந்தனர்.

ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டதற்கு எதிராக காஷ்மீரிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இந்திய அரசை இஸ்ரேலுடனான ஆயுத ஒப்பந்தங்களை நிறுத்துமாறு முழக்கங்களை எழுப்பினர்.

***

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள விக்டோரியா மாநில நூலகத்தில் காசா மற்றும் லெபனானுக்கான பேரணியின் போது போராடும் மக்கள் அணிவகுத்துச் சென்றனர்.

***

ஆஸ்திரேலியாவின் சிட்னியின் மத்திய வணிக மாவட்டத்தில் காசா மற்றும் லெபனானில் இஸ்ரேலிய வேலைநிறுத்தங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெருக்களில் அணிவகுத்துச் சென்றனர்.

***

பிரான்சின் பாரிஸ் நகரில் காசா மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பதாகைகளை ஏந்தியவாறு மக்கள் திரண்டனர்.

***

காசா மற்றும் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிராக பிரேசிலின் சாவ் பாலோ நகரில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினர்.

***

மத்திய புனித நகரமான நஜாப்பில் லெபனானுடன் ஒற்றுமையைக் காட்டும்போது மக்கள் லெபனான் மற்றும் ஈராக் கொடிகளை எந்தி இருந்தனர்.

***

ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ்வின் மரண அறிவிப்பைத் தொடர்ந்து ஈராக்கின் பாக்தாத்தில் மக்கள் போராட்டம் நடத்தினர்.

***

லெபனானில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக தெஹ்ரானில் உள்ள பாலஸ்தீன சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர்.

***

ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் காசா மற்றும் லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு எதிராக பாலஸ்தீனிய மற்றும் லெபனான் கொடிகளை ஏந்திய போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

***

பின்லாந்தின் ஹெல்சின்கியில் லெபனான் மீது இஸ்ரேலிய தாக்குதல்களை எதிர்த்து மக்கள் ஒன்று கூடினர்.

***

ஜோர்டானின் அம்மானில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகிலுள்ள அல்-கலூட்டி மசூதிக்கு வெளியே நடந்த போராட்டத்தின்போது மக்கள் நஸ்ரல்லாவின் படங்களை எடுத்துச் செல்கின்றனர்.

***

பாகிஸ்தானின் கராச்சியில் காசா மற்றும் லெபனான் மீதான இஸ்ரேலிய போரையும், நஸ்ரல்லாவின் கொலையையும் எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தினர்.

***

நஸ்ரல்லாவின் கொலைக்கு எதிராக காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நடைபெற்ற போராட்டத்தில் மக்கள் முழக்கங்களை எழுப்பினர்.

***

சந்துரு
நன்றி: அல் ஜசீரா

“வினேஷ் போகத்” பாசிச கும்பலை நடுங்க வைத்த நெஞ்சுரம்

“எதிர்கால மல்யுத்த வீரர்களுக்காக நான் போராடுகிறேன், எனக்காக அல்ல. எனது வாழ்க்கை முடிந்தது, இது எனது கடைசி ஒலிம்பிக். நம் நாட்டில் எதிர்காலத்தில் மல்யுத்தம் விளையாட வரும் இளம் வீராங்கனைகளின் பாதுகாப்பிற்காக நான் சண்டை செய்கிறேன். அதற்காகத்தான் நான் ஜந்தர் மந்தரில் இருந்தேன், அதற்காகதான் தற்போது இங்கும் இருக்கிறேன்”, 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் அரை இறுதி போட்டியில் வென்றப் பிறகு வினேஷ் போகத் உதிர்த்த வார்த்தைகள் இவை.

இதுவரை சர்வதேச போட்டிகளில் தோல்வி அடைந்திடாத, நான்கு முறை உலக சேம்பியனான ஜப்பான் வீராங்கனை யூய் சுசாகியை தகுதி சுற்றிலும் அதேநாளில் அடுத்தடுத்து கால் இறுதி, அரை இறுதி சுற்றிலும் வென்று 50 கிலோ எடை பிரிவு மல்யுத்தத்தில் இந்தியாவின் முதல் பதக்கத்தை உறுதிசெய்து சாதனைப் படைத்தார் வினேஷ் போகத்.

இதனையடுத்து ஒட்டுமொத்த இந்திய மக்களும் வினேஷ் போகத்தை கொண்டாடத் தொடங்கினார். வினேஷ் போகத் வெற்றி பெற்ற தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களை  ஆக்கிரமித்தன.  வினேஷ் போகத் வெற்றியை “இந்தியாவிற்கு பதக்கம்” கிடைத்துள்ளது என்பதைத்தாண்டி, பா.ஜ.க. கும்பலுக்கு கிடைத்த தக்க பதிலடியாக மக்கள் கொண்டாடினர்.

படிக்க : தமிழ்நாட்டில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பனரல்லாத பெண்களின் கருவறை நுழைவுக்கனவு – நனவாகுமா?

ஏனெனில், வினேஷ் போகத் ஒலிம்பிக்கில் எதிர்த்து போட்டியிட்டது வெறுமனே மல்யுத்த வீராங்கனைகளை மட்டுமல்ல, பாசிசமயமாகியிருக்கும் இந்திய அரசுக் கட்டமைப்பையும் பாசிச பா.ஜ.க. கும்பலையும் சேர்த்துதான் என்பதை இந்திய மக்களும் அறிவர்.

கடந்தாண்டு மே மாதம் 28-ஆம் தேதி மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய பா.ஜ.க-வைச் சேர்ந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் என்ற பொறுக்கியை கைது செய்யக்கோரி புதிய நாடாளுமன்றத்தை முற்றகையிட சென்ற வினேஷ் போகத்தும் மற்ற மல்யுத்த வீரர்-வீராங்கனைகளும் தெருவில் அடித்து இழுத்துச் செல்லப்பட்டனர். அந்தக்காட்சிகள் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் கொதிப்படைய செய்தது. ஆனால், பாசிசக் கும்பல் தனது அட்டூழியங்களை தொடர்ந்துக்கொண்டே இருந்தது. இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு ஒரு பெண்ணை தலைவராக நியமிக்க வேண்டும் என்ற மல்யுத்த வீராங்கனைகளின் கோரிக்கை துளியும் மதிக்காமல் பிரிஜ் பூஷனின் கூட்டாளியான சஞ்சய் சிங்கை தலைவனாக நியமித்தது; பிரிஜ் பூஷனின் மகனுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் எம்.பி. சீட் வழங்கியது.  பிரிஜ் பூஷனை பினையில் விடுதலை செய்தது.

பாசிசக் கும்பலால் மல்யுத்த வீரர்கள் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பதிலடி கொடுப்பதற்காக, தான் பெற்ற பதக்கங்களை கங்கையில் தூக்கியெறிய முடிவெடுத்த வினேஷ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என முடிவு செய்து களமிறங்கினார். இறுதிச் சுற்றுக்கு முன்னேறி வினேஷ் போகத்திற்கு  தங்கம் உறுதி என ஒட்டுமொத்த நாடும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில்,  பா.ஜ.க. கும்பல் தனது சதித் திட்டத்தை அரங்கேற்றத் தொடங்கியது.

இறுதிச் சுற்று தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர், 50 கிலோவை விட 100 கிராம் எடை அதிகமாக உள்ளது எனக்கூறி வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஒலிம்பிக் போடிக்கான பயிற்சியின்போதே, “ எனக்கு ஊக்கமருந்து அளிக்கப்படாலாம்” என்று வினேஷ் எச்சரித்திருந்த நிலையில், மோடி கும்பல்தான் இந்த சதியை அரங்கேற்றியது என்பதை தனியாக விளக்கவேண்டியதில்லை. இந்த சதியை அறிந்த வினேஷ் போகத் இறுதிவரை தனது உடல் எடையை பல்வேறு வகைகளில் போராடினார். “அவர் இறந்துவிடக் கூடும் என்று நினைத்தேன்” என வினேஷ் போகத்தின் பயிற்சியாளர் கூறுவதிலிருந்தே வினேஷ் எவ்வளவு கடுமையாக போராடியுள்ளார் என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது.

ஆனால், மோடிக் கும்பலின் சதியால், வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதோடு, அரை இறுதி போட்டியில் வென்று அவர் உறுதி செய்திருந்த வெள்ளிப் பதக்கமும் ரத்து செய்யப்பட்டது.

படிக்க : உக்ரைனுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யும் மோடி அரசு!

ஆனால், பாசிசக் கும்பலால் வினேஷ் போகத்திடமிருந்து பதக்கத்தை மட்டும்தான் பறிக்க முடிந்தது அவருடைய நெஞ்சுரத்தையும், மக்கள் ஆதரவையும் குலைக்க முடியவில்லை. “எனது போராட்டம் முடியவில்லை, இப்போதுதான் தொடங்கியுள்ளது” என்று வினேஷ் பேசியது அவருடைய நெஞ்சுரத்தை பறைசாற்றியது. வினேஷ் போகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக ஒட்டுமொத்த மக்களும் குரல் கொடுக்கத் தொடங்கினர். “எங்கள் தங்கமே நீதான்” என வினேஷ் போகத்தை மக்கள் கொண்டாடி தீர்த்தனர். வினேஷ் போகத் இந்தியாவிற்கு திரும்பிய போது அவரை வரவேற்பதற்கு நூறுக்கணக்கான மக்கள் குவிந்தனர். வினேஷ் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அவருக்கு தங்க பதக்கம் வழங்கி கௌரவித்தனர்.

வினேஷ் போகத்திற்கு கிடைத்த ஆதரவு என்பது, அவர் ஓர் பெண் வீராங்கனை; இந்தியாவிற்கு பதக்கம் வாங்கித்தர போட்டியிடுகிறார் என்பதற்கானது மட்டுமல்ல, பா.ஜ.க. கும்பலுக்கு எதிராக நெஞ்சுரத்துடன் போராடுகிறார் என்பதற்கானது. மொத்தத்தில் இந்திய மக்களிடம் உள்ள பா.ஜ.க. எதிர்ப்பிற்கு ஓர் உரைக்கல்லாக மாறியுள்ளார் வினேஷ்.

பானு

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



அமெரிக்காவில் போயிங் விமானத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!

லகப் புகழ்பெற்ற அமெரிக்காவின் போயிங் விமான தயாரிப்பு தொழிற்சாலையில் 33 ஆயிரம் தொழிலாளர்கள் மாபெரும் வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். செப்டம்பர் 13 ஆம் தேதியில் தொடங்கிய இந்த வேலை நிறுத்தம் இப்போது மூன்றாவது வாரமாக தொடர்கிறது.

போயிங் விமான தயாரிப்பு தொழிற்சாலைகளில் ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் சியாட்டில் நகரில் உள்ள தொழிற்சாலைகளில் தான் ஏறக்குறைய பாதிப்பேர் வேலை செய்கின்றனர். இங்கு 737 மேக்ஸ் மற்றும் 767, 777 ரகத்தைச் சேர்ந்த வர்த்தக மற்றும் பயணிகள் விமானங்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை தவிர இராணுவத்துக்கான அதிவேக ஜெட் விமானங்கள், ராக்கெட்டுகள் மற்றும் விண்கலன்கள் ஆகியனவும் போயிங் தயாரிப்புகளில் அடங்கும். இவற்றை விடவும் உலகின் அதி நவீன விமானமாக் கருதப்படுகின்ற முக்கியமாக அமெரிக்க ஜனாதிபதி பயணம் செய்கின்ற ஏர்ஃபோர்ஸ் ஒன் (Air force one) விமானமும் இங்கு தான் தயாரிக்கப்படுகிறது.

போயிங் நிறுவனம் அமெரிக்காவின் மொத்த ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதேபோல் அமெரிக்காவின் பொருளாதார கட்டமைப்பிலும் முக்கிய இடத்தில் இருக்கிறது. சியாட்டிலில் நடைபெறும் இந்த வேலை நிறுத்தம் பிற பகுதிகளில் நடக்கும் மொத்த உற்பத்தியையும் கடுமையாக பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த வேலை நிறுத்தத்தினால் ஒரு நாளைக்கு 50 மில்லியன்முதல் 100 மில்லியன் டாலர் வரை (ரூ.400 முதல் 800 கோடி) நட்டம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

படிக்க : அமெரிக்காவை ஸ்தம்பிக்க வைக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் முடிந்து பத்தாண்டுகளுக்கும் மேலாக புதுப்பிக்கப்படாமலேயே பல நெருக்கடிகளை காரணம் காட்டிக்கொண்டு நிர்வாகம் தள்ளிப் போட்டு வருகிறது. இறுதியில் இந்த செப்டம்பர் முதல் வாரத்தில் இயந்திர இயக்குனர்கள் மற்றும் விண்வெளிக்கலன் தொழிலாளர்களுக்கான சர்வதேச கழகம் (international association of machinists and  aerospace workers) எனப்படும் தொழிற்சங்கமும் நிர்வாகமும் சேர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் முடிவில் இருதரப்பும் ஏற்றுக்கொண்ட புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை வெளியிட்டன. ஆனால் தொழிற்சங்கம் ஏற்றுக் கொண்டிருந்த போதிலும் கூட தொழிற்சங்கத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின்படி 95% தொழிலாளர்கள் ஒப்பந்தத்தினை நிராகரித்தனர்.

தொழிலாளர்கள் முன்வைத்த கோரிக்கைகள்

  • மூன்று ஆண்டுகளில் 40 சதவீதம் ஊதிய உயர்வு.
  • 10 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிடப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும்.
  • சியாட்டிலில் இயங்கி வரும் முக்கிய விமான அசெம்பிளி பிரிவை இடம் மாற்றி தெற்கு கரோலினாவில் உருவாக்கப்பட்டுள்ள புதிய தொழிற்சாலையுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.

ஆகிய மூன்றுமே முக்கிய கோரிக்கைகள் ஆகும்.

தெற்கு கரோலினாவில் தொடங்கப்பட்டுள்ள புதிய தொழிற்சாலையில் பெரும்பாலான தொழிலாளர்கள் கான்ட்ராக்ட் முறையில் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்களுக்கு தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. சங்கமில்லா தொழிற்சாலை(non unionised) என்ற வகையில் இயங்குகிறது. சியாட்டிலில் உள்ள முக்கிய அசம்பளி பிரிவை இங்கு மாற்றுவதை நிர்வாகத்தின் சதித்திட்டம் என்று சாடி தொழிலாளர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்.

ஆனால் நிர்வாகமும் தொழிற்சங்கமும் பேச்சுவார்த்தையின் முடிவில் அறிவித்த ஊதிய உயர்வு ஒப்பந்தம் நான்கு ஆண்டுகளில் 25% ஊதிய உயர்வு என்று கூறுகிறது. அதாவது ஒவ்வொரு ஆண்டுக்கும் 6.25% என்ற விகிதத்தில் உயர்ந்து நான்காவது ஆண்டில் 25% உயர்வை எட்டும். ஆனால் தொழிலாளர்கள் கேட்டிருப்பதோ 3 ஆண்டுகளுக்கு 40% ஊதிய உயர்வு என்பதாகும். அதாவது ஆண்டுக்கு 13.3% உயர்ந்து மூன்றாவது ஆண்டில் 40% என உயரும் என்பதாகும்.

ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது உட்பட வேறு எந்த கோரிக்கைகள் பற்றியும் ஒப்பந்தம் எந்த முடிவையும் சொல்லவில்லை. மாறாக தொழிலாளர்கள் கேட்டிறாத ஊக்க போனஸ்  உயர்த்தியிருப்பது போன்ற வேறு சில கூறப்பட்டுள்ளன.

இதனால் கோபமுற்ற தொழிலாளர்கள் இந்த ஒப்பந்தத்தை சங்கமே ஏற்றுக் கொண்டிருந்த போதிலும் ஏற்க மறுத்து விட்டனர். அதற்காக தொழிற்சங்கம் நடத்திய வாக்கெடுப்பில் 95 சதவீத தொழிலாளர்கள் ஏற்க முடியாதன வாக்களித்துள்ளனர். அடுத்து உடனடி வேலை நிறுத்தமே முடிவு என்று 96 சதவீத தொழிலாளர்கள் வாக்களித்துள்ளனர். அந்த ஒருமித்த முடிவின்படி செப்டம்பர் 13 முதல் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு இன்று வரை உறுதியுடன் நடந்து வருகிறது.

இங்கு தொழிற்சங்கம் தொழிலாளர் பிரதிநிதியாக நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டாலும் தொழிலாளர் முன்வைத்த கோரிக்கைகளையே பேச வேண்டும். ஒருவேளை கோரிக்கைகளில் மாற்றம் நேர்ந்தால் அதை மீண்டும் தொழிலாளர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி மூன்றில் இரண்டு பங்கு ஒப்புதல் பெற்றால் மட்டுமே அந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும். இல்லையெனில் மாற்று குறித்தும் அதேபோன்று பொது முடிவு எடுக்கப்படும். இந்த ஜனநாயக வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுவதாக அந்த தொடர்ச்சங்கத்தின் தலைவர் ஜான் ஹோல்டன் கூறுகிறார்.

நாங்கள் போட்ட ஒப்பந்தத்தில் ஊதிய உயர்வு குறைவு தான் என்றாலும் போயிங் நிறுவன தொழிற்சங்க வரலாற்றில் இதுவே சிறந்த ஒப்பந்தமாகும். மேலும் வேலை நிறுத்தம் செய்வதன் மூலம் இதை விட அதிகம் பெற முடியும் என்று எங்களால் உறுதி கூற முடியவில்லை என்று அவர் விளக்கம் அளித்தார். ஆயினும் தொழிலாளர்களின் முடிவுப்படியே வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்த போராட்டம் எங்களின் சுயமரியாதை பற்றியது. எங்களின் எதிர்காலத்தைப் பற்றியது. என்று போராட்டத்தில் ஊன்றி நிற்பதாக தொழிற்சங்க தலைவர் கூறியுள்ளார்.

ஆனால் நிர்வாகமோ போயிங் நிறுவனம் கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து நட்டத்தை சந்தித்து வருகிறது. இதுவரை 60 பில்லியன் டாலர் (ரூ 5 இலட்சம் கோடி) கடன் இருக்கிறது சமீப ஆண்டுகளில் நடந்த விபத்துக்கள் காரணமாக வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை இழந்திருக்கிறோம். அதை மீட்டாக வேண்டி உற்பத்தியில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டதால் உற்பத்திக் குறைவும் தாமதமும் ஏற்பட்டுள்ளது. இப்போது கைவசம் இருக்கும் ஆர்டர்கள் 5490 விமானங்கள் மட்டுமே என்று பல வகையான காரணங்களை அடுக்குகிறது.

ஆனால் தொழிலாளர்கள் இவற்றை ஏற்கவில்லை. இவர்கள் முன்வைக்கும் இதே நிலைமைகள் இருக்கின்ற நேரத்தில் நிர்வாகத்தின் அதிகாரத் தரப்பின் ஊதியத்தில் எந்த குறைவும் ஏற்படவில்லை. உதாரணமாக இப்போது புதிதாக இரண்டு மாதங்களுக்கு முன் பொறுப்பேற்று இருக்கின்ற புதிய நிறுவனத் தலைவர் கெல்லி ஓர்ட் பெர்க் (Kelly ort berg ) 45% ஊதிய உயர்வுடன் ஆண்டுக்கு 33 மில்லியன் டாலர் பெறுகிறார். அதாவது ஆண்டுச்சம்பளம் ரூ. 275 கோடி மாதச் சம்பளம் 23 கோடி ரூபாய் ஆகும்.

அதேபோல் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த விமான விபத்துகளுக்கு தார்மீக பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்த முன்னாள் நிறுவனத் தலைவர் டேவ் காலௌன்(dev calhoun) அவர்களுக்கு  நட்ட ஈடாக ஒரு ஆண்டு சம்பளத்தை அதாவது 275 கோடி ரூபாய் கொடுத்து வழியனுப்பி இருக்கிறது நிர்வாகம். ஆனால் தொழிலாளர் ஊதியம் என்பது மட்டும் தான் கைக்கும் வாய்க்கும் எட்டாததாக மாறியிருக்கிறது என்று தொழிலாளர்கள் ஆதங்கப்படுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாமல் வெறுமனே ஆண்டுக்கு 1.5% என்ற அளவில் மட்டும் ஊதியம் உயர்த்தப்பட்டு வந்திருக்கிறது.

போயிங் நிறுவனத்துக்காக தொழிலாளர்கள் கஷ்டப்பட்டு உழைத்து பில்லியன்களாக கொடுப்பதை அதிகார வர்க்கமோ தங்களுக்குள் மில்லியன்களில் பகிர்ந்து கொள்கின்றனர். தொழிலாளிக்கு கொடுக்க வேண்டும் எனும்போது மட்டும் கணக்கு வழக்குகளை முன்வைத்து கடன் என்று புலம்புகின்றனர் என்று அதிகார வர்க்கத்தைச் சாடுகின்றனர் தொழிலாளர்கள்.

இப்போது அதிநவீன தொழில்நுட்பத்துடன் போயிங் விமான உற்பத்தி தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்களின் சராசரி மாதச் சம்பளம் 8000 டாலர் மட்டுமே. அதாவது ஒரு மணிக்கு 34 டாலர்கள். இதுவும் தெற்கு கரோலினாவில் ஒரு மணிக்கு 21 டாலர் மட்டுமே தரப்படுகிறது.

வாழ்க்கைச் செலவுகள் மருத்துவ செலவுகள் அதிகரித்துவிட்டன என்கின்றனர் தொழிலாளர்கள். உதாரணமாக நாங்கள் ஆண்டுக்கு 1.5%  என்று 15% ஊதிய உயர்வு பெற்றிருக்கும் இந்த 10 ஆண்டுகளில் வீட்டின் விலை 128% உயர்ந்து இருக்கிறது என்று கூறுகின்றனர் தொழிலாளர்கள்.

ஆகையினால் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் மிகவும் உணர்வுபூர்வமாக 33 ஆயிரம் தொழிலாளர்கள் கலந்து கொண்டு வீரியம் மிகுந்த வகையில் மூன்று வாரங்களாக நடத்தப் பட்டு வருகிறது. போயிங் நிறுவன தொழிலாளர்களுக்கு ஏற்கனவே இவ்வாறு போராட்டப் பாரம்பரியம் உண்டு. மொத்தமாக நிறுவனத்தின் நலனையும் கருதித்தான் இவ்வளவு காலமாக குறைந்த ஊதியத்தில் காலம் கழித்து வந்திருக்கின்றனர்.

படிக்க : வெனிசுலா: அமெரிக்காவின் சதிகளை முறியடித்து முன்னேறும் மதுரோ ஆட்சி

ஏற்கனவே 2008 ஆம் ஆண்டில் இதே போன்றதொரு வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்து 50 நாட்கள் நடத்தி வெற்றி பெற்றிருக்கின்றனர். ஆகவே இப்பொழுது இந்தப் போராட்டத்தில் எந்த தொய்வும் இல்லாமல் தொழிலாளர்கள் முழு வர்க்க ஒற்றுமையுடன் போராடி வருகின்றனர். அமெரிக்க அரசின் ஜனாதிபதி அலுவலகம் கூட இதில் கவனம் செலுத்தி நிர்வாகத்தின் தரப்பிலும் தொழிலாளர்கள் தரப்பிலும் பிரச்சனை குறித்து நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று வெள்ளை மாளிகையின் அதிகாரி ராபின் பேட்டர்சன் (Robin patterson)அறிக்கை வெளியிட்டிருக்கின்றார்.

இதற்கிடையில் நிர்வாகம் மூன்றாம் வாரத் தொடக்கத்தில் தாமே முன்வந்து நான்காண்டுகளுக்கு 30% உயர்வு தருவதாக தன்னிச்சையாக அறிவித்திருக்கிறது. இதையும் தொழிலாளர்கள் கடுமையாக சாடி நிராகரித்திருக்கிறார்கள். இந்த தன்னிச்சையான போக்கை கண்டிப்பதாக எச்சரிக்கை விடுத்து முறையாக தொழிற்சங்கத்துடன் பேசி ஒப்பந்தம் போட வேண்டும் என்று கூறி இருக்கின்றனர்.

போயிங் விமானத் தொழிலாளர்கள் போராட்டம் வர்க்க உணர்வு கொண்டது. மிகவும் நியாயமானது. தொழிலாளி வர்க்க சுரண்டலுக்கு எதிராக நடக்கும் இந்த போராட்டத்தை உலகத் தொழிலாளி வர்க்கம் ஒற்றுமையுடன் ஆதரித்து நிற்க வேண்டும்.

சுந்தரம்
(புதிய ஜனநாயகம் அக்டோபர் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



லெபனான் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாசிச இஸ்ரேல் | மக்கள் அதிகாரம் கண்டனம்

29.09.2024

ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ருல்லா படுகொலை!
லெபனான் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாசிச இஸ்ரேல் அரசு!

கண்டன அறிக்கை

பாலஸ்தீன மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி, அவர்களை ஒழித்துக் கட்டிக் கொண்டிருக்கும் இஸ்ரேல், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இருந்த, அருகில் உள்ள சிறிய நாடான லெபனான் மீது பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. நேற்றைய தினம்(28.09.24) இஸ்ரேல் நடத்திய கடும் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ருல்லா உள்ளிட்ட பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா உள்ளிட்டு ஏகாதிபத்திய நாடுகளின் ஆதரவுடன் நடைபெற்றுவரும் இந்த தாக்குதல் போர் அல்ல; மாறாக பயங்கரவாத நடவடிக்கையே.

படிக்க : காசா: தஞ்சமடைந்த பள்ளியில் தாக்குதல் நடத்திய கொலைகார இஸ்ரேல்! | படக்கட்டுரை

நேற்றைய தினம்(28.09.24) ஐநா மன்றத்தில் பேசிய இஸ்ரேலின் பாசிச பிரதமர் நெதன்யாகு, ஈரானின் எந்த ஒரு பகுதியையும் எங்களால் அழிக்க முடியும் என்று கொக்கரித்துள்ளார் .இதற்கு ஐநா சபை எந்தவித கண்டனமும் தெரிவிக்கவில்லை. மாறாக இருவரும் போரை நிறுத்துங்கள் என்று சப்பை கட்டு கட்டி உள்ளது.

உலக நாடுகளின் உதவியோடு, ஆயுதங்களோடு தன்னை பாதுகாத்துக் கொண்டு லெபனான் மீது திட்டமிட்டு நடத்தப்படும் இந்த பயங்கரவாத நடவடிக்கை என்பது பாசிச இஸ்ரேலின் விரிவாக்கத்திற்கானதாகவே அமைகிறது .இஸ்லாமிய நாடுகளை கூறு போட்டு, பிளவுபடுத்தும் ஏகாதிபத்திய அமெரிக்காவுக்கு எதிராக அந்தந்த நாடுகளில் மிகப்பெரிய போராட்டங்கள் வெடித்து வருகின்றன. இதன் விளைவாக பல இஸ்லாமிய நாடுகளும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான கருத்தை தெரிவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. நெதன்யாகுவின் பயங்கரவாத நடவடிக்கைக்கு எதிராக இஸ்ரேலில் மக்கள் மாபெரும் போராட்டங்களை கட்டி எழுப்புகின்றனர்.

அமெரிக்கா உள்ளிட்டு ஏகாதிபத்திய நாடுகளின் பங்களிப்போடு லெபனான் என்ற சின்னஞ்சிறு நாட்டை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்ததாக ஈரானையும் ஒழித்துக் கட்டி விடுவோம் என்று சவால் விடுகிறார்கள்.

உக்ரைன் மீது படையெடுத்த ரஷ்யாவுக்கு ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள தடை, சர்வதேச விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளவும் தடை. ரஷ்யாவின் அதிபர் புடின் மீது கைது பிடியாணை பிறப்பித்துள்ளது சர்வதேச நீதிமன்றம். ஆனால், இஸ்ரேலின் அதிபர் ஈரானை ஒழித்துக் கட்டி விடுவோம் என்று ஐநா சபையில் பேசுகிறார்.

படிக்க : லெபனான்: 500 பேரை படுகொலை செய்த போர்வெறி பிடித்த இஸ்ரேல்!

பாலஸ்தீன மக்கள் மீது இன அழிப்பை நடத்தி அருகில் உள்ள நாடுகளையும் ஒழித்துக்கட்ட கடும் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இஸ்ரேலை உலக நாடுகள், ஐநா மன்றம் அங்கீகரித்து இருப்பது என்பதே இஸ்ரேல் தற்பொழுது மேற்கொண்டு வரும் பயங்கரவாத நடவடிக்கைக்கு ஆதரவானதுதான்.

தங்கள் உயிர் இழந்தாலும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இருப்போம் என்று போராடும் லெபனான், ஏமன் உள்ளிட்ட நாட்டு மக்களின் போராட்டங்களை ஆதரிப்போம்!

பாசிச இஸ்ரேல் மற்றும் பாசிச அமெரிக்காவுக்கு எதிரான போராட்டங்களை உலகம் முழுவதும் கட்டி எழுப்புவோம்!


தோழமையுடன்,
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு-புதுவை.
தொடர்புக்கு: 99623 66321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



காசா: தஞ்சமடைந்த பள்ளியில் தாக்குதல் நடத்திய கொலைகார இஸ்ரேல்! | படக்கட்டுரை

0

காசாவில் இஸ்ரேல் இராணுவம் அப்பாவி பாலஸ்தீன மக்களை நரவேட்டையாடி வருகிறது. எஞ்சியிருக்கும் பாலஸ்தீன மக்கள் செய்வதறியாது இடம்பெயர்ந்து வருகிறார்கள். பாதுகாப்பான இடம் என்று கூறப்படும் பகுதிகளில் தஞ்சமடைந்துள்ளார்கள். அப்படி வடக்கு காசாவில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் தஞ்சமடைந்திருந்த ஓர் பள்ளி மீது இஸ்ரேல் இராணுவம் செப்.26 அன்று வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.

ஹமாஸ் போராளிகள் இருக்கிறார்கள் என்ற சந்தேகத்தின் பெயரிலேயே ஜபாலியா அகதிகள் முகாமில் உள்ள பள்ளியைத் தாக்கினோம் என்று இஸ்ரேல் இராணுவம் திமிராகக் கூறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36ஆக உயர்ந்துள்ளது. ஒரு காணொளி, ஹஃப்சா அல்-ஃபலுஜா பள்ளி இடிபாடுகள் மத்தியில் மீட்புப் பணியாளர்கள் உயிரிழந்தவர்களின் சடங்களை எடுத்துச்செல்வதைக் காட்டுகிறது. மற்றுமொரு காணொளி, சிதைந்த உடல்கள், துண்டிக்கப்பட்ட உடல் பாகங்கள் பிளாஸ்டிக் தாளில் போர்த்தி, உடல் பாகங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதைக் காட்டுகிறது.

ஹமாஸ் படையின் “கட்டளை மையங்கள்” என்று கூறி பலமுறை பள்ளிகளைத் தாக்கியுள்ளது இஸ்ரேல் இராணுவம்.

காசா மீதான இஸ்ரேலின் போரில் குறைந்தது 41,534 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 96,092 பேர் காயமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் செப்.26 அன்று வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இறந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள், இதில் சுமார் 1,300 குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

***

காசாவில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் வசிக்கும் பள்ளிக் கட்டிடங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தொடர்ச்சியான தாக்குதல்களில் சமீபத்திய தாக்குதல் இதுவாகும்.

முற்றுகையிடப்பட்ட என்கிளேவின் 2.3 மில்லியன் மக்களில் பெரும்பாலானோர் போரினால் பலமுறை இடம்பெயர்ந்துள்ளனர், பலர் பள்ளிக் கட்டிடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

காசாவில் உள்ள சிவில் பாதுகாப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பஸ்சல், ஜபாலியாவில் உள்ள பள்ளியின் மீது இஸ்ரேலிய குண்டுவீச்சில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்துள்ளனர் என்று கூறினார்.

மத்திய காசாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையால் நடத்தப்படும் அல்-ஜௌனி பள்ளி மீதான இஸ்ரேலில் வான்வெளி தாக்குதலால், செப்டம்பர் 11, 2024 அன்று பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐ.நா அமைப்பின் (UNRWA) ஆறு ஊழியர்கள் உட்படக் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டனர்.

தெற்கு நகரமான கான் யூனிஸில், 88 பாலஸ்தீனியர்களின் உடல்களைப் புதைகுழியில் தள்ளிப் புதைத்தனர்.

88 உடல்களைக் கொண்ட ஒரு கொள்கலனை இந்த வாரம் இஸ்ரேலிய இராணுவம் திருப்பி அனுப்பியதாக அமைச்சகம் கூறியது.

 

உடல்கள் பெரும்பாலும் சிதைந்தன

***

***

***

சந்துரு
நன்றி: அல் ஜசீரா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



மாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங் || மீள்பதிவு

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய தோழர் பகத் சிங்கின் 118-வது பிறந்தநாள் இன்று! மனித குலம் சுரண்டலிலிருந்து விடுபடுவதற்கு சோசலிசம்தான் ஒரே தீர்வு என்று அறுதியிட்டுக் கூறியவர் மாவீரன் பகத் சிங். அந்த மாவீரனை நினைவுகூரும் வகையில், மாணவர்கள் அரசியலில் பங்கேற்க வேண்டியதன் அவசியம் குறித்து அவர் எழுதிய கட்டுரையை வாசகர்களுக்கு மீள்பதிவு செய்கிறோம்

***

ன்று பல அதிமேதாவிகள் கூவிக் கொண்டிருப்பது போலவே அன்றும் சிலர் “மாணவர்கள் அரசியலில் பங்கெடுக்கக் கூடாது. அவர்கள் கவனம் படிப்பில் மட்டும் தான் இருக்க வேண்டும்” என்று கூறிக் கொண்டிருந்தனர். அதன் மூலம் தாய் நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட வேண்டிய பொறுப்பிலிருந்து அன்றைய மாணவர்கள் – இளைஞர்களைத் திசை திருப்பிக் கொண்டிருந்தனர். ஆளும் வர்க்கத்தின் மனதை மகிழச் செய்வதற்காகத் தாய்நாட்டிற்குத் துரோகம் செய்து கொண்டிருந்தனர்.

வெளிப்பார்வைக்கு அதிபுத்திசாலித்தமானதாக தோற்றமளிக்கும் இவர்களது வாதங்களை இக்கட்டுரையின் மூலம் பகத்சிங் தகர்த்தெறிகிறார். அவர்களையும் அவர்களது வாதத்தின் உள்நோக்கத்தையும் அம்பலப்படுத்துகிறார். இக்கட்டுரை 1928 ஜூன் கீர்த்தி இதழில் வெளிவந்தது.

மாணவர்களும் அரசியலும்

படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள் (மாணவர்கள்) அரசியலில் பங்கெடுக்கக் கூடாது என்று சிலர் வீட்டுக் கூரைகளின் மேல் நின்று கொண்டு உரக்கக் கத்துகின்றனர். பஞ்சாப் அரசாங்கமும் அத்தகைய கருத்துக்களைக் கொண்டுள்ளது. மாணவர்கள் கல்வி நிலையங்களில் சேரும் போதே, அவர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள் என்ற உறுதிமொழியில் கையெழுத்திடுமாறு செய்யப்படுகிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நமது கல்வி அமைச்சர் மனோகர் லால், மாணவர்களோ ஆசிரியர்களோ அரசியலில் பங்கெடுக்கக் கூடாது என்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் என்பது நமது துரதிர்ஷ்டமே. லாகூரில் மாணவர் சங்கங்களாலும் மாணவர் அமைப்புகளாலும் “மாணவர்கள் வாரம்” கொண்டாடப்பட்ட போது சர்.அப்துல் காதரும் பேராசிரியர் ஈஸ்வர் சந்த்தும் மாணவர்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது என்று வலியுறுத்தினர்.

நாட்டில் அரசியல் ரீதியில் பின்தங்கிய மாகாணமாக பஞ்சாப் வரிசைப்படுத்தப்படுகிறது. ஏன் அவ்வாறு கருதப்படுகிறது? பஞ்சாப் குறைவாகவா தியாகம் செய்துள்ளது. காரணம் என்னவென்றால் நமது கல்வித் துறையின் அதிகாரிகள் கத்துக்குட்டிகள். இன்றைய பஞ்சாப் சட்ட மன்ற அவை நடவடிக்கைகள், நமது கல்வியின் தரம் மிக மோசமான நிலையிலும் பயனற்றதாகவும் இருப்பதையும் நமது நாட்டில் என்ன நடந்தாலும் அதில் இளம் மாணவர்கள் பங்கெடுப்பதில்லை என்பதையுமே நமக்கு காட்டுகின்றன. இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளர்ச்சிப் போக்குகள் பற்றி அவர்கள் (மாணவர்கள்) அறியாதவர்களாகவே இருக்கின்றனர். பள்ளிக் கல்வி முடித்து வெகுசிலர் உயர்கல்விக்குச் சென்றாலும் அவர்கள் பேசும் அறிவுக்குப் பொருந்தா குப்பைப் பேச்சுக்களைக் கேட்டு எவரும் சிரிக்காமல் இருக்க முடியாது.

இந்த நாட்டின் ஆட்சியதிகாரம் யாருடைய கைகளுக்குச் செல்லப் போகின்றதோ அந்த இளைஞர்களுக்கு திருப்தியற்ற விதத்தில் கல்வியளிக்கப்படுகிறது. இத்தகைய பெருமுயற்சிகளின் விளைவு என்னவாக இருக்கும் என்பதை யூகிப்பதில் எந்த கஷ்டமும் இல்லை.

மாணவர்களின் பிரதான கவனம் அவர்களது படிப்பில் இருக்க வேண்டும். அவர்களது நேரமும் சக்தியும் முழுவதும் அதற்காக அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். ஆனால் நமது நாட்டின் நிலைமையையும் அந்நிலைமையை மேம்படுத்துவதற்கான வழிவகைகளையும் புரிந்துகொள்ளக்கூடிய திறனை வளர்த்துக் கொள்வது அவர்களது படிப்பில் ஒரு பகுதி இல்லையா ? அப்படி இல்லையென்றால் அவர்களுக்கு கொடுக்கப்படும் கல்வி பயனற்றது என்றே நான் கருதுகிறேன். அக்கல்வி நம்மை வெறும் எழுத்தர்களாக மட்டுமே ஆக்கக் கூடியது என்றால், அதனை நாம் பெற்றிருப்பதில் ஒரு மகிழ்ச்சியும் இல்லை. அத்தகைய கல்வி நமக்குத் தேவையா?

தந்திரக்காரர்கள் சிலர் கூறுகின்றனர்: “மாணவர்களே, நீங்கள் அரசியலைப் பற்றிப் படிக்கலாம் ; அதைப் பற்றி சிந்திக்கலாம். ஆனால் நடைமுறை அரசியலில் மட்டும் ஈடுபடக்கூடாது. படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி உங்கள் திறனை வளர்த்துக் கொண்டால் நீங்கள் நாட்டிற்கு அதிகம் பயனுள்ளவர்களாக இருப்பீர்கள்”. வெளிப்படையாகப் பார்க்கும் போது இது ஒரு நல்ல ஆலோசனை. ஆனால் இது மேலோட்டமான கருத்து என்பதற்காகவும் நான் இதை நிராகரிக்கிறேன். நான் அதை விரிவாக விளக்குகிறேன். ஒரு மாணவர், பிரின்ஸ் க்ரொபோத்கின் எழுதிய “இளைஞர்களுக்கு அறைகூவல்” (Appeal to the young) எனும் நூலை படித்துக் கொண்டிருக்கிறார். ஒரு பேராசிரியர், இது ஏதோவொரு வங்காளியின் படைப்பு போல் இருக்கிறதே, அந்த புத்தகம் என்ன புத்தகம் ? என்று விசாரிக்கிறார். அம்மாணவர் பதில் சொல்கிறார்: பிரின்ஸ் க்ரொபோத்கின் பிரபலமான பெயர். பொருளாதாரத்தில் அதிகாரம் பெற்ற மேதை. ஒவ்வொரு பேராசிரியரும் இப்பெயரைத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். அப்பேராசிரியரின் “திறனைப்” பார்த்து நகைத்துக் கொண்டே அம்மாணவர் மேலும் கூறுகிறார்: அவர் ஒரு ருஷ்ய நாட்டவர். ருஷ்யா என்ற வார்த்தை அப்பேராசிரியருக்கு இடி விழுந்தது போல் கேட்டது. உடனே அவர் சொன்னார்: “நீ ஒரு போல்ஷ்விக் ஏனென்றால் நீ அரசியல் புத்தகங்களை படித்துக் கொண்டிருக்கிறாய்”

என்ன ஒரு திறமையான பேராசிரியர் ! பாவம் அந்த மாணவன். அப்பேராசிரியரிடமிருந்து என்ன கற்றுக் கொள்ள முடியும் ? இத்தகைய சூழ்நிலையில் நமது இளைஞர்களால் என்ன கற்றுக்கொள்ள முடியும்?

இரண்டாவதாக, “நடைமுறை அரசியல்” என்றால் என்ன என்று நாம் பார்ப்போம். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரை வரவேற்பதும் அவர்களது சொற்பொழிவுகளைக் கேட்பதும் நடைமுறை அரசியல். ஒரு ராயல் கமிஷனை அல்லது வைஸ்ராயை வரவேற்பதற்கு பெயர் என்ன ? அதுவும் கூட அரசியல் இல்லையா? அரசாங்கம் அல்லது நாட்டின் நிர்வாகத்துடன் தொடர்புடையது எதுவானாலும் அரசியல் என்றால், இதுவும் அரசியல் இல்லையா ? ஆனால் என்ன இருந்தாலும் இது அரசாங்கத்தை மனங்குளிரச் செய்கிறது, மற்றதோ அரசாங்கத்தை கோபம் கொள்ளச் செய்கிறது என்று நீங்கள் கூறுகிறீர்கள்.

நீங்கள் அரசாங்கத்தின் மனமகிழ்ச்சியையும் கோபத்தையும் பற்றி மட்டுமே கவலைப்படுகிறீர்கள் என்பதே இதற்கு அர்த்தம். பிறந்தது முதற்கொண்டு அரசாங்கத்திற்கு துதிபாடும் கல்வியா மாணவர்களுக்குப் போதிக்கப்பட வேண்டும் ? அந்நிய கொள்ளைக் கூட்டத்தினரால் இந்தியா ஆளப்படும் வரை, அரசாங்க விசுவாசத்தைக் காட்டும் அரசாங்க ஆதரவாளர் (Loyalist) களை நான் துரோகிகள் என்றே கருதுவேன். அவர்கள் மனிதர்களே அல்ல. மிருகங்கள். அவர்கள் தங்களது வயிற்றுக்கு அடிமையானவர்கள் ! இந்த அரசாங்க விசுவாசத்திற்கான பாடத்தைக் கற்குமாறு நமது மாணவர்களை நாம் எவ்வாறு கூற முடியும்?


படிக்க: பகத் சிங் பிறந்தநாள் : இந்திய புரட்சிகரக் கட்சியின் அறிக்கை !


இந்தியாவிற்கு இப்பொழுது, தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்து, பித்துப் பிடித்தவர்களைப் போல் தங்களது வாழ்க்கை முழுவதையுமே அர்ப்பணித்து இந்நாட்டின் விடுதலைக்காக போராடக்கூடிய தேச பக்தர்களே தேவைப்படுகின்றனர். இதை ஏறத்தாழ அனைவருமே ஒப்புக் கொள்வார்கள். அத்தகைய தேசபக்தர்களை வயதானவர்களிடம் நம்மால் கண்டறிய முடியுமா? தங்களது குடும்பம், உலக வாழ்க்கை விவகாரங்களைக் கவனித்துக் கொண்டிருக்கும் புத்திசாலியான மனிதர்களின் மத்தியில் இருந்து அத்தகைய தேசபக்தர்கள் வெளிவருவார்களா ? இல்லை! இத்தகைய விஷயங்களின் பிடியில் இல்லாத இளைஞர்களின் அணிவரிசை களில் மட்டுமே அத்தகைய தேசபக்தர்களைக் காண முடியும். ஆனால் நமது இளைஞர்களுக்கு விஷயங்களைப் பற்றிய நடைமுறை அறிவு கொடுக்கப்பட்டிருந்தால் மட்டுமே அவர்கள் மத்தியில் அத்தகைய தேசபக்தர்கள் கிடைப்பார்கள். கணிதம் மற்றும் புவியியல் கேள்விகளுக்கான விடைகளை குருட்டு மனப்பாடம் செய்து கற்றுக் கொள்வது மட்டும் இதற்குப் போதாது.

இங்கிலாந்து நாட்டு மாணவர்கள் கல்லூரிகளைத் துறந்து விட்டு ஜெர்மனிக்கு எதிராக போருக்குச் சென்றார்களே ஜெர்மனிக்கு எதிராக போருக்குச் சென்றார்களே, அது அரசியல் இல்லையா? நம்முடைய போதகர்கள் அங்குபோய் அவர்களது படிப்பைத் தொடருமாறு அந்த மாணவர்களிடம் ஏன் சொல்லவில்லை!

தங்களது கல்லூரியைத் துறந்து பரதோலியின் சத்யாகிரகப் போராட்ட வீரர்களுக்கு துணை நின்றார்களே அந்த அகமதாபாத் தேசியக் கல்லூரியின் மாணவர்கள் என்ன முட்டாள்களா ? கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டிலும் இளைஞர்களும் மாணவர்களுமே தங்களது நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எப்பொழுதும் முன்வரிசையில் இருக்கின்றனர். இந்தியாவின் இளைஞர்களும் மாணவர்களும் சுதந்திரப் போராட்டத்தில் இருந்து ஒதுங்கியிருப்பதன் மூலம் தங்களது நாட்டைக் காப்பாற்ற முடியுமா ? 1919-ல் இளைஞர்கள் மீது தொடுக்கப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை அவர்கள் மறக்கலாமா? புரட்சி, இன்றைய காலகட்டத்தின் தேவை என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும்.

மாணவர்கள் படிக்க வேண்டும். கட்டாயம் படிக்க வேண்டும். ஆனால் அதனுடன் கூடவே அவர்கள் அரசியல் அறிவையும் பெறவேண்டும். நேரடி நடவடிக்கை எப்போது தேவைப்படுகிறதோ அப்போது களத்தில் குதிக்கத் தயங்கக் கூடாது. அப்பணிக்காக தங்களது வாழ்க்கையை அவர்கள் அர்ப்பணிக்க வேண்டும். இக் குறிக்கோளுக்காக உயிரைக் கொடுக்கவும் தயங்கக் கூடாது. இந்த நிலைமையில் இருந்து மீள்வதற்கு அது ஒன்றே வழி.

பகத்சிங்


சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



காசா – லெபனான் மீதான இஸ்ரேலின் படுகொலை | அமெரிக்க அரசை கண்டித்து அமெரிக்காவில் போராட்டம்! | படக்கட்டுரை

0

காசா – லெபனான் மீதான இஸ்ரேலின் படுகொலைகளுக்கு ஆயுதம் வழங்குவதை உடனே நிறுத்து! அமெரிக்க அரசை கண்டித்து அமெரிக்காவில் போராட்டம்!

த்திய கிழக்கில் போர் அபாயம் அதிகரித்துவரும் நிலையில், இஸ்ரேலுக்கு அமெரிக்க இராணுவம் ஆதரவு அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன.

செப்-23 காலை முதல் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 50 குழந்தைகள் உட்பட குறைந்தது 560 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். 1,800 பேர் காயமடைந்துள்ளார்கள். இஸ்ரேலின் இத்தாக்குதலை கண்டித்து செப்-24 அன்று மாலை நியூயார்க் நகரில் உள்ள ஹெரால்ட் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காசாவில் பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்துகொண்டிருக்கும் அதேவேலையில், லெபனானிலும்  தாக்குதல் தொடுத்து அப்பாவி மக்களை படுகொலை செய்து வருகிறது கொலைவெறி பிடித்த இஸ்ரேல். எனவே, இஸ்ரேலுக்கு ஆயுதத்தடை விதிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் முழக்க மிட்டனர்.

ANSWER (Act Now to Stop War and End Racism) என்ற கூட்டமைப்பு சார்பாக, “லெபனானை விட்டு வெளியேறு!”, “லெபனான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் போரை உடனே நிறுத்து!”, “மத்திய கிழக்கைவிட்டு வெளியேறு!”, “சுதந்திர பாலஸ்தீனம்”, “பைடன், கமலா, டிரம்ப் மற்றும் நெத்தன் யாகு; எங்கள் ஊரில் யாருக்கும் அனுமதி இல்லை” போன்ற பதாகைகள் ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்றிருந்தன.

அமெரிக்க அரசு இஸ்ரேலுக்கு வழங்கிவரும் பெருமளவிலான குண்டுகள், ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்கள் ஆகியவையே லெபனான்-காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு மிகவும் அடிப்படை” என்று ANSWER கூட்டமைப்பு குற்றம்சாட்டுகிறது.

வாஷிங்டனை தொடர்ந்து, சான் பிரான்சிஸ்கோ, சியாட்டில், சான் அன்டோனியோ மற்றும் பீனிக்ஸ் ஆகிய நகரங்களிலும் இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்கும் அமெரிக்க அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றன.

***

நியூயார்க்கில் பாலஸ்தீனிய மற்றும் லெபனான் மக்களுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தின் போது ஒரு தெருவை போலீசு போராடுபவர்களை தடுத்து நிறுத்தினர்.

***

நியூயார்க்கில் ஒரு போராடும் ஒருவர் போலீசால் கைது செய்யப்பட்டார்

***

நியூயார்க்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசு கைது செய்தது.

***

நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் லெபனான் மற்றும் பாலஸ்தீனத்துடன் தனது ஆதரவை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வெளியிபடுத்தினர்.

***

“பைடன், கமலா, டிரம்ப் மற்றும் நெத்தன் யாகு; எங்கள் ஊரில் யாருக்கும் அனுமதி இல்லை” என்று ஆர்ப்பாட்டத்தில் முழக்கம் எழுப்பினர்.

***

காசாவில் இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலைக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளன.

***

வாஷிங்டன் வெள்ளை மாளிகைக்கு அருகிலும் இதே போன்ற போராட்டம் நடைபெற்றது.

சந்துரு
நன்றி: அல் ஜசீரா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



ரயில்வே துறையைச் சிதைத்து  கார்ப்பரேட்டுகளுக்கு படையல் வைக்கும் பாசிச மோடி கும்பல்!

ந்தியாவில் பயணிகள், ரயில்கள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்கு ஈடு கொடுக்கும் வகையில் ரயில்வே துறையில் போதுமான அளவுக்கு பணியாளர்கள் இல்லை என்பது நீண்ட நாள் முறையீடாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ரயில் விபத்துகள் ஏற்படுவது அதிகரித்துள்ளதற்கு பணியாளர்களின் பணிச்சுமையும், பற்றாக்குறையும் முதன்மை காரணமாகக் கூறப்படுகின்றன.  இந்நிலையில் அண்மையில் ரயில்வே வாரியத்தின் தலைவர் –  தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ள சதீஷ்குமார் பணியாளர் பற்றாக்குறை குறித்து நிதித்துறை அமைச்சகத்துக்கு எழுதி இருக்கும் கடிதம் முக்கியத்துவம் பெறுகிறது.

2021 நிலவரப்படி இந்தியாவில் சராசரியாக 13,555 ரயில்கள் பயணிகளுக்காகவும், சரக்குகள் எடுத்துச் செல்வதற்காகவும் இயக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு 2 கோடி பேர் பயணம் செய்கின்றனர். 150 கோடி டன் சரக்குகள் எடுத்துச் செல்லப்படுகின்றன. மொத்தம் 18 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள ரயில்வேவில் மத்திய மண்டலத்தில் மட்டும் ஏறக்குறைய 50 சதவீதம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. ரயில்களை இயக்குவது, பராமரிப்பது ஆகிய பணிகளை உள்ளடக்கிய பயணிகள் பாதுகாப்பு நோக்கிலான துறைகளில் மட்டும் இவ்வளவு பற்றாக்குறை இருப்பது கவலை அளிக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வேவில் 31,000 கிலோமீட்டர் வழித்தடம் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. 2019 –  2024 காலகட்டத்தில் 772க்கும் மேற்பட்ட புதிய ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. 2019ல் இருந்த இன்ஜின்களின் எண்ணிக்கை 2024 இல் 59.86 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய இன்ஜின்களை இயக்குவதற்கு மட்டுமில்லாமல் இந்த கட்டமைப்பைப் பராமரிப்பதற்கும் போதுமான எண்ணிக்கையில் பணியாளர்கள் வேண்டும். ரயில் நிலையங்களில் உள்ள மின்படிகள் (எஸ்கலேட்டர்) மின்தூக்கிகள் போன்றவற்றின் எண்ணிக்கையும் கடந்த 10 ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது. வந்தே பாரத் ரயில்கள் விடும் மோடி அரசு அவற்றை நிர்வகிக்கத் தேவையான விகிதத்தில் பணியாளர் நியமனம் செய்வதில்லை.

வருவாய் நோக்கில் அரசுக்குத் திருப்தி அளிக்கும் விதத்தில் தான் இந்திய ரயில்வேவின் செயல்பாடு உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் பயணிகள் ரயில்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் 40 சதவீதமும் சரக்கு ரயில்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் 31.40% அதிகரித்துள்ளன. புதிய பணியாளர் நியமனத்துக்குப் பொருளாதாரத் தடைகள் இருக்க வாய்ப்பு இல்லை. எனினும் பணிகளை மின்னணு மயமாக்குதல், பணி அயலாக்கம் (அவுட்சோர்சிங்) ஆகிய நடவடிக்கைகள் மூலம் பணியாளர்களுக்கான இடங்கள் குறைக்கப்படுகின்றன. எனினும் மனிதர்களின் நேரடி பங்களிப்பு இன்றி பல வேலைகள் தேக்கம் அடைவதும், வேலையின் தரம் குறைவதும் தொடர்ந்து சுட்டிக்காட்டப்படுகின்றன.


படிக்க: தடம் புரளும் ரயில்கள்: இவை வெறும் விபத்துகளா?


ரயிலின் ஒரு பெட்டிக்கு ஒரு பயணச்சீட்டு பரிசோதனை அதிகாரி (டிடிஇ) இருந்த நிலை மாற்றப்பட்டு, தற்போது ஒரு ரயிலுக்கே மொத்தமாக இரண்டு அல்லது மூன்று அதிகாரிகள் தான் உள்ளனர். ஓட்டுநர்கள் பற்றாக்குறையாக இருப்பதால் ஒரே பணியாளரே தொடர்ந்து இரண்டு ஷிப்ட் ரயிலை இயக்க வேண்டிய நிலையும் கூட இருப்பதாக ரயில்வே தொழிலாளர் அமைப்புகள் முறையிட்டு வருகின்றன. இது சில வேலைகளில் விபத்துகளுக்கு வழி வகுப்பதும், அது ஓட்டுநரின் தவறாகவும் அலட்சியமாகவும் மட்டுமே சித்தரிக்கப்படுவதும் புதிதல்ல.

இந்தச் சூழலில் தான் பணியாளர் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு தேவை என ரயில்வே வாரியத்தின் புதிய தலைவர் சதீஷ்குமார் சுட்டிக்காட்டி இருக்கிறார். ரயில்வே துறைக்குள்ளிருந்து எழுந்திருக்கும் முக்கியமான குரல் இது.

ஆனால் பாசிச மோடி அரசு இதையெல்லாம் தெரியாமல் செய்யவில்லை‌. பி.எஸ்.என்.எல், ஏர் இந்தியா உள்ளிட்ட பிற பொதுத்துறை நிறுவனங்களை நட்டத்தில் தள்ளி அம்பானி, டாட்டாவுக்கு பலனளிக்கும் வகையில் செய்தது. அதேபோல் ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் சதி இதனுள் அடங்கியுள்ளது.

