Thursday, October 30, 2025
முகப்பு பதிவு பக்கம் 825

பதிவர்களை ஊக்குவிக்கும் தமிழ்மணம் விருதுகள்: ஒரு பார்வை!

55

தமிழ்மணம் விருதுகள்: ஒரு பார்வை!

vote-012சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பதிவர்களுக்கான விருது போட்டிகளை தமிழ்மணம் அறிவித்திருக்கிறது. கடந்த முறை முதல் சுற்றில் பதிவர்கள் மட்டும் வாக்களித்து சிறந்த இடுகைகளை எழுதிய பதிவர்களை தெரிவு செய்தார்கள். இரண்டாம் சுற்றில் பதிவர்கள் அல்லாத பொதுவாசகர்கள் வாக்களிக்கும் வாய்ப்பு, ஈழத்தின் அசாதாரணமான சூழ்நிலை காரணமாக ஈடேறவில்லை. இறுதியில் பதிவர்களின் வாக்களிப்பை வைத்தே விருதுகள் அறிவிக்கப்பட்டன.

வினவு துவங்குவதற்கு முன்னர் பல தோழர்கள் தமிழ்மணம் பற்றியும், படிக்கவேண்டிய பதிவர்கள் மற்றும்  தோழர்களின் வலைப்பூக்களையும் அறிமுகப்படுத்தியிருந்தார்கள். முதன்முறையாக தமிழ்மணத்தை பார்த்த போது பிரமிப்பாக – ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான பத்திரிகைகளை பார்த்தது போல – இருந்தது. பொதுவில் முற்போக்கு விசயங்களை எழுதும் பதிவர்களை மட்டும் படித்து விட்டு செல்வது என்ற எல்லையைத் தாண்டி பதிவுலகின் பலவிதமான பரிமாணங்களை தமிழ்மணத்தின் மூலமே அறிந்து கொண்டோம். ஆன்மீகம், பகுத்தறிவு, தமிழ்தேசியம், தி.மு.க, அ.தி.மு.க, ஆர்.எஸ்.எஸ், கவிதை, சிறுகதை, செய்திகள், பரபரப்பு செய்திகள், கம்யூனிசம், ரசனையாளர்கள், சினிமா பதிவர்கள், ஈழம், சொந்த வாழ்க்கை அனுபவங்கள், குழந்தை அனுபவம், பெண்கள், உபதேசங்கள், தொழில்நுட்பம், முக்கியமாக நமது மொக்கைகள்…  என வலை உலகு முழுவதையும் தமிழ்மணம் பிரதிபலித்தது.

தமிழ்மணத்தின் செயல்முறையைப் புரிந்து கொள்ளவே சிலமாதங்கள் ஆகின. பலநாட்கள் வாக்களிக்கும் பட்டை ஏன்,எதற்கு என்பதே தெரியாது. தமிழ் தட்டச்சு தெரிந்திருந்தாலும் பின்னூட்டம் போடும் முறை கூட எமக்குத்தெரிந்திருக்கவில்லை. வினவை ஆரம்பித்தவுடன்,  கில்லி சொந்த முறையில் பலவற்றை அறிந்து கொண்டு கற்றுக்கொடுத்தார். ஆரம்பத்தில் வேர்ட்பிரஸ்ஸில் தமிழ்மணத்தின் வாக்களிக்கும் பட்டையை சேர்க்க முடியாது என்பதால் தனி உரல் கொடுத்து வாக்களிக்கும் முறையை, எதிர் வாக்குகளுக்கும் சேர்த்து அவரே அறிமுகம் செய்தார். பின்பு பல வேர்ட்பிரஸ் பதிவர்களும் பிளாக்கர்களும் கூட அதை பயன்படுத்திக் கொண்டனர்.

இப்படித்தான் சூடான இடுகை, வாசகர்பரிந்துரை, மறுமொழி திரட்டி எல்லாம் அறிந்தோம். தமிழ்மணத்தில் இடுகையை சேர்த்து விட்டு முகப்பில் பெயர் வருவதை பார்த்து குழந்தைத்தனமாக உற்சாகம் அடைந்திருக்கிறோம். இது பல பதிவர்களுக்கும் பொருந்தக்கூடியதே, குறிப்பாக புதிய பதிவர்களுக்கு. புதிய பதிவர்களுக்கு வாசகர்கள், பதிவர்கள் மத்தியில் அறிமுகம் செய்யும் நுழைவாயிலாக தமிழ்மணமே விளங்குகிறது. அச்சு மற்றும் காட்சி ஊடகங்களின் ஆதிக்கத்திற்கு மாற்றாக உண்மைகளை பேசுவதற்கு வாய்ப்பளிக்கும் இணையம் என்ற நவீன தொழில்நுட்பத்தில், தமிழ் உலகைப் பொறுத்தவரை தமிழ்மணமே முன்னணியில் இருக்கிறது. எடுத்துக்காட்டாக ஈழப் போர் உச்சத்தில் இருந்த மாதங்களில், போரை நிறுத்த வேண்டுமென்ற கருத்தை பதிவர்கள் மூலம் தமிழ் இணைய உலகம் முழுதும் கொண்டு சென்றதை தமிழ்மணத்தின் சாதனையாக சொல்லலாம்.

எதிர்காலத்தில்  ஊடகமுதலாளிகளின் பிடிக்குத் தப்பி இந்த ஊடகம் எஞ்சி  நிற்குமா? தெரியவில்லை.  பயோ மெட்ரிக் கார்டுகளில் மக்களின் கட்டை விரலைக் காணிக்கையாக கேட்கும் நந்தன் நீலேகனிகள், பதிவர்களின் ரேகைப்பதிவையும் கேட்கக் கூடும். அந்த வகையில் மூச்சு விடக் கிடைத்திருக்கும் இந்த அவகாசத்தில், தமிழ்மணத்தின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொண்டு அங்கீகரிக்கவேண்டும்.

பொதுவில் தமிழ்மணத்தின் நிர்வாகக் குழு முற்போக்கு கருத்துக்களுக்கு (அவர்களது பின்னூட்டங்கள், மற்றும் பதிவுகளை வைத்து) ஆதரவாக இருப்பது தமிழ்பதிவுலகிற்கு மிகப்பெரும் வலிமை. பதிவுலகில் கணிசமான அளவில் இருக்கும் பிற்போக்கு முகாமிற்கு இது உவப்பானதில்லை.  இப்படி ஒரு பின்னணியும் அனுபவமும் கொண்ட தமிழ்மணம், பதிவுலகு எனும் புதிய ஊடகத்தை வளர்த்தெடுக்கும் கடமையினை தொடர்ந்து செய்யும் என நம்புகிறோம், வாழ்த்துகிறோம்.

நாங்கள் ‘வினவு’ துவங்கிய  காலத்தில் இருந்த பதிவர்களின் எண்ணிக்கை இப்போது ஏறக்கூறய இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது. தினமும் இருநூறுக்கும் மேற்பட்ட பதிவுகள், இரண்டாயிரத்து சொச்சம் பின்னூட்டங்களை திரட்டும் அளவிற்கு தமிழ்மணம் ஒரு ஆலமரமாய் வளர்ந்து நிற்கிறது. மேலும் தமிழறிந்த எல்லா நாடுகளையும் சேர்ந்த தமிழ்மக்களை இணைக்கும் பாலமாகவும் தமிழ்மணம் விரிந்து செயல்படுகிறது. புலம் பெயர்ந்து வாழும் வாசகர்கள் தமது சொந்த மண்ணை  தமிழ்மணம் வாயிலாகவே நுகர்கிறார்கள். அச்சு ஊடகங்களும் காட்சி ஊடகங்களும் எட்ட முடியாத புலன் இது.

விரைந்து வளரும் பதிவுலகை மேலாண்மை செய்யும் பணி மிகவும் கடினமானது என்பதை நாம் அங்கீகரிக்கவேண்டும். நிர்வாகப் பணியைச் சுமக்கிற தமிழ்மணம் குழுவினர், பதிவுலகிற்கு விதிக்கும் கட்டுப்பாடுகள ஏற்றுக்கொண்டுதான் நாம் செயல்படமுடியும். சிலபதிவர்கள் தனிப்பட்ட சில பிரச்சினைகளை மட்டும் வைத்து, ” இந்த கட்டுப்பாடுகள் சுதந்திரத்திற்கு எதிரானவை” என தவறாக புரிந்து கொண்டிருக்கின்றனர். நோக்கமென்று ஒன்று இருப்பவர்கள் கட்டுப்பாடு என்பதையும் ஏற்றுத்தான் ஆகவேண்டும். அதுவும் மாற்றத்துக்கு உட்பட்டது என்பதைப் புரிந்து கொள்ளவும் வேண்டும்.  அன்றாட வாழ்க்கையில் கூட அப்படிப்பட்ட விதிமுறைகளை நாம் பற்றியொழுகியே வாழ்ந்துவருகிறோம். பதிவுலகிலும் அதை ஏற்கத்தான் வேண்டும்.

” குமதம்: பத்து ரூபாயில் ஒரு பலான அனுபவம்” என்ற கட்டுரையை தமிழ்மணத்தில் நாங்கள் இணைத்தபோது ‘பலான’ என்ற வார்த்தை வரவில்லை. மின்னஞ்சல் அனுப்பி கேட்டபோது இத்தகைய தலைப்புகள் தமிழ்மணத்தில் வராதபடி ஏற்பாடு செய்திருப்பதாக தமிழ்மணம் தெரிவித்தது. நாங்கள் வெளியிட்ட கட்டுரை  பலான வியாபாரத்தை எதிர்த்து எழுதப்பட்டதுதான் என்ற போதிலும் இந்தக் கட்டுப்பாடை ஏற்றுக்கொண்டோம். இனி தலைப்பு வைக்கும் போது இதைக் கணக்கில் கொள்வோம் என பதிலளித்தோம். இதனைக் கருத்து சுதந்திரத்திற்கு கிடைத்த அடி என தவறாக புரிந்து கொள்ளவில்லை.

பதிவர்களே படைப்பாளிகளாவும், வாசகர்களாவும் செயல்பட வாய்ப்பளிக்கும் இந்த ஊடகம் உரிய முறையில் பதிவர்களால் பயன்படுத்தப்படுகிறாதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். விசயமே இல்லாத அக்கப்போர்களே பல பதிவுகளாக வெளியிடப்படுகின்றன.அதிலும் சினிமாவைக் கலந்து எழுதும் பதிவுகளே அதிகம் படிக்கப்படுகின்றன. இணையத்தை அரட்டை அரங்கமாக மாற்றும் போக்கிற்கு எதிராகத்தான் வினவை நிறுத்துவதற்கே நாங்கள் போராடி வருகிறோம். அதில் குறிப்பிடத்தக்க அளவு வெற்றியும் பெற்றிருக்கிறோம்.  சமூக அக்கறைக்குரிய விசயங்கள் வெல்லும் என்ற நம்பிக்கையை இந்த வெற்றி எங்களுக்குள் விதைத்திருக்கிறது. இந்த வெற்றிக்கு வழியமைத்து கொடுத்து புதிய வாசகர்கள், பதிவர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தியது தமிழ்மணம்தான்.

தமிழ்மணத்தோடு எமது பதிவை இணைப்பதைத் தவிர வேறு எந்தவகை நேரடியான தொடர்போ, அறிமுகமோ இல்லாத போதிலும், வினவு ஆரம்பித்த சில மாதங்களிலேயே நட்சத்திரப் பதிவராகும் வாய்ப்பினைப் பெற்றோம். அதன் மூலம் தமிழ்ப் பதிவுலகில் ஒரு இடத்தை எங்களுக்கு தமிழ்மணம் வழங்கியது. இத்தனைக்கும் எல்லோரையும் விமரிசனக் கண்ணோட்டத்தோடு அணுகும் எமது பார்வை, எம்மீது குத்தப்பட்ட’கம்யூனிச தீவிரவாதிகள்’ என்ற முத்திரை போன்றவற்றையெல்லாம் தள்ளிவைத்துவிட்டு, சமூக அக்கறைக்குரிய கட்டுரைகளை வெளியிடும் பதிவர் என்ற முறையில் தமிழ்மணம் எங்களை தெரிவு செய்திருக்க கூடும். நட்சத்திரப் பதிவர்களில் பல வகையினரும் இருந்தாலும் எங்களைப் போன்றவர்களை நட்சத்திரமாக்குவதற்கு ஒரு நேர்மையும் தைரியமும் வேண்டும். அது தமிழ்மணத்திடம் நிறையவே இருக்கிறது. அந்த அஞ்சாமைக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும். எங்களுக்கு முன்னால் எங்களது தோழர் அசுரனும் இப்படித்தான் நட்சத்திரமானார். அப்போது நாங்கள் பதிவுலகில் இல்லை.

சென்ற ஆண்டு  அறிவிக்கப்பட்ட தமிழ்மணம் விருது போட்டிகளிலும், சமூக அக்கறைக்குரிய அங்கீகாரம் எப்படி இருக்கும் என்பதை அறிவதற்காகவே கலந்து கொண்டு இரண்டு தலைப்புக்களில் முதலிடத்தை வென்றோம். பதிவுலகம் முற்போக்கு கருத்துக்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்பது உண்மையில் மகிழ்ச்சியைத் தந்தது. அதற்காக பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றிகள்.

சென்ற ஆண்டு தமிழ்மணம் 12 தலைப்புகளில் சிறந்த முதலிரண்டு இடுகைகளை பதிவர்களின் வாக்குகளை வைத்து தெரிவு செய்தது. இந்த ஆண்டு பதிவர்கள் அல்லாத வாசகர்களும் வாக்களிக்கும் இரண்டாவது சுற்று இருக்கும் என நம்புகிறோம். இந்த முறை சிறப்பாகத்தான் உள்ளது.

விருது தொடர்பாக வினவின் ஆலோசனைகள்!

1, பன்னிரண்டு பிரிவுகளின் அதிக பட்சம் மூன்று தலைப்புகளுக்கு மட்டும் ஒரு பதிவர் போட்டியிடலாம் என்பதை ஒன்றாக குறைக்கலாம். இதன் மூலம் மொத்தம் 24 பதிவர்கள் விருதினைப் பெறுவார்கள். ஒரு பதிவரே மூன்று விருதுகளையும் பெற்றால் மற்றவர்கள் வாய்ப்புகளை இழப்பார்கள். மேலும் ஒரு பதிவர் போட்டிக்கான தனது தலைப்பை விட்டுவிட்டு பதினொரு தலைப்புகளுக்கும் வாக்களிக்கும் வாய்ப்பு இருப்பதால் பல குழுக்களாக பிரிந்திருக்கும் பதிவுலகம் தெரிவு எனும் ஜனநாயகத்தின் அடிப்படையில் ஒன்று சேரலாம்.

2. போட்டிக்கான தலைப்புக்களை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தலாம். கதை, கவிதை, குறும்படம், ஆவணப்படம், கேலிச்சித்திரம், தலித் பிரச்சினைகள், பெண்கள் பிரச்சினைகள், சினிமா விமரிசனம், தமிழ் கணினி தொழில்நுட்பம், மதவெறி,  முதலியவற்றை தனித்தனி தலைப்புக்களில் வைக்கலாம். மொத்தத்தில் இருபது தலைப்புக்கள் வைத்தால் நாற்பது பதிவர்கள் விருதுகள் பெறுவார்கள். இது உற்சாகத்தின் அளவை விரிந்த அளவில் கொண்டு செல்லும். எல்லா முக்கியமான தலைப்புக்களையும் போட்டிக்கு கொண்டு வரமுடியும்.

3. ஒவ்வொரு ஆண்டும் சேரும் புதிய பதிவர்களை உற்சாகப்படுத்தும் முகமாக இந்த ஆண்டின் சிறந்த புதிய பதிவர் எனும் விருதினை புதிதாக ஏற்படுத்தலாம். அதற்கு அவர் எழுதிய இடுகைகளில் ஐந்து சிறந்த இடுகைகளை சமர்ப்பிக்க வேண்டும் என வைக்கலாம். இதனால் பதிவுலகின் மத்தியில் புதிய பதிவர்கள் பரவலான கவனத்தை பெறுவார்கள்.

4. அதே போல சிறந்த பெண் பதிவர் எனும் விருதினை ஏற்படுத்தி முன்னர் கூறியது போல ஐந்து இடுகைகளை சமர்ப்பிக்குமாறு வைக்கலாம். பொதுவில் பதிவுலகில் சிறுபான்மையினராகவும், தனி அணியாகவும் இருக்கும் பெண்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும், பொது அரங்கில் அவர்களுக்கென்று தனி விருதை தருவது ஆரோக்கியமாகவும் இருக்கும். புதிதாக பெண்பதிவர்கள் வருவதையும் இது ஊக்குவிக்கும். மற்றபடி மற்ற தலைப்புக்களிலும் பெண்கள் போட்டியிடலாம். அதாவது ஒரு தலைப்பு, பெண்பதிவருக்கான போட்டி என்று இரண்டு தலைப்புகளில் அவர்கள் போட்டியட வைக்கலாம். புதிய பதிவர்களுக்கும் இதே சலுகையை அளிக்கலாம்.

5. இதே போல இந்த ஆண்டின் சிறந்த பதிவர் என்ற விருதினையும் வைக்கலாம் என்றாலும் இதில் நிறைய அரசியல் தொழில்நுட்ப பிரச்சினைகள் இருக்கிறது. எந்த அளவுகோலின்படி ஒருவரை சிறந்த பதிவர் என்று தெரிவு செய்வது கடினம். அந்த ஆண்டின் சிறந்த பத்து இடுகைகளை அவர் அளிக்கவேண்டுமென்று வைத்தாலும் தொழில்நுட்ப ரீதியாகவும், போட்டியை நடத்துவதற்கும் இதை பெரும் சுமையாகவும் இருக்கும் என்பதால் இதை மிகுந்த தயக்கத்தோடு சொல்கிறோம். ஏனெனில் இந்தப்பிரிவில் எல்லோரும் போட்டியிடுவார்கள் என்பதால் நிர்வகிப்பது மிகவும் சிரமம்.

6. போட்டிக்கென்று தமிழ்மணம் சென்ற ஆண்டு அறிவித்திருந்த முதல்பரிசு ரூ.500, இரண்டாம் பரிசு ரூ.250 என்பது மிகவும் குறைவு என்று பலர் கருதுகிறார்கள். வினவு அப்படி கருதவில்லை. விருதின் மதிப்பு பணத்தை வைத்து மதிப்படிக்கூடாது என்பதால் இந்த தொகைகளே தொடரலாம் என்பது எங்கள் கோரிக்கை. அதுவும் புத்தகங்களாக அளிப்பது என்பதும் பாராட்டத்தக்க ஒன்று. இதனால் விருது என்பது அறிவை விசாலமாக்கும் நடவடிக்கைக்கு இட்டுச் செல்கிறது. பொதுவில் போட்டிகள் என்றால் அவைகளின் பணமதிப்பை வைத்து அளவிடும் யதார்த்தத்தை நாம் இப்படித்தான் மாற்ற முடியும் என்று வினவு கருதுகிறது.

7. வாய்ப்பு, வசதி, நேரம் இருக்கும் பட்சத்தில் வெற்றிபெறும் பதிவர்களின் கட்டுரைகளை தமிழ்மணத்தின் தொகுப்பில் தனிநூலாக வெளியிடலாம். இதன்மூலம் இணையமில்லாத வாசகர்களின் மத்தியில் பதிவுலகை அறிமுகம் செய்யலாம்.

8. இப்போது உடனடியாக சாத்தியமில்லை என்றாலும் எதிர்காலத்தில் பதிவர்கள் அதிகமிருக்கும் (என்று நினைக்கிறோம்) சென்னை மாநகரத்தில் விருது வழங்கும் விழாவினை நடத்தலாம். இதன் மூலம் ஆண்டுக்கொரு முறை பதிவர்கள், பதிவுலகின் வாசகர்கள் சந்திப்பை சாத்தியப்படுத்தலாம்.

9. சென்றமுறை அறிவித்திருந்தது போல முதல் சுற்றில் பதிவர்களும், இரண்டாவது சுற்றில் வாசகர்களும் வாக்களிப்பதை இம்முறையும் தொடரலாம். வாக்களிப்பதில் கள்ள ஓட்டு பிரச்சினையும் இருக்கிறது. இதை தமிழ்மணம் எப்படி தொழில்நுட்பரீதியாக சமாளிக்கும் என்பது சவாலான ஒன்று. இரகசிய வாக்களிப்பை பகிரங்கமான வாக்களிப்பு என்று மாற்றினால் இதை தவிர்க்கலாமோ என்று தெரியவில்லை. ஆனால் ஜனநாயகத்தில் இரகசிய வாக்கெடுப்புதான் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஆகவே பதிவர்கள், வாசகர்களே உறுதி எடுத்துக்கொண்டால் இந்தப்பிரச்சினையை அதாவது கள்ளவோட்டுக்களை தவிர்க்கலாம்.

10.பதிவுலகத்தை மட்டும் வேலையாக வைத்திருக்கும், விசயத்தோடு எழுதும் பதிவர்களை தன்னார்வத்தொண்டர்களாக கோரிப்பெற்று நின்றுபோன பூங்கா வார இதழை மீண்டும் நடத்தலாம். இதன் மூலம் காத்திரமான கருத்துக்களை எழுதும் பதிவர்களை அறியாதவர்களுக்கு அறிமுகம் செய்யலாம். இதன் மூலமே தமிழ்மணம் தனது அடுத்த கட்ட வளர்ச்சியை சாத்தியப்படுத்த இயலும் என நினைக்கிறோம்.

11. பதிவர்களை இப்படி நேரம், பணம் ஒதுக்கி ஒரு குழுவாக உற்சாகப்படுத்தும் தமிழ்மணத்திற்கு பதிவர்கள் பதிலுக்கு என்ன விருது கொடுக்க முடியும்?

தமிழ்மணம் அறிவித்திருக்கும் விருது போட்டிகளை புதியவர்களுக்கு அறிமுகம் செய்வதற்காகவே இந்த இடுகை எழுதப்படுகிறது. போட்டி குறித்த தங்களது ஆலோசனைகளை பதிவர்கள், வாசகர்கள், தோழர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிட்டால் தமிழ்மணம் குழுவினருக்கு உதவியாய் இருக்கும். இந்த போட்டியை சிறப்பாக நடத்துவதற்கு நாமும் இத்தகைய பங்களிப்பை அளிக்க வேண்டியிருக்கிறது. அளியுங்கள்.

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

……………………………..

தொடர்புடைய பதிவு

குடிக்க தண்ணியில்ல, கொப்பளிக்க பன்னீரு – பாடல்

vote-012இந்திய தரகு முதலாளிகளில் சிலர் உலக பணக்காரர்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கிற அதே நேரத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்பவர்கள் அதிகமுள்ள நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா இருக்கிறது. இப்படி இந்தியா முதலாளிகளின் இந்தியாவாகவும், ஏழைகளின் இந்தியாவாகவும் பிரிந்திருப்பதை எள்ளலுடன் உணர்த்துகிறது இந்தப்பாடல். முன்னுரையுடன் இந்தப் பாடலை கேட்டுப் பாருங்கள்.

Adimai_Sasanam_03_Naadu

நாடு முன்னேறுதுங்குறான் – அட
மினு மினு மினுக்கா, ஜிலு ஜிலு ஜிலுக்கா
ஜெர்மன், அமெரிக்கா, ஜப்பானு கணக்கா
நாடு நம்ம நாடு முன்னேறுதுங்குறான்

தாகம்தீர கொக்கோ கோலா
போதை ஏற ஃபாரின் சீசா
மிக்சு பண்ணிக்கோ பெப்சி லெகரு
மிச்ச வேளைக்கெல்லாம் மினரல் வாட்டரு
குடிக்க தண்ணியில்ல, கொப்பளிக்க பன்னீரு
அட்றா செருப்பால வீங்கிப்புடும் செவுளு
( நாடு….)

டீ.வியில் சிரிக்குது காம்ப்ளான் கேர்ளு – டாக்டர்
தினம் தரச்சொல்லுறான் பழம் முட்டைப் பாலு
வகை தெரியாமத் தின்னு அவன் புள்ள வீங்குது – வெறும்
விளம்பரத்தைப் பாத்தே நம்ம புள்ள ஏங்குது
சத்துணவு தீந்துடுன்னு தட்டோட ஓடுது – இவன்
தட்டுகெட்ட திட்டமெல்லாம் என்ன புடுங்குது
( நாடு…)

காலக் காப்பிக்கு மீனம்பாக்கம்
கக்கூசுக்குப் போறான் லண்டன் மாநகரம்
ஈசலாட்டம் தனியார் விமானம் – இதுக்கு
போலீசு கொடை ஒன்னு வேணும்
பேஞ்ச மழையில் எங்க ரோட்டையே காணோம் – பெருசா
பேச வந்துபுட்டான் தேச முன்னேற்றம்
( நாடு…)

பள்ளிக்கூடம்னு போர்டு தொங்குது
பாத்தா மூணு சுவருதான் நிக்குது
பசங்களெல்லாம் மரத்துல தொங்குது
பாடம் நடத்துற டீச்சரு தூங்குது
காசுக்காரன் புள்ள கான்வென்டு போகுது – நம்ம
கார்ப்பரேசன் பள்ளியில சரக்குத்தான் ஓடுது
( நாடு…)

அரசு மருத்துவமனைங்க இருக்குது
ஆரம்ப வியாதியே அங்கதான் தொத்துது
ஆப்பரேஷனுன்னு வச்சுருக்கான் பேரு
அறுத்துப் போட்டுபுட்டு இல்லேங்குறான் நூலு
காசுக்காரன் கூட்டம் அப்பல்லோ போகுது – நமக்கு
கவர்மண்டு இரக்கப்பட்டு போஸ்ட்மார்ட்டம் பண்ணுது
( நாடு…)

ஏசி கூண்டுக்குள்ள பொம்மை விரைக்குது
தங்க ஊசி சேலை அதன் உடம்பில் மினுக்குது
நல்லி, சாரதாஸ் கல்லா பிதுங்குது
வெள்ள எருமைங்கதான் உள்ளே உலாத்துது
பருத்தி நூலுக்கு கைத்தறி ஏங்குது – எங்க
பட்டினி சாவில் உன் பட்டு மினுக்குது
( நாடு…)

காடு, மரம், கடல், மீனும் தனியாரு
போடு கரண்டு, டெலிபோனும் தனியாரு – அரசு
ஆலைகள் அம்புட்டையும் கட்டிபுட்டான் கூறு – அதை
ஏலம் மூணுதரமுன்னு கூவுறான் சர்க்காரு
நம்ம நாடுன்னு சொல்லிக்கிற மிச்சமென்ன கூறு
இவன் ஆடுகிற ஆட்டுறவன் காட்டு தர்பாரு
( நாடு…)

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

……………………………..

தொடர்புடைய பதிவு

அடிமைச் சாசனம்அடிமைச் சாசனம்
விலை ரூ. 30

இந்த ஒலிக்குறுந்தகடு தேவைப்படுவோர், இங்கே அழுத்தவும்


மருதிருவர் குருபூசை: அல்லக்கை சாதிச்சங்கங்கள்! ஒத்தூதும் அரசு!!

மருதிருவர் குருபூசை: அல்லக்கை சாதிச்சங்கங்கள்! ஒத்தூதும் அரசு!!

vote-012கி.பி 1801- அக்டோபர் மாதம் 24ஆம்தேதி  பகல்பொழுது – இன்றைய சிவகங்கை மாவட்டம், திருப்பத்துர் நகரின் பேருந்து நிலையம், எதிர்புறம் நினைவுச்சின்னம் அமைந்துள்ள முச்சந்தியில் பெரியமருதுவும், அவரது தம்பி சின்னமருது என்று அழைக்கப்படுகிற சின்னப்பாண்டியனும் துக்கிலிடப்பட்டார்கள்.

அவர்களோடு சிறைப்பிடிக்கப்பட்டுக் கொண்டுவரப்பட்ட அவரது உறவினர்களான நுற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் மிகக் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர். அன்றும் அதன் பின்னரும் பிரிட்டிஷாரால் கொலை செய்யப்பட்டவர்கள் மட்டும் சுமார் ஐநுறுபேர்களுக்கும் மேல் இருக்கும். தமிழக வரலாற்றில் அதற்கு முன்னரும், பின்னரும் நடந்திராத ஒரு கொடூர நிகழ்ச்சி அது.

24ஆம் தேதி துக்கிலிடப்பட்டு இரண்டு நாட்களாகத் தொங்கவிடப்பட்டிருந்த மருதிருவர்களின் உடல்கள் 27ஆம் தேதி கீழிறக்கப்பட்டது. அவர்களது தலைகள் துண்டிக்கப்பட்டு இன்று குருபூசை நடக்கிற காளையார்கோவில் கோவிலின் முன்பாக உள்ள சிறிய அறைக்குள் அடக்கம் செய்யப்பட்டது.

