Thursday, May 15, 2025
முகப்பு பதிவு பக்கம் 90

கவிழ்ந்து வரும் தாமரைக்கு சவக்குழி வெட்டுவோம்!

வாசகர் கேள்வி:

டந்த ஜூலை மாத இதழில், “பாசிசக் கும்பலின் தோல்விமுகமும் பாசிச எதிர்ப்பு சக்திகளின் செயலூக்கமிக்கப் போராட்டமும்” என்ற தலைப்பிலான கட்டுரையின் முதல் பாகத்தில், “தோல்வி முகம்” என்று அழைத்திருப்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. “வளர்ச்சி” என்ற முகமூடி கழன்றுபோனதும், பா.ஜ.க. தான் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றத் தவறியதும்தான் “தோல்வி முகம்” என்று விவரிக்கப்படுகிறதா? அப்படியானால், 2019-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஐந்தாண்டு கால ஆட்சியிலேயே பா.ஜ.க. தோல்வி முகத்தை அடைந்திருந்ததா? எனினும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி மீண்டும் வெற்றிபெற்றது எப்படி? – சற்று விளக்கவும்!

000

ளர்ச்சி நாயகன் மோடி”, “குஜராத் மாடல் வளர்ச்சி”, “கருப்புப் பணத்தை மீட்போம்” என்றெல்லாம் 2014 தேர்தலின்போது முழங்கியது பா.ஜ.க கும்பல். இவை அனைத்தும் தோல்வியை தழுவிவிட்டன. ஆனால், அந்த பொருளில் பா.ஜ.க. தோல்விமுகம் என்று நாம் குறிப்பிடவில்லை. தான் முன்வைத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமலேயே 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி அரசு வெற்றி பெற முடிந்தது.

பா.ஜ.க.விற்கு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென்ற உணர்வெல்லாம் கிடையாது. மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தையும் ‘இலவச அரசியலாக’ வரையறுப்பது, அதுபோன்ற திட்டங்களை நிறைவேற்றுவது தவறு என்ற கண்ணோட்டம் பா.ஜ.க.வின் அரசியல் அடிப்படைகளில் ஒன்றாகும்.

கருப்புப் பணத்தில் திளைப்பது அதன் இரத்தத்தில் ஊறிப்போன கொள்கையாகும். வெளிநாட்டில் இருக்கும் கருப்புப் பணத்தை ஒழிக்கப் போவதாகச் சொன்ன பா.ஜ.க, கார்ப்பரேட் நிறுவனங்களிடம் நிதி வாங்குவதற்கு ஏற்ப தேர்தல் பத்திரங்கள் முறையைத் திருத்தி, பல ஆயிரம் கோடி ரூபாய் கருப்புப் பணத்தை கட்சிக்கு நன்கொடையாகச் சுருட்டிக்கொண்டது. (2018-2022 ஆண்டுகளில் மொத்த வரவில் 9,208 கோடி ரூபாய் தேர்தல் பத்திரங்கள் மூலம் வந்த தொகையில், பா.ஜ.க. மட்டும் 5,270 கோடி ரூபாய் – 57 சதவிகிதம் – நன்கொடையாகப் பெற்றுள்ளது)


படிக்க: மோடியிடம் கேள்வி கேட்ட பத்திரிகையாளரை ட்விட்டரில் தாக்கும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. சங்கிகள்!


நீரவ் மோடி, லலித் மோடி, விஜய் மல்லையா போன்ற கார்ப்பரேட் கருப்புப் பணக் கொள்ளையர்களை இந்தியாவில் இருந்து பாதுகாப்பாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து அவர்களைப் பாதுகாத்தது மோடி அரசு. இதனால், மக்கள் மத்தியில் மோடி அரசின் உண்மை முகம் கிழியத் தொடங்கியது.

ஆகையால், ஒரு பாசிசக் கட்சிக்கே உரிய வகையில் பா.ஜ.க. தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை; தான் அளித்த தேர்தல் வாக்குறுதிகளுக்கு எதிராகவே அது செயல்பட்டு வருகிறது. மற்றொருபுறம், உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்களைப் பறித்துக் கார்ப்பரேட் வர்க்கங்களுக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் சேவை செய்து வருகிறது; மக்களை அடக்கி ஒடுக்கி வருகிறது; சிறுபான்மையினரை இரண்டாம்தரக் குடிமக்களாக்கி வருகிறது. இதுபோன்ற பா.ஜ.க.வின் பாசிசப் போக்குகள் 2014-இல் அது ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்தே தொடரும் போக்காகும்.

மேலே குறிப்பிட்டுள்ள பா.ஜ.க.வின் செயல்பாடுகள் எல்லாம் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே அம்பலப்படுத்தப்பட்டவைதான். இருப்பினும் பாசிச பா.ஜ.க. அப்போது தோல்வி முகத்தை அடையவில்லை; 2019-இல் பா.ஜ.க. கூட்டணி அதுவே எதிர்ப்பார்க்காத அளவிற்கு அறுதிப் பெரும்பான்மை பெற்றது.

அப்படியெனில், 2019-ஆம் ஆண்டுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். பரிவாரக் கும்பல்கள் மற்றும் பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகள் மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தவில்லை என்று பொருளா? பா.ஜ.க.வின் ஐந்தாண்டு காலத்தில், மக்கள் நல்வாழ்வு பெற்றார்கள் என்று கருதிவிட முடியுமா? இல்லை என்று உறுதியாக சொல்ல முடியும்.

பா.ஜ.க.வின் இந்த ஆட்சிக் காலத்தில் பசு குண்டர்களின் கும்பல் படுகொலை வன்முறைகளுக்கு பெஹ்லூக்கான், அக்லக் போன்றவர்களே சாட்சி; முற்போக்காளர்களை காவிக் குண்டர்களை வைத்துக் கொல்வதற்கு கௌரி லங்கேஷ் ஒரு சாட்சி; உயர்கல்வியில் இருந்து தலித் மாணவர்கள் விரட்டியடிக்கப்படும் போக்கிற்கு ரோகித் வெமுலா தற்கொலை ஒரு சாட்சி; நீட் தேர்வு ஏழை மாணவர்களை வஞ்சிக்கிறது என்பதற்கு அனிதா ஒரு சாட்சி; கார்ப்பரேட் திட்டங்களை எதிர்க்கும் மக்களுக்கு துப்பாக்கிச்சூடே பதில் என்பதற்கு ஸ்டெர்லைட் ஒரு சாட்சி; மோடியின் டிஜிட்டல்மயமாக்கத்திற்கு பணமதிப்பழிப்பு படுகொலைகளே சாட்சி.

இவை மட்டுமா, ஜி.எஸ்.டி., பொதுத்துறைகள் தாரைவார்ப்பு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு மசோதா, பாரத்மாலா, சாகர்மாலா என மக்களின் வாழ்வாதாரங்களைச் சூறையாடி கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்த்த திட்டங்கள்தான் எத்தனை எத்தனை.

2017-இல் தமிழ்நாட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டம் மோடி அரசை பணியவைத்தது. ஜி.எஸ்.டி.க்கு எதிராக மோடியின் குஜராத்திலேயே 10 இலட்சத்திற்கும் மேலான வியாபாரிகள், வணிகர்கள், சிறுதொழில்முனைவோர் மிகப்பெரும் போராட்டங்களில் இறங்கினர். இப்படி மோடிக்கும் பா.ஜ.க.வின் பாசிச நடவடிக்கைகளுக்கும் எதிராக பல்வேறு பிரிவு மக்களிடம் அதிருப்திகளும் எதிர்ப்புகளும் கிளம்ப ஆரம்பித்தன.

2019-ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஆட்டோமொபைல் துறையில் நெருக்கடி ஏற்பட்டு பெருமளவில் பொருளாதார மந்தம் நாட்டை தாக்கியது.

ரஃபேல் ஊழல் மோடி ஆட்சியின் உத்தம வேடத்தை அம்பலப்படுத்தியது. பா.ஜ.க.வின் மூத்தத் தலைவர்களாக இருந்த யஷ்வந்த் சின்ஹா, அருண் சோரி ஆகியோர் பிரஷாந்த் பூசனுடன் இணைந்து இந்த ஊழலை முறையாக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.


படிக்க: புதிய நாடாளுமன்ற கட்டடம்: இந்து ராஷ்டிரத்தின் மடம்!


உச்சபட்சமாக, பா.ஜ.க.விற்கு எதிரான மக்களின் உணர்வுகளை மடைமாற்றுவதற்காக ஆர்.எஸ்.எஸ்.யிலேயே மோடிக்கு எதிராக கட்காரி அல்லது ஆதித்யநாத்தை முன்னிறுத்துவதற்கான முயற்சிகளும் தொடங்கியிருந்தன. ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்குக்கூட அடுத்து பா.ஜ.க. ஆட்சி அமையும் என்ற உறுதியான நம்பிக்கை அன்று இல்லை.

இருப்பினும், 2019-இல் மோடி தலைமையில் பா.ஜ.க. அறுதிப் பெரும்பான்மையான தொகுதிகளை வென்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது.

ஊரறிந்த திருடனுக்கு வெற்றி, எப்படி?

மக்களிடம் மிகப்பெரும் அளவுக்கு எதிர்ப்புகள் இருந்தாலும் மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி மீண்டும் அமைந்தது, ஏன்?

பா.ஜ.க.வின் தேர்தல் முறைகேடுகள், மின்னணு வாக்குப்பதிவில் தில்லுமுல்லு செய்தது ஆகியவைதான் இதற்கு காரணம் என்று சிலர் தெரிவித்தனர். இது உண்மையல்ல. பா.ஜ.க. ஆளும் சில மாநிலங்களில் குறிப்பிட்ட அளவு முறைகேடுகள் நடந்திருந்தாலும், தென்மாநிலங்களில் பா.ஜ.க. பின்னடைவை சந்தித்தது எப்படி நடந்தது என்று இவர்கள் விளக்குவதில்லை. அதிலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணி ஒரு சீட்டு மட்டுமே பெற முடிந்தது என்பதை நாம் பரிசீலிக்க வேண்டும்.

தேர்தல் கமிஷன் பா.ஜ.க.வின் ஏஜெண்டாக செயல்பட்டது மட்டுமே பா.ஜ.க.வின் வெற்றிக்கு காரணம் அல்ல. தேர்தல் வெற்றியை அது மட்டுமே தீர்மானித்துவிடாது. இவற்றை எல்லாம் விட முக்கியமான காரணத்தை நாம் பரிசீலிக்க வேண்டும். அதுதான் “அரசியல் களம்”.

பா.ஜ.க.வை தொடர்ந்து தேர்தல் களத்தில் அம்பலப்படுத்துவது பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கு அவசியமானது, அடிப்படையானது எனினும், அது பா.ஜ.க.வின் தோல்வியைத் தீர்மானிக்கும் காரணி அல்ல. இவ்வளவு இருந்தாலும் அரசியல் ரீதியாக பா.ஜ.க.விற்கு தோல்விமுகம் உருவாகவில்லை. எதிர்க்கட்சிகளுக்கு இடையில் ஒரு ஒற்றுமை உருவாகாமல் இருந்தது என்று பலரும் குறிப்பிடுவது அதில் ஒரு அம்சமாகும். அவ்வாறு எதிர்க்கட்சிகளுக்கு இடையில் ஒரு ஒற்றுமை உருவாகியிருந்தாலும், அதனால் மட்டுமே பா.ஜ.க.வை தேர்தலில் தோற்கடித்திருக்க முடியாது.