தனியாருக்கு ரயில்வே துறையைத் தாரைவார்க்கும் பாசிச மோடி அமெரிக்காவிற்குச் சென்று வெள்ளியில் செய்த ரயிலை பைடனுக்கு பரிசளித்துள்ளது தற்செயலானதல்ல‌. இதை ஒரு அடிமை தன் ஆண்டைக்கு மக்களின் சொத்துக்களைக் கொள்ளையடித்துப் பரிசளிக்கும் குறியீடாக கொள்ளலாம். இன்னும் பல விசயங்களைக் குறியீடாக நமக்குத் தெரிவிப்பார் பிரதமர் மோடி என நாம் உறுதியாக நம்பலாம். கார்ப்பரேட்டுகளையும் அவர்களுக்கு நாட்டின் வளங்களை கூறுபோடும் சங்பரிவார பாசிசக் கும்பலையும் வீழ்த்தாமல் நமது வளங்களையும், எதிர்காலத்தையும் நாம் காத்துக் கொள்ள முடியாது.


முகநூலிலிருந்து… மக்கள் அதிகாரம் – நெல்லை மண்டலம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



இலங்கை அதிபர் தேர்தல் முடிவு: வளர்ச்சி முகமூடியில் மற்றுமொரு பாசிச சக்தி!

ற்போதைய இலங்கை தேர்தல் முடிவுகள் தொடர்பாக, சுருக்கமாக ஒருசில வாக்கியங்களில் சொல்ல வேண்டுமெனில், இந்தியாவில் 2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது, ஆளும் வர்க்கங்கள், மோடியை வளர்ச்சி நாயகனாக முன்னிறுத்தி, அவருக்கு ஒளிவட்டம் சூட்டி, பல்வேறு பொய்ப் பிரச்சாரங்கள் – மோசடிகளைச் செய்து, ஆட்சியில் அமரவைத்ததைப் போல, இலங்கையின் அதிபர் தேர்தலில் அனுர திசயநாயக்கே ஆட்சியில் அமர்த்தப்பட்டிருக்கிறார். அவ்வளவே!

இலங்கையில் நேற்றைய முன் தினம் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், அனுர திசயநாயக்கே வெற்றி பெற்றுள்ளார். இது இலங்கை வரலாற்றில் பெரிய திருப்பம் என்று கார்ப்பரேட் முதலாளித்துவ ஊடகங்கள் ஊதிப் பெருக்குகின்றன. ஒரு பெரிய எழுச்சி ஏற்பட்டுவிட்டதாகச் சித்தரிக்கின்றன. “இடதுசாரி தலைவர்” என்று அனுரவைப் புகழ்ந்தும், இதனால் சீனாவுக்கு ஆதரவானவர் என்று இந்திய ஆளும் வர்க்கத்திற்கு எதிராகக் கொம்பு சீவும் வகையிலும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

தமிழ்நாட்டின் ஊடகங்கள் அல்லது இந்தியாவின் கார்ப்பரேட் ஊடகங்கள் இவ்வாறு கூவுவதைப் பற்றி முதலில் பேசிவிடுவோம்.

சென்றவாரத்தில் மட்டும், தி.மு.க.வின் முப்பெரும் விழா, விஜய் அரசியல் மாநாடு, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற மோடி அரசின் அறிவிப்பு; கேஜ்ரிவால் சிறையிலிருந்து விடுதலை; அதிஷி முதல்வர் பதவி ஏற்பு; திருப்பதி லட்டு, அதில் மாட்டுக் கொழுப்பு; இப்படியாக பரபரப்பூட்டி வந்த கார்ப்பரேட் ஊடகங்கள் இப்போது இலங்கை அதிபர் தேர்தலை வைத்து பரபரப்பூட்டி வருகின்றன.

எந்தப் பிரச்சினையிலும் ஆளும் கார்ப்பரேட் வர்க்கங்களின் நிகழ்ச்சி நிரலுக்கு வெளியே சென்று மக்கள் சிந்திக்க முடியாதபடி, ஊடகச் செய்திகளைக் கட்டியமைக்கும் வகையில் தான், இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள் தொடர்பான ஊடகச் செய்திகளும் அமைந்திருக்கின்றன என்பதால், அந்தக் கண்ணோட்டத்திலிருந்து இந்தப் பிரச்சினையை அணுகுவதைத் தவிர்க்க வேண்டும்.


படிக்க: ஜே.வி.பி. இடதுசாரி இயக்கமா? இனவெறி இயக்கமா? | பாகம் 1


மேலும், இலங்கை அரசியல் போக்குகளைத் தொடர்ந்து கவனித்து வரும் புதிய ஜனநாயகம், தற்போதைய அதிபர் தேர்தலுக்கு முந்தைய சூழலிலிருந்து அரசியல் போக்குகள் குறித்து ஏப்ரல் மாத இதழில் விளக்கியிருந்த அம்சங்களிலிருந்து எந்த வகையிலும் இத்தேர்தல் முடிவுகள் மாறாக வரவில்லை என்பதைக் கவனத்திற்குக் கொண்டுவருகிறோம்.

ஆகையால், கார்ப்பரேட் ஊடகங்கள் ஊதிப் பெருக்கும் வகையில், இந்தத் தேர்தல் முடிவுகள் எந்த வகையிலும் வரலாற்று முக்கியத்துவம் உடையவையல்ல; ஜே.வி.பி. இடதுசாரி இயக்கமும் அல்ல; இலங்கைத் தேர்தலில் இன அரசியல் வெளிப்படவில்லை என்று குறிப்பிடுவதும் உண்மையல்ல.

***

2021-இல் இலங்கையை தமது மேலாதிக்கத்தின் கீழ் கொண்டுவருவதில், அமெரிக்க, சீன ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் நடந்த போட்டியில், இலங்கை பல அம்சங்களில் சீனாவுக்கு நெருக்கமாகச் சென்றதையடுத்து, இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடிகளை ஐ.எம்.எஃப். ஏற்படுத்தியது.

அதன் விளைவாக, ஏற்றுமதி வீழ்ச்சி, பண வீக்கம், அத்தியாவசியப் பொருட்கள் கடும் விலை உயர்வு, எரிபொருள்களின் தட்டுப்பாடு ஆகியவற்றின் தொடர்ச்சியாக, 2022 ஜனவரியில் மக்கள் எழுச்சி ஏற்பட்டது. இந்த மக்கள் எழுச்சிக்கு முகம் கொடுக்க முடியாமல், அதிபராக இருந்த மகிந்த ராஜபக்‌சே இரவோடு இரவாகத் தப்பியோடும் நிலைமை ஏற்பட்டது. அதன் பின்னர், ஐ.எம்.எஃப்.- அமெரிக்காவின் கைப்பாவையான ரணில் அதிபராக்கப்பட்டார்.

மகிந்த ராகபக்‌சே ஆதரவுடன் அதிபரான ரணில், இலங்கையை ஐ.எம்.எஃப்.க்கு அடகு வைத்தது மட்டுமின்றி, கடும் அடக்குமுறைகளைச் செலுத்தி மக்கள் மீதான பொருளாதாரச் சுரண்டலைத் திணித்தார்; அறிவிக்கப்படாத ராணுவ ஆட்சியை நடத்தினார்.

மொத்தத்தில், இதுவரை தங்களை ஆண்ட, ஆளும் கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்த தேர்தல் கட்சிகளின் மீது மக்கள் நம்பிக்கையிழந்திருந்தனர். இந்நிலையில், இந்த அரசியல் தருணத்தைப் பயன்படுத்தி, அரசியல் களத்தில் ஆளும் வர்க்கங்களால் முன் தள்ளப்பட்ட புதிய நபர்தான் அனுர திசநாயக்கே.

இவர், ஜே.வி.பி. எனும் சிங்கள இனவெறி, பௌத்த மதவெறி, போலி கம்யூனிச இயக்கத்தின் தலைவர். கார்ப்பரேட் ஊடகங்களின் தேர்தல் பரப்புரை யுக்திகளால் இவர் வளர்ச்சி நாயகனாக ஊதிப் பெருக்கப்பட்டார். இதன் விளைவாக, ஓராண்டுக்கு முன்பு நடந்த கருத்துக்கணிப்புகளின் போதே, அதிபர் தேர்தலில் அனுர வெற்றி பெறுவார் என்று 51 சதவிகிதம் பேர் கூறியதாக ஊடகங்கள் தெரிவித்திருந்தன. இதுவும் அனுரவை ஆட்சியில் அமரவைக்கும் ஒரு உளவியல் பிரச்சாரம்தான்.

இந்த அரசுக் கட்டமைப்பின் மீது நம்பிக்கை இழந்திருந்த மக்கள், இடதுசாரி போர்வைப் போர்த்திக் கொண்டிருக்கும் அனுரவை கார்ப்பரேட் ஊடகங்கள் மாற்றாக நிறுத்தும் போது, அதனை ஏற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மற்றபடி, சஜித் பிரேமதச, ரணில் ஆகிய இருவருக்கும் எந்தவகையிலும் மாற்றுப் பொருளாதார அரசியல் திட்டங்களைக் கொண்டவரல்ல, அனுர.


படிக்க: ஜே.வி.பி. இடதுசாரி இயக்கமா? இனவெறி இயக்கமா? | பாகம் 2


அதானி, அம்பானிகளின் முதலீடுகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படும்; ஐ.எம்.எஃப்.யுடனான ஒப்பந்தங்கள் குறைக்கப்படும் போன்ற அனுரவின் வாக்குறுதிகள் எல்லாம் தேர்தல் நேர சவடால்கள் தவிர வேறொன்றும் இல்லை.

மேலும், யாழ்ப்பாணத்தில் பிரச்சாரத்தின் போது பேசிய அனுர “நான் 13வது சட்டத் திருத்தத்தைச் செயல்படுத்துகிறேன்; பதிலுக்கு எனக்கு வாக்களியுங்கள் என்று கேட்க நான் வரவில்லை. கூட்டாட்சி முறையை அளிக்கிறேன்; எனக்கு வாக்களியுங்கள் என்று கேட்க வரவில்லை” என்றார். தமிழ் அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேசிய பிறகு, தனது நிலைப்பாட்டை சிறிது மாற்றிக்கொண்டு மாகாண சபைகள் தொடர்ந்து செயல்படும் என்று கூறினார். தமிழ் மக்கள் மீதான ஜே.வி.பி-இன் நிலைப்பாடு மாறவில்லை என்பதையே இது காட்டுகிறது.

அதேபோல இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் போர்த்தந்திர முக்கியத்துவம் உள்ள இடத்தில் இலங்கை அமைந்திருப்பதால், இலங்கையின் மீது தமது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதற்கான வாய்ப்புகளை எந்த வகையில் இவை கைவிடாது. தற்போது, அமெரிக்கா-இந்தியாவின் ஆதிக்க நிலைமை இலங்கையில் இருப்பதால், இதனைத் தொடர்வதற்கான அனைத்து வேலைகளையும் இந்தியா முன்கூட்டியே செய்து முடித்துவிட்டது.

தங்களது அடிமைத்தனத்தை மறைக்க, “இந்தியாவுடன் உறவு”, “சீனாவுடன் நட்பு”, “ஐ.எம்.எஃப்-உடன் கடன் உதவி” என்று இலங்கை ஆளும் வர்க்கக் கட்சிகள் சவடால் அடிப்பதைத்தான் அனுரவும் செய்து கொண்டிருக்கிறார்.

ஆகையால், இந்தத் தேர்தல் முடிவுகள் இலங்கை மக்களுக்கு எந்தவித பொருளாதார மாற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கப் போவதில்லை.

இலங்கை மக்கள் தமது விடுதலையை தமது சொந்தப் போராட்ட முயற்சியின் மூலமாகத்தான் வென்றெடுக்க முடியும். அதற்கான பணிகள் எதுவும் இன்னும் தொடங்கப்படவில்லை என்பதுதான் கவலைக்குரிய உண்மையாகும். மாறாக, இந்தத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து இன்னும் சிக்கலான திசைவழியில்தான் இலங்கை அரசியல் சூழல் சென்று கொண்டிருக்கிறது என்பதை உணர முடிகிறது.

தமிழ் மக்களின் இன உரிமைக்கு அச்சுறுத்தல்

ரணில், சஜித் கும்பல்களை ஆதரித்துக் கொண்டே, “தனி ஈழம்”, “தன்னுரிமை”, “சுயாட்சி அந்தஸ்து” போன்ற முழக்கங்களை முன்வைத்த தமிழர் கட்சிகள் பெரிதும் அம்பலப்பட்டுப் போயிருப்பதையும், தமிழ் அமைப்புகள் சார்பாக நிறுத்தப்பட்ட பொது வேட்பாளர் 2,26,343 (1.7 சதவிகிதம்) வாக்குகளைப் பெற்று ஐந்தாவது இடத்திற்கு வந்திருப்பது, தமிழ் மக்களின் உரிமைகள் வென்றெடுக்கப்பட வேண்டுமென்ற தமிழ் மக்களின் உணர்வின் வெளிப்பாடுகளாகும். இது இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத இடத்தில் தமிழ் மக்களின் உரிமைகள் இருப்பதை உணர்த்தவும் செய்துள்ளது, இது நம்பிக்கையளிக்கும் முடிவுமாகும்.

மேலும், கணிசமான பகுதிகளில் தமிழ் மக்கள் தேர்தல் புறக்கணிப்புகளில் ஈடுபட்டதாகவும் அறிய முடிகிறது. இலங்கையிலேயே மிகக் குறைவான வாக்குப் பதிவு 66.93 சதவிகிதம், (தேசிய சராசரி வாக்குப் பதிவு 79.46 சதவிகிதம்) யாழ்ப்பாணத்தில்தான் பதிவாகியுள்ளது. இது செல்லாத ஓட்டுக்களையும் (மொத்த செல்லாத ஓட்டுக்களில் 8 சதவிகிதம்) உள்ளடக்கியது என்பதைக் கவனிக்க வேண்டும்.


படிக்க: அமெரிக்க – இந்திய சதுரங்க ஆட்டத்தின் கீழ் இலங்கை! | மீள்பதிவு


அனுரவுக்கு அதிகமான வாக்குகள் சிங்கள மக்கள் வாழும் பகுதியிலிருந்து கிடைத்திருப்பது, அதன் இன அரசியலை பளிச்சென வெளிப்படுத்துகிறது. இலங்கை அரசியலில் நேரடியாக இனவாத அரசியல் வெளிப்படவில்லை என்று குறிப்பிடுபவர்கள், தமிழர்களின் ஆதரவு பெற்ற தலைவராக அனுர இல்லை என்பதையும் உணர வேண்டும்.

அதேவேளையில், தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் அனுரவுக்கு குறிப்பிட்ட அளவு வாக்குகள் (யாழ்ப்பாணத்தில் 7.29 சதவிகிதம், வன்னியில் 9.86 சதவிகிதம், திரிகோணமலையில் 20.83 சதவிகிதம்…) விழுந்திருப்பது, தமிழ் மக்களின் இன உரிமைக்கு அச்சுறுத்தல்களாகும்.

வளர்ச்சி முகமூடியில் மற்றுமொரு பாசிச சக்தி!

இலங்கையின் பொருளாதார நெருக்கடி முதன்மையான பிரச்சினையாக இருப்பதால், இந்தத் தேர்தலில், இனவெறுப்பு அரசியலை கார்ப்பரேட் கட்சிகள் முன்னிறுத்தவில்லை என்பதைத் தவிர, தமிழ் மக்களுக்குச் சம உரிமை வழங்குவதற்கோ, சுயநிர்ணய உரிமை வழங்குவதற்கோ தயாராக இல்லை என்பதை நன்கு உணர முடிகிறது. மேலும், இனவெறுப்புப் பிரச்சாரம் இல்லாத இந்தத் தேர்தல் என்பது தமிழ் மக்களின் உரிமைகள் தவிர்க்க இயலாத அளவிற்கு அரசியல் அரங்கில் முன்னிலைக்கு வந்திருப்பதன் வெளிப்பாடுமாகும்.

மாறாக, இந்தியாவில் 2014-இல் ஆட்சியைப் பிடிப்பதற்கு மோடி-அமித்ஷா கும்பல், வளர்ச்சி முகமூடியை அணிந்ததைப் போலவே, இப்போது அனுர கும்பலும் வளர்ச்சி முகமூடியை அணிந்துள்ளது.

ஆகையால், பௌத்த மதவாதம், சிங்கள இனவாதத்தை மறைத்துக் கொண்டு, ஆளும் வர்க்கங்கள் மீது மக்கள் நம்பிக்கையிழந்திருக்கும் மக்களின் உணர்வை நாடிப்பிடித்து, சந்தர்ப்பவாத யுக்திகளைக் கையாண்டு ஆட்சி அதிகாரத்திற்கு வந்திருக்கும், அனுரவை வழக்கமான ஓர் ஆளும் வர்க்க அரசியல்வாதியாகக் கருதுவது தவறாகும்.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தமது கொள்ளையைத் தீவிரப்படுத்தவும் உழைக்கும் மக்களின் போராட்டங்களைத் திசைதிருப்பி ஒடுக்கவும் ஏகாதிபத்தியங்களால், பேரினவாதம், பெரும்பான்மைவாதம், புலம்பெயர்ந்தவர்கள், அகதிகள் மீதான வெறுப்பு போன்ற இனவெறி, மதவெறி, தேசவெறி துவேசங்கள் முன் தள்ளப்படும் பின்னணியில் அனுரவின் வெற்றியைப் பார்க்கவேண்டும்.

புரட்சிகர கட்சியின் தேவை

அந்தவகையில், 2021 பொருளாதார நெருக்கடிக்குப் பிந்தைய இலங்கை அரசியல்-பொருளாதார நிலைமையானது புதிய இடைக்கட்டத்திற்குள் நுழைந்திருப்பதையும் பௌத்த மதவாத, சிங்கள இனவாத அனுர கும்பல் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருப்பதையும் உணர்ந்து, இவற்றை முறியடிப்பதற்குரிய குறித்த திட்டத்தை வகுத்துச் செயல்பட வேண்டியது, புரட்சிகர கட்சியின் கடமையாகும்.

இந்தக் கடமையை நிறைவேற்றும் பொருட்டு, மக்களுக்கு அவர்களின் எதிரிகளைச் சரியாக அடையாளப்படுத்தி, இவ்வெதிரிகளை வீழ்த்துவதற்கு ஒவ்வொரு அரசியல் தருணத்திலும் செய்ய வேண்டிய கடமைகளைச் சுட்டிக்காட்டி, அவற்றை நிறைவேற்ற மக்களுக்கு அறைகூவல் விடுக்க வேண்டும். அதன் மூலமாகத்தான் மக்களின் போராட்ட உணர்வை வளர்த்தெடுக்க முடியும்.

அந்தவகையில், புரட்சிகர திசையில் மக்களை வழிநடத்திச் செல்வதற்குப் பரந்துவிரிந்த மக்கள் அடித்தளம் கொண்ட புரட்சிகர கட்சிக்காக இலங்கை காத்துக்கொண்டிருக்கிறது!