சற்று நேரம் நினைத்தாலுமே நெஞ்சைக் கீறிவிடுகிற இந்தத் துயரத்திற்கு அந்த மாவீரர்களை தள்ளிவிடக் காரணமாக இருந்தது இரண்டு விசயங்கள்.

  1. மருதிருவர்களின் விடுதலைப் போராட்டத் தன்மான உணர்வு.
  2. ஆங்கிலேய அடிவருடி புதுக்கோட்டைத் தொண்டைமான் கும்பலின் துரோகம். (ஆங்கிலேயருக்கு எழுதிய கடிதத்தில் சின்னமருதுவை நாய் எனத் திட்டுகிறான் துரோகி தொண்டைமான்.)

இந்தியத் துணைக்கண்ட அரசியல் வரலாற்றில் அன்னியருக்கு எதிராக முதன்முதலாக ஒரு அறிக்கை எழுதி வெளியிட்டது சின்னமருதுதான். நான்கு மொழிகள் தெரியும் அவனுக்கு. ஏழைமக்கள் கண்ணீரில்லாத வாழ்க்கை வாழ வேண்டுமென்றால் கும்பினியாரை எதிர்த்துப் போராடவேண்டும் என முழங்கியவன் அவன்.  உடம்பில் ஐரோப்பியரத்தம் ஓடாதவர்கள் எனது பேச்சைக் கேட்பார்களாக என்று அழைத்தான். ஆங்கிலேயருக்கு சேவகம் செய்பவர்கள் ஈனப்பிறவிகள் என்றான். கும்பினி ஆட்சி நமது நாட்டைப் பஞ்சத்திலும், பசியிலும் தள்ளிவிடும் என எச்சரித்தான். கும்பினியை இந்தியத் துணைக்கண்டத்திலிருந்தே விரட்டியடிக்க சாதி மத பேதமின்றி ஒன்றுதிரள வேண்டும் என அறைகூவினான்.

தமிழகத்தின் விடுதலைப் போராட்ட வரலாற்றைப் படிக்க நினைப்பவர்கள் முதலில் சின்னமருதுவின் ஜம்புத்தீவுப் பிரகடனம் 1801-லிருந்து துவங்குகள். நீங்கள் அதை அவசியம் படிக்க வேண்டும். காரணம், வரலாறு மீண்டும் திரும்புகிறது. 1990ல் இந்தியா கையெழுத்திட்ட காட்-டங்கல் ஒப்பந்தம் தன்னைப் பன்னாட்டு நிறுவனங்களின் அடிமையாக ஒப்புக் கொடுத்துவிட்டது. பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகள் நலன்களுக்காக தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்கிற திட்டத்தை ஏற்றுக் கொண்டு இந்தியாவின் கதவுகளை அகலத் திறந்து வைத்து அள்ளிச் செல்லுங்கள் எனச் சொல்லி வீசும் எலும்பைக் கவ்வக் காத்திருக்கும் நாய்களைப் போல மண்டியிட்டுக் கிடக்கிறார்கள் இந்திய ஆட்சியாளர்கள்.

அன்றைய காலனியாதிக்கத்திற்கு எதிராகப் போராடிய மருதிருவர்களின் தன்மானமும், வீரமும், நாட்டுப்பற்றும் இன்றும் நமக்குத் தேவைப்படுகிறது. அடிமைத்தனத்தை மாற்றம் (Change) வளர்ச்சி (Development) என்று சொல்லி, மறைத்துப் பேசும் கோழைத்தனம் கொண்டவர்களாக இந்திய இளைஞர்கள் வடிவமைக்கப்படும் இந்நேரத்தில் மருதிருவர்களின் வீரம் நமக்கு ஒரு வழிகாட்டியாகும் தகுதியுள்ளதாக இருக்கிறது. நம்மை தன்மானம் உள்ளவர்களாக மாற்றக் கூடிய சக்தியுள்ளதாகவும் இருக்கிறது.

ஆனால் இதற்கும் மருதுபாண்டியர் குருபூசைக்கும் மயிரளவும் தொடர்பில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்துதான் இந்த குருபூசைக் கலாச்சாரம் சிவகங்கையில் தொடங்கப்பட்டது. சாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும், சாதி உணர்வை, சாதிவெறியாக மாற்றவும் பசும்பொன்னில் குருபூசை நடைபெறுகிறது. ஒடுக்கப்பட்ட சாதிகளின் உரிமைக்கான குரல் எழுப்புதலில் படுகொலை செய்யப்பட்ட இமானுவேல் சேகரனாரின் நினைவை ஏந்தி ஒடுக்கப்பட்ட சாதிகளின் விடுதலை உணர்வைப் பிரதிபலித்து பரமக்குடியில் குருபூசை நடைபெறுகிறது. இவ்விரண்டும் சமப்படுத்த முடியாத குருபூஜைகள்தான்.

என்றாலும் மருதிருவர்களின் குருபூசை என்பது முழுக்க, ஓட்டுக்கட்சி அரசியலில் நுழைந்து பதவி சுகத்தை அனுபவிக்கவும் மக்கள் பணத்தைச் சுருட்டவும் முடியாமல் ஏங்கித்திரியும் சாதிய அமைப்புகளால் பரபரப்பாக நடத்தப்படுகிற குருபூசையாகும். தேர்தல் காலம் அல்லாததால் இம்முறை நடந்த விதம் இதை விளக்கமாக வெளிப்படுத்துகிறது.

துயரமான முடிவிற்கு மருதிருவர்களை வெகுவிரைவாக அழைத்துச்சென்ற புதுக்கோட்டை துரோகி தொண்டைமானின் துரோகத்தின் பங்காளிக்கூட்டத்தினர்தான் இன்று மருதிருவர்களின் குருபூசைக்கு அணிதிரளுகிறார்கள். பசும்பொன் முத்துராமலிங்கம் படம் பொறித்த மஞ்சள் கொடிகளும், தேவர் வாழ்க! தேவர் படை போதுமா! இன்னும் கொஞ்சம் வேணுமா! பனமரத்துக்கே வவ்வாலா! தேவருக்கே சவாலா! என்கிற முழக்கங்களும் இம்முறை அகமுடையார் சாதியினரை விடவும் வெகு அதிகமாகவே வெளித்தெரிந்தன.

மருதிருவர்களின், தன்மானத்தையும், வீரத்தையும், நாட்டுப்பற்றையும் தூசி அளவுகூட சிந்தனையில் கொள்ளாத இந்த வெற்றுச் சாதி வெறி ஆரவாரகும்பல்தான் போதையிலே கூச்சலிடுகிறது, கும்மாளமிடுகிறது. ஆதிக்கச்சாதியைச் சேர்ந்த போலீசோ, கத்தி ஓய்ந்துபோன கும்பலை அடித்துவிரட்டுவதைப் போல பாவனை செய்து முறுக்கேற்றிவிடுகிறது. வழியில் தாழ்த்தப்பட்ட மக்களின் வசிப்பிடங்கள் இல்லதாதால் ஒரு தனியார் பேருந்து மற்றும் அரசு பேருந்தின் கண்ணாடிகள் மட்டும் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன.

தனியார் பேருந்துகள் தங்களது போக்குவரத்தை நிறுத்திக் கொண்டாலும், அரசு பேருந்தின் ஓட்டுநர்களும், நடத்துனர்களும் பேருந்துகளை துணிச்சலாக எடுத்துச் சென்றனர். இருப்பினும் உடைக்கப்பட்ட பேருந்துகளைக் கொஞ்சமும் கவனியாமல் திரிந்தது போலீசு. இதனால் அதிருப்தி அடைந்த அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் இரவு 7மணிக்கு மேல் பேருந்துகளை எடுக்க மறுத்து முறையிட்டனர். கிராமங்களுக்குச் செல்லும் பலபேருந்துகள் நிறுத்தப்பட்டுவிட்டன. மதுரை போகும் தனியார் பேருந்துகள் மேலூர் வழியாகச் சென்றன. ஊர் திரும்ப முடியாமல் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் பொதுமக்கள் பலரும் பெரிதும் அவதிக்குள்ளாகினர். இருப்பினும் போலீசும், அரசும் இது குறித்து கொஞ்சமும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

மேற்கே உசிலம்பட்டியைத் தாண்டியும், தெற்கே முதுகுளத்துரைத் தாண்டியும், கிழக்கே திருவாடனையைத் தாண்டியும், உள்ள கிராமங்களிலிருந்து நுற்றுக்கணக்கான இளைஞர்கள் வாகனங்களிலேயே வரவழைக்கப்பட்டிருந்தனர். தொடர் ஜோதி ஓட்டம் பலபகுதிகளிலிருந்தும் வந்தன. மஞ்சளும், பச்சையும், இணைந்த வண்ணங்களில் அவர்களின் சீருடைகள் இருந்தன. மூவேந்தர் முன்னேற்றக் கழக டாக்டர். சேதுராமனின் சங்கக் கொடியும், ஸ்ரீதர் வாண்டையாரின் சங்கக் கொடியும் கட்டிய வாகனங்கள் தான் அதிகமாகச் சென்றன. அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரசு கொடிகள் கட்டிய கார்கள் ஒன்றிரண்டே சென்றன. சென்ற வருடம் தேர்தல் காலம் ஆகையால் ஓட்டுக் கட்சிகளின் கொடிகள் கட்டிய கார்களும், ஒட்டுக்கட்சிகளின் தலைவர்களின் வருகையுமே மிக அதிகமாக இருந்தது.

நகரங்களில் நுழைந்தவுடன் சமீபத்தியச் சினிமா பாணியிலான ஆபாசக்  குத்தாட்டம் போட்டுக்கொண்டே இளைஞர்கள் ஊர்வலமாய் வந்தனர். அவர்களின் ஆட்டத்திற்கு தங்களது பறை மற்றும் டிரம் செட் மூலம் தாளம் இசைத்து வந்தனர் தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்கள்.கொள்வினை கொடுப்பினை உட்பட பல்வேறு பிரச்சனைகளில் இரண்டு சாதியினரும் குத்து வெட்டுப் பலிகொடுத்தும் பலிகொடுக்கவும் காத்துக் கொண்டிருக்கிருக்கின்றனர். ஆனால் ஊர்வலத்தில் மூ.மு.கவினரோ, முக்குலத்தோர் வாழ்க என கோசம் போட்டுக் கொண்டு ஆடினர்.

இந்தக் குருபூசையின் பேரைச் சொல்லி கோடிக்கணக்கான ரூபாய்கள் நன்கொடையாகத் திரட்டப்பட்டுள்ளது. அவற்றில் சிறிதளவு மட்டும் செலவு செய்யப்பட்டு (டீசல், உணவு, வாடகை, சாராயம்) மீதம் அப்படியே சுருட்டப்படுகிறது. பெரிய சங்கங்கள் முதல் கல்லுரி மாணவர்கள் வரை இதுதான் நிலை. சாதி, பிழைப்புவாதிகளுக்கான தொழிலாகப் பயன்படுவதை இதிலிருந்தும நாம் அறியலாம். சாதியின் பெயரால் பிழைப்பு நடத்தும் பேர்வழிகளுக்கான திருவிழாவாக மருதிருவர்கள் குருபூசை நடக்கிறது. அந்த வீரமிக்க   மருதுபாண்டியர்களை இதைவிடக் கேவலப் படுத்தக் கூடியது வேறு எதுவும் இல்லை

வரும் ஆண்டுகளில் முறுகல், மோதல் எனத் துவங்கி பின்னர் பெரிய கலவரங்களும் நடைபெறலாம். எதிர்காலத்தில் அப்படியொரு நிலையை உருவாக்க சாதிய அமைப்புகள் துடித்துக் கொண்டிருக்கின்றன. இப்படியொரு பகைச் சூழ்நிலையும், பீதியும் மக்களிடையே நிலவவேண்டுமென்று ஆடு நனைவதைப் பார்த்து அழும் ஓநாய் போல அரசாங்கமும் ஆர்வத்தோடு வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வருகிறது.

இதைத்தடுக்க மருதிருவர்களின் வரலாற்றை அறிந்து, அன்னியமோகம் எனும் அடிமைப்புத்தியைச் சுட்டெரித்து, மறுகாலனி ஆதிக்கத்திற்கு எதிராய் போராட, மருதிருவர்களின் பெயரால் மக்களை அழைக்க வேண்டிய கடமை நம்முன் உள்ளது.

குருசாமி மயில்வாகனன்

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள்

தியாகி இம்மானுவேல்சேகரன் நினைவுதினம்: தேவர்சாதி வெறிக்கெதிராய் போராடும் தலித் மக்கள்! தீப்பிடிக்க காத்திருக்கும் தென்மாவட்டங்கள்!

பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி! பந்தப்புளியில் தீண்டாமை !!

சட்டக் கல்லூரி கலவரம் : சாதியை ஒழிப்போம் ! தமிழகம் காப்போம் !!

சட்டக் கல்லூரி : பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை…அடேயப்பா, என்ன காட்டுமிராண்டித்தனம் !

இந்து மதம் கேட்ட நரபலி !

ஆலயத்திற்குள் மட்டுமா, கருவறைக்குள்ளும் நுழைவோம்!

முத்துராமலிங்கன் என்கிற தேவர் சாதிவெறியனுக்கு கீற்று தளம் வக்காலத்து !

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன்

கான்கிரீட் காடுகளிலிருந்து ஒலிக்கும் போர்க்குரல் !!

38

சிவந்த கண்கள் கவனிக்கட்டும்

vote-012சமீப ஆண்டுகளாக சென்னை மாநகரத்தில் வானுயர்ந்த கட்டிடங்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. காங்கிரீட் காடுகளின் கட்டிடங்களுக்கு ரெடிமேடான காங்கிரீட் கலவையை சுமந்தவாறு செல்லும் லாரிகளை பலரும் பார்த்திருக்கலாம். எழிலான கட்டிடங்களை ரசிக்கும் நம் கண்களுக்கு இந்த லாரிகளின் ஓட்டுநர்கள் படும் இன்னல்கள் தெரியாது. உழைத்து தேய்ந்து வதங்கும் இந்த தொழிலாளர்களின் உழைப்பில்தான் பளபளக்கும் கட்டிடங்கள் வளருகின்றன.

சென்னை, கேளம்பாக்கத்தின் அருகில் இருக்கும் கிராமம் தையூர். இங்கு ரே மிக்ஸ் (Ray mix) எனும் காங்கிரீட் கலவை நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் முதலாளி நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பிரான்சிஸ். இவரும், இவரது இரண்டு சகோதரர்களும் பூந்தமல்லி, வல்லக்கோட்டை என மூன்று இடங்களில் காங்கிரீட் கலவை நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.

தையூரில் இருக்கும் காங்கிரீட் கலவை நிறுவனத்தில் கலவையை தயார் செய்வதற்கு 80 தொழிலாளிகள் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினர் ஒரிசா, பீகாரைச் சேர்ந்தவர்கள். அங்கேயே தங்கி, உண்டு இரவு பகல் என  24 மணிநேர ஷிப்டை முடித்தால் அவர்களுக்கு கிடைக்கும் கூலி 250 ரூபாய். இப்படி குறைந்த கூலிக்கு கடுமுழைப்பு தேவைப்படும் வேலைகள் அனைத்திலும் இம்மாநில தொழிலாளர்களே வேலை செய்கின்றனர். இப்போது சென்னை முழுவதும் நிலைமை இதுதான்.

தயார் செய்யப்படும் காங்கீரிட் கலவையை லாரிகளில் கொண்டு செல்வதற்கு நாற்பது ஓட்டுநர்கள் உள்ளனர். இவர்களும் பகல், இரவு என 24 மணிநேர வேலை செய்யவேண்டும். ஊதியம் ரூ.550. இப்படி மாதத்தில் பதினைந்து நாட்கள் வேலைசெய்தால் சுமார் 7,500 ரூபாய் கிடைக்கும். இவர்களும் தினக்கூலி அடிப்படையில்தான் வேலை செய்கிறார்கள். மாதசம்பளம், பி.எஃப், காப்பீடு, மருத்துவம், இ.எஸ்.ஐ என எந்த உரிமைகளும் இவர்களுக்கில்லை. 24மணிநேர ஷிப்டில் இவர்கள் குறைந்தது பத்து லோடுகள் அடிக்கவேண்டும். ஒரு லோடின் விலை 20.000 ரூபாய். இதில் இலாபம் பாதிக்கு மேல் இருக்கும்.

காங்கிரீட் கலவையை தயார் செய்து மூன்று மணிநேரத்திற்குள் அது பயன்படுத்தப்பட வேண்டும். அந்நேரத்தை தாண்டிவிட்டால் அது காலாவதியான கலவையாகிவிடும். இதனால் ஓட்டுநர்கள் எவ்வளவு நெருக்கடியிலும் பதட்டத்திலும் வண்டிகளை ஓட்டவேண்டியிருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். ஒருவேளை மூன்று மணிநேரத்தை தாண்டிவிட்டால் அந்தக்கலவையை பயன்படுத்தக் கூடாது. ஆனால் அதில் ஏதோ ஒரு திரவத்தை ஊற்றி அதை மீண்டும் தயார் செய்வது முதலாளியின் தந்திரம். இப்படி தயாரிக்கப் படும் கலவையில் உண்மையான உறுதி இருக்காது. மேலும் காங்கிரீட் கலவையில் கூட சிமெண்டோடு கருங்கல் தூசி கலவையை கலந்து போர்ஜரி செய்வதும் பிரான்சிஸின் வழக்கம். இப்படிப்பட்ட மோசடிக் கலவைதான் இந்தக் கம்பெனியிலிருந்து கல்பாக்கம் அணுமின்நிலைய வேலைகளுக்கும், பல மேம்பாலங்களுக்கும், அடுக்குமாடி கட்டிடங்களுக்கும் அனுப்பப்படுகிறது.

நாற்பது ஓட்டுநர்களில் பாதிப்பேர் பிரான்சிஸின் ஊர் மற்றும் அவரது சாதியை ( நாடார்)  சேர்ந்தவர்கள். சாதிக்காரன் என்ற பெயரில் ஆட்களை ஊரிலிருந்து கொண்டு வந்து இறக்கி, அவர்களை மாடு போல வேலைவாங்குவது பொதுவில் எல்லா தமிழ் முதலாளிகளுக்கும் வழக்கம்தான். இதற்கு நாடார் முதலாளிகளும் விதிவிலக்கல்ல. மேலும் இந்த முதலாளி எல்லா தொழிலாளிகளையும் அநாகரீக மொழியில்தான் அதட்டி வேலைவாங்குவான். யாராவது தெரியாமல் தவறிழைத்தால் கூட உடனே அண்ணாநகரில் இருக்கும் நிறுவன அலுவலகத்திற்கு வரச்சொல்வது வழக்கம். அங்கே அந்த தொழிலாளிக்கு பெல்ட்டால் அடிகிடைக்கும். ஒரு தொழிலாளி அண்ணாநகருக்கு அழைக்கப்பட்டிருக்கிறார் என்றாலே பெரும்பீதி கிளம்பும்.

இத்தகைய அடக்குமுறை சிறையில் ஓட்டுநராக இருக்கும் தோழர் வெங்கட்ராமன் ஜேப்பியார் கல்லூரி ஓட்டுநர் போராட்டத்தில் வேலையிழந்து வந்தவர். இவர் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஓட்டுநர் சங்க நிர்வாக குழுவில் இருப்பவர். பலநாட்கள் அந்த நாற்பது ஓட்டுநர்களிடமும் தொழிற்சங்கத்தின் அவசியத்தை புரியவைக்க போராடி வந்தார். ஆனால் பிரான்சிஸின் அடக்குமுறைக்கு அஞ்சிய தொழிலாளிகள் இந்த முயற்சிக்கு ஆதரவு தரவில்லை.

இறுதியில் முதலாளிக்கு தெரியாமல் இரகசியமாகவாவது தொழிற்சங்கத்தை கட்டலாம் என்றதும் பாதி ஓட்டுநர்கள் அரை மனதோடு முன்வந்தனர். இந்நிலையில் முதலாளியின் சுயசாதி, ஊரைச் சேர்ந்த ஒரு தொழிலாளியின் மூலமாக இந்த தொழிற்சங்க முயற்சி பிரான்சிஸ்ஸின் காதுகளுக்கு சென்றவுடனே, 24.10.09 அன்று நான்கு ஓட்டுநர்களை வேலைநீக்கம் செய்கிறான். அன்றுதான் சங்கம் ஆரம்பிப்பதாக இருந்தது. தொழிற்சங்கம் உதயமாகும் அன்றே முதலாளியின் காட்டுதர்பாரை காட்ட நினைத்தான் பிரான்சிஸ். ஆனால் இந்த அடக்குமுறை தொழிலாளர்களை அஞ்சி ஓடுமாறு செய்யவில்லை.

இதுநாள் வரையிலும் மந்தைகளைப்போல அடிமையாக இருந்த தொழிலாளர்கள் முதன்முறையாக சினம் கொண்டு இந்த அநீதியை தட்டிக் கேட்டனர். தன்னிடம் பெல்ட்டால் அடிபடும் மந்தைகள் இப்போது கூட்டமாக வந்து எதிர்த்துப் பேசுகிறதே என்று உறுமிய பிரான்சிஸ் மேலும் மொத்தம் 25 தொழிலாளிகளை பணிநீக்கம் செய்கிறான். மிச்சமுள்ள தொழிலாளிகள் பிரான்சிஸின் சாதி, சொந்த ஊரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மட்டும் தொழிற்சங்க முயற்சிகளுக்கு முன்வரவில்லை.

இப்படி சனிக்கிழமை வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் தங்களது தொழிற்சங்கத்தை முறையாக ஆரம்பித்து நிர்வாகக் குழுவை தெரிவு செய்து போராட முடிவு செய்கின்றனர். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில அமைப்புச் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் இந்த சங்கத்தின் போராட்டத்தை முன்நின்று நடத்துகிறார்.

26.10.09 திங்களன்று நிறுவனத்தின் வாயிலில் மறியல் போராட்டம்.  அடாவடி முதலாளியின் கண் முன்னாலேயே நிறுவனத்தின் கதவுகளை இழுத்து மூடுகின்றனர் தொழிலாளர்கள். உள்ளே இருக்கும் வடமாநில தொழிலாளிகளோ பீதியில் உறைந்து போய் வேடிக்கை பார்க்கின்றனர்.

முதலாளியின் அழைப்பின் பேரில் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசு படை உடன் வருகிறது. மறியலில் வெற்றிவேல் செழியன் மற்றும் பு.ஜ.தொ.முவின் வாகன ஓட்டுநர் சங்கத்தின் ஐந்து தோழர்களும் அடக்கம். இவர்களைத் தவிர மற்றவர்கள் அங்கேயே வேலைபார்க்கும் ஓட்டுநர்கள். மறியல் என்பது தங்களது தொழிற்சங்க உரிமை என வாதிட்ட தொழிலாளர்களை சிலமணிநேர விவாதம், தள்ளுமுள்ளுக்குப் பின் இறுதியில் கைது செய்கிறது போலீசு.

மொத்தம் 21பேர் மீது 147, 294B,342, 352 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மதுராந்தகம் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். காவல் நிலையத்திலும், சிறையிலும் தொழிலாளிகளிடம் அவர்களது சாதியைக் கேட்டபோது “நாங்கள் தொழிலாளிகள், எங்களுக்கு சாதி கிடையாது. சொல்லவும் மாட்டோம்” என்று அவர்கள் போராடி நிலைநாட்டியிருக்கின்றனர்.  தொழிலாளிகளை ஒன்றுபடுத்தும்  வலிமையான வர்க்க அடையாளம் இருக்கும் போது பிளவு படுத்தும் சாதி எதற்கு என்று பேசிய தொழிலாளிகளை  போலீசு, சிறை அதிகாரிகள் முதன் முறையாகப் பார்த்தார்கள்.  இறுதியில் சாதியில்லாமலே அவர்களுடைய பெயர்களைப் பதிந்தார்கள்.

சங்கத்தில் சேரத் தயங்கிய தொழிலாளிகள் பிரான்சிஸின் ஊரையும், சாதியையும் சேர்ந்தவர்கள். சங்கத்தில் சேர்ந்தவர்களுக்கோ சாதி மயக்கம் இல்லை. இந்த கைது, வழக்கு, சிறை இவற்றையெல்லாம்  தொழிலாளிகள் முன்னர் கண்டதில்லை. காணாத வரைதானே அச்சம். கண்டபின் முன்னிலும் வேகமாய் போராட முடிவு செய்திருக்கின்றனர். தற்போது இரண்டு நாட்களுக்கு பிறகு பிணையில் வெளிவந்திருக்கும் அந்த தொழிலாளிகள் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்கும் வேலையை உற்சாகமாக செய்து வருகின்றனர். பிரசுரம், சுவரொட்டி, தெருமுனைக்கூட்டம், மக்களிடம் பிரச்சாரம் என போராட்டம் சூடுபிடிக்கிறது. வேலையிழந்தாலும், வருமானமிழந்தாலும் இந்த தொழிலாளிகள் வர்க்க உணர்வு என்ற அற்புதத்தை உணர்ந்து பெற்றிருக்கிறார்கள். அது அவர்களின் வாழ்வுக்கு மட்டுமல்ல சமூகத்திற்கும் வசந்தத்தை கொண்டுவரும்.

தமிழ் சினிமா பண்ணையாரைப் போல தொழிலாளிகளை அச்சுறுத்தி ஆதிக்கம் செய்து பிரான்சிஸ், தன் வாழ்நாளில் முதன்முறை அச்சத்தை அனுபவித்திருக்க வேண்டும். தற்போது தனது ஊர்க்கார தொழிலாளிகள், லைசன்சு இல்லாத கிளீனர்களை வைத்து சில லாரிகளை இயக்கி வருகிறான். வெகுவிரைவில் இந்த சாதி அபிமானத்தில் இருந்து அந்த தொழிலாளிகளும் விடுபடுவார்கள். சாதி அபிமானத்தைத் துறந்து ஏற்கனவே ஒருவர் சங்கத்தில் சேர்ந்து விட்டார். இனிவரும் நாட்களில் பிரான்சிஸின் தர்பாருக்கு முடிவுரை எழுதப்படும்.

தொழிற்சங்கம் ஆரம்பித்த அன்றே போராட்டம், கைது, சிறை என ஆகிவிட்ட போதிலும் அந்த தொழிலாளிகள் அஞ்சவில்லை. தொழிற்சங்கமாக இணைந்த பின்னர்தான் தங்களது பலத்தை மட்டுமின்றி, சுயமரியாதையையும்  தொழிலாளிகள் உணர்ந்திருக்கிறார்கள். இந்த வலிமைதான் சுரண்டலையும் ஆதிக்கத்தையும் எதிர்க்கும் வல்லமையை அவர்களுக்குத் தந்திருக்கிறது.

சாதி, மொழி, இனம் கடந்த தொழிலாளி வர்க்க ஒற்றுமையை, இந்தியிலும், ஒரியாவிலும், தமிழிலும் எழும்பவிருக்கும் போராட்ட முழக்கங்களை விரைவிலேயே அந்த முதலாளி கேட்கவேண்டியிருக்கும். மொழி புரியாவிட்டாலும் அந்த முழக்கங்களின் பொருள் முதலாளிக்கு நிச்சயம் புரியும். புரிய வைப்பார்கள் தொழிலாளர்கள்.

ஆனால் கான்கிரீட் காடுகளை உருவாக்கும் இந்த தொழிலாளிகளின் போர்க்குணம், அந்தக் காடுகளின் ஏ.சி அறைகளுக்குள் அடிமைகளாய் மேய்க்கப்படும் ஐ.டி ஊழியர்களை தீண்டி எழுப்புமா?

போராடும் தொழிலாளர்களுக்கு வினவு சார்பில்  புரட்சிகர வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

……………………………..

தொடர்புடைய பதிவுகள்

கச்சத்தீவு: அனாதைகளாய் தமிழக மீனவர்கள்!

24

ஈழம். கச்சத்தீவு: அனாதைகளாய் தமிழக மீனவர்கள்!-சிறப்புக் கட்டுரை!

கடந்த முப்பதாண்டுகளில் நானூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள்கொல்லப்பட்டிருப்பதாகவும், ஆயிரக்கணக்கான மீனவர்கள் காயமடைந்திருப்பதாகவும் பல நேரங்களில் பாம்பன் பகுதி கடலோர கிராமங்களுக்குள் சிங்களப் படைகளே தரையிரங்கி தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் ஏராளமான குற்றச்சாட்டுகள் இலங்கை கடற்படையினர் மீது சுமத்தப்படுகிறது. நீண்டகாலமாக தமிழகத்தின் மீனவர் பிரச்சனையைக் கண்டு கொள்ளாதவர்கள் இன்று தவிர்க்க முடியாமலோ, அல்லது தேவை கருதியோ இது குறித்து அவ்வப்போது தவணை முறையில் பேசுகிறார்கள்.