வெற்றிமுகத்தில் பா.ஜ.க. இருப்பதற்கு அது தொடர்ச்சியாக ஆகப் பெரும்பான்மை மக்களிடம் தனது நற்பெயரை தக்கவைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. துருக்கியில் எர்டோகனை எடுத்துக் கொள்ளலாம். ஆகப் பெரும்பான்மை மக்களிடம் அவர் நற்பெயரைப் பெற்றிருக்கவில்லை. ஆனால், அவர் வெற்றி பெற்றார். அமெரிக்காவின் டிரம்ப், பிரேசிலின் பொல்சனாரோ போன்றவர்களும் எர்டோகன் போன்றவர்களே. ஆனால், அவர்கள் தோல்வியடைந்தனர்.

தேர்தலில் எதிர்க்கட்சிகள் தங்களை ஒரு மாற்றாக முன்னிறுத்திக் கொள்வது, அத்துடன், ஆளும்கட்சி தோல்விமுகம் அடைந்திருப்பது ஆகிய இரண்டும் எந்த அளவிற்கு பொருத்தமாக அமைகிறதோ, அப்போதுதான் ஆளுங்கட்சியினர் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வீசியடிக்கப்படுகின்றனர்.

ஆகப் பெரும்பான்மை மக்களிடம் பா.ஜ.க. மீது அதிருப்தி வளர்ந்துவந்திருந்தாலும், “வலிமையான தலைவர்”, “தேசத்தின் பாதுகாவலர்” என்று மோடி மீது கட்டமைக்கப்பட்டிருந்த பிம்பம் சுக்குநூறாக உடைக்கப்படவில்லை. புல்வாமா தாக்குதல், அதைத் தொடர்ந்து பா.ஜ.க. அரசு மேற்கொண்ட ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’ ஆகியவை பெரும்பான்மை மக்களின் தேசிய உணர்வைத் தூண்டியது. மற்றொருபக்கம், பா.ஜ.க.வின் மீது மக்களுக்கு வளர்ந்துவந்த அதிருப்தியை ஆழப்படுத்தி அதை தனது வெற்றிமுகமாக்கிக் கொள்ளும் அளவிற்கு காங்கிரஸ் கட்சியோ அல்லது எதிர்க்கட்சிகளின் கூட்டணியோ தயாராக இல்லை. இவையே பா.ஜ.க. 2019 தேர்தலில் மீண்டும் வெல்லமுடிந்ததற்கான காரணங்களாகும்.

“மோடி அலைக்கு” சவால் எழுந்த காலம்

2019 தேர்தலை பா.ஜ.க. வெற்றிமுகத்தோடு எதிர்க்கொண்டது. இந்த வெற்றிமுகத்தோடு தனது இந்துத்துவ, கார்ப்பரேட் திட்டங்களைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தத் தொடங்கியது. 2019 ஜூன் மாதத்தில் முத்தலாக் தடை விதிப்பு; ஆகஸ்டு மாதத்தில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, செப்டம்பர் மாதத்தில் பரூக் அப்துல்லா உள்ளிட்ட காஷ்மீர் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு வீட்டுச் சிறை; நவம்பர் மாதத்தில் பாபர் மசூதி நிலம் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது – என அடுத்தடுத்த பல நடவடிக்கைகள் மூலமாக ஏறித்தாக்கி வந்தது.

இருப்பினும், அதுவரை மக்கள் போராட்டங்கள் தொடங்கவில்லை. ஜல்லிக்கட்டுப் போராட்டம் மோடி அரசுக்கு நேரடியாக சவால்விட்ட போராட்டமாயினும் அது தமிழ்நாட்டு மக்களின் உணர்வை மட்டுமே பிரதிபலித்தது. நாடு தழுவியதொரு மக்கள் எதிர்ப்பு கிளம்பவில்லை. இந்நிலையில்தான், 2019 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் தேசியக் குடியுரிமை சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. அதுவரை பெரிய அளவிலான எதிர்ப்புகள் இல்லாமல் நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருந்த பா.ஜ.க. அரசின் திட்டங்களுக்கு எதிராக வெகுமக்கள் போராட்டங்கள் தொடங்கிவிட்டன.


படிக்க: அவரை எதற்கு உள்ளே அழைக்கிறீர்கள்!


நாடெங்கும் இஸ்லாமியப் பெண்கள் ஷாகின்பாக் போராட்டத்தில் இறங்கினர். இந்தப் போராட்டங்களுக்கு மக்களின் பல்வேறு பிரிவினர் மத்தியில் இருந்து ஆதரவும் கிடைக்கத் தொடங்கியது. குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான இப்போராட்டங்கள் வெற்றிமுகத்தில் இருந்த பா.ஜ.க.வின் வேகத்தை தடுத்து நிறுத்திய நிகழ்வாகும்.

டெல்லிச் சலோ விவசாயிகள் எழுச்சி + ஐந்து மாநிலத் தேர்தல் தோல்வி = பா.ஜ.க தோல்வி முகத்தின் தொடக்கம்

பா.ஜ.க.வோ ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத கும்பலோ தமது தோல்விமுகத்தை உணரவில்லை. அதுவரை கும்பல் வன்முறைகளில் ஈடுபட்டு இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் தொடுத்துவந்த இந்த கும்பல்கள், நேரடியாக ஜனநாயகமாகப் போராடிய மாணவர்கள் மீது தாக்குதலைத் தொடுக்கத் தொடங்கியது. 2020 ஜனவரி மாதத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் புகுந்த ஆர்.எஸ்.எஸ். கும்பல் மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதலை அரங்கேற்றியது. இது நாடு முழுவதும் இருக்கும் மாணவர்களைப் போராட்டக் களத்திற்கு இழுத்துவந்தது.

இந்நிலையில், பிப்ரவரி மாதத்தில் டெல்லி மாநிலத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி இரண்டாவது முறையாக வெற்றிபெற்று, பா.ஜ.க.விற்கு தோல்வியைக் கொடுத்தது.

சி.ஏ.ஏ, என்.ஆர்.சி., என்.பி.ஆர்.க்கு எதிராக அமைதியாகப் போராடிய மக்கள் மீது மார்ச் மாதத்தில் யோகி ஆதித்யநாத் கும்பல் கொலைவெறித் தாக்குதலை நடத்தியது. டெல்லியில், போலீசைக் கொண்டு பெரும் கலவரம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. டெல்லியில் மட்டும் 53 அப்பாவி மக்கள் இந்துத்துவக் கும்பலால் துப்பாக்கியால் சுடப்பட்டும், அடித்தும் கொல்லப்பட்டனர். உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 25-க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றது ஆதித்யநாத் அரசு. பா.ஜ.க. அரசின் இந்த நடவடிக்கைகளுக்கெதிராக எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர்.

இதனைத் தொடர்ந்து கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்தனர். கொரோனா வைரஸ் பரவும் வரை தனது தேர்தல் ஆதாயத்திற்காக அதனைத் தடுப்பதற்கு எந்த முயற்சியையும் மேற்கொள்ளாமல், திடீர் ஊரடங்கை அறிவித்து பல இலட்சக்கணக்கான மக்களை நடைப்பிணங்களாக்கியது, மோடி அரசு. கோடிக்கணக்கான மக்களைப் பட்டினிக் கொடுமைக்குத் தள்ளியது. இந்த திடீர் ஊரடங்கால் சொல்லொணா துயரத்திற்கு உள்ளான புலம்பெயர் தொழிலாளர்கள் ஆங்காங்கே கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபடத்தொடங்கினர். அதன்பிறகுதான் மோடி அரசு இரயில் பயணத்திற்கு ஏற்பாடு செய்தது.

இந்தக் கொரோனா ஊரடங்கு காலத்திலும் இஸ்லாமிய மக்களின் மசூதிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் அத்வானி உள்ளிட்ட அனைத்து இந்துமதவெறியர்களும் விடுவிக்கப்பட்டனர். ஜூலை மாதத்தில் புதிய கல்விக் கொள்கை சட்டமாக்கப்பட்டது. இராமர் கோவிலைக் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார் மோடி. பா.ஜ.க. அரசுக்கு எதிராக போராடும் இஸ்லாமியர்களின் வீடுகளை இடிக்கும் “புல்டோசர் ராஜ்” என்ற பயங்கரவாதத்தை உத்தரப் பிரதேசத்தில் ஆதித்யநாத் கும்பல் அரங்கேற்றத் தொடங்கியது. இவ்வாறு ஆர்.எஸ்.எஸ். கும்பல் பல்வேறு வகைகளில் தமது இந்துத்துவத் திட்டங்களை நிறைவேற்றி வந்தாலும், அவ்வப்போது சில வெற்றிகளைப் பெற்றாலும் பா.ஜ.க. கும்பலின் தோல்விமுகத்தை இவை தடுக்கவில்லை. பா.ஜ.க.விற்கு எதிரான மக்களின் போராட்ட உணர்வுக்கு உரமூட்டின.

இந்த நிலையில், அந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக வடமாநிலங்களில் குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் விவசாயிகளிடம் எதிர்ப்புகள் கிளம்பி வந்தன. இதன் உச்சகட்டமாக, அந்த ஆண்டு இறுதியில் பஞ்சாப், ஹரியானா விவசாயிகளின் “டெல்லி சலோ” முற்றுகைப் போராட்டம் தொடங்கியது. உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் விவசாயிகளும் பங்கேற்ற இந்தப் போராட்டத்தில், சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் நேரடியாகப் பங்கேற்றனர். நாடு முழுவதிலும் இருக்கும் பல்வேறு விவசாயிகள், பொதுமக்கள் இந்தப் போராட்டங்களுக்கு தங்களது ஆதரவைக் கொடுத்துவந்தனர். உலகத்தின் பெரும்பாலான நாடுகளில் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு கிடைத்தது.

பல்வேறு சதிகள், அடக்குமுறைகளை முறியடித்து, நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களது இன்னுயிரை ஈந்து, ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் நடத்திய இந்தப் போராட்டம் சட்டரீதியான வெற்றியையும் பெற்றது. பாசிச மோடி அரசைப் பணியவைத்த விவசாயிகளின் இந்த வீரஞ்செறிந்தப் போராட்டம்தான் பா.ஜ.க.வை தோல்வி முகத்தை நோக்கித் திருப்பியது; பாசிசக் கும்பலுக்கு ஒரு வலுவான அடியைக் கொடுத்தது.

இந்தப் போராட்டம் நடந்த இதே காலகட்டத்தில் தொடர்ந்து மோடி அரசின் முகம் கிழியத் தொடங்கியது. இரண்டாவது கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆக்ஸிஜன் இல்லாமல் கொத்துக்கொத்தாக வடமாநிலங்களில் மக்கள் இறந்த நிகழ்வுகள் உலகத்தையே அதிர வைத்தன. இவையெல்லாம், உத்தரப் பிரதேசத் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனினும், அதனைத் தொடர்ந்து நடந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கத்தில் பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் மண்ணைக்கவ்வின. இது, பா.ஜ.க.வின் தோல்விமுகத்தைத் தீவிரப்படுத்தியது. மற்றொருபுறம் எதிர்க்கட்சிகளின் பலத்தை அதிகரிக்கச் செய்தது.