இலங்கை மா-லெ இயக்கங்களின் வலது சந்தர்ப்பவாத – நவீன அராஜகவாத பாதை

புதிய ஜனநாயக மார்க்சிய-லெனினியக் கட்சி உள்ளிட்ட இடதுசாரி இயக்கங்களால் உருவாக்கப்பட்ட, “மக்கள் போராட்ட கூட்டமைப்பு” என்ற கூட்டணி சார்பாக நிறுத்தப்பட்ட நுவன் போபெகே, 11,191 (0.08 சதவிகிதம்) வாக்குகளைப் பெற்றுள்ளார். குறிப்பாக, சமகால அரசியல் சூழலை அனுமானித்து, இந்த இடைக் கட்டத்திற்குரிய குறித்த திட்டம், அதனை அடைவதற்கான செயல்தந்திரங்களை வகுத்துச் செயல்படும் பார்வை இல்லாததாலும் மக்கள் அடித்தளம் இல்லாததாலும் இந்தக் கூட்டமைப்பு தேர்தல் அரசியல் களத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

குறிப்பாக, இந்தத் தேர்தல் பரப்புரை முழுவதும், இவ்வியக்கங்கள் மக்களின் எதிரிகள் யார் என்பதைச் சரியாக அடையாளப்படுத்தவில்லை. இவை மட்டுமின்றி, பல்வேறு பெயர்களில் இயங்கும் போலி இடதுசாரி, போலி சோசலிச அமைப்புகள், கட்சிகள் குறிப்பிடத்தக்க அளவு மக்களைத் திசைதிருப்பியிருப்பதையும் பார்க்க முடிகிறது. இவற்றைக் கையாள்வதற்கான செயல்தந்திரங்களும் இந்தக் கூட்டமைப்பிடம் இல்லை.

இந்தக் கூட்டணியானது, சோசலிசம் என்ற உயர்ந்த இலட்சியத்தையும் அதனை அடைவதற்கான “நிலைமாறு கால வேலைத் திட்டம்” என்ற ஒன்றையும் தேர்தல் அறிக்கையில் முன்வைத்துள்ளது. இதில், ஐ.எம்.எஃப். உடனான உறவுகளையும் உடனுக்குடன் முடிவுக்குக் கொண்டுவருவது, ஏகாதிபத்திய நுகத்தடியிலிருந்து விடுதலைப் பெறுவது, விவசாயத்தில் ஆதிக்கம் புரியும் ஏகபோக தேசிய மற்றும் ஏகாதிபத்திய முதலாளித்துவ நிறுவனங்களை விரட்டியடிப்பது போன்ற பல்வேறு அம்சங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது, ஒரு முதலாளித்துவ நாட்டில் புரட்சிகரக் கட்சியின் கட்சித் திட்டம் போன்றுள்ளது.

இந்த ‘தேர்தல் அறிக்கை’ மிகக் குறுகிய காலத்தில்தான் முன்வைக்கப்பட்டுள்ளது; இது பெரும் அளவில் மக்களிடம் சென்று சேரவில்லை என்பது ஒருபுறம் இருப்பினும், இந்த உயர்ந்த கோரிக்கைகளை, திட்டங்களை ஆளும் வர்க்கங்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த தேர்தல் அரசியலுக்குள் சாதித்துவிட முடியும் என்ற மாயை உருவாக்குவது கடைந்தெடுத்த வலது சந்தர்ப்பவாதத்தைத் தவிர வேறல்ல.

ஒரே அடியில் சோசலிசத்தை சாதிக்கும் இந்த அதிபரவசக் கொள்கைகளைத் தேர்தல் அரசியல் பிரச்சாரத்தில் முன்வைக்கும் போது, அவை மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாமல் போனது வியப்புக்குரியதுமல்ல!

வலது சந்தர்ப்பவாத – நவீன அராஜகவாத நோயினால் பீடிக்கப்பட்டுள்ள இலங்கை மா-லெ இயக்கங்கள் தங்களது பாதையை மறுபரிசீலனை செய்யவேண்டியது, காலத்தின் கட்டாயமாகும்.


தங்கம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



அமெரிக்க – இந்திய சதுரங்க ஆட்டத்தின் கீழ் இலங்கை! | மீள்பதிவு

லங்கையில் சீன – அமெரிக்க மேலாதிக்க போட்டாப்போட்டியால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, அந்நாட்டின் பொருளாதாரம் திவால் அடைந்தது. 2022 ஜனவரியில் அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான விலையேற்றம், எரிபொருட்கள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் எழுச்சி உருவானது. வெகுண்டெழுந்த மக்கள், ஜனாதிபதி மாளிகையைக் கைப்பற்றி, அப்போதைய ஜனாதிபதியான, சீன அடிவருடி கோத்தபய ராஜபக்சேவை நாட்டைவிட்டு விரட்டியடித்தனர். இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட அமெரிக்க ஏகாதிபத்தியம், ரகசிய வாக்கெடுப்பு நடத்தி இலங்கை நாடாளுமன்றத்தில் ஓர் உறுப்பினரைக் கூட கொண்டிராத அமெரிக்க கைக்கூலி ரணில் விக்கிரமசிங்கேவை ஜனாதிபதியாக்கியது.

அதன் பிறகு, அரசியல் குழப்பங்கள், கடுமையான பொருளாதார நெருக்கடி ஆகிய காரணங்களைக் காட்டி 2022-ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் தள்ளிப்போட்டது ரணில் கும்பல். இந்த இரண்டாண்டுகளில் மக்கள் மீது கடும் வரிச்சுமைகளை ஏற்றுவது, ஐ.எம்.எஃப்-இன் கடுமையான கட்டளைகளை அமல்படுத்துவது, போராடும் மக்களை இராணுவத்தைக் கொண்டு ஒடுக்குவது என ஓர் எதேச்சாதிகார ஆட்சியை நடத்தி வருகிறது ரணில் அரசு.

இந்நிலையில்தான், இந்தாண்டு செப்டம்பர்-நவம்பர் மாதங்களுக்குள்ளாக இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்ற செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே தெற்கு ஆசிய பிராந்தியத்தில் உள்ள வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் இரண்டு நாடுகளில் எதிர்க்கட்சி தலைவர்கள் வேட்டையாடப்பட்டு, சொல்லிக் கொள்ளப்படும் தேர்தல் ஜனநாயக வழிமுறைகள் அனைத்தையும் குழிதோண்டி புதைத்துவிட்டு தேர்தலை நடத்தி முடித்திருக்கிறது அந்நாட்டு ஆளுவர்க்க கும்பல். இந்தியாவிலும் நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, எதிர்க்கட்சிகள் மீது பாசிச அடக்குமுறைகளை ஏவிவருகிறது மோடி-அமித்ஷா கும்பல். இந்நிலையில், தெற்கு ஆசிய பிராந்தியத்தில் ஒன்றான இலங்கையிலும் தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பது அரசியல் சக்திகள் மத்தியில் முக்கியத்துவமுடையதாக பார்க்கப்படுகிறது.


படிக்க : ஜே.வி.பி. இடதுசாரி இயக்கமா? இனவெறி இயக்கமா? | பாகம் 1


அமெரிக்க-இந்திய மேலாதிக்கவாதிகள் உருவாக்கிய புதிய அடிமை ஜே.வி.பி.
கடந்த டிசம்பர் மாதத்தில், இலங்கையைச் சேர்ந்த சுகாதாரக் கொள்கை நிறுவனம் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்குள்ளது என கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. அதில், எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவிற்கு 30 சதவிகித வாக்குகளும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு 13 சதவிகித வாக்குகளும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சிக்கு 6 சதவிகித வாக்குகளும் கிடைத்துள்ளன. ஆனால், பலரும் எதிர்பாராத வகையில், ஜே.வி.பி. என்றழைக்கப்படும் ஜனதா விமுக்தி பெரமுனாவின் (Janatha Vimukthi Peramuna) தலைவரும் சிங்கள இனவெறி பௌத்த மதவெறி போலி கம்யூனிஸ்டுமான அனுர குமார திசநாயக்கே-விற்கு 51 சதவிகித வாக்குகள் கிடைத்திருப்பதுதான் கவனிக்கத்தக்க முக்கிய விசயமாகும்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, அதனை தொடர்ந்து எழுந்த மக்கள் எழுச்சிக்கு பிறகு, அனைத்து கட்சிகளின் மீதும் இலங்கை மக்கள் நம்பிக்கையிழந்திருந்தனர். இந்நிலையில், ரணில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். இலங்கை மக்கள், தங்கள் போராட்டத்தின் மூலம் விரட்டியடித்த கோத்தபய ராஜபக்சேவை பிரதிநிதித்துவப்படுத்தும் ராஜபக்சே கும்பலின் ஆதரவுடனே ரணில் பதவியேற்றார். ஐ.எம்.எஃப்-இன் கட்டுப்பாடுகளை அப்படியே நடைமுறைப்படுத்தினார். அதுவரை, நாட்டை மறுகாலனியாக்குவதாக விமர்சித்துவந்த எதிர்க்கட்சிகள், இலங்கை மக்கள் எழுச்சிக்குப் பின்னர் அடக்கி வாசிக்கத் தொடங்கின.

இந்நிலையில், ஆளும் வர்க்கத்தால் கண்டுபிடிக்கப்பட்ட அதன் புதிய விசுவாசிதான் இந்த திசநாயக்கே. சென்ற ஆண்டுவரை, 3 சதவிகித வாக்குகளைக் கூட பெற முடியாத கூட்டணிதான், ஜே.வி.பி-யின் தலைமையில் இலங்கையில் இருக்கும் போலிக் கம்யூனிஸ்டுக் கட்சிகளை இணைத்துக் கொண்டு உருவாக்கப்பட்ட “தேசிய மக்கள் சக்தி” (என்.பி.பி.) என்ற கூட்டணியாகும். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் நாட்டை அடகு வைக்கும் கார்ப்பரேட் முதலாளி வர்க்க அரசியலை மக்கள் வெறுத்து வந்த நிலையில், இடதுசாரி போர்வைப் போர்த்திக் கொண்ட இந்த கும்பலை ஆளும் வர்க்கம் புதிய முகமாக முன்தள்ளுகிறது.

ஒருபுறம் மக்களிடம் இருக்கும் ஆளும் வர்க்க எதிர்ப்புணர்வையும் இன்னொருபுறம் மக்களிடம் எழுந்துவரும் இடதுசாரி ஆதரவுப் போக்கையும் அறுவடை செய்து கொள்வதுதான் திசநாயக்கேவை ஆளும் வர்க்கங்கள் முன்தள்ளுவதற்கு முக்கிய காரணமாகும்.

ஆளும் வர்க்கத்தின் கடைக்கண் பார்வை தன் மீது திரும்பியுள்ளதை அடுத்து, ஜே.வி.பி. தலைமையில் அமைக்கப்பட்ட என்.பி.பி. கூட்டணியில் இளைஞர்களை இணைப்பது, சமூக வலைதளங்களில் திசநாயக்கேவை “வளர்ச்சி நாயகனாக”, “பொருளாதார மீட்பராக” முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வது அதிகரித்துள்ளது. இத்துடன் இலங்கையின் முன்னணி ஆளும் வர்க்க ஊடகங்கள், ஜே.வி.பி. 1980-களில் நிகழ்த்திய “இனப்படுகொலை வன்முறைகளுக்கு மன்னிப்பு தெரிவிக்குமா”, என்றெல்லாம் விவாதங்களைக் கட்டமைத்து, ஏ.கே.திசயநாயக்கேவைப் புனிதப்படுத்தி, அவரை அனைவருக்குமான தலைவராக ஏற்க வைக்கும் வேலையில் இறங்கியுள்ளன.


படிக்க : ஜே.வி.பி. இடதுசாரி இயக்கமா? இனவெறி இயக்கமா? | பாகம் 2


இந்திய நாட்டாமையின் கட்டுப்பாட்டில் இலங்கை
இலங்கையின் ஆட்சி அதிகார பீடத்தில் அமர்த்துவதற்காக சீன எதிர்ப்பு, இந்திய ஆதரவு அடிவருடியைத் தேடிக் கொண்டிருந்த அமெரிக்க ஆதரவு நாடுகள், ஜே.வி.பி-யின் தலைவர் ஏ.கே.திசயநாக்கேவை தமக்குத் தேர்ந்த அடிமையாகக் கருதி பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளன. இவர்தான் அடுத்த ஜனாதிபதியாக ஆக்கப்படுவார் என்ற நிலைமையில், இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இப்போதே இவரை தங்களது நாட்டிற்கு அழைத்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தத் தொடங்கியுள்ளன.

இந்தியாவின் பாசிச மோடி அரசின் அழைப்பின் அடிப்படையில், ஏ.கே.திசநாயக்கே பிப்ரவரி 5 முதல் 10-ஆம் தேதிகளில் இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டார். இச்சுற்றுபயணத்தின் போது இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவாத்ரா உள்ளிட்டோரைச் சந்தித்தார். இத்துடன், குஜராத், கேரளா போன்ற மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டதோடு அங்கிருக்கும் கார்ப்பரேட் முதலாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஜே.வி.பி. அதன் தொடக்க காலத்திலிருந்தே இலங்கையில் இந்தியாவின் ஆதிக்கத்தை எதிர்த்து வந்தது. 1980-களில் “இந்திய விரிவாக்கம்” என்ற கட்சி ஆவணத்தை எழுதி முன்வைத்த ஜே.வி.பி., இந்திய எதிர்ப்பு பிரச்சாரங்களிலும் ஈடுபட்டது. “அமைதிப் படை” என்ற பெயரில் இலங்கைக்குள் அனுப்பப்பட்ட இந்திய ராணுவத்தை எதிர்த்தது. 2021-ஆம் ஆண்டு கிழக்கு கொள்கலன் முனையத்தை அதானி குழுமத்திற்கு வழங்குவதை எதிர்த்து இலங்கையில் நடந்த போராட்டத்திலும் ஜே.வி.பி. கலந்துகொண்டது. ஆனால், இவையெல்லாம், எதிர்க்கட்சியாக இருக்கும் போது எதிர்ப்பது, ஆளும் கட்சியாக மாறிவிட்ட பின்னர் ஆதரிப்பது என்ற கார்ப்பரேட் அரசியலின் பிழைப்புவாத சீரழிவு என்பதை ஜே.வி.பி-யின் நடவடிக்கை இப்போது வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.

அண்மை காலங்களாக, இந்தியாவுடனான ஜே.வி.பி-இன் அணுகுமுறை மாறி வருவதோடு இந்தியாவுடன் இணக்கம் பாராட்டுவதும் அதிகரித்து வருகிறது. கடந்த டிசம்பர் 2023-இல் “தி இந்து” பத்திரிகைக்கு நேர்காணல் கொடுத்த திசநாயக்கே, “எங்கள் நெருங்கிய அண்டை நாடான இந்தியா ஒரு பெரிய அரசியல் மற்றும் பொருளாதார மையமாக மாறியுள்ளது என்பதை நாங்கள் அறிவோம். எனவே, நாங்கள் பொருளாதார மற்றும் அரசியல் முடிவுகளை எடுக்கும்போது, அது இந்தியாவை எப்படி பாதிக்கும் என்பதைப் பற்றி எப்போதும் அக்கறை காட்டுவோம்” என்றார். இதுமட்டுமின்றி, இவர் பொது இடங்களில் இந்திய ஆட்சியாளர்களை புகழ்ந்து பேசுவதும் அதிகரித்து வருகிறது. அந்தவகையில், கோத்தபய, ரணில் வரிசையில் திசநாயக்கேவும் இந்திய ஆதிக்கத்தின் தேர்ந்த அடிமை என்பதையே அவரது செயல்பாடுகள் நிரூபிக்கின்றன.


படிக்க : இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்: அமெரிக்க-சீன மேலாதிக்கப் போட்டியின் தெற்காசிய பகடைக்காய்கள்! | பாகம்-1


குஜராத் முதல்வரையும் அம்மாநிலத்தின் உள்ளூர் கார்ப்பரேட் முதலாளிகளையும் தனது இந்தியப் பயணத்தின் மூன்றாவது நாளன்று சந்திக்க ஏ.கே.திசயநாயக்கேவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், மோடியின் “குஜராத் மாடல்” பற்றிய விளக்கக்காட்சியும் அவருக்குத் திரையிட்டுக் காட்டப்பட்டது. அதேபோல், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பிற மூத்த இந்திய அதிகாரிகளுடனான திசநாயக்கேவின் இச்சந்திப்பின்போது, “முதலில் அண்டையர்கள்” (Neighbour First) மற்றும் “சாகர்” (SAGAR) உள்ளிட்ட இந்தியாவின் பிராந்திய மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் திட்டங்கள் குறித்து திசநாயக்கேவுடன் விவாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை தனக்கு சாதகமாக பயன்படுத்திகொண்ட இந்தியா, சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான உதவிகளை இலங்கைக்கு வழங்கியது. மேலும், இலங்கையை கடனிலிருந்து ‘மீட்க’ பாடுபடுவதாக நாடகமாடுவதன் மூலம், இலங்கையில் தனது பிராந்திய மேலாதிக்கத்தை நிறுவி வருகிறது. அமெரிக்க அடிவருடி ரணில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டது, இந்தியாவிற்கு மேலும் சாதகமாக அமைந்தது. அதன் தொடர்ச்சியாக, இலங்கையில் இந்திய முதலீடுகளும் ஆதிக்கமும் அதிகரித்து வருகிறது.

ரணில் ஆட்சிக்கு வந்த பிறகு கோத்தபய ஆட்சியில் மக்களின் எதிர்ப்பின் காரணமாக நிறுத்திவைக்கபட்ட மன்னார் எரிசக்தித் திட்டம் மீண்டும் அதானிக்கு வழங்கப்பட்டது; இந்தியா-இலங்கை இடையிலான உறவு தொடர்பாக இந்தியா முன்வைத்த “கூட்டுப் பார்வையை” (joint vision) இலங்கை ஒப்புக்கொண்டது; இலங்கையின் கொழும்பு துறைமுகம் மற்றும் எரிசக்தித் துறையில் அதானியின் ஆதிக்கம் வளர்ந்து வருவது; இந்திய ரூபாயில் வத்தகம் செய்ய இலங்கை முயற்சித்து வருவது போன்றவை இலங்கையில் இந்தியாவின் மேலாதிக்கம் வளர்ந்து வருவதற்கான சான்றுகளாகும். தற்போது, இந்த ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநிறுத்திக்கொள்ளும் நோக்கிலேயே ஏ.கே.திசநாயக்கேவை இந்தியா ஆதரிப்பதும் அமைந்துள்ளது.