கடந்த முப்பதாண்டுகளாக இலங்கை தீவிற்குள் நடந்து வந்த ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. இலங்கை அரசுப் படைகள் வன்னி மீதான போரை இரண்டரை ஆண்டுகாலம் நடத்தி துயரமான மக்கள் படுகொலையோடு போரை வெற்றிகரமாக முடித்திருக்கிறார்கள். போர் மனிதர்களை இடம்பெயரவும், ஊனமாக்கவும், காணாமல் போகவும், கடத்திச் செல்லவும், உயிரைப் பறிக்கவும் செய்கிறது என்பதற்கு ஈழ மக்கள் மட்டுமல்ல தமிழக கரையோர மீனவர்களும் ஒரு எடுத்துக்காட்டு. உள்நாட்டில் அல்ல அண்டை நாட்டில் நடக்கும் யுத்தம் கூட அதன் எல்லையை அண்டிய மக்களை எப்படி பாதிக்கிறது என்பதற்கு பாம்பன் பகுதி மீனவர்கள் கடந்த முப்பதாண்டுகளாக படும் துன்பமே சாட்சி. இப்போதோ ‘போர் முடிந்து விட்டது புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள். கடற்புலிகள் இல்லை’, என இலங்கை அரசு போரின் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. ஆனால் இராமேஸ்வரம் மீனவர்கள் மீதான தாக்குதல் மட்டும் நின்றபாடில்லை.

இந்தப் போரின் துவக்கத்தில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்களை மரியா என்ற படகில் வந்த சிலர் சுட்டுக் கொன்றார்கள். அவர்களை விடுதலைப் புலிகள் என்றது இந்திய அரசு. எனக்கு அப்போது நேர்காணல் ஒன்றை வழங்கிய அப்போதைய புலிகளின் அரசியல் பிரிவு தலைவரும் குண்டு வீச்சில் கொல்லப்பட்டவருமான சுப. தமிழ்செல்வன் இதை மறுத்தார். ஆனாலும் போரின் நியாயங்களும் அது நமக்குள் ஏற்படுத்திய பாதிப்புகளாலும் நாம் சம்பவங்களை கடந்து சென்று விட்டோம். ஒரு வழியாக துயரமான முறையில் முள்ளிவாய்க்காலில் அது முடிவுக்கு வந்தது மே மாதத்தில். ஆனாம் அந்த மே மாதத்திற்குப் பிறகு மட்டும் தமிழக மீனவர்கள் இருபது தடவைக்கும் மேலாக இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். தினந்தோறும் மீனவர்கள் தாக்கப்படுவது வாடிக்கையான ஒன்றாக மாறிப் போய்விட்டது.

தங்கள் மீதான தாக்குதலை தட்டிக் கேட்காத, தங்களை பாதுகாக்கத் தவறிய மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து பாம்பன் பகுதியின் ஐந்து மாவட்ட மீனவர்கள் கடந்த 22 நாட்களாக வேலை நிறுத்தம் செய்தனர். தமிழக மீனவளத்துறை அதிகாரிகளின் உறுதிமொழியை அடுத்து அவர்கள் கடந்த (12-09-2009) அன்று சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற அன்றே இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டனர். அவர்களின் படகுகள் மோசமான முறையில் சேதப்படுத்தப்பட்டு, வலைகள் அறுக்கப்பட்டு, மீன்கள் கொள்ளையடிக்கப்பட்டு, அவர்கள் கையாலாகதவர்களாய் கரை திரும்பினார்கள். அதே வாரத்தில் 21 மீனவர்களை பிடித்துச் சென்று விட்டது இலங்கை கடற்படை. இந்தக் கட்டுரை எழுதப்படுகிற இன்று (24-09-2009 வியாழக்கிழமை) அவர்கள் விடுதலையாவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆக போர் முடிந்தாலும் இந்தப் பிரச்சனை தீரப்போவதில்லை என்பதை இலங்கை கடற்படை நமக்கு உணர்த்தியிருக்கிறது. தமிழக மீனவர்கள் இவ்வாறு கைது செய்யப்படுவது போலவே இலங்கை மீனவர்களும் இப்போது தமிழக, ஆந்திர போலிசாரால் கைது செய்யப்படுகிறார்கள். இலங்கை மீனவர்கள் இப்போதும் நமது புழல் சிறையில் அடைபட்டிருக்கிறார்கள் என்பதெல்லாம் இந்த எல்லை தாண்டும் கடல் விவாகரம் என்பது இரு நாட்டு மீனவர்களையும் எந்த அளவுக்குப் பாதித்துள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டு.

இந்திய அரசின் அணுகுமுறை?

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு தீர்வாக, சர்வதேச கடல் எல்லையைக் கடந்த தமிழக மீனவர்கள் 22 பேர் இந்தியக் கடற்டையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் மீன்பிடி அங்கீகாரம் இரத்து செய்யப்பட்டிருப்பதோடு, எல்லை தாண்டும் மீனவர்கள் இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற மறைமுக மிரட்டலையும் விடுத்திருக்கின்றன மத்திய மாநில அரசுகள். ஒவ்வொரு முறை மீனவர்கள் தாக்கப்படும் போதும் மத்திய அரசு தமிழக மீனவர்களை மிக மோசமான எல்லை தாண்டிய கள்ளத் தொழிலாளர்களாகவே சித்தரித்து வந்திருக்கிறது. ஒரு முறை கடற்படை அதிகாரி ஒருவர் எச்சரிக்கிற தொனியில் இப்படிச் சொன்னார், ”எல்லை தாண்டும் மீனவர்கள் தண்டிக்கப்படுவார்கள்’. தமிழகத் தலைவர் ஒருவர் கூட ‘அதிக பொருளுக்கு ஆசைப்படுகிற மீனவர்கள் இப்படி எல்லை தாண்டிச் சென்று விடுகிறார்கள்’ என்கிற தொனியில் சொன்னார். இப்போது நடந்திருந்க்கும் நிகழ்வுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரத்திடம் கேட்டபோது, ‘மீனவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்’ என்றார்.

மேலே சுட்டிக்காட்டியுள்ள இந்திய ஆளும் வர்க்க அதிகார பீடங்களின் குரல்களில் எங்காவது இலங்கை அரசை இது தொடர்பாக கண்டித்திருக்கிறார்களா? பாதிக்கப்படுகிற மீனவர்களை அதிக ஆசை கொண்டவர்களாகவும், எல்லை தாண்டும் கள்ளக் குடியேறிகளாகவும், நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்களாகவும் சித்தரிக்கும் இவர்கள், இந்த உயிர்வாழ்வு பிரச்சனையை ஒரு அடையாள அட்டைப் பிரச்சனையாகவோ, எல்லைப் பிரச்சனையாகவோதான் அணுகி வருகிறார்கள். ஆனால் இலங்கை மீனவர்களுக்கும் இந்திய மீனவர்களுக்கும் உயிர்வாழ்தலின் பொருளாதார நலனை தரித்திருக்கும் கச்சத்தீவை அண்டிய பகுதியே இவ்விதமான பதட்டத்தைத் தாங்கியிருப்பதன் மூலம். கச்சத்தீவு பற்றிய விவாதத்தை முன் வைப்பதும். இந்திய சாதீய சமூகங்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறித்தும், திராவிட இயக்க அரசியலில் கோலோச்சும் சாதி ஆதிக்க அரசியல் சூழலில் அரசியல் அநாதைகளாக விடப்பட்டுள்ள இம்மக்களின் அரசியல் விடுதலை குறித்தும் பேசுவதுமே பொருத்தமான ஒன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.

கச்சத்தீவு ஆதி முதல் இன்று வரை

இலங்கையில் பிரிட்டீஷார் பெருந்தோட்ட பயிர்செய்கைக்கு வட தமிழகத்திலிருந்தும் தென் தமிழகத்திலிருந்தும் கூலி அடிமைகளை கொண்டு சென்ற 19, 20 நூற்றாண்டுகளிலேயே பாக் நீரிணையை அண்டிய கச்சத்தீவு இந்தியா வழியாக இலங்கைக்கு செல்லும் ஒரு பாதையாக இருந்து வந்துள்ளது. அதற்கு முன்னரும் வரலாற்றுக் காலம் தொட்டே இருந்து வந்துள்ளது. இலங்கையின் ஐக்கிய தேசியக் கட்சியை உருவாக்கிய பிரிட்டீஷார் அக்கட்சியிடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைத்து திரும்பிய பின் குடிவரவு, குடியகல்வு சட்டக் கோவைகள் அமலுக்கு வந்த பின்னரும் கூட நீண்ட நெடுங்காலமாக சட்டங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பாதையாக பாக் நீரிணையும் கச்சத்தீவும் இருந்துள்ளது. கலவரக் காலங்களில் மக்கள் இடம்பெயர்ந்து தமிழகத்துக்கு வரவும், அரசியல் செல்வாக்குள்ள கடத்தல்காரர்கள் பயன்படுத்தும் வழியாகவும் இது இருந்து வந்துள்ளது. 1983 ஜூலைக் கலவரங்களைத் தொடர்ந்து ஈழப் போராளிகள் இந்திய அரசின் ஆதரவைப் பெற்று இந்தியாவுக்கு வரவும், அகதிகள் தமிழகத்துக்கு வரவும், இங்குள்ள வியாபாரிகள் பண்டமாற்று வணிகத்திற்காக சென்றும் வந்துள்ளனர். பொதுவாக இலங்கை மேட்டுக் குடி சமூகங்கள் இவர்களை கள்ளத்தோணிகள் என்று அழைக்கிறார்கள்
இக்காலத்தில் வேகம் பெற்ற ஈழத் தமிழ் மக்களின் தேசிய இன விடுதலைப் போராட்டமும் அது தமிழகத்து மக்கள் மத்தியில் பெற்றிருந்த ஆதரவும், இந்திய மத்திய அரசு அதற்கு ஆதரவு அளித்த நிலையில் ஈழ கப்பல்

போக்குவரத்துக்கழகம் என்கிற அங்கீகாரமில்லாத ஒரு சேவையைக் கூட அங்குள்ளவர்கள் நடத்தியதாகத் தெரிகிறது. போராளிகளை பயிற்சிக்கு அழைத்து வருவது, பயிற்சி முடிந்தவர்களை கொண்டு அங்கு விடுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக போராளிகளுக்கு இந்த பாக் நீரிணை பயன்பட இலங்கையின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் தரும் ஒரு வலையமாக கச்சத்தீவும் அதைத் அண்டிய பாக்நீரிணையும் இருப்பதாகக் கருதிய இலங்கை அரசு, 1985 ஆம் ஆண்டு இப்பகுதியில் மீன் பிடிக்கவோ, அங்கீகாரமில்லாமல் நடமாடவோ தடை விதித்ததோடு தடை செய்யப்பட்ட ஒரு பகுதியாகவே கச்சத்தீவையும் அதன் அண்டைப் பகுதியையும் இன்று வரை நடத்தி வருகிறது.

மனிதர்கள் வாழாத – தொழில் பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்தும் தீவுகளாக கச்சத்தீவு மட்டும் இல்லை. பாலைத்தீவு, கக்கிரத்தீவு என இன்னும் இரண்டு தீவுகள் கூட யாழ்குடா நாட்டில் இருக்கிறது. கேந்திர முக்கியத்துவம் இருந்தாலும் முழுக்க முழுக்க இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இத்தீவுகளை இலங்கை மீனவர்கள் மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள். இவ்விதமாய் மனிதர்கள் வாழ்ந்தும், வாழாமலுமாய் 11 தீவுகள் யாழ்குடா நாட்டை அண்டிய பகுதியில் உள்ளதாம். ஆனால் இந்திய தமிழக மீனவர்களுக்கோ உபயோகப்படும்படியாய் இருப்பது கச்சத்தீவு மட்டும்தான். கச்சத்தீவு என்னும் மனிதர் வசிப்பிடமல்லாத அப்பிரதேசத்தை தமிழக மீனவர்கள் வலைகளை உலர்த்திக் கொள்ளவும், மீன்களை வெட்டி உப்புக் கண்டமிட்டு கருவாடாக்கி கொண்டு வருவதற்கும், தற்காலிக இளைப்பாறுதலுக்கும், சங்கு, கடலட்டை போன்றவற்றை பிடிக்கும் ஒரு நிலமாகவும் தற்காலத்தில் பயன்படுத்தி வருகிறார்கள். முன்னர் கச்சத்தீவு மேய்ச்சல் நிலமாகவும், யுத்தக் காலங்களில் இராணுவ வீரர்களுக்கான பயிற்சி மையமாகவும் கூட இருந்ததுண்டு. இரண்டாம் உலகப் போரின் போது கச்சத்தீவில் நேசப் படைகள் பீரங்கித் தளம் ஒன்றை அமைத்திருந்ததாகவும் தகவல்கள் சொல்கின்றன. மீன்களின் இனப்பெருக்கத்திற்கு பெரிதும் பயன்படும் பவளப்பாறைகள் நிறைந்த இப்பிராந்தியத்தின் கடல் சூழல் மிக ஆரோக்கியமான ஒன்றாக நிலவுவதாலும் அதிக விலை கிடைக்கும் இறால் கணவாய் போன்ற மீன்வகைகள் மிக அதிக அளவில் கிடைப்பதாலும் மீனவர்களின் பொருளாதாரத் தேடலுக்கும் அவர்களின் மேம்பாட்டிற்கும் இப்பகுதி மிக முக்கிய தவிர்க்க முடியாத மீன் பிடி வலையமாக இருந்து வருகிறது.

தமிழகத்தின் இராமநாதபுரம், நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, உள்ளிட்ட ஐந்து மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனையாக மாறிவிட்ட கச்சத்தீவு தொழில் ரீதியாக மட்டுமல்லாமல் பண்பாட்டு ரீதியாகவும் ஈழ, இலங்கை, இந்திய மீனவர்களை வரலாற்று ரீதியாகவும் பிணைத்திருக்கிறது. கச்சத்தீவில் 1913 ஆம் ஆண்டு புனித அந்தோணியாரின் ஆலயம் ஒன்று நிறுவப்பட்டது. பொதுவாக கடற்கரையோர சமூகங்களிடம் பனிமய மாதா, ஜெபமாலை மாதா, அலங்கார மாதா, அற்புத மாதா என பெண் தெய்வ வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றது போல புனித அந்தோணியார் வழிபாடும் பிரசித்தி பெற்றதுதான். கிறிஸ்தவத்தின் ஏனைய புனிதர்களை விட அந்தோணியார் மீனவர்களிடையே அதிக செல்வாக்கோடு விளங்குகிறார்.

பாஸ்கா பண்டிகைக் காலத்தில் வரும் கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழாவிற்கு இராமநாதபுரம் தங்கச்சி மடத்திலிருந்து பங்குப்பாதிரியாரும் அனைத்து மத மக்களும் வருடம்தோறும் சென்று சிறப்பு வழிபாடு செய்து திரும்புகின்றனர். இதற்கான உரிமை பாரம்பரியமாக தமிழக மீனவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் கச்சத்தீவிற்குள் இருக்கும் அந்தோணியார் கோவில் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நெடுந்தீவு பங்கின் கிளைப்பங்காக இன்றும் இருக்கிறது. அந்த வகையில் அக்கோவிலுக்கு முழுப் பொறுப்பும் நெடுந்தீவு பங்கையே சாரும். கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்ற தர்க்கத்தின் போது இதை ஒரு சான்றாக இந்தியாவிடம் வைத்து வாதிட்டு வந்தது இலங்கை அரசு.

கச்சத்தீவு சர்ச்சைகள்

கச்சத்தீவிற்கு உரிமையாளர் யார் என்கிற சர்ச்சை 1921-லேயே இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் துவங்கியது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பாக் நீரிணைக்கும், மன்னார் வளைகுடாவிற்கும் இடையில் ஒர் எல்லையை வகுப்பதற்கான மகாநாடு ஒன்று கொழும்பில் இந்தியா மற்றும் இலங்கை குடியேற்ற நாட்டு அரசுகளிடையே 1921 அக்டோபரில் நடைபெற்றது. இரு தரப்புமே ஒரு முடிவுக்கு வரமுடியாத காரணத்தால் 1921ல் செய்து கொண்ட ஒப்பந்தம் மிகவும் பலவீனமான ஒன்றாகவே கருதப்பட்டு வந்தது. இலங்கையும் இந்தியாவும் சுதந்திரமடைந்து 1974 ஆம் ஆண்டில் இன்னொரு உடன்படிக்கை செய்து கொள்ளும்வரை கச்சதீவு தொடர்பான விவகாரம் தொடர்ந்தது.

இரண்டாம் உலகப் போரின் போது இலங்கை அரசால் பீரங்கித் தளமாக கச்சத்தீவு பயன்படுத்தப்பட்ட போது, 1949இல் இந்தியா தனது கடற்படைப் பயிற்சியை இத்தீவில் மேற்கொள்ளப் போவதாக அறிவித்தது. இப்பயிற்சிக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்த இலங்கை இவ்வாறான ஒரு கடிதத்தை இந்திய அரசிற்கு அனுப்பியது. ”கச்சத்தீவானது இலங்கைக்குரிய பகுதியென்றும் பயிற்சியை மேற்கொள்வதற்கு இந்தியா முன்கூட்டியே இலங்கையிடம் அனுமதி பெறவேண்டுமெனவும்” இலங்கை கூற அது முதன் முதலாக இந்திய நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. பிரிட்டீஷ் இராணுவத்தின் வலுவான தளமாக இலங்கை மாற்றப்பட்டு அது இந்தியாவுக்கான அச்சுறுத்தலாக மாறியிருந்த காலத்தில் இந்தியா வலுவான முறையில் இலங்கைக்கு தன் எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை. இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் போக்கு என்பது தமிழக மக்களுக்கு பெரும் துரோகம் இழைப்பதாக இருந்தது.

கச்சத்தீவு தொடர்பான பிரச்சனை பாராளுமன்றத்தில் எழுந்த போது நேரு, இப்பிரச்சினை குறித்து போதிய தகவல்கள் என்னிடம் இல்லை என்றும் இது தொடர்பாக சென்னை அரசிடம் விபரம் கோரி இருப்பதாகவும் கூறினார். இந்த சின்னஞ்சிறிய தீவு குறித்து இரு அரசுகளும் தமக்கிடையில் மோதிக் கொள்ளப் போவதில்லை என்றும் குறிப்பாக எமது அண்டை நாடான இலங்கையுடன் இது குறித்து தேசிய கௌரவப் பிரச்சினை எதுவும் சம்பந்தப்படவில்லை எனவும் உதாசீனமான பதிலைத் தெரிவித்தார்.

தமிழக மீனவர் நலன் குறித்து அக்கறையற்ற இந்திய அரசின் தடித்தனமான அணுகுமுறையின் ஆரம்ப வார்த்தைகள் இப்படித்தான் துவங்கின. அன்றைய நிலையில் இந்தியா இந்து மகாசமுத்திரத்தின் இந்திய நலன்கள் குறித்த அக்கறைகளைக் கொண்டிருக்கவில்லை. இந்திராவின் ஆட்சிக்காலத்திலேயே அவர் இந்து மகாசமுத்திரத்தில் இந்தியாவுக்கு எதிரான சக்திகள் ஊடுறுவது குறித்து அக்கறை கொண்டிருந்ததெல்லாம் இப் படலத்தின் இன்னொரு கிளைக்கதை. நேரு காலத்தில் காட்டப்படாத அக்கறை இந்திரா காலத்தில் காட்டப்பட்டது. ஆனால் அது என்ன மாதிரியான அக்கறை?

இந்தியா கச்சத்தீவு தங்களுக்கானது என்பதற்கான ஆதாரமாக சில கடந்த கால வரலாறுகளை முன்வைத்தது. அதாவது சென்னை அரசின் கீழ் உள்ள மதுரை மாநிலத்தின் ஜமீன்தாராக இருந்தவர் ராஜா. 1947ம் ஆண்டு வரை கச்சதீவானது இவரது அதிகார எல்லைக்குட்பட்டிருந்தது. இக்காலத்தில் ஜமீன்தார் ஒழிப்புச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதும் கன்னியாகுமரியைச் சார்ந்த பத்துதீவுகள் (கச்சதீவு உள்ளிட்ட) இவரின் அதிகாரத்திலிருந்து எடுக்கப்பட்டு சென்னை அரசிற்கு உட்படுத்தப்பட்டது. கன்னியாகுமரித் தீவுகளில் இவரது ஆதிக்கம் படிந்திருந்தமையால் ராஜாவைச் “சேதுபதி” என்றும் “முனையின் பிரபு” என்றும் அழைத்தனர். 1822 முதல் ராஜா இத்தீவை முத்துக்குளிப்பவர் இறங்குதுறையாக பயன்படுத்தினார். கிழக்கிந்தியக் கம்பெனி இவ்வுரிமையை அவரிடமிருந்து பறித்துக்கொண்டது. ஆயினும் “ஈஸ்தி மீரர் சனாட்” என்ற உடன்படிக்கையின்படி கச்சதீவு ராஜாவின் இறைமைக்கு உட்பட்ட பிரதேசமாக பிரித்தானிய அரசு அங்கீகரித்தது. இறைமை உள்ளவர் என்ற வகையில் ராஜாவே பல நிர்வாகப் பணிகளை நிறைவேற்றி வந்தார்.

பல மன்னர்களின் கைகளுக்கு மாறி, செல்வந்த வணிகர்களின் கைகளுக்கும் மாறிய இத்தீவு கடைசியில் இராமநாதபுரம் ராஜாவின் ஆளுகையின் கீழ் இருந்ததாகவும். அவர் சென்னை மாகாணத்திற்கு கப்பம் கட்டி வந்ததாகவும் இந்தியா தெரிவித்தது. கச்சத்தீவு எப்போதும் இலங்கையின் ஒரு பகுதியாக இருந்ததில்லை என்பதை நிறுவ இந்தியா பல்வேறு வரி ஆவணங்களை முன் வைத்தது. இலங்கை அரசோ 15-ஆம் நூற்றாண்டின் வரைபடம் ஒன்றைக் காட்டி போர்த்துக்கீசியரின் ஆளுகையின் கீழ் கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதியாக இருந்ததாகவும், இராமநாதபுரம் மகாராஜா யாழ்ப்பாண ராஜ்ஜியத்துக்கு கப்பம் கட்டியதாகவும் சான்றாதாரங்களில்லாத ஒரு வாதத்தை முன்வைக்க வரைபடத்தின் அடிப்படையிலான இவ்வாதத்தை இந்தியா நிராகரித்தது. இழுபறியாக நீடித்த கால நீட்சிக்குப் பிறகு 1974 ஜனவரியில் ஸ்ரீமாவோ பண்டார நாயக்கா இந்தியாவுக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டபோது பாக் நீரிணை எல்லை தொடர்பாக அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியோடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் கிட்டத்தட்ட 50 வருடங்கள் தீர்க்கப்படாத பிரச்சனையாக இருநாடுகளுக்கும் இருந்து வந்த கச்சத்தீவு விவகாரம் தணிந்துபோயிற்று அல்லது மக்கள் மன்றத்தில் கவனத்திற்கு வந்தது.

1974ன் இந்தியா இலங்கை கச்சத்தீவு ஓப்பந்தம்

இந்திய பிரதமர் இந்திராவுக்கும் இலங்கைப் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டார நாயக்காவிற்கும் இடையே 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் தியதி செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி பாரம்பரிய நீர்ப்பரப்பு பகுதிகளில் ஒன்றான ஆதாம் பாலத்திலிருந்து பாக்கு நீரிணை வரையிலுமான பகுதிக்கு கடல் எல்லை நிர்ணயிக்கப்பட்டதோடு, இவ்வுடன்படிக்கையில் உள்ள 5வது, 6வது சரத்துகள் கச்சதீவு இலங்கைக்குரியதாக இருந்தபோதிலும் இந்திய மீனவர்கள் பாரம்பரியமாக அனுபவித்து வந்த உரிமைகளை அனுபவிக்க வழிசெய்கின்றது.

சரத்து – 5

“மேற்குறிப்பிட்டவற்றுக்குட்பட்டு இந்திய மீனவர்களும் யாத்திரிகர்களும் இதுவரை அனுபவித்தது போல கச்சதீவுக்குச் செல்லும் உரிமையைப் பெறுவர். தொடர்ந்தும் அவ்வுரிமையை அனுபவிப்பர். இந்த நோக்கங்களுக்காக பிரயாண ஆவணங்களோ விசாக்களோ இலங்கையிலிருந்து பெறவேண்டுமென தேவைப்படுத்தமுடியாது. இதற்கு அவசியமும் இல்லை. இலங்கை இதற்கு நிபந்தனையும் விதிக்க முடியாது”

சரத்து – 6

“இலங்கையினதும் இந்தியாவினதும் படகுகள் மற்றவரின் நீர்ப்பரப்பினதும் ஒவ்வொருவரினதும் நீர்ப்பரப்பினுள்ளும் பாரம்பரியமாக அனுபவித்து வந்த உரிமைகளைத் தொடர்ந்தும் அனுபவிப்பர்”

இந்த ஒப்பந்தம் இலங்கைத் தரப்பினருக்கு மகிழ்ச்சியை வழங்கிய அதே நேரத்தில் தமிழகத்தில் எதிர்ப்புகளைக் கிளறி விட்டது. இந்திய பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இவ் ஒப்பந்தத்தை எதிர்த்து வெளிநடப்புச் செய்தனர். லோக் சபாவில் அறிக்கை கிழித்தெறியப்பட்டது. அதிமுகவின் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் நாஞ்சில் மனோகரன் ”தேசப் பற்றற்றவர்களின் நாகரீகமற்ற செயல் இது” எனக் கண்டித்தார். திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. செழியனோ ”இவ்வுடன்படிக்கை புனிதமற்ற ஒன்று” என்றார். தமிழக சட்டமன்றத்திலும் சிறு சலசலப்புகளை ஏற்படுத்தியதே தவிர கச்சத்தீவின் மீதான உரிமை பறிபோனதை திராவிடக் கட்சிகள் மக்கள் போராட்டமாக மாற்றவில்லை. தேர்தல் கூட்டணி, மத்திய அரசின் தயவு, பதவி அரசியல் என்கிற பல்வேறு பலவீனங்கள் காரணமாக இப்பிரச்சனை மக்கள் மன்றத்தில் கொண்டு செல்லப்படவில்லை.

இந்து மகாசமுத்திரத்தில் ஏகாதிபத்திய நாடுகளின் அத்துமீறலும், இந்தியாவைச் சூழ நிலவும் பதட்டமும் இந்தியாவை இலங்கையோடு நட்பாக நடந்து கொள்ளத் தூண்டியது. இந்து மகாச்சமுத்திரம் வழியாக இந்தியாவுக்கு ஏற்படும் ஆபத்துக்களை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்றார் இந்திராகாந்தி. இந்தியாவின் பிராந்திய தேசிய நலன்களுக்கு உகந்தது என்று கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தார் அம்மையார்.

ஆனால் அன்று முதல் இன்று வரை தமிழக மீனவர்கள் கடலின் மீதான தங்களின் உரிமையை இழந்தது குறித்தோ உயிர்வாழ்வுக்கு பெரும் அச்சுறுத்தலான ஒன்றாக கச்சத்தீவும் அதை அண்டிய பகுதிகளும் மாறிவிட்டது குறித்தோ இந்திய அரசு அன்றும் கவலைப்படவில்லை இன்றும் கவலைப்படவில்லை. மாறாக ஒவ்வொரு முறை மீனவர்கள் தாக்கப்படும் போதும் கொல்லப்படும் போதும் அதை ஒரு எல்லை தாண்டும் பிரச்சனையாக மட்டுமே திரித்துக் கூறிவருகிறது. ஆனால் கச்சத்தீவு ஒப்பந்தத்தின் 6ம் ஷரத்து இரு நாட்டு மீனவர்களும் சுதந்திரமாக மீன்பிடிக்கவும் வந்து செல்லவும் உரிமை வழங்கியுள்ளது குறித்து இந்தியா மௌனம் சாதிக்கிறது.

இந்நிலையில்தான் 1983 ஜூலைக் கலவரங்களுக்குப் பிறகு ஆயுதப் போராட்டம் துளிர்த்த பின்னர் பயங்கரவாத தடைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதோடு தேசிய கடல் பாதுகாப்பும் இலங்கை அரசால் முடுக்கி விடப்பட்டது. எண்பதுகளுக்குப் பிந்தைய இக்காலக்கட்டத்திலிருந்தே இரு நாட்டு மீனவர்களுக்கும் இது பெரும்பாதகமான ஒரு பகுதியாக மாறிவிட்டது. தமிழக மீனவர்களின் படகுகளைத் தாக்கியளிப்பது, மீன்களை கொள்ளையடிப்பது, நிர்வாணமாக்கி சித்திரவதை செய்வது, கடைசியில் சுட்டுக் கொல்வது என்று தமிழக மீனவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள். இலங்கை கடற்படையினரின் இதே கொடுஞ்செயலுக்கு ஈழத் தமிழ் மீனவர்களும் அப்பாவி பொது மக்களும் கூட தப்பியதில்லை.

1985 ஆம் ஆண்டு நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து குமுதினி படகில் புங்குடுத்தீவு நோக்கிச் சென்ற அப்பாவி ஈழத் தமிழர்கள் 33 பேரை இலங்கை கடற்படையினர் சுட்டும், வெட்டியும் படுகொலை செய்தார்கள். கடத்தல், காணாமல் போதல் என எல்லா வழமையான யுத்த தந்திர பாணிகளையும் இலங்கை கடற்படை ஈழத் தமிழர்களிடம் செய்தது போலவே தமிழக மீனவர்களிடையேயும் செய்து வந்தது.

படிப்படியாக அதிகரித்துச் சென்ற இலங்கை கடற்படையின் அட்டகாசம் தொண்ணூறுகளில் அதிகரித்துச் சென்றது. ஆண்டொன்றுக்கு கிட்டத்தட்ட ஐம்பது தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டனர். 1993ல் மட்டும் தமிழக மீன்வளத்துறையின் குறிப்புப்படி 43 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதுவரை காணாமல் போனவர்கள், கொல்லப்பட்டவர்கள் என எண்ணிக்கை எடுத்தால் அது நானூறைத் தாண்டும் என்கிறார்கள் பாதிக்கப்பட்ட மீனவர்கள். நிரந்தரமான ஊனத்திற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையோ இதைப் போல பல மடங்கு அதிகம்.

எனவே கச்சத்தீவு என்பது இரு நாட்டு மீனவர்களின் உயிர்வாழ்தலுக்கான பிரதேசம் என்பதோடு, அங்கு தமிழ், சிங்கள மீனவர்களின் சுதந்திரமான உழைப்புக்கான உத்திரவாதம் வழங்கப்பட வேண்டும்.

தமிழக மீனவர்கள் வஞ்சிக்கப்பட்ட கடற்கரைச் சமூகம்?

கடலும் கடல் சார் வாழ்வுமே மீனவர்களின் உயிர்வாழ்வில் தங்கி நிற்கிறது. உலகமயமாக்கலின் பின்விளைவுகளாய் மீனவப் பழங்குடிகள் இன்று கடற்புரங்களில் இருந்து பெயர்த்தெடுக்கப்பட்டு சமவெளிப் பகுதிகளுக்குள் வீசப்படுகிறார்கள். தண்ணீரில் இருந்து எடுத்து வீசப்படும் மீன் குஞ்சுகள் மூச்சு திணறிச் சாவது போல அவர்கள் வேர்களை இழந்து கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கிறார்கள். சுற்றுலா வளர்ச்சியின் பெயராலும், கடற்கரை மேலாண்மைத் திட்டத்தின் பெயராலும், பன்னாட்டு ஏகபோக மீன்பிடி உரிமையாலும் அவர்களின் வாழ்வு நசுங்கி நாசமாகிறது.

பழவேற்காட்டில் தொடங்கி கன்னியாகுமரியின் கேரள எல்லையான நீரோடி வரை சுமார் 1,062 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கிழக்கு கடற்கரையோரமாக வாழும் இம்மக்கள் வங்காள விரிகுடாவையும், அரபிக்கடலையும் அண்டி வாழ்கிறார்கள். புவியியல் ரீதியாக ஒரமாக ஒடுக்கப்பட்டு சமவெளிச் சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்ட இம்மக்கள் தமிழக அரசியலில் தீர்க்கமான சக்திகளாகவோ செல்வாக்கு செலுத்தும் சக்திகளாகவோ வளரவில்லை. வளர அனுமதிக்கப்பட்டதும் இல்லை.

பழவேற்காடு, சென்னை, மாமல்லபுரம், கடலூர், பாண்டிச்சேரி, சிதம்பரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, இராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி என இந்துக் கதையாடலில் புனிதத் தல ஒளிவட்டங்கள் இவ்வூர்களுக்கு இருந்தாலும் கூட இந்த நகரங்களின் பூர்வகுடிகள் மீனவப் பழங்குடிகளே. சென்னையின் வயது 300 என்கிறார்கள். அப்படியானால் அதற்கு முன் சென்னைக்கு வரலாறே கிடையாதா? பெரும் கோடீஸ்வரப் பண்ணைகளின் சொர்க்கமாகிப் போன சென்னையின் வயது 300 என்றால் அதன் அர்த்தம் என்ன? உங்கள் பாட்டனும் முப்பாட்டனும் வருவதற்கு முன்னால் சென்னை ஒரு மீனவ கிராமம். காலமாற்றத்தில் அது செயற்கைத் துறைமுக நகரமாக மாறிப் போனதோடு. வலைகள் காய்வதாலும், மீன்கள் கருவாடாக மாறுவதாலும் மெரீனாவின் அழகு கெடுகிறது என்று மீனவர்களைச் சுட்டுக் கொன்ற வரலாறுகள் கூட உண்டு. எழில் மிகு சென்னையின் அழகிற்குப் பின்னால் இரத்தம் தோய்ந்த மீனவர்களின் அழுகுரல் இன்றும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.

சென்னையில் தொடங்கி கன்னியாகுமரி வரை வாழ்கிற மீனவ மக்களில் காரையார், பர்வதரஜகுலம், பட்டினத்தார், பரதவர், முக்குவர் என பாரம்பரியமாக கடலை நம்பி வாழ்கிற மீனவர்கள் அதிகமாக உள்ளனர். சென்னைக்கு வந்த பண்ணைகள் எப்படி மீனவர்களை அப்புறப்படுத்தி சென்னையை அழகுபடுத்திக் கொண்டார்களோ அது போலவே, இராமேஸ்வரமும் பாரம்பரிய மீனவர்கள் துரத்தப்பட்ட ஒரு தீவாக மாறிவிட்டது. அங்கே இன்று செல்வாக்கு செலுத்துகிறவர்கள் முக்குலத்தோர். இராமநாதஸ்வாமி கோவிலை முன்வைத்து இந்து மதவெறிக் கும்பல்களான ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி போன்ற இந்துப் பாசிஸ்டுகள் இவ்வூர்களில் செல்வாக்கு செலுத்துவதும் அவர்களுக்கு அடியாள் வேலை பார்ப்பதும் இதே முக்குலத்தோர்தான்.

அது போல பாரம்பரிய மீனவர்களின் செழிப்பான நகரமாக இருந்தது தூத்துக்குடி. இன்றைக்கு மீனவர்களை தூத்துக்குடியில் இருந்து பீஸ் பிடுங்கி வீசி எரிந்து விட்டு தூத்துக்குடி நகரமே தங்களுக்கானது என்று அதிகார பலத்தோடு அமர்ந்திருப்பது நாடார்கள். கன்னியாகுமரியிலும் இதே நிலைதான். கன்னியாகுமரியில் விவேகானந்தா கேந்திரம், பகவதியம்மன் கோவிலை மையமிட்டு எழுப்பப்பட்டிருக்கும் இந்துப் பாசிசம், திருச்செந்தூரில் முருகன் கோவிலை முன்வைத்து உள்ளது. இந்த அமைப்புகளின் அடியாட்களாக செயல்படுவதும் இதே பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகள்தான். இந்தப் பகுதிகளில் எல்லாம் பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகளை அண்டியே பாரம்பரிய மீனவர்கள் வாழ வேண்டிய நிலை. தவிரவும் தமிழகத்தில் கடற்கரையோர சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளில் எந்த சாதி செல்வாக்கானதோ பெரும்பான்மையானதோ அந்தச் சாதிகளைச் சார்ந்தவர்களை மட்டுமே வேட்பாளர்களாக நிறுத்தி வருகின்றன

திராவிடக் கட்சிகளான திமுகவும் அதிமுகவும் ஏனைய தேசியக் கட்சிகளும். சமவெளிச் சமூகங்களின் உரிமைகளை பிரதிநிதித்துவப்படுத்துகிற இந்த வேட்பாளர்களுக்கு ஒவ்வொரு தேர்தலின் போதும் ஓட்டு மட்டும் போடும் வாக்குப் பிண்டங்களாக மட்டுமே மீனவ மக்கள் திராவிடக் கட்சிகளால் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறார்கள். அரசியலில் சமவெளிச் சமூகங்களின் பிரதிநிதிகளே மீனவ மக்களின் தலைவர்களாக இருக்கிறார்கள். இராமேஸ்வரம் போன்ற பகுதிகளில் விசைப்படகு உரிமையாளர்களாகவும் இவர்களே இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் தென் தமிழக கடலோரங்கள் மட்டுமல்லாது கடற்கரை சமூகங்களில் செல்வாக்கு செலுத்தும் கிறிஸ்தவம் கூட இம்மக்களை இன்று வரை காயடித்தே வந்திருக்கிறது. ஒவ்வொரு தேர்தலின்போதும் பங்குப் பாதிரியார்கள் தேவாலயங்களில் குறிப்பிட்ட ஒரு திராவிடக் கட்சியின் பெயரைச் சொல்லி பகிரங்கமாகவே தேவாலயப் பூஜையில் ஓட்டு கேட்கிறார்கள்.

இந்தியத் திருச்சபை இந்துத் தன்மையாக மாறி காலங்கள் ஓடி விட்டாலும் உள்ளூரில் மீனவ மக்களை நசுக்குவது பிற்படுத்தப்பட்ட ஆதிக்கசாதி பாதிரியார்களே. மறைமவாட்டங்களில் மீனவ மக்களின் பங்களிப்புக்கும் வாய்ப்புகளுக்கும் பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதி பாதிரிகள் எதிராக இருக்கிறார்கள். தற்காலத்தில் ஒடுக்கப்பட்ட மீனவப் பாதிரிகள் விழிப்புணர்வடைந்து மறைமாவட்ட தலைமைகளில் உரிமைகள் கோரும் போது அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஆதிக்க சாதி திருச்சபை கோட்டாறு மறைவாட்டத்தையே இரண்டாகப் பிரிக்கும் நிர்வாக முடிவை எடுத்திருக்கிறது. பாதிரியார்களுக்கே இதுதான் நிலை என்றால் உழைக்கும் மீனவ மக்களின் நிலையை நீங்கள் யோசித்துப் பாருங்கள்.

பெரும்பான்மை மக்கள் தொகை கொண்ட சாதிகளும், ஆதிக்க சாதிகளுமே கோலோச்சும் தேசிய இயக்க, திராவிட இயக்க அரசியல் அதிகாரத்தில் மீனவர்கள் அரசியல் சக்திகளாக பலம் பெறாமல் போனதும் சமவெளிச் சமூகங்களில் இருந்து கடற்கரை மக்களுக்குள் ஊடுருவியிருக்கும் சுரண்டல் பேர்வழிகள் மீனவர்களின் உரிமை குறித்துப் பேசுவதுமே இராமேஸ்வரம் மீனவர்கள் பிரச்சனை ஒரு பெரிய அளவிலான மீனவர் பிரச்சனையாக வெடிக்காமல் போனதற்குக் காரணம்.

மீனவர் உரிமை பற்றிப் பேசுகிற இவர்கள் உண்மையான மீனவ மக்களின் வலிகளையும் வேதனைகளையும் அறியாதவர்களாக இல்லை. மாறாக காலங்காலமாக கடலில் இருந்து கொண்டு வரும் மீனுக்கு கரையில் இருந்தபடியே விலை நிர்ணயம் செய்து அதன் மூலம் கொழுத்த லாபம் பார்த்தவர்கள் இவர்கள். இன்றுவரை உடலுழைப்பில் ஈடுபடாமல் கரையில் அமர்ந்தபடியே உழைப்பைச் சுரண்டி வரும் இவர்கள் மீனவர் உரிமை தொடர்பாக பேசுவது எவ்வளவு அபத்தம்! சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் வந்தபோது, ஒரு பக்கம் சேதுக் கால்வாய் திட்டம் வந்தால் தமிழன் மல்லாக்கப் படுத்துக் கிடந்தபடியே உண்டு வாழலாம் என்றும் தமிழகம் சிங்கப்பூராக மாறிவிடும் என்றும் பேசிய மரபார்ந்த தமிழ்க் குரல் ஒரு பக்கம் இன்னொரு பக்கம் ராமன் பாலத்தை இடித்தால் நாடே சுடுகாடாக மாறிவிடும் என்று கூச்சலிட்ட இந்துப் பாசிசக் குரல் மறுபக்கம். ஆனால் இந்த இரண்டுக்குமிடையே மீனவர் நோக்கில் அவர்களது மரபார்ந்த மீன் பிடித் தொழிலில் இந்த சேதுக்கால்வாய் திட்டம் ஏற்படுத்தப் போகும் நாசகார அழிவு குறித்தோ, அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பவளப்பறைகள் குறித்தோ ஏன் எந்த சக்திகளும் பேசவில்லையோ, அது போலத்தான் தற்போதைய மீனவர் பிரச்சனையும்.

இலங்கை கடற்படையால் இதுவரை 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதே எண்ணிக்கையில் இன்னொரு ஆதிக்க சாதியில் கொலைகள் விழுந்திருக்கும் என்றால் அதை திராவிட மனமோ, தமிழ்த் தேசிய மனமோ பொறுத்துக் கொண்டிருக்குமா என்பது இங்கு ஆராயப்பட வேண்டியது.

பொதுவாக மீனவச் சமூகத்தின் வீழ்ச்சிக்கு அவர்களின் குடிப்பழக்கமே காரணம் என்று பொதுப்புத்தியில் பதிந்திருக்கிறது. மீனவர்கள் தொழில் சார் வாழ்வைக் கொண்டிருப்பதால் நிரந்தரமான குடிகாரர்களாக இயல்பாகவே வாழ முடியாது. அப்படி வாழ்ந்தால் அவர்கள் கடலில் இருந்து அந்நியப்பட நேரிடும். மாறாக கள்ளுண்ணும் பழக்கமென்பது மீனவக் குடிகளிடம் சங்ககாலம் தொடங்கியே இருந்து வந்துள்ளது. மீனவ மக்கள் குடியால் சீரழிந்தவர்கள் என்கிற சிந்தனையை உருவாக்கியதும் கிறிஸ்தவம்தான். பின்னர் சுரண்டல் நலனுக்காகவும் அதைப் பேணி வளர்த்தெடுப்பதற்காகவும் இச்சிந்தனை சமவெளி சமூக ஆதிக்க சக்திகளால் கட்டி எழுப்பப்பட்டது. இப்படிப் பேசுகிற ஒருவர் கூட குடி இல்லாமல் இருந்தால் மட்டும் மீனவன் வாழ்வு மேம்பட்டிருக்குமா என்றோ இலங்கை கடற்படை சுடாமல் விட்டிருப்பானா என்பதையோ கேட்கத் தவறுகின்றனர். நீடித்த சுரண்டல் அடக்குமுறைக்கு இத்தகைய வசைகளும் குற்றச்சாட்டுகளும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் மீது சாத்தப்படுவது பொதுப்புத்திதான்.

கடற்கரை சமூகங்கள் மீதான இந்த ஒதுக்கல் முறைதான் தமிழகத்திலிருந்து மீனவர்களுக்கான அரசியல் அழுத்தம் ஒன்று உருவாகாமல் போகக் காரணமாக இருக்கிறது. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் மீனவ மக்களுக்கான பிரதிநிதித்துவம் இல்லை. இட ஒதுக்கீடு போன்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தற்காலிக ஏற்பாடுகளில் கூட இவர்கள் ஆதிக்க சாதி பிற்படுத்தப்பட்ட மக்களுடனேயே போட்டி போட வேண்டிய நிலையில் இருக்கின்றனர். நீண்டகாலமாக பாரம்பரிய மீனவர்கள் பழங்குடிகள் பட்டியலில் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இன்று வரை கண்டுகொள்ளப்படவில்லை. இத்தகைய புறச்சூழல்களைக் களைவதில் போதிய அக்கறை காட்டாததாலும் இடதுசாரி இயக்கங்கள் கூட இம்மக்களின் அரசியல் எழுச்சிக்கு அவர்களிடம் பணி செய்யாமல் இருப்பதும், கிறிஸ்தவம் இம்மக்களை தொடர்ந்து மூடுண்ட சமூகங்களாக வைத்து சுரண்டிக் கொண்டிருப்பதுமே அவர்களை தற்கொலையான ஒரு சமூகமாக வைத்துள்ளது. இந்தப் பிரச்சனைகளை பேசாதவரை, இது குறித்து சிந்திக்காதவரை, இலங்கைக் கடற்படையின் தூண்டிலில் சிக்கிய மீன்களாக இவர்கள் இரையாவதும் தொடர்ந்து கொண்டே இருக்கும். மீனவர்களுக்காக பேசுவதைப் போன்ற பாவனைக் கோஷங்களுக்கும் குறைவிருக்காது.
—————————————————————
இக்கட்டுரை எழுத உதவிய நூல்கள்:

  • கச்சதீவு – அன்றும் இன்றும், ஏ.எஸ்.ஆனந்தன்.
  • சேதுக்கால்வாய் திட்டமும் ராமேசுவரத்தீவு மக்களும் – குமரன்தாஸ்.
  • ஆழிப்பேரிடருக்குப் பின் – தொகுப்பு. வரீதைய்யா
  • உள்ளிட்ட சில பிரதிகள்.

-நன்றி: இனியொரு

பேராண்மை:முற்போக்கு மசாலா!

65

பேராண்மை

தமிழ் சினிமாவிற்குள் அண்ணன்-தங்கை, பண்ணையார் மகள் காதல், தாய்-தனயன், தேசபக்தி, திருடன்-போலீசு முதலான ஒன்பது கதைகள் மட்டும் பல்வேறு தினுசுகளில் படமாய் எடுத்து வெளியிடப்படுகிறது என்று சினிமாக்காரர்கள் சொல்வார்கள். நீங்கள் எந்த கதையை எடுத்துக் கொண்டாலும் அது இந்த ஃபார்முலாவில் கண்டிப்பாய் அடங்கும். அந்த ஒன்பது ஃபார்முலாக்களில் ஒன்றான தேசபக்தியை எடுத்துக் கொண்ட இயக்குநர் தான் ஆசைப்பட்ட அத்தனை மெசேஜூகளையும் திணித்து வெளியிட்டிருக்கும் படம் – பேராண்மை.

‘அதிகாலையின் அமைதியில்’ எனும் ரசிய நாவல் மற்றும் திரைப்படத்தின் உணர்ச்சியில் மனதைப் பறிகொடுத்த வாசகர்கள், தோழர்கள் பலருமிருக்கலாம். ரசிய கலாச்சார மையத்தில் அந்த படத்தை தோழர்களுடன் பார்த்து ஒன்றிய அனுபவம் இன்னமும் மறக்கக்கூடியதல்ல. துருதுருப்பான நகர்ப்புறத்தைச் சேர்ந்த ஐந்து இளம் பெண் வீராங்கனைகளை தாய்ப்பாசத்துடன் வழிநடத்தும் எளிய கிராமத்து மனிதனான செம்படை அதிகாரி, அந்தப் பெண்களின் துணையுடன் நாஜிப் படையை எதிர்கொண்டு வெல்லும் போரின் ஊடாக, அவர்களுக்கு இடையே மலரும் தோழமையையும், அதன் பின் மரணம் தோற்றுவிக்கும் துயரையும் விளக்கும் அற்புதமான கதை.

ஜனநாதனும் அப்படி அந்தப் படத்தில் ஒன்றியிருக்கலாம். ஆனால் பேராண்மை அந்தப் படத்தின் அழகை கேலிசெய்வது போலவே அமைந்திருக்கிறது. நடுத்தர வர்க்க மாணவிகளை வைத்துக் கொண்டு துருவன் எனும் பழங்குடி இளைஞன் வெள்ளைக்காரத் தீவிரவாதிகளை அநேகமாக அவன் மட்டும் தன்னந்தனியே சுலபமாக எதிர்த்து வென்று இந்திய ராக்கெட்டை காப்பாற்றும் கதை. நியாயமாக இந்தக்கதை விஜயகாந்துக்கோ, அர்ஜூனுக்கோ சேரவேண்டியது. ஜனநாதன் எப்படி இந்த வலைக்குள் சிக்கினார் என்பது தெரியவில்லை. ஆனாலும் அந்த ஆக்சன் ஹீரோக்கள் செய்யாத சில வேலைகளை துருவனாக ஜெயம் ரவி செய்கிறார்.

என்.சி.சி வகுப்பில் சம்பந்தம் இல்லாமல் அரசியல் பொருளாதாரம், உபரி மதிப்பு குறித்து மார்க்சிய அடிப்படையில் விளக்குகிறார். காட்டில் தங்கும் இரவில் மூலதனத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு நூலை படிக்கிறார். அவரது உறவினர்கள் உழைக்கும் மக்களின் அதிகாரத்தை பேசுகிறார்கள். அதிவேகமான சண்டைக் காட்சிகளின் நடுவில் கண்ணிவெடிக்கு எதிராக பேசும் துருவன், கூடவே பொதுவுடமை அரசியலை படிக்குமாறு அந்த மாணவிகளிடம் கேட்டுக் கொள்கிறார். தனது பழங்குடி சிறுவர்களுக்கு பாடம் நடத்தும் போது பச்சைத் தேயிலையின் விலையை குறிப்பிடுகிறார்.

அவரை சாதிரீதியாக இழிவு படுத்தும் மேலதிகாரி பொன்வண்ணனிடம் வீரவசனம் பேசாமல் அப்படியே அடிபணிகிறார். ஆனால் வெள்ளைநிறத் தீவிரவாதிகள் வந்ததும் பொங்கி எழுகிறார். “யார் சாதி ரீதியாக, இட ஒதுக்கீடு மூலம் தகுதி திறமைக்குறைவானவர்கள் என்று இழிவு படுத்தப்படுகிறார்களோ அவர்கள்தான் நாட்டிற்கு ஆபத்து என்றதும் உயிரைப் பணயம் வைக்கிறார்கள்” என்று இயக்குநர் காட்ட முயற்சித்திருக்கிறார். விரோதியிடம் காட்டவேண்டிய வீரத்தை நண்பர்களிடம் காட்டக்கூடாது என்று தன் மவுனத்தை நியாயப்படுத்துகிறார். இன்னும் நாம் மறந்த பல மெசேஜூகள் இருக்கக்கூடும்.

நான்கைந்து மாநிலங்களில் பரவியிருக்கும் தண்டகாரன்யாவில் மாவோயிஸ்ட்டுகளின் மீதும் பழங்குடி மக்கள் மீதும் இந்திய அரசு போர்தொடுத்திருக்கும் வேளையில், ஆயிரக்கணக்கான பழங்குடி மக்களின் உயிர் கேள்விக்குள்ளாக்கப்படும் இவ்வேளையில் இந்த யதார்த்தத்திற்கு புறம்பான, மாறுபாடான இந்தப்படம் மிகுந்த எரிச்சலைத் தருகிறது. தரகு முதலாளிகளின் தொழில் சேவைக்காக பயன்படும் விண்வெளி ஆராய்ச்சி இயற்கை விவசாயத்திற்கு பயன்படப்போகிறது என்ற அபத்தத்தையும் பொறுக்க முடியவில்லை. பருத்தியில் வந்த மரபீனி மாற்றம் செய்யப்பட்ட விதைகள் வந்து பல விவசாயிகள் தற்கொலை செய்து இப்போது அது கத்திரிக்காய் வரை வந்துவிட்ட நிலையில் இந்திய விவசாயமே பன்னாட்டு நிறுவனங்களின் பகாசுரப்பிடியில் இருக்கும் சூழ்நிலையில் “எது எதார்த்தம்” என்ற புரிதல் கூட இயக்குநருக்கு இல்லை.

ஏதோ இந்திய ராக்கெட்டை தடுப்பதற்காக சர்வதேச சதி என்று புனைகிறது  இந்தக்கதை. குடிக்கும் நீர் முதல் கும்பிடு போடும் அரசியல்வாதிகள் வரையில் அனைவரும் இன்று அன்னிய நிறுவனங்களின் கையில். இந்தியாவை கூறுபோட்டு விற்பனை செய்யும் அதிகாரவர்க்கம் மற்றும் அரசியல்வாதிகள் என்ற உண்மையான வில்லன்கள் இந்தப்படத்தில் மறைந்து கொள்கிறார்கள். ஏதோ ஹாலிவுட் 8பேக் வயிற்றுடன் நவீன ஆயுதங்களுடன் வருகிறார்கள் வில்லன்கள். நாயகன் மட்டுமல்ல, வில்லன்களின் சித்தரிப்பும் செயற்கை.

அடுத்து இட ஒதுக்கீடு பெற்று அரசு வேலைகளில் செட்டிலானவர்கள் பலரும் தமது ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எதையும் பிடுங்குவது இல்லை. பண்பாட்டு ரீதியாக பார்ப்பனமயமாக்கத்திலும், சிந்தனை ரீதியாக ஆளும் வர்க்க அரசியலிலும் இவர்கள் உருமாறி, தம் மக்களுக்கே எதிரானவர்களாக நடந்து கொள்ளும் போது, அவர்களை தேசபக்தர்களாக காட்டுவது ஃபார்முலா கதையின் இன்னொரு வடிவம்.

கோடம்பாக்கத்துக்கு வரும் பலர் முற்போக்கு கருத்துக்களை இதயத்தில் வைத்து மக்களுக்கான படங்கள் எடுப்பேன் என இயக்குநர் ஆவதற்கு முன்பு வரை பேசுகின்றனர். பேசிவிட்டு பின்பு அந்த தொழிலின் ஜோதிக்குள் ஐக்யமாகின்றனர். பின்னர் ஃபார்முலாவின் தவிர்க்க இயலாமையை நியாயப்படுத்துகின்றனர்.

ஜனநாதனும் அப்படித்தான். தமிழ் மக்களின் வாழ்வை உள்ளது உள்ளபடி காட்டுவதற்கு கூட யாரும் தயாராக இல்லாத நிலையில் இத்தகைய முற்போக்கு படிமங்களே பலருக்கு பாலைவனச் சோலையாக தெரிகிறது. ஆனாலும் அந்த சோலையில் நீர் இல்லை. ஏனென்றால் ஃபார்முலா என்பது பிளாஸ்டிக் சோலை. அதில் ஊறுவது உண்மைத் தண்ணீராகவே இருந்தாலும் அது கானல் நீராகவே மாறும்.

இந்த படத்திற்கு தோழர்கள் மதிமாறனும், சுகுணா திவாகரும் பொருத்தமான விமரிசனங்களை எழுதியிருக்கிறார்கள் என்பதால் இங்கே வினவு வழக்கமாக எழுதும் விரிவான விமரிசனம் இல்லை. ஒருவேளை அந்த தோழர்கள் எழுதியிருக்கா விட்டாலும் இதற்குமேல் எழுதுவதற்கு ஒன்றுமில்லை.

இந்தியா என்றால் விவசாயிகளும் கிராமங்களும்தான் என்றெல்லாம் படத்தில் உரையாடல் வந்தாலும், இறுதியில் தீவிரவாதி, ராக்கெட், இராணுவம் என்று ஆளும் வர்க்கம் தூக்கிபிடிக்கும் இந்தியாதான் கதையமைப்பில் ஆதிக்கம் செலுத்துகிறது. இதன் விளைவாக உழைக்கும் மக்களை அடிமைப்படுத்தும் இந்திய தேசபக்தி போற்றிக் கொண்டாடப்படுகிறது.

அதிகாலையின் அமைதியில் திரைப்படத்தில் வரும் நகர்ப்புறத்து நடுத்தர வர்க்கப் பெண்கள், “பாமரனான” அந்தக் கம்யூனிஸ்டு இராணுவ அதிகாரியின் மீது மதிப்பே இல்லாதவர்கள். நாஜிப்படைக்கு எதிரான போரில் அவர் காட்டும் அர்ப்பணிப்பும், தன்னல மறுப்பும் அவர் பால் அந்தப் பெண்களின் இதயத்தில் தோற்றுவிக்கும் நேசம், அதன் ஊடாக அவர்களிடையே மலரும் உறவு, அந்தக் கூட்டுத்துவ உறவின் வலிமையில் வெளியில் தெரியாத இழையாக ஊடாடும் நாட்டுப்பற்று..! இதுதான் அந்தப் படத்தின் அழகு, வலிமை!

பேராண்மையின் நாட்டுப்பற்று போலியாக இருப்பதால், அது பாரதமாதாவுக்கு தீபாரதனையாகி விடுகிறது. இயக்குநர் ஜனநாதன் விசமக்காரர் அல்ல. ஃபார்முலாவை மீற முடியாது. இனிப்புக்குள் எப்படி மருந்தை வைப்பது என்பதுதான் பிரச்சினை என்று அவர் சிந்தித்திருக்கிறார். அரசியல் என்பது நோயாளிக்கே தெரியாமல் நோயாளியின் தொண்டைக்குள் இறக்கப்படும் மருந்து அல்ல. நோயாளி, அதாவது ரசிகர்கள் எதை சுவைக்கிறார்களோ அதுதான் அவர்களுக்குப் போய்ச்சேருகிறது. தணிக்கையில் வெட்டியது போக ரசிகனுக்கு போவது வரை இலாபம் என்ற கணக்கு மக்களுக்கு உண்மையைக் கொண்டு சேர்க்கப் பயன்படாது.

படிக்க

http://mathimaran.wordpress.com/2009/10/22/article-246/

காங்கிரசு கருமாதிக்கு காலம் வந்தாச்சு! – பாடல்

8

இந்தப்பாடல் வெளிவந்த போது நரசிம்மராவ் பிரதமர். மன்மோகன் சிங் நிதியமைச்சர். இன்று ராவ் இல்லை, சிங்கோ பிரதமர். அன்று நிதியமைச்சராக நின்று நாட்டை வல்லரசு நாடுகளுக்கு கூறு போட்டு விற்றவர் இன்று மொத்தமாக எழுதிக் கொடுக்கிறார். இந்திராவின் அந்திம காலத்தில் ஆரம்பித்த புதிய பொருளாதாரக் கொள்கையின் செயலாக்க அதிகாரிகளாக இருந்த மன்மோகன் சிங், அலுவாலியா கும்பலின் கையில் இன்று நாடே உள்ளது இங்கே குறிப்பிடத் தக்கது. தற்போது இரண்டு மாநிலங்களின் தேர்தலில் காங்கிரசு வென்றிருந்தாலும் இந்த ஏலக்கம்பெனிக்கு கருமாதி செய்யும் அவசியம் அன்று மட்டுமல்ல இன்றுமிருக்கிறது. முன்னுரையுடன் பாடலைக் கேளுங்கள்:

காங்கிரஸ் என்றொரு கட்சி

காங்கிரஸ் என்றொரு கட்சி – அவன்
கருமாதி எழவுக்கு காலம் வந்தாச்சு…

கைராட்டை கதருன்னு சொன்னே
வெள்ளக்காரனின் கொள்ளைக்கு காவலாய் நின்னே
47க்கு பின்னே… நாட்டை ஆக்கிட்டான் – கண்ட
நாய் நக்கும் தொன்னை
(காங்கிரஸ் என்றொரு…)

தொடங்கி வச்சார் காந்தி தாத்தா – உன்
ஊழல் வரலாறு இன்னைக்கு நேத்தா- கொஞ்சம்
உள்ள போய் எட்டிப் பாத்தா – அங்கே
உள்ளவன் எல்லாம் அர்ஷத் மேத்தா
(காங்கிரஸ் என்றொரு…)

ஏற்றுமதி பஞ்சு பேலு – உங்க
அம்பானிகள் மட்டும் அடிக்குது டாலு – இப்ப
நெசவுக்கு இல்லடா நூலு..- நம்ம
நரசிம்மராவுக்கு எருமைத் தோலு..
(காங்கிரஸ் என்றோரு…)

அமெரிக்க ஜப்பான் ஜெர்மனி – அகிலமெல்லாம்
ஆரம்பிக்கிறோம் கம்பெனி
டாடா பிர்லா அம்பானி –மன்மோகன சிங்கும்
கூட்டாளிதாண்டா ராவுஜி…

வரி வட்டி ராயல்டி.. என்ன இது அநீதி
யார் நீ?
ஹா….என்னையா யாரென்று கேட்கின்றாய்?
அண்டரெண்டும் நடுங்கிட ஒடுங்கிட
கண்டபேர்கள் கருகிட குறுகிட
வீரபுஜபல பராக்கிரம சூரன் டங்கல்…ஹா…

வேட்டிய உருவுறான் டங்கல் – அதை
ஃபோட்டா புடிக்கிறான் அமெரிக்க அங்கிள் – உன்
பங்காளி தூக்குறான் செங்கல்..- கடன்
பாரம் சுமப்பதோ பாட்டாளி நாங்கள்..
(காங்கிரஸ் என்றொரு…)

உனக்கு வாச்சானே மன்மோகன் சிங்கு – அவன்
வாயத் தெறந்தாலே அபாய சங்கு – உன்னை
ஆட்டுறான் அமெரிக்கா பாங்கு – ஐயோ
மானம் போகுதடா தூக்குல தொங்கு
(காங்கிரஸ் என்றொரு)

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

……………………………..

தொடர்புடைய பதிவு

அடிமைச் சாசனம்அடிமைச் சாசனம்
விலை ரூ. 30

இந்த ஒலிக்குறுந்தகடு தேவைப்படுவோர், இங்கே அழுத்தவும்


ஈழம்: உயிர் பிழைக்க ஓடு, ஓடிக்கொண்டே இரு….!!

27

ஈழம்: உயிர் பிழைக்க ஓடு, ஓடிக்கொண்டே இரு….!!

ஒப்பரேஷன் லிபரேஷன் (Operation Liberation), தமிழில் “விடுதலை நடவடிக்கை” இதுதான் நான் யாழ்ப்பாணம் வடமராட்சியில் இருந்த காலங்களில் சிங்கள ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட பாரிய ராணுவசுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கை. இந்த விடுதலை நடவடிக்கை என்பதன் அர்த்தம்தான் எனக்கு சரியாக புரிவதில்லை. இவர்கள் யாருடைய விடுதலையைப்பற்றி குறிப்பிடுகிறார்கள்? சிங்கள ராணுவத்திற்கு முகாமிலிருந்து விடுதலையா? அல்லது போராளிகளிடமிருந்து மக்களை காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் இனவழிப்பு செய்தார்களே, அதுவா? சிங்களராணுவத்தை நாங்க கேட்டமா எங்களை காப்பாற்றுங்கள் என்று. பிறகு யாருடைய விடுதலையைப் பற்றி இவர்கள் பேசினார்கள். எங்கள் மண்ணை விட்டு விலகிப்போங்கள் நாங்கள் குறைந்தபட்சம் உயிர்ப்பயமின்றி நிம்மதியாகவேனும் இருப்போமே. இதைத்தானே கேட்கிறோம். இது புரியாமல் காப்பாற்றுகிறோம், காப்பாற்றுகிறோம்… என்று எங்கள் உயிர்களை எடுத்துக்கொண்டல்லவா இருக்கிறார்கள்.

சரி, யாருடைய விடுதலை என்ற கேள்வியெல்லாம் தாண்டி இறுதியில் கேட்பாரின்றி, நாதியற்றவர்களாக, மிருகங்களை விட மோசமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுபவர்கள் அப்பாவித் தமிழர்கள்தானே. எப்படிப்பார்த்தாலும் ராணுவம் முகாமிலிருந்து வெளியேறினால் எங்களுக்கு சாவு நிச்சயம் என்பது எல்லோருக்கும் தெரியும். கொல்லப் பிறந்தவன் கொல்கிறான். சாகப் பிறந்தவன் சாகிறான். அவலமாய் சாகப்போகிற தமிழனுக்கு எதற்கு இந்த விசாரணையெல்லாம்? அன்று, இந்த விடுதலை நடவடிக்கையின் போது ராணுவத்திடமிருந்து தப்புவதற்காக உயிரை கையில் பிடித்துக்கொண்டல்ல, இந்த உயிர் ஓர் விமானக்குண்டிற்கோ அல்லது துப்பாக்கிகுண்டிற்கோ இரையாவது மேலென்று மனதில் நினைத்துக்கொண்டு ஊரூராக ஓடியிருக்கிறேன்.

ராணுவத்தால் சாவதானால் அது நிச்சயமாக வலிநிறைந்த மரணமாகத்தானிருக்கும். இதுவே ஒரு குண்டடிபட்டு சாவதானால் வலிகுறைவாகத்தானே இருக்கும். எங்கள் வாழ்க்கைதான் நித்தம் நித்தம் வலிகளோடு நகர்கிறது. குறைந்தபட்சம் நாங்கள் வலியில்லாத சாவையாவது சந்திக்கவேண்டும் என்பதுதான் என் பேராசை. ஊரிக்காடு வல்வெட்டித்துறை ராணுவமுகாமிலிருந்து ராணுவம் வடமராட்சியை கைபற்ற எடுத்த முயற்சி ஒரே நாளில் நடந்ததல்ல. மிக நீண்டநாட்களாக ராணுவம் வெளியேறுவதும், பிறகு முகாமிற்கே திருப்பி அனுப்பபடுவதுமாகத்தானிருந்தது. முகாமிற்குள் ராணுவம் முடக்கப்பட்ட காலங்களில் தரை, கடல், ஆகாயம் என்று மும்முனைகளிலும் இருந்து எங்கள் தலைகள் மீது குண்டுமழை பொழிந்துகொண்டுதானிருந்தது.

ஒரு மனித உயிர் உருவாவதிலிருந்து மரணிக்கும்வரை (ஈழத்தில் மரணத்திற்கு வயது எல்லை கிடையாது…….) மனிதவாழ்க்கையில் நடக்கும் அத்தனை விடயங்களும் பெரும்பாலும் குண்டுச்சத்தத்துடன்தான் நடந்தது. அத்தனை வலிகளுக்குமிடையில் வாழ்க்கை என்பதும் ஆங்காங்கே ஒட்டிக்கொண்டும், ஓடிக்கொண்டும்தானிருந்தது. அந்நாட்களில் நாங்கள் எப்போதுமே இடம்பெயர்ந்து ஓடுவதற்கு தயாராக ஓர் பையில் மாற்று உடுப்புகளும் இன்னபிற முக்கியமான சில பொருட்களுடனும் எந்த நிமிடமும் தயாராகத்தானிருந்தோம்.

“ஆமி வெளிகிட்டிட்டானாம் ….” என்று யாராவது என் வீடு கடந்து ஓடிக்கொண்டிருந்தால் நாங்களும் எங்கள் பைகளை வாரிக்கொண்டு ஓடத் தொடங்குவோம். அப்படி ஓடியபோதெல்லாம் பைகளை விடவும் எங்கள் உயிர்கள்தான் அதிகசுமையாக இருப்பது போல் தோன்றியதுண்டு. ஓடியோடி கால்களை விடவும் எங்கள் மனம் அதிகமாக வலித்தது. பிறகு, ஓரிடத்தில், யாராவது அடைக்கலம் கொடுப்பவர்கள் வீட்டில் தற்காலிகமாக தங்கியிருந்து விட்டு ராணுவம் மீண்டும் முகாமிற்குள் சென்றுவிட்டது என்று தெரிந்தால் மறுபடியும் வீட்டிற்கு திரும்புவோம். ராணுவம் நெருங்கி வருகிறதென்றால் எங்களுக்கு அடைக்கலம் தருபவர்களும் ஓடத்தான் வேண்டும். ஆனால், இலங்கை ராணுவம் இல்லாத ஊர் ஒன்றை கண்டுபிடித்து ஓடவேண்டும். அதனால் தான் உறவுகளை கடந்து, ஊர் கடந்து, கடல் கடந்து, இன்னும் என்னென்னவெல்லாமோ கடந்து இன்றுவரை ஓடிக்கொண்டிருக்கிறோம்…..

அப்போதெல்லாம் ராணுவ உலங்குவானூர்திகளிலிருந்து (அட, அதாங்க ஹெலிகாப்டர்!) அடிக்கடி துண்டுப் பிரசுரங்கள் வீதிகளிலும் வீட்டு முற்றங்களிலும் வீசி எறியப்பட்டதுண்டு. அதை ஊரில் எல்லோருமே ஏதோ நடக்கப்போகிறது என்ற பயப்பிராந்தியுடன்தான் படித்தாலும், அது என்னவென்று அந்த நேரத்தில் யாருக்கும் புரிந்திருக்கவில்லை. அந்த துண்டுப் பிரசுரங்களில் நிறையவே தமிழ் எழுத்துப் பிழைகளுடன் குறிப்பிடப்பட்ட செய்தி, ராணுவம் எங்களை அவர்கள் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று தங்குமாறு போடப்பட்டிருந்தது. அதாவது கோவில்கள், பாடசாலைகள் போன்ற இடங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. எங்களை பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாப்பதற்கு தான் இந்த நடவடிக்கையாம். நாங்க கேட்டமா? கைதுகளுக்கும் கூட்டமாக குண்டுபோட்டு கொல்லவும் சிங்கள ராணுவத்துக்கு இதுதானே வசதி. நிற்க, இவர்கள் சொன்ன காலக்கெடுவில் நாங்கள் போய் பாடசாலைகளிலும் கோவில்களிலும் தங்கியிருந்தால் மாதக்கணக்கில் அங்கேயிருந்து நாறியிருப்போம். ஒப்பரேஷன் லிபரேஷன் (விடுதலை நடவடிக்கை) போது எங்களை காப்பாற்ற எந்தவொரு தொண்டர் நிறுவனங்களும் மனிதாபிமான அமைப்புகளும் அந்தநாட்களில் வடமராட்சியில் இருந்ததில்லை.

அதனால் எங்கள் அவலங்களுக்கும் சாவுக்கும் எங்களைத் தவிர சாட்சியும் இல்லை. இப்படியே பயமும் பதுங்குகுழி  வாழ்க்கையுமாக நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தன. ஒரு நாள் வழக்கம் போல் விமானக் குண்டுவீச்சு சில சுற்றுகள் முடிந்து ஓரளவிற்கு ஓய்ந்து போயிருந்தது. துப்பாக்கி வேட்டுச்சத்தம் மட்டும் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது. கிடைத்த இடைவெளியில் இயற்கை உபாதைக்கு பரிகாரம் தேடி, ஏதோ வெந்ததை தின்றுவிட்டு பதுங்குழிக்கு பக்கத்திலேயே ஒருவர் முகத்தை ஒருவர் வெறுமையோடு பார்த்துக்கொண்டு கிடந்தோம். யார் யாருடன் பேச, என்ன பேச என்றெல்லாம் தெரிந்திருக்கவில்லை.

எப்போது விமானம் குண்டு வீசுவதை நிறுத்தும், குண்டு தங்கள் மீதும் விழுமா என்று கேட்டு, கேட்டு களைத்துபோய் என் சிறிய தாயாரின் பிஞ்சுகள் பதுங்குகுழிக்குள் தூங்கிக்கொண்டிருந்தன. எங்களயெல்லாம் விட ஏதும் அறியாத குழந்தைகளின் மனோநிலைதான் ஈழத்தில் மிகவும் பரிதாபத்திற்குரியது. அவர்களை சுற்றி நடப்பது ஏதும் அவர்களுக்கு புரிவதுமில்லை. அதற்கு அர்த்தம் கற்பிக்க அவர்களுக்கு தெரிவதுமில்லை. விமானம் சுற்றும் சத்தம் கேட்டாலே போதும் என் சிறியதாயாரின் குழந்தைகள் அவர்களாகவே, யாருக்கும் சொல்லாமலே பதுங்குழிக்குள் இறங்கி இருப்பார்கள். குண்டுச்சத்தங்களினால் பயத்தில் நடுங்கி பதுங்குகுழிக்குள் ஒளிவதை தவிர அந்த குழந்தைகளுக்கு வேறெதுவும் தெரிந்திருக்கவில்லை. ஏதாவது கேள்வி கேட்டு எங்களை துளைத்தெடுத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு பதில் சொல்வதென்பது ஓர் சவால்தான்.

என் பாட்டியின் ஓர் ஒன்றுவிட்ட சகோதரியார் ஒருவர் எங்களுடன்தான் தங்கியிருந்தார். அவருக்கு சுவாசம் சம்பந்தமான பிரச்சனைகள் இருந்ததனால் அவர் பதுங்குகுழிக்குள் இறங்குவதில்லை. என்னதான் குண்டுவீசினாலும் இருமிக்கொண்டே மூச்சு விடமுடியாமல் கண்களால் கண்ணீர் வழிய வழிய வெளியிலேயே நின்றிருப்பார். வழக்கம் போல் அவர் பதுங்குகுழிக்கு வெளியில் நின்று இருமி, இருமி மூச்செடுக்க சிரமப்பட்டுக்கொண்டிருந்தார். ஒருவாறாக அன்று மாலை வேளையில் சத்தமெல்லாம் அடங்கி ஓர் நிசப்தம் நிலவியது. நான் என் வீட்டு முற்றத்தில் நின்றிருந்தேன். திடீரென ஏதோ இரைச்சல் போல் ஓர் சத்தம் கேட்டது. அது சிறிது சிறிதாக அண்மையில் கேட்கத்தொடங்கியது. இரைச்சல் மிக அண்மையில் தெருவில் கேட்க நான் என்னையும் அறியாமல் தெருக்கதவை திறந்து வெளியில் எட்டிப்பார்த்தேன். ஏறக்குறைய ஆயிரம் பேராவது இருக்கும் பொதுமக்கள் “எல்லாரும் ஓடுங்கோ, ஓடுங்கோ ஆமிக்காரன் கிட்டடிக்கு வந்திட்டான். எல்லாரும் ஓடுங்கோ” என்று குழறிக்கொண்டும், அழுதுகொண்டும், ஓடிக்கொண்டும் இருந்தார்கள்.

எங்களுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. எங்கள் பைகளை கூட எடுக்க நேரமில்லாமல் பதட்டத்திலும், பயத்திலும் உறைந்து போய் செய்வதறியாது கூட்டத்தோடு நாங்களும் ஓடத்தொடங்கினோம். வழக்கம் போல் என் இதயம் மார்புக்கூட்டிற்குள் இருந்து வெளியே எகிறி விழுந்துவிடும் போலிருந்தது. கை கால்கள் நடுங்க ஓடிக்கொண்டிருந்தேன். ஓர் இடத்தில் ஓடிக்கொண்டிருந்தபோது ஹெலிகாப்டரிலிருந்து வேறு எங்களை துரத்தி துரத்தி சுட்டுக்கொண்டிருந்தார்கள். சிலர், “சுடுறான், சுடுறான் யாராவது வெள்ளை கொடி இருந்தால் காட்டுங்கோ” என்று கூவிக்கொண்டே ஓடினார்கள். இரைச்சலும், ஓலமும் மேலும் மேலும் கூடியது. ஓடிக்கொண்டிருந்த கூட்டத்தில் பலவிதமான சம்பாஷனைகளும் கேட்டுக்கொண்டிருந்தன. கணவனை தவறவிட்ட மனைவி, மனைவியை தவறவிட்ட கணவன், இப்படியே எவ்வளவு தூரம், எங்கே ஓடுவது…… இப்படியெல்லாம் அழுதுபுலம்பிக்கொண்டே ஓடிக்கொண்டிருந்தார்கள்.

இந்த கூட்டத்தில் எங்கள் உறவினர் ஒருவர் எங்களை பார்த்ததும் கதறி அழத்தொடங்கிவிட்டார். “சாமி மாமா ஆமிக்காரன் வர்றது தெரியாமல் கடற்கரை பக்கம் போனவர். அவர் எங்கேயோ தெரியவில்லை” என்றார். எங்களை பார்த்ததும் ஏதோ புதுப்பலம் வந்தவர் போல் கூட்டம் ஓடிய திசைக்கு எதிர் திசையில் ஓடத்தொடங்கினார். தான் அவரைப்போய் தேடப்போவதாக சொன்னார். அவரை ஒருவாறு சமாதானப்படுத்தி சாமி மாமா எப்படியாவது தப்பித்து வந்துவிடுவார் என்று ஆறுதல் கூறி எங்களோடு அழைத்துக்கொண்டு சென்றோம். ஆனால், இறுதியில் சாமி மாமாவின் பிணம் தான் ஏறக்குறைய அழுகிய நிலையில் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது. நெற்றியில் பட்டை திருநீறு, சந்தனம், குங்குமம், வாய்நிறைய என்னை மருமகள், மருமகள் என்று கூப்பிடும் சாமிமாமா இப்போது நினைவுகளாகவே மட்டுமே….

இந்த கொடுமைக்கு மத்தியிலும் ஓர் இடத்தில் நாங்கள் பாட்டிக்காக காத்திருக்க வேண்டியிருந்தது. காரணம், அவரின் ஒன்றுவிட்ட சகோதரியால் ஓடவெல்லாம் முடியாது. அவரை யாராவது சைக்கிளில் வைத்துதான் தள்ளிக்கொண்டு போகவேண்டும். அதனால் அவர் தன் சகோதரியின் மகன் வந்து அவரை அழைத்து சென்ற பின் எப்படியாவது எங்களுடன் வந்து சேர்வதாக சொன்னார். பாட்டி முந்திக்கொள்வாரா அல்லது ராணுவம் முந்திக்கொள்ளுமா என்று உயிர் பதைக்க காத்திருந்தோம். என் பாட்டி அப்படித்தான் தன் உயிர் போனாலும் பரவாயில்லை தன்னால் முடிந்தவரை மற்றவர்கள் உயிர்களை காப்பாற்ற வேண்டுமென்று நினைப்பவர். ஒவ்வொரு கணத்தையும் ஒரு யுகமாக்கி எங்கள் உயிரை பதறவைத்து ஒருவாறாக வந்து சேர்ந்தார் பாட்டி.

என் பாட்டியின் சகோதரியும் அவர் மகளும் பின்னர் ஓர் கோவிலில் தங்கியிருந்தபோது குண்டு வீச்சில் காயம் பட்டு அந்த இடத்திலேயே “தண்ணி, தண்ணி…” என்று கேட்டு உயிர்களை விட்டார்கள். ஒப்பரேஷன் லிபரேஷன்/விடுதலை நடவடிக்கையின் போது எங்கள் உறவினர்கள் எத்தனையோ பேரை நாங்கள் இழந்திருக்கிறோம். அதற்கு கணக்கும் இல்லை. அந்த கண்ணீருக்கு பதில் சொல்ல ஆளுமில்லை. நாதியற்ற ஈழத்தமிழன் சாவுக்கு யாராவது கணக்கு காட்டவேண்டுமா? இல்லையென்றால் பதில்தான் சொல்லவேண்டுமா என்ன? எந்த ராணுவம் வேண்டுமானாலும் எங்களை கொல்லலாம். இலங்கை ராணுவம், இந்தியராணுவம்….. யார்வேண்டுமானாலும்…..
இப்படி நீண்டதூரம் ஓடியபிறகு கூட்டம் வெவ்வேறு திசைகளில் பிரிந்து போகத் தொடங்கியது. எங்களுக்கும் எங்கே போவது என்று தெரியவில்லை. ராணுவம் முகாமிலிருந்து வெளியேறி வரும்போது ஆரம்பத்தில் வெறிபிடித்தது போல்தான் நடந்து கொள்வார்கள். அவர்கள் எப்போதுமே அப்படித்தானே நடந்து கொள்கிறார்கள். ஒருவாறாக, இறுதியில் ராணுவத்தின் துண்டுப் பிரசுரங்களில் குறிப்பிட்ட இடங்களில் ஒன்றுக்கு செல்வதாக முடிவெடுத்து மேலும் நடக்கத்தொடங்கினோம். இப்படி நடந்துகொண்டிருந்த போது ஓர் இடத்தில் ஆண் ஒருவர் நின்றுகொண்டு “அந்தப்பக்கம் திரும்பி பாக்காதேங்கோ, பாக்காதேங்கோ..” என்று கூவிக்கொண்டிருந்தார்.

நான் திடுக்கிட்டுப்போனேன். ஒருவேளை ராணுவம் பதுங்கியிருக்கிறதா என்ன? அப்படி அவர்கள் பதுங்கியிருந்தாலும் எங்களை சுட்டிருப்பார்களே என்று நினைத்துக்கொண்டு மெதுவாக தலையை திருப்பி பார்த்தேன். அங்கே மூன்று ஆண்களின் பிணங்கள் திக்கிற்கொன்றாய் கிடந்தது. ஓர் உடலில் தலை இருக்கவில்லை. கழுத்துப்பகுதியிலிருந்த தசைகளை காகங்கள் கொத்திக்கொண்டிருந்தன. ஆங்காங்கே மனித தசைகள் சிதறிக்கிடந்தது. ஏற்கனவே பயந்துகிடந்த எனக்கு என்னைசுற்றி எல்லாமே உறைந்தது போலிருந்தது. அப்படியே உறைந்து போய் அசையாமல் நின்றிருந்தேன். யாரோ என் தோள்மீது தொட்டு என்னை உலுப்பினார்கள். நல்லவேளை இன்னும் நாய்கள் ஏதும் அவர்கள் உடல்களை குதறவில்லை என்ற ஏதோ ஓர் சிறிய திருப்தியுடன் அந்த காட்சி என் கண்ணிலிருந்து மறையும் வரை திரும்பிப்பார்த்தவாறே நடந்தேன். வாழ்நாளில் என் நினைவுகளிலிருந்து மறைய மறுக்கும் ஓர் அவலக்காட்சி இது.

நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தமிழன் என்ற முத்திரை எங்கள் மீது சிங்கள ஆட்சியாளர்களால் குத்தப்பட்டு இப்படித்தான் ஆண்டாண்டுகாலமாய் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம். இப்படியே ஓடி, ஒருவாறாக பருத்தித்துறையில் இருந்த புட்டளை மகாவித்தியாலயம் என்ற பாடசாலையில் தஞ்சம் கோரினோம். இந்த முகாமில் முட்கம்பி வேலிகள் இருக்கவில்லை, ஆனால், இன்றைய வன்னி வதைமுகாமின் தராதரத்திற்கு குறையாமல் அவலங்கள் நிறைந்ததாகவே இருந்தது.

தொடரும்

ரதி

தொடர்புடைய பதிவுகள்

ஈழத்தின் நினைவுகள் – பாகம் -1

ஈழம்: பதுங்குகுழிகளும் பாடசாலைகளும் ! பாகம் –2

ஈழம்: நீங்கள் அறியாத பெண்ணின் வலி ! – பாகம் -3

பொருளாதாரத் தடையில் ஈழத்து வாழ்க்கை !- பாகம் -4

ஈழம்: சிங்கள இராணுவத்தின் பயங்கரவாத நினைவுகள்!! பாகம் -5


தீபாவளி: பதிவுலக முற்போக்காளர்களின் ஊசலாட்டம்!

62

தீபாவளி: பதிவுலக முற்போக்காளர்களின் ஊசலாட்டம்

தீபாவளி தமிழன் பண்டிகை இல்லை என்று தமிழ் ஓவியா கிட்டத்தட்ட ரவுண்டு கட்டி அடித்தார். தமிழச்சி பெரியாரின் கட்டுரையை பிரசுரித்தார். மதிமாறனும் தனது பதிவில் ராவணண், நரகா அசுரனைக் கொன்ற இராமன் மற்றும் கண்ணனை பழிதீர்க்க உறுதி எடுக்கவேண்டுமென கேட்டுக்கொண்டார். எனினும் பதிவுலகில் தீபாவளி குறித்த கொண்டாட்டத்தில் பெரிய மாற்றம் இல்லை. இரண்டுக்கும் நடுவில் ஊசாலடும் சில முற்போக்காளர்களின் நிலை? லக்கி லுக் சென்ற ஆண்டு ரோசா வசந்தால் எழுதப்பட்ட கட்டுரையை மீள்பதிவு செய்து இனி குழந்தைகளுக்காக தானும் தீபாவளியைக் கொண்டாடும் மனநிலைக்கு வந்து விட்டதாக சோகமான தொனியில் குறிப்பிடுகிறார். மாதவராஜூம் மகனுக்காக தீபாவளியைக் கொண்டாட வேண்டியிருக்கிறது என்கிறார். வாசகர்கள் இந்தப் பதிவுகளை படித்து விட்டு இந்த பதிவை தொடருங்கள்.

குத்துமதிப்பாக சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வரையிலும் கூட தீபாவளி பெரும்பான்மை தமிழ் மக்களின் பண்டிகையாக இல்லை. கிராமங்களும், விவசாயமும் கோலேச்சிய அந்தக் காலத்தில் இயல்பாக பொங்கல்தான் வாழ்க்கையுடன் இணைந்து கொண்டாடப்பட்டு வந்தது. அப்போதும் சரி அதற்கு முன்னரும் சரி தீபாவளி, நவராத்திரி, கோகுலாஷ்டமி, ராமநவமி முதலான பண்டிகைகளை பார்ப்பன – ‘மேல்’சாதியினர்தான் கொண்டாடி வந்தனர். இன்றும் கூட தீபாவளியைக் கழித்து விட்டுப்பார்த்தால் மற்ற பண்டிகைகள் ‘மேல்’ சாதியினர் மட்டுமே கொண்டாடுகின்றனர்.

அகில இந்திய அளவிலும் நிலைமை அன்று இதுதான். இன்றும் கூட கேரளாவில் ஓணத்தையும், வங்கத்தில் துர்கா பூஜையையுமே பிரதானமாக கொண்டாடுகிறார்கள். இப்படி இந்தியா முழுவதும் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள் என்று சொல்ல இயலாது.

இந்தியாவில் இருந்த பூர்வ பழங்குடி மக்களை ஆரியர்கள் வென்று ஆக்கிரமித்த தொல்குடி கதைகளே புராணங்களாகவும், இதிகாசங்களாகவும் எழுதப்பட்டன. அவ்வகையில் பார்ப்பன இந்து மதப் பண்டிகைகள் அனைத்தும் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு எதிரான செய்திகளையே கொண்டிருக்கின்றன. வருண, சாதி, பாலின ரீதியாக அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் எவரும் இந்து மதப்பண்டிகைகளை கொண்டாட முடியாது. மனித குலம் தான் கடந்து வந்த பாதையின் வெற்றிப்படிகளை நினைவுகூரும் வண்ணம் கொண்டாடப்பட வேண்டிய பண்டிகைகள் இங்கே இந்தியாவில் எதிர்மறையாகவே இருக்கின்றன.

இந்தக் கருத்தை ஒப்புக்கொண்டாலும் இன்று தீபாவளி என்பது மக்கள் பண்டிகையாக மாறிவிட்டது என்பதையும் ஒப்புக் கொள்ளவேண்டும். தீபாவளிக்கென்று தனி சந்தை உள்ளதைக் கண்டு கொண்ட முதலாளிகள் அதன் வீச்சை கடந்த இருபது ஆண்டுகளில் அதிகரிக்க வைத்திருக்கின்றனர். ஊடகங்கள் வாயிலாக தீபாவளியின் மகத்துவம் நுகர்வு கலாச்சாரச் சந்தையை குறி வைத்து உப்ப வைக்கப்பட்டது. சமீப ஆண்டுகளாக புத்தாண்டு மற்றும் காதலர் தினத்தையே இளைஞர்கள் மத்தியில் மாபெரும் கொண்டாட்டமாக மாற்றிய முதலாளிகள் தீபாவளியை மட்டும் விட்டு விடுவார்களா என்ன?

இனிப்பு, புத்தாடை, பட்டாசு என குழந்தைகள் உலகம் தீபாளியை மையமாக வைத்து சுழல்வதும் உண்மைதான். தீபாவளி அன்று உலகமே கொண்டாடுவதான பிரமையிலிருந்து தன் குழந்தைகளுக்கும் ஏதாவது செய்ய வேண்டுமென்பதை ஏழைகளே ஏற்றுக் கொள்ளும் வண்ணம் தீபாவளி உருவெடுத்து விட்டது.

எனினும் தீபாவளி நகரம் சார்ந்த நடுத்தர வர்க்கத்தின் பண்டிகையாகத்தான் இன்னமும் இருக்கிறது. தீபாவளியன்று வீட்டில் இட்லி, தோசை சுடுவதையே கொண்டாட்டமாக நினைக்கும் கிராமங்கள், நகரங்கள் போன்று தீபாவளியை கொண்டாட முடிவதில்லை. ஒருபுறம் நிலவுடைமையின் ஆதிக்க சிந்தனைகள், மறுபுறம் முதலாளித்துவத்தின் நுகர்வுக் கலாச்சார அடிமைத்தனம் இரண்டின் கூட்டு விளைவான தீபாவளியை முற்போக்கு சிந்தனையை ஏற்றுக் கொண்டோர் கொண்டாட வேண்டிய பண்டிகை அல்ல. எனினும் குழந்தைகளுக்காக அதை கொஞ்சம் விட்டுக்கொடுத்தால் என்ன, இல்லையென்றால் அறியாத குழந்தைகள் மீது நாம் வன்முறை ஏவ முடியுமா என்பதே அந்த முற்போக்காளர்களின் ஊசலாட்டம்.

சமூக மாற்றத்திற்கான மதிப்பீடுகள் சூழலின் விளைவாக பின்பற்றப்படும் ஒன்றல்ல, மாறாக சூழலின் மீது எதிர்வினையாற்றும் தன்மையுடையவை. உலகமே கொண்டாடுகிறது எனினும் அது தவறென்றால் தவறென்றே கூற வேண்டும். அதில் கொஞ்சம் விட்டுக்கொடுப்பது என்பது நாம் நமது போராட்டத்தை கொஞ்சம் விட்டுக்கொடுப்பதும் ஆகிவிடுகிறது.

வரதட்சணை வாங்குவது தவறு, எனக்கு அதில் ஒப்புதல் இல்லை, ஆனால் உலகமே வாங்குவதால், என் பெற்றோர் என்ன விரும்புகிறார்களோ அதுவே என் விருப்பம் என்பதால் நானும் வாங்குகிறேன் என்று ஒருவன் சொன்னால் உங்கள் பதில் என்ன? சமூகத்தில் நமது நட்பு வட்டாரத்தில் யாரெல்லாம் வரதட்சணை வாங்கவில்லை, அல்லது கொடுக்கவில்லை என்று பாருங்கள் இறுதியில் நீங்களாவது மிஞ்ச வேண்டுமென விரும்புகிறீர்களா இல்லையா? இதை உலக வழக்கு தீர்மானிக்கட்டும் என்று விட்டுக்கொடுத்தால் உங்களிடம் பின்னாட்களில் காரியவாதம் பிழைப்புவாதம் எல்லாம் கொடிகட்டிப் பறக்கும். வரதட்சணை வாங்குபவன் எனது நண்பனாக இருக்க முடியாது என்று சொல்வதற்கு கூட பலர் தயாரில்லை. நட்பு வட்டாரத்திற்கு இத்தகைய மதிப்பீடுகள் இருக்க முடியாது. ஆனால் தோழமைக்கு இருக்கிறது. இன்னும் கூடுதலான மதிப்பீடுகள் இருக்கிறது.

பொதுவுடமை சிந்தனையில் அழுத்தமாக வாழும் எங்களுக்கு சாதி மறுப்புத் திருமணம், தாலி மறுப்பு திருமணம், தீபாவளிக்கு பதிலாய் நவம்பர் புரட்சி தினம், பள்ளியில் சாதியில்லாமல் குழந்தைகளை சேர்ப்பது, பார்ப்பனியத்தின் பண்பாட்டுகெதிராக மாட்டுக்கறி உண்பது முதலானவை சகஜமான விசயங்கள்தான். ஆனால் ஒவ்வொருவர் வாழ்விலும் அதற்கென போரடியதன் பக்கங்கள் நிறைய உண்டு. இதில் உலக வழக்கை அமல்படுத்தினால் இறுதியில் சமூக மாற்றமும் புரட்சியும் கூட கதைக்குதவாதவையாக மாறி விடும். போலிக் கம்யூனிஸ்டுகளின் வாழ்வில் அதைக் காணலாம். தீபாவளிக்கும், திருவண்ணாமலை தீபத்துக்கும் அவர்களின் தினசரியான தீக்கதிர் சிறப்பிதழ் வெளியிடுகிறது. ஆட்டோ தொழிலாளர்கள் ஆயத பூஜையை நேர்த்தியாக கொண்டாடுகிறார்கள். த.மு.எ.க.ச கூட்டத்தில் தாலிகளும், மல்லிகையும் ‘மணம்’ பரப்புகின்றன.

இவற்றையெல்லாம் கேள்வி கேட்டால் மக்கள் எப்படி வாழ்கிறார்களோ அதைத்தான் பின்பற்ற முடியும் இல்லையென்றால் மக்களிடம் இருந்து தனிமைப் பட்டுவிடுவோம் என்ற பதில் ரெடிமேடாய் வரும். அண்டை வீட்டு முசுலீமை எதிரியாகப் பார்க்கும் குஜராத்தின் சராசரி இந்து கூட தன்னை நியாயப்படுத்த அதே பதிலைச் சொல்லலாம். அதனால்தான் இரண்டாயிரம் முசுலீம்கள் கொல்லப்பட்டும் அதன் நாயகனான மோடி மீண்டும் முதல்வராக தெரிவு செய்யப்படுகிறார். எனவே பெரும்பான்மை எப்படி வாழ்கிறதோ அப்படித்தான் நாமும் வாழ முடியும் என்ற வாதமே அடிப்படையில் தவறு.

பெரும்பான்மை மனித குலத்தின் இழுக்குகள் அத்தனையும் சிறுபான்மை மனித இனம் நடத்திய விடாப்பிடியான போராட்டங்கள் மூலமாகவே அகற்றப்பட்டன. இல்லையென்றால் ‘சதி’ எனப்படும் உடன் கட்டை ஏறுவதும், பால்யவிவாகமும், பார்ப்பன விதவைப் பெண்களுக்கு மொட்டை அடிப்பதும் இன்றும் தொடர்ந்திருக்கும். தேவதாசி முறையை தடை செய்வது பெரும்பான்மை இந்துக்களை புண்படுத்தும் செயல் என்று வாதாடினார் சத்யமூர்த்தி அய்யர். மறுத்து போராடினார்கள் ராமாமிருதம் அம்மையாரும்,  பெரியாரும். இறுதியில் வரலாற்றில் வென்றது யார்?

இன்று உடன்கட்டை ஏறுவது சட்டரீதியாகவும், சமூகரீதியாகவும் தடை செய்யப்பட்டிருந்தாலும் ரூப்கன்வரை ராஜஸ்தானத்து இந்துக்கள் இன்றும் போற்றும் நாட்டில் நாம் பார்ப்பன இந்துமதத்தின் பிற்போக்குகளையெல்லாம் வீழ்த்தி விட்டதாக எண்ண முடியாது. பெரியார், அம்பேத்கர் எண்ணியதெல்லாம் செயலுக்கு வந்து விட்டதாகவும் கூற முடியாது. இந்தச் சூழ்நிலையில் நாம் நமது மதிப்பீடுகள் குறித்து எவ்வளவு விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்?

மாட்டுப் பொங்கலுக்கு கூட தனது மாடுகளுக்கு கருப்பு சிவப்பு வர்ணமடித்து, அழகு பார்க்கும் தி.மு.க வின் இலட்சியவாதத் தொண்டன் இன்றில்லை. பார்ப்பன எதிர்ப்பு மரபை கொண்டாடிய அவனது நேற்றைய பெருமையில் சிறு துளி கூட இன்று காணக்கிடைப்பதில்லை. ரஜினி ரசிகர்கள், இந்து முன்னணி தொண்டர்கள், ஆதிக்கசாதி வெறியர்கள் முதலானோருக்கும் ஒரு தி.மு.க தொண்டனுக்கும் இன்று அடிப்படையில் என்ன பெரிய வேறுபாடு உள்ளது? அவ்வப்போது கருணாநிதி விழிப்படைந்து ஆதிசங்கரன் பொட்டு வைத்ததையெல்லாம் கண்டித்தாலும் கோபாலபுரமே தீபாவளியைக் கொண்டாடும்போது, சன் டி.வியும், கலைஞர் டி.வியும் போட்டி போட்டுக்கொண்டு தீபாவளியை கொண்டாடும்போது கலைஞரின் பகுத்தறிவு மரபு யாரைப்பார்த்து அழும்? ‘தீ பரவட்டும்’ பரப்புவதை மறந்த உடன்பிறப்புகள் இன்று பட்டாசைத்தான் பரப்புகிறார்கள்.

முற்போக்கு மதிப்பீடுகளை ஒரு இயக்கமாய் பின்பற்றி வாழும் பலம் ஒரு தனிநபராய் நின்று ஒழுகுவதில் பெரும்பாலும் சாத்தியமே இல்லை. பொதுவில் ஒரு கட்சி இயக்கத்தில் சேருவதை சிறுபத்திரிகை மரபு ஏளனமாக பார்க்கும் வியாதி அப்பத்திரிகைகளை படிப்பவர்களையும் தொற்றுவதற்கு தவறுவதில்லை. இதே போல அம்பேத்காரையும், பெரியாரையும் தனியே படித்து வாழ்பவர்கள் கூட இறுதியில் தனிமை காரணமாக இந்துத்வ ‘பெரு’மரபில் சங்கமித்து விடுகிறார்கள். அதற்கு தோதாக அப்பெரியவர்கள் கண்ட இயக்கங்கள் இன்று தோற்றிருக்கின்றன. வீரமணியின் பகுத்தறிவு அவரது மகனை பட்டாபிஷேகம் செய்து பார்ப்பதற்கே சரியாக இருக்கும் போது பெரியாரை பரப்புவதெல்லாம் எங்கனம் சாத்தியமாகும்?

தீபாவளிக்கு புதிய உள்ளடக்கத்தை கொடுக்கலாம் என்கிறார் ரோசா வசந்த். ஏதோ நல்லது வெல்லட்டும், கெட்டது தோற்கட்டும் என்றாவது மக்களின் இந்த பண்டிகை மனோபாவத்தை ஆதரிக்கலாமே என்பதுதான் இந்த வாதம். கூடுதலாக குழந்தைகளின் கொண்டாட்டத்தையாவது அங்கீகரிக்கலாம் என்பது இதன் உட்கிடை. பார்ப்பனியத்தின் பண்பாட்டு ஆக்கிரமிப்பையெல்லாம் கட்டுடைத்து உண்மைகளை புதிய உள்ளடக்கத்தில் கொண்டு சேர்க்கும் பணிதான் நமக்குத் தேவையான ஒன்று. பார்ப்பன எதிர்மரபை சாருவாகனர் தொடங்கி, சம்புகன், நந்தன், பெரியார் வரைக்கும் நாம் கண்டுபிடித்து ஒன்று சேர்த்து பெரும் தீயாய் பற்றவைக்கும் கடமை இருக்கும் வேளையில் தீபாவளியை எப்படி அங்கீகரிப்பது? தீபாவளியை மக்களிடம் புரியவைக்கும் முயற்சிக்கு பதிலாக அதற்கு புதிய கதை ஒன்றை கதைக்கும் முயற்சியின் அவசியம் என்ன?

நமது குழந்தைகளுக்கு பார்ப்பனியத்தின் பண்பாட்டு ஆக்கிரமிப்பு கதைகளை சொல்லித் தரவேண்டும். அதிலிருந்து விடுபடும் அவசியத்தை தொடர்ந்து கற்பிக்க வேண்டும். மனித குலம் பெருமைப்படும் தினங்களின் முக்கியத்துவத்தை சொல்லித் தரவேண்டும். இதையெல்லாம் செய்யாமல் தீபாவளியின் பட்டாசு, புதுத்துணிகளுக்கு அடிபணியவேண்டுமென்றால் குழந்தைகள் வளர்ந்த பிறகு குஜராத்’இந்துக்கள்’ போலத்தான் இருப்பார்கள், பரவாயில்லையா?

மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புக்களின் தோழர்களது குடும்பத்தின் குழந்தைகளை அப்படித்தான் வளர்க்கிறோம். கோடை விடுமுறையில் அவர்களுக்கென்று விசேட முகாம்களை தமிழகம் எங்கும் நடத்துகிறோம். அதில் அவர்கள் பற்றியொழுக வேண்டிய மதிப்பீடுகளை குழந்தைகளுக்கேற்ற வடிவில் கொண்டு செல்கிறோம். எங்கள் குழந்தைகளிடம் தீபாவளி குறித்த ஏக்கம் இருப்பதில்லை. ஏனெனில் அங்கே நவம்பர் புரட்சி தினம் என்ற மாற்று உள்ளது. மாற்று இல்லாதவர்கள்தான் தீபாவளிக்கு புது கதை வசனம் எழுத வேண்டிய துர்பாக்கிய நிலைமைக்கு ஆளாகிறார்கள்.

கூட்டிக்கழித்துப் பார்த்தால் இப்படி சொல்லத் தோன்றுகிறது. மக்கள் தீபாவளியைக் கொண்டாடுவதால் அஞ்சத் தேவையில்லை. அதை நமது முயற்சியால் இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் மாற்ற முடியும். இந்திய உழைக்கும் மக்கள் பார்ப்பனியத்தை வென்று பெற்ற உரிமைகளே அதற்கு சான்று. சுருங்கக்கூறின் இந்தியாவில் பார்ப்பனியத்தின் இந்து மத மரபு, அதை எதிர்க்கும் புரட்சிகர மரபு என்று இரண்டுதான் இருக்க முடியும். புரட்சிகர மரபைத் தெரிவு செய்தவர்களிடம் ஊசலாட்டம் இருக்க வாய்ப்பில்லை. இரண்டுக்கும் நடுவில் ஏதோ ஒரு இல்லாத இடத்தை தேடிக்கொண்டிருக்கும் ‘முற்போக்காளர்கள்’தான் இங்கே பரிதாபத்திற்குரியவர்கள். தீபாவளியின் கொண்டாட்ட வெள்ளத்தில் மூழ்கி கரைசேர முடியாமல் தத்தளிப்பவர்கள் இவர்கள்தான்.

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்!

71

முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்!

முற்பிறவியில் செய்த சில தீவினைகள் காரணமாக எனக்கு முதுகுவலியும் சைனஸ் பிரச்சினையும் இருக்கிறது. எல்லா உடல் உபாதைகளுக்கும் யோகாவில் தீர்வு இருப்பதாக சொல்லும் நண்பர்களும் இருக்கிறார்கள், இதற்கும் முற்பிறவியின் தீவினைகள்தான் காரணமா என்பதை உறுதியாக சொல்ல  முடியவில்லை. தானாகவே சாகப்போன அருணகிரிநாதரை தடுத்தாட்கொண்ட சிவபெருமானைப்போல நாம் சிகிச்சைக்கு போகும்போதெல்லாம் குறுக்கிட்டு யோகாலோசனை வழங்குகிறார்கள். நான் முதுகுவலி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு போய்வந்ததை அறிந்த “வாழ்க வளமுடன்” நண்பர், இதுக்குப்போயா டாக்டர்கிட்ட போவீங்க?  நம்ம அறிவுத்திருக்கோயிலுக்கு வாங்க, எல்லா வியாதியையும் ஆசனத்தாலயே சரிபண்ணிடலாம் என்றார். அங்க போனதுக்குபிறகு எனக்கு உடம்புக்கு எதுவுமே வர்றது இல்லை என்றார் மூக்கை உறிஞ்சியபடியே.  கேள்விப்பட்டவரையில் இவர்கள்தான் சகாய விலையில் இந்த சேவையை தருகிறார்கள்,

அங்கு நடந்த உபன்யாசங்கள் நமக்கு அநாவசியமானவை. ஒரு ஆசனம் சொல்லித்தருகிறார்கள், அதுதான் இவர்களின் பிரதான ஆசனமாம். இதை தினமும் செய்தால் லாட்டரியில் பணம் விழுவதைத்தவிர்த்த சகல சௌபாக்கியங்களும் கிடைகும் என்றார்கள். இந்த ஆசனத்தை சுலபமானதா அல்லது கடினமானதா என்று வகைபடுத்த முடியவில்லை, அதாவது ஆசனவாயை ஐந்து முறை உள்ளிழுத்து வெளியேவிட வேண்டும் அவ்வளவுதான். இந்த ஆசனத்தை எப்படி கண்டுபிடித்தார்கள் என்பது இதைவிட அதிர்ச்சிகரமானது, குதிரைகள் மேற்கூறிய செயலை அடிக்கடி செய்வதால்தான் அவை எப்போதும் துடிப்புடன் இருக்கின்றன என்பதுதான் அந்த கண்டுபிடிப்பு. மகரிஷி குதிரைகள் எனும் அளவில் மட்டும் ஆரய்ச்சியை முடித்துக்கொண்டதை நினைத்து ஆனந்தப்பட்ட வேளையில் பக்கத்திலிருப்பவர் சொன்னார், அடுத்தடுத்த நிலைகளை கற்றால் இந்திரியத்தை முதுகுத்தண்டு வழியே மூளைக்கு பை-பாஸ் சாலையில் அனுப்பும் வித்தையை தெரிந்துகொள்ளலாம் என்று. எனக்கு ஏற்கனவே முதுகுப்பிரச்சனை இருப்பதால், முதுகுக்கு கூடுதல் வேலை கொடுக்க விரும்பவிலை. என்வே இந்த அளவோடு என்னுடைய அமர்வை அங்கே முடித்துக்கொண்டேன்.

அடுத்து வேறொரு நண்பரை சந்தித்தேன், அங்கேயெல்லாம் போகும்போது நம்ம ஈஷாவுக்கு ஒருதரம் வரக்கூடாதா என்றார், “இவ்வளவு தூரம் வந்துட்டு நம்ம வீட்டுக்கு வராம போனா எப்படி?” என்று நம் நண்பர்கள் கேட்பார்கள் இல்லையா அப்படிக்கேட்டார். சரி என்று விசாரித்தால், அவர்கள் அறுநூறு ரூபாய் கேட்கிறார்கள். அதுவும் ஒருவார தொடர் வகுப்பு, இரண்டு நாட்கள் முழுநாள் பயிற்சி வேறு, ஜேம்ஸ் பாண்ட் மாதிரி விதவிதமான ஆடை அணிந்து விதவிதமான கார் பைக்குகளில் போஸ் கொடுப்பதால் ஜக்கி ரொம்பவும் மாடர்ன் சாமியாரோ எனும் எண்ணம் வந்தாலும், அடிக்கடி காட்டுக்குப்போய் பாம்பையும் மிருகங்களையும் பார்ப்பவர் என்பதால் கொஞ்சம் பயமாகவும் இருந்தது ( வீட்டுப்பிராணி குதிரையை பார்த்த மகரிஷியின் யோகா அதிர்ச்சியே இன்னும் விலகவில்லை ). மேலும் அவர் உங்களிடம் உள்ள ‘நான்’ என்கிற ஈகோவை எடுத்துவிடுவார் என்றார்கள் ( நல்லவேளை சிக்மண்ட் பிராய்டு உயிரோடு இல்லை). கடைசியாக ஒரு தகவல் சொன்னார்கள், சாப்பாட்டில் பூண்டு வெங்காயம் சேர்க்கக்கூடாது என்று. தப்பிப்பதற்கு இதைவிட ஒரு நல்ல காரணம் தேவையில்லை என்பதால், இத்தோடு விசாரணையை முடித்துக்கொண்டேன்.

ஆலோசனைகள் இன்னும் தீர்ந்தபாடில்லை, இன்னொரு ஸ்பெஷலிஸ்ட் ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ ( எத்தனை ஸ்ரீ என்று சரியாக தெரியவில்லை. ஒரு குத்து மதிப்பாக எழுதியிருக்கிறேன் ) ரவிஷங்கர் யோகாவை முயற்சி செய்யலாமே என்றார்கள். ஒரு விளம்பரத்தில் கட்டணம் நாலாயிரத்து சொச்சம் என்று குறிப்பிட்டிருந்தது. அயோடெக்ஸ் ஐம்பது ரூபாய்க்கே கிடைக்கும்போது இது கொஞ்சம் அதிகம் என்று விட்டுவிட்டேன்.

இங்குதான் சாமியார், யோகா தொல்லை என்று இணையத்தை திறந்தால், சாருநிவேதிதா என்று ஒருவர் தன் மனைவி ஒரு சாமியாரை வணங்கத்துவங்கிய பிறகு நடக்கப்போவதை முன்கூட்டியே தன் டைரியில் எழுதி வைப்பதாகவும், இரவில் தூங்கும்போது அமெரிக்க உச்சரிப்பில் ஆங்கிலம் பேசுவதாகவும் எழுதியிருக்கிறார்(இயல்பில் அவருக்கு அமெரிக்க ஆங்கில உச்சரிப்பு வரவே வராதாம்) . இது தெரியாமல் தெருவுக்கு தெரு ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு எடுக்கும் அறிவிலிகளை என்னவென்று சொல்வது? இன்னொரு செய்தி இன்னும் பயங்கரமானது, அதாவது ‘பிரேக்ஷா’ எனும் தியானம் மூலம் பயங்கரவாதத்தை ஒழிக்கும் ஆரய்ச்சியை குஜராத் ஜெயின் பல்கலைக்கழகம் செய்திருக்கிறதாம்.

அடுத்த முறை உங்கள் வீட்டு கழிவறை அடைத்துக்கொண்டால், அவசரப்படாதீர்கள். ஒருமுறை உங்கள் ஆசன நண்பர்களிடம் கலந்து ஆலோசனை செய்யுங்கள். யார் கண்டது அதற்கும் அவர்களிடம் யோகா மூலமான ஒரு தீர்வு இருக்கக்கூடும்.

நன்றி: வில்லவன்

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

……………………………..

தொடர்புடைய பதிவுகள்

திருட்டுக் கும்பலின் கையில் செங்கொடி எதற்கு? – சி.பி.எம். இன் நில அபகரிப்பு

திருட்டுக் கும்பலின் கையில் செங்கொடி எதற்கு? - சி.பி.எம். இன் நில அபகரிப்பு

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரு மாலைப் பொழுது அது. மே.வங்க சி.பி.எம். கட்சியிலிருந்து வெளியேறி, விவசாயிகளின் போராட்டத்தை வழிநடத்திய கமல் பத்ரா என்பவரின் பிணம் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. இதற்கு முன்பு கொன்று தொங்கவிடப்பட்ட மற்ற பிணங்களைப் போலத்தான் அதுவும் தொங்கவிடப்பட்டிருந்தது. கமல் பத்ராவின் சகோதரர்களும், மகனும் காணாமல் போகடிக்கப்பட்டிருந்தனர். போலீசு வழக்கம் போலவே, இதையும்  தற்கொலை  என்றுதான் கூறியது.

இக்கோரச் சாவுகள் தொடர்கதையாகிப் போன அந்தக் கிராமத்தையொட்டி புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு நவீன கேளிக்கை நகரம் உள்ளது. வார இறுதியில் இருள்கவியத் தொடங்கிவிட்டால், அவ்விடத்தின் அமைதியைக் கிழிக்கும் வகையில் காதைப் பிளக்கும் மேற்கத்திய இசையும், கட்டவிழ்த்து விடப்படும் கேளிக்கைகளும், மேல்தட்டு விபச்சாரமும் அங்கே அரங்கேறத் தொடங்கி விடுகின்றன. அருகிலுள்ள பெருநகரத்து மேட்டுக்குடி இளசுகள், கப்பல் போன்ற நவீனரகக் கார்களில் வந்து குவிகிறார்கள். இந்தக் கேளிக்கை நகரம் அந்தக் கிராம மக்களின் நிலங்களைப் பிடுங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்து உருவாக்கப்பட்டது.

குடியும் கூத்துமான அத்தகைய முன்னிரவுப் பொழுதில், வெறுப்பின் உச்சத்திலிருந்த அந்தக் கிராம மக்கள்  அங்கே ஊடுருவித் தாக்க ஆரம்பிக்கின்றனர். கேளிக்கை விடுதி குண்டர்படைக்கும், கிராம மக்களுக்கும் இடையே பெரும் மோதல் வெடிக்கிறது. கேளிக்கை விடுதியின் ஒரு பகுதி முற்றிலும் உடைத்து நாசம் செய்யப்படுகிறது. மேற்கு வங்கத்தில் இருக்கும் ராஜர்காட் எனும் கிராமப் பகுதியில்தான் இவை அனைத்தும் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் நடந்தன.

மேற்கு வங்கத்தைத் தொழில் வளமிக்க மாநிலமாக மாற்றுவது என்ற பெயரில் சிங்கூர், நந்திகிராம் போன்ற பகுதிகளில் புத்ததேவ் பாணியில், அடித்து உதைத்து நிலங்களைப் பறித்தெடுக்காமல்,  ராஜர்காட் பகுதியில் ‘அமைதியான முறையில்’ நிலம் கையகப்படுத்தப்பட்டதாம். இதுதான்  மூத்த தலைவர் ஜோதிபாசுவின் பாணி!

இந்தப் பகுதியில் “ராஜர்காட் புது நகரம்” என்ற திட்டத்தின் பெயரில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களுக்கான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இவற்றுடன் சேர்ந்து கேளிக்கை விடுதிகளும், பூங்காக்களும், மேல்தட்டு விபச்சார விடுதிகளும் பெரிய அளவில் கட்டப்பட்டன. அப்படிப்பட்ட கேளிக்கை பூங்காக்களில் ஒன்றுதான் “வேதிக் வில்லேஜ்’’.

கிராம மக்களும், குண்டர்களும் வேதிக் வில்லேஜ் என்ற கேளிக்கைப் பூங்காவில் மோதிக் கொண்ட பிறகுதான், அம்மக்களிடம் நிலங்களைப் பறித்த அரசுக்கும் மாபியா கும்பலுக்குமிடையிலான வலைப்பின்னல்களும், அனைத்து ஓட்டுக் கட்சிகளும் கைநனைத்த மோசடிகளும், சி.பி.எம். கட்சியினர் இம்மோசடியில் முங்கிக் குளித்ததும் வெளி உலகிற்குத் தெரியத் தொடங்கின.

வேதிக் கிராம நிர்வாக அமைப்பின் துணை மேலாளரான பிப்லவ் பிஸ்வாஸ், குண்டர்களை கூலிக்கு அமர்த்திக் கொண்டு கிராம மக்கள் மீது தாக்குதலை ஏவியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். இவரோடு, வேதிக் கிராம ஓய்வு விடுதி கம்பெனி (VRC)யின் நிர்வாக இயக்குனரான ராஜ்மோடி மற்றும் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிரிமினல் குண்டர்கள் துணையுடன் நிலமோசடிகளில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் கொள்ளையடித்துள்ளதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பரம்பரையாக விவசாயத்தில் ஈடுபட்டுவரும் சிறு விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிகளைப் பெரும்பான்மையாக கொண்ட ராஜர்காட் பகுதி, மேற்கு வங்கத்திலேயே மண்வளமிக்க பகுதிகளில் ஒன்று. வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு போகம் வரை விளையக்கூடிய  அளவுக்கு மண்வளமும், நீர்வளமும் அபரிமிதமாக உள்ளது.  அனைத்து பயிர் வகைகளும், தானியங்களும், காகனிகளும் இங்கு விளைவிக்கப்படுகின்றன. கொல்கத்தா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் தேவையில் 20 முதல் 25% இந்தப் பகுதியில்தான் விளைவிக்கப்படுகிறது. இந்தப் பகுதியின் நீர்பாசனத்திற்கு மட்டும் ஐந்து கால்வாகள்  உள்ளன. இந்த கால்வாகளையும், பிற செயற்கை மீன்பிடிக் குட்டைகளையும் நம்பி மீன்பிடித் தொழிலும் வளமாக உள்ளது.  பால் உற்பத்தியிலும் இந்தப் பகுதி முக்கியப் பங்கு வகிக்கிறது. இவையனைத்தும் வளமிக்க அந்த மண்ணை நம்பித்தான் உள்ளன.

இந்தப் பகுதியில்  புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைப்பதற்கான வேலைகளும் அது சார்ந்த பிற உள்கட்டுமானங்கள், கேளிக்கை விடுதிகள், வீட்டுவசதிகள் போன்றவற்றை நிர்மாணிப்பது என்ற பெயரில்  ரியல் எஸ்டேட் வியாபாரமும் 1999-க்குப் பிறகு சூடு பிடிக்கத் தொடங்கியது. டி.எல்.எப், கெப்பெல் லாண்ட், யுனிடெக் குரூப், சிங்கப்பூரைச் சேர்ந்த அஸென்டாஸ், வேதிக் ரியால்டி போன்ற ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இங்கு பெரிய அளவில் முதலீடு செய்யத் தொடங்கின. 2005-இல் டி.எல்.எப்.-பின் ஒரு தகவல் தொழில் நுட்பப் பூங்கா கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது.

இவற்றுக்குத் தேவையான நிலங்களைத்தான் மிகக் கொடூரமான, விரிவான சதித் திட்டத்தின் மூலம், ஊழல் மோசடிகள் செய்து கொஞ்சம் கொஞ்சமாக விவசாயிகளிடமிருந்து பறித்துள்ளது சி.பி.எம். அரசு. 1995-லேயே இந்தப் பகுதி நிலங்களும், நீர்நிலைகளும் “ராஜர்காட் நகர்ப்புறக் குடியிருப்பு” என்ற திட்டத்தின்கீழ் கையகப்படுத்தப்பட உள்ளதாக அரசு அறிவித்தது.  இதையொட்டி சுமார் 7000 ஹெக்டேர் அளவிலான நிலமும், நீர்நிலைகளும் கையகப்படுத்தப்படுவது 1999-லிருந்து தொடங்கியது. இத்திட்டம் வரும் முன்னரே, காங்கிரசு கட்சியால் பாதுகாக்கப்பட்ட ரவுடியான ருதஸ் மண்டலை சுவீகரித்துக் கொண்ட சி.பி.எம். கட்சி, 1993-ல் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் அவனைக் களமிறக்கியது. தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தில்லு முல்லுகள் செய்து, ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் இவனை வெற்றியடையச் செய்தது சி.பி.எம். இவனைப் போன்ற ஒரு ரவுடியை அதிகாரத்தில் வைப்பதன் மூலம் மக்களை மிரட்டி நிலங்களை அபகரிக்க முடியும் என்ற திட்டத்துடன்தான் சி.பி.எம். அரசு இதனைச் செய்தது.

ஆனால், இவற்றுக்கெல்லாம் முன்னரே மேற்கு வங்கத்தின் மிகப் பெரிய நில விற்பனைத் தரகு மாபியாவும், சி.பி.எம். கட்சியின் நெருங்கிய நண்பனுமான, கமல் காந்தியும் அவனது மார்வாரி நண்பர்களும் இந்தப் பகுதியில் நிலங்களை வாங்கிப் போடத் தொடங்கினர். சி.பி.எம். கட்சியில் தனக்கிருந்த செல்வாக்கின் மூலம் ராஜர்காட் பகுதியில் திட்டப் பணிகள் நடைபெற உள்ளதை முன்கூட்டியே அறிந்து கொண்டிருந்தான், கமல் காந்தி. நிலங்களைக் கொடுக்க மறுத்த விவசாயிகள் இவனால் கடுமையாக மிரட்டப்பட்டனர்.  சில கொலைகளும் விழுந்தன. நிலங்களை கைமாற்றியதில் சி.பி.எம். பிரமுகர்கள் பலரும் நேரடியாக லாபம் அடைந்தனர்.  போலீசு-சி.பி.எம்.கட்சி-ரவுடிகள் கூட்டணியுடன் விவசாயிகளிடமிருந்து நிலங்களை அபகரிக்கத் தொடங்கினான் கமல் காந்தி. வாங்கிய நிலங்களில் ஒரு பெரும் பகுதி சி.பி.எம். கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினரும், கமல் காந்தியின் உறவினருமான சரளா மகேஸ்வரிக்குச் சொந்தமாக்கப்பட்டது. இதன் காரணமாக சி.பி.ஐ. (மார்வாரி) கட்சி என்ற பெயரும் சி.பி.எம்.-முக்குக் கிடைத்தது.

1999-இல் அரசு நிர்ணய விலையே ஒரு காதா (மேற்கு வங்கத்தில் பயன்படுத்தப்படும் ஒரு நில அளவை)விற்கு ரூபா 40,000 லிருந்து 50,000 வரையாகும். ஆனால் ராஜர்காட் நிலங்களுக்கு அரசு தந்ததோ வெறும் 4000 முதல் 5000 ரூபா வரை மட்டுமே. இதனை ஏற்றுக் கொள்ளச் சொல்லி துப்பாக்கி முனையில் மக்கள் மிரட்டப்பட்டு நிலங்கள் அபகரிக்கப்பட்டன. இந்த அநியாயத்துக்குத் துணை போகுமாறு உள்ளூர் சி.பி.எம். கமிட்டிகளே கூட செயலிழக்கச் செய்யப்பட்டன.  இவற்றைத் துணிச்சலோடு எதிர்த்தவர்கள் காணாமல் போயினர்; அல்லது கொடூரமாகக் கொல்லப்பட்டு, தற்கொலை என சோடிக்கும் வகையில் மரங்களில் தொங்கவிடப்பட்டனர். இது போலக் கொல்லப்பட்டவர்கள் 50 பேருக்கும் மேல் இருக்கும்.

சி.பி.எம். கட்சியைச் சேர்ந்தவர்கள் யாரேனும் நில அபகரிப்பை எதிர்ப்பதில் ஈடுபாடு காட்டினால், அவர்கள் உடனடியாகத் தண்டிக்கப்பட்டனர். முன்னணியில் நின்று செயல்பட்ட இளைஞர்கள் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு நடைபிணமாக்கப்பட்டனர். நந்திகிராம் பாணியில், சிகப்பு நிற நெற்றிப் பட்டையைக் கட்டிக் கொண்டு நூற்றுக்கணக்கான சி.பி.எம். குண்டர்கள் கிராமங்களில் வலம் வந்து மக்களை மிரட்டினர். இந்நிலையில், நில அபகரிப்பை எதிர்த்த விவசாயிகள் ஒரு இயக்கம் கட்டினர். அதே போல, விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டதால் வேலை இழந்தோர் இன்னொரு இயக்கம் கட்டினர். இவ்விரண்டு இயக்கங்களின் தலைவர்களும் தனியே  அழைத்து வரப்பட்டு சி.பி.எம். கட்சியின் எம்.எல்.ஏ.வான ராபின் மண்டல் முன்னிலையில், சி.பி.எம். குண்டர் படையினராலும்  போலீசு குண்டர் படையினராலும்  மிரட்டப்பட்டனர். குனி,  ஜட்ராகச்சி மற்றும் சுலன்குரி போன்ற பகுதிகளில் மக்களின் போராட்டங்கள்  சி.பி.எம். குண்டர் படையாலும், போலீசாலும் ஒடுக்கப்பட்டன. பெரும் எண்ணிக்கையிலான போலீசு படை, இப்பகுதியில் நிரந்தரமாக நிறுத்தப்பட்டது.

இன்னொரு பக்கம், மக்களின் எதிர்ப்பு நாளுக்குநாள் வலுத்து வந்த நிலையில், ராஜர்காட்டில் சி.பி.எம்.மிலிருந்து வெளியேறிய கமல் பத்ரா என்பவர் தலைமையில் ஒரு இயக்கம் உருவானது. சி.பி.எம். குண்டர் படை இவரைக் கடத்திச் சென்று கொன்று பிணத்தை மரத்திலே தொங்கவிட்டது. இவரது படுகொலை, ராஜர்காட் பகுதியின் எதிர்ப்பியக்கங்களுக்கு பேரிடியாக அமைந்தது. எதிர்ப்பியக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்தன.

ராஜர்காட்டில் நடந்த இந்த நிலப்பறிப்பு மோசடிகள் அனைத்திலும் அனைத்துக்  கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களும், ரவுடிகளும் நேரடியாக லாபம் அடைந்தனர். எனவேதான், நந்திகிராமிலும் சிங்கூரிலும் விவசாயிகளுக்காகப் போராடுவதாக நாடகமாடிய மம்தாவின் திரிணாமுல் காங்கிரசு, ராஜர்காட் மோசடிக்கெதிராக ஒப்புக்குக் கூட பேசவில்லை. ஒருபடி மேலே சென்று, விவசாயிகளை நம்ப வைத்து அக்கட்சி கழுத்தறுத்தது.  கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நில அபகரிப்பை எதிர்த்து விவசாயிகளின் இயக்கம் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தது. திரிணாமுல் காங்கிரசும் வழக்கு ஒன்றைத் தொடுத்தது. இந்நிலையில், “நாங்களே வழக்கு நடத்துகிறோம், எங்களால்தான் வழக்குக்கான பொருளாதாரச் சுமைகளை சமாளிக்க இயலும்” என்று கூறி விவசாயிகளின் வழக்கை அக்கட்சி வாபஸ் பெற வைத்தது.  அதைத்தொடர்ந்து, உடனே திரிணாமுல் காங்கிரசும் வழக்கைத் திரும்பப் பெற்று கழுத்தறுத்தது.

அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தான்மே மண்டல், ராஜர்காட்டில் எஞ்சியுள்ள நிலங்களைக் குறைந்த விலைக்கு அபகரித்து, அதிக விலைக்கு விற்று கோடிக்கணக்கில் சுருட்டியுள்ளான். எஞ்சியுள்ள நிலம் குறித்த விவரங்களை சி.பி.எம். கட்சிக்காரர்களின் உதவியுடன் ஹிட்கோ (HIDCO) அரசு அலுவலகத்தில்  இருந்து இவன் பெற்றுள்ளான். இந்த சி.பி.எம்.  திரிணாமுல் காங்கிரசு கூட்டணி ஒரு காதாவிற்கு ரூபா பத்தாயிரம் முதல் 15 ஆயிரம்  வரை மட்டுமே கொடுத்துவிட்டு, அதனை ரூபா 5 முதல் 6 லட்சம் வரை விற்று கோடிக்கணக்கில் சுருட்டியது.

எதிர்ப்புகள் ஒடுக்கப்பட்ட நிலையில், ராஜர்காட்டின் வளமிக்க குளம், குட்டைகள், விவசாய நிலங்கள் அனைத்தும் நிரவப்பட்டு அடுக்குமாடிக் கட்டிடங்கள் கட்டப்பட்டன. சி.பி.எம்., காங்கிரசு, திரிணாமுல் கட்சியினர் இவற்றில் முதலீடு செய்து கொழுத்த லாபமடைந்தனர்.  மாநகராட்சி விதிமுறைகளில் தில்லுமுல்லுகள் செய்து பல கோடிகள் சுருட்டப்பட்டன. புற்றீசல் போல கேளிக்கை பூங்காக்கள் பெருகின. விபச்சாரமும், குடியும் கூத்தும் தலைவிரித்தாடின. இப்படிப்பட்ட கேளிக்கை விடுதிகளில் ஒன்று, சி.பி.எம். நாடாளுமன்ற உறுப்பினரும் விளையாட்டு வீராங்கனையுமான  ஜோயிதிர்மயி சிக்தரின் கணவருக்குச் சொந்தமானதாகும். வேதிக் வில்லேஜ் கேளிக்கை விடுதியே சி.பி.எம்.மின் கூட்டாளியான மார்வாரி கமல் காந்தியின் நிலத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளது.

ராஜர்காட்டில் இப்பொழுது மீதமிருக்கும் விவசாய நிலங்களையும் அபகரிப்பதற்காக இன்னொரு திட்டம் அங்கு செயல்படுத்தப்பட உள்ளது. பாங்கோட் ராஜர்காட் பகுதி மேம்பாட்டு நிறுவனம் (BRADA-Bhangot Rajargat Area Development Authority) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் செயலாளராக இருப்பவர் சி.பி.எம். சட்டமன்ற உறுப்பினரான ராபின் மண்டல். இந்தத் திட்டத்திற்காக ஒரு காதாவிற்கு ரூபா எட்டாயிரம் முதல் பத்தாயிரம் வரை கொடுத்து வாங்கியுள்ள ராபின் மண்டல் கும்பல், அதனை ரூபா 2 லட்சம் முதல் 6 லட்சம் வரை விற்றுக் கொள்ளை லாபம் அடைந்துள்ளது.

சி.பி.எம்.-மின் நில மோசடி சந்தி சிரிக்கத் தொடங்கியவுடன், அந்தக் கட்சியின் மாநிலக் குழு தலையிட்டு ராஜர்காட் திட்டத்தைக் கைவிடச் சொல்லி அறிவுரை கூறியுள்ளது. சி.பி.எம். அரசோ தேனெடுத்த கையால் புறங்கையை நக்கிப் பழகிவிட்டது. எனவே, இந்தத் திட்டத்தைக் கைவிடத் தயங்கியது. சி.பி.எம். கட்சியின்  நிலம் மற்றும் நிலச் சீரமைப்புத் துறை அமைச்சரான அப்துர் ரெசாக் மொல்லா பின்வருமாறு திமிராக கூறினார்: “பொழுதுபோக்கு மையத்திற்கும், கேளிக்கை விடுதிக்கும் நிலம் கொடுப்பதில் என்ன குறைந்துவிடப் போகிறது?” என்று.  அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழுவில் உள்ள சீத்தாரம் யெச்சூரியோ “விப்ரோ, இன்போசிஸ் ஆகிய நிறுவனங்களுக்கு ராஜர்காட்டில் நிலம் ஒதுக்குவதை நிறுத்தக் கூடாது” என்கிறார்.

மம்தா பானர்ஜி ஆரம்பத்திலிருந்தே இந்த பிரச்சினையில் ஆழ்ந்த மௌனம் சாதித்தார். பின்னர் விவசாயிகளின் அதிருப்தியைத் தொடர்ந்து, எதிர்ப்பது போலப் பாசாங்கு செய்தார். இப்பொழுது சி.பி.எம். அரசே இந்தத் திட்டத்தைக் கைவிட்டு பின்வாங்கும் நிலையில், நிலங்களை மீண்டும் கைப்பற்றி விவசாயம் செய்யச் சொல்லி விவசாயிகளிடம் சவடால் அடிக்கிறார். ஆனால், விவசாயிகளால் மீண்டும் விவசாயம் செய்ய இயலாது. ஒருவனைக் குடிபோதையில் தள்ளிவிட்டு மீண்டும் குடிக்காதே என்று சொல்லுவது போல, நவீன நகரத்தை உருவாக்கி விவசாயிகளை உதிரிப் பாட்டாளிகளாக மாற்றிவிட்டு, அத்தகைய கலாச்சாரத்தில் தள்ளிவிட்டு, இப்பொழுது மீண்டும் விவசாயம் செய்யச் சொன்னால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.  பழைய வாழ்க்கைக்கும், புதிய வாழ்க்கைக்கும் இடையிலான திரிசங்கு நிலையில் விவசாயிகள் சிக்கியுள்ளனர்.

சி.பி.எம். தலைவர்கள் நேரடியாகவே ராஜர்காட் நில மோசடியில் ஈடுபட்டு அம்பலமாகியுள்ளனர். கட்சியோ இந்த மோசடியில் ஈடுபட்டவர்களைத் தண்டிப்பதற்குத் தயாராக இல்லை. ஊழல் பெருச்சாளிகளான உள்ளூர் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், மே.வங்கத்தில் சி.பி.எம். கட்சியே காணாமல் போய்விடும். எனவேதான், விசாரணை ஏதுமின்றி திட்டத்தைக் கைவிடச் சொல்லி சாமர்த்தியமாக களவாணித்தனத்தை மறைப்பதற்குக் கற்றுத் தருகிறது. இந்த ஞானோதயம் கூட சி.பி.எம். கட்சிக்கு நேர்மையின் மீதான தாக்கத்தின் அடிப்படையில் தோன்றவில்லை. ஏற்கெனவே நகர்ப்புறங்களில் கட்சிக்கு ஆதரவாக இருந்து வந்த நடுத்தர வர்க்கம், அறிவுஜீவிகள், தொழிலாளி வர்க்கம் போன்றவை, நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியைக் கைகழுவி விட்டன. அடுத்து வரப் போகும் சட்டமன்றத் தேர்தலில் விவசாயி வர்க்கமும் கைகழுவி விட்டதென்றால், மண்ணைக் கவ்வ வேண்டியதுதான் எனும் அச்சத்தின் காரணமாகவே இந்த ஞானோதயமும் வந்துள்ளது.

சி.பி.எம். கட்சி, ஊழல் பெருச்சாளிகள், கிரிமினல்களின் கூடாரமாக மாறிவெகுகாலமாகிவிட்டது. அது, மக்களையே ஒடுக்கும் பாசிச கும்பலாக  மாறி விட்டது. இப்படிச் சொன்னால், சி.பி.எம். கட்சியிலுள்ள அணிகளுக்கும் அக்கட்சியின் மீது இன்னமும் நம்பிக்கை வைத்துள்ள பலருக்கும் சந்தேகமும் வெறுப்பும் ஆத்திரமும் ஏற்படலாம். ஊழலையும் மோசடியையும் எதிர்த்துப் போராட உறுதி கொண்டவர்களும், புரட்சியின் மீது பற்று கொண்டவர்களும்  ராஜர்கட் பகுதிக்குப் போய்ப் பாருங்கள். அல்லது, சி.பி.எம். தலைவர்களுக்கு எப்படி இவ்வளவு சொத்து வந்தது,  உள்ளூர் தலைவர்களின் ஊழல் சந்தி சிரித்த பின்னரும் விசாரணை நடத்தாதது ஏன் என்ற கேள்விகளைக் கட்சித் தலைமையிடம் கேட்டுப் பாருங்கள். எச்சரிக்கை! கமல்பத்ராவுக்கு நேர்ந்த கதி உங்களுக்கும் ஏற்படலாம்.

-புதிய ஜனநாயகம், அக்டோபர்’ 2009

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2009  மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள்

கல்லூரி முதல்வரை விரட்டுவோம்!” -மாணவிகளின் போர்க்கோலம்!

கல்லூரி முதல்வரை விரட்டுவோம்!” -மாணவிகளின் போர்க்கோலம்!

கல்லூரி முதல்வரை விரட்டுவோம்!” -மாணவிகளின் போர்க்கோலம்!

கல்லூரி முதல்வரை விரட்டுவோம்!” -மாணவிகளின் போர்க்கோலம்!

சென்னை-கிண்டி அருகே செயல்பட்டு வருகிறது, செல்லம்மாள் மகளிர் கல்லூரி. பச்சையப்பன் அறக்கட்டளைக்குட்பட்ட இக்கல்லூரியில், சுமார் மூவாயிரம் மாணவிகள் பயின்று வருகின்றனர்.

கடந்த ஆகஸ்டு 26-ஆம் தேதியன்று துவங்கி, வகுப்பு புறக்கணிப்பு, அரசியல் கட்சி பிரமுகர்களை சந்தித்து மனு கொடுப்பது, கல்வி இயக்குனரிடம் முறையிடுவது, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது- என பல கட்டங்களை கடந்த பின்னரும் தொடர்ந்து வருகிறது, இக்கல்லூரி மாணவிகளின் போராட்டம்!

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, கடந்த 10 மாதங்களுக்கு முன்பாக வேறு கல்லூரிக்கு மாற்றப்பட்டிருந்த  செல்லம்மாள் கல்லூரியின் முன்னாள் முதல்வர், ‘ஊழல்ராணி’ ரமாராணியை மீண்டும் இதே கல்லூரிக்கு முதல்வராக நியமித்திருக்கிறது, பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகம்.

நன்கொடை என்ற பெயரில் கட்டில், மெத்தை, பீரோ, மின்விசிறி என்று (தாய்வீட்டு சீதனத்தை!) மாணவிகளிடம் மிரட்டிப் பறித்து, தன் வீட்டிற்கு எடுத்து செல்வது; இவரது இலஞ்ச ஊழலை எதிர்க்கும் மாணவிகளை மிரட்டுவது, பழிவாங்குவது – என கல்லூரிக்குள் காட்டுத் தர்பாரே நடத்தியவர்தான், இந்த ரமாராணி!

தனியாருக்கு நிகராக அரசு உதவிபெறும் கல்லூரிகளில் நடக்கும் அட்டூழியங்கள், அடக்குமுறைகள், பகற்கொள்ளை-வழிப்பறிகளுக்கு ஒரு வகைமாதிரிதான் இக்கல்லூரியும் அதன் ஊழல் முதல்வரும்!

ஆக, இத்தகைய ஊழல் பேர்வழி ரமாராணியை தமது கல்லூரியின் முதல்வராக நியமிக்கக் கூடாது; இலஞ்ச ஊழலும் கட்டாய நன்கொடையும் எந்தக் கல்லூரியிலும் தொடரக்கூடாது என்பதுதான் போராடும் மாணவிகளின் கோரிக்கை.

இம்மாணவிகளின் போராட்டத்தின் நியாயத்தையும், இவர்கள் காட்டும் முன்முயற்சியையும் முனைப்பையும் உணர்ந்து, களமிறங்கியது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி. கல்லூரி வளாகத்துக்குள்ளே முடங்கிக் கிடந்த இப்பிரச்சினையை வீதிக்கு கொண்டு வந்தது. “ஊழல் பெருச்சாளி ரமாராணியை கல்லூரியை விட்டே விரட்டியடிப்போம்!” என்ற தலைப்பிட்ட சுவரொட்டிகள் நகரெங்கும் பளிச்சிட்டன.

பச்சையப்பன் கல்லூரியில் செயல்படும் பு.மா.இ.மு.வின் கிளை சார்பில், இம்மாணவிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக அக்கல்லூரி மாணவர்களை அணிதிரட்டி செப்-3 அன்று மறியல் போராட்டத்தை நடத்தினர்.

இதனைச் சற்றும் எதிர்பார்க்காத போலீசு, ஆத்திரமுற்று தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தது. போராட்டத்தை முன்னின்று நடத்திய பு.மா.இ.மு.வின் பச்சையப்பன் கல்லூரி கிளைச் செயலர் ஏழுமலை உள்ளிட்ட இருவரைக் கைது செய்து சிறையிலடைக்க எத்தனித்தது!

இத்தகவல் அறிந்த நூற்றுக்கு மேற்பட்ட செல்லம்மாள் கல்லூரி மாணவிகள், வகுப்புகளை புறக்கணித்துவிட்டு, போலீசு நிலையம் முன்பு குவிந்தனர். “எமக்காகப் போராடிய மாணவர்களை விடுதலை செய்! இல்லையேல் எம்மையும் கைது செய்!” எனக் கோரி போலீசு நிலையத்தை முற்றுகையிட்டனர். வேறுவழியின்றி, அம்மாணவர்களை அன்று மாலையே விடுதலை செய்தது போலீசு!

நகரெங்கும் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளையும், இம்மாணவிகளுக்கு ஆதரவாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் மறியல் போராட்டத்தையும் கண்டு அதிர்ச்சியுற்ற மாவட்ட நிர்வாகம், கல்லூரி முன்பு போலீசுப் படையைக் குவித்தது. குற்றவாளிகளைப் போல் மாணவிகளைக் கண்காணித்தது. கல்லூரி நிர்வாகமோ, போராட்டத்தைத் தூண்டும் ‘அன்னிய சக்திகளை’ அடையாளம் காட்டும்படி மாணவிகளை மிரட்டியது!

இத்தகைய மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சாத முன்னணியாளர்கள், பு.மா.இ.மு.வின் வழிகாட்டலில், அனைத்து மாணவிகளிடமும் தொடர்ந்து சந்தித்து பேசி நம்பிக்கையூட்டினர். அடுத்தகட்டப் போராட்டம் குறித்து விவாதித்தனர்.

இதனைதொடர்ந்து, செப்-8 அன்று நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகளை அணிதிரட்டிக் கொண்டு கல்லூரி கல்வி இயக்குனரை சந்தித்து முறையிடச் சென்றனர். பெருந்திரளாக மாணவிகள் திரண்டு வருவதைக் கண்டு அரண்டுபோன கல்லூரி கல்வி இயக்குனர், அலுவலகக் கோப்புகளை அப்படியே போட்டுவிட்டு பின்வாசல் வழியே அப்போதுதான் ஓடியிருந்தார். அவரைச் சந்திக்காமல், இங்கிருந்து செல்வதில்லை என உறுதியாய் நின்றனர் மாணவிகள். வேறுவழியின்றி, அவருக்குப் பதிலாக நிதித்துறை இணை இயக்குனர் மனுவைப் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக எழுதிக் கொடுத்தார்.

இம்மனு மீதான விசாரணைக்காக ஒருவாரம் காத்திருந்தனர். நடவடிக்கை எதுவுமில்லை. வீதியில் இறங்காமல் இதற்கோர் விடிவுப் பிறக்காது என்பதையுணர்ந்த மாணவிகள், கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தத் திட்டமிட்டனர்.

அதன்படி, செப்-16 அன்று மெமோரியல் அரங்கம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாய் நகரெங்கும் சுவரொட்டிகளை ஒட்டியிருந்தனர். இதனைக் கண்டு பீதியடைந்த கல்லூரி நிர்வாகம், செப். 15-ந் தேதி மாலை 5மணியளவில் திடீரென்று நாளை அனைவருக்கும் “செமினார்” என்றும், அதில் கலந்து கொள்ளாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மிரட்டியது!

கல்லூரிக்கு முன் முகாமிட்டிருந்த போலீசும் தன்பங்குக்கு  கல்லூரியிலிருந்து ஆர்ப்பாட்டத்துக்குக் கிளம்பிய மாணவிகளைத் தடுத்து நிறுத்த முனைந்தது. மாணவிகளோ “போலீசு கமிசனரிடம் அனுமதி வாங்கி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இதனைத் தடுக்க உங்களுக்கு அதிகாரம் இல்லை” என பதிலடி கொடுத்து விட்டு அணி அணியாய் கிளம்பினர், ஆர்ப்பாட்டத்திற்கு!

சென்னை பு.மா.இ.மு. மாவட்டச் செயலர் தோழர் வ.கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பு.மா.இ.மு.வின் மாவட்ட இணைச்செயலர் தோழர் த.கணேசன் மற்றும் போராட்டத்தை முன்னின்று நடத்திய முன்னணியாளர்கள் கண்டன உரையாற்றினர். பச்சையப்பன் கல்லூரி, கந்தசாமி நாயுடு கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டு எண்ணூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அணிதிரண்டு கண்டன முழக்கமிட்டு நகரையே அதிர வைத்தனர்.

‘‘ஊழல்பெருச்சாளி ரமாராணியை கல்லூரியை விட்டு விரட்டும் வரை தமது போராட்டம் தொடரும்” என அறிவித்துள்ள இம்மாணவிகள், அடுத்தக் கட்டப் போராட்டத்திற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

-புதிய ஜனநாயகம், அக்டோபர்’ 2009

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2009  மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள்

திருப்பதி ஏழுமலையானை கைது செய்!

105

திருப்பதி ஏழுமலையானை கைது செய்!

“சென்னையைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் எஸ்.ஜீவன் 12.10.2009 அன்று திருப்பதி ஏழுமலையான் கோவில் புறக்காவல் நிலையம் அருகே விஷம் அருந்திய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது சட்டைப்பையில் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி எழுதிய கடிதத்தில்..’ வெங்கடாஜலபதி முன்பாக இறக்க வேண்டும் என்று விரும்பி இந்த முடிவை எடுத்தேன். எனது சாவுக்கு யாரும் பொறுப்பல்ல. எனது மரணத்தால் பெற்றோரும் உறவினர்களும் அழவேண்டாம். மன உளைச்சல் காரணமாக இந்த முடிவை தேடிக்கொண்டேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.”

–          இது 13.10.2009 தினத்தந்தியில் வெளிவந்த ஒரு செய்தித் துணுக்கு.

ஏழை, பணக்காரன் என்ற வர்க்க வேறுபாடு மனிதனுக்கு மட்டுமல்ல மனிதன் உருவாக்கிய கடவுளர்களிடமும் உண்டு என்பதற்கு விசுவரூப சாட்சி திருப்பதி வெங்கடாசலபதி. தஞ்சை மாவட்டத்தின் பிரம்மாண்டமான சிவன் கோவில்களெல்லாம் வௌவால் நாற்றத்தில் ஆளில்லாமல் நாறும் போது திருப்பதி ஏழுமலையான் மட்டும் தங்கத்தில்தான் குளிப்பார். இந்தியாவின் இருபதாம் நூற்றாண்டில் சாதாரண நிலையிலிருந்து பில்லியனர் நிலைக்கு உயர்ந்தவர்கள் இரண்டுபேர். ஒருவர் அம்பானி, மற்றொருவர் வெங்கடாசலபதி. அம்பானி மோசடி செய்து பில்லியனரானார் என்றால் மோசடி செய்த பணக்காரர்களின் கருப்பு நோட்டை வைத்து பில்லியனாரானவர் ஏழுமலையான்.

முனி, இசக்கி, சுடலைமாடன், மதுரைவீரன், முத்தாரம்மன் என நாட்டுப்புறத் தெய்வங்களை வணங்கும் உழைக்கும் மக்கள் தமது காணிக்கையாக அவர்களது வாழ்வில் கிடைக்கும் பொருட்களை படைப்பார்கள். கிடாவை வெட்டினால் அது படைக்கப்பட்டு பலருக்கும் உணவாய் போய்ச்சேரும். எதுவும் வீணாவதில்லை.

நகர்ப்புறத்து நடுத்தரவர்க்கம், மேட்டுக்குடியின் தெய்வமான ஏழுமைலையானுக்கு மட்டும் தங்கமும், புதுமணம் மாறாத கரன்சி நோட்டுக்களும்தான் பிடிக்கும். இப்போது ஒரு உயிரையே காணிக்கையாக ஏற்றுக்கொண்டிருக்கிறார். மன உளைச்சலால் அவதியுற்ற ஜீவன் என்ற மாணவன் தனக்கு பிடித்த கடவுளின் சன்னதியில் வைத்தே உயிரை துறந்திருக்கிறான். பட்டை நாமம் போட்டு கண்மூடிய நிலையில் இருந்தாலும் முழு உலகையும் விழிப்புடன் ஆளுவதாக நம்பப்படும் வெங்கடாசலபதி இந்த மாணவனின் உயிரைப் போய் ஒரு காணிக்கையாக ஏன் பறித்துக் கொண்டார் என்பது நம் கேள்வி.

முடியைத் துறப்பதிலிருந்து, 24 காரட் சவரன், அமெரிக்க டாலர் என விதவிதமாக காணிக்கைகளை கொட்டும் பக்தர்கள் பதிலுக்கு தங்களுக்கு நடக்கவேண்டிய, அல்லது வேண்டி நடந்த நிகழ்வுகளுக்காக ஏழுமலையானுடன் பிசினஸ் ஒப்பந்தம் போட்டுக் கொள்வது வழக்கம். ஆனால் ஜீவன் மட்டும் தனது உயிரைக் காணிக்கையாக அளித்து பதிலுக்கு ஏதும் பெறாமலேயே இறந்து விட்டார். அல்லது அவர் வேண்டியது வெங்கடாசலபதியின் தயவில் நடப்பதாக இருந்தாலும் அதைப் பார்ப்பதற்கு அவரிடம் உயிரில்லை. தனது மகனின் உயிரை காணிக்கையாக பறித்துக் கொண்ட அந்த இறைவனிடம் ஜீவனின் பெற்றோர் என்ன கோரிக்கை வைக்க முடியும்? அவர்களைப் பொறுத்தவரை திருமலை என்பது இனி புண்ணியத் தலமல்ல, மகனைப் பறிகொடுத்த இழவுத் தலம்.

ஜீவன் தனது ஜீவனையே காணிக்கையாக கொடுத்திருந்தாலும் அந்த இறந்த உடல் ஏழுமலையானின் சன்னதிக்கு செல்லப்போவதில்லை. திருப்பதியின் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களால் அறுத்து பிரதேப் பரிசோதனை செய்யப்படும் அவரது உடல் சென்னையின் ஏதோ ஒரு சுடுகாட்டில் சாம்பலாகப் போகிறது. லவுகீக சமாச்சாரங்களை பேஷாக எடுத்துக் கொள்ளும் திருமலையான், ஜீவனின் உடலையோ அல்லது இறைப்பற்றாளர்கள் நம்பும் அந்த உடலுக்குள் இருக்கும் ஆன்மாவையோ சட்டை செய்யப் போவதில்லை. விஷம் பாய்ந்த அந்த உடலை விட கருப்புப் பணமே இந்த காஸ்ட்லியான கடவுளின் விருப்ப காணிக்கை. கரன்சிக்கும், தங்கத்துக்கும் மத்தியில் அந்த மனித உயிருக்கு எந்த மதிப்பும் இல்லை.

ஜீவனின் மரணத்தை வெளியிட்டிருக்கும் தினத்தந்தியில் மற்றொரு செய்தியும் வந்திருக்கிறது. ஏழுமலையானை தரிசிப்பதற்கு நாடு முழுவதும் தினசரி பல்லாயிரம் பேர் வருகிறார்கள். தர்ம தரிசனம் எனப்படும் இலவச தரிசனத்திற்கு பல மணிநேரம் வரிசையில் நின்றால்தான் சாமி தரிசனம் செய்ய முடியும். அதிகாலை சுப்ரபாத சேவையில் தொடங்கி தோமாலா சேவை, அர்ச்சனா, ஆனந்த தரிசனம் என்று பல்வேறு தரிசனங்களுக்கு பக்தர்கள் கட்டணம் செலுத்தி வழிபடுகிறார்கள். இதற்கான சுதர்சன டோக்கன் நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறதாம். 15,000 பேர்கள் தினசரி சுதர்சன டோக்கன் பெற்று வழிபடுகிறார்கள்.

இப்போது இந்தக் கட்டண முறைகளை ஒழித்து விட்டு ‘சீக்கிர தரிசனம்’ என்று 300 ரூபாய்க்கு அறிமுகப்படுத்துகிறார்களாம். திருமலையான் கவலைப்படாத ஏழைகள் தர்மதரிசனத்தில் புழுங்கும் போது பணமுள்ளவர்களுக்கு மட்டும் சீக்கிர தரிசனம். இப்படி வழிபாட்டிலேயே பணமுள்ளவனுக்குத்தான் முன்னுரிமை என்று அப்பட்டமான பேதத்தை கடைபிடிக்கும் ஏழுமலையானின் சன்னிதியில் ஜீவன் ஏன் உயிரை விட்டார்?

தென்னிந்தியாவில் இறைவழிபாட்டை ஒரு நவீன பாணியாக்கிய இரண்டு இடங்களில் திருப்பதிக்கும், சபரிமலைக்கும் முக்கிய இடமுண்டு. சபரிமலையில் கூட சிலமாதங்கள் மட்டும்தான் சீசன் என்றால் திருப்பதியிலோ தினசரி சீசன்தான். இந்தியாவில் தாராளமயம் வளர்ந்து வந்த அதே காலத்தில் திருமலையானும் செழிப்பாக வளர்ந்து வந்தார். ஆந்திராவில் நிலவும் நிலவுடமை பிற்போக்குத்தனத்தின் உரிமையாளர்கள் அத்தனை பேருக்கும் ஏழுமலையான்தான் ஸ்பான்சர். பதவி இழந்த சந்திரபாபு நாயுடுவோ, அவருக்கு வழி ஏற்படுத்திய ராமாராவோ, நேற்று கட்சி ஆரம்பித்த சிரஞ்சீவியோ அத்தனை பேரும் தமது அரசியல் வாழ்வில் வெங்கடாசலபதியை தொழுது விட்டே பணிகளை ஆரம்பிப்பார்கள்.

வெள்ளத்தில் மூழ்கித் தவிக்கும் ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்து கிராம மக்கள் இன்னும் நிவாரண உதவி கிடைக்காமல் அவதிப்படும் அந்த மக்கள் பார்வையிட வரும் முதல்வர் ரோசய்யாவின் கார்மீது கல்வீசி தமது ஆத்திரத்தை காண்பித்தார்கள். இப்படி புறநிலையான வாழ்வில் அதிகாரம் செலுத்துவோர் மீது வெறுப்புறும் மக்கள் அதே அதிகாரத்தில் உள்ளவர்கள் பிரலப்படுத்திய ஏழுமலையான்மீது மட்டும் வெறுப்பு கொள்வதில்லை. இது ஆந்திராவுக்கு மட்டுமல்ல. தென்னிந்தியாவில் இருக்கும் பெரும்பான்மை மக்களின் சர்வரோக நிவாரணியாக வெங்கடாசலபதி மாறிவிட்டார். வாழ்வின் வலிகளை பட்டுத்தெரிந்து கொண்டாலும் அதை விழிப்புணர்வாக மாறும் வளர்ச்சியை அழிக்கும் வேலையை வெங்கடாசலபதி செய்து வருகிறார்.

திருப்பதியில் டன் கணக்கில் குவிக்கபடும் தலைமுடிகள் சவுரியாக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு பலகோடி அன்னியச்செலவாணியை வழங்குகிறதாம். இந்த ஏற்றுமதிக்காக மொட்டையடிக்கும் மக்கள் தமது முடியோடு மூளையையும் சேர்த்துத்தான் இழக்கிறார்கள். சின்னப் பிரச்சினையோ, பெரிய பிரச்சினையோ எல்லாவற்றுக்கும் திருப்பதியும், அங்கு அடிக்கப்படும் மொட்டையும் நிவராணம் என்றால் அந்த நாடு உருப்படுமா? சில ஆயிரம் கந்து வட்டி கடனை அடைக்கமுடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் இருக்கும் ஆந்திராவில் ஒரு பணக்காரத்தெய்வம் மட்டும் பலகோடிகளை தினசரி வருமானமாகப் பெறுகிறது என்றால் தற்கொலை செய்து கொள்ளும் உயிரின் மதிப்பு என்ன?

ஜீவனின் மன உளைச்சலுக்கான காரணங்கள் என்ன? காதலா, படிப்பா, நட்பா, பாலியல் பிரச்சினையா எதுவென்று நமக்குத் தெரியவில்லை. ஆனால் தன்னுயிரை துறப்பதற்கு அவர் தெரிவு செய்த இடத்தை வைத்து அவரது ஆளுமையை நாம் யூகிக்க முடியும்.

இந்த உலகில் நமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி உண்டு என இறைவனை அழுத்தமாக நம்பும் ஆத்திகர்கள் இந்த உலகின் சரி, தவறுகளெல்லாம் கடவுள் மேலுள்ள பயத்தினாலே ஒரு ஒழுங்கைப் பெறுகின்றன, இந்த நம்பிக்கை இல்லையென்றால் மக்கள் தறுதலையாக மாறிவிடுவார்கள் என வாதம் செய்வார்கள். இப்படி இல்லாத ஒன்றினை வைத்துத்தான் இந்த உலகம் ஏதோ ஒரு ஒழுங்கில் இயங்குகிறதா? நாத்திகம் பேசுவோர் எல்லாம் தாறுமாறாக வாழக்கூடியவர்களா என்ன?

ஆத்திகம் ஆழமாக வேர்விட்டிருக்கும் மனிதர்கள் தமது வாழ்வின் பிரச்சினைகளுக்கு இறைவனிடம் சரணடைகிறார்கள். நாத்திகர்களோ அத்தகைய பிரச்சினைகளை தமது அறிவின் துணை கொண்டு தீர்க்க முனைகிறார்கள். பொதுவுடைமைத் தத்துவத்தை நம்பும் நாத்திகர்களோ அந்த பிரச்சனைகளின் சமூகவேரை கண்டறிந்து அகற்ற முனைகிறார்கள்.

இவ்வகையில் ஆத்திகம் ஒரு மனிதனின் முன்முயற்சி, போராட்டம், முனைப்பு, அத்தனையையும் ரத்து செய்கிறது. புறநிலைமையாக வாழ்க்கை உண்மைகளை கற்றுத் தந்தாலும் அவர்கள் அவற்றை ஆத்திகத்தின் வழியேதான் பார்க்கிறார்கள். இத்தகைய நம்பிக்கை எப்போதும் நல்ல செய்திகளை மட்டும் கொண்டு வருவதில்லை. ஜீவனின் பிரச்சினைகளை அவர் உயிர் வாழ்ந்து சந்திக்கும் வல்லமையை அவரது இறைபக்தி வழங்கிடவில்லை. மாறாக அதற்கு புறமுதுகிட்டு ஓடும் கோழமையைத்தான்  கற்றுக் கொடுத்திருக்கிறது.

அந்த வகையில் ஜீவனது தற்கொலையை தூண்டிய குற்றத்திற்காக வெங்கடாசலபதி கைது செய்யப்படவேண்டும். அவர் மீது கொலை முயற்சிகளின் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படவேண்டும். இந்த தற்கொலைக்கு தூண்டியவர் என்ற முறையில் திருப்பதி ஏழுமலையான்தான் இதற்குப் பொறுப்பு. இது அவர் செய்த கொலை!

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

……………………………..

தொடர்புடைய பதிவுகள்

சாமியே ஐயப்பா மகர ஜோதி பொய்யப்பா !

கடவுளைக் கைது செய்த விஞ்ஞானிகள்!

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2009 மின்னிதழ் (PDF) – டவுன்லோட்

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2009

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2009 இதழ் மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கட்டுரைகள்

  • செல்லம்மாள் மகளிர் கல்லூரி முதல்வர் “ஊழல் பெருச்சாளி ரமாராணியை கல்லூரியை விட்டே விரட்டுவோம்!” -மாணவிகளின் போர்க்கோலம்!
  • பிரிக்கால் தொழிலாளர் போராட்டம்: வன்முறையாளர்கள், பயங்கரவாதிக்கள் யார்?
  • மாவட்ட ஆட்சியரை நடுத்தெருவுக்கு இழுத்து வந்த மாணவர் போராட்டம்!
  • “குடியாட்சியின் உயரதிகாரத்தை நிறுவுவதே எமது முக்கிய கடமை” நேபாள் மாவோயிஸ்ட் தோழர் பசந்தாவின் நேர்காணல்
  • போலி மோதல் கொலைகள் அரசு பயங்கரவாதமே!
  • கோபாட் காந்தி கைது: சட்டவிரோதமானது! மனித உரிமைகளுக்கு எதிரானது!
  • “தில்லை கோவில் மக்கள் சொத்து! தீட்சிதர் சொத்தல்ல!!” தீட்சிதர்-சு.சுவாமி கும்பலைக் கலங்கடித்த உயர்நீதிமன்றத் தீர்ப்பு!
  • சி.பி.எம். இன் நில அபகரிப்பு: திருட்டுக் கும்பலின் கையில் செங்கொடி எதற்கு?
  • பெரியாரியக்கத்தின் முதுபெரும் தொண்டர் நாத்திகம் இராமசாமி அவர்களுக்கு அஞ்சலி!
  • விடுதலைச்சிறுத்தைகளின் ரவுடித்தனம்-கொலைவெறித் தாக்குதல்
  • காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்: கூலித் தொழிலாளர்களைப் பலியிட்டுக் கொண்டாட்டமா?
  • “ஆயுத வழிபாடு விடுதலையைத் தராது!” ஈழத்துத் தோழர் சி.சிவசேகரத்தின் நேர்காணல்!
  • “ஆவின் பாலை மலிவு விலையில் வழங்கு” -பால் விலை உயர்வுக்கெதிராக பெ.வி.மு.வின் ஆர்ப்பாட்டம்.
  • முதலாளித்துவ இலாபவெறி: பன்றிக் காய்ச்சலைவிட கொடிய கிருமி!
  • கள்ளச்சாராயத்திற்குக் காவடி! அதை எதிர்த்தவருக்கு குண்டாந்தடி!! -வீராணம் போலீசின் திருவிளையாடல்கள் !!!
  • அணுகுண்டு சோதனைகள் புஸ்வாணமானதா?
  • ஒன்பது ஆண்டுகால இழுத்தடிப்புக்கு முற்றுப்புள்ளி! அடிபணிந்தது அதிகார வர்க்கம்!!
  • காங்கிரசின் ‘சிக்கனம்’ ஊரை ஏய்க்கும் வக்கிரம்!

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2009 இதழ் மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 7 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் ( RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

vote-012

…..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள்

யார் பத்தினி? ‘மாமா’க்கள் மோதல்!

79

யார் பத்தினி - மாமாக்கள் லடாய்!

ரஜினிகாந்த் கூற்றுப்படி இரண்டு வேளை உணவுக்காக விபச்சாரம் செய்த புவனேஸ்வரியை கைது செய்தது காவல்துறை.இதைன்பிறகு அவர் குறிப்பிட்டதாக கூறி சில நடிகைகளின் விலை விவரங்களையும் அவர்கள் புகைப்படங்களையும் வெளியிட்டது தினமலர். தொடர்ந்து செய்தித்தாள் படிப்பவர்களுக்கு இந்த செய்தி புதியதாக இருக்காது, செய்தியில் உள்ள புதிய தகவல் அவர்தம் கட்டணவிவரம்தான். பெயரை மட்டும் குறிப்பிடாமல் இந்த செய்தி எல்லா பத்திரிக்கைகளிலும் வந்தபடிதான் இருக்கிறது. ஸ்ரீபிரியா தன்னை  ஒரு நடிகர் ஏமாற்றியதற்காக தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தபோது பாராமுகமாய் இருந்துவிட்டதைப்போல இன்னொரு வரலாற்றுத் தவறை செய்துவிடக்கூடாது என முடிவு செய்துவிட்ட நடிகர்சங்கம் உடனடியாக உலக நாயகன்.. மன்னிக்கவும் உலக சாதனையாளர், முதல்வர் கலைஞரை சந்தித்தார்கள். திரௌபதிக்கு சேலை கொடுத்த கிருஷ்ண பரமாத்மாவைப்போல நவயுக திரௌபதிகளுக்கு வன்கொடுமை சட்டத்தைத்தந்து அருள்பாலித்தார் கருணாநிதி.

சத்துணவு பணியாளர்கள் மாதக்கணக்கில் போராடியும் பார்க்க முடியாத முதல்வருக்கு நடிகர்களுக்கென ஒதுக்க எப்போதும் நேரமிருக்கிறது. அவர்கள் முறையிட்டவுடன் தினமலர் செய்தியாசிரியர் கைது செய்யப்படுகிறார். நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகு ஷகிலா உள்ளிட்ட நடிகர் நடிகைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் அவர் தவறவில்லை.

இதனிடையே நடந்த நடிகர்சங்க கூட்டத்தில் தங்கள் சுயரூபத்தை காட்டினார்கள் நடிகர்கள். அவர்கள் பேசியதைப்பார்த்தால் மறுநாள் தினமலர் பத்திரிக்கையே இருக்காதோ என சந்தேகம் பலருக்கு வந்திருக்கும். ஒரு விருதுக்காக ஊரையே எழுதித்தரும் பட்டத்துராஜா ஒருவர் கூப்பிடுதூரத்தில் இருக்கும்போது அவர்களுக்கு அப்படிச்செய்ய அவசியமிருக்காது.

ஜூன் மாதம் ஆனந்த விகடனுக்கு தான் அளித்த பேட்டியில் இலங்கைப் பிரச்சினையை பற்றி ‘ஆஃப் த ரெக்கார்ட்’ ஆக தன் கருத்துக்களை கவனமாக பேசிய சத்யராஜ் இந்த முறை அப்படியெல்லாம் பயப்படவில்லை, தினமலர் பொறுப்பாசிரியர் ஒரு வேசிமகன் என யாரெல்லாம் ஒத்துக்கொள்கிறீர்கள் என் கேள்வி எழுப்பினார். வேசிமகனுகான அடையாளங்களை சுலபமாக கண்டறியும் திறன் கொண்ட திரையுலகம் ஒட்டுமொத்தமாக கை உயர்த்தியது.

தான் பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய எந்திரம் செய்யும்படி சொல்லும் காட்சி வைத்ததால்தான் சென்னை மாநகராட்சி அப்படி ஒரு கருவி வாங்கியதாக உளறிய விவேக் எனும் கோமாளி இன்னும் ஒருபடி மேலே போய் பத்திரிக்கையாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படம் கேட்டார். சாதாரணமாகவே நடிகைகளை உள்ளடையுடன் ஆடவிடும் துறையில் இருப்பவரின் புத்தி பத்திரிக்கையாளர்களின் குடும்ப பெண்களுக்கு கிராபிக்ஸில் உள்ளாடை அணிவிக்கும் வகையில் சிந்திப்பதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

நடிகர்கள் உணர்ச்சிவயப்பட்டெல்லாம் அப்படிப்பேசவில்லை, அவர்கள் இயல்பே அப்படிதான் இல்லாவிட்டால் சக நடிகனுக்கு தனது படத்து வசனத்தின் மூலம் சவால் விட மாட்டார்கள். நடிகர்களின் யோக்கியதை மக்கள் எல்லோரும் அறிந்ததுதான், தாம் எவ்வளவு தூரம் கேவலமானவர்கள் என மக்களுக்கு தெரிவிக்கும் ஒரு வாய்ப்பாக இந்த கூட்டத்தை பயன்படுத்திக்கொண்டார்கள். தனது கட் அவுட்டுக்கு தன் செலவில் ( அல்லது தன் அப்பா செலவில்) பாலாபிசேகம் செய்யும் இவர்கள் நியாயமான முறையில் கோரிக்கை வைக்கமாட்டார்கள். அதன் வெளிப்பாடுதான் முதல்வரை சந்தித்து முறையிடுவது.

நடிகையை அவமானப்படுத்தி செய்தி வெளியிட்டதற்காக நடிகர்சங்கம் போராடுவதுதான் நமக்கு நெருடலாக இருக்கிறது. தமிழாசிரியர்களை இவர்கள் அவமானப்படுத்திய படங்கள் எத்தனை எத்தனை ?. கேரளப் பெண்களை ஒரு படத்திலேனும் இவர்கள் நாகரீகமாக காட்டியதுண்டா ? நடிகர்களைப்பற்றியோ தயாரிப்பாளர்களைப்பற்றியோ புகார் சொன்ன நடிகைகளின் குற்றச்சாட்டுக்களுக்கு இவர்கள் எடுத்த நடவடிக்கை என்ன ? தினமலர் ரமேஷை அக்கா தங்கையோடுதான் பிறந்தாயா என கேட்கும் ஸ்ரீபிரியா, பதின்வயது சிறுமிகளைக்கூட முத்தக்காட்சிகளில்  நடிக்கவைக்கும் தன் சக ‘ கலைஞர்களை’ நோக்கி இந்த கேள்வியை எழுப்பியிருப்பாரா?

பஸ்டாண்டில் விபச்சாரத்திற்கு ஆள் பிடிப்பவன் புரோக்கர் என்றால், நடிகைகளின் அவயங்களை காட்டி படத்தை விற்கும் இவர்களை எப்படி அழைப்பது ? இவர்கள் எடுக்கும் நெருக்கமான காட்சிகள் ஒன்று நடிகையின் ஒப்புதல் பெற்ற பாலியல் அத்துமீறலாக இருக்கும் அல்லது நடிகையை கட்டாயப்படுத்தி செய்யப்படும் பாலியல் அத்துமீறலாக இருக்கும். இதைப்பற்றி கொஞ்சமும் வெட்கப்படாமல் கதைக்கு தேவையான கிளாமர் இருப்பதாக சொல்லும் இந்த மாமா கூட்டம் நடிகைகளின் மான அவமானத்தைப்பற்றி கவலைப்பட தகுதியுடையதுதானா ?. இவர்களுக்கும் புவனேஸ்வரிக்கும் என்ன வேறுபாடு?, இவர்கள் சொல்லும் நியாயத்தை அவரும் சொல்லக்கூடும், ஏனெனில் அவரும் விரும்பி வருவோரைத்தான் தொழிலுக்கு அனுப்புகிறார். அல்லது கஸ்டமர் கேட்பதை தருவதாககூட ஒரு நியாத்தை சொல்லலாம், ரசிகன் விரும்புவதைத்தான் படமாக எடுக்கிறோமென இயக்குனர்கள் சொல்வதைப்போல.

மற்றொருபுறம் பத்திரிகையாளர்கள் தங்களை ஒரு குடும்பம் என கூறிக்கொள்வதை தவறாக புரிந்துகொண்ட கலாநிதி மாறன் தனது தினசரியில்  நடிகர்களின் கூட்டத்தை முழுப்பக்க செய்தியாக போடுகிறார், பின்னே அவர் குடும்ப சண்டையில் இப்படித்தானே நடந்துகொண்டார் ???. பொதுவாக பத்திரிக்கைத்துறையையே நடிகர்கள் திட்டியதால் இவர்கள் ஒன்று கூடினார்கள், நடிகர் சங்கம் தினமலரை மட்டும் திட்டியிருந்தால் இந்த ஒற்றுமையும் இருந்திருக்காது, ஜெயா ஆட்சியில் நக்கீரன் கோபாலை கைவிட்டதுபோல இப்போதும் நடந்துகொண்டிருப்பார்கள்.( கோபால் கைதை எதிர்த்து நடந்த கூட்டத்தின் புகைப்படத்தில் ராமின் படத்தை ஜாக்கிரதையாக தவிர்த்த ஹிண்டுவின் வீரம் அவ்வளவு சீக்கிரம் மறக்கக்கூடியதா என்ன ?? )

இரண்டு தரப்பும் ஒரு விசயத்தில் கவனமாக இருக்கிறார்கள். தங்கள் வசமுள்ள எதிர்தரப்பின் தவறுகள் பற்றிய தகவல்களை இருவருமே வெளியிடவில்லை. அதனால்தான் வெறும் வசவுகளோடும் வாய்சவாடல்களோடும் நிறுத்திக்கொள்கிறார்கள். ஏனெனில் ஆபாசம் இருவருக்குமே பொதுவான ஒரு மூலதனம், அதில் கைவைக்க இரண்டு வியாபாரிகளும் விரும்பமாட்டார்கள்.

நடிகைகள் தங்களை விபச்சாரிகள் என சொன்ன பத்திரிக்கைக்கு எதிராக போராடுவது கிடக்கட்டும்.. தங்களை விபச்சாரிகளை விட கேவலமாக நடத்தும் ( அல்லது திரையில் அப்படிக்காட்டும் ) திரையுலகிற்கு எதிராக முதலில் சிந்திக்கட்டும். இல்லவிட்டால் எப்போது இந்த மாதிரி செய்தி வந்தாலும் அது மக்களுக்கு ஒரு நினைவூட்டலாகவே அமையும்.

-நன்றி வில்லவன்

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

……………………………..

தொடர்புடைய பதிவு

குமுதம்: பத்து ரூபாயில் ‘பலான அனுபவம்’

ஈழம்: தமிழ் சினிமாவின் 6 மணிநேரத் தியாகம் !

ஷகீலா – கவர்ச்சி சுதந்திரமா ? பர்தா கண்ணியமா ??

தாசியின் அவலத்தைத் திரிக்கும் “தனம்”!

நீங்கள் பாலியல் குற்றவாளியா?