“வலிமையான தலைவரில்”இருந்து “தோல்வியுற்ற பிரதமராக”…

அன்று தொடங்கிய தோல்விமுகம் தொடர்ந்து பா.ஜ.க.விற்கு தோல்விகளாகவே அமைந்து வருகின்றன. இச்சூழலில், காங்கிரசு தன்னை வலுப்படுத்திக் கொள்ள பாரத்ஜோடா யாத்திரை நடத்தியது; பிகாரில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் விலகி, ஜே.டி.எஸ். கூட்டணியில் இணைந்ததன் மூலம் பிகாரில் பா.ஜ.க. ஆட்சி முடிவுக்கு வந்தது போன்றவையெல்லாம் எதிர்க்கட்சிகளுக்கு உத்வேகத்தைக் கொடுத்தது.

இத்துடன், அண்மையில் நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் தோல்வி மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது. பாங்கு ஓதத் தடை, ஹிஜாப்புக்குத் தடை, ஹலால் உணவுகளுக்குத் தடை, லவ் ஜிகாத் எதிர்ப்பு, பசுப்பாதுகாப்பு குண்டர்களின் கும்பல் வன்முறைகள் போன்ற பயங்கரவாத நடவடிக்கைகள் மூலம் சிறுபான்மை மக்களை ஒடுக்கியது சங்கப் பரிவாரக் கும்பல். ஆனால், அவை அனைத்தும் பா.ஜ.க.விற்கு எதிராக திரும்பியதை கர்நாடகத்தில் பார்த்தோம்.

தொடக்கத்தில், என்.ஐ.ஏ.வின் சோதனை நடவடிக்கைகளைக் கண்டு மக்களிடம் ஏற்பட்ட அதிர்ச்சியானது இன்று இல்லை. என்.ஐ.ஏ. என்பது மோடி அரசின் ஏவல்படை என்பதை மக்கள் உணர்ந்து கொண்டனர். பி.எஃப்.ஐ மீதான தடைக்கு எதிராக நாடுமுழுவதும் நடந்த போராட்டங்கள், மோடி அரசின் பாசிச நடவடிக்கைகளை எள்ளி நகையாடின.

தனது இந்துத்துவ நிகழ்ச்சிநிரலின் உயிர்நாடியான நடவடிக்கைகளில் ஒன்றான, பொதுசிவில் சட்டத்தைக் கொண்டுவரப் போவதாக சொன்னவுடன், பா.ஜ.க.விற்கு எதிராக இந்துக்களில் பல பிரிவினரே போர்க்கொடி தூக்கத் தொடங்கிவிட்டனர். இதனால், பொதுசிவில் சட்டம் தொடர்பான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யாமலே இருந்துவிட்டது மோடி-அமித்ஷா கும்பல்.

குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டம், மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்த டெல்லிச் சலோ விவசாயிகளின் போராட்டம் ஆகியவற்றுக்கு அடுத்து மணிப்பூரில் ஆர்.எஸ்.எஸ் கும்பல் குக்கி பழங்குடியினர் மீது ஏவிவரும் தாக்குதலுக்கு எதிராக நாடுமுழுவதும் நடைபெறும் போராட்டங்கள் முக்கியமானவை.

தற்போது குடியரசுத் தலைவராக இருக்கும் திரௌபதி முர்முவை பா.ஜ.க. வேட்பாளராக அறிவித்ததற்குப் பின், பல்வேறு மாநிலங்களிலும் உள்ள பழங்குடி மக்களின் கணிசமான ஓட்டுக்களை வேட்டையாடும் திட்டம் இருந்தது. மணிப்பூர் வன்முறைக்கெதிரான பழங்குடி மக்களின் போராட்டங்கள் அக்கும்பலின் கனவிற்கு தீ வைத்துள்ளன. குஜராத், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய பசுவளைய மாநிலங்களில் பழங்குடி அமைப்புகளும் விவசாயிகள், தொழிலாளர் அமைப்புகளும் மணிப்பூர் வன்முறையைக் கண்டித்துப் போராட்டங்களை அறிவித்துள்ளன.

மணிப்பூரில் மேய்தி இனவெறியர்களால் குக்கிகள் மீது ஏவப்பட்ட வன்முறை மிசோரமில் சிறுபான்மையாக உள்ள மேய்திகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. மிசோரமின் பழங்குடியின மக்கள் மத்தியில் வேலைசெய்யக்கூடிய சில போராளிக்குழுக்கள் மேய்திகளுக்கு எச்சரிக்கை விடுத்ததால் பல மேய்திகள் மாநிலத்தைவிட்டு புலம்பெயர்ந்துவருகிறார்கள். 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு மிசோரம் சட்டமன்றத் தேர்தலை எதிர்க்கொள்ள இருப்பதால் அங்குள்ள பா.ஜ.க. கூட்டணி அரசாங்கத்துக்கு இச்சூழல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

சீனா, அருணாச்சலப் பிரதேசத்தில் தனது கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுவருவதை மோடி அரசு வாய்பொத்திக் கொண்டு வேடிக்கைப் பார்க்கிறது. அண்மையில், அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று விளையாட்டு வீரர்களுக்கு சீனா ஸ்டேபிள் விசா வழங்கியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தின் சுமார் 90,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை சீனா தனது பகுதி என்று உரிமை கொண்டாடுகிறது. இப்பகுதியை “ஜாங்னான்” என்று அழைக்கிறது. ஆகவேதான் அருணாச்சலப் பிரதேசத்தின் இந்தியாவின் இறையாண்மையை மறுதலிக்கும்வகையில் ஸ்டேபிள் விசா வழங்கிவருகிறது.

இந்தியாவின் நிலம் சீனாவிடம் பறிபோய்க் கொண்டிருக்கும்போது மோடி அரசு வேடிக்கைப் பார்க்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவதை பா.ஜ.க.வால் எதிர்க்கொள்ளமுடியவில்லை.

அருணாச்சலப் பிரதேசம் மட்டுமின்றி, மணிப்பூர் வன்முறை, அதிகரிக்கும் விலைவாசி உயர்வு, பத்திரிகையாளர்களுக்கு பேட்டி என “எதற்கும் வாய்திறக்காத பிரதமர்” என்று சமூக ஊடகங்களும் பத்திரிகைகளும் கடுமையாக விமர்சிக்கின்றன. “கல்லுளி மங்கன்”, “வெளிநாடுகளிலேயே கிடையாய் கிடப்பவர்” என மன்மோகன் சிங் மீதும், ராகுல், சோனியா மீதும் பா.ஜ.க.வினர் வைத்த விமர்சனங்கள் இன்று அப்படியே மோடிமீது எழுப்பப்படுகின்றன. 2012-ஆம் ஆண்டு மன்மோகன் சிங்கை “செயல்திறனற்றவர் (underachiever) என்று குறிப்பிட்டு டைம் பத்திரிகை அட்டைப்படம் வெளியிட்டது. இன்று மோடிக்கும் அதேநிலைதான். “தோல்வியுற்ற பிரதமர்” (failed Prime Minister) என்ற முழக்கம் மோடியை முன்வைத்து அண்மைக்காலமாக சமூக ஊடகங்களில் பிரபலமாகிவருகிறது.

2019-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஐந்தாண்டுகால ஆட்சியிலேயே மோடியின் வளர்ச்சி முகம் கழற்றி வீசப்பட்ட நிலையில், 2019 தேர்தலில் பா.ஜ.க.விற்கு கைகொடுத்த நாட்டின் ஒரே “செயல்திறனுள்ள தலைவர்”, “வலிமையான தலைவர்” போன்ற பிம்பங்களும் முடிவுக்கு வந்துவிட்டன என்பதையே இந்நிகழ்வுகள் காட்டுகின்றன.

000

பா.ஜ.க.வின் காவி-கார்ப்பரேட் நடவடிக்கைகளும் மோடியின் பிம்பமும் மக்கள் போராட்டங்களால் கேள்விக்குள்ளாக்கப்பட்டு, பா.ஜ.க. தோல்வி முகத்திற்கு சென்றுள்ள இந்த பின்னணியில்தான், காங்கிரஸ் தன்னை ஒரு மாற்றுத் தலைமையாக மீள்கட்டமைப்பு செய்துவருகிறது. ‘பப்பு’ என்று பா.ஜ.க. கும்பலால் கேலிசெய்யப்பட்ட ராகுலை ஒரு தலைவராக தூக்கிநிறுத்தும் முயற்சிகள் தொடங்கியிருக்கின்றன. “காங்கிரசு இல்லாத இந்தியா” என்று சொல்லி இந்த 9 ஆண்டுகளில் பல்வேறு பாசிச நடவடிக்கைகளை அரங்கேற்றியது பா.ஜ.க. எதற்கெடுத்தாலும் நேரு குடும்பம்தான் நாட்டை கெடுத்தது என்று சொல்லியது. ஆனால், இன்று, காங்கிரசுடன் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்கும் நிலைமை உருவாகிவிட்டது.

பா.ஜ.க. கும்பலுக்கு இது அரசியல் ரீதியான தோல்விமுகம். இனி இதை எந்த மூடுதிரையிட்டும் மறைக்க முடியாது.

அதேவேளையில், பா.ஜ.க.விற்கு அமைப்பு ரீதியான பலம் குறைந்துவிடவில்லை. அரசின் பல்வேறு மட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவல் அரங்கேறி உள்ளது. காவி-கார்ப்பரேட் பாசிச நோக்கங்களுக்கு ஏற்ப பாடத்திட்டங்கள், சட்டங்கள், விதிமுறைகள், மரபுகள் எல்லாம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இது பாசிசம் மீண்டெழுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் வழங்குகின்றன.

மேலும், அரசியல் ரீதியான தோல்விமுகத்தை பா.ஜ.க. ஒரு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் வெற்றிமுகமாக மாற்றிக் கொள்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. ஏனெனில் ஊழல், பிழைப்புவாதம், கோஷ்டி சண்டை, கார்ப்பரேட் சேவை எதிலும் பிற கட்சிகள் பா.ஜ.க.விற்கு சளைத்தவையல்ல.


மகேஷ்

புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2023 மாத இதழ்
புதிய ஜனநாயகம் முகநூல்

சோத்துக்கு வழியில்ல.. இதுல ஆண்ட சாதி பெருமை | தோழர் அமிர்தா

சோத்துக்கு வழியில்ல.. இதுல ஆண்ட சாதி பெருமை

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

கிக் தொழிலாளர்களுக்கான நல வாரியம்: தீர்வாகுமா?

சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ஸ்விக்கி (Swiggy), சொமேடோ (Zomato), ஊபர் (Uber), ஓலா (Ola) போன்ற இணையவழி நிறுவனங்களில் வேலை செய்யும் கிக் தொழிலாளர்களுக்கான நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். இது போன்ற சட்டம் கடந்த ஜூலை 24 தேதி ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த “ராஜஸ்தான் இணையவழி அடிப்படையிலான கிக் தொழிலாளர்கள் (பதிவு மற்றும் நல்வாழ்வு) சட்டம் 2023” நிறைவேற்றியதன் மூலம் கிக் தொழிலாளர்களுக்கான சட்டத்தை இயற்றிய முதல் மாநிலம் என்ற பெயரை ராஜஸ்தான் பெற்றுள்ளது.

ஆனால்  தொழிலாளர் வர்க்கத்திற்கான எந்த ஒரு சிறு உரிமையையும் ஆளும் வர்க்கம் தனது சொந்த விருப்பார்வத்துடன் வழங்கிவிடவில்லை. வரலாறு நெடுகிலும் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்களால் தான் தற்போதுள்ள உரிமைகள் பெறப்பட்டுள்ளன. அதே போல் இந்த கிக் தொழிலாளர்களுக்கான நல வாரியம் என்ற சட்டமும், இந்தியா முழுவதும் கிக் தொழிலாளர்களின் அமைப்பாக்கப்பட்ட போராட்டங்களின் விளைவாக இயற்றப்பெற்றதாகும். ஆனால் இந்த சட்டத்தை கிக் தொழிலாளர்களுக்காக முழு நிவாரணமாக கருதக்கூடாது. ஏனெனில் இந்த சட்டம் கிக் தொழிலாளர்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளின் முழுப் பரிமாணத்தையும் கணக்கில் கொள்ளவில்லை. மேலும் உற்பத்தி சார்ந்த மரபான தொழிலாளர் அமைப்புகள் சமகாலத்தில் எதிர்கொண்டு வரும் அரசியல் பிரச்சினைகளையும் இந்தச் சட்டம் கணக்கில் கொள்ளவில்லை என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

ராஜஸ்தான் மாநில அரசால் இயற்றப்பட்ட இந்த சட்டம் ஊபர், ஓலா போன்றவற்றில் சவாரிப் பகிர்வு செய்யும் தொழிலாளர்கள், ஸ்விக்கி, சொமேடோ போன்றவற்றில் உணவு விநியோகம் செய்யும் தொழிலாளர்கள், பிளிப்கார்ட், அமேசான் போன்றவற்றில் பொருட்களை விநியோகம் செய்யும் தொழிலாளர்கள், மேலும் சுகாதாரம், தங்கும் விடுதி ஆகிய சேவைத் துறையில் வேலை செய்யும் தொழிலாளர்கள், ஊடக சேவைத் துறையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் என அனைவரையும் உள்ளடக்குவதாக இருக்கிறது. ஆனால், இந்த தொழிலாளர்களுக்கான அமைப்பாக ஒரு “முத்தரப்பு நலவாரியம்” (tripartite welfare board) அமைப்பதாக சொல்கிறது. இந்த முத்தரப்பு நலவாரியத்தில் மாநில அரசின் பிரதிநிதிகள், குடிமை சமூக பணியாளர்கள், தொழிலாளர்கள், இணையவழி நிறுவனங்கள் ஆகியோர் அங்கம் வகிப்பர். இந்த முத்தரப்பு நலவாரியத்தில் தொழிலாளர்களின் கூட்டுபேர சக்தி கடுமையாக ஒடுக்கப்படும் என்பது நமக்கு சொல்லாமலே விளங்கும்.


படிக்க: ஸ்விக்கி தொழிலாளர் போராட்டம் : நவீன பாட்டாளிகளே, முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராக அமைப்பாய் திரள்வோம்!


கிக் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் யதார்த்தத்தை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். கிக் தொழிலாளர்களை இணையவழி நிறுவனங்கள் “தொழிலாளர்கள்” என்று வகை படுத்துவதில்லை. அவர்களை சவாரிக்காரர்கள் (Raiders), பயனர்கள் (Users), சுயாதீனமான ஒப்பந்தக்காரர்கள், பங்குதாரர்கள் (Partners) என்ற பெயரில் வகைப்படுத்துகின்றன. இதனால் இவர்கள் நாட்டின் தொழிலாளர் நலச் சட்டங்களின் வரையறைக்குள் வருவதில்லை. இவ்வாறு தொழிலாளர்களுக்கும் வேலை கொடுக்கும் நிறுவனங்களுக்குமான நேரடியான உறவிற்கு வெளியே தள்ளப்படுகிறார்கள் கிக் தொழிலாளர்கள். இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இதுதான் நிலைமை. கிக் தொழிலாளர்களை தொழிலாளர் நலச் சட்டங்களுக்குள் கொண்டு வராமல் அவர்களுக்கென வாரியம் அமைப்பது, அதன் மூலமாக தொழிலாளர்கள் மற்றும் இணையவழி நிறுவனங்களை பதிவு செய்வது, இவற்றிக்கு இடையிலான இணக்கத்தை கண்காணிப்பது, காப்பீடு மற்றும் பிற சமூகப் பாதுகாப்பு திட்டங்களை வகுப்பதை மேற்பார்வை செய்வது என்று அளவில் குறுக்கிக் கொள்வது தொழிலாளர்களுக்கு எந்த நன்மையும் செய்யாது.

“நிதி அயோக்”ன் 2022 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி இந்தியாவில் 77 லட்சம் கிக் தொழிலாளர்கள் உள்ளனர் என்றும் இந்த எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டு 2.35 கோடியை எட்டும் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இதுவும் கூட குறைமதிப்பீடாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கும்.

குறைவான ஊதியம், தன்னிச்சையாக தொழிலாளர்களது வேலைக் கணக்குகளை முடக்குதல், தன்னிச்சையாக வேலைக்கான விதிமுறைகளை மாற்றுதல், தொழிலாளர்கள் மீது நிறுவனங்களின் முழுமையான அதிகாரம் இவையெல்லாம் கிக் தொழிலாளர்களின் முக்கிய பிரச்சினைகளாக இருக்கும் போது எப்படி சிறிய சமூகப் பாதுகாப்பு உரிமைகள் தீர்வாக இருக்க முடியும்?

’தங்களது வேலை நேரத்தை தாங்களே வடிவமைக்கும் தேர்வுச் சுதந்திரம் மற்றும் நிலையாக கணிசமான ஊதியம்’ போன்ற பெரும்பான்மையான இணையவழி நிறுவனங்களின் வாக்குறுதி கிக் தொழிலாளர்களை ஆரம்பத்தில் ஈர்ப்பதாக இருக்கிறது. ஆனால், சிறிய காலத்திலே யதார்த்த நிலை இந்த வாக்குறுதிகளுக்கு மாறானதாக இருப்பதைத் தொழிலாளர்கள் தங்களது பணியின் ஊடாக அனுபவ ரீதியாகப் புரிந்து கொள்கிறார்கள்.


படிக்க: ‘கிக்’ தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டும் அர்பன் நிறுவனம் !


கிக் தொழிலாளர்கள் ஒரு நாளுக்கு 14 மணிநேரம், வாரத்தில் ஆறு நாள் வரை வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. அதிக மதிப்பீட்டு புள்ளிகள் வாங்கினால் தான் அடுத்தடுத்து வேலைகள் கிடைக்கும் என்ற நிலை இருப்பதால் அதற்காக மிகுந்த நெருக்கடியில் வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. தொழிலாளர்கள். ஒரு மாதத்திற்கு 5 ஆர்டர்களை எடுக்காமல் விட்டாலே தொழிலாளர்களின் வேலை கணக்கு முடக்கப்படுகிறது.  குறிப்பாக ஸ்விக்கி, சொமேடோ போன்ற உணவு விநியோக நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள், குறிப்பிட்ட நேரத்திற்குள் விநியோகம் செய்யாவிட்டால் மதிப்பீட்டு புள்ளிகள் குறையும் என்பதால் வேகமாக செல்லும் போது அடிக்கடி சாலை விபத்துகளில் சிக்குகின்றனர்; சிலர் மரணம் அடைகின்றனர். ஆனால் விபத்துகளில் சிக்குவதால், உடல்நலக் குறைவால், வீட்டுச் சூழ்நிலையால் ஆர்டர்களை எடுக்காமல் விடும் தொழிலாளர்கள் வேலையை விட்டு நீக்கப்படுகின்றனர்.

மேலும் நிறுவனங்கள் தொழிலாளர்களின் செயல்திறனை மதிப்பீடு செய்யும் அளவுகளின் குறைந்தபட்ச வரம்பை தன்னிச்சையாக மாற்றுகின்றன. கிக் தொழிலாளர்களின் தலையாயப் பிரச்சினையாக இருப்பது, Multiple Rating System தான். இதன்படி தொழிலாளர்களின் செயல்திறன் பல்வேறு முறைகளில் இருந்து மதிப்பீடு செய்யப்படுகிறது. நுகர்வோரால் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மதிப்பீட்டு புள்ளிகள் (Customer’s Rating என்னும் இந்த மதிப்பீடு எதற்காக இருக்கிறது, இது எப்படி தொழிலாளர்களின் அடிப்படை ஊதியத்தை பாதிக்கிறது என்று பெரும்பாலான நுகர்வோர்களுக்கு தெரியாது), தொழிலாளர்கள் நிறுவனங்களின்‌ எத்தனை அழைப்புகளுக்கு பதிலளிக்கிறார்கள் என்ற மதிப்பீடு (Response Rating), குறிப்பிட்ட மாதத்தில் எத்தனை வேலைகளை ரத்து செய்கிறார்கள் (Cancellation Rating) என்ற கணக்கு – என பல்முனைகளில் இருந்து மதிப்பீடு செய்யப்படுவதால் தொழிலாளர்கள் எப்போதும் நெருக்கடியிலே அதிக நேரம் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

இடைத்தரகர்களை ஒழிப்பதாக இந்த இணையவழி நிறுவனங்கள் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றன. ஆனால் பல நிறுவனங்கள் தொழிலாளர்களின் ஊதியத்தில் இருந்து 15 முதல் 25 சதவிகிதம் வரை கமிஷன் அடிக்கின்றன. வெளிப்படைத்தன்மையில்லாத பிற கட்டணங்கள் தொழிலாளர்கள் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்கின்றன. பல்வேறு காரணங்களைச் சொல்லி தொழிலாளர்களின் காப்பீட்டுத் தொகைக்கான கோரிக்கைகளையும் ரத்து செய்கின்றன இந்த நிறுவனங்கள்.

இப்படி பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கும் கிக் தொழிலாளர்களுக்கு முத்தரப்பு நலவாரியம் அமைப்பது என்பது எந்த வகையிலும் அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வாகாது. மேலும், ஸ்விக்கி, சொமேடோ, ஊபர், ஓலா போன்ற இணையவழி நிறுவனங்கள் பன்னாட்டு நிதி மூலதனத்தின் ஈர்ப்பு மையமாக இருப்பதையும், கிக் தொழிலாளர்கள் பட்டாளம் வளர்ந்து வருவதாக இருப்பதையும் கணக்கில் கொண்டு, பெருமளவிலான தொழிலாளர்களை அமைப்பாக திரட்டி தான் இந்த பன்னாட்டு மூலதனத்தின் சர்வாதிகாரத்தை எதிர்கொள்ள முடியும் என்பது சொல்லாமலே விளங்கும். அமைப்பாக்கப்பட்ட கிக் தொழிலாளர்களின் போராட்டங்களால்தான் இந்த சட்டம் இயற்றப்பட்து என்பதை அரசியல் ரீதியான அங்கீகாரமாக எடுத்துக் கொண்டு மேலும் தொழிலாளர் வர்க்கத்திற்கான உரிமைகளை வென்றெடுக்கும் பரந்த அளவிலான போராட்டங்களை நடத்த வேண்டும்.


சீனிச்சாமி

சென்னையில் இருந்து வெளியேற்றப்படும் உழைக்கும் மக்கள்! | தோழர் தீரன்

சென்னையில் இருந்து வெளியேற்றப்படும் உழைக்கும் மக்கள்! | தோழர் தீரன்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

மாமன்னன்: ரத்னவேல் கதாபாத்திரத்தின் கொண்டாட்டமும்! ஆதிக்க சாதிவெறி மனோபாவமும்!

மீப காலமாக சாதிய வன்கொடுமைக்கு எதிரான திரைப்படங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. தமிழ் ரசிகர்களும் இப்படங்களுக்கு சரியான அங்கீகாரத்தையும் விமர்சனங்களையும் தந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் கர்ணன் பரியேறும் பெருமாள் ஆகிய படங்களை இயக்கிய மாரி செல்வராஜ்-இன் படைப்பான மாமன்னன் திரைப்படம் கடந்த  ஜூன் 29-ஆம் அன்று வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது. படம் வெளியாவதற்கு முன்பாகவே இசை வெளியீட்டு விழாவில் மாரி பேசியது சர்ச்சையானது.

“அமைதியாக இருக்கும் சமுதாயத்தில் மாரி செல்வராஜ் சாதி வெறியைத் தூண்டுகிறார். தேவர்மகன் திரைப்படத்தில் இசக்கி என்ற கதாபாத்திரம் தாழ்த்தப்பட்டவராக காட்சிப்படுத்தப்படவில்லை; அவர் ஆதிக்க சாதினரை போலத்தான் காட்சிப்படுத்தப்பட்டார். மாரி தேவையற்ற வதந்திகளைக் கிளப்பி விடுகிறார்” என்று தங்கள் தரப்பு நியாயங்களை கூறி மாரிக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்தனர்.

“மேலும் ஒருபடி மேலே போய் தென்தமிழகத்தில் மாமன்னன் திரைப்படத்தை ஓடவிடமாட்டோம்! திரையரங்குகளை முற்றுக்கையிடுவோம்” என்று ஆதிக்க சாதிவெறியர்கள்  ஆர்ப்பரித்தார்கள். இதற்கு பதிலடியாக “இந்த சம்பவத்திற்கு முன்பாகவே தேவர்மகன் படத்தைப் பற்றி கமல்ஹாசனுக்கு அவரது கண்டனத்தை மாரி செல்வராஜ் ஒரு கடிதமாக எழுதியிருந்தார். கமல்ஹாசன் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்ட தக்கசமயமாக இசை வெளியீட்டு விழாவைப் பயன்படுத்திக் கொண்டார்” என்று இன்னொரு தரப்பினர் தங்களது நிலைப்பாட்டினை முன்நிறுத்தி தொடர்ச்சியாக சமூகவலைத்தளங்களில் சண்டைப்போட்டுக் கொண்டார்கள்.


படிக்க: ஆதிக்கசாதி ஹீரோவாக மாறிய ரத்னவேல் மாமன்னன்| தோழர் மருது


இசைவெளியீட்டு விழாவில் மாரி பேசிய “இந்த நிலை மாறனும்” என்ற வசனத்தை வைத்து கிண்டல் கேலி செய்து வந்தனர்.

“இரயில் நிலையகளில் டிக்கெட் முன்பதிவு செய்ய சென்றால் கூட கவுண்டர்ல கேட்கனும்” என்று பதிவிட்டு அதன்கீழ் “இந்த நிலை மாறனும் சார்” என்று தொடர்ந்து மாரியை கீழ்தானமாக சித்தரித்து சாதிய வன்மத்தை உமிழ்ந்தார்கள்…

மாமன்னன் திரைப்படத்தில் வில்லனாக நடித்த பகத்பாசில் ஆதிக்கசாதி வெறியனான ”ரத்னவேல்” என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார். தனது சுயநலத்திற்காக எதையும் செய்யும் கொடூரனாககவும், தான் வளர்த்த நாய் ஒரு தாழ்த்தப்பட்டவர் வளர்த்த நாயிடம் தோல்வியுற்றதால் அதை அடித்தே கொல்லும் மனிதத்தன்மை அற்றவனாகவும் அக்கதாப்பாத்திரம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

பகத்பாசில்  நடித்த ரத்னவேல் கதாபாத்திரத்தை mash up ஆக எடிட் செய்து சாதிப் பெருமை பேசும் பாடல்களோடு பொறுத்தி trend செய்துவருகிறார்கள் சாதிவெறியர்கள். இவ்வாறு செய்துவிட்டு “பாவம் மாரி” என்று ஏளனமாக சிரித்தனர். இந்த ரத்னவேல் கதாப்பாத்திரத்தைத் தூக்கிப்பிடித்து பேசுவதை ஏதோ மாரியை இழிவுபடுத்துவதற்காக ட்ரெண்ட் செய்யப்படும் ஒன்றாக கருதக்கூடாது.

தாங்களும் ரத்னவேல் என்ற கதாபாத்திரத்திற்கு எவ்விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல; தாங்களும் சாதிவெறியின் பிரதிபலிப்புதான் என்று எண்ணுவதன் வெளிப்பாடு தான் அது.

இவ்வாறு சாதிவெறியை வெளிப்படுத்தும் காணொளிகளைப் பரப்பும் வகையில் இளைஞர்கள் இருப்பதென்பதை ஒட்டுமொத்த சமூகத்திற்குமான பிரச்சினையாகப் பார்க்க வேண்டும்.

மேலும் இவர்கள் மாரியை “சொரியாசிஸ் தாக்கப்பட்டான்”, “சொந்த காசுல சூனியம் வைத்துக்கொண்டான்”, “மாரியின் கதறல்” போன்ற மீம்ஸ் போட்டு தங்களின் சாதிவெறியைத் தீர்த்துக்கொள்ள இந்த விடயத்தை பயன்படுத்திக்கொண்டனர் என்பது தெள்ளத் தெளிவாகிறது.


படிக்க: நாங்குநேரி கொடூரம்: மாணவர்களிடையே அதிகரித்துவரும் சாதிவெறி!


மாரி செல்வராஜ் அமைதியாக இருக்கும் சமுதாயத்தில் சாதிவெறியை தூண்டுகிறார் என்று கதறிய சாதிவெறி சங்கிகளுக்கு ஒரு கேள்வி.

சாதி ஆதிக்கம் குறைந்து விட்டதாக பேசப்படும் இந்த காலகட்டத்திலேயே சாதி வெறியனாக நடித்த ஒருவரின் கதாபாத்திரத்தை ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எதிராகத் தூக்கிப்பிடித்து வன்மங்கள் கக்கப்படும்போது 1992-ஆம் ஆண்டில் வெளிவந்த தேவர்மகன் திரைப்படம் தலித் மக்கள் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆக, பொது புத்தியாக சமூகத்துக்கு எதிரான ஒரு செயல் அம்பலமாகும் போது அதை எதிர்க்காமல்  அமைதியாக இருக்கிறோம் என்பதன் பொருள் நாமும் அதை ஏற்றுக் கொண்டோம் என்பதே. இதற்கு எதிராக மாணவர்களும் இளைஞர்களும் சமூக வலைத்தளங்களில் குறிப்பிடத்தக்க அளவில் வினையாற்றினர். ஆனால், அது மட்டும் போதாது. சாதி குறித்தான விவாதங்கள் மாணவர் – இளைஞர் மத்தியில் தொடர்ந்து நடத்தப்படவேண்டும்.

எப்போதெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அரசியல் பேசப்படுகிறதோ அப்போதெல்லாம் இந்த மாதிரியான சில்லறைகளின் புலம்பல்களும் சேர்ந்துவருவது இயல்புதான்.

ஆனால் தற்போது ஏன் அதிகமாக பேசப்படுகிறது? இந்தியா முழுவதும் தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிராக நடந்தேறிவரும் சாதிய வன்கொடுமைகள் மற்றும் மணிப்பூரில் நடக்கும் குக்கி பழங்குடியின மக்கள் மீதான பயங்கரவாத தாக்குதல்கள் சாதிவெறியர்களுக்கு ஒரு புதிய தெம்பைத் தந்துள்ளது.

மேலும், இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது அனைத்து ஆதிக்க சாதி சங்கங்களிலும் ஆர்.எஸ்.எஸ் இன் ஊடுருவல் அதிகரித்துள்ளது என்பதுதான்.

ஆகவே தோழர்களே இந்த சங்பரிவார கும்பல்களை கருவருத்தால் மட்டுமே இந்த நிலையை மாற்ற இயலும்.

மதக்கலவரத்தை தூண்ட  முடியாமல் போனதால் அடுத்த நகர்வாக சாதி வெறியைத் தூண்டிவிடுவதுதான் சங்கப்பரிவார கும்பலின் நோக்கம். அதற்கு எதிராக தமிழ்நாட்டின் பார்ப்பன எதிர்ப்பு மரபை உயர்த்திப்பிடிப்போம்.


சிவா

நீட் தேர்வை முறியடிக்க களப்போராட்டங்களில் இறங்க வேண்டும் | தோழர் ஆதீர்

நீட் தேர்வை முறியடிக்க களப்போராட்டங்களில் இறங்க வேண்டும்
– தோழர் ஆதீர்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

அசோகா பல்கலைக்கழகம்: கருத்து சுதந்திரத்தின் மீதான காவி பயங்கரவாத தாக்குதல்

0

ரியானா மாநிலம் சோனிபட் நகரில் அமைந்திருக்கும் அசோகா பல்கலைக்கழகம் இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். பா.ஜ.க வெற்றி பெற்ற 2019-ஆம்‌‌ ஆண்டு பொதுத்தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் குற்றம் சாட்டி அசோகா பல்கலைக்கழகத்தின் பொருளாதார உதவிப் பேராசிரியர் சப்யசாச்சி தாஸ் (Sabyasachi Das) ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். ஜூலை 25 அன்று வெளியிடப்பட்ட இந்த ஆய்வு கட்டுரை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து உதவிப் பேராசிரியர் தாஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதற்கு பாசிச பா.ஜ.க கொடுத்த அழுத்தம் தான் காரணம் என்பதை சொல்லத் தேவையில்லை. பல்கலைக்கழக துணைவேந்தரும் தாஸ் எப்போது ராஜினாமா செய்வார் என்பதற்காகக் காத்திருந்ததைப் போல், ஆகஸ்ட் 14 அன்று அவரது ராஜினாமாவை உடனடியாக ஏற்றுக்கொண்டார். முன்னதாக ஆகஸ்ட் 1 அன்றே தனக்கும் இந்த ஆய்வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஒரு அறிக்கையை வெளியிட்டு பல்கலைக்கழகம் உதவிப் பேராசிரியரைக் கைவிட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

உதவிப் பேராசிரியர் தாஸ் “உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தில் ஜனநாயகப் பின்னடைவு” (Democratic Backsliding in the World’s Largest Democracy) என்ற பெயரில் 50 பக்க ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க – காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவிய தொகுதிகள் மற்றும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி முடிவான தொகுதிகளை அவர் ஆராய்ந்தார்.

ஆராய்வதற்கு மெக்ராரி சோதனை (McCrary test) எனப்படும் புள்ளிவிவர சோதனை முறையை தாஸ் பயன்படுத்தினார். பா.ஜ.க-வுக்கும் காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவிய தொகுதிகளில், அதாவது இருவருக்கும் 50 சதவிகித வெற்றி வாய்ப்பு இருந்த தொகுதிகளில், பா.ஜ.க அதிக அளவில் வென்றுள்ளதை அவர் கவனித்தார். மேலும், இத்தொகுதிகள் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் உள்ளவை என்பதையும் அவர் ஆவணப் படுத்தினார்.

இத்தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம் என்று அவர் கூறுகிறார். ஒன்று, தேர்தலில் முறைகேடு நடந்திருக்க வேண்டும். மற்றொன்று, கடும் போட்டியை முறியடிக்கும் விதத்தில் பா.ஜ.க தீவிரமாகப் பிரச்சாரம் செய்திருக்க வேண்டும்.


படிக்க: நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்: காவிமயமாக்கல் தடைப்பட போவதில்லை!


வெற்றிக்கு பா.ஜ.க-வின் பிரச்சாரம் தான் காரணமா என்பதை அறிய, தாஸ் வளரும் சமூகங்களுக்கான மையம் (Centre for Developing Societies) நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பான தேசிய தேர்தல் கணக்கெடுப்பை (National Election Survey) நோக்கித் திரும்புகிறார். கணக்கெடுப்பின் தரவுகளோ நெருக்கமான போட்டி நிலவிய தொகுதிகளில் பா.ஜ‌‌.க-வை விட எதிர்க்கட்சிகள் களத்தில் கடுமையாக பிரச்சாரம் செய்துள்ளனர் என்பதை வெளிப்படுத்தியது.

பா.ஜ.க-வின் பிரச்சாரம் வெற்றிக்குக் காரணமில்லை என்று முடிவு செய்கிறார். அடுத்ததாக முறைகேடு எந்தெந்த விதங்களில் நடைபெற்று இருக்கலாம் என்று தாஸ் ஆய்வு செய்கிறார். அதில், வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களை பதிவு செய்வதில் மோசடி நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததாக தாஸ் கூறுகிறார். ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர்களின் எண்ணிக்கையின் வளர்ச்சியை ஒப்பிடுகிறார். ஒட்டுமொத்த மக்களவைத் தொகுதிகளுடன் ஒப்பிடும்போது தாஸ் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட தொகுதிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்து இருப்பதை அவர் காண்கிறார். மேலும், முஸ்லீம்கள் அதிகமுள்ள தொகுதிகளில் இந்த நிகழ்வு அதிகம் நடந்திருப்பதைக் கவனிக்கிறார். இதன் பொருள் என்னவென்றால், அடுத்தடுத்த தேர்தல்களில் புதிய வாக்காளர்கள் இணையும்போது அத்தொகுதிகளில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்; ஆனால் குறைந்திருக்கிறது. குறைந்ததற்கான காரணம் முஸ்லீம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்பது தான்.

2019 தேர்தலுக்குப் பிறகு தேர்தல் ஆணையம் “பதிவான வாக்குகள் (voter turnout/votes polled) மற்றும் எண்ணப்பட்ட வாக்குகள் (votes counted)” என இரண்டு தரவுத் தொகுப்புகளை வெளியிட்டது. அதை தி குயின்ட் பத்திரிகை ஆய்வு செய்து, 373 தொகுதிகளில் பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே பாரிய வேறுபாடு இருப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அவ்வறிக்கையை தனது ஆய்வுக்காக தாஸ் பயன்படுத்திக் கொள்கிறார். தாஸ் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட தொகுதிகளிலும் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்ட வாக்குகளும் ஒன்றோடொன்று மிகப்பெரிய அளவில் வேறுபட்டன.

இக்காரணங்களால் தேர்தல் முறைகேடுகள் நடந்திருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக அவர் தனது ஆய்வுக் கட்டுரையில் எடுத்துரைக்கிறார். தேர்தல் முறைகேடு தேர்தல் ஆணையத்தின் துணையின்றி நடக்க முடியாது. எனவே, இவரது ஆய்வு தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளையும் கேள்விக்குள்ளாக்குகிறது.


படிக்க: ஏ.பி.வி.பி குண்டர்களால் அச்சுறுத்தப்படும் பல்கலைக்கழகங்கள்!


இந்த ஆய்வுக் கட்டுரையை பாசிச பா.ஜ.க கடுமையாக எதிர்த்தது. அதன் தொடர்ச்சியாகத் தான் உதவிப் பேராசிரியர் தாஸ் ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப் பட்டுள்ளார். உதவிப் பேராசிரியர் தாஸ் மீதான இந்தத் தாக்குதலைக் கண்டிக்கும் விதமாக பொருளாதாரப் பேராசிரியரான புலப்ரே பாலகிருஷ்ணன் உள்ளிட்ட இரண்டு பேராசிரியர்கள் ராஜினாமா செய்துள்ளனர். அசோகா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறை, ஆங்கிலம் மற்றும் படைப்பாற்றல் துறைகளும் உதவிப் பேராசிரியர் தாஸ்-க்கு தங்கள் ஆதரவை வெளிபடுத்தி பல ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியுள்ளன.

பல்கலைக்கழகங்களில் கருத்து சுதந்திரத்தின் மீதான காவிகளின் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அசோகா பல்கலைக்கழகம் தாக்கப்படுவது இது முதல் முறையல்ல.

முன்னதாக, 2021-ஆம் ஆண்டு மார்ச் 16 அன்று அரசியல் துறை பேராசிரியாராக இருந்த பிரதாப் பானு மேத்தா (Pratap Bhanu Mehta) ராஜினாமா செய்தார். பாசிச பா.ஜ.க அரசின் பல்வேறு நடவடிக்கைகளை விமர்சனம் செய்து பேசியும் எழுதியும் வந்ததால் மேத்தாவுக்கு மறைமுகமான நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. அதைக் கண்டிக்கும் விதமாக அப்பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறை பேராசிரியராக பணிபுரிந்து வந்த அரவிந்த் சுப்பிரமணியன் தனது பதவியை மார்ச் 18, 2021 அன்று ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

உயர்கல்வி நிறுவனங்களை காவிமயமாக்கும் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா‌.ஜ.க-வின் நடவடிக்கைக்கு இடதுசாரி மற்றும் ஜனநாயக சிந்தனை கொண்ட பேராசிரியர்கள் பெருந்தடையாக இருக்கிறார்கள். ஜனநாயகத்தின் மீது பற்றுக்கொண்ட பேராசிரியர்களின் ஆய்வுகள் பாசிஸ்டுகளுக்கு அச்சுறுத்தலாக அமைகின்றன. காவி பயங்கரவாத கும்பலால் இதனை சகித்துக் கொள்ள முடிவதில்லை.

எனவே, அறிவுத்துறையினரை தங்களுக்கு அடிபணிய வைக்கும் வேலைகளில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அவர்களுக்கு அடிபணிய மறுக்கும் அறிவுத்துறையினர் ஒழித்துக்கட்டப்படுகிறார்கள். ஒரு சிலர் ராஜினாமா செய்தே ஆக வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். மற்றும் சிலரோ ‘அரசுக்கு எதிராக சதி செய்தனர்’ என்று குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.


பொம்மி

அடுத்தடுத்த விலையேற்றங்கள்: இன்று தக்காளி! நாளை?

ரு மாதத்திற்கும் மேலாக உச்சத்திலிருந்த தக்காளி விலை ரூ.300, 200, 150-லிருந்து குறைந்து தற்போது ரூ.50 ரூபாய் வரை சரிந்துள்ளது. இருப்பினும் இப்போதும் அடிப்படை உழைக்கும் மக்கள் வாங்கி பயன்படுத்தும் அளவிற்கு தக்காளியின் விலை குறையவில்லை. தக்காளி எப்போது முன்பிருந்த விலையான ரூ.15, 20க்கு விற்கப்படும் என்பதே பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால், தக்காளிவின் விலை பழைய நிலைக்கு சரிந்தாலும் நம்மால் நிம்மதிகொள்ள முடியாது. இந்த மறுகாலனியாக்க காலகட்டத்தில் மீண்டும் மீண்டும் வெவ்வேறு பொருட்களின் விலை உயர்வதை தவிர்க்க முடியாது.

தக்காளி விலையுயர்வுக்கு என்ன காரணம்?

தற்போது ஏற்பட்டுள்ள இந்த தக்காளி விலை உயர்வால் சாதாரண  உழைக்கும்  மக்கள் மட்டுமின்றி  நடுத்தர  வர்க்கத்தினர், தள்ளு வண்டியில் உணவை  விற்பனை செய்வோர், சிறிய அளவில் ஓட்டல் கடை வைத்திருப்போர் என  பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இடைப்பட்ட காலத்தில் பலர் தக்காளி பயன்படுத்தி சமைப்பதையே நிறுத்திவிட்டனர்.

இந்த திடீர் விலை உயர்வுக்கு மோசமான வானிலை ஒரு காரணமாக கூறப்பட்டது. குறிப்பாக, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா  மற்றும்  மத்திய பிரதேசம்  போன்ற மாநில‌‌ங்களில் மோசமான வானிலை நிலவியதன் காரணமாகவும் வட மாநிலங்களில் கன‌மழையால் தக்காளி  உற்பத்தி கடும் பாதிப்புக்கு உள்ளாகியதாலும்  கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் 60 முதல் 80 லோடுகள் 30 ஆக குறைந்ததுதான் விலையேற்றத்திற்கு காரணம் என்று பேசப்பட்டது.

ஆனால், இவையெல்லாம் அடிப்படையான காரணங்கள் இல்லை. உலகமயமாக்கலுக்கு பிறகு, நாட்டின் சுயத்தேவையை நோக்கமாக  கொண்ட  பாரம்பரிய  விவசாயமுறையை அழித்து வெறும் லாபத்திற்காக மட்டும் பயிரிடும்  விவசாயமுறை  விவசாயத்துறையில் கொண்டுவரப்பட்டதே முக்கியமான காரணம்.

1990களில் கொண்டு வரப்பட்ட உலகமயமாக்கல் கொள்கைக்கு பிறகு சந்தையின்  முடிவே அரசின் கொள்கை முடிவானது. இந்த கொள்கையின் அடிப்படையில் ஆட்டோமொபைல் துறையில் மலிவு விலையில் கார், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மின்னணு துறையில்  சகல வசதிகளும் கொண்ட செல்போன், கணினி ஆகியவற்றின் விலைகள் வெகுவாக குறைந்தன. ஆனால், விவசாயத்துறையில் எதிர்மறையாக நடந்தது. அடிப்படையான உணவு பொருட்கள் அனைத்தும் மக்களுக்கு எட்டாக்கனியாகியது.


படிக்க: விலைவாசி உயர்வு: காரணம் என்ன? தீர்வு என்ன? | தோழர் வெற்றிவேல்செழியன்


இதுபோன்ற விலை உயர்வு எப்போதாவது ஒருமுறை வரும் என்ற நிலை மாறி, உலகமயமாக்கலுக்கு பிறகு  விலைவாசி உயர்வு என்பது  நிரந்தரமான  நிகழ்ச்சி போக்காக மாறியது.

சான்றாக, வானிலை இயக்கத்தை  கண்காணித்து  புயல்  மழை வருவதற்கு முன் எச்சரிக்கை  செய்யப்படுகிறது.  அதேப்போல    புதிய  வகை நோய் பரவுகிறது என்றால்  அதற்கும் எச்சரிக்கை விடப்படுகிறது. கணினியில் உலகையே  கண்காணிக்கும்  போது  தக்காளி  விளைச்சலை  கண்காணித்து  முறைப்படுத்த முடியாதா? முடியும், ஆனால் அது அரசின் கொள்கை முடிவுக்கு எதிரானது. இதன் பொருள், மாநிலம் அல்லது நாட்டின் உழைக்கும் மக்கள் நலனில் இருந்து பொருளாதார கொள்கை திட்டமிடப்படாமல் கார்ப்பரேட் முதலாளிகளின் லாபத்தை அடிப்படையாகக் கொண்டு ‌ அரசு  செயல்படுவதே.

விவசாயதுறையை அரசு முதன்மைப்படுத்தி செயல்படக்கூடாது என கோரும் முதலாளித்துவ பொருளாதார கொள்கையின் விளைவுதான் விலைவாசி உயர்வு. அது வேலையில்லா திண்டாட்டத்தை ஒருங்கே கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, காய் கனிகள், சமையல் எண்ணெய் மற்றும் இதர பொருட்கள் விலையேற்றம், பெட்ரோல் டீசல் விலையுயர்வு என தேச அளவிலும் சர்வதேச அளவிலும் விலையேற்றம் என்ற பெயரில் மக்களின் சேமிப்பும் வாழ்க்கையும் சூறையாடப்படுகிறது.

பலரை சுரண்டி வெகு சிலர் சொகுசாக வாழ்வதை அடிப்படையாய்   கொண்டிருப்பதை  போல,  விலையுயர்விலும், வேலையில்லா திண்டாட்டத்திலும் முதலாளித்துவம் உயிர்  வாழ்கிறது!

கார்ப்பரேட் நலனே அரசின் கொள்கை முடிவு:

வருடத்தில் எல்லா காலங்களிலும் அல்லது  எல்லா வருடங்களிலும்   ஒரே மாதிரியான  காலநிலை இருப்பதில்லை. அப்படியானால் இதனைத்  கணக்கில் கொண்டு,  காய்கறி  பழங்களை பாதுகாத்து முறைப்படுத்த அரசிடம் பெயரளவிற்கு  கூட  திட்டம்  இல்லை.

மாறாக, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அவர்களது உற்பத்திக்கு தேவையான கச்சா பொருட்களை கொண்டு செல்லவும், உற்பத்தியான பொருட்களை எடுத்துச் செல்லவும்   நான்கு, ஆறு மற்றும் எட்டு வழி சாலைகள், துறைமுகம் – விமான நிலையம் விரிவாக்கம் என பல லட்சம் கோடிகளை முதலாளிகளின் நலனுக்கு அரசு வாரி இறைக்கிறது. ஆனால், தக்காளி மற்றும் இதர காய் கனிகள் விளைச்சல் அதிகமாக  இருக்கும் போது அதனை குளிர் பதன கிடங்குகள் அமைத்து பாதுகாக்கவும் பிற அடிப்படை  வசதிகளை  செய்து  தரவும் திட்டமிட்டே  மறுக்கின்றன மத்திய, மாநில அரசுகள்.


படிக்க: விலைவாசி உயர்வு: அசாம் முதல்வர் சர்மா முஸ்லீம் வெறுப்பு பேச்சு!


அடுத்தது இடைத்தரகர்கள் கொள்ளையால்தான்  விலையுயர்வு என  சொல்வோர்கள்  நம்  நாட்டின் வணிக கட்டமைப்பை புரிந்து கொள்ளாதவர்கள். சிறு கடை, சிறு வணிகம், தரைக்கடை, தள்ளு வண்டி வியாபாரங்களானது மாநகர் முதல் சிறு நகரம்,   கிராமப்புறம்  வரை  நடைபெறுகிறது. சிறு வணிகம் நீடிக்கும்  வரை   இடைதரகர்கள்  வணிக சங்கிலியில் நீடிக்கத்தான் செய்வார்கள்.

கார்ப்பரேட்டுகளுக்கு இடைதரகர்களை கண்டால் வேப்பங்காயாய் கசக்கிறது. இடைதரகர்கள் பிரபுத்துவ எச்சங்களுடன் அறநெறி பேசி சுரண்டுகிறார்கள் என்றால் கார்ப்பரேட்டுகள் தரம்  – சுத்தம் என்ற பெயரில் சுரண்டுகிறார்கள். இரு தரப்பினருமே மக்களின் நலனிற்கு எதிரானவர்கள்தான். ஆனால், விலைவாசி உயர்வுக்கு இடைத்தரகர்கள்தான் காரணம் என்று பிரச்சாரத்திற்கு பின்னால் கார்ப்பரேட்களின் நலனுக்காக திட்டமிட்டே விவசாயம் அழிக்கப்படுவது மூடி மறைக்கப்படுகிறது.

மேலும், தக்காளி விலை உயர்வுக்கு மாநில அரசு மாற்றாக முன்வைத்த திட்டங்களும் பிரச்சினையை தீர்க்கவில்லை. அப்படியானால் அரசு என்ன செய்ய வேண்டும்? போர்க்கால அடிப்படையில் “வெளிமாநிலங்களிலிருந்து தனியார் வியாபாரிகள் – சங்கிலி தொடர் கார்ப்பரேட் நிறுவனங்கள் யாரும் தக்காளியை கொள்முதல் செய்யகூடாது” என உத்தரவிட்டு, அரசே கொள்முதல்  செய்து மக்களுக்கு  நியாயமான  விலையில் கொடுக்கலாம் அல்லவா? ஸ்டெர்லைட் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களை எதிர்த்து  மக்கள் போராடினால் அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி  மாநிலத்தையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து மக்களை ஒடுக்குகிறது. இங்கே சில நூறு அல்லது ஆயிரம்  வியாபாரிகளிடம், “நிலைமை சீரடையும் வரை ஒத்துழைப்பு தாருங்கள்” என ‌ஏன் உத்தரவிட முடியாது? ஆனால், அரசு அதை செய்யாது. மக்கள் நலனில் அக்கறை கொள்ள கூடாது என்பதே அரசின் கொள்கை முடிவு.

இதனை மக்கள் ஆழமாக புரிந்துகொள்ளாததின் விளைவுதான் விலையுயர்வு குறித்து கார்ப்பரேட் ஊடகங்கள் மக்களிடம் கேள்வி எழுப்பினால், “அரசாங்கம் பார்த்து ஏதாவது செய்ய வேண்டும்” என்கின்றனர். அரசியல் ரீதியில் சொல்வதென்றால், “அரசு என்பது  ஆளும் முதலாளித்துவ வர்க்கத்தின் கைக்கருவி என்பதை மக்கள்  உணராத வரை அரசியலில் மக்கள் முட்டாளாக்கப்படுவதை தடுக்க முடியாது” என்ற ஆசான் லெனின் கூற்றையே நாம் நடைமுறையில் பார்க்கிறோம்.

திட்டமிட்ட பொருளாதார கொள்கையே விலைவாசி உயர்வை கட்டுபடுத்தும்:

முதலாளித்துவத்தில் மற்ற பண்டங்களை போலவே உழைப்பு சக்தியும் பண்டமான பிறகு  அதற்குரிய விலை கொடுக்கப்படுவதில்லை. ஆலைகளில் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் ரூ.15,000 அல்லது அதற்கு குறைவாகவே ஊதியம் பெறுகின்றனர். கார்மென்ட்ஸ் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.8,500 அல்லது ரூ.9,000 மட்டுமே ஊதியமாக தரப்படுகிறது. ஆக பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் உழைப்பு சக்திக்கு உரிய விலை கிடைப்பதில்லை.

உழைப்பு சக்தி மிக மிக மலிவான விலையில் கிடைக்கும் படியான சமூக நிலையை தொடர்ந்து பராமரிப்பதும் விலைவாசி உயர்வும்  ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவை. பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் ஆசான் மார்க்ஸ் கூறுகையில், “தேவையும் (Demand) அளிப்பும் (Supply) ஒன்றின் ஏற்ற இறக்கத்தை  இன்னொன்றின்  ஏற்ற  இறக்கத்தின்  மூலமும்,  ஒரு விலையுயர்வு ஒரு வீழ்ச்சியின் மூலமும், ஒரு வீழ்ச்சி ஒரு விலையுயர்வின்  மூலமும் ஈடுசெய்து கொள்கிறது. தேவையையும் அளிப்பையும் தொடர்ந்து சமன் செய்ய அன்றாடம்  முயற்சிக்க வேண்டும்” என்றார்.

இம்மாதிரியான முதலாளித்துவ பொருளுதார கொள்கையின் விளைவு இன்றைய உலகமயமாக்கலுக்கு பொருந்துவதை பார்க்கிறோம். இதன் விளைவாய், இன்னும் சில மாதங்களில் தக்காளி விலை  குறையும்,  ஆனால் வேறொரு பொருளின்  விலை  உயரும்.

முடிவே இல்லாமல் சுழலும் இந்த விஷ சுழற்சி மக்களை இதுபோன்ற அநீதிக்கு  பழக்கப்படுத்தி  சிந்திக்க  முடியாத அளவிற்கு சலிப்படைய செய்யும். இதை  நோக்கமாகக் கொண்டதே, அரசின் திட்டமிடல் மற்றும் கொள்கை முடிவு. விரல்விட்டு எண்ணக்கூடிய  சிறு  கும்பலுக்கான  கார்ப்பரேட்  முதலாளி வர்க்கத்தின் நலனுக்காக  நடத்தப்படும் ஆட்சியின் இத்தகைய பொருளாதார கொள்கை இப்படிப்பட்ட விலை உயர்வை தினந்தினம் கொண்டுவரும்.

ஆளும் முதலாளித்துவ வர்க்கத்தையும் அவர்களின் அடியாள் படையான அரசையும்  தூக்கியெறிந்து பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் அமைக்கப்படும் சோசலிச சமூகம் – அதன் திட்டமிட்ட பொருளாதார கொள்கையே விலைவாசி உயர்வையும்,  வேலையில்லா திண்டாட்டத்தையும் கட்டுப்படுத்தும். ஏனெனில் தனியார்  லாபம்  என ஏதுமன்றி நாட்டு  மக்களின்  நலனே பாட்டாளி  வர்க்க  அரசின்  கொள்கை முடிவு!


ஆ.கா.சிவா

காவிகள் கார்ப்பரேட்டுக்காகத்தான் கலவரத்தை தூண்டுறாங்க! | தோழர் ஆ.கா.சிவா

காவிகள் கார்ப்பரேட்டுக்காகத்தான் கலவரத்தை தூண்டுறாங்க!
– தோழர் ஆ.கா.சிவா

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ப்ளீஸ் செத்துப் போவதற்குள் ஒரு முறையாவது சொல்லிவிடு ! வந்தே மாதரம் | கவிதை

வந்தே மாதரம் !

ப்ளீஸ் செத்துப் போவதற்குள் ஒரு முறையாவது சொல்லிவிடு !
வந்தே மாதரம்

வந்தே மாதரம்
இங்கு ஒருபோதும்
கிடைக்காது சுதந்திரம் !

மணிப்பூர் ,ஹரியானா
………. மறக்க முடியாத கனவுகள் இவை !

காஷ்மீர் தொடங்கி
பாபர் மசூதி வரை
கயர்லாஞ்சி தொடங்கி நாங்குநேரி வரை
ஒவ்வொரு ஆண்டும்
மறையாத வடுக்களின் எண்ணிக்கைகள் கூடிக் கொண்டே செல்கின்றன !

காலையில் கண்ணாடியை பார்க்கும் பொழுது தெரிகிறது
முகம் முழுக்க வடுக்கள்!

கல்வி முதல் காடு, மலை, கழனி வரை எல்லாம் தனியாருக்கு !

கோபுரம் முதல் கருவறை வரை அத்தனையும் அய்யருக்கு !
எங்கே இருக்கிறது சுதந்திரம்?

நடக்க
படிக்க
உடுக்க
சுவைக்க
விதைக்க
வழிபட
எதற்கும் இல்லை சுதந்திரம்!

இது சுதந்திர தினம்!

வேங்கை வயலில் என் முகத்தில் வழிந்த பீயை துடைத்துக் கொண்டே சொல்லட்டுமா?
வந்தே மாதரம் !

மணிப்பூர் தாய்மார்கள்
கும்பல் பாலியல் வன்முறையில்…..
சிதறிய குருதியை துடைத்துக் கொண்டே சொல்லட்டுமா ?
வந்தே மாதரம் !

டாக்டருக்கு படிக்க
25 லட்சம் !
வழியின்றி அப்பனும் மகனும் தூக்கில் தொங்க
எரித்த சாம்பல் கண்ணில் விழுகிறது !
இருந்தாலும் சொல்லி வைக்கிறேன்
இதற்குப் பெயர்தான் சுதந்திரம் !

கல்வி நிலையங்கள்
தொழிற்சாலைகள்
விவசாய நிலங்கள்
சிறு தொழில்கள்
எல்லாம் மடிவதற்காக காத்திருக்கின்றன
கூடவே கோடிக்கணக்கான மக்களும் !

செத்துப் போவதற்குள் ஒருமுறையாவது சொல்லி விடுங்களேன் ! வந்தே மாதரம்

செத்துப் போவதற்குள் ஒரு முறையாவது செல்பி எடுத்து விடுங்களேன் !

ஜெய்ஹிந்த்
வந்தே மாதரம்
சுதந்திரம்
ஜனநாயகம்
புரியாத பாஷைகளை
ஜெபிக்க வேண்டுமாம்!

ஆண்டவர்
கழுத்தை அறுத்துக் கொண்டே கட்டளை இடுகிறார்!

ஆண்டவரையும் அதானிகளையும் எதிர்க்காமல் ஒருபோதும் நமக்கு சுதந்திரம் கிடைக்காது!
மூச்சு விடவும் முடியாது!

தெரியாமல் இல்லை என்னதான் இருந்தாலும் என்று இழுப்பவர்களுக்கு
கொடியை நெஞ்சில் குத்தாதீர்கள்
வாயில் குத்துங்கள்.

-மருது

மக்கள் போராடும்போது களத்தில் நிற்க வேண்டும் | தோழர் திலகவதி

மக்கள் போராடும்போது களத்தில் நிற்க வேண்டும் | தோழர் திலகவதி

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

கல்வியை காவிமயமாக்கும் நடவடிக்கை!

ந்தியா முழுவதுமுள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் முதுகலைப் பாட பிரிவில் புதிதாக சுவடியியல் (Manuscriptology) மற்றும் தொல்லெழுத்தியல் (Paleography) ஆகிய பாடங்களுக்கான பாடத் திட்டத்தை வடிவமைக்க சிறப்புக் குழு ஒன்றை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நிறுவியுள்ளது.

தேசிய சுவடியியல் திட்டக்குழுவின் முன்னாள் இயக்குநர் பிரபுல்லா மிஸ்ரா தலைமையில் 11 பேர் கொண்ட இக்குழுவில், ஐஐடி மும்பையின் பேராசிரியர் மல்ஹர் குல்கர்னி, குஜராத் பல்கலைக்கழகத்தின் மொழிப்பள்ளியின் முன்னாள் இயக்குநர் வசந்த பட் மற்றும் டெல்லி என்.சி.இ.ஆர்.டி.யின் சமஸ்கிருதப் பேராசிரியர் ஜதீந்திர மோகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இக்குழுவைக் கொண்டு சுவடியியல் மற்றும் தொல்லெழுத்தியல் ஆகிய பாடங்கள் சிறப்பு பாடமாகவோ அல்லது தேர்வு பாடமாகவோ (elective) வடிவமைக்கப்படும். சுவடியியல் பாடம் மூலம் கைகளால் எழுதப்பட்ட வரலாறு, இலக்கியம் ஆகியவற்றின் ஆவணங்களையும், தொல்லெழுத்தியல் பாடம் மூலம் பழங்கால, இடைநிலை எழுத்து முறைகளையும் ஆய்வு செய்யலாம் என்று கூறப்படுகிறது.

படிக்க : ஆசிரியர்களை கற்பித்தல் பணியில் இருந்து அகற்றும் திட்டமே மணற்கேணி | ஆசிரியர் உமா மகேஸ்வரி

இது தேசிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்ட இந்திய அறிவு முறையை மேம்படுத்துவதன் ஒரு பகுதியாகும் என்கிறார் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் யுஜிசி தலைவருமான ஜெகதேஷ் குமார். மேலும், பல்வேறு இந்திய மொழிகளில் எழுதப்பட்ட பண்டைய கையெழுத்து பிரதிகள், தத்துவம், அறிவியல், இலக்கியம் மற்றும் மதம் உள்ளிட்ட பரந்த அளவிலான பாடங்களை இது உள்ளடக்கியது என்கிறார் ஜெகதேஷ் குமார். இத்தகைய பாடத் திட்டங்கள் பல்கலைக்கழகங்களால் உடனடியாக ஏற்றுகொள்ளப்படலாம் என்றும் கூறுகிறார்.

தத்துவம், அறிவியல், இலக்கியம் என்று இவர் கூறவருவது என்ன? பிள்ளையாருக்கு யானை தலையை ஒட்ட வைத்த பிளாஸ்டிக் சர்ஜரி தொழில்நுட்பம், புற்றுநோயை குணப்படுத்த மாட்டு மூத்திரம், ராமாயணத்தில் விமானம், அர்ஜூன் பயன்படுத்திய அணுசக்தி அம்புகள், மனுஸ்மிருதி தத்துவம், வேத இதிகாச வரலாறு என அடுக்ககடுக்கான பொய்களையும் புராண குப்பைகளையும் கொட்டுவதைதான்.

இதுமட்டுமல்ல மேற்கூறிய பாடங்கள் நாட்டின் பன்முகத்தன்மையை வளர்ப்பதற்கும் அதன் பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கும் முக்கியத்துவம்வாய்ந்ததாக இருக்கும் என்று புளுகுமூட்டையை கட்டவிழ்த்துவிடுகிறார்கள். ஆனால், இப்பாடத் திட்டத்திற்கான 75 சதவிகித கையெழுத்து பிரதிகள் சமஸ்கிருதத்தில்தான் உள்ளது என்றும் மற்ற பிராந்திய மொழிகளில் வெறும் 25 சதவிகிதம்தான் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.

அதாவது இப்பாடத் திட்டத்தைக் கொண்டுவருவதன் மூலம் செத்து புதைந்து போன சமஸ்கிருத மொழியை மீட்டுருவாக்கம் செய்வதும் புராண குப்பைகளை ஆவணம் செய்வதும்தான் நடக்கபோகிறது.

படிக்க : அரசுப் பள்ளிகளில் கல்வி வியாபாரிகள்? | ஆசிரியர் உமா மகேஷ்வரி

பன்முகத் தன்மையை வளர்ப்பதாக கூறும் இவர்கள் கடந்த காலத்தில் சமஸ்கிருதத்திற்கும் பிற மொழிகளை மேம்படுத்தவும் எடுத்த நடவடிக்கைகளை ஒப்பிட்டு பார்த்தாலே புரிந்துகொள்ள முடியும். கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ் மொழி மேம்பாட்டுக்கு ரூ.22.94 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. இதுவே சமஸ்கிருதத்தை மேம்படுத்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.643 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது. இது இதர 5 மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகியவற்றுக்கு செலவிடப்பட்ட மொத்த தொகையான ரூ.29 கோடியை விட 22 மடங்கு அதிகம் என மத்திய கலாச்சார அமைச்சகத்தின் தகவல்கள் கூறுகின்றன. மேலும், 2020-ஆம் வரை ஒடியா மற்றும் மலையாளம் மொழிக்களுக்கு வளர்ச்சி மையங்களே அமைக்கப்படவில்லை; நிதியும் ஒதுக்கப்படவில்லை.

இதனை சாதாரண விஷயமாக கடந்து செல்லமுடியாது. 2014-ஆம் ஆண்டிற்குப் பிறகு, பள்ளி கல்வி பாடத் திட்டங்களில் பல மாற்றங்களைக் கொண்டு வரும் பாசிச பா.ஜ.க.வின் கல்வியை காவிமயமாக்கும் மற்றொரு நடவடிக்கை இது.

ஆதினி

அனிதாவும் ஜெகதீஸ்வரனும் நம்மிடம் நீட்-ஐ ஒழியுங்கள் என்கிறார்கள் | தோழர் செல்வம்

நேற்று அனிதா இன்று ஜெகதீஸ்வரன்:
நம்மை கேட்கிறார்கள் அநீதியான நீட்-ஐ ஒழியுங்கள் என்று | தோழர் செல்வம்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஃபயாஸ்தின்கள் உருவாகிறார்கள் ஜெகதீஷ்வரன்களால்! | கவிதை

ஃபயாஸ்தின்கள் உருவாகிறார்கள் ஜெகதீஷ்வரன்களால்!

தூரத்தில் கேட்டது இடிமுழக்கம்!
எங்கோ வானம் குமுற
நனையாமல் ஒதுங்கி நின்றான்!

இப்போது
அவனருகில் மரண ஓலம்!
வெடித்து எழாமல்
வேறு என்ன செய்வான்?

எத்தனை கணம் தெரியுமா உங்களுக்கு
ஜெகதீஷின் பிரேதம்!
தோளில் சுமந்தவனை கேளுங்கள்..
நிறைவேறா கனவும் சேர்ந்த சுமை அது!

போராட வருகிறேன் எனச் சொன்ன
தந்தையும் தனயன் வழி போகினார்!
இதயம் ஒன்றுதானே இருக்கிறது
இரண்டு வலிகளை எப்படி சுமப்பது?

அனிதா ஓரிடம்!
ஜெகதீஷோ வேறிடம்!
நீட் பலிபீடம் என்னவோ ஒன்றுதான்..

ஹேஷ்டேக்கில் நீதி தேவைவில்லை ஜெகதீஷ்வரன்களுக்கு!
களத்தில் இறங்குகிறார்கள் ஃபயாஸ்தின்கள்!

பணமிருப்பதால் பிரபஞ்சன்கள் மருத்துவர் ஆகிறார்கள்!
இல்லை என்பதால் ஜெகதீஸ்வரன்கள் மண்ணுக்குள் போகிறார்கள்!
இந்த உண்மையை புரிந்துகொண்டதால் ஃபயாஸ்தின்கள்
நீதி கேட்கிறார்கள்!
நாம் என்ன செய்யப் போகிறோம்?

தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும்
அது டார்வின் தியரி!
பிழைத்திருக்க ஒரே தகுதி பணம் மட்டுமே
இது கார்ப்பரேட் தியரி!

பணம் மட்டுமே குறிக்கோள்!
அது ஃபயாஸின் பணமாயிருந்தால் என்ன?
ராபர்ட்டின் பணமாயிருந்தால் என்ன?
கார்ப்பரேட் ஏற்றுக் கொள்ளும்!
காவியும் வழிகாட்டும்!

அன்று அனிதாவிற்கு வைத்த கொள்ளி
இன்று ஜெகதீஷை பற்றிக் கொண்டது!
நாளை இது செந்தீயாய் சுழன்றடிக்கும்!
பாசிஸ்டுகளை அது கொளுத்தும்!

நாம் ஒன்றிணைந்தால் ஜெகதீஷ்வரன்கள் இறப்பதை தடுக்க முடியும்!
ஆனால் ஃபயாஸ்தின்கள் உருவாவதை அவர்களால் ஒருபோதும் தடுக்க முடியாது!

அனிதா, ஜெகதீஷ் போல முடிவெடுக்காதீர்கள் என கலங்குபவர்களே!
ஃபயாஸ்தின்கள் களமிறங்குகிறார்கள்
கரம் கொடுப்போம்!

– செங்குரல்

ஏன் ஆர்.எஸ்.எஸ் – பிஜேபியை தடை செய்ய வேண்டும்? | தோழர் அமிர்தா

ஏன் ஆர்.எஸ்.எஸ் – பிஜேபியை தடை செய்ய வேண்டும்?
Why RSS – BJP should Ban? | Comrade Amirtha

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!