ஏ.கே.திசயநாயக்கேவின் இந்தியப் பயணத்திற்குப் பிறகு, இலங்கைக்கான இந்தியாவின் உயர் ஆணையர் சந்தோஷ் ஜா, இலங்கையின் வடக்குப் பகுதிகளுக்கும் தெற்குப் பகுதிகளுக்கும் தனித்தனியாக பயணம் மேற்கொண்டார். அவரை பிப்ரவரி 15-17 வரையிலான நாட்களில், வட இலங்கையின் முன்னணி தமிழ்கட்சிகளின் தலைவர்கள் சந்தித்தனர். குறிப்பாக, இலங்கை தமிழ்கட்சிகளை இந்தியாவிற்கு வரவழைத்துப் பேச இருந்த திட்டம் கைவிடப்பட்டு பின்னர், இந்த சந்திப்புகள் நடந்தேறின. அந்தவகையில், பிழைப்புவாத தமிழினக் கட்சிகளைக் கொண்டு, ஏ.கே.திசநாயக்கேவிற்கு ஆதரவு திரட்டும் வேலையை இந்தியாவே முன்னின்று செய்வதை இந்த சந்திப்புகள் உறுதி செய்கின்றன. இவை அனைத்தும் இலங்கையின் அரசியலில் இந்தியா முழுமையான தலையீட்டைக் கொண்டுள்ளதைத் தெளிவாகக் காட்டுகின்றன.

அண்மையில், மாலத்தீவு அதிபராக பதவியேற்றுகொண்ட முகமது முய்சு முதல் அதிகாராப்பூர்வ பயணமாக சீனாவிற்குச் சென்று சீனாவின் மேலாதிக்கத்திற்கு முன்னுரிமைக் கொடுத்ததைத் தொடர்ந்து, இந்தியா மாலத்தீவுக்கு பல நெருக்கடிகளைக் கொடுத்து தனது மேலாதிக்கத்தை உறுதி செய்து கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆனால், இலங்கையைப் பொருத்தவரை, 2021 கடும் பொருளாதார நெருக்கடியே அமெரிக்க-சீன போட்டாபோட்டின் விளைவாக உருவானதாகும். இந்தப் போட்டியைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, இலங்கையின் அரசியலை தனது மேலாதிக்கத்தின் கீழ் இந்தியா கொண்டுவந்திருப்பதையே அண்மைகால இந்நிகழ்வுகள் உணர்த்துகின்றன.


படிக்க : இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்: அமெரிக்க-சீன மேலாதிக்கப் போட்டியின் தெற்காசிய பகடைக்காய்கள்! | பாகம்-2


வளர்ந்துவரும் இன-மத முரண்பாடுகள்
இவைமட்டுமின்றி, ஈழத் தமிழ் மக்களின் எதிரியாக இருந்து செயல்பட்ட ஜே.வி.பி. கட்சி இத்தனை ஆண்டுகள் யாழ்ப்பாணத்தில் கால்பதிக்க முடியாமல் இருந்தது. ஆனால், தற்போது யாழ்ப்பாணத்திலேயே ஜே.வி.பி. கட்சிக்கு பல இடங்களில் கிளைகள் தொடங்கப்பட்டிருப்பது இத்தமிழினக் கட்சிகளின் துரோகத்தை எடுத்துக்காட்டுகிறது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி உருவாகும் சூழலில், சிங்கள இனவெறி, பௌத்த மதவெறி அடிப்படையிலான அமைப்புகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் இலங்கையில் அதிகரித்து வந்தன. சான்றாக, 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு திருநாள் அன்று மூன்று கிறித்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்களில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 250-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

2020 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக நடத்தப்பட்ட இத்தாக்குதலைத் தொடர்ந்து, இசுலாமியர்களை எதிரிகளாகக் காட்டி சிங்கள இனவெறி, பௌத்த மதவெறியைத் தூண்டிவிடும் போக்குகள் அதிகரித்தன. முக்கியமாக, இந்தத் தாக்குதலின் விளைவாக இலங்கைக்கு வருகைப் புரியும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. இது, இலங்கைப் பொருளாதார வீழ்ச்சியில் முக்கியப் பங்காற்றியது.

ஆனால், இத்தாக்குதலின் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கு உறுதியளித்த கோத்தபய கும்பலும், ரணில் கும்பலும் தாக்குதல் நடத்தப்பட்டு ஐந்து ஆண்டுகளாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை விமர்சிக்கும் முன்னணி ஊடகங்கள், இதில் சதிக்கோட்பாடுகள் இருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளன.

மேலும், இலங்கையில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்குப் பின்னர் ஓரளவிற்கு குறைந்திருந்த சிங்கள இனவெறி, பௌத்த மதவெறி அரசியல் நடவடிக்கைகள், தற்போது மீண்டும் மேலோங்கி வருவதை அண்மைகால நிகழ்வுகள் உணர்த்துகின்றன. அதுமட்டுமல்ல, இந்தியாவில் பாசிச மோடி-அமித்ஷா கும்பல் ஆட்சிக்கு வந்தது பின்னர், இலங்கையிலும் ஆர்.எஸ்.எஸ். செயல்பாடுகள் அதிகரித்துள்ளதாக அறிய முடிகிறது.


படிக்க : இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்: அமெரிக்க-சீன மேலாதிக்கப் போட்டியின் தெற்காசிய பகடைக்காய்கள்! | பாகம்-3


வளர்ந்து வரும் புதிய பாசிசக் கும்பல்
இலங்கை மற்றும் பிற நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் திசநாயக்கேவை தங்களது சுரண்டலுக்கான புதிய முகமாக கருதுகின்றன. அந்த முகம் இடதுசாரி வேடம் தரித்திருப்பது தற்போதைய இலங்கை மக்களின் மனநிலைக்கும் பொருத்தமாக உள்ளது. கடந்த சில மாதங்களில் மட்டும் பல்வேறு நாடுகளை சேர்ந்த தூதுவர்களும் முக்கிய தலைவர்களும் ஜே.வி.பி. அலுவலத்தில் திசநாயக்கேவை சந்தித்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 6-ஆம் தேதி ஒரே சமயத்தில், பாலஸ்தீனம், துருக்கி, வங்கதேசம், இந்தோனேசியா, மலேசியா, மாலத்தீவு உள்ளிட்ட ஆறு நாடுகளை சேர்ந்த தூதுவர்கள் ஜே.வி.பி. அலுவலகத்தில் திசநாயக்கேவை சந்தித்தனர். மார்ச் 8 அன்று கியூப நாட்டு தூதுவர் ஜே.வி.பி. அலுவலகத்தில் திசநாயக்கேவை சந்தித்தார். மார்ச் 13-ஆம் தேதி இலங்கைக்கான கனடாவின் உயரதிகாரி எரிக் வால்ஷ்-வும் 19-ஆம் தேதி ஜப்பான் தூதுவர் மிசுகோஷியும் திசநாயக்கேவை சந்தித்தனர்.

ஆளும் வர்க்கத்தால் தான் முன்னிறுத்தப்பட்டிருப்பதை தனது வளர்ச்சிக்கு சாதகமாக பயன்படுத்திகொள்ள துடிக்கும் திசநாயக்கே, பிற நாடுகளின் ஆளும் வர்க்கங்களை சந்தித்து ஆதரவு திரட்டவும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குகளை சேகரிக்கவும் அடுத்தடுத்து பல நாடுகளுக்கு சுற்றுபயணம் சென்றுகொண்டிருக்கிறார். அண்மையில், கனடா வாழ் தமிழ் மக்கள் மத்தியில் வாக்கு சேகரிக்க திசநாயக்கே கனடா சென்றது அதற்கான சான்றாகும். இவை மட்டுமின்றி, ஸ்வீடன், தென் கொரியா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் திசநாயக்கேவின் அடுத்தடுத்த பயணப் பட்டியலில் அடங்கியுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், திசநாயக்கேவும் ஜே.வி.பி-யும் ஆளும் வர்க்கத்தால் முன்னிறுத்தப்பட்டு, அக்கும்பலுக்கு ஆதரவு வளர்ந்து வருவதை சிலர் அடியோடு மறுக்கின்றனர். ஜே.வி.பி. சமூக வலைதளக் கட்டமைப்பில் பலமாக இருப்பதால் இவ்வாறு முன்னிறுத்தப்படுகிறது; தற்போது வெளியாகியுள்ள கருத்துகணிப்பு ஜே.வி.பி-யை இனவாதக் கட்சியாக பார்க்கும் தமிழர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மத்தியில் எடுக்கப்படாததால் அவர்களின் உணர்வு கருத்துகணிப்பு முடிவில் எதிரொலிக்கவில்லை, எனவே, திசநாயக்கே ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற மாட்டார் என்கின்றனர்.

மேலோட்டமாகப் பார்க்கும் போது இதில் உண்மை இருப்பதைப் போலத் தோன்றினாலும், பொருளாதார நெருக்கடிக்கு பிறகு ஜே.வி.பி. வளர்ந்து வருவதும் அதனை அமெரிக்க ஆதரவு நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் ஊக்குவிப்பதையும் மறுக்க முடியாது. அதேவேளையில், இலங்கை ஆளும் வர்க்கங்களும் இலங்கையைக் கொள்ளையடிக்கக் காத்திருக்கும் ஏகாதிபத்தியங்களும் தற்போதைய நெருக்கடியில் இருந்து மீள்வதற்கும் இலங்கை மக்களைக் கடுமையாக அடக்கி ஒடுக்குவதற்கும் ஒரு வல்லமைமிக்க அரசியல் தலைவரை முன்னிறுத்தி, அவரை வெற்றிப் பெறச் செய்து, “நிலையான ஆட்சி”யை அமைக்க வேண்டியுள்ளது. இந்த உண்மையில் இருந்துதான் மொத்த நிகழ்வுகளையும் பார்க்க வேண்டும்.


படிக்க : ஐ.எம்.எஃப்-வின் மறுகாலனியாக்கத் தாக்குதல்களுக்கு எதிராக கிளர்ந்தெழும் இலங்கை!


தேவை, பாசிச எதிர்ப்பு அரசியல் பார்வை!
எனவே, திசநாயக்கே போன்றதொரு இனவெறி கும்பலை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துவதற்கு இலங்கை ஆளும் கார்ப்பரேட் வர்க்கங்கள் அனைத்து ஜனநாயக விரோத வழிமுறைகளையும் மேற்கொள்ளும். மேலும், இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க., அம்பானி-அதானி பாசிச கும்பலும் அதன் தலைமையிலான ஆட்சியும் இலங்கையில் ஜனநாயகமான முறையில் மாற்றம் உருவாவதைத் தடுத்து தமது மேலாதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளதையே இந்த நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

ஆகையால், பாசிசக் கூறுகளை கொண்ட இனவெறிக் கட்சியான ஜே.வி.பி., இலங்கை அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றப் போவது இலங்கை உழைக்கும் மக்கள் எதிர்கொண்டுள்ள முதன்மையான பிரச்சினையாகும். தற்போதைய நிலையில், அதன் அரசியல் வெற்றியை முறியடிப்பது மட்டுமின்றி, இலங்கை பேரெழுச்சி உருவாக்கிய ஒற்றுமை உணர்வை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பரந்துவிரிந்த மக்கள் அடித்தளம் கொண்ட புரட்சிகரக் கட்சியைக் கட்டியமைக்க வேண்டும். இந்த இரண்டு கடமைகளையும் ஒருங்கே நிறைவேற்றும் வகையிலான அரசியல் செயல்தந்திரங்களை வகுத்து முன்னேறுவது இலங்கையில் உள்ள புரட்சிகர சக்திகளின் கடமையாகும்.

தெற்காசியப் பிராந்தியத்தில் வங்கதேசம், பாகிஸ்தானை அடுத்து இந்தியாவில் மீண்டும் பாசிச பா.ஜ.க. ஆட்சி அமைவதை எதிர்க்கும் ஜனநாயக சக்திகள், இலங்கையில் பாசிச சிங்கள இனவெறி ஜே.வி.பி. தலைமையிலான ஓர் ஆட்சி அமைவதை முறியடிப்பதற்கு இலங்கை உழைக்கும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.


துலிபா

(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2024)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



ஜே.வி.பி. இடதுசாரி இயக்கமா? இனவெறி இயக்கமா? | பாகம் 2

தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் இலங்கைத் தேர்தல் முடிவுகளில் ஜே.வி.பி கட்சி முன்னிலை பெற்றுள்ளது. “இடதுசாரிகள் வெற்றி” என்ற வகையில் சிலரால் இந்த தேர்தல் முடிவு பார்க்கப்படுகிறது. ஜே.வி.பி. கட்சி இடதுசாரி இயக்கமா அல்லது இனவெறி இயக்கமா என்பது குறித்து, ஜனவரி 1990 புதிய ஜனநாயகம் இதழில் வெளிவந்த கட்டுரை தற்போது வாசகர்களுக்கு வழங்குகிறோம்.

***

ஜே.வி.பி. இயக்கம்தரும் படிப்பினைகள்! | பாகம் 2

1971 ஆயுதந்தாங்கிய எழுச்சி தோல்வியுற்றபின் ஜே.வி.பி.யின் தலைமை முழுவதும் ஆயுள் தண்டனை பெற்றுச் சிறையிலடைக்கப்பட்டது. எனவே ஏறக்குறைய செயலிழந்த நிலைக்கு ஜே.வி.பி. தள்ளப்பட்டது.

1977 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்று ஜெயவர்த்தனே ஆட் சிக்கு வந்ததும் ஜே.வி.பிக்கு பொதுமன்னிப்பு வழங்கி அனைவரையும் விடுதலை செய்தார். அப்போது ஜே.வி.பி. சுயவிமர்சனம் செய்து கொண்டு தவறுகளைத் திருத்திக் கொள்ளுவதாக தமது நிலைப்பாடுகளில் பலமாற்றங்களை அறிவித்தார் விஜியவீரா.

“புரட்சிகர மார்க்சியக் கோட்பாடுகளைப் புறக்கணித்து, வர்க்கப் போராட்டத்துக்குப் பதிலாக வர்க்க சமரசத்தைக் கடைப்பிடித்தது. சர்வதேசியத்துக்குப் பதிலாகக் குறுகிய இனவெறி மற்றும் தேசிய வெறியில் மூழ்கியது ஆகிய காலகட்டம் எமது வரலாற்றின் இருண்ட அத்தியாயம்” என்று ஜே.வி.பி. அதிகாரப்பூர்வ சுயவிமாசனம் செய்து கொண்டது.

‘இந்திய விரிவாக்க ஆதிக்கம்’ என்ற கருத்தை ஜே.வி.பி. கைவிட்டது. ஈழத்தமிழர் தனித் தேசிய இனமென்றும் அதற்கு மொழி மற்றும் பிற சம உரிமைகள் தர வேண்டும் என்றும் அறிவித்தது. மலையகத் தமிழ்த் தோட்டத் தமிழர்களைப் புறக்கணித்தது தவறென்று ஒப்புக் கொண்டது.

‘தனி ஈழம்’ கோரிக்கையை முன்வைத்து ஈழத்தமிழரின் ஏகமனதான ஆதரவு பெற்றுத் தேர்தலில் வெற்றி பெற்று இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியாக வந்தது தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி. ‘தனி ஈழம்’ கோரிக்கை வலுத்து, ஆயுதந்தாங்கிய ஈழப்போராளிக் குழுக்களின் நடவடிக்கைகள் துவங்கின. அதே சமயம் நாடாளுமன்ற சமரசப்பாதையில் ஜே.வி.பி அடியெடுத்து வைத்தது. அதற்கேற்ப தேசிய இனப்பிரச்சினையில் சந்தாப்பவாத அரசியலில் தஞ்சம் புகுந்தது. தமிழ்த் தேசிய இனத்துக்கு எதிராக அரசு பயங்கரவாதத்தை ஏவி அடக்குவதையும் உரிமைகள் மறுக்கப்படுவதையும் ஜே.வி.பி. எதிர்ப்பதாகக் கூறியது. ஆனால் மூலாதார வசதிகளற்ற சிறிய பிராந்தியமான ஈழம் தனி நாடாக முடியாது என்றும், ஒன்றுபட்ட இலங்கை சோசலிசப் புரட்சியிலேயே இனப்பிரச்சினை தீர்க்கப்படும் என்றும் 1980 வரை கூறி வந்தது.

இந்த நிலைப்பாடுகளிலிருந்து சரிந்து சுயநிர்ணய உரிமை, அதிகாரப்பகிர்வு, கூட்டமைப்பு ஆகிய ‘எல்லாத் தீர்வுகளையும் எதிர்க்கத் தொடங்கியது. 1982 மேயில் ஜே.வி.பி. மத்தியக் குழு பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றியது. “முதலாளித்துவ ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் தான் ஈழம் கோரிப்போராடும்படி தூண்டுகின்றன. பயங்கரவாத இயக்கம் கேடானது; மக்களுடைய நலனுக்கு ஏற்றதல்ல. எனவே ஈழ பயங்கரவாத இயக்கத்தை நாங்கள் எதிர்க்கிறோம்”. இது சிங்கள இனவெறி மற்றும் தேசிய வெறிக்கும் வர்க்க சமரசத்துக்கும் ஜே.வி.பி. திரும்பியதைக் குறித்தது.

1982 இலங்கை அதிபர் தேர்தலில் குதித்தது ஜே.வி.பி. ஜெயவர்த்தனே, பண்டாரநாயகா கட்சியின் கேப்பகடுலாவுக்கு எதிராகப் போட்டியிட்டு  41 சதவிகித ஓட்டுகள் பெற்று மூன்றாவதாக வந்தார். ரோகண விஜியவீரா மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில்களுக்குப் போட்டியிட்ட ஜே.வி.பி. 4 மாவட்டங்களில் 13 இடங்களைப் பிடித்தது.

1983 இனப்படுகொலை சம்பவங்களையொட்டி, ஈழப்போராளி அமைப்புகளுடன் கூட்டுச் சேர்ந்திருப்பதாகக் கூறி ஜே.வி.பி மற்றும் பிற போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகளை ஜெயவர்த்தனே அரசு தடை செய்தது. இன, மதவெறியைத் தூண்டி அதிகாரத்தைப் பிடிக்கும் சதியின் ஒருபகுதி என 1983 இனப்படுகொலையைச் சித்தரித்தது. ஒருபுறம் ‘பிளாட்’ முதலிய தமிழ்ப் போராளி குழுக்களுடன் இரகசியக் கூட்டுச் சேர்ந்து கொண்டும்,  மறுபுறம் சிங்கள இனவெறியைத் தூண்டி தமிழர்களைத் தாக்கியும் வருவதாக ஜே.வி.பி. மீது குற்றம் சாட்டியது.

ஆனால் ஜே.வி.பியோ “வடக்கில் வகுப்புவாத இயக்கம்” என்றும் “பயங்கரவாத நடவடிக்கைகள்” என்றும் ஈழப் போராட்டங்களைச் சாடியது. பிறகு ஈழப் போராளி அமைப்புகள் இந்திய விரிவாக்க ஆதிக்கத்துக்குத் துணைபோகும் தேசத்துரோக அமைப்புகள் என்றும் பிரச்சாரம் செய்தது. இதன் மூலம் சிங்கள இளைஞரிடையே மீண்டும் இரகசிய அமைப்புகளைக் கட்டத் துவங்கியது: அரசு எந்திரத்துக்குள் ஊடுருவி இரகசியக் குழுக்களைக் கட்டியது.

பிரிவினைவாத, இனவெறி பிடித்த தமிழர்களைக் கருவியாகக் கொண்டு அமெரிக்க ஏகாதிபத்திய ஆதரவோடு நாட்டைப் பிளவுபடுத்தும் இந்திய முதலாளிகளின் சதிதான் சமாதான முயற்சிகள் என்று ஜே.வி.பி. பிரச்சாரம் செய்தது இந்திய – இலங்கை ஒப்பந்தம், இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பு போர் ஆகியன ஜே.வி.பி.க்கு அரசியல் மேலாண்மையைக் கொடுத்தது. இந்திய விரிவாக்க ஆதிக்கம் குறித்த ஜே.வி.பி.யின் கணிப்பு – எச்சரிக்கை நிரூபணமாகியதோடு, இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிரான தேசபக்த எழுச்சியின் தலைமையாக மையமாக ஜே.வி.பி. மாறியது

தேசபக்த மக்கள் முன்னணி (டி.ஜே.வி) என்ற அமைப்பை உருவாக்கியது இந்திய –  இலங்கை ஒப்பந்தத்தை ரத்து செய்வது; இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தை வெளியேற்றுவது; ஜெயவர்த்தனே ராஜினாமா, நாடாளுமன்ற கலைப்பு, புதிய தேர்தல்கள் நடத்துவது; ஜே.வி.பி.க்கு எதிரான தடையை ரத்து செய்வது போன்ற ஆறு கோரிக்கைகளை டி.ஜே.வி. மூலம் வைத்தது.

இவற்றுக்கு மக்களிடையே ஆதரவு பெருகியது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் பல நாட்கள் ஆர்ப்பாட்டங்களும், வேலை நிறுத்தங்களும் நடத்தவே கல்வி நிறுவனங்கள் அனைத்தும் பல மாதங்கள் மூடப்பட்டன. போக்குவரத்து, மின்துறை மற்றும் துறைமுகத் தொழிலாளர்கள் உட்பட  அனைத்துப் பிரிவினரும் பலநாள் வேலை நிறுத்தங்கள் நடத்தவே தொழில்கள் முற்றாக முடக்கப்பட்டன. தொடர்ச்சியாகப் பலநாட்கள் அரசுக்கு எதிரான பொது வேலைநிறுத்தங்கள் வெற்றிகரமாக நடந்து பொருளாதாரமும் நிர்வாகமும் நிலைகுலைந்து போயின அரசு இயந்திரங்களுக்குள்ளாகவே ஜே.வி.பிக்கு ஆதரவு  பெருகி பலமுறை சிறைத் தகர்ப்புகள்  –  ஆயுதப் பறிப்புகளை வெற்றிகரமாக நடத்தினர்.

இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு மக்கள் அமைப்புகளையும், இயக்கங்களையும் கட்டி தேசியப் புரட்சியாக வளர்த்தெடுக்கத் தவறியது ஜே.வி.பி. அது உருவாக்கிய டி.ஜே.வி.யே கூட முழுக்கவும் இராணுவ ரீதியில் கட்டி தனிநபர் பயங்கரவாத நடவடிக்கைகள், சதி மற்றும் நாசவேலைகளுக்காகவே பயன்படுத்தப்பட்டது. ஆக்கிரமிப்பு எதிர்ப்பு தேசியப் புரட்சிக்கான கடமைகளையும், உள்நாட்டில் வர்க்கப் போராட்டக் கடமைகளையும் கலந்து குழப்பியது எனவே, தேசபக்த, ஜனநாயக சக்திகளை முழுமையாகத் திரட்டத் தவறியது.

இந்திய – இலங்கை ஒப்பந்த ரத்து, இந்திய இராணுவ வெளியேற்றம் என்ற கோரிக்கைகளுக்காக பொது அரசியல் வேலைநிறுத்தம் இந்தியப் பொருட்களைப் புறக்கணிப்பது போன்ற இயக்கங்களை நடத்தியது. இருந்தபோதும், அவற்றைவிட முக்கியமாக தனிநபர் அழித்தொழிப்புக்களைச் செய்தது. மற்ற பிற அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரமுகர்களோடு தொண்டர்களையும் கொன்றது அரசு அதிகாரிகளையும் சாதாரண ஊழியர்களையும் கொன்றது.

பிறகு தனிநபர் பயங்கரவாதம் முற்றி மிருகத்தனமான கொலைவெறியாக மாறியது. கிராம சேவகர்கள், கிராமோதயா மண்டல தலைவர்கள், விவசாய அதிகாரிகள், பள்ளி-கல்லூரி முதல்வர்கள், ஆசிரியர்கள் அதே போல நகரவைகளைச் சேர்ந்தவர்கள் பலர் கொல்லப்பட்டனர். வானொலி, வானொளி, பத்திரிக்கைகள் போன்ற பிரச்சார சாதனங்கள், மருத்துவமனைகள், கோர்ட்டுகளில் யாரும் பணியாற்றக் கூடாது என்று தடைவிதித்தது ஜே.வி.பி: அந்தக் கட்டளையை மீறியதாக அந்நிறுவனங்களின் தலைவர்களோடு ஊழியர்களைக் கொன்றது.

ஜே.வி.பி.யின் கொலைப் பட்டியல் மேலும் விரிவாக்கப்பட்டது. சிறுதிருடர்கள், கள்ளச்சாராயக்காரர்கள் முதல் பத்திரிக்கை முகவர்கள், விநியோகிப்பவர்கள், அரசு லாட்டரி சீட்டு விற்பவர் மட்டுமல்ல: கொலையுண்டவர்களுக்கு மதச்சடங்கு செய்வோரும். அவற்றிலே கலந்து கொள்வோரும் கூட கொல்லப்பட்டனர்.

தமது தாக்குதல் நடவடிக்கைகளுக்கு யார் பலியாகிறார்கள் என்கிற அக்கறையும் ஜே.வி.பி.க்குக் கிடையாது. வயோதிகர்கள், குழந்தைகள் – சிறுவர்கள்,பெண்கள், பார்வையாளர்கள் – உறவினர்கள் ஆகிய அனைவரையும் கொன்றனர். மிகவும் குரூரமான முறைகளையும் மேற்கொண்டனர். தெருவிளக்குக் கம்பத்திலே கட்டி, டயர் மாலை போட்டுக் கொளுத்தினர்! தலைகளை வெட்டிப் பிணத்தைச் சாலையோரங்களில் வீசினர். இவை எதிரிகளை எச்சரிப்பதற்கானவையாகக் கருதினர்.

அதே சமயம் ‘மக்கள் புரட்சி செஞ்சேனை’, பச்சைப் புலிகள், தேள், கழுகுப்படைகள் என்கிற பெயரில் போலீசு மற்றும் தொழில்முறைக் கிரிமினல்களை வைத்து ஜெயவர்த்தனே பிரேமதாசா கும்பல் இரகசியக் கொலைக் குழுக்களைக் கட்டி ஜே.வி.பி. மீது ஏவியது. அவை ஜே.வி.பி. அணிகள் மற்றும் அப்படிச் சந்தேகிக்கப்படுவோர் மட்டுமின்றி இளைஞர்கள் அனைவரையுமே தேடிப்பிடித்து படுகொலைகள் செய்தன. சாலையோரங்கள், கடற்கரைகள், ஆறுகள், பள்ளி கல்லூரி வளாகங்களிலே பிணங்களை சிதறியடித்து பயபீதியை உருவாக்கினர்.

பாசிசத் தேர்தல் மோசடிகள் மூலம் பிரேமதாசா அதிபராகி இந்திய அரசுடன் புதிய பேரங்கள் நடத்த இந்திய இராணுவ விலக்கத்துக்கு சம்மதிக்க வைத்து விட்டார். அரசியல் முன் முயற்சியை இழக்கும் நிலைக்கு ஜே.வி.பி. தள்ளப்பட்டது. ஆனால் அதுவோ தற்கொலைக்கொப்பான இருமுடிவுகள் எடுத்தது. அரசு அலுவலகங்கள், வாகனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் தேயிலைத் தோட்டங்களைக் கொளுத்துவது; போலீசு இராணுவத்தினர் வேலையை விட்டு விலகிவிட வேண்டும், இல்லையேல் அவர்களது குடும்ப உறவினர் கொல்லப்படுவர் என எச்சரித்தது. இந்த இருமுடிவுகள் காரணமாக பரந்துபட்ட மக்களிடமிருந்து ஜே.வி.பி. தனிமைப்பட்டது; கணிசமான அளவு போலீசு – இராணுவத்துக்குள் ஊடுருவி ஆதரவாளர்களைப் பெற்றிருந்த போதும் ஜே.வி.பி. யினரைப் பழிவாங்கும் கொலைவெறியில் போலீசு – இராணுவத்தைத் தள்ளியது.

“ஜே.வி.பி.யி.னரின் ஒவ்வொரு கொலைக்கும் 14 ஜே.வி.பி.யினரைக் கொன்று பழிதீர்ப்போம்” என்று பிரேமதாசாவின் கொலைக் குழுக்கள் அறிவித்தன. அதனைத் தொடர்ந்து அரசு பயங்கரவாதமும், ஜே.வி.பி. பயங்கரவாதமும் உச்சநிலையை அடைந்தன. இலங்கையின் இன்றைய இளைய தலைமுறையே பூண்டோடு அழிக்கப்பட்டு விடுமோ என்கிற அளவு கொலைவெறி தாண்டவமாடியது. அதன் உச்சக்கட்டமாக ஜே.வி.பி.யின் நிறுவனத் தலைவர் ரோகண விஜியவீரா உட்பட அதன் தலைமை முழுவதும் பாசிச பிரேமதாசா கும்பலால் நயவஞ்சகமாகக் கொல்லப்பட்டது.

முழுக்கவும் இராணுவ – சதிமுறையிலான அமைப்பாகவே ஜே.வி.பி. மற்றும் டி.ஜே.வி. ஆகியன இயங்கி வந்ததால் அவற்றுக்குள் ஊடுருவி தலைமையை அழிப்பது அரசுக்கு வாய்ப்பாக அமைந்தது. இப்பெரும் பின்னடைவுக்குப் பிறகும் பியசிரி ஃபெர்னாண்டோ தலைமையில் ஜே.வி.பி மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது; பாரிய படிப்பினைகளைப் பெற மறுக்கிறது.

ஜே.வி.பி. தன்னை ஒரு மார்க்சிய – லெனினியப் பாட்டாளி வர்க்கப் புரட்சிகர அமைப்பாகக் கூறிக் கொண்ட போதிலும், அதற்கு மாறான, தவறான பல அடிப்படைகளைக் கொண்டிருக்கிறது.

★ ஸ்டாலின், மாவோ உட்பட மார்க்சிய – லெனினிய ஆசான்களின் சித்தாந்தங்களை ஏற்பதாகக் கூறிய போதும் உண்மையில் டிராட்ஸ்கிய சித்தாந்தப் பாதையையும், சேகுவாராவின் இராணுவப் பாதையையுமே ஜே.வி.பி. ஏற்று அமுலாக்கியது. கூடவே சிங்கள தேசிய இனவாதத்தையும் இணைத்துக் கொண்டது.

★ இலங்கை பெயரளவிலான சுதந்திரம் பெற்ற ஒரு நவீன காலனிநாடு என்று கணித்திருந்தது. இருந்தபோதும் அதன் யதார்த்த நிலைமைகளை ஆய்வு செய்து ஒரு புதிய ஜனநாயகப் புரட்சித் திட்டத்தை மேற்கொள்ளவில்லை. டிராட்ஸ்கிய சித்தாந்த அடிப்படையில் சோசலிசத் திட்டத்தை முன்வைத்தது. தேயிலை, ரப்பர் தோட்டங்களை அழித்துவிட்டு கூட்டுப் பண்ணைகளை அமைக்கும் கற்பனாவாத சோசலிசப் பொருளாதாரத் திட்டத்தை வைத்திருந்தது.

★ இலங்கையின் தொழிலாளர்களில் பெரும்பான்மையினர் இந்திய வம்சாவளி மலையகத் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள். குறுகிய சிங்கள பேரினவாதத்துக்குப் பலியான ஜே.வி.பி. அவர்களையும், ஈழத் தமிழர்களையும் புரட்சிக்குத் திரட்ட வேண்டிய பணியை நிராகரித்தது. சிங்கள இனவாத அரசியலை மையமாக வைத்து விரைவான ஆதரவைத் தேடி விடமுடியும் என்ற கருத்தில் சிங்கள இனவெறி புத்தபிக்குகள், சிங்கள முதலாளிகள் ஆகியோரோடு வர்க்க சமரசம் மேற்கொண்டது.

★ மலையகத் தொழிலாளர்களை மட்டுமல்ல, நகர்ப்புறத் தொழிலாளர்களும் புரட்சிக்குத் தலைமை தாங்கத் தகுதியற்றவர்கள் என்று நிராகரித்தது; அதே போல விவசாயிகளைத் திரட்ட வேண்டியதன் அவசியத்தை ஏற்கவில்லை. மாணவர்கள் மற்றும் நகர்ப்புற, கிராமப்புற வேலையற்ற இளைஞர்களைக் கொண்ட இராணுவ ரீதியிலான அமைப்பு மட்டுமே கட்டியது. பள்ளி கல்லூரி மாணவர்கள், வேலையில்லாத இளைஞர்கள், புத்த பிக்குகள், தேசியவாத புத்திஜீவிகள், சிங்கள – புத்த வியாபாரிகள் ஆகியோர் ஜே.வி.பி.யின் சமூக அடிப்படைகள்.

★ மக்கள் திரள் புரட்சிப் போராட்டங்கள், நீண்டகால மக்கள் யுத்தப்பாதை ஆகியவற்றை நிராகரித்து விட்டு சேகுவாராவின் இராணுவப் பாதையை ஜே.வி.பி. தெரிவு செய்து கொண்டது. அதன்படி இரகசியக் கொரில்லாக் குழுக்களைக் கூட்டி ஆயுதங்களைச் சேகரித்து திடீரென்று சிவில் – இராணுவத் தலைமையைத் தாக்கி அழிப்பது; போலீசு நிலையங்கள், இராணுவ முகாம்கள் முதலிய கேந்திர நிலைகளைத் தாக்கிக் கைப்பற்றுவது; இந்த ஆயுதந்தாங்கிய எழுச்சியின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பதுதான் ஜே.வி.பி.யின் இராணுவத்திட்டம், அதற்கு முன்னோடியாகத்தான் பல பயங்கரவாதச் செயல்களைச் செய்து அரசியல், பொருளாதார நிர்வாகத்தை நிலைகுலைக்க முயன்றது.

★ புரட்சியின் நண்பர்களையும் எதிரிகளையும் பகுத்தறிந்து, அணுகத் தவறியது. ஒருபுறம் வென்றெடுக்கப்பட வேண்டிய ஜனநாயக, தேசபக்த சக்திகளையும், அம்பலப்படுத்தித் தனிமைப்படுத்த வேண்டிய சமரச சக்திகளையும் எதிரிகளாகப் பாவித்து பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டது. மறுபுறம் தேசிய இனவெறிச் சக்திகளுடனும், ஆளும் வர்க்க பிரதிநிதிகளுடனும் சந்தர்ப்பவாதக் கூட்டுகள் வைத்துக் கொண்டது

இக்காரணங்களால் ஜே.வி.பி. ஒரு சிங்கள பேரினவாத சமூக பாசிச இயக்கமாகச் சீரழிந்து போனது. தற்போதைய பின்னடைவு, வீழ்ச்சியையும் சரிக்கட்டி அது மீண்டும் எழலாம். ஏனெனில் எல்லா நாடுகளிலுமே பாட்டாளி வர்க்கப் புரட்சி இயக்கத்துக்கு இணையாக குட்டி முதலாளித்துவ சீர்குலைவு அராஜகத்துக்கான அடிப்படைகள் நிலவுகின்றன.

மார்க்சிய – லெனினிய – மாவோ சிந்தனையைச் சித்தாந்த வழிகாட்டியாகக் கொண்ட, யதார்த்த நிலைமைகளுக்குப் பொருத்தமான புரட்சிகரத் திட்டம், அரசியல், இராணுவப்பாதை, போல்ஷ்விக் கட்சி, பாட்டாளி வர்க்க சர்வதேசக் கண்ணோட்டம் ஆகியவை மட்டுமே புரட்சியைச் சாதிக்க முடியும் என்ற இந்தப் படிப்பினையை மீண்டும் ஒருமுறை ஜே.வி.பி.யின் வரலாறு காட்டுகிறது.

ஆனால் எல்லா நாட்டிலும் புரட்சிகர இயக்கங்களின் அனுபவமும் இதுதான்! இன்னும் குறிப்பான, நமது நாட்டுப் புரட்சி இயக்கங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான சில படிப்பினைகளை ஜே.வி.பி. கொடுத்திருக்கிறது.

இடது தீவிரவாதத் தவறுகளைக் களைவது; மக்கள் திரளை வென்றெடுப்பது; பெரும்பான்மையான நிலைமைகளுக்கு ஏற்ப ‘தந்திரமாக’ நடந்து கொள்வது என்கிற பெயரில் பல குழுக்கள் ஜே.வி.பி.யின் தவறுகளையே இங்கே பின்பற்றுகின்றன. அரசியலற்ற தன்னார்வக்குழுக்கள் முதல் ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகள் வரை சந்தர்ப்பவாதக் கூட்டு வைத்துக் கொள்ளுகின்றன. இன்னும் சில குழுக்கள் அம்பேத்கர் போன்ற முதலாளித்துவ சீர்திருத்தவாதிகள், வன்னிய சங்கத் தலைவர் ராமதாஸ் போன்ற சாதி, மதவாதிகளுக்கு வால்பிடிக்கின்றன. மற்றும் சில குழுக்கள் தமிழரசன். பெருஞ்சித்திரனார் போன்ற இனவாதிகளைப் பின்தொடர்கின்றன அல்லது ‘தனித் தமிழ்நாடு’ போன்ற தேசிய இன முதலாளித்துவ முழக்கங்களைத் தாமே வரித்துக் கொள்ளுகின்றன.

பரபரப்பூட்டி குறுக்கு வழியில் விரை வான வெற்றியைச் சாதித்து விடும் வேகத்தோடு பாலங்கள் – சிலை தகர்ப்பு, அரசு அலுவலகங்கள் – வாகனங்களைக் கொளுத்துவது, வங்கிக் கொள்ளைகள், தனிநபர் அழித்தொழிப்பு போன்ற சாகசச்செயல்களில் சில குழுக்கள் ஈடுபடுகின்றன. இப்படிப்பட்ட தனிநபர் பயங்கரவாதச் செயல்களுக்காகவே – அவர்களின் சித்தாந்தம், அரசியல் – இராணுவப் பாதை எதுவானாலும் – ஜே.வி.பி.யையும், அதன் ஈழப் பதிப்பான புலிகளையும், இந்தியப் பதிப்பான தமிழரசன் குழுவையும் புகழ்ந்து தள்ளுகின்றன. இன்னும் மேலே போய் சீக்கிய மதவெறி தீவிரவாதிகளைக் கூட ஆதரிக்கின்றன. இவர்கள் மீது விமர்சனக் கண்ணோட்டம் வைப்பது கூட வறட்டுத்தனமான அணுகுமுறை என்று அக்குழுக்கள் சாடுகின்றன.

ஆனால் இம்மாதிரியான அணுகுமுறை புரட்சியை நோக்கி இந்தக் குழுக்களை அழைத்துச் செல்லாது. ஒருபுறம் வலது சந்தர்ப்பவாதிகளாகச் சீரழிக்கும் அல்லது எதிரிகளின் தாக்குதலுக்கு முகங்கொடுக்க முடியாமல் அழித்துவிடும். இந்தப் படிப்பினைகளைத்தான் ஜே.வி.பி இயக்கம் அளிக்கிறது.


சோமநாதன்

[01 – 15 ஜனவரி, 1990 புதிய ஜனநாயகம் இதழில் வெளிவந்த கட்டுரை]

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



ஜே.வி.பி. இடதுசாரி இயக்கமா? இனவெறி இயக்கமா? | பாகம் 1

தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் இலங்கைத் தேர்தல் முடிவுகளில் ஜே.வி.பி கட்சி முன்னிலை பெற்றுள்ளது. “இடதுசாரிகள் வெற்றி” என்ற வகையில் சிலரால் இந்த தேர்தல் முடிவு பார்க்கப்படுகிறது. ஜே.வி.பி. கட்சி இடதுசாரி இயக்கமா அல்லது இனவெறி இயக்கமா என்பது குறித்து டிசம்பர் 1989 புதிய ஜனநாயகம் இதழில் வெளிவந்த கட்டுரை தற்போது வாசகர்களுக்கு வழங்குகிறோம்.

***

ஜே.வி.பி. இயக்கம்தரும் படிப்பினைகள்! | பாகம் 1

ஜே.வி.பி.யை நிறுவித் தலைமையேற்று வழி நடத்தியவர் ரோகண விஜியவீரா என்று அனைவராலும் அறியப்பட்ட பெண்டிடான் நந்தசிரி விஜியவீரா. இலங்கையின் ‘இடதுசாரி’ இயக்கங்களின் இதயமாக தெற்கில் உள்ள மாத்தரா மாவட்டம் தங்கெல்ல பகுதியின் கொட்டகோடா கிராமத்தில் 1943 ஜூலை 14 ஆம் தேதி பிறந்தார். அவரது தந்தை உறுப்பினராக இருந்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் பள்ளி மாணவராகவிருந்த போதே இணைந்தார். அலியன் நானயக்காரா என்ற கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்குத் தேர்தல் பணிபுரிந்தார். அவரது உதவியால் 1960ல் உதவித் தொகை பெற்று மாஸ்கோவில் உள்ள சர்வதேச மக்கள் நட்பு நவு- பாட்ரீஸ் லுமும்பா பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்வி படிக்கப் போனார். அப்போது சர்வதேசக் கம்யூனிச இயக்கத்தில் பெரும் பிளவு ஏற்பட்டது.

1963-இல் விடுமுறைக்காகத் தாயகம் திரும்பிய விஜியவீரா சீன ஆதரவு கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரிப்பதாக ருஷ்ய அரசு அறிந்தது. எனவே அவர் மாஸ்கோ திருப்பி தனது படிப்பைத் தொடர அனுமதி மருந்து விட்டது. 1965ல் சண்முகதாசன் தலைமையிலான ‘சீன ஆதரவு’ கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியரானார், விஜியவீரா. உடனே இளைஞரணியின் படிப்பகம் பொறுப்பாளராக்கப் பட்டதால் நாடு முழுவதுமான கட்சியின் தீவிர இளைஞர்களின் தொடர்பு ஏற்பட்டது. சண்முகதாசன் கட்சி நிதியைக் கையாடல் செய்யும் ஒரு தொழிற்சங்கவாத – பிழைப்புவாதி; மார்சிஸ்டு அல்ல என்ற முடிவுக்கு ரோகண விஜியவீரா வந்தார். எனவே சணத், கருணரத்னே, லோகு அதுலா போன்ற பல்வேறு மட்டப் பொறுப்பாளர்களைக் கொண்ட ரகசியக் குழுவைக் கட்சிக்குள்ளேயே உருவாக்கினார். இதை அறிந்த சண்முகதாசன் ரோகண விஜிய வீராவையும், அவரது ஆதரவாளர்களையும் கட்சியை விட்டு வெளியேற்றி விட்டார்.

1970 ஆகஸ்டில் கொழும்பு ஹைடே பூங்கா பேரணியில் தான் ஜே.வி.பி. அமைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் 1966 ஏப்ரல் – மேயிலேயே விஜிய வீராவைப் பொதுச் செயலாளராகக் கொண்ட இரகசியக் கட்சியாக அமைத்து கிளைகளை உருவாக்கத் துவங்கி விட்டிருந்தனர். பொருளாதார நெருக்கடி, இலங்கையின் சுதந்திரம், இந்திய விரிவாக்கம், இலங்கை இடதுசாரி இயக்கம், இலங்கைக்கான புரட்சிப்பாதை ஆகிய ஐந்து வகுப்புகள் அணிகளிடையே நடத்தப்பட்டன. அவற்றில் ஜே.வி.பி.யின் அரசியல், இராணுவப் பாதைகள் பற்றிய நிலைப்பாடுகளை முன்வைத்தனர்.

★ இலங்கையின் காலனிய, நவகாலனிய முதலாளித்துவ அமைப்புதான் அரசியல், பொருளாதார நெருக்கடிகளுக்கு அடிப்படை. குறிப்பாக இந்தியத் தொழிலாளர்களை வைத்து தேயிலை ரப்பர் தோட்டங்களை அமைத்து சிங்கள விவசாயிகளை ஓட்டாண்டிகளாக்கி விட்டனர். எனவே அவற்றை அழித்து சுயச்சார்பு பொருளாதாரத்தைக் கட்டியமைத்து கூட்டுடைமை விவசாய – தொழிலை நிறுவ வேண்டும். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் சோசலிச சமுதாயத்தைப் படைப்பதன் மூலமே அது சாத்தியம்.

★ இந்திய மூலதனம், குறிப்பாக சிந்தி, போரா மற்றும் தமிழ் வியாபாரிகள் நடத்தும் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் நான் இலங்கைப் பொருளாதாரத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது. அதோடு கலாச்சார ரீதியிலான ஊடுருவல் மற்றும் இந்தியத் தமிழர்களின் ‘தாயக’ விசுவாசம் ஆகியவற்றைக் கொண்டு இனப்பிரச்சினையைத் தூண்டி இந்தியா தனது விரிவாக்க ஆதிக்க நோக்கங்களுக்குப் பயன்படுத்துகிறது.

★ ஏற்கெனவே அமைப்பு ரீதியில் திரட்டப்பட்டுள்ள நகர்ப்புற மற்றும் மலையகத் தொழிலாளர்கள் புரட்சிக்கு முன்வர மாட்டார்கள். எனவே கிராமப்புற பாட்டாளிகள், இளைஞர்கள், மாணவர்களைக் கொண்டு சேகுவாராவின் கியூபா பாணியிலான ஆயுதப் புரட்சியின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்.

மேற்கண்ட அடிப்படையில் கட்சி அமைப்புகளைக் கட்டவும், புரட்சிக்குத் தயாரிக்கவும் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன. முக்கியமாகப் பள்ளி கல்லூரி பல்கலைக் கழகங்களில் தேஷ்பிரின் சிஸ்ய சங்கமாயா என்ற மாணவர் அமைப்பும் தேஷ்பி ரேமி பிக்கு பெரமுனா என்ற புத்த சாமியார் அமைப்பும் கட்டப்பட்டன.

கோட்பாடு மற்றும் பிரச்சாரப் பணியை விஜிய வீரா ஏற்றார். தொழிலாளர், மாணவர், பெண்கள் மற்றும் பிக்குகளை அமைப்பாகத் திரட்டும் பணி சணத்துக்கும், ஆயுதங்களைச் சேகரிக்கும் பணி லோக்கு அதுலாவும் ஏற்றனர். ஒரு லட்சம் வெடி குண்டுகளும், துப்பாக்கிகளும் வெடி மருந்துகளும் சேகரிப்பது, ஒரு குறிப்பிட்ட நாளில் போலீசு நிலையங்கள் அனைத்தையும் தாக்கிக் கைப்பற்றுவது என்று திட்டமிட்டுத் தயாரிப்புகளில் ஈடுபட்டனர்.

“நாசவேலை, ஆட்சிக்கவிழ்ப்புக்கு” ஜே.வி.பி. தயாரிப்பதாக உளவறிந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசு ரோகண விஜிய வீராவை 1970 ஆரம்பத்தில் கைது செய்தது. அப்போது வந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் போலி சோசலிச மற்றும் போலி கம்யூனிசக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து வெற்றி பெற்ற சிரிமாவோ பண்டாரநாயகா கூட்டணி அரசு அமைத்தது. தேர்தலில் சிரிமாவோ கூட்டணியை ஜே.வி.பி. ஆதரித்து வேலை செய்திருந்தது. எனவே 1970 ஜூலையில் ரோகண விஜிய வீரா விடுதலை செய்யப்பட்டார்.

உடனடியாக நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஆயுதப் புரட்சிக்கான ஆதரவு திரட்டினார், விஜிய வீரா. போலீசு நிலையங்களைத் தாக்கிக் கைப்பற்றுவது சிரிமாவா பண்டாரநாயகாவைக் கடத்துவது அல்லது கொன்று விடுவது; இதன் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்றும் இந்தப் புரட்சிக்கான நாளாக 1971 ஏப்ரல் 8ந் தேதி குறிக்கப்பட்டது.

ஆனால் 1971 மார்ச்சு 10த் தேதி வெடி குண்டுகள் தயாரித்துக் கொண்டிருந்த போது வெளிமாடா, நெலுன்தேனியா ஆகிய இடங்களில் குண்டுகள் வெடித்து விபத்துக்கள் நடந்தன. 5 இளைஞர்கள் மாண்டனர். அதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு கொழும்பு அமெரிக்கத் தூதரகத்தை ஜே.வி.பி. தாக்கியதில் ஒரு போலீசு அதிகாரி கொல்லப்பட்டார். அடுத்த வாரம் பெரதேனியா பல்கலைக்கழக விடுதியில் ஒரு குண்டு வெடித்தது. அங்கு சோதனையிடவே ஏராளமான ஆயுதங்களும் வெடி பொருட்களும் சிக்கின.

எச்சரிக்கை அடைந்த போலீசு 1971 மார்ச்சு 13ந் தேதி ஐந்து பேரோடு சேர்த்து மீண்டும் விஜிய வீராவைக் கைது செய்தது. உடனடியாகப் புரட்சியை நடத்தி அதிகாரத்தைப் பிடித்துவிட வேண்டும் என்று ஒரு பிரிவினர் கட்சிக்குள் நிர்பந்திக்கத் துவங்கினர். ஏப்ரல் 2ந்தேதி வித்யோதயா சங்கரமாயாவில் கூடிய ஜே.வி.பியின் அரசியல் தலைமைக்குழு புரட்சிக்கான தேதியை முன் தள்ளியது. 1971 ஏப்ரல் 5-ந் தேதி இரவு 11 மணிக்கு தாக்குதலைத் தொடுப்பது என்றும் 500 பேர் கொண்ட படை அனுப்பி விஜிய வீராவை விடுவிப்பது என்றும் தீர்மானமானது. வெற்றியைப் பிரகடனம் செய்யும் வானொலி உரைகூட தயாராகி விட்டது.

ஆனால் புரட்சியைத் துவங்குவதற்கான தகவல்கள் சரியாகப் போய்ச் சேரவில்லை. ஏப்ரல் 5தந் தேதி அதிகாலை 5 மணிக்கே வெள்ளிவாயா போலீசு நிலையத்தைத் தாக்கி 2 போலீசாரைக் கொன்றனர். 2 ஜே.வி.பியினரும் மாண்டனர். உடனடியாக 5 மாவட்டங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு போலீசு எதிர் நடவடிக்கைகளில் இறங்கி விட்டது. அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே நாட்டில் அவசரநிலை பிறப்பித்திருந்தனர்.

சிரிமாவோவைக கொல்வது அல்லது கடத்துவது, விஜிய வீராவை விடுவிப்பது ஆகிய இரண்டு முயற்சிகளும் தோற்றுப் போயின. ஆனால் ரெயில் மற்றும் சாலைப் போக்குவரத்துகள், செய்தித் தொடர்புகள், மின் இணைப்புகள் ஆகியவற்றைத் துண்டித்து முற்றாகச் செயலிழக்கச் செய்வதில் ஜே.வி.பி.யினர் வெற்றி பெற்றனர். 92 போலீசு நிலையங்களைத் தாக்கி 56ஐ நாசப்படுத்தினர். 32ஐத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். 43ஐ கைவிட்டு போலீசரர் ஓடிவிட்டனர். 305 போலீசு காரர்களும் 63 சிவிலியன்களும் கொல்லப்பட்டனர்.

இந்த ஆரம்பநிலை வெற்றிக்குப் பிறகு இராணுவம் எதிர்த் தாக்குதல் தொடுத்தது. இந்தியாவும் இங்கிலாந்தும் இராணுவத்தை அனுப்பின. ருஷ்யா, ஆஸ்திரேலியா, யுகோஸ்லாவியா ஆகியன ஆயுத உதவிகள் அனுப்பின. 17 நாட்களில் ஜே.வி.பியின் புரட்சி முற்றாக ஒடுக்கப்பட்டது. ஏப்ரல் 22ந் தேதி கடைசியாக அதன் கட்டுப்பாட்டில் இருந்த எல்பித்தியா பிராந்தியம் வீழ்ந்தது.

மொத்தம் 1200 ஜே.வி.பி.யினர் கொல்லப்பட்டதாக, சரணடைந்த 4200 பேர் உட்பட 23,000 பேர் கைதாகியதாக அரசு அறிவித்தது. ஆனால் ஏறக்குறைய 20,000 இளைஞர்கள் (அவர்களிலே 90 சதவிகிதத்தினர் 18-25 வயதினர்) கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல். 32 பேர் சதிக்குற்றத்தின் கீழ் ஆயுள் தண்டனை பெற்றனர். 15,000 பேர் வழக்கின்றியும், மீதிப்பேர் படிப்படியாகவும் விடுவிக்கப்பட்டனர். அவர்களும் 1975 வரை போலீசின் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். அனைவருக்கும் அரசு வேலைகள் நிரந்தரமாக மறுக்கப்பட்டது. ஏறக்குறைய செயலிழந்த நிலைக்கு ஜே.வி.பி. தள்ளப்பட்டாலும் நீறு பூத்த நெருப்பாக இருந்தது.

(அடுத்த இதழில் முடியும்)


சோமநாதன்

[16 – 31 டிசம்பர், 1989 புதிய ஜனநாயகம் இதழில் வெளிவந்த கட்டுரை]

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



சிதம்பரம் நடராஜர் கோவில் வருமானம்-சொத்துக்கள்: தின்று கொழுக்கும் தீட்சதர்கள் | தோழர் சாந்தகுமார்

சிதம்பரம் நடராஜர் கோவில் வருமானம்-சொத்துக்கள்:
தின்று கொழுக்கும் தீட்சதர்கள் | தோழர் சாந்தகுமார்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் | தோழர் விஜயன்

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் | தோழர் விஜயன்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

லெபனான் மீதான இஸ்ரேலின் பயங்கரவாதம் – மக்கள் அதிகாரம் கண்டனம்

19.09.2024

லெபனான் மக்கள் மற்றும் போராளிகளை திட்டமிட்டு
குறி வைத்து படுகொலை செய்த இஸ்ரேல்!

இஸ்ரேல், அமெரிக்கா மட்டுமல்ல,
பன்னாட்டு நிறுவனங்கள் இணைந்து செய்த சதி!

பாலஸ்தீன ஆதரவு இயக்கங்களை திசை திருப்பி
உலகப்போராக மாற்றும் சதி!

பத்திரிகை செய்தி

டந்த செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) லெபனான் நாட்டிலுள்ள மக்களையும் போராளிகளையும் குறிவைத்து இஸ்ரேல் உளவு படை நடத்திய வெடிகுண்டு தாக்குதல்கள் உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளன.

ஹிஸ்புல்லா அமைப்பு தகவல்களை பரிமாறிக் கொள்ள தைவான் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்திடம் இருந்து பெற்ற சுமார் 5,000 பேஜர் கருவிகளில் வெடிகுண்டு பொருத்தப்பட்டு, அதற்குரிய சமிக்ஞை கொடுத்து வெடிக்க வைக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு அடுத்த நாள் இதே வகையில் வாக்கி டாக்கி கருவிகளும் சோலார் பேனல்களும் வெடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் பயங்கரவாத படுகொலை நடவடிக்கைகளுக்கு எதிராக உலகம் முழுவதும் மக்கள் போராடி வருகிறார்கள்.

இஸ்ரேல் பாசிச அரசின் பிரதமர் நெதன்யாகு பதவி விலக வேண்டும் என்றும் இஸ்ரேல் மக்களும் போராடி வருகிறார்கள்.

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஹவுதி போராளி குழுக்களும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுக்கும் இந்த நிலையில்தான் இப்படிப்பட்ட பொதுமக்கள் மீதான பயங்கரவாத தாக்குதல் நடவடிக்கையை இஸ்ரேல் அரசு மேற்கொண்டுள்ளது.

இந்த பயங்கரவாத நடவடிக்கையை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது. இஸ்ரேல், அமெரிக்கா மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களும் இணைந்து இப்படிப்பட்ட பயங்கரவாத நடவடிக்கை மேற்கொண்டு இருக்க வாய்ப்பு இருக்கிறது.

பாலஸ்தீன ஆதரவு போராளி குழுக்களை ஆத்திரமூட்டி இஸ்ரேலுக்கு ஆதரவான நாடுகளின் மீது தாக்குதல் தொடுப்பதற்கான சதி வேலையும் இதுவாகும்.

பாலஸ்தீனத்துக்கு ஆதரவான மக்கள் இயக்கங்களை குலைக்கவும் திசை திருப்பவும் பாலஸ்தீனத்துக்கு எதிரான போரை உலகப்போராக மாற்றுவதற்கான சதி வேலைகளிலும் இஸ்ரேல் ஈடுபட்டிருக்கிறது.

இதற்கு எதிராக தங்கள் நாடுகள் இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதற்காக உலகம் முழுவதும் மக்கள் போராட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram