Sunday, November 9, 2025
முகப்பு பதிவு பக்கம் 74

வங்கதேச நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்: தெற்காசியாவில் சரியும் அமெரிக்க மேலாதிக்கம்!

ங்கதேசத்தில் கடந்த ஜனவரி மாதம் 7-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. ஆளுங்கட்சியான அவாமி லீக் தேர்தலை நடத்துவதன் மீது நம்பிக்கையில்லை என்று கூறி, பிரதான எதிர்க்கட்சியான வங்கதேசத் தேசியவாதக் கட்சி உள்ளிட்ட பதினேழு எதிர்க்கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்தன. மொத்தமுள்ள 300 இடங்களில் 223 இடங்களைப் பெற்று, ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் வெற்றியடைந்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து நான்காவது முறையாக வென்று பிரதமராகியுள்ளார் ஷேக் ஹசீனா.

முறைகேடுகள், எதிர்க்கட்சியினர் மீதான கைது நடவடிக்கைகள் மற்றும் வன்முறை வெறியாட்டங்களுக்கு மத்தியில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளதால், இத்தேர்தல் முடிவுகள் செல்லாது என அறிவிக்க வேண்டுமென்றும் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டுமென்றும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் ஷேக் ஹசீனா

பொதுவாக முதலாளித்துவ நாடாளுமன்றத் தேர்தல்கள், மக்களை ஏய்ப்பதற்கான ஒரு சடங்காகவே எல்லா நாடுகளிலும் நடத்தப்படுகின்றன. வங்கதேசத் தேர்தலோ சொல்லிக்கொள்ளப்படும் போலி ஜனநாயகச் சடங்குகளை கூட பின்பற்றாமல் முற்று முழுதான எதேச்சதிகாரமான முறையில் நடத்தப்பட்டுள்ளது.

தேர்தல் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பாகவே, எதிர்க்கட்சித் தலைவர்களையும் அவர்களது ஆதரவாளர்களையும் வேட்டையாடத் தொடங்கியது ஷேக் ஹசீனாவின் அரசு. கடந்த சில மாதங்களில் மட்டும், வங்கதேசத் தேசியவாதக் கட்சி (பி.என்.பி.) உட்பட பெரும்பாலான எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 20,000-க்கும் அதிகமானோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, கடந்த அக்டோபர் 28 அன்று எதிர்க்கட்சிகள் முன்னெடுத்த பேரணி வன்முறையில் முடிந்ததை அடுத்து ஏறக்குறைய 8,000 பேர் வரை கைது செய்யப்பட்டனர். தேர்தல் நடப்பதற்கு முந்தைய நாள் வரை இந்த வேட்டையை தொடர்ந்த ஹசீனா அரசு, ஜனவரி 6 அன்று வங்கதேசத்தில் ஏற்பட்ட ரயில் தீ விபத்தைக் காரணம் காட்டியும் எதிர்க்கட்சியினரை கைது செய்து சிறையிலடைத்தது. சிறையிடப்பட்ட பலர் அடுத்தடுத்து சிறையிலேயே உயிரிழந்து வருகின்றனர். மேலும், 2009-ஆம் ஆண்டிலிருந்து 600-க்கும் மேற்பட்டோர் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு காணாமல் போனவர்களின் குடும்பத்தினருக்காக ‘‘மேயர் டாக்’‘ என்னும் தனி அமைப்பே இயங்கி வருகிறது.


படிக்க: வங்கதேச ஆயத்த ஆடை தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கான போராட்டம் வெல்லட்டும்!


பொய்க் குற்றச்சாட்டு சுமத்தி கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிக்க பலர் காடுகளில் தஞ்சம் புகுந்து தலைமறைவாக இருந்து வருகின்றனர். காட்டுப்பகுதியில் கூடாரம் அமைத்து தலைமறைவாகத் தங்கியுள்ள பி.என்.பி. கட்சியின் ஆதரவாளரான 28 வயது பெண் ஒருவர் பி.பி.சி-க்கு அளித்த பேட்டியில், ‘‘நாங்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக தலைமறைவாக உள்ளோம், நாங்கள் எங்கள் மறைவிடங்களை மாற்றிக் கொண்டிருக்கிறோம். எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை’‘ என்கிறார்.

தனக்கு போட்டியாக உள்ள பி.என்.பி. கட்சியை செல்வாக்குமிக்க தலைவர்கள் இல்லாத கட்சியாக ஒடுக்கிய பிறகே தேர்தலை எதிர்கொண்டார் ஷேக் ஹசீனா. பி.என்.பி. கட்சியின் தலைவரும் வங்கதேசத்தின் முன்னாள் பிரதமருமான கலிதா ஜியா ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மகனும் கட்சியின் செயல் தலைவருமான தாரிக் ரஹ்மான் நாடு கடத்தப்பட்டு லண்டனில் உள்ளார். இவ்வாறு அக்கட்சியின் பெரும்பாலான தலைவர்கள் தேர்தலுக்கு முன்னரே சிறையில் அடைக்கப்பட்டு விட்டனர்.

எதிர்க்கட்சிகளே பங்குபெறாமல் தேர்தலை எதிர்கொண்ட ஷேக் ஹசீனா, இது நேர்மையான முறையில் நடத்தப்படும் தேர்தல்தான் என்ற பிம்பத்தை ஏற்படுத்த, சுயேட்சை வேட்பாளர்கள் என்ற பெயரில் அவாமி லீக் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களையே தேர்தலில் பங்குகொள்ள வைத்தார். மேலும் தனது கூட்டாளியான ஜாதியா கட்சியை (எர்ஷாத்) எதிர்க்கட்சியாக தேர்தலில் பங்குகொள்ள வைத்து, தனது கட்சிக்கு தேர்தலில் போட்டி இருப்பதாகக் காட்டிக்கொண்டார். இதன் காரணமாக மக்கள் அதிருப்தியடைந்ததனால் வெறும் 41 சதவிகித வாக்குகளே இத்தேர்தலில் பதிவாகின. ஒட்டுமொத்தத்தில், நாடாளுமன்றத் தேர்தலின் வழியாகவே ‘‘ஒரு கட்சி சர்வாதிகாரம்’‘ வங்கதேசத்தில் நிலைநாட்டப்பட்டிருக்கிறது. இத்தகைய எதேச்சதிகாரியான ஷேக் ஹசீனாவை இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் வாழ்த்துவதும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்டவை விமர்சிப்பதும், அந்தந்த நாடுகளின் நலன் சார்ந்தே நடந்து வருகிறது.

‘ஜனநாயத்திற்காக’ நீலிக்கண்ணீர் வடிக்கும் அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள்

வங்கதேசத் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளரான மேத்யூ மில்லர், ‘‘இந்தத் தேர்தல் சுதந்திரமாகவோ அல்லது நியாயமாகவோ நடைபெறவில்லை என்ற கருத்தை அமெரிக்கா மற்ற பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்கிறது. மேலும், தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கவில்லை என்பதற்கு நாங்கள் வருந்துகிறோம்’‘ என்று கூறியிருக்கிறார்.

‘‘ஜனநாயகத் தேர்தல்கள் நம்பகமான, வெளிப்படையான மற்றும் நியாயமான போட்டியைச் சார்ந்தவை. மனித உரிமைகளுக்கான மரியாதை, சட்டத்தின் ஆட்சி மற்றும் உரிய செயல்முறை ஆகியவை ஜனநாயக செயல்முறையின் இன்றியமையாத கூறுகள். ஆனால் நடந்து முடிந்துள்ள தேர்தலில் இந்தத் தரநிலைகள் பூர்த்தி செய்யப்படவில்லை’‘ என்று விமர்சித்துள்ளது பிரிட்டன்.

வாக்குப்பதிவு நாளுக்கு முன்னதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கணிசமான எண்ணிக்கையில் கைது செய்யப்பட்டிருப்பது கவலை அளிப்பதாகக் கூறிய பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம், ‘‘பிரச்சார காலத்திற்கு முன்னும் பின்னும் நடந்த மிரட்டல் மற்றும் வன்முறைச் செயல்களை நாங்கள் கண்டிக்கிறோம். அரசியல் வாழ்வில் இத்தகைய நடத்தைக்கு இடமில்லை’‘ என்றது.

வங்கதேசத்தில் போலி ஜனநாயக நாடாளுமன்ற விதிமுறைகளைக் கூட மதிக்காமல், எதேச்சதிகாரமான முறையில் தேர்தல் நடந்திருப்பது முதன்முறையல்ல. கடந்த 15 ஆண்டுகால ஷேக் ஹசீனா ஆட்சியில், அந்நாட்டில் நடந்த அனைத்துத் தேர்தல்களும் வெவ்வேறு அளவுகோல்களில் இதே எதேச்சதிகாரத் தன்மையுடனேயே நடந்துள்ளன. குறிப்பாக, 2008-ஆம் ஆண்டு ஷேக் ஹசீனா ஆட்சிக்கு வந்த பிறகு வங்கதேசம் படிப்படியாக எதேச்சதிகார நாடாக மாற்றப்பட்டு வருகிறது. சிறுபான்மையினர், தொழிலாளர்கள், விவசாயிகள், உழைக்கும் மக்கள் மீதான தாக்குதல்களும் அடக்குமுறைகளும் சுரண்டலும் தீவிரமடைந்து வருகின்றன. இடதுசாரிகள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் எதிரிகள் ஆகியோர் கைது செய்யப்படுவது, காணாமல் ஆக்கப்படுவது, கொலை செய்யப்படுவது என காட்டுமிராண்டித்தனமான முறையில் வேட்டையாடப்பட்டு வருகின்றனர்.

2008-க்குப் பிறகு இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் ஆளும் அவாமி லீக் கட்சி பல்வேறு தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டும், மேற்கு நாடுகள் அதைக் கண்டுகொள்ளாமல் இருந்து வந்தன. இந்தத் தேர்தல் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதற்காக பல பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டதோடு, பலர் கொல்லப்பட்டும் உள்ளனர். ஷேக் ஹசீனா அரசாங்கம் தேர்தல் நடத்துவதன் மீது நம்பிக்கை இல்லை என்று கூறி 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலையும் எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.

அப்போதெல்லாம் வங்கதேசத்தின் ’ஜனநாயகம்’ கேள்விக்குள்ளாக்கப்பட்டது குறித்து அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் வாயைத் திறந்ததில்லை. இதே ஷேக் ஹசீனாவின் ஆட்சியில்தான் வங்கதேசத்தின் ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் மிகக் கடுமையாகச் சுரண்டப்பட்டு வருகின்றனர். இந்தச் சுரண்டலின் மூலம் ஆதாயமடைந்து வருபவை அமெரிக்க, ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்களே. ஆனால், இந்தத் தேர்தலின்போது ஷேக் ஹசீனாவின் எதேச்சதிகார போக்கும் நடந்து முடிந்த தேர்தலும் உலகம் முழுக்க பேசுபொருளானதற்கு, மேற்குலக ஊடகங்கள் திட்டமிட்டு இதனைக் கையிலெடுத்ததே காரணம். அமெரிக்க – பாகிஸ்தான் ஆதரவு கலிதா ஜியா கட்சியின் மீதான கடுமையான ஒடுக்குமுறையும், சீனா- ரஷ்யாவுடன் ஷேக் ஹசீனா அரசு நெருக்கமான உறவுகளை உருவாக்கி வருவதுமே அமெரிக்க – ஐரோப்பிய நாடுகளின் கூப்பாடுக்குக் காரணம்.

வங்கதேசத்திலும் ஆட்டம் காணும் அமெரிக்க மேலாதிக்கம்

அமெரிக்காவின் ஒற்றைத்துருவ உலக மேலாதிக்கத்திற்குப் போட்டியாக வளர்ந்துவரும் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் தெற்காசிய நாடுகள் வர்த்தக ரீதியாகவும் ராஜதந்திர ரீதியாகவும் தொடர்ந்து நெருக்கமாகி வருகின்றன. இந்நிலையில், தற்போது வங்கதேசமும் அந்த பட்டியலில் இணைந்திருப்பது அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மீண்டும் ஷேக் ஹசீனா ஆட்சியை பிடித்திருப்பதன் மூலம் வங்கதேசம் மென்மேலும் சீனாவின் கட்டுப்பாட்டிற்குக் கீழ் செல்வதை இந்த ஏகாதிபத்தியங்கள் விரும்பவில்லை.

கடந்த 2010-ஆம் ஆண்டு முதலே வங்கதேசத்திலும் அவாமி லீக் கட்சியிலும் தனது செல்வாக்கை அதிகரித்து வருவதன் மூலம் அங்கு சீனா மேலாதிக்கம் பெற்று வருகிறது. குறிப்பாக, தெற்காசியாவில் உள்ள மியான்மர் மற்றும் கம்போடியா போன்ற நாடுகளைப் போல வங்கதேசத்தையும் சீனாவை சார்ந்துள்ள நாடாக மாற்றும் இலக்கில், அங்கு சீனாவின் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன.

கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதியிட்ட ‘‘தி பிசினஸ் ஸ்டாண்டர்டு’‘ இதழின் கட்டுரையொன்று பின்வருமாறு குறிப்பிடுகிறது: ‘‘சாலை முதல் ரயில், துறைமுகம் மற்றும் விமான நிலையம் வரை, ஆற்றுக்கு அடியில் சுரங்கப்பாதை முதல் உயரமான அதிவிரைவுச் சாலை வரை, நீர் பயன்பாடு முதல் மின் ஆளுமை வரை, நிலக்கரி முதல் சூரிய ஆற்றல் வரை, நிதி, தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவத்துடன் சீனா தனது இருப்பை வங்காளதேசத்தில் எங்கும் உணர வைக்கிறது.’‘

இக்கூற்றை நிரூபிக்கும் வகையில், 2016 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் மட்டும் சுமார் 26 பில்லியன் டாலர்களை வங்கதேசத்தில் சீனா முதலீடு செய்துள்ளது. 2022-ஆம் ஆண்டில் 940 மில்லியன் டாலர் முதலீட்டுடன் வங்கதேசத்தின் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீட்டாளராக சீனா மாறியது. மேலும், வங்கதேசத்தின் முதன்மையான முதலீட்டாளராகவும் வர்த்தக பங்குதாரராகவும் சீனா இருந்து வருகிறது.


படிக்க: வங்கதேசத்தில் ஆடைத் தொழிலாளர்கள் போராட்டம்!


தற்போது இந்தியப் பெருங்கடலை அடைவதற்காக சீனா பயன்படுத்திவரும் மலாக்கா நீரிணையில் அமெரிக்கா அவ்வப்போது தொந்தரவு செய்து வருகிறது. இதனால், சீனா-மியான்மர் பொருளாதார வழித்தடத்தில் வங்கதேசத்தை இணைத்து, வங்கதேசத்தின் கங்கா-பத்மா-பிரம்மபுத்ரா நதியை பயன்படுத்துவதன் மூலம் கூடுதல் வழியை உருவாக்கவும் வர்த்தகத்தை விரிவுபடுத்தவும் சீனா திட்டமிட்டுள்ளது. மேலும், பட்டுப்பாதை திட்டத்தில் வங்கதேசத்தை இணைத்து 40 பில்லியன் டாலர் மதிப்பீட்டிலான திட்டங்களை நடைமுறைப்படுத்த ஒப்பந்தம் செய்திருக்கிறது சீனா.

சமீப காலமாக ரஷ்யாவும் வங்கதேசத்தில் தனது முதலீடுகளை அதிகரித்து வருகிறது. வங்கதேசத்தில் 2,400 மெகாவாட் திறன் கொண்ட ரூப்பூர் அணுமின் நிலையத் திட்டத்தில் ரஷ்யா 12 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ளது. இதனால் அமெரிக்கா எரிச்சலடைந்து தடைகள் விதித்ததன் காரணத்தினால், கடந்த 2022-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அணுசக்திப் பொருட்களை ஏற்றிச் செல்லும் ரஷ்யக் கப்பலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் இந்தியாவின் தலையீட்டினால் சரக்குகள் சாலை வழியாக கட்டுமானத் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. அணுமின் நிலையக் கட்டுமானத்திற்கான இந்தக் கடனை சீன யுவானில் திருப்பிச் செலுத்துவதன் மூலம் ரஷ்யா மீதான அமெரிக்கப் பொருளாதராத் தடைகளைக் கடந்து செல்ல இருநாடுகளும் முடிவு செய்துள்ளன.

இது மட்டுமின்றி, வங்கதேசத்தின் ஆயுத இறக்குமதியில் சீனாவும் ரஷ்யாவும் முதலிரண்டு இடங்களில் இருந்து வருகின்றன. மேற்சொன்ன அடிப்படையில் எல்லா வகையிலும் இவ்விரு நாடுகளின் மேலாதிக்கம் வங்கதேசத்தில் வளர்ந்து வருகிறது என்பது புலனாகிறது.

வங்கதேசத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கம் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதால், கடந்த சில ஆண்டுகளாகவே வங்கதேசத்திற்கு எச்சரிக்கை விடுப்பது, குடைச்சல் கொடுப்பது போன்ற வேலைகளில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. 2021 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளில் நடந்த ஜனநாயக உச்சி மாநாட்டிற்கு வங்கதேசத்திற்கு அழைப்பு விடுக்காமல் தவிர்க்கப்பட்டது. மேலும், 2021-ஆம் ஆண்டு டிசம்பரில் மனித உரிமை மீறல்களை காரணம்காட்டி வங்கதேசத்தின் உயரடுக்கு துணை ராணுவப் படையான ரேபிட் ஆக்ஷன் பட்டாலியனுக்கு (ஆர்.ஏ.பி.) அமெரிக்கா தடை விதித்தது. அதனோடு, பல மூத்த ஆர்.ஏ.பி. அதிகாரிகளின் சொத்து முடக்கம் மற்றும் விசா தடை ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆர்.ஏ.பி. தலைவர்களை ‘‘மரணக் குழுக்கள்’‘ என்று குறிப்பிட்டதோடு, வங்கதேசத்தில் பலர் காணாமல் போனதுடன் அந்த அதிகாரிகளை தொடர்புபடுத்தியது. இந்த நிகழ்வு அச்சமயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் உச்சமாக, கடந்த செப்டம்பர் மாதத்தில் ‘‘வங்கதேசத்தில் ஜனநாயகத் தேர்தல் செயல்முறையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நபர்கள்’‘ என்று கூறி வங்கதேசத்தின் ஆளும்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் விசா கட்டுப்பாடுகளை விதிப்பதாக அமெரிக்கா அறிவித்தது.

இந்நிலையில், நோபல் பரிசு பெற்றவரும் ஹிலாரி கிளிண்டனின் நெருங்கிய நண்பருமான வங்கதேசத்தை சேர்ந்த முகமது யூனுஸை வைத்து வங்கதேசத்தில் ஆட்சி மாற்றத்தை கொண்டுவர அமெரிக்கா முயற்சி செய்கிறது என்று செய்திகள் வெளியானதையடுத்து, முகமது யூனுஸ் மற்றும் அவரது நண்பர்களை கைதுசெய்து சிறையில் அடைத்தது ஷேக் ஹசீனா அரசு.

அமெரிக்காவிற்கு மாறான இந்தியாவின் அணுகுமுறை

ஷேக் ஹசீனாவின் வெற்றி குறித்து அமெரிக்காவிற்கு நேரெதிரான அணுகுமுறையை இந்தியா கையாண்டிருப்பது அமெரிக்காவிற்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி சீன சார்பு கட்சியாக உள்ளதால் பி.என்.பி. தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம். ஆனால், பி.என்.பி. பாகிஸ்தான் சார்பு கட்சி என்பதாலும் கடந்த காலங்களில் வர்த்தகம், எரிசக்தி மற்றும் பாதுகாப்பு போன்ற எந்த விவகாரத்திலும் இந்திய ஆளும் வர்க்கத்துடன் அக்கட்சி ஒத்துழைக்கவில்லை என்பதாலும் ஷேக் ஹசீனாவே மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமென்று இந்தியா விரும்பியது.

இதன் காரணமாக, ஷேக் ஹசீனாவின் வெற்றியை மேற்குலக நாடுகள் கடுமையாக விமர்சித்தபோதும் ஷேக் ஹசீனாவை தொடர்புகொண்டு அவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார் மோடி. மேலும், மேற்குலக நாடுகள் ஷேக் ஹசீனாவை கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்தபோது கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் வங்கதேசத் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த இந்திய வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவாத்ரா, ‘‘வங்கதேசத் தேர்தல் என்பது அவர்களின் உள்விவகாரம், வங்கதேச மக்கள் தான் தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும்’‘ என்றார்.

தமது நாட்டு ஆளும் வர்க்கங்களின் நலனையும், அவர்கள் வங்கதேசத்தில் போட்டுள்ள முதலீடுகளையும் முன்னிறுத்தியே இந்தியா இந்த அணுகுமுறையைக் கையாண்டு வருகிறது. குறிப்பாக, ஹசீனா ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்குமான நெருக்கம் அதிகரித்தது. சீன முதலீடுகள் வங்கதேசத்தில் அதிகரித்து வந்தாலும் இந்தியாவுடனான நெருக்கத்தை ஷேக் ஹசீனா துண்டித்துக் கொள்ளவில்லை. குறிப்பாக, வங்கதேச எல்லைப் பகுதியான வடகிழக்கு மாநிலங்களில் செயல்பட்டுவரும் கிளர்ச்சிக் குழுக்களை ஒடுக்குவதில் மோடியும் ஹசீனாவும் கைகோர்த்தனர். எனவே, கடந்த 2015-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தத்தை மேற்கொண்டதன் மூலம் இந்தியாவின் சில நிலப்பகுதிகளை விட்டுக்கொடுத்து 41 ஆண்டுகால எல்லைப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்தார் மோடி. இதன் விளைவாக, வங்கதேசத்தில் இந்தியாவின் முதலீடுகள் அதிகரிக்கத் தொடங்கின.

குறிப்பாக, ரூப்பூர் அணுமின் நிலையத்தை கட்டும் பணியில் ரஷ்யாவுடன் இந்தியாவும் இணைந்து ஈடுபட்டு வருகிறது. மேலும், கடந்தாண்டு வங்கதேசத்தில் உள்ள சட்டோகிராம் மற்றும் மோங்லா துறைமுகங்களில் போக்குவரத்து மற்றும் சரக்குக் கப்பல்களை அனுப்புவதற்கு இந்தியாவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் வங்கதேசத்திற்கு சரக்குகளை கொண்டு செல்லும் நேரத்தையும் செலவையும் குறைக்க முடியும். கடல் போக்குவரத்து மட்டுமின்றி இரு நாடுகளும் ரயில் போக்குவரத்தாலும் இணைக்கப்பட்டுள்ளன.

இது தெற்காசியாவில் இந்தியாவை தனது பேட்டை ரவுடியாக பாவித்து வந்த அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியாகும். அமெரிக்காவின் ஒற்றைத்துருவ உலக மேலாதிக்கம் சரிந்து வருவதன் விளைவாய் சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் அமெரிக்காவிற்கு போட்டியாக வளர்ந்து வருவது ஒருபுறம். மற்றொருபுறம், இத்தனை ஆண்டுகளாக அமெரிக்காவின் மேலாதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளின் தன்மையும் தற்போது மாறி வருகிறது. முன்பு போல அமெரிக்கா சொல்வதற்கெல்லாம் அடிபணிந்து போகாமல், தன் நாட்டு ஆளும் வர்க்கத்தின் நலனை முன்னிறுத்தி அணுகுவது என்ற நிலைக்கு பல நாடுகள் நகர்ந்துள்ளன.

இந்தியாவின் ஆட்சியதிகாரத்தில் அமர்ந்திருக்கும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிசக் கும்பலுக்கு தெற்காசிய நாடுகளை உள்ளடக்கிய ‘அகண்ட பாரதம்’ கனவு உள்ளதாலும், அக்கனவு அதானி-அம்பானிகளின் நலன்களுடன் பிணைக்கப்பட்டிருப்பதாலும் அதற்கேற்ற வகையில் தெற்காசிய பிராந்தியத்தில் காய் நகர்த்தி வருகிறது. வங்கதேசம் தொடர்பான இந்தியாவின் நடவடிக்கையிலிருந்து இதைத் புரிந்துகொள்ள முடியும். ஆனால், தனது மேலாதிக்கம் சரிந்து வருவதனால் அமெரிக்காவால் இந்தப் போக்கை தடுக்கவும் முடிவதில்லை.

மேலாதிக்கப் போட்டி: உழைக்கும் மக்களைச் சூழ்ந்து வரும் பேராபத்து

கடந்தாண்டில் தெற்காசியாவில் உள்ள இலங்கை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் அடுத்தடுத்து பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டு, உழைக்கும் மக்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். அவை அனைத்தும் அமெரிக்க-சீன மேலாதிக்கப் போட்டியின் விளைவாய் நடந்தவை.

இலங்கை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் சீனாவின் கடனாலும் முதலீட்டாலும் சீன மேலாதிக்கத்திற்குக் கீழ் சென்று கொண்டிருந்தன. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அமெரிக்கா, அந்நாடுகளுக்கான சலுகைகளை ரத்து செய்வது, நிதியை முடக்குவது, சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் மறுகாலனியாக்கத் தாக்குதல்களை தொடுப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இதனாலேயே அந்நாடுகள் அடுத்தடுத்துப் பொருளாதார நெருக்கடியில் சிக்கின. அந்த வகையில், வங்கதேசமும் தற்போது இத்தகைய சவாலை எதிர்கொண்டுள்ளது.

வங்கதேசத் தேர்தலுக்கு முன்பாகவே, அந்நாட்டின் முக்கியப் பொருளாதார ஆதாரமாக உள்ள பல பில்லியன் டாலர் மதிப்புகொண்ட ஆயத்த ஆடைத் தொழில் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்கும் அபாயம் உள்ளது என்ற பேச்சு அடிபட்டது. தொழிலாளர் உரிமைகளை ஷேக் ஹசீனா அரசு மதிக்கவில்லை என்ற காரணத்தை வைத்துக் கொண்டு இத்தகைய தடையை அமெரிக்கா முன்னெடுக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. வங்கதேசத்தின் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் 80 சதவிகிதத்திற்கு அதிகமான பங்கைக் கொண்டுள்ள அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும், அதன் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தால் வங்கதேச மக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாவர். மேலும், வெளிநாட்டவர்களுடன் இணைந்து பி.என்.பி. சதி செய்வதாகவும், வெளிநாடுகளில் இருந்து அவர்கள் உத்தரவுகளைப் பெறுவதாகவும் தேர்தல் பிரச்சாரத்தில் ஷேக் ஹசீனா கூறியது குறிப்பிடத்தக்கது.

இன்னொருபுறம், அமெரிக்காவின் பிடியில் இருக்கும் சர்வதேச நாணய நிதியத்திடம் இரண்டாம் கட்ட கடனைப் பெறுவதற்கான வேலைகளில் வங்கதேச அரசு ஈடுபட்டுள்ளது. இதன்மூலம், வருங்காலத்தில் வங்கதேச மக்கள் மீது விலைவாசி உயர்வு, சலுகை துண்டிப்பு, மக்கள் நல திட்டங்கள் ரத்து, மின்சாரம்-எரிபொருள் கட்டண உயர்வு போன்ற மறுகாலனியாக்கத் தக்குதல்கள் தொடுக்கப்படுவதற்கான அபாயமும் உள்ளது. இதனால், ஏற்கெனவே விலைவாசி உயர்வு, பணவீக்கம், ஊதிய வெட்டு போன்ற நெருக்கடிகளில் பாதிக்கப்பட்டுவரும் வங்கதேச மக்களின் வாழ்நிலை இன்னும் மோசமான நிலைக்குச் செல்லும்.

எனவே, வங்கதேசத்தின் உழைக்கும் மக்கள் இந்த அபாயத்தைப் புரிந்துகொண்டு இதற்கெதிரான போரட்டங்களை முன்னெடுப்பது அவசியமாகிறது. ஏற்கெனவே, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிரம்மாண்டமான போராட்டங்களில் ஆயத்த ஆடை தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், வங்கதேசத்தைக் குறிவைக்கும் அனைத்து ஏகாதிபத்தியங்களுக்கும், அவர்களது அடிவருடிகளான உள்நாட்டு ஆளும் வர்க்கங்களுக்கும் எதிரான போராட்டங்களாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். சீனா – அமெரிக்கா இடையிலான மேலாதிக்கப் போட்டியாலும், இந்தியாவின் பிராந்திய மேலாதிக்க நோக்கத்தாலும், நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள தெற்காசியவை சேர்ந்த அனைத்து நாட்டு உழைக்கும் மக்களும் இத்தகைய போராட்டங்களில் ஈடுபடுவதும், இதற்கேற்ப புரட்சிகர – ஜனநாயகச் சக்திகளின் ஒருங்கிணைப்பை உருவாக்குவதும் நமது கடமையாகும்.


துலிபா

(புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



கார்ப்பரேட் கடன் தள்ளுபடி ரூ 14 லட்சம் கோடி விவசாயிகளுக்கு பட்டை நாமம் | தோழர் அமிர்தா

கார்ப்பரேட் கடன் தள்ளுபடி ரூ 14 லட்சம் கோடி விவசாயிகளுக்கு பட்டை நாமம் | தோழர் அமிர்தா

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்குப் பின் ஜல்லிக்கட்டு போட்டியில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த ஜனவரி மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: 2017 ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்து ஏழாண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதற்கு இடைப்பட்ட காலத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது?

கோவில் வழிபாடு உள்ளிட்ட சமூக நடவடிக்கைகளில் நிலவும் சாதி ஆதிக்கத்தை எதிர்த்து சமத்துவத்திற்காகப் போராடுவதை போல ஜல்லிக்கட்டிலும் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கு போராட வேண்டும். தமிழ் தேசிய இனத்தின் பண்பாட்டு மரபில் தலையிட்டு ஜல்லிக்கட்டை தடை செய்த பாசிச ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலின் பார்ப்பனிய மேலாதிக்கத்திற்கு எதிராக தமிழ் மக்களின் மரபாக ஜல்லிக்கட்டு வரித்துக் கொள்ளப்பட்டதன் அடையாளம்தான் 2017 ஜல்லிக்கட்டுக்கான போராட்டம்.

ஆனால், அன்றைக்கும் கூட, அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும்தான் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டுமென்று, அ.தி.மு.க. அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனை மீறி தலித் மக்கள் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த முற்பட்டபோது, போலீசால் தாக்குதல்கள் நடத்தப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டன. இன்றும் அரசினால் அனுமதிக்கப்பட்ட இடங்களில்தான் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கின்றன. இதுவே, மிகப்பெரிய உரிமை பறிப்பாகும்.

அதேபோல், ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிகளில் மாடுகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் அவதூறுகளைத் தவிர்த்து, போட்டியில் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக மாடுகளுக்கு போதையேற்றுவது, விளையாட்டு வீரர்கள் போதையில் கலந்து கொள்வதைத் தடுப்பது, விளையாட்டு வீரர்களுக்குப் உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்வது, பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது போன்ற அவசியமான கட்டுப்பாடுகளும் முறைப்படுத்துதல்களும் தேவையாக உள்ளது.

ஆனால், இவை மட்டுமே ஒரு விளையாட்டை ஜனநாயகப்படுத்தும் முறை அல்ல. பல இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் சாதி ஆதிக்கம் வெவ்வேறு வகைகளில் வெளிப்படையாகக் கடைபிடிக்கப்படுகிறது. அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு போன்ற பெரிதும் அறியப்பட்ட, ஊடகங்களால் கவனம் கொடுக்கப்படுகின்ற இடங்களில் நேரடியாக சாதி கடைப்பிடிக்கப்படவில்லை. எனினும், பல இடங்களில் பல்வேறு வழிகளில் சாதி கடைப்பிடிக்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

தலித் பின்னணி கொண்ட திறமையான வீரர்களை, ஆதிக்கச் சாதியினர் பெரும்பான்மையாக உள்ள அணிகளில் இணைத்து, அவர்களை முன்னணியில் வரவிடாமல் தடுப்பது; வெளியூரில் இருந்து வருகின்ற தலித் மக்களின் மாடுகளுக்கு அனுமதி கொடுக்காமல் தவிர்ப்பது; அனுமதி கொடுக்கப்பட்ட உள்ளூர் தலித் மக்களின் மாடுகளை இயன்றவரை போட்டியில் ஈடுபடுத்தாமல் விட்டுவிடுவது போன்ற வகைகளில் சாதி தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக மக்கள் வேதனைப்படுகின்றனர். இவையெல்லாம் களையப்பட வேண்டும்.

அரசு தலையிடத் தொடங்கிய பின்னர், இப்போட்டிக்கான விதிமுறைகள் பொதுத்தன்மை பெற்று வருகின்றன. இருப்பினும், இவை இன்னும் வளர்த்தெடுக்கப்பட வேண்டியுள்ளது. மேலும், ஜல்லிக்கட்டுப் போட்டியை நெறிப்படுத்துவது என்ற முகாந்திரத்தில், இப்போட்டியை உழைக்கும் மக்களிடமிருந்து பிரிக்கும் போக்கும் அதிகரித்து வருகிறது.

ஆகையால், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும் மரபு ரீதியான பகுதிகளில் பாதுகாப்பான வகையில் விளையாட்டு மைதானங்களை அமைக்க வேண்டும். தற்போது தி.மு.க. அரசு மதுரையில் அமைத்திருக்கும் மைதானமும் (முதலாவது ஜல்லிக்கட்டு மைதானமாகும்), அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே அன்றி, கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் ஆதிக்க சக்திகளின் கட்டுப்பாட்டில் செல்லாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.

சில மாடுகளின் உரிமையாளர்கள் வீரர்களைத் தாக்குவது, வீரர்கள் முறைமீறல்களில் ஈடுபட்டால், அவர்களை போலீசை கொண்டு தாக்குவது போன்றவை நடக்கின்றன. இதனை தடுக்க முறையான விளையாட்டு நெறியாளர்கள், கள நெறியாளர்கள் போன்ற முறைகள் உருவாக்கப்பட வேண்டியுள்ளது.


படிக்க: எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமி – இதனை எப்படிப் பார்ப்பது?


மேலும், ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர் யார், வெற்றி பெற்ற மாடு எது என்பதற்கான விதிமுறைகளில் பொதுவில் குழப்பங்கள் இல்லையெனினும், முறைப்படுத்தல் தேவைப்படுகிறது. வாடிவாசலில் இருந்து மாடுகளை அவிழ்த்துவிடுவது, அதனைப் பிடிப்பது, சில காளை மாடுகள் விளையாட்டு மைதானத்தை விட்டு வெளியேறாமல் அங்கேயே சுற்றிவருவதால் வீரர்கள் காயமடைவது என பல அம்சங்களில் இம்முறைப்படுத்துதல் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஜல்லிக்கட்டில் பரிசுப்பொருளாக வழங்கப்படும் மோட்டார் சைக்கிள், அண்டா, மின்விசிறி, மெத்தை, நாற்காலி, பானை போன்றவையெல்லாம் இன்றைய வீரர்களுக்கு பயனளிப்பவை அல்ல. முதலிடம் பெற்ற வீரர்களுக்கு கார் பரிசாக வழங்கப்படுகிறது. ஆனால், தொடர்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டியில் அதிக மாடுகளை அடக்கி முதலிடம் பெற்றுவரும் அபிசித்தர் என்ற வீரர் தனக்கு கார் வேண்டாம், அரசு வேலை வேண்டும் என்று கோருவதானது, நாட்டில் நிலவும் வேலையின்மையின் உண்மை முகத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது.

கிரிக்கெட் போன்ற விளையாட்டுப் போட்டிகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் கைப்பற்றியிருக்கும் நிலையில், ஜல்லிக்கட்டையும் முறைப்படுத்துவது என்ற பெயரில் கார்ப்பரேட் ஆதிக்கம் புகுத்தப்படுவதற்கான முயற்சிகள் தடுக்கப்பட வேண்டும், மக்களின் பங்கேற்புடனான, சமத்துவத்தை வளர்க்கும் வகையிலான, மக்கள் பண்பாடாக அது தொடர்ந்து வளர்க்கப்பட வேண்டும்.

ஆனால், மக்கள் மத்தியில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள், சாதி-மத வேறுபாடுகளை ஒழிக்காமல் விளையாட்டுப் போட்டிகளை மட்டும் ஜனநாயகப்படுத்துவது தனியாக நடந்தேறிவிடாது. மேற்கண்ட அளவுக்கு இவ்விளையாட்டு முறைப்படுத்தப்பட்டதற்கு காரணம் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம்தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அந்தவகையில், சமத்துவ சமுதாயத்தைப் படைக்கும் நோக்கிலான ஒரு மக்கள் எழுச்சிதான், விளையாட்டைப் போன்று பண்பாட்டு, கலை, இலக்கியங்களிலும் ஜனநாயக உணர்வை வளர்த்தெடுக்கும்.


பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

(புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாசிச மோடி கும்பலை பணியவைக்கும்வரை விவசாயிகள் போராட்டம் ஓயாது

விவசாய விளைப்பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஹரியானா எல்லையில் லட்சகணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராடும் விவசாயிகள் மீது மோடி அரசால் கொடூரமான அடக்குமுறைகள் செலுத்தப்பட்டாலும் அதனையெல்லாம் மீறி விவசாயிகள் டெல்லியை நோக்கி முன்னேறுவதில் முனைப்பு காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் தொடர்பான செய்திகளை ஒரு நாள் மட்டுமே ஊடகங்கள் வெளியிட்டன. நேற்று (14.02.2024) நடந்த போராட்டச் செய்திகளை, பா.ஜ.க. பினாமி செய்தித்தாள்கள் (Godi Media) அனைத்தும் பத்தோடு பதினொன்றாக பின்தள்ளிவிட்டன.


படிக்க: விவசாயிகள் போராட்டமும் எதிர்க்கட்சிகளின் சந்தர்ப்பவாதமும்


கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி கோரிக்கைகளை நிறைவேற்றகோரி பஞ்சாபின் பல பகுதிகளிலிருந்து விவசாயிகளின் டிராக்டர் பேரணி தொடங்கியது. அன்றிலிருந்து இன்று வரை விவசாயிகள் மீது கொடூரமான ஒடுக்குமுறைகளைச் செலுத்தி வருகிறது மோடி அரசு. ஹரியானா மாநிலத்தின் 15 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது; இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது; விவசாயிகளை ஒடுக்க துணை ராணுவப் படையினரும் ஹரியானா மாநில போலிசும் குவிக்கப்பட்டுள்ளனர். கண்ணீர் புகைகுண்டுகளை வீசுவது, தண்ணீர் பீரங்கிகளை கொண்டு தாக்குவது, துப்பாக்கிச்சூடு நடத்துவது என விவசாயிகள் மீது அடக்குமுறைகள் செலுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளை தடுத்து நிறுத்த முள்வேலி அமைப்பது, தடுப்பு சுவர்கள் அமைப்பது, ஆணிகளை புதைப்பது போன்ற காட்டுமிராண்டித்தனமான முறைகளையும் கையாண்டு வருகிறது பாசிச மோடி அரசு.

இந்நிலையில், போராட்டத்தின் நான்காவது நாளான இன்று விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளது பாசிச மோடி அரசு. மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா, பியூஷ் கோயல் மற்றும் நித்யானந்த் ராய் ஆகியோருடன் இந்த பேச்சுவார்த்தை சந்திப்பு நடைபெறவுள்ளது.

ஏற்கனவே விவசாயிகளுடன் இரண்டுமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அது தோல்வியடைந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, முந்தைய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட இக்காலகட்டத்தில் விவசாயிகளின் அதிகாரப்பூர்வ சமூகவலைதள கணக்குகளை முடக்கும் வேலையை மோடி அரசு மேற்கொண்டது ஊடகங்களில் அம்பலமாகியிருந்தது. தற்போது, ஒருபுறத்தில் போராடும் விவசாயிகளை கடுமையாக ஒடுக்கிகொண்டே மற்றொருபுறத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ள மோடி அரசின் இந்த நயவஞ்கத்தை விவசாயிகள் புரிந்து கொண்டு போராட்டத்தில் உறுதியாக நிற்கின்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள எஸ்.கே.எம். (என்.பி) விவசாய சங்கத்தின் மூத்த தலைவர் ஜக்ஜித் சிங் “நாங்கள் ஹரியானாவுடனான மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகளில் அமைதியாக முகாமிட்டுள்ளோம். அரசாங்கம் முதலில் ஒரு சாதகமான சூழலை உருவாக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றாலும், கூட்டத்திற்கு நாங்கள் தயங்கவில்லை என்பதை மையத்திற்கு தெரிவித்தோம். ஒருபுறம் ஹரியானா அரசு கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளை பிரயோகித்து, மறுபுறம் பேச்சு வார்த்தை நடத்துகிறது”” என்ற பா.ஜ.க அரசின் நாடகத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், அம்பாலா அருகே ஹரியானாவின் ஷம்பு கிராமம் மற்றும் பஞ்சாபின் எல்லையான கானௌரி-ஜிண்ட் ஆகிய பகுதிகளை விவசாயிகள் அடைந்தபோது, பா.ஜ.க. ஆளும் ஹரியானாவிற்குள் நுழைய விடாமல் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். விவசாயிகள் எல்லையில் உள்ள பல தடுப்புகளை உடைக்க முயன்றபோது விவசாயிகள் மீது டிரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் படுகாயம் அடைந்தனர். இது போராடும் விவசாயிகளை ஒடுக்க இனவெறி இஸ்ரேல் அரசால் மேற்கொள்ளப்படும் வழிமுறை என்பது ஆங்கில செய்தி ஊடகங்களில் செய்திகள் வெளியாகி மோடி அரசின் கோரமுகம் அம்பலப்பட்டுப்போனது.


படிக்க : பிப்.13: டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஆதரிப்போம்! | தோழர் வெற்றிவேல்செழியன்


2020-ஆம் ஆண்டு மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடியபோதும் இத்தகைய தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. ஆனால், அதனையெல்லாம் கடந்து விவசாயிகள் மோடி அரசை பணியவைத்தனர். குறைந்தபட்ச ஆதார விலை என்ற விவசாயிகளின் வாழ்வாதார கோரிக்கையானது, பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசுக்கான கோரிக்கைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. இது இந்த அரசியல் அமைப்பு சட்டத்தால் நிறைவேற்றப்படாது என்பதே இத்தனை ஆண்டுகால அனுபவமாக உள்ளது. எனவே, விவசாயிகளின் ஜனநாயகப்பூர்வமான இக்கோரிக்கை மாற்று ஜனநாயக கட்டமைப்பின் தேவையை மக்களுக்கு உணர்த்துகிறது.

எனவே, மோடி அரசின் இந்த ஒடுக்குமுறைகள் எல்லாம் விவசாயிகளை தடுத்துவிட போவதில்லை. நாளுக்கு நாள் போராடும் விவசாயிகளின் எண்ணிக்கையும் போராட்டத்தின் வீரியமும் அதிகரித்துகொண்டு தான் சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் விவசாயிகள், உழைக்கும் மக்கள், மாணவர்கள் மத்தியில் விவசாயிகள் போராட்டத்திற்கான ஆதரவு அதிகரித்து வருகிறது. ஆளும் பாசிச மோடி அரசை அடிபணிய வைக்கும் வரை இந்த போராட்டம் ஓயப்போவதில்லை என்பது திண்ணம்.


சோபியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



காதலும் உழைப்பும்தான் மனித குலத்தின் ஆதாரவேர்கள்…

காதலும் உழைப்பும்தான் மனித குலத்தின் ஆதாரவேர்கள்…

ஆம் தோழர்களே காதல்தான் இந்த உலகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது…

நுகர்வு கலாச்சாரத்தில் சிக்கி தவிக்கும் காதலை மீட்டெடுக்க வேண்டிய தருணம் இது.

எது காதல் ஆண் பெண் மீதும் பெண் ஆண் மீதும் கொள்வது மட்டுமா காதல்..

விதவிதமான ஆடைகளையும் நகைகளையும் வாங்கி கொடுப்பது காதலா,

அது இல்லை தோழர்களே,

அடுத்த மனிதனின் நலனுக்காக உரிமைக்காக குரல் கொடுக்கும் ஒவ்வொரு மனிதனின் கோபமும் போராட்டமும் காதல்தான்…

காதலர் தினத்தன்று பூங்கொத்து கொடுப்பது இருக்கட்டும்,

காதலர் தினத்தன்று காதல் கடிதங்கள் எழுவது இருக்கட்டும்,

இந்த காதலர் தினத்தை வேறு விதமாக கொண்டாடுங்கள்.

கோரிக்கை மனுக்களை காதலியுடன் காதலுடன் அமர்ந்து எழுத கற்றுக் கொள்ளுங்கள்,

சமூகத்தில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் உங்களுடைய பங்கு உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள்!

வினையாற்றுங்கள்! தோழர்களே

வினையாற்றுங்கள்!

உலகையே புரட்டிப் போட்ட மூலதனம் என்ற நூலுக்கு ஜென்னி போட்ட ரொட்டிதான் மூலதனம் அல்லவா,
ஆகவே தோழர்களே காதலியுங்கள்!

உங்கள் காதல் சமத்துவத்தை உண்டாக்கட்டும்..‌.

உங்கள் காதல் சமூக மாற்றத்தை உண்டாக்கட்டும்…

உங்கள் காதல் சமூகத்தை முன்நகர்த்தி செல்லட்டும்…

காதலியுங்கள் தோழர்களே!

காதலியுங்கள் மார்க்ஸ் ஜென்னி போல்…


தினேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



தி கேரவன் பத்திரிகையின் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் பாசிச மோடி அரசை கண்டிக்கின்றோம்!

2023-ஆம் ஆண்டு திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2021-இன் திருத்தப்பட்ட விதிகள் அமலுக்கு வந்ததிலிருந்து சமூக ஊடகங்களை ஒடுக்கும் நோக்கில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது ஒன்றிய பாசிச மோடி அரசு.

இந்நிலையில், தி கேரவன் பத்திரிகையின் பிப்ரவரி மாத இதழில் “இராணுவ நிலையத்திலிருந்து அலறல்கள்” (Screams from the Army Post) என்கிற தலைப்பில் கட்டுரை வெளியாகியுள்ளது.

ரஜௌரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் இராணுவத்தினரால் செய்யப்பட்ட சித்திரவதை குறித்து கேரவன் இதழில் பத்திரிகையாளர் ஜதீந்தர் கவுர் துர் (Jatinder Kaur Tur) எழுதிய அக்கட்டுரையை 24 மணி நேரத்திற்குள் கேரவன் பத்திரிகையின் இணையதளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும், நீக்கத் தவறினால் முழு இணையதளமும் தடை செய்யப்படும் என்றும் தி கேரவன் பத்திரிகைக்கு மிரட்டல் விடுத்துள்ளது ஒன்றிய பாசிச மோடி அரசு.

இது குறித்து தி கேரவன் தனது X தள பக்கத்தில், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69A இன் கீழ் நோட்டீஸ் பெற்றுள்ளதாகவும், (அரசின்) இந்த உத்தரவை சட்டரீதியாக எதிர்கொள்ளப் போவதாகவும் கூறியுள்ளது. அரசு உத்தரவின் உள்ளடக்கம் குறித்து இரகசியம் காக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாகவும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதழில் வெளிவந்த கட்டுரை, டிசம்பர் 22, 2023 அன்று பூஞ்ச் நகரில் அடையாளம் தெரியாத ராணுவத்தினரால் மூன்று ஆண்கள் கொலை செய்யப்பட்டதை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது. இச்செய்தி ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டு,  புகாரும் அளிக்கப்பட்டது. இராணுவக் காவலில் அவர்கள் கொலை செய்யப்பட்டதாக உள்ளூர் மக்கள் கூறியுள்ளனர். மேலும், அவர்கள் சித்திரவதை செய்யப்பட்ட வீடியோக்கள் ஊடகங்களில் வைரலாகியிருந்தன. இதனையடுத்து தான் உள்ளூர் மக்களிடம் விசாரித்து தி கேரவன் பத்திரிக்கை கட்டுரையாக வெளியிட்டுள்ளது.

தி கேரவன் தனது கட்டுரையில், கொலை செய்யப்பட்ட 3 ஆண்களின் குடும்பங்களுக்கு கொலை செய்யப்பட்டது குறித்து விளக்கம் ஏதும் அளிக்காமல் ஒரு குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் வழங்கியதாக கூறியுள்ளது. மேலும்,  கொல்லப்பட்ட மூன்று ஆண்களும் 25 பேர் கொண்ட இராணுவத்தினால் அழைத்துச் செல்லப்பட்டு கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டனர் என்றும் அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

மூன்று ஆண்களின் கொலைகள் தொடர்பாக போலீஸ், இராணுவம் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளை  அணுகியபோது, கேரவன் பத்திரிக்கையின் கேள்விகளுக்கு இந்த அதிகாரிகள் பதிலளிக்க மறுத்துள்ளனர்.


படிக்க: “தி காஷ்மீர் வாலா” சுதந்திர ஊடகம் முடக்கம்: கருத்துச் சுதந்திரத்தின் மீதான மோடி அரசின் கொலைவெறித் தாக்குதல்!


கடந்த ஆண்டு ஜூன் மாதம், தி கேரவன் பத்திரிகையுடன் தொடர்புடைய மல்டிமீடியா பத்திரிகையாளர் ஷாஹித் தந்த்ரே (Shahid Tantray), ஜம்மு – காஷ்மீரில் இந்திய இராணுவத்தின் அடக்குமுறை குறித்து ஆராய்ந்தது தொடர்பாக இரண்டு கட்டுரைகளை வெளியிட்டதற்காக அவரையும், அவரது குடும்பத்தினரையும் பல மாதங்களாக  ஜம்மு – காஷ்மீர் போலீசு தொடர்ந்து அச்சுறுத்தி மிரட்டல் விடுத்த சம்பவம் அம்பலமானது குறிப்பிடத்தக்கது.

2023 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப விதிகள், செய்தி இணையதளங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களில் வெளியான கட்டுரைகளை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு தெரிவிக்காமலேயே அகற்ற தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திற்கு அவசரக்கால அதிகாரங்களை வழங்கியுள்ளது. இச்சட்டத்திருத்தத்தின் மூலம் பத்திரிகை சுதந்திரத்தை கேலிக்கூத்தாக்கியுள்ளது பாசிச மோடி கும்பல். இதைப் பயன்படுத்தித் தான் தி கேரவன் பத்திரிகையின் ஊடக சுதந்திரத்தை இந்த பாசிச கும்பல் தற்போது நசுக்கியுள்ளது.

பாசிச மோடி கும்பல் தனது இந்துராஷ்டிர கனவிற்காக பத்திரிகை சுதந்திரத்தை பறித்துக் கொண்டிருக்கிறது. பாசிச மோடியின் ஆட்சி ஊடகங்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் அச்சுறுத்தலான சூழலை உருவாக்கியுள்ளது. இனி பாசிச கும்பலின் அடக்குமுறைக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் குறித்து வாயையே திறக்க முடியாத நிலை ஏற்படும். தி கேரவன் பத்திரிகையின் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கத் துடிக்கும் பாசிச மோடி அரசின் நடவடிக்கையை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது.


மக்கள் அதிகாரம்
கோவை மண்டலம்
9488902202

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



சசிகாந்த் செந்திலின் வழிமுறை எத்தகையது?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த ஜனவரி மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: காங்கிரஸ் கட்சியில் இருக்கும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சசிகாந்த் செந்தில், காங்கிரஸ்க்கான தேர்தல் வியூகங்களை அமைத்துக் கொடுத்து வருகிறார். ‘‘இணைந்தெழு’‘ என்ற முழக்கத்தை முன்வைத்து கர்நாடகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதைப் போல, நாடாளுமன்றத் தேர்தலுக்கும் இந்த முழக்கத்தை முன்வைத்துள்ளார். இவர் மக்களின் பிரச்சினைகளைப் பேசுகிறார், மற்ற இயக்கங்களை ஜனநாயகமாக அணுகுகிறார், இது சரியான வழிமுறையாகத் தோன்றுகிறதே?

“இணைந்தெழு” என்ற அவரது முழக்கமும் தேர்தலில் வெற்றிபெற அவர் மேற்கொண்ட வழிமுறைகளும் கர்நாடகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதைப் பற்றி அவரே பல ஊடகங்களில் பேட்டி அளித்திருந்தார். மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து பிரச்சாரம் செய்தது, காங்கிரஸ் கட்சியின் வாக்குச்சாவடி கமிட்டி உறுப்பினர்களை சரியாக இணைத்து செயல்படுத்தியது, காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே தலைமைக்கும் கீழ்மட்ட தொண்டர்களுக்கும் இடையில் ஒரு “இணைப்பு” ஏற்படுத்தியது ஆகியவற்றை கர்நாடகத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான காரணங்களாக முன்வைக்கிறார். அதேபாணியில், தெலுங்கானாவில் செயல்படுத்தியது வெற்றியளித்ததாகக் கூறுகிறார்.

கர்நாடகத்திலும், தெலுங்கானாவிலும் ஆளுங்கட்சிகளான பா.ஜ.க., பி.ஆர்.எஸ். மீது மக்களுக்கு இருந்த அதிருப்தியைப் பயன்படுத்தி, மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து பிரச்சாரம் செய்ததுதான் காங்கிரசின் வெற்றிக்கு முக்கிய காரணம். அந்த வெற்றியை உறுதி செய்வதற்குத்தான், இவர் கூறும் வழிமுறைகள் உதவியிருக்கின்றன. ஆனால், காங்கிரஸ் ஆட்சி செய்த சத்தீஸ்கர், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து பிரச்சாரம் செய்யாததால் இந்த வழிமுறைகள் எடுபடவில்லை.

காங்கிரஸ் கட்சியில் இருக்கும் கோஷ்டி குழப்பங்கள் பற்றியோ, காங்கிரஸ் கட்சி மக்களுக்கான ஒரு மாற்று அரசியல் திட்டத்தை முன்வைக்காமல், பா.ஜ.க.வின் வழியிலேயே கார்ப்பரேட் கொள்கையைத்தான் கடைபிடிக்கிறது என்பதையோ, மத்தியப்பிரதேசம் போன்ற பசுவளைய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி காவி அரசியலையே பிரச்சாரம் செய்வதைப் பற்றியோ சசிகாந்த் செந்தில் பேசுவதில்லை. பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளை அறுவடை செய்வது, அதற்கான, முதலாளித்துவ விளம்பர நிறுவனங்கள் பாணியில் தேர்தல் உத்திகளை வகுப்பது, களப்பணிகளை மேற்கொள்வது போன்றவற்றையே இவர் பெரிதும் நம்புகிறார், மற்றவர்களையும் நம்பச் சொல்கிறார்.

“மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து பேசுவது என்பது நமது அரசியல். பா.ஜ.க.வின் அரசியலோ மதவாத அரசியல். நாம் நமது அரசியலைப் பேசவில்லை என்றால், மதவாத அரசியலுக்குச் செல்ல வேண்டியதாகிவிடும்” என்று கூறுகிறார். மக்கள் பிரச்சினைகளுக்கு பா.ஜ.க. பின்பற்றிய கொள்கைகள்தான் காரணம் என்பதை மறைத்து, பா.ஜ.க. என்ற கட்சி மட்டுமே காரணம் என்று எளிமைப்படுத்துவது பிரச்சினையின் உண்மை தன்மையை மூடி மறைப்பதாகும்.

விலையேற்றம், வறுமை, வேலையின்மை, விவசாயம்-சிறுதொழில்கள் நசிவு, சுற்றுச்சூழல் சீர்கேடு, இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள், ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுவது போன்றவை அனைத்தும் கார்ப்பரேட் நலன் சார்ந்த, பார்ப்பன இந்துராஷ்டிரக் கொள்கைகள், திட்டங்களின் விளைவுகளாகும். இதற்கு எதிராக, மக்கள் நலன்களை முன்வைக்கின்ற, பார்ப்பன இந்துராஷ்டிரத்திற்கு எதிரான கொள்கைகள், திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டும். அதுதான், உண்மையில் பாசிசத்தையும் பா.ஜ.க.வையும் வீழ்த்தும். தற்போது இருக்கும் ஜி.எஸ்.டி., ஆதார், நீட், புதிய கல்விக் கொள்கை போன்றவையெல்லாம் அப்படியே இருக்கும்; ஆனால், பா.ஜ.க.வை மட்டும் தோற்கடிக்க வேண்டும் என்று பேசுவது, அப்பட்டமான சந்தர்ப்பவாதமாகும்.


பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

(புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



தேர்தல் மோசடி என்பது பா.ஜ.க கையாளும் ஒரு வழிமுறை மட்டுமே

ந்தியா டுடே” பத்திரிக்கை நடத்திய “தேசத்தின் மனநிலை” என்ற கருத்துக்கணிப்பின்படி, தற்போதைய நிலையில் மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டால், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 335 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்புள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 272 இடங்களை விட இந்த எண்ணிக்கை (335) அதிகம் தான்.

இந்திய மக்கள் மோடியின் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் , சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கடும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இருப்பினும் பா.ஜ.க மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்ற “இந்தியா டுடே” வின் கருத்துக் கணிப்பைப் பற்றி சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது.

அவ்வாறு சமூக ஊடகங்களில் பேசிய பெரும்பாலான நபர்களுடைய கருத்துகளின் சாரம் இதுதான், “மக்கள் ஓட்டுப் போட்டுதான் பா.ஜ.க ஆட்சிக்கு வரவேண்டும் என்ற நிலை இல்லை. அவர்கள் (பா.ஜ.க) தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வேறு வழிகள் வைத்திருக்கிறார்கள் “. அதாவது, தேர்தல் வாக்கு இயந்திரத்தில் மோசடி செய்வது போன்ற வழிகளில் தான் பா.ஜ.க அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெறுகிறது. இந்த கருத்துதான் பெரும்பாலான பா.ஜ.க எதிர்ப்பாளர்களின் கருத்தாக உள்ளது. இந்த கருத்து ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பாசிச இயக்கத்தை பற்றியும், அது மக்களிடையே மிக விரிவான அளவில் தாக்கம் செலுத்திக்கொண்டிருப்பதைப் பற்றியும் சிறிதும் புரிதலற்ற வகையில் கூறப்படுகிறது.

தேர்தல் களத்தில் வெவ்வேறு வழிமுறைகளை பயன்படுத்தி பா.ஜ.க மோசடிகள் செய்து வருவது உண்மை தான். ஆனால் தேர்தல் களத்தில் பா.ஜ.க-வின் ஆதிக்கத்திற்கு அது மட்டுமே காரணமல்ல. குறிப்பாக சொன்னால், தேர்தலில் மோசடி செய்வதை பா.ஜ.க தன்னுடைய கடைசி வாய்ப்பாகத் தான் வைத்திருக்கிறது.


படிக்க: அசோகா பல்கலைக்கழகம்: கருத்து சுதந்திரத்தின் மீதான காவி பயங்கரவாத தாக்குதல்


2019-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில், முறைகேடு நடந்திருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக குற்றம் சாட்டிய அசோகா பல்கலைக்கழகத்தின் பொருளாதார உதவிப் பேராசிரியர், சப்யசாச்சி தாஸ் ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பா.ஜ.க-வின் தேர்தல் மோசடிகள் பற்றி மிகத்தெளிவாக பதிவு செய்துள்ளார். பா.ஜ.க-விற்கு எதிரான வாக்குகள் இருக்கக்கூடிய முஸ்லிம் வாக்காளர்கள் அதிகமுள்ள தொகுதிகளில், வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களை பதிவு செய்வதில் மோசடி நடந்திருப்பதை சப்யசாச்சி தாஸ் அம்பலப்படுத்துகிறார். இந்த மோசடி தேர்தல் ஆணையத்தின் உதவி இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும் இந்த மோசடிகள், பா.ஜ.க-விற்கும் எதிர்க்கட்சி வேட்பாளருக்கும் மிக நெருக்கமான போட்டி இருக்கும் தொகுதிகளில் தான் அதிகம் நடந்திருக்கிறது. அதாவது பா.ஜ.க மற்றும் எதிர்க்கட்சி வேட்பாளர் இருவரும் வெற்றி பெறுவதற்கு சமமான வாய்ப்புள்ள தொகுதிகளில் தான் மோசடிகள் அதிகம் நடந்திருப்பதாக ஆய்வு முடிவை முன்வைக்கிறார் சப்யசாச்சி தாஸ். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது ஒன்றுதான், தேர்தல் மோசடிகள் என்பது பா.ஜ.கவின் பிரதான யுத்தி அல்ல.

அப்படியென்றால் பா.ஜ.க-வின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் என்ன? அது சாதி, மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்துவதும், மக்களின் சமூக கலாச்சார வாழ்க்கையை இந்துத்துவமயம் ஆக்குவதும் தான் பா.ஜ.க-வின் தேர்தல் வெற்றிக்கு முக்கியமான காரணமாகும்.

சமூகத்தின் ஒவ்வொரு தளத்திலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பரிவாரங்களான விஷ்வ இந்து பரிஷத் (VHP), அகில பாரத்திய வித்யார்தி பரிஷத் (ABVP ), இந்து முன்னணி, பஜ்ரங் தள் போன்ற அமைப்புகளின் மூலம் தான் பா.ஜ.க சென்றடைந்துகொண்டிருக்கிறது.

சரஸ்வதி வித்யா பீடம் என்ற அமைப்பின் மூலம் ஆர்.எஸ்.எஸ் நடத்தும் பள்ளிகள் வழியாக மாணவர்கள் மத்தியில் இந்துத்துவ கருத்துகள் விதைக்கப்படுகின்றன. வனவாசி கல்யாண் ஆஸ்ரமம் என்ற பெயரில் பழங்குடி மக்களின் வழிபாட்டு முறைகளை ஒழித்து இந்து மதத்திற்குள் கொண்டு வருகிறார்கள். VHP, பஜ்ரங் தள் போன்ற குண்டர் அமைப்புக்கள் லவ் ஜிஹாத், பசுப் பாதுகாப்பு, முஸ்லிம் கடைகளில் பண்டங்கள் வாங்கக்கூடாது போன்ற கோஷங்களை முன்வைத்து முஸ்லிம்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி மக்களை மத முனைவாக்கம் செய்கிறார்கள்.


படிக்க: காவிகளின் கூடாரங்களாகும் பல்கலைக்கழகங்கள்


தமிழ்நாடு போன்ற மதவெறி எடுபடாத மாநிலங்களில், சாதி சங்கங்கள், சாதிய அமைப்புகளை தங்களது கைக்குள் போட்டுக்கொண்டு பட்டியல் சமூக மக்கள் மீதான சாதிய வன்கொடுமைகளை நடத்துகிறார்கள். இதன் மூலம் மக்களை பிளவு படுத்தி அரசியல் ஆதாயம் அடைகிறார்கள். மாணவர்களின் தற்கொலையை, மதமாற்றம் செய்ய நிர்பந்தம் செய்ததால் ஏற்பட்ட தற்கொலை என்று பொய் செய்திகளை பரப்பி கலவரம் செய்ய முயற்சிப்பது, கிராமப்புறங்களில் கோவில் கட்டிக்கொடுத்து அதன் மூலம் ஆட்களை திரட்டி சாதி முனைவாக்கம் செய்வது, அப்பாவி மக்களின் பக்தியை தவறாக பயன்படுத்தி விளக்கு பூஜைகள் ஏற்பாடு செய்வது, கோவில் திருவிழாக்களை நடத்த நன்கொடை கொடுப்பது போன்ற வழிகளில் தன்னுடைய மதவாத கருத்துகளை பரப்பும் வலைப்பின்னல்களை பா.ஜ.க உருவாக்கி வருகிறது. இப்படி தான் பா.ஜ.க தனக்கான அடித்தளத்தை அமைத்துக்கொள்கிறது. இந்த விரிவான வேலைகளின் மூலமாகத்தான் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க சமூகத்தில் மதவாதத்தை வளர்க்கிறது.மக்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு தளங்களிலும் வேலை செய்து தேர்தலுக்கான வாக்குகளாக பா.ஜ.க மாற்றிவருகிறது. அதன் மூலமாகத்தான் பா.ஜ.க தேர்தலில் வெற்றி பெறுகிறது.

இப்படி சமூகத்தின் அனைத்து தளங்களிலும் மதவெறியை பரப்ப ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க அதன் பரிவாரங்களுடன் தீவிரமாக வேலை செய்து வருகிறது. அதே போல் சமூக மாற்றத்தை விரும்புபவர்களும், பாசிசத்தை எதிர்க்கும் முற்போக்கு ஜனநாயக சக்திகளும், புரட்சிகர இயக்கங்களும் மக்களை சித்தாந்த ரீதியாக அணி திரட்டி, அரசியல்படுத்தி போராடுவதன் மூலமாகவே பாசிச பா.ஜ.கவை வீழ்த்த முடியும். மாறாக, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வின் பரந்து விரிந்த செயல்பாடுகளை மறைத்துவிட்டு வெறுமனே தேர்தல் மோசடிகள் பற்றி மட்டும் பேசிக்கொண்டே இருப்பது, நம்முடைய செயல் முனைப்பற்ற சோம்பேறிதனத்திற்கு ஒரு காரணமாக மட்டுமே இருக்கும்.

பா.ஜ.க தேர்தல் வெற்றிகளுக்கு பிரதான காரணம் தேர்தல் மோசடிகள் தான் என்று ஒருவர் விடாப்பிடியாக நம்பினால் அவர் செய்வதற்கென்று ஒன்றுமில்லை. ஆகையால் பரந்துபட்ட மக்களிடம் மதவாத கருத்துகளை விதைக்கும் செயல்பாடுகள் தான் பா.ஜ.க-வின் வெற்றிக்கு காரணம் என்ற யதார்த்த உண்மையை ஜனநாயக சக்திகள் ஒப்புக்கொண்டு மக்களிடையே இடையறாது உத்வேகத்துடன் பணியாற்ற வேண்டியுள்ளது. மக்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு தளங்களிலும் பணி செய்யவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.


சீனிச்சாமி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ராமர் கோவில் திறப்பு: இந்துராஷ்டிரத்திற்கான பட்டாபிஷேகம்

ந்துக்களின் வெற்றி”, “இந்தியாவின் பெருமிதம்”, “500 ஆண்டுகாலப் போராட்டத்தின் வெற்றி”, “ராம ராஜ்ஜியம் அமைந்துவிட்டது”, “புதிய வரலாறு படைக்கப்பட்டிருக்கிறது” என ராமர் கோவில் திறப்பை ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் தனது நூறு ஆண்டுகால இந்துத்துவச் சித்தாந்தத்திற்கும் அரசியலுக்கும் கிடைத்த வெற்றியாக கொண்டாடித் தீர்த்துள்ளது.

ராமர் கோவில் திறப்பு குறித்து பேசிய பிரதமர் மோடி “ஜனவரி 22, நாள்காட்டியில் இது ஒரு தேதி மட்டுமல்ல, ஒரு புதிய சகாப்தம் பிறந்துள்ளது. இப்போது நாம் இந்தியாவின் 1,000 ஆண்டுகளுக்கான அடித்தளத்தை அமைக்க வேண்டும். ராமர் கோவில் இந்தியாவின் “தேசிய உணர்வு”, ராமர் இந்தியாவின் அடித்தளம், ராமர் இந்தியாவின் கருத்து, ராமர் இந்தியாவின் சட்டம், ராமர் இந்தியாவின் மாண்பு, பெருமை, கொள்கை எல்லாமே ராமர்தான்” என்றார்.

ராமர் கோவில் திறப்பை பிரம்மாண்டமாகவும் வெற்றிகரமாகவும் நடத்தியதற்காக மோடிக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் ஒன்றை ஒன்றிய அமைச்சரவை நிறைவேற்றியிருந்தது. அதில், ‘‘பல நூற்றாண்டுகள் பழமையான இந்திய நாகரிகத்தின் 500 ஆண்டுகாலக் கனவு தற்போது நனவாகியுள்ளது. மேலும், 1947-இல் தேசத்தின் உடல் சுதந்திரம் பெற்றதென்றால், அதன் ஆன்மா தற்போதுதான் விடுதலை பெற்றுள்ளது’‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ராமர் கோவில் திறப்புக் குறித்து பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், ‘‘உலக நாடுகளுக்கு உதவி செய்யும் புதிய இந்தியாவின் அடையாளம் ராமர் கோவில்’‘, ‘‘இன்று கோவில் எழுந்ததற்கான ஆன்மீக கொண்டாட்டங்களில் பங்கேற்கும் அதே வேளையில் பாரதத்தை புனர் நிர்மாணம் செய்து அதன் மூலம் உலக புனர் நிர்மாண பணியில் ஈடுபட உறுதி எடுத்துக்கொள்வோம். இந்த பேரொளியை மனதில் வைத்து முன்னேறி செல்வது காலத்தின் கட்டாயம்’‘ என்று பாசிசக் கும்பலின் அகண்ட பாரதக் கனவை வலியுறுத்தி பேசினார். இவர்களை போலவே, பா.ஜ.க. தலைவர் ஜே.பி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என ஒட்டுமொத்த காவிக் கும்பலும் தங்களது வெற்றியை உச்சிமுகர்ந்து பேசியுள்ளது. பாசிசக் கும்பலின் வார்த்தைகளிலிருந்தே அவர்கள் எத்தகைய வெற்றிக்களிப்பில் உள்ளனர் என்பதை நம்மால் புரிந்துக்கொள்ள முடியும்.

இந்த ‘கொண்டாட்டத்தின்’ மூலம், பாபர் மசூதியை இடித்து ராமர் கோவில் கட்டப்பட்டது இஸ்லாமிய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்ற உணர்வே ஏற்படாத வகையில், பக்தி என்ற பெயரில் மதவெறியை ஊட்டி ‘இந்து மக்களின்’ ஜனநாயக உணர்வை ஒழித்துக்கட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது காவிகும்பல். மேலும், மோடியின் பத்தாண்டுகால ஆட்சியில் அம்பானி-அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்வதற்காக உழைக்கும் மக்கள் மீது தொடுக்கப்பட்ட ஜி.எஸ்.டி., பணமதிப்பிழப்பு போன்ற பொருளாதார தாக்குதல்களையும் பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக இஸ்லாமிய சிறுபான்மையின மக்கள், தலித் மக்கள், பெண்கள்மீது இழைக்கப்பட்ட அநீதிகளையும் கொடுமைகளையும் மூடிமறைத்து, ராமர் கோவில் திறப்பை ஒட்டுமொத்த ‘இந்திய மக்களின் வெற்றியாக’, ‘இந்தியாவின் சாதனையாக’ சித்தரிக்க முயன்றது பாசிசக் கும்பல். அதாவது, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி தங்களுடைய பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்வதற்கான ஆயுதமாக ராமர் கோவில் திறப்பை கையிலெடுத்துள்ளது.

‘தேசிய விழாவான’ ராமர் கோவில் திறப்பு

ராமர் கோவில் திறப்பை முன்னிட்டு, வி.எச்.பி., இந்து முன்னணி போன்ற தனது குண்டர் படையினருடன் ஆர்.எஸ்.எஸ் கும்பல். ‘கிரஹ சம்பர்க் அபியான்’ என்ற பெயரில் வீடு வீடாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டது. இந்தியா முழுவதும் பல இடங்களில் பெரிய எல்.இ.டி. திரைகளை அமைத்து, ராமர் கோவில் திறப்பை மக்களிடம் நேரலையில் ஒளிபரப்பு செய்தது. நாடு முழுவதும் ஆங்காங்கே பிரசாதம் தருவது, வீட்டில் விளக்கேற்ற சொல்வது என ஒட்டுமொத்த ‘இந்து’ மக்களிடமும் ‘இது நமக்கான விழா’ என்ற பிம்பத்தை கட்டமைக்க முயன்றது காவிக் கும்பல்.

நாடு முழுவதிலுமிருந்து கார்ப்பரேட் முதலாளிகள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், அரசு அதிகாரிகள், நீதிபதிகள் என 8000 பேருக்கு ராமர் கோவில் திறப்பில் கலந்துக்கொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. அம்பானி, பிர்லா போன்ற கார்ப்பரேட் முதலாளிகள், கங்கனா ரனாவத், ரஜினி, அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர் போன்ற ஆயிரக்கணக்கான சங்கிகள் ராமர் கோவில் திறப்பிற்கு சென்று ஆரவாரம் செய்தனர்.


படிக்க: எது கேலிக்கூத்து? நிதிஷ்குமாரின் ‘பல்டி’யா,  இந்திய ‘ஜனநாயகமா’


ஆர்.எஸ்.எஸ்-இன் இந்த மதவெறி பிரச்சாரம் பலரிடம் தாக்கம் செலுத்தவும் செய்தது. உத்தரப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்த பெண்கள், ராமர் கோவில் திறப்பு நாளான ஜனவரி 22-ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் தங்கள் குழந்தைகளை வெளியே எடுக்குமாறு மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்ட கொடுமையெல்லாம் அரங்கேறியது. ‘‘ராம் லாலா வருகையுடன் எங்கள் வீட்டில் குழந்தை பிறக்க வேண்டும் என்று விரும்புகிறோம்’‘ என பிரசவத்திற்கு காத்திருக்கும் அப்பெண்களின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். இது காவிக் கும்பலின் மதவாத பிற்போக்கு கருத்துகள் சமூகத்தில் எந்தளவிற்கு தாக்கம் செலுத்தியிருக்கின்றன என்பதற்கு சான்றாகும்.

இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பிற நாடுகளிலும் ராமர் கோவில் திறப்பை ‘இந்தியாவின் தேசிய விழா’வாக காட்டியது, பாசிசக் கும்பல். ராமர் கோவில் திறப்பில் கலந்துக்கொள்வதற்கான அழைப்பிதழ் அமெரிக்கா, கனடா, ஜெர்மனி என 50-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அனுப்பப்பட்டது. அந்தந்த நாடுகளில் ராமர் கோவில் திறப்பை நேரலை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இங்கிலாந்தில் மட்டும் 300 இடங்களில் ஒளிபரப்பப்பட்டது. பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரத்தில் ராமர் கோவில் திறப்பையொட்டி ‘‘ராம் ரத யாத்திரை’‘ என்ற பெயரில் ஊர்வலம் நடத்தப்பட்டது. அமெரிக்காவில், ‘‘இந்து அமெரிக்க சமூகம்’‘ என்ற அமைப்பு ஏற்பாடு செய்த கார் பேரணியில், காவிக்கொடிகளுடன் ‘‘ஜெய் ஸ்ரீ ராம்’‘ என்று கோஷமிட்டவாறு 216 கார்களை கொண்டு ஊர்வலம் நடத்தப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்-இன் சர்வதேச அமைப்பான எச்.எஸ்.எஸ். அமைப்பு உலகின் பல நாடுகளில் வளர்த்துவிடப்பட்டுள்ளதன் மூலம் இதனை சாத்தியப்படுத்தியுள்ளது பாசிசக் கும்பல்.

மேலும், ஒட்டுமொத்த அரசுக்கட்டமைப்பையும் கைப்பற்றியுள்ள ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் தனது அதிகாரத்தை பயன்படுத்தி ராமர் கோவில் திறப்பை ‘அரசு விழா’வாகவும் மாற்றியது. இந்தியா முழுவதும் ராமர் கோவில் திறப்பிற்காக ஜனவரி 22-ஆம் தேதி அன்று ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டது. அந்நாளில் தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தைகள்  மூடப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கியும் அறிவித்தது.

பா.ஜ.க. ஆளும் குஜராத், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரகாண்ட், திரிபுரா, அசாம், கோவா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் பள்ளிகளுக்கும் அரசு அலுவலகங்களுக்கும் பொதுவிடுமுறை அளிக்கப்பட்டது. புதுச்சேரி மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசங்களிலும், பா.ஜ.க. ஆட்சி செய்யாத ஒடிசாவிலும், காங்கிரஸ் ஆளும் இமாச்சலப்பிரதேசத்திலும் கூட விடுமுறை அறிவிக்கப்பட்டது.

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், அசாம் போன்ற பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. சத்தீஸ்கர் பா.ஜ.க. அரசு அயோத்திக்கு செல்வதற்கு இலவச ரயில் சேவையை அறிவித்தது. பல மாநிலங்களில், பள்ளிக்கல்லூரிகளில் ராமர் கோவில் திறப்பிற்கு பூஜைகளும் ராமன் பெயரில் போட்டிகளும் நடத்தப்பட்டன.

தமிழ்நாட்டில், கூட’‘ராமர் கோவில் திறப்பிற்கு பூஜை செய்ய தி.மு.க. அரசு தடைவிதிக்கிறது’‘ என்று ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆளுநர் ஆர்.என்.ரவி, தினமலர் உள்ளிட்ட சங்கிக்கூட்டம் கலவரத்தை தூண்ட முயற்சித்தது. ஆனால், காவிக்கும்பலின் அனைத்து சதித்திட்டங்களும் தமிழ்நாட்டில் தோற்கடிக்கப்பட்டது.

காட்டுமிராண்டித்தனத்தின் உச்சமாக, ராமர் கோவில் திறப்பு காரணமாக அனைத்து மத்திய அரசு மருத்துவமனைகளும் ஜனவரி 22-ஆம் தேதி 2:30 மணி வரை மூடப்படும் என்று அறிவித்தது பா.ஜ.க. பாசிசக் கும்பல். மருத்துவமனைகள் மூடப்பட்டால் பல லட்சகணக்கான மக்கள் பாதிக்கப்படுவர் என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, எய்ம்ஸ் மருத்துவமனை மட்டும் இம்முடிவை திரும்ப பெற்றது.

‘தேசிய நாயகன்’ ராமனல்ல மோடிதான்

புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறப்பு, சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்டது, ஜி20 உச்சி மாநாடு என நாட்டில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகள் ஒவ்வொன்றிலும், மோடியின் பெயர் மட்டும்தான் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் மோடி – அமித்ஷா கும்பல் வேலைசெய்து வருகிறது. அந்த வரிசையில் ராமர் கோவில் திறப்பும் முழுக்க முழுக்க மோடியை முன்னிறுத்தியே நடத்தப்பட்டது. ‘‘ராமர் கோவில் திறப்பை நிகழ்த்திக்காட்டியவர் மோடிதான்’‘, ‘‘இது மோடியின் சாதனை’‘, ‘‘மோடி, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார்’‘ என்றுதான் ஜனவரி மாதத் தொடக்கத்திலிருந்தே சங்கிக்கூட்டமும், பா.ஜ.க. அரசும், அதன் ஊதுகுழலான ஊடகங்களும் பிரச்சாரம் செய்து வந்தன.

‘‘பிரதமர் 11 நாட்கள் விரதம் இருக்கிறார், வெறும் தரையில் படுத்து உறங்குகிறார், கோவில் கோவிலாக சுற்றுகிறார், கோவில்களை சுத்தம் செய்கிறார்’‘ என மோடியை ஒரு துறவியைப் போல இந்திய ஊடகங்கள் காட்சிப்படுத்தின. திறப்பு விழாவிற்கான அனைத்து போஸ்டர்களிலும், பேனர்களிலும் ராமன் புகைப்படம் சிறிய அளவில் ஒரு ஓரமாக இருக்க, மோடியின் முகமே பிரம்மாண்டமாக முன்னிறுத்தப்பட்டது. கோவில் திறப்பு ராமனுக்கா? மோடிக்கா? என்று சந்தேகம் எழும் அளவிற்கு ராமனை விட மோடிதான் பாசிசக் கும்பலால் முதன்மைப்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், பாரப்பனரல்லாதவரான மோடியின் கைகளால்தான் ராமன் சிலை நிறுவப்படப்போகிறது என்பதைக் கேட்டு பொங்கியெழுந்த சங்கராச்சாரியர்கள், மோடி- அமித்ஷா கும்பலை கடித்து குதறத் தொடங்கினார்கள். மோடி ராமர் கோவிலுக்குள் சென்று பூஜை செய்வதை சகித்துக்கொள்ள முடியாத பார்ப்பன கும்பல், முழுமையாகக் கட்டி முடிக்காமல் அரசியல் ஆதாயத்திற்காக கோவிலைத் திறக்கிறார்கள், சனாதனத்தையும் வேத மரபையும் மீறுகிறார்கள் எனக் கோவில் திறப்பிற்கு செல்லாமல் புறக்கணித்தனர்.

சங்கராச்சாரியர்களால் ஏற்பட்ட இந்த நெருக்கடியை மோடிக் கும்பல் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கோவில் கட்டிமுடிக்கப்படாமல் அவசர அவசரமாக திறக்கப்படுவது விவாதப்பொருளாகி பாசிசக் கும்பலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. சமூக ஊடகங்களில், ‘‘மோடி இந்துவிரோதி’‘ என்றும் ‘‘சங்கராச்சாரியர்கள் மோடி விரோதி’‘ என்றும் விவாதங்கள் கிளம்பின. இதன்பிறகு பேசிய அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி என்ற சங்கராச்சாரியர், ‘‘நான் மோடிக்கு எதிரானவன் அல்ல, ஆனால் தர்ம சாஸ்திரத்துக்கும் எதிரானவனாகவும் இருக்க முடியாது’‘ என்று பதுங்கினார். ஆனால், பா.ஜ.க. ஆட்சியைப் பிடிப்பதற்கு மோடி பிம்பம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்திருந்த ஆர்.எஸ்.எஸ். கும்பல், மோடிதான் ராமன் சிலையை நிறுவவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது.

இந்திய ஊடகங்களின் கரசேவை

பாபர் மசூதி இடிக்கப்பட்டு அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் மோடிக் கும்பலின் மதவெறிச்செயலை காறி உமிழ்ந்துக்கொண்டிருந்த போது, இந்திய ஊடகங்களோ ‘‘ராமர் கோவில் இந்தியாவின் பெருமிதம்’‘ என காவிக்கும்பலுடன் சேர்ந்து ஊளையிட்டுக் கொண்டிருந்தன. ராமர் கோவில் திறப்பு இந்தியாவின் அனைத்து இந்தி, ஆங்கில செய்தி ஊடகங்களாலும் அதன் மாநில மொழி ஊடகங்களாலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. காவி உடையும் மாலையும் அணிந்துக் கொண்டு தொலைக்காட்சி நிருபர்கள் அயோத்தியின் மைதானங்களைச் சுற்றிக்கொண்டிருந்தனர்.

டிசம்பர் 6, 1992-இல் பாபர் மசூதி இடிப்பை படம் பிடித்ததற்காக ‘‘இந்தியா டுடே’‘ பத்திரிகையாளர்கள் உட்பட பல பத்திரிகையாளர்கள் காவிக்குண்டர் படையால் கொடூரமாக தாக்கப்பட்டனர். அன்று ‘‘அயோத்தி: தேசத்தின் அவமானம்’‘ என்ற அட்டைப்படத்துடன் பத்திரிகையை வெளியிட்ட இந்தியா டுடே, ராமர் கோவில் திறப்பையொட்டி ‘‘ராமர் வருகிறார்’‘ என்ற வாசகத்துடன் கூடிய ஊடக வாகனத்தை அயோத்தியில் நிறுத்தி செய்திகளை வெளியிட்டது.

இந்தியா டுடே போன்று ‘‘தி ஹிந்துஸ்தான் டைம்ஸ்’‘, ‘‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’‘ போன்ற பல முக்கிய செய்தித்தாள்களின் பக்கங்கள் மோடி, யோகி ஆதித்யநாத் மற்றும் ராமர் கோவிலின் புகைப்படங்களால் நிரப்பப்பட்டிருந்தன. ‘‘ராமர் திரும்புகிறார்’‘, ‘‘இந்தியாவிற்கான ராமர் கோவில்’‘, ‘‘ஐந்து நூற்றாண்டுகளுக்கான காத்திருப்பு’‘, ‘‘தேசம் முழுவதும் பக்தி அலை’‘ என்ற தலைப்புகளில் செய்திகள் வெளியிடப்பட்டன. ஆனால், இந்த ஊடக செய்திகளில் தப்பித்தவறி ஒரு இடத்தில் கூட பாபர் மசூதி என்ற வார்த்தை இடம்பெறவில்லை.


படிக்க: பாசிச மோடி அரசை பணியவைத்த லாரி ஓட்டுநர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்


பத்திரிகையாளரும் சமூக ஆய்வாளருமான பமீலா பிலிபோஸ் ‘‘தி வயர்’‘ இணையதளத்தில் எழுதிய கட்டுரையில், ஊடகங்களில் பாபர் மசூதி இடிப்பிற்கு முன்னர் ‘‘பாபர் மசூதி-ராம ஜென்ம பூமி மோதல்’‘ என்று பயன்படுத்தப்பட்டுவந்த கருத்தாக்கம் மசூதி இடிப்பிற்குப் பிறகு ‘‘சர்ச்சைக்குரிய இடம்’‘ என்று மாற்றப்பட்டதையும், அதன் பிறகு ‘‘பாபர் மசூதி’‘ என்ற சொல் கைவிடப்பட்டு, ராமர் கோவிலாக மாற்றப்பட்டதையும் விரிவாக விளக்கியுள்ளார். மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து பெரும்பாலான ஊடகங்கள் பாசிசக் கும்பலுக்கு ஊதுகுழலாக மாற்றப்பட்டதன் விளைவாக, தற்போது பாபர் மசூதியை இடித்துதான் ராமர் கோவில் கட்டப்பட்டது என்ற உண்மை இந்திய ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ராமர் கோவில் திறப்பால் வெறி முற்றிப்போன ஆர்.எஸ்.எஸ். காவி பயங்கரவாதிகள், ராமர் கோவில் திறப்பு நாளன்றும் அதற்குப் பிறகும் இந்தியா முழுவதிலும் இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் மீது கொடூரமான தாக்குதல்களை நடத்தினர். மசூதிகளிலும் கிறித்துவ ஆலயங்களிலும் காவிக் கொடி ஏற்றப்பட்டன. ஆனால், ராமர் கோவில் திறப்பையொட்டி மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு நடவடிக்கையையும் ஒளிபரப்பிக் கொண்டிருந்த ஊடகங்களோ, சிறுபான்மையின மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களை பற்றி வாயை திறக்கவில்லை.

எதிர்க்கட்சிகளின் ‘எதிர்ப்பு’

ராமர் கோவில் திறப்பிற்கான அறிவிப்பு வெளியானதிலிருந்தே, இந்நிகழ்வில் கலந்துகொள்பவர்கள், புறக்கணிப்பவர்கள் பற்றிய விவாதமும் தொடங்கியது. சி.பி.ஐ.(எம்) கட்சி மட்டும் ராமர் கோவில் திறப்பை புறக்கணிப்பதாக டிசம்பர் மாதத்திலேயே அறிவித்திருந்த நிலையில், காங்கிரசும் ‘‘இந்தியா’‘ கூட்டணியில் உள்ள பிற எதிர்க்கட்சிகளும் மோடிக் கும்பலால் இந்துவிரோதிகள், தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தப்படுவோம் என்ற அச்சத்தில் அமைதி காத்துவந்தன.

இந்நிலையில், ஜனவரி 10-ஆம் தேதிக்குப் பிறகு காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி என இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒவ்வொன்றாக ராமர் கோவில் திறப்பை புறக்கணிப்பதாக அறிவித்தன. இதை ஜனநாயக சக்திகள் பலரும் வரவேற்றிருந்தனர். இந்தியா கூட்டணியை பாசிசத்திற்கு எதிராக முன்னிறுத்தும் ‘பாசிச எதிர்ப்பாளர்கள்’ சிலர் இதை ஒரு புரட்சிகர நடவடிக்கை என்றுகூட கூறினார்கள். ஆனால், எதிர்க்கட்சிகளின் ‘எதிர்ப்பு’ எத்தகையது என்பதை அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளும், அவர்கள் கூறிய கருத்துகளுமே அம்பலப்படுத்தின.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி, ‘‘2019 உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கடைப்பிடித்து, ராமரை வணங்கும் லட்சக் கணக்கான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஸ்ரீ மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி மற்றும் ஆதீர் ரஞ்சன் சவுத்திரி ஆகியோர் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. விடுத்த ராமர் கோவில் திறப்பு நிகழ்ச்சிக்கான அழைப்பை மரியாதையுடன் நிராகரித்துள்ளனர்’‘ என ‘ராம பக்தர்களுக்கு’ மனக்கசப்பு ஏற்படாத வகையில் அறிக்கை விட்டிருந்தது.

காங்கிரசின் மற்றொரு முக்கிய தலைவரான சசிதரூர், ‘‘நான் திறப்பு விழாவிற்கு போக மாட்டேன். ஆனால், பிறகொரு நாள் போவேன். ராமர் கோவிலுக்கு போவது என்பது தனி நபர் விருப்பம்’‘ எனத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைமையின் புறக்கணிப்பு முடிவை ‘‘அவமதிப்பு’‘ என்று காங்கிரசின் சில தலைவர்களே கண்டித்தனர். போபால் காங்கிரஸ் கட்சியின் அலுவலக வாயிலில், ‘‘ராஜீவ் காந்தியின் கனவு நனவாகியுள்ளது’‘ என ராமர் கோவில் திறப்பிற்கு போஸ்டரே ஒட்டினர்.

சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே ராமர் கோவில் திறப்பை புறக்கணிப்பதாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதேவேளையில், ‘‘ராமர் கோவில் கட்டுவது தனது தந்தை பாலா சாகேப் தாக்கரேவின் கனவு. இன்று கோவில் கட்டப்படுவது மகிழ்ச்சியின் தருணம்’‘ என்று சிலாகித்தார். தேசியவாதக் காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவ் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் ராமர் கோவிலுக்கு நிச்சயம் செல்வோம் என வாக்குறுதி அளித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலினை தவிர, ராமர் கோவில் திறப்பை புறக்கணிப்பதாக கூறிய எந்த எதிர்க்கட்சி தலைவரும் பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து மறந்தும் வாய்திறக்கவில்லை. பா.ஜ.க. தன் தேர்தல் ஆதாயத்திற்காக ராமர் கோவிலை பயன்படுத்திக் கொள்கிறது என்பது மட்டுமே இவர்களின் கவலை. அதனால்தான், ராமர் கோவில் கட்டப்பட்டது இஸ்லாமிய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று பிரச்சாரம் செய்யவில்லை. இதுவே எதிர்க்கட்சிகளின் பா.ஜ.க. ‘எதிர்ப்பின்’ எதார்த்த நிலை.

போலி மதச்சார்பின்மை – போலி ஜனநாயகக் கட்டமைப்பு
இந்துராஷ்டிரத்திற்கான தூண்கள்

ஜனவரி 22 அன்று இந்தியாவின் சில இடங்களில் கூட்டங்கள், ஒருங்கிணைப்புகள், ஆவணப்பட திரையிடல்கள் மூலம் ராமர் கோவில் திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இவற்றில் பெரும்பாலானவை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரையை (Preamble) வாசிப்பதாகவும் அதிலுள்ள மதச்சார்பின்மை என்ற வார்த்தை குறித்து விவாதிப்பதுமாகவே இருந்தது. சமூக வலைதளங்களில் அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரை பகிரப்பட்டது; கல்லூரிகளில் முகவுரை வாசிக்கப்பட்டது. ராமர் கோவில் திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து எழுதப்பட்ட சில கட்டுரைகளும் இந்தியாவின் போலி மதச்சார்பின்மையை வட்டமடித்தவாறே இருந்தன.

ராமர் கோவில் திறப்பு மூலம் இந்தியாவின் ‘மதச்சார்பின்மையை’ பா.ஜ.க. கும்பல் சிதைக்கிறது, அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள மதச்சார்பின்மையை காப்பாற்ற வேண்டும் என்பதே மேற்கண்ட அனைத்து நடவடிக்கைகளின் உள்ளடக்கமாகும்.

ஆனால், இந்தியாவில் உண்மையான மதச்சார்பின்மை என்று ஒன்றில்லை. நிலவுகின்ற போலி மதச்சார்பின்மை சிதைக்கப்படுவது முதன்முறையும் இல்லை. ராமர் கோவில் திறப்பு ‘அரசு விழாவாக’ மாற்றப்பட்டதற்கும் இந்தியாவில் பாசிசம் வளர்வதற்குமான காரணமாக, பலரால் தீர்வாக காட்டப்படும் போலி மதச்சார்பின்மை, போலி ஜனநாயகக் கட்டமைப்பு, அரசியல் அமைப்பு சட்டம் ஆகியவைதான் உள்ளன.

ஏனெனில், மதச்சார்பின்மை என்ற வார்த்தை அரசியலமைப்பில் பெயரளவில் சேர்க்கப்பட்ட ஒன்றுதான். 1950-இல் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவை மதச்சார்ப்பற்ற நாடு என்று குறிப்பிடவில்லை. 1976-இல் கொண்டுவரப்பட்ட 42-வது அரசியல் சட்டத்திருத்தத்தின் மூலமே ‘‘இந்தியாவை மதச்சார்பற்ற, சோசலிச, ஜனநாயகக் குடியரசாக அமைப்பதற்கு உறுதி பூணுவதாக’‘ இந்திய அரசியல் சாசனத்தின் முகவுரையில் சேர்க்கப்பட்டது. அதற்கான விளக்கம், வரையறை எதுவும் அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்படவில்லை.

உண்மையில் மதச்சார்பின்மை என்றால், மனிதனின் அன்றாட வாழ்க்கையைக் கட்டுப்படுத்தவும், ஒழுக்கத்தை வரையறுக்கவும் மதம் பெற்றிருக்கின்ற அனைத்து சட்டப்பூர்வமான அதிகாரங்களையும் பறிப்பது, மதத்துடனான அனைத்து உறவுகளிலிருந்தும் அரசு தன்னைத் துண்டித்துக்கொள்வது, மதம் தனிநபர் நம்பிக்கை சார்ந்த சொந்த விவகாரம் என்று வரையறுப்பது என்பதே அதன் அர்த்தம். ஆனால், இந்தியாவில் மதமும் அரசியலும் அவ்வாறு பிரிக்கப்படவில்லை. அது தெரியாமல் நிகழ்ந்த தவறல்ல, தெரிந்தே செய்யப்பட்ட மோசடி.

மதமும் அரசியலும் தனித்தனியாக பிரிக்கப்பட வேண்டும் என்பதை மேற்கத்திய சிந்தனை என்று கூறி ஆர்.எஸ்.எஸ்-இன் முன்னோடிகள், கடுமையாக எதிர்த்தனர். இதனால், 1947 ‘சுதந்திரத்திற்கு’ பிறகு இந்தியாவின் பிரதமரான நேரு, மதச்சார்பின்மைக்கு சரியான மொழிப்பெயர்ப்பு வார்த்தை இல்லை, என்பதால் அது தவறாக புரிந்துக்கொள்ளப்படுகிறது, உண்மையில் ‘‘இந்திய அரசு அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கும். அவர்களுக்கு சம வாய்ப்புகளை வழங்கும்’‘ என்று மதச்சார்பின்மைக்கு உலகிலேயே வேறு எங்கும் அளிக்கப்படாத ஒரு புதிய விளக்கத்தை கொடுத்தார்.

இதனையடுத்து இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் மதச்சார்பின்மை என்ற வார்த்தை அரசியலைமைப்பின் முகவுரையில் பெயரளவில் சேர்க்கப்பட்டதே ஒழிய, அதனை இந்திரா காந்தியோ காங்கிரசோ நடைமுறையில் பின்பற்றியதில்லை. மேலும்,  பெயரளவில் இருந்த மதச்சார்பின்மையை தனது வாக்குவங்கிக்காக சிதைக்க தொடங்கியதும் காங்கிரஸ்தான்.

சான்றாக, 1983-ஆம் ஆண்டு விஷ்வ இந்து பரிஷத் ஆதரவுடன் கட்டப்பட்ட பாரத் மாதா கோவிலை இந்திரா காந்தி திறந்து வைத்துள்ளார். அவருக்கு அடுத்து பிரதமரான ராஜீவ் காந்தி குறித்து நாம் பேச வேண்டியதில்லை. ‘‘பாபர் மசூதி இடத்தில் இருந்த தற்காலிக ராமர் கோவிலின் பூட்டை ராஜீவ் காந்திதான் திறந்து வைத்தார். வரலாற்றை மறந்துவிடக் கூடாது’‘ என்று மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் பேசியதே போதுமானவை. எனவே, பெரும்பான்மை மக்களின் வாக்குகளை கவர்வதற்காக காங்கிரசும் மதத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி பெயரளவில் இருந்த மதச்சார்பின்மையை சிதைத்து வந்தது என்பதே உண்மை.

அதேபோல், 1949-இல் பாபர் மசூதிக்குள் ராமன் சிலையை இந்து மதவெறியர்கள் திருட்டுத்தனமாக வைத்தது முதல் இறுதியாக 2019-ஆம் ஆண்டு பாபர் மசூதி நிலத்தை ராமர் கோவில் கட்ட தாரைவார்த்தது வரை பாபர் மசூதியை காவி பாசிஸ்டுகள் ஆக்கிரமித்த ஒவ்வொரு கட்டத்திலும் இந்திய நீதிமன்றங்களின் கரசேவை அடங்கியிருக்கிறது. இந்த தீர்ப்புகள் அனைத்தும் தீர்வாக முன்னிறுத்தப்படும் அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டிருக்கின்றன. அதனால்தான், ராமன் கோவில் திறப்பில், தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு மோடி நன்றி தெரிவித்திருந்தார், அவர்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இதற்கு நேர்மாறாக ராமர் கோவில் திறப்பையொட்டி, ‘‘மதச்சார்பற்ற இந்தியாவை பா.ஜ.க. கும்பல் இந்து தேசமாக மாற்றிவிட்டது’‘, ‘‘தாங்கள்தான் உண்மையான இந்துக்கள் என்று எதிர்க்கட்சிகள் நிரூபிக்கவேண்டிய நிலைக்கு பா.ஜ.க. தள்ளியிருக்கிறது’‘ என்று ஜனநாயகச் சக்திகள் பலரால் விவாதிக்கப்படுகிறது.

நிலவுகின்ற போலி மதச்சார்பின்மையும், போலி ஜனநாயகமும் அரசியல் அமைப்பு சட்டமுமே இந்துராஷ்டிரத்தை நிறுவுவதற்கு பாசிசக்கும்பலுக்கு போதுமானதாக உள்ளது என்பதை ராமர் கோவில் திறப்பு நன்கு உணர்த்தியிருந்தாலும், இந்த கட்டமைப்பில் உள்ள பிரச்சினையை மறைத்து விட்டு பா.ஜ.க மட்டும்தான் பிரச்சினை என்ற பிம்பத்தை கட்டமைக்க முயல்கின்றனர்.  இந்தக் கட்டமைப்பை மீட்டெடுக்க முடியும் என்று போலியான நம்பிக்கையை தொடர்ந்து விதைத்து வருகின்றனர். ஆனால், இந்த போலி ஜனநாயக அரசுக்கட்டமைப்பை பயன்படுத்தி பாசிசக்கும்பல் தனது சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கு உருவாக்கியிருக்கும் ஜி.எஸ்.டி, நீட் போன்ற இந்துராஷ்டிரத்தின் அடிக்கட்டுமானங்களை என்ன செய்யப்போகிறார்கள்? என்ற கேள்விக்கு அவர்களிடம் பதில் இருக்காது.

தற்போது, ராமர் கோவில் திறப்பிற்கு பிறகு நாடுமுழுவதும் இஸ்லாமியர், கிறித்துவர்கள், தலித் மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல்களை தொடுத்து வருகிறது பாசிசக்கும்பல். அடுத்தது வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டுவருவதற்கு குழு அமைத்து வேலை செய்துவருகிறது. இவையெல்லாம், பாசிசக் கும்பல் இந்துராஷ்டிரத்திற்கான அடுத்தக்கட்ட பாய்ச்சலை நோக்கி முன்னேறி வருகிறது என்பதையே காட்டுகிறது. எனவே, இந்த போலி ஜனநாயக மாயயையில் மறைந்துக்கொண்டு உண்மையைக் காண மறுப்பதனால், பாசிசச் சர்வாதிகாரம் நிலைநிறுத்தப்படுவதை தவிர வேறு எதுவும் நடக்கப்போவதில்லை. உண்மையான ஜனநாயக உரிமைகள், மதச்சார்பின்மை பெறுவதற்கு நிலவுகின்ற போலி ஜனநாயக கட்டமைப்பை அடித்து வீழ்த்தி பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசுக்காக போராடுவது ஒன்றே தீர்வு.


மதி

(புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவசாயிகள் போராட்டமும் எதிர்க்கட்சிகளின் சந்தர்ப்பவாதமும்

விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை என்ற சட்டப்பூர்வ உரிமையைக் கோரி டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இந்தப் போராட்டம் தொடர்பாக ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே விவசாயிகள் அறிவிப்பை வெளியிட்டதுடன், அதற்கான தயாரிப்பிலும் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக, பிப்ரவரி 11-ஆம் தேதி முதலாக விவசாயிகளின் கோரிக்கைகள், அவர்கள் போராட்டத்திற்கு தயாராவது, விவசாயிகள் டெல்லியில் நுழைவதைத் தடுப்பதற்கு ஒன்றிய அரசு இராணுவத்தைக் கொண்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது உள்ளிட்ட செய்திகள் ஆங்கில செய்தி ஊடகங்களில் வந்து கொண்டிருந்தன.

அதுவரை, காங்கிரசு, சி.பி.எம்., சி.பி.ஐ. உள்ளிட்ட தேசிய கட்சிகளும் தமிழ்நாட்டில் இருக்கும் முதன்மையான பா.ஜ.க. எதிர்க்கட்சிகளும் விவசாயிகளின் இந்தப் போராட்டம் குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டின் செய்தி ஊடகங்கள், தி.மு.க., சி.பி.எம்-இன் செய்தி ஊடகங்களும் இது தொடர்பாக எந்த செய்திகளையும் வெளியிடாமல், விவசாயிகளின் போராட்டத்தை இருட்டடிப்பு செய்தன.


படிக்க : மீண்டும் டெல்லி சலோ: பாசிஸ்டுகளை வீழ்த்த மக்கள் போராட்டங்களே திறவுகோல்!


இந்நிலையில், பிப்ரவரி 13-ஆம் தேதியான நேற்று டெல்லியை முற்றுகையிட்ட விவசாயிகள் மீது நாட்டின் எதிரிகளைத் தாக்குவதைப் போன்றதொரு தாக்குதலை இந்திய இராணுவத்தைக் கொண்டு நடத்தியது மோடி அரசு. இதனைதொடர்ந்து, டெல்லி விவசாயிகளின் போராட்டம் உலகம் முழுவதும் உள்ள ஊடகங்களில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், நாட்டின் முதன்மையான எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரசின் தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே ஊடகங்களுக்கு அளித்த பேட்டி வெளியாகியிருந்தது. அந்தப் பேட்டியில், “மத்தியில் காங்கிரசு ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை இப்போது அறிவிக்கிறேன். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக எங்களின் முதல் வாக்குறுதி இது. ஆட்சிக்கு வந்ததும் இந்த வாக்குறுதியை நிச்சயம் செயல்படுத்துவோம்” என்று கூறியுள்ளார்.

விவசாயிகளின் இந்தக் கோரிக்கையானது, குறிப்பாக, வடமாநில விவசாயிகளுக்கு உயிராதாரமான ஒரு கோரிக்கை என்பது மோடி ஆட்சி வருவதற்கு முன்பாக, 2014-லிருந்தே பேசப்பட்டுவரும் விவாதப்பொருளாகும். பாசிச மோடி கும்பல் ஆட்சிக்கு வந்தப் பின்னர், விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதாகக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் நயவஞ்சகமாக விவசாயிகளை ஏமாற்றியது. அன்றிலிருந்து குறைந்தபட்ச ஆதாரவிலைக்கான கோரிக்கைக்கான போராட்டங்கள் அதிகரித்து வருவது காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு நன்கு தெரியும்.

விவசாயிகள் போராட்ட காட்சி

2020-ஆம் ஆண்டின் இறுதியில் டெல்லி விவசாயிகள் தொடங்கிய, மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான, “டெல்லி சலோ” போராட்டத்தின் போதே இது அதிகம் விவாதிக்கப்பட்ட விசயமும் ஆகும். இந்தப் போராட்டத்தின் வெற்றியானது, மோடி-அமித்ஷா கும்பலை அரசியல் ரீதியாக தோல்வி முகத்திற்குத் திருப்பியது.

தமிழ்நாட்டிற்கு ஜல்லிக்கட்டுப் போராட்டம் போல, வட மாநிலங்களுக்கு விவசாயிகள் போராட்டம் மோடி கும்பலைப் பணியவைத்தப் போராட்டமாகும்.

மோடி-அமித்ஷா கும்பலுக்கு எதிராக ஒன்றிணைவதாகக் கூறிக்கொள்ளும் எதிர்க்கட்சிகள், விவசாயிகள், உழைக்கும் மக்களின் உரிமைப் போராட்டங்களை ஆதரித்து அவர்களுக்கு உதவுவதற்குப் பதிலாக, மோடி-அமித்ஷா கும்பல் உருவாக்கியுள்ள, “பொம்மை” நாடாளுமன்றத்தில் வாதப் “போரில்” ஈடுபட்டு தங்களது எதிர்ப்பைக் காட்டுவதாக நாடகமாடுகின்றனர்.

இப்போதும் கூட, விவசாயிகள் போராட்டத்தைத் தொடங்குவதற்கு முன்னதாகவே காங்கிரசு உள்ளிட்ட எந்த எதிர்க்கட்சிகளும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஆதரிப்பதாக சிறு வாக்குறுதியையும் கொடுக்கவில்லை.

கார்ப்பரேட் வர்க்கங்களுக்கு சேவை செய்வது, ஆனால், பா.ஜ.க-வை எதிர்ப்பது என்று உழைக்கும் மக்களுக்கு துரோகம் செய்யும் திட்டத்தை தங்களது கொள்கையாக எதிர்க்கட்சிகள் கொண்டிருப்பதுதான் இதற்குக் காரணமாகும்.


படிக்க : பிப்.13: டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஆதரிப்போம்! | தோழர் வெற்றிவேல்செழியன்


மோடி-அமித்ஷா கும்பலுக்கு எதிர்ப்பைக் காட்டுவதன் மூலமாக மட்டுமே, மக்களிடம் உள்ள மோடி எதிர்ப்பலையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அப்பட்டமான சந்தர்ப்பவாதப் போக்கையே எதிர்க்கட்சிகள் கடைப்பிடிக்கின்றனர்.

பாசிச பா.ஜ.க-வின் அடிக்கட்டுமானங்களான ஜி.எஸ்.டி., நீட், புதியக் கல்விக் கொள்கை, சி.ஏ.ஏ., கிரிமினல் சட்டத்திருத்தம், தொழிலாளர்கள் சட்டத்திருத்தம், காஷ்மீருக்கான சிறப்புரிமை ரத்து  உள்ளிட்ட மக்கள் விரோத சட்டங்கள், திட்டங்களை திருப்பப் பெறுவதாக வாக்குறுதிகள் எதையும் கொடுக்காமல், விவசாயிகள் விளைவிக்கும் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை, தொழிலாளர்களுக்கு எட்டுமணி நேர வேலை, சிறு தொழில்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை தாமாக முன்வந்து ஆதரிக்காமல், எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்தைப் “பாதுகாக்கப்” போவதாகக் கூறுகின்றன.

தங்களது இந்த சந்தர்ப்பவாதப் போக்கை எதிர்க்கட்சிகள் கைவிட்டு, விவசாயிகள்-தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டத்தில் முன்நிற்காதவரை எதிர்க்கட்சிகளை மக்கள் நம்பப்போவதில்லை. ஆகையால், விவசாயிகள், உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை கொள்கை ரீதியாக முன்வைத்து மக்களின் களப்போராட்டங்களில் பங்கேற்பதன் மூலம் மட்டுமே எதிர்க்கட்சிகளால் பாசிச பா.ஜ.க-வை தேர்தலில் கூட வீழ்த்த முடியும்.


தங்கம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமி – இதனை எப்படிப் பார்ப்பது?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த ஜனவரி மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்திய மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டுள்ளார். இதனை எப்படிப் பார்ப்பது?

ஸ்லாமிய மக்களுக்கு எதிராக வெறுப்பு அரசியலைத் தூண்டி, அவர்களைப் படுகொலை செய்து, அவர்களது இரத்தத்தில் பாசிசத்தை அரங்கேற்றிவரும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வின் அடிமையான அ.தி.மு.க.வை எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆதரிப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி முறிவு தேர்தல் நாடகம் என்பது பாமர மக்களும் அறிந்த ஒன்று. பா.ஜ.க-தான் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மீது அடக்குமுறையை ஏவியது; அக்கட்சியை தடைசெய்வதற்கான முயற்சியிலும் இறங்கியது. இப்படிப்பட்ட பாசிச பா.ஜ.க-வை அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தி, இஸ்லாமிய மக்களை ஜனநாயகப் பூர்வமாகவும் பாசிசத்திற்கு எதிராகவும் அணிதிரட்ட வேண்டியது எஸ்.டி.பி.ஐ-யின் கடமையாகும்.

பல இஸ்லாமிய அமைப்புகள் தி.மு.க. கூட்டணியில் உள்ளன அல்லது தி.மு.க.வை ஆதரிக்கின்றன. எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் இஸ்லாமிய சிறைவாசிகளை தி.மு.க. அரசு விடுதலை செய்யவில்லை என்று அ.தி.மு.க.வை ஆதரிப்பதாக கூறுகின்றனர். ஆனால், அதற்காக அப்பாவி இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து அவர்கள் சிறைக்குச் செல்வதற்கு காரணமான பா.ஜ.க.விற்கு அடிமையாக இருக்கும் அ.தி.மு.க.வை ஆதரிப்பது எந்தவகையில் சரி என்பதை அக்கட்சியில் இருக்கும் இஸ்லாமியர்கள்தான் கூற வேண்டும்.

இன்றைய எடப்பாடி பழனிச்சாமி மட்டுமல்ல, ஜெயலலிதா ஆட்சி காலம் முதல் இஸ்லாமிய மக்கள் மீதான அடக்குமுறைகள் எத்தனை எத்தனை? தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டுவந்து இலட்சக்கணக்கான இஸ்லாமிய மக்களை நாட்டைவிட்டு வெளியேற்றும் பா.ஜ.க.வின் சதித்திட்டத்திற்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்ததைப் பற்றி எஸ்.டி.பி.ஐ.யினர் ஏன் பேசுவதில்லை என்பதை சிந்திக்க வேண்டும்.

ஆகையால், பாசிசம் அரங்கேறி வருகின்ற சூழலில், பாசிச எதிர்ப்பு சக்திகளைப் பிளவுப்படுத்தி, பா.ஜ.க.வின் ‘பி டீம்’-ஆக வடக்கே ஓவைசி போல தமிழ்நாட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சி செயல்படுவதை இஸ்லாமிய மக்கள் புரிந்து கொண்டு அ.தி.மு.க.-எஸ்.டி.பி.ஐ. கும்பலைப் புறக்கணிக்க வேண்டும்.


பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

(புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பிப்.13: டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஆதரிப்போம்! | தோழர் வெற்றிவேல்செழியன்

பிப்.13: டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஆதரிப்போம்! | தோழர் வெற்றிவேல்செழியன்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



எது கேலிக்கூத்து? நிதிஷ்குமாரின் ‘பல்டி’யா,  இந்திய ‘ஜனநாயகமா’

‘‘நாடு நெருக்கடியில் உள்ளது, அரசியல் சாசனம் ஆபத்தில் உள்ளது, மத்திய புலனாய்வு அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன, தேசிய நலன் கருதி, கருத்து வேறுபாடுகளை கலைந்து, ஜனநாயகத்தை காக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்’‘ – இவை கடந்த ஆண்டு ஜூன் மாதம், பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டத்தில் பா.ஜ.க-விற்கு எதிராக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உதிர்த்த வார்த்தைகள்.

அதே நிதிஷ்குமார்,  ஜனவரி 28-ஆம் தேதி பா.ஜ.க-வுடன் மீண்டும் கூட்டணி அமைத்து ஒன்பதாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். அவருடன் பா.ஜ.க-வின் தலைவர்கள், சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய்குமார் சின்ஹா ஆகியோர் துணை முதலமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.

நிதிஷ்குமாரின் இந்தச் செயலை பலரும் விமர்சித்து வந்தாலும், பெரும்பான்மையான விவாதங்கள் நிதிஷின் இச்செயல் ‘‘இந்தியா கூட்டணிக்கு எந்தெந்த வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்’‘ என்ற கோணத்தில்தான்  நடத்தப்படுகின்றன. இன்னும் சிலரோ, நிதிஷ்குமாரை விமர்சிக்க சென்றால், அவர் ‘ஒருங்கிணைத்த’ இந்தியா கூட்டணியையும் விமர்சிக்க நேரும் என்பதால் பா.ஜ.க-வின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துவதோடு நிறுத்திக்கொள்கின்றனர்.

ஆனால், நிதிஷ்குமாரின் யோக்கியதையைப் பற்றிப் பேசும் இவர்கள், அவர் அங்கம் வகித்த இந்தியா கூட்டணியைப் பற்றியும், நிதிஷ்குமார் போன்ற கேடுகெட்ட பிழைப்புவாதிகளை உருவாக்கும், வளர அனுமதிக்கும் இந்திய ‘ஜனநாயகத்தின்’ உண்மைநிலை பற்றியும் வாய்திறப்பதில்லை.

‘பல்டி’ குமார்

நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியிலிருந்து விலகி பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என ஒருவார காலமாகவே ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன. ‘‘நிதிஷ்குமார் தான் இந்தியா கூட்டணியை ஒருங்கிணைத்ததில் முக்கிய பங்காற்றியவர், அவர் இவ்வாறு செய்யமாட்டார்’‘ என்று இந்தியா கூட்டணியின் ஆதரவாளர்கள் சிலர் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் அவர்கள் முகத்தில் எல்லாம் கரியை பூசுமாறு நிதிஷ்குமார் அந்தர் பல்டி அடித்துள்ளார்.

2022-இல், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு நிதிஷ்குமார், ‘‘இனி என் வாழ்நாளில், எந்த வகையிலும் பா.ஜ.க. வழியில் செல்ல மாட்டேன்’‘, ‘‘பா.ஜ.க-வுடன் இணைவதைவிட என் உயிரை மாய்த்துக்கொள்வதே மேலானது’‘ என்றெல்லாம் சவடால் அடித்திருந்தார்.


படிக்க: நிதிஷ்குமார் – “INDIA” கூட்டணி – பாசிச எதிர்ப்பு | தோழர் சிவா


அதேபோல, ‘‘சாதிவெறியைப் பரப்பும் நிதிஷ்குமாருடன் பா.ஜ.க. இனி ஒருபோதும் கைக்கோர்க்காது, பீகார் முதலமைச்சருக்கு பா.ஜ.க-வின் கதவுகள் இனி ஒருபோதும் திறக்காது’‘ என்று கூறியிருந்தார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

ஆனால் இன்று நிதிஷ்குமாரின் பதவியேற்பு விழாவில் முதல் ஆளாக சென்று முதல்வரிசையில் அமர்ந்திருந்த, பா.ஜ.க-வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, ‘‘நிதிஷ்ஜீ மீண்டும் என்.டி.ஏ. கூட்டணிக்கு திரும்பியது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஜே.டி.யூ. மற்றும் நிதிஷ்ஜீ-யின் இயல்பான கூட்டணி என்.டி.ஏ. மட்டுமே’‘ என்று பாசிஸ்டுகளுக்கே உரிய இரட்டை நாக்குடன் நிதிஷ்குமாரை வரவேற்று சிலாகித்துள்ளார்.

கேட்பதற்கே கேலிக்கூத்தாக இருக்கிறதல்லவா?

ஆனால், நிதிஷ்குமார் இப்படி பல்டி அடிப்பது முதல்முறையல்ல, ‘‘பல்துராம்’‘ (மாறிக்கொண்டே இருப்பவர்) என்று பெயர் சூட்டும் அளவிற்கு அவர் பல்டி அடிப்பதில் இழிபுகழ்பெற்றவர்.

கடந்த பத்தாண்டுகளில் மட்டும் நிதிஷ்குமார் நான்குமுறை கூட்டணி தாவியுள்ளார். 2013-ஆம் ஆண்டு பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தனது பிரதமர் கனவு கலைந்துபோனதாலும், இஸ்லாமிய மக்களின் வாக்குவங்கியை காப்பாற்றி கொள்வதற்காகவும், பா.ஜ.க-வுடனான தனது 17 ஆண்டுகால கூட்டணியை முறித்து ‘மதச்சார்பற்ற’ வேடம் தரித்தார், நிதிஷ்குமார். அதன்பிறகு 2015-இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ‘‘மெகா கூட்டணி’‘ அமைத்து தேர்தலில் வென்று முதலமைச்சராக பதவியேற்றார்.

ஆனால்,  2017-இல் மெகா கூட்டணியில் இருந்த லாலு பிரசாத் யாதவ் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி நிதிஷ்குமாரை அக்கூட்டணியில் இருந்து பெயர்த்தெடுத்து தனது கூட்டணியில் இணைத்துக்கொண்டது மோடி-அமித்ஷா கும்பல். அதன்பிறகு வந்த 2020 சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க-வின் என்.டி.ஏ. கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிட்டு ஆட்சி அமைத்தார். அத்தேர்தலில் நிதிஷ்குமாரின், ஐக்கிய ஜனதா தளத்தை விட பா.ஜ.க. அதிக இடங்களை கைப்பற்றியிருந்தது. என்னதான் நிதிஷ்குமார் முதலமைச்சராக இருந்தாலும், பா.ஜ.க-வே பீகாரில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. இப்படியேப்போனால், தனது கட்சியையே பா.ஜ.க. விழுங்கிவிடும் என்று அஞ்சிய நிதிஷ்குமார் மீண்டும் 2022-இல் பா.ஜ.க-வுடனான என்.டி.ஏ கூட்டணியை முறித்துக்கொண்டு மெகா கூட்டணியில் இணைந்துக்கொண்டார்.

இதற்கடுத்து தான் பா.ஜ.க-விற்கு எதிராக எல்லா எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க போவதாக நிதிஷ்குமார் அறிவித்து, அதற்கான முயற்சியில் இறங்கினார். கடந்தாண்டு ஜூன் மாதத்தில் எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் நிதிஷ்குமார் தலைமையில் நடத்தப்பட்டதையடுத்து, 28 எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி உருவாகியது. அதாவது, பா.ஜ.க-விற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கபடியாடிக்கொண்டிருந்த பிழைப்புவாதியான நிதிஷ்குமாரின் தலைமையில்தான் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டு ஏழு மாதங்கள் கூட ஆகாத நிலையில் மறுபடியும் பல்டியடித்து பா.ஜ.க-வுடனே இணைந்துள்ளார்.

நிதிஷ்குமாரின் கூட்டணி தாவல்:பதவி ஒன்றே நோக்கம்

நிதிஷ்குமார் தற்போது பா.ஜ.க. கூட்டணியில் இணைந்ததற்கு பல காரணங்கள் முன்வைக்கப்படுகிறது. முதலில், இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்படுவோம் என்று நிதிஷ்குமார் எதிர்ப்பார்த்திருந்த நிலையில், இந்தியா கூட்டணியில் ஒற்றை ஒருங்கிணைப்பாளர் பதவியே உருவாக்கப்படவில்லை. இரண்டாவதாக, ‘‘இந்தியா கூட்டணியின் முகமாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை முன்னிறுத்தலாம்’‘ என்று மம்தா பானர்ஜியும், அரவிந்த் கெஜ்ரிவாலும் முன்வைத்தது, இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராகலாம் என்று எண்ணியிருந்த நிதிஷ்குமாரின் கனவில் மண்ணைப் போட்டது.

இதனால் எரிச்சலடைந்த நிதிஷ்குமார், அதற்கடுத்து நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலுவை குறிவைத்து ‘‘இந்திதான் நம் தேசிய மொழி, அவர்கள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும், மொழிபெயர்க்க முடியாது’‘ என்று திமிராக பேசியிருந்தார். இது பெரும் பேசுபொருளானது. அப்போதே, நிதிஷ்குமார் கூட்டணியை விட்டு விலகப்போகிறார் என்று பேச்சுகள் எழுந்தன.

மற்றொருபுறம், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், நிதிஷ்குமாருடன் கூட்டணியில் இருந்த ஆர்.ஜே.டி. தலைவர் லாலு பிரசாத் யாதவ் தன் மகன் தேஜஸ்வி யாதவை முதல்வராக்குவதற்கான இரகசியச் சந்திப்பு நடத்தியதாக செய்திகள் வெளியாகியது. இதனையடுத்து அச்சந்திப்பில் ஈடுபட்டிருந்த ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவராக இருந்த லாலன் சிங்கின் பதவியை நிதிஷ்குமார் பறித்தார்.

இதனுடன், பீகாரில் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களின் (ஓ.பி.சி.) வாக்குகளை கவர்வதற்காக, கடந்தாண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அவர்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் வகையில் நிதிஷ்குமார் சட்டம் இயற்றியிருந்தார். இதனையடுத்து, சாதிவாரி கணக்கெடுப்பு தேசிய அளவில் பேசுப்பொருளானதோடு நடந்துமுடிந்த ஐந்து மாநிலத் தேர்தலிலும் இந்தியா கூட்டணியினரால் பா.ஜ.க-விற்கு எதிரான ஆயுதமாக முன்னெடுக்கப்பட்டது. இது பா.ஜ.க-வை நெருக்கடிக்கு உள்ளாக்கியது.

அதற்குபிறகு பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகளை கவர்வதற்கான வேலையில் பா.ஜ.க. தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக, பீகாரின் முன்னாள் முதல்வராக இருந்த, பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் சாதி மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய கர்பூரி தாக்கூர் என்பவருக்கு பாரத் ரத்னா விருதை அறிவித்துள்ளது. இது பீகாரில் நிதிஷின் ஓ.பி.சி. வாக்குவங்கியில் மேலும், சரிவை ஏற்படுத்தும் என்றும் பேசப்படுகிறது.

ஒருபுறம்,தேர்தல் தொடங்குவதற்கு இரண்டு மாதங்களே உள்ள நிலையிலும் தொகுதி பங்கீட்டை கூட முடிக்க முடியாமல் இந்தியா கூட்டணி திணறி வருகிறது. அதேபோல் அக்கூட்டணியில் தனக்கு பிரதமர் வேட்பாளர் வாய்ப்பு இல்லை என்பதும் உறுதியாகிவிட்டது. இதனைவிட, இந்த கூட்டணியில் நீடித்தால் லாலு பிரசாத் யாதவே தனது முதல்வர் பதவியை பறித்துவிடுவார் என்ற அச்சமும் நிதிஷ்குமாருக்கு உள்ளது. எனவே, இந்தியா கூட்டணியை போன்றதொரு ‘மூழ்கும் கப்பலில்’ இருந்து பதவியை பறிக்கொடுப்பதைவிட பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்து அடிமையாக இருந்தாலும் முதல்வர் பதவியுடன் ‘கௌரவமாக’ இருக்கலாம் என்ற முடிவுக்கு நிதிஷ்குமார் வந்துவிட்டார். இந்த பிழைப்புவாத கணக்கே நிதிஷ்குமாரின் தற்போதைய அந்தர் பல்டிக்கான காரணம்.


படிக்க: மீண்டும் டெல்லி சலோ: பாசிஸ்டுகளை வீழ்த்த மக்கள் போராட்டங்களே திறவுகோல்!


ஒருபுறம் நிதிஷ்குமார் பிழைப்புவாதத்திற்காக இந்தியா கூட்டணியிலிருந்து விலகி பா.ஜ.க-வுடன் கூட்டு சேர்ந்துள்ளார். இன்னொருபுறம் கூட்டணியை விட்டு வெளியேறாவிட்டாலும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கும், இக்கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டில் ஒத்த கருத்திற்கு வர முடியாத காங்கிரஸ் கட்சிக்கும் இதே பிழைப்புவாத கண்ணோட்டம்தான் உள்ளது. தங்களுக்கு இடையிலான பதவி, அதிகார போட்டியை கூட சுமூகமாக முடித்துகொள்ள முடியாதளவிற்கே இக்கட்சிகளின் பா.ஜ.க. எதிர்ப்பு உள்ளது. மற்றப்படி இவர்களுக்கு பா.ஜ.க-வை எதிர்க்க வேண்டும் என்ற உறுதிப்பாடோ அதற்கான கொள்கையோ கிடையாது.

பாசிச எதிர்ப்பாக இருந்தாலும் பா.ஜ.க. எதிர்ப்பாக இருந்தாலும் மாற்று திட்டமும், கொள்கைகளும் முக்கியம் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பா.ஜ.க.விற்கு எதிரான மாற்றுத்திட்டம் ஏதும் இல்லாமல் ‘பா.ஜ.க. எதிர்ப்பு’ என்ற ஒன்றை  மட்டும் வைத்துகொண்டு உருவாக்கப்படும் கொள்கையற்ற கூட்டணி சந்தர்ப்பவாதமாக, பிழைப்புவாதத்திற்கானதாக மட்டுமே இருக்கும்.

இந்திய ‘ஜனநாயகத்தின்’ கேலிக்கூத்து

ஓட்டுக்கட்சிகளின் பிழைப்புவாதத்தை விமர்சிக்கும் அதேவேளையில், ஒரே நாளில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, வேறொரு கட்சியுடன் கூட்டணி வைத்து, அதேநாளில் முதல்வராக பதவியேற்க முடியும் என்ற இழிநிலைக்கு வாய்ப்பு வழங்கும் இந்திய ‘ஜனநாயகத்தின்’ கேலிக்கூத்தை பற்றியும் நாம் பேச வேண்டியுள்ளது.

பதவி, அதிகாரத்திற்காக கூட்டணி மாறுவது, கட்சித் தாவுவது எல்லாம் இந்திய தேர்தல் ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ‘மாண்புகளே’. தேர்தலுக்கு முன்னர் ஒரு கூட்டணியில் இருந்து, பிரச்சாரம் செய்து, மக்களின் வாக்குகளைப் பெற்று, ஆட்சியைப் பிடிக்கலாம்; தேர்தலுக்கு பிறகு அந்த கூட்டணியை முறித்துகொண்டு, யாருக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்களோ அவர்களுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை தொடரலாம்.

அவர்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு பதில் சொல்ல வேண்டுமென்ற அவசியம் ஓட்டுக்கட்சிகளுக்கு கிடையாது. அதேப்போல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி கட்சியோ, கூட்டணியோ தாவினால் அவர்களை தண்டிப்பதற்கான அதிகாரத்தையும் இந்த போலி ஜனநாயகக் கட்டமைப்பு மக்களுக்கு வழங்குவதில்லை. அவர்கள் என்ன ஆட்டம் போட்டாலும் மக்கள் சகித்துக்கொள்ள வேண்டும் என்பதே இந்திய ஜனநாயகத்தின் அவலநிலை.

இந்த போலி ஜனநாயகக் கட்டமைப்பை மற்ற ஓட்டுக்கட்சிகளைவிட, பா.ஜ.க. தன்னுடைய பாசிசச் சர்வாதிகாரத்தை நிறுவுவதற்காக ‘திறம்பட’ பயன்படுத்தி வருகிறது. இதற்காக, ஆளும் கட்சிகளின் கூட்டணிகளை உடைப்பது, எம்.எல்.ஏ-க்களை குதிரைபேரம் மூலம் விலைக்கு வாங்குவது, அமலாக்கத்துறை மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை மிரட்டி பணியவைப்பது எனப் பல்வேறு சட்டப்பூர்வமான உத்திகளை பா.ஜ.க. கும்பல் கையாண்டுவருகிறது. இதன்மூலம் மக்கள் யாருக்கு ஓட்டுப்போட்டாலும் பா.ஜ.க-தான் அங்கு ஆட்சிசெய்யும் என்ற புதியநிலையை உருவாக்கியுள்ளது.

எனவே, இங்கு நிதிஷ்குமார் கூட்டணி தாவியது மட்டும் பிரச்சினை அல்ல, நிதிஷ்குமாரை போன்ற கடைந்தெடுத்த பிழைப்புவாதிகளையும் பா.ஜ.க-வை போன்ற பாசிசக் கும்பலையும் வளர அனுமதிக்கும் இந்தியாவின் போலி ஜனநாயகக் கட்டமைப்பே முதன்மையான பிரச்சினை. ஆகவே, நிதிஷ்குமாரை போன்ற பிழைப்புவாதிகளும், பா.ஜ.க. பாசிசக் கும்பலும் ஒழித்துக்கட்டப்பட வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த போலி ஜனநாயகக் கட்டமைப்பை தகர்த்தெறிவதற்கான தேவையை உணர வேண்டும். மேலும், தேர்தல் பிழைப்புவாதிகளையும் பாசிஸ்டுகளையும் வளர அனுமதிக்காத, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை திருப்பி அழைப்பதற்கான உரிமையை மக்களுக்கு வழங்குகின்ற பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்காக போராட வேண்டும்.


தலையங்கம்

(புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



தமிழ்நாட்டில் தொடரும் சாதி – தீண்டாமை கொடுமைகள்

ர்மபுரி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி அன்று தாரணி மற்றும் சின்னதாயி என்ற பெண்கள் வயலில் கூலி வேலை செய்ய வந்த பட்டியல் சமூக பெண்களுக்கு தேநீரை டம்ளரில் கொடுக்காமல், தேங்காய் சிரட்டையில் கொடுத்து  தீண்டாமை கொடுமை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

செல்லி மற்றும் அவருடன் சேர்ந்து மற்ற நான்கு பெண்களும் புவனேஷ்வரன் என்பவரின் நிலத்தில் கூலி வேலைக்கு சென்ற பொழுது கொங்கு வேளாளர் சாதியை சேர்ந்த  புவனேஷ்வரனின் மனைவி தாரணி மற்றும் அம்மா சின்னதாயி இருவரும் அவர்களுக்கு தேங்காய் சிரட்டையில் தேநீர் வழங்கினர்.

இதை அங்கிருந்தவர்களில் ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாக பரவிய நிலையில் பாதிக்கப்பட்ட பெண், செல்லி கொடுத்த புகாரின் பேரில் தாரணி மற்றும் சின்னத்தாயி ஆகிய சாதிவெறியர்களும் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி குறியீடுகளில் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழ்நாடு இருப்பதாக சொல்லிக் கொள்ளப்படும் வேளையில் தான் இப்படிப்பட்ட காட்டுமிராண்டித்தனமான சம்பவம் நடந்திருக்கிறது.


படிக்க: ஆர்.எஸ்.எஸ், ஆதிக்க சாதிவெறி அமைப்புக்களை தடை செய்! | துண்டறிக்கை


வெகு காலத்திற்கு முன்பு,  இந்திய நிலப்பரப்பு முழுவதும் சாதிய ஒடுக்குமுறை மிக மோசமான மனிதத்தன்மையற்ற  வடிவங்களில் அமலில் இருந்தது. அப்போழுது தெருக்களில் காலணி அணிந்து நடக்கக்கூடாது, பொதுக் கிணறுகளில் தண்ணீர் குடிக்கக்கூடாது, நகைகள் அணியக்கூடாது, தோலில் துண்டு போடக்கூடாது, இரட்டை குவளை முறை போன்ற எண்ணற்ற தீண்டாமை கொடுமைகள் அமலில் இருந்ததாகவும் அவை நீண்ட சமூக போராட்டங்களின் மூலமாக ஒழிக்கப்பட்டது என்றும் நமக்கு வரலாறாக சொல்லப்படுகிறது. ஆனால் இவையெல்லாம் இன்னும் ஒழிக்கப்படவில்லை. பல்வேறு வடிவங்களில் இன்றும் தொடர்கிறது.

இதுவொரு தனித்த நிகழ்வல்ல. தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக சாதிய வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இந்த சாதிய வன்கொடுமைகள் மிக மோசமான வடிவங்களில் பட்டியல் சமூக மக்கள் மீது தொடுக்கப்படுகிறது. ஊர் மக்கள் முன்னால் காலில் விழ வைப்பது, சிறுநீர் கழிப்பது, குடிநீர் தொட்டியில் மலத்தை கலப்பது, சிறுவர்கள் தங்களுடன் ஒரே வகுப்பில் படிக்கும் சிறுவர்கள அரிவாளால் வெட்டுவது, கொலை செய்வது போன்ற அருவெறுக்கத்தக்க  வடிவங்களில் இந்த சாதி வன்கொடுமைகள் வெளிப்படுகிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவாயல் கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் ஒரு பட்டியல் சமூகத்தை  சேர்ந்த பள்ளி மாணவர் மற்றும் அவரது சகோதரி மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை நடத்தியது சக மாணவர்கள் தான் என்ற உண்மை நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதுபோன்ற சம்பவங்கள் கடந்த 100 ஆண்டுகளாக சமத்துவம், சமூக நீதி, பகுத்தறிவு என்று பேசி வந்த திராவிட இயக்கங்கள் செழித்து வளர்ந்த மாநிலத்தில் தான்  நடந்துள்ளது.


படிக்க: ஆதிக்கச் சாதிவெறியாட்டங்கள்: தமிழ்நாட்டைச் சுற்றிவளைக்கும் ஆர்.எஸ்.எஸ்!


சராசரியாக பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான வன்முறை தமிழ்நாட்டில் வருடத்திற்கு 1200 என்ற கணக்கில்  பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு சாதி வன்கொடுமைகளின் எண்ணிக்கை  2000 என உயர்ந்து விட்டது.  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி, “கடந்த ஐந்து ஆண்டுகளில், 300 சாதி தொடர்பான கொலைகள் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பட்டியல் சமூகத்தினர்” என்று‌ தெரியவந்துள்ளது.

இந்த வன்கொடுமை சம்பவங்களை கையாள்வதில் ஆளும் வர்க்க அரசு (அது திமுகவாக இருந்தாலும், அதிமுகவாக இருந்தாலும்) ஆதிக்க சக்திகளுக்கு சாதகமாகவே நடந்து கொள்கிறது.

வேங்கைவயலில் குடிநீர் தேக்கத் தொட்டியில் மலம் கலந்தது; மேல்பாதி என்னும் கிராமத்தில் பட்டியல் சமூக மக்களை கோவிலுக்குள் நுழையவிடாமல் தடுத்தது;  நாங்குநேரியில் பட்டியல் சமூக மாணவர் மற்றும் அவரது சகோதரி ஆகியோர் சக வகுப்புத் தோழர்களால் தாக்கப்பட்டது; ஆகிய மூன்று சம்பவங்களை எடுத்துக்கொண்டு பார்த்தால், வேங்கைவாயலில் குற்றவாளிகளை இதுவரை போலீசு கண்டுபிடிக்கவில்லை. மேல்பாதியில் போலீஸுக்கு குற்றவாளிகளை தெரியும்; ஆனால் இன்னும் அவர்களை கைது செய்யவில்லை. நாங்குநேரியில் குற்றவாளிகள் ஜாமீனில் வெளியே உள்ளனர். இதிலிருந்து இந்த அரசு கட்டமைப்பின் ஒவ்வொரு அங்கமும் ஆதிக்க சாதிகளுக்கு சாதகமாக செயல்படுகிறது என்பது தெளிவாகிறது.

நாங்குநேரி, மேல்பாதி, வேங்கைவயல் மற்றும் சமீப காலங்களில் நடந்த இதுபோன்ற சாதிய வன்கொடுமைகளை இந்த மாநிலத்தில் மேல் விழுந்த சில “கருப்பு புள்ளிகள்” என்று ஒதுக்கிவிட முடியாது. இவற்றையெல்லாம்  பட்டியல் சமூக மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட  வன்முறையின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும். இந்த வன்கொடுமைகளுக்கு பின்னணியில் சாதிவெறி இயக்கங்கள், கட்சிகள் ஆகியவை இருக்கின்றன. இந்த சாதிவெறி இயக்கங்களை பாஜக தனது கலவர நோக்கங்களுக்காக பயன்படுத்தி வருகிறது.

வெறுமனே குற்றவாளிகளை கண்துடைப்பிற்காக கைது செய்வது, பின்பு ஜாமீன் வழங்குவது போன்ற நடைமுறைகளால் இந்த சாதிய வன்கொடுமைகளை தடுக்க முடியாது. சாதிவெறி அமைப்புகளை தேர்தல் ஆதாயங்களுக்கு வளர்த்துவிட்டதானது, இன்றைக்கு நிறைய உள்ளூர் சாதிவெறி லும்பன் கும்பல்கள் தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் வளர்வதற்கு வழியமைத்துக் கொடுத்துள்ளது. இந்த லும்பன் கும்பல்களை அரசு எந்த வகையிலும் கண்காணிப்பு செய்வதில்லை. இந்த லும்பன் சாதிவெறி கும்பல்கள் அவற்றின் இயல்பிலே கேவலமான பிழைப்புவாத இதழாக இருப்பதால் அவர்களை யாரும் எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தி கொள்ளமுடியும் என்ற நிலை உள்ளது. இதனை தான் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பயன்படுத்தி சாதி வெறியாட்டங்களை கட்டமைகப்பதற்கான அடித்தளத்தை அமைத்துக்கொள்கிறது. ஒவ்வொரு சாதியிலும் உள்ள கிராமப்புற நகர்ப்புற ஏழை இளைஞர்களை அணுகி அவர்களுக்கு பதவியும் சன்மானமும் கொடுத்து வளர்த்து விடுகிறது. நாட்டின் சமூகப் பொருளாதார ஏழ்மை, வேலை வாய்ப்பின்மை, வறுமை காரணமாக இந்த சாதிவெறி லும்பன் கும்பல்கள் இயல்பாகவே வளர்கிறது.

இந்த சமூக யதார்த்தத்தை புரிந்துகொண்டு சாதிவெறி அமைப்புகளை தடை செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுக்காமல் தமிழ்நாட்டில் சாதிய வன்கொடுமைகளை தடுக்க முடியாது.


சித்தன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாசிச மோடி அரசை பணியவைத்த லாரி ஓட்டுநர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்

டந்த டிசம்பர் மாதத்தில் நடந்த நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷ்ய விதேயக் ஆகிய பாசிசச் சட்டங்களை விவாதங்கள் ஏதுமின்றி நிறைவேற்றியிருந்தது மோடி அரசு. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் இந்த கருப்பு சட்டத்திற்கு எதிராக லாரி ஓட்டுநர்கள் முன்னெடுத்த பிரம்மாண்டமான போராட்டம் பாசிஸ்டுகளை பயங்கொள்ள வைத்தது. அனைத்து தரப்பு உழைக்கும் மக்களுக்கும் எதிராக பாசிசத் தாக்குதல்களை ஏவக்கூடிய இச்சட்டத்திருத்தத்திற்கு எதிராக பெரியளவில் வினையாற்றப்படாமல் இருந்தவந்த மோன நிலையை லாரி ஓட்டுநர்களின் முன்னுதாரணமிக்க இப்போராட்டம் உடைத்திருக்கிறது.

பாசிஸ்டுகளால் நிறைவேற்றப்பட்டுள்ள பாரதிய நியாய சன்ஹிதா (இந்திய தண்டனைச் சட்டம்) குற்றவியல் சட்டத்தில், வாகன விபத்தை ஏற்படுத்துவோருக்கு தண்டனைகளை வழங்கும் ‘‘விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பித்தல்’‘ (Hit and Run) என்ற சட்டப்பிரிவு 106(2)-இல் மோசமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த சட்டப்பிரிவுக்கு எதிராக கடந்த ஜனவரி 1-ஆம் தேதி சரக்கு மற்றும் எரிபொருள் விநியோகம் செய்யும் லாரி ஓட்டுநர் சங்கங்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. குறிப்பாக, காவி பாசிஸ்டுகளின் ‘கோட்டை’ என்று சொல்லப்படுகின்ற குஜராத், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா போன்ற பசுவளைய மாநிலங்களில் இப்போராட்டம் நடந்தது பாசிஸ்டுகளுக்கு பெரிய அடியாக விழுந்தது.

இப்போராட்டத்தில் ஓட்டுநர்கள் லட்சக்கணக்கான லாரிகளை பல கி.மீ. தூரங்களுக்கு அணிவகுத்து நிற்கவைத்தனர். சரக்கு மற்றும் டேங்கர் லாரி ஓட்டுநர்களுடன் இணைந்து தனியார் ஆம்னி பேருந்து ஓட்டுநர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். பல மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அளவிற்கு பிரம்மாண்டமாக போராட்டம் நடந்தது. வடக்கு மற்றும் மேற்கு இந்திய மாநிலங்களில் அமைந்துள்ள சுமார் 2,000 பெட்ரோல் நிலையங்கள் எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொண்டதாக ‘‘பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா’‘ (Press Trust of India) என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. காய்கறிகள், பழங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விநியோகமும் பாதிக்கப்பட்டது.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல், மும்பை-அகமதாபாத் போன்ற பல முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் லாரி ஓட்டுநர்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். தங்களின் வாகனங்களை சாலைகளின் குறுக்கே நிறுத்தி மோடிக்கும்பலின் கருப்புச் சட்டத்திற்கு எதிராக முழக்கமிட்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதோடு சில இடங்களில் லாரி ஓட்டுநர்களுக்கும் போலீசுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. போரடிய ஓட்டுநர்களை கைது செய்வது, அவர்களை கலைப்பதற்கு துப்பாக்கிசூடு நடத்தியது போன்ற பாசிச ஒடுக்குமுறைகளையும் செலுத்தியது மோடிக்கும்பல்.


படிக்க: புதிய தண்டனை சட்டத்தை எதிர்த்து சாலைகளில் இறங்கிய லாரி ஓட்டுனர்கள்!


இதற்கு முன்னர் இருந்த இந்திய தண்டனைச் சட்டம் 304(A)-இல் சாலை விபத்தில் எதிர்பாராத விதமாக ஒருவர் உயிரிழந்தால், விபத்து ஏற்படுத்திய ஓட்டுநருக்கு அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது திருத்தப்பட்டுள்ள பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் 106(2)-இல், ‘‘சாலை விபத்தில் எதிர்பாராதவிதமாக ஒருவர் உயிரிழந்தால், விபத்து ஏற்படுத்திய ஓட்டுநருக்கு அபராதத்துடன் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கலாம். ஓட்டுநர் தப்பித்துவிட்டாலோ அல்லது உயிரிழப்பு குறித்து உடனடியாகப் போலீசாருக்கு புகாரளிக்கத் தவறினாலோ பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ஏழு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கலாம்’‘ என்று மாற்றப்பட்டுள்ளது.

குறிப்பாக இச்சட்டமானது, சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளை கொலைக் குற்றமாக வரையறுக்கிறது. பழைய சட்டத்தின்படி, சாலை விபத்துகளில் உயிரிழப்பு ஏற்பட்டால் பெரும்பாலும் ஓட்டுநருக்கு அபராதம் விதிப்பதே நீதிமன்றத்தால் தண்டனையாக வழங்கப்பட்டுவந்தது. ஆனால் புதிய சட்டத்தின்படி, சிறைத்தண்டனை, அபராதம் ஆகிய இரண்டும் கட்டாயமாக்கப்படுகிறது.

மேலும், இச்சட்டத்தின்படி, சாலைகளில் மூடுபனி போன்ற புறச்சூழல் காரணமாக விபத்து நேர்ந்து உயிரிழப்பு ஏற்பட்டாலும் ஓட்டுநர்கள் சிறைத்தண்டனையை அனுபவித்தாக வேண்டும். பெரும்பாலும் விபத்தை ஏற்படுத்தியபிறகு, பொதுமக்களால் அடித்துக்கொல்லப்படுவோம் என்ற அச்சத்தில் வேறுவழியின்றி தப்பித்துச் செல்வதாக ஓட்டுநர்கள் கூறுகின்றனர். ஆனால் புதிய சட்டம் தப்பித்து செல்வதற்கு மேலும் கடுமையான தண்டனைகளை வழங்குகிறது.

கார், மோட்டார் சைக்கிள் போன்ற சிறிய வாகனங்களோடு சரக்கு லாரிகள் போன்ற பெரிய வாகனங்கள் மோதுவதால் ஏற்படும் விபத்துகளில், பெரிய வாகனங்களின் ஓட்டுநர்களை குற்றவாளிகளாக கருதும் பார்வை நாடு முழுவதும் ஏற்கெனவே இருக்கிறது என அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் (AIMTC) தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் சரக்கு வாகன ஓட்டுநர்கள் மேலும் பாதிப்புகளுக்கு உள்ளாவர்.


படிக்க: மீண்டும் தில்லியில் விவசாயிகள் போராட்டம் – பாசிசத்தை வீழ்த்துவதற்கான பாதை இதுதான்!


கூடுதலாக, இச்சட்டத்தில் அதிகபட்சமாக ஏழு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டிருப்பதும் லாரி ஓட்டுநர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘‘எங்களுக்கு சம்பளமாக ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை மட்டுமே கிடைக்கிறது. அப்படியிருக்க, எப்படி லட்சக்கணக்கான ரூபாய் அபராதமாக செலுத்த முடியும்? இந்த முடிவை திரும்ப பெறாவிட்டால் வேறு வேலைகளை செய்ய வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம். இது எங்களின் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது’‘ என்று கூறுகிறார் 46 வயதான லாரி ஓட்டுநர் ஜகத் பால் ஷர்மா.

இதற்கிடையே, லாரி ஓட்டுநர்களின் போராட்டம் வளர்ந்து, இச்சட்டத்திருத்தத்தின் பாசிச நோக்கம் பிற தரப்பு மக்களிடம் அம்பலப்பட்டு, போராட்டத்தின் வீரியம் அதிகரித்துவிடும் என்ற அஞ்சிய மோடி அரசு, போராட்டம் தொடங்கிய அடுத்த நாளே ஒன்றிய உள்துறைச் செயலர் அஜய் பல்லாவை ஏ.ஐ.எம்.டி.சி. பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைக்கு அனுப்பி வைத்தது. பேச்சுவார்த்தையின்போது, புதிய சட்டப்பிரிவுகள் இன்னும் அமல்படுத்தப்படவில்லை என்றும், ஏ.ஐ.எம்.டி.சி. பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகே சட்டம் அமல்படுத்தப்படும் என்றுக் கூறி பின்வாங்கியது பாசிசக் கும்பல். இதனால், லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்த வைப்பதாக அறிவித்தனர். மேலும், போராடிய லாரி ஓட்டுநர்களை இழிவாகப் பேசிய மத்தியப்பிரதேச மாநிலத்தின் ஷாஜாபூர் மாவட்ட ஆட்சியர் கிஷோர் கன்யாலை பணிமாற்றம் செய்ததன் மூலம் ஓட்டுநர்களுக்கு சாதகமாகத்தான் மோடி அரசு செயல்படுகிறது என்ற பிம்பத்தை உருவாக்கவும் முயன்றது பா.ஜ.க. அரசு.

சமீபத்தில் நடந்துமுடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றிபெற்றதையடுத்து, வடமாநிலங்கள் பா.ஜ.க-வின் கோட்டை என்ற பிம்பத்தை சங்கிகள் கட்டமைத்துவந்த சூழலில் நாடாளுமன்றத்தில் ஐந்து இளைஞர்கள் புகைக்குப்பி வீசி போராட்டத்தில் ஈடுபட்டதும், அதற்கடுத்து வடமாநிலங்களில் லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதும் அந்த பிம்பத்தை தவிடுபொடியாக்கியுள்ளது. மேலும், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான இசுலாமிய மக்களின் போராட்டத்தை தொடர்ந்து பாசிசச் சட்டத்திட்டங்களுக்கு எதிரான மக்களின் களப்போராட்டங்கள் காவி பாசிஸ்டுகளை அச்சங்கொள்ள செய்யும் என்பதற்கு லாரி ஓட்டுநர்களின் போராட்டம் மற்றொரு சான்றாக அமைந்துள்ளது.

இருப்பினும், லாரி ஓட்டுநர்களின் போராட்டத்தை கண்டு மோடி அரசு அஞ்சியிருந்தாலும், பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்திருப்பது என்பது போராட்டத்தை கலைப்பதற்கான உத்தியே. ஏனெனில், இம்மூன்று சட்டங்களின் வரைவு வந்தபோது, ‘‘மருத்துவர்களின் அலட்சியத்தால் நோயாளிக்கு உயிரிழப்பு ஏற்பட்டால் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்’‘ என்ற அம்சத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, இச்சட்டத்தை மக்களவையில் நிறைவேற்றிய அன்று ‘‘இந்திய மருத்துவ கவுன்சிலின் கோரிக்கைக்கேற்ப சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படும்’‘ என்று பேசிய அமித்ஷா, சட்டத்தில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளாமல் அடுத்தநாளே மாநிலங்களவையில் நிறைவேற்றினார். எனவே, லாரி ஓட்டுநர்களுடன் பரிசீலித்துவிட்டே சட்டத்தை அமல்படுத்துவோம் என்று மோடி அரசு தற்போது கொடுத்துள்ள வாக்குறுதியும் அந்தவகையில் சேர்ந்ததே.

எனவே, பாசிச மோடி அரசால் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை நாடு தழுவிய போராட்டமாக, அனைத்து தரப்பு உழைக்கும் மக்கள் மத்தியிலும் கட்டமைத்து அதனை பாசிஸ்டுகளுக்கு எதிரான போராட்டமாக வளர்த்தெடுக்க வேண்டியது புரட்சிகர, ஜனநாயகச் சக்திகளின் கடமையாகும்.


அமீர்

(புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube