Friday, June 2, 2023
முகப்புகோடீசுவர வேட்பாளர்கள்! கோவணத் துணியோடு மக்கள்!! ...
Array

கோடீசுவர வேட்பாளர்கள்! கோவணத் துணியோடு மக்கள்!!

-

vote

மதுரை நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மு.க. அழகிரி, “தி.மு.க. கூட்டணி வேட்பாளர் அழகிரி வந்திருக்கேன், எனக்கு ஓட்டுப் போடுவீங்களா?” என்று அழகம்மா என்ற வாக்காளரிடம் கேட்க, அவரோ நாங்க ஓட்டுப் போடுவோம் நீங்க எப்ப நோட்டைப் போடுவீங்க?” என்று எதிர்கேள்வி கேட்டிருக்கிறார். இந்தியத் தேர்தலில் பணநாயகம் பல்லிளிப்பதைக் காட்டும் ஒரு சோற்றுப் பதம் இது.

தேர்தலில் வாக்குறுதிகளைக் கொடுத்த காலம் போய், கொள்ளையடிப்பதில் மக்களுக்கும் பங்காக இலவசங்கள்கொடுத்த காலமும் போய், ஒரு ஓட்டுக்கு இவ்வளவு ரூபாய், எங்க வீட்டில் இவ்வளவு பேர், இவ்வளவு ரூபாய் கொடுங்கள் என வாக்காளர்களே, வேட்பாளரைத் தேடிச் செல்லும் புதியதொரு பரிணாமத்தை இந்தியத் தேர்தல் களம் தொட்டுள்ளது. திருமங்கலம் இடைத்தேர்தல் தந்த படிப்பினையில் வாக்காளர்கள் இவ்வாறு விழிப்படைந்திருப்பதால், அதற்கேற்ப அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலையும், தேர்தல் பட்ஜெட்டையும் தயாரித்துள்ளன.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைப் பார்த்தாலே இது புரிந்துவிடும். தி.மு.க. சார்பில் ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிடுபவர் திரைகடல் ஓடி திரவியம் தேடிய டி.ஆர்.பாலு. மன்மோகன் அரசில், கப்பல் போக்குவரத்துத் துறையின் அமைச்சராக உழைத்துச் சேர்த்தபணத்தைக் கொட்டியிறைத்து எந்தத் தொகுதியையும் தேர்தல் சமயத்தில் வளமாக்கக் கூடியவர் என்பதால், அன்னாருக்கு எல்லாத் தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு அதிகம்.

அடுத்தது, மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன். சன் டி.வி., தினகரன் பத்திரிக்கை எனப் பெரும் ஊடகங்களைக் கையில் வைத்துக் கொண்டு தி.மு.க.வையே ஒரு கலக்கு கலக்கியவர். ஊடக பலமும் பண பலமும் ஒருங்கே அமைந்த இவரது வளர்ச்சி கண்டு கருணாநிதியின் குடும்பமே கதிகலங்கிப் போனது. இந்தக் கலக்கத்தின் விளைவாகக் கல்லாக் கட்டிய ஸ்பெக்ட்ரம் புகழ் ராசாவோ நீலகிரி தொகுதியில் நிற்கிறார்.

தி.மு.க.வின் தென்மாவட்டத் தளபதி, கட்டப்பஞ்சாயத்து புகழ், அஞ்சா நெஞ்சன் அழகிரி மதுரைத் தொகுதி வேட்பாளர். இவர் தங்களது தொகுதியில் நிற்கிறார் எனக் கேள்விப்பட்டதும், மதுரையே திருமங்கலமாக மாறிவிட்டதாக உடன் பிறப்புகள் கொண்டாடினர். எதிர்க் கட்சிகள் பீதியில் உறைந்திருக்க, அன்னாரோ சிறிதும் கூச்சமின்றி எதிர்க்கட்சியினரால் தனக்கு ஆபத்து எனத் தேர்தல் கமிசனிடம் மனுக் கொடுத்திருக்கிறார்.

இம்முறை தி.மு.க. சார்பில் இரண்டு சினிமா நடிகர்கள் போட்டியிடுகின்றனர். தகவல் தொழில்நுட்ப நிறுவனம் நடத்திக்கொண்டு டாலர்களில் புரளும் மாவீரன் நெப்போலியன் பெரம்பலூர் தொகுதியிலும், தான் நடித்த சினிமாக்களுக்கு நூறுரூபாயும், பிரியாணியும் தந்து ரசிகர்களைத் திரையரங்குக்கு வரவழைக்கும் அளவிற்கு சேர்க்கப்பட்டபணத்தை அள்ளி இறைத்திட்ட வீரத் தளபதி’, ‘வள்ளல்ஜெ.கே ரித்தீஸ் ராமநாதபுரம் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். கந்து வட்டி பினாமியான ரித்தீஸ். தனது தொகுதிக்கு மட்டும் செலவு செய்யாமல், தென்மாவட்டங்களின் அனைத்துத் தொகுதிகளுக்கும் பணம் கொடுப்பதாகவும், தான் வெற்றி பெற்றால் தி.மு.க. ஒன்றியச் செயலாளர்கள் அனைவருக்கும் அவர்கள் பெயரிலேயே கார் வாங்கித் தருவதாகவும் வாக்களித்துள்ளார்.

இவர்கள் மட்டுமன்றி, கல்லூரிகள் கட்டிக் கல்லா கட்டிக்கொண்டிருக்கும் ஜெகத்ரட்சகன், தமிழகம், கர்நாடகம் என மாநிலம் கடந்து கல்வித் தொழில் நடத்தும் தம்பித்துரை, நிலக்கரி ஊழல் புகழ் ராஜ கண்ணப்பன், பா.ம.க.வின் மாவீரன்காடு வெட்டி குரு என அனைத்துக் கட்சிகளிலும் உள்ள ஊழல் பெருச்சாளிகள், கிரிமினல் குற்றவாளிகள், கந்து வட்டி, கருப்புப் பணப் பினாமி பேர்வழிகள் அனைவரும் இந்தத் தேர்தலில் களம் காணுகின்றனர்.

தேர்தலில் நின்று பொறுக்கித் தின்ன வேண்டுமா? வெறும் ஐந்து கோடியிருந்தால் போதும்; எங்கள் கட்சியின் சார்பில் நில்லுங்கள் என விளம்பரம் செய்யாத குறையாக எல்லாக் கட்சிகளும் கூவியழைக்கின்றன. கல்வி வியாபாரத்தைப் போன்று தேர்தல் வியாபாரமும் படுஜோராக நடைபெறுகிறது.

···

தேர்தலில் வெற்றி பெறுவதற்காகப் போட்டியிடுவது என்றில்லாமல், ஓட்டுக்களைப் பிரிப்பதற்காகப் பணம் வாங்கிக்கொண்டு போட்டியிடும் பினாமி அரசியலை, ஒரு கிளைத் தொழிலாகவே, தே.மு.தி.க. உருவாக்கியுள்ளது. காங்கிரசின் பினாமியாக தேர்தலில் நின்று ஓட்டுக்களைப் பிரிப்பதற்குக் கூலியாக வாங்கிய பணத்தில் தனது பல கோடி கடனை அடைத்தது தே.மு.தி.க., தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் 21 தொகுதிகளில் போட்டியிட ஆள்தேடிக் கொண்டிருந்த போது, 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துச் சூடு கிளப்பினார், விஜயகாந்த். நாற்பது தொகுதிக்கும் வேட்பாளருக்கு இவர் எங்கே போவார்? என்னதான் கடவுளுடன் கூட்டணி கட்டினாலும் தேர்தல் செலவுக்கு உண்டியலிலா கை வைக்க முடியும்? யாரிடம் கையேந்துவார்? எனத் தமிழகமே எதிர்பார்த்திருந்தது.

தேர்தலில் முதலீடு செய்யுமளவுக்கு பணம் உள்ளவர் யாராயிருந்தாலும், எந்தக் கட்சியில் இருந்தாலும் அவர்களுக்கு தே.மு.தி.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு உறுதி என அறிவிக்காத குறையாக, கல்வித் தந்தைகளையும், ரியல் எஸ்டேட் தரகர்களையும், தரகு முதலாளிகளையும் வேட்பாளர்களாக தே.மு.தி.க. நிறுத்தியுள்ளது. மாஃபா எனும் நிறுவனத்தின் மூலம் வெளி நாட்டு, உள் நாட்டு நிறுவனங்களுக்கு ஆளனுப்பும் உலகமயத் தரகர் மாஃபாபாண்டியராஜன் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடுகிறார்.

திண்டுக்கல்லில் இக்கட்சியின் வேட்பாளரான முத்துவேல் ராஜு, உலகமயத்தினால் பலனடைந்து பெரும் பணக்காரரானவர். சென்னையிலும் அமெரிக்காவிலும் கணிணி மென்பொருள் தொழிலுக்கு ஆட்களைப் பிடித்து அனுப்பித் தரகு வேலை பார்க்கும் இவர், அமெரிக்கத் தேர்தலில் ஜனநாயகக் கட்சிக்கே நன்கொடை தரும் அளவிற்கு முன்னேறியவர்’. தமிழகத்தில் சுயநிதிக் கல்லூரிகள் கட்டி தே.மு.தி.க. மூலம் மக்களுக்குச் சேவை(!) செய்ய தற்போது களமிறங்கி இருக்கிறார், முத்துவேல் ராஜு.

ஆஸ்திரேலியாவில் படித்து திருப்பூரில் ஏற்றுமதி நிறுவன அதிபராகவும் ரியல் எஸ்டேட் முதலையாகவும் இருக்கும் தினேஷ்குமார் திருப்பூர் தொகுதியிலும்; மினரல் வாட்டர் நிறுவனம், ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஆரணி தொகுதியிலும்; மும்பையில் தொழில் நிறுவனம் நடத்தி, சென்னையில் சினிமா தயாரிக்கும் அளவிற்கு உயர்ந்திருக்கும் ராயப்பன் நெல்லை தொகுதியிலும் தே.மு.தி.க. சார்பில் நிற்கிறார்கள். ஆசியாவின் பெரும் பணக்காரரான தயாநிதியை எதிர்கொள்ள தே.மு.தி.க. நிறுத்தியுள்ள ராமகிருஷ்ணனோ, பல தொழில் நிறுவனங்களின் ஆலோசகர். தனியாக ஏற்றுமதி நிறுவனம் நடத்துபவர்.

ரியல் எஸ்டேட் தரகர்கள் துரை காமராஜ், தமிழ் வேந்தன், மகா.முத்துக்குமார், தொழிலதிபர்கள் ஆர்.பாண்டியன், பனியன் ஏற்றுமதி தொழிலதிபர் சண்முகசுந்தரம் எனத் தேர்தலில் முதலீடு செய்து பணம் சேர்க்க ஒரு படையே தே.மு.தி.க.வில் திரண்டுள்ளது.

···

வேட்பாளர் அறிவிப்பிலேயே தேர்தல் ஜனநாயகம் துகிலுறிந்து நிற்க, அதன் மானம் காக்கும் கலியுகக் கண்ணனாக அவதாரமெடுத்திருக்கிறது, தேர்தல் கமிஷன். தேர்தல் நடத்தை விதிகள் என்று புதிதாக எதையாவது இவர்கள் அறிவிப்பார்கள், உடனே அதனை அனைத்து ஓட்டுக் கட்சிகளும் எதிர்ப்பார்கள், பிறகு தேர்தல் கமிசனின் மிரட்டலுக்குப் பயந்து அனைத்துக் கட்சியினரும் அடிபணிவார்கள். இப்படிப் பிரமாதமான நாடகக் காட்சிகள் வரிசையாக அரங்கேறுகின்றன.

இந்தத் தேர்தல் கமிசனால் எதையும் கிழிக்க முடியாதென்பதை, திருமங்கலம் இடைத்தேர்தலில் பார்த்தோம். ரொக்கப்பணம், மொபைல் போன், விசிடி பிளேயர் என வாக்காளர்களை விழுந்து விழுந்து கவனித்ததை இவர்கள் பார்த்துக் கொண்டு சும்மாதான் நின்றார்கள். நடத்தை விதிகள், நடவடிக்கைகள் என்று திரைப்படத்தில் இடையிடையே வரும் நகைச்சுவைக் காட்சிகளை மிஞ்சும் இவர்களது மிரட்டலையும், அதற்குக் கட்டுப்படுவது போல நடிக்கும் வேட்பாளர்களின் திறமையையும் பார்த்து கோடம்பாக்கத்து வடிவேலே அசந்து போவார்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தனது சொத்துக் கணக்கை ஒப்படைக்க வேண்டும் என்ற விதிமுறை, எந்தப் பொருளாதார வீழ்ச்சியும் இதுவரைச் சாதிக்க முடியாததைச் சாதித்துள்ளது. பரம்பரைப் பணக்காரர்களையும், பல கோடிகளுக்கு அதிபதிகளையும் ஒரே இரவில் ஏதுமற்ற ஏழைகளாய் மாற்றிய சாதனையை அது செய்துள்ளது. இப்படி ஏழையானவர்களிலேயே அன்னைசோனியாவுக்குத்தான் முதலிடம். இவரது மொத்த சொத்தின் மதிப்பு வெறும் 18 லட்ச ரூபாய் மட்டும்தான். சொந்தமாக வீடு வாசலோ, காரோ கூட கிடையாது. அன்னைதான் இப்படியென்றால், அவரது மகன் ராகுல் காந்தியோ 23 லட்சம் கடனாளியாக நிற்கிறார். மிகப்பெரிய கோடீஸ்வர நேருவின் குடும்பத்தினர், காலம் காலமாக மக்களுக்குச் சேவைசெய்து, இன்று பரம ஏழைகளாகக் களத்தில் நிற்கின்றார்கள்.

காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து மக்களுக்குத் தொண்டாற்றுவதன் மூலம் தனது சொத்தே அழிந்தாலும் பரவாயில்லை எனச் சத்தியம்செய்து களத்தில் இறங்கியுள்ளார் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி. இவர் சென்றமுறை காட்டிய சொத்துக் கணக்கைவிட இம்முறை காட்டிய சொத்துக்கணக்கு குறைவாயிருப்பதே அந்த சத்தியத்தின்சாட்சி.

ஆந்திரத்தின் முன்னாள் முதல்வரும், ஏழைகளின் தோழனுமான சந்திரபாபு நாயுடு, 13 கோடி ருபாய் சொத்து வைத்திருந்தாலும், தனக்கென ஒரே ஒரு அம்பாசிடர் கார் மட்டுமே வைத்துள்ள எளிமையின் சிகரம்.

15 லட்ச ரூபாய் செல்பேசி, 5 லட்ச ரூபாய் கைக்கடிகாரம், 25,000 மதிப்புள்ள காலணிகள், கிலோக்கணக்கில் தங்கம், வெள்ளி, கர்நாடகா முழுவதும் சொத்துக்கள் என ராஜாங்கம் நடத்தி வருகிறார், பா.ஜ.க.வின் வேட்பாளர் குருடப்பா நாகமரபள்ளி.

விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் முதலில் களமிறக்கப்பட்டு பின்பு விலக்கிக் கொள்ளப்பட்ட வேலாயுதம் 171 கோடி நில மோசடி செய்த வழக்கில் சி.பி.ஐ.ஆல் விசாரிக்கப்படும் குற்றவாளி. இந்தியாவிலேயே அதிகளவு சொத்துக் கணக்குக் காட்டியுள்ள வேட்பாளர் ஆந்திராவின் லகடபதி ராஜகோபால். இவர் கணக்கு காட்டியுள்ளது மட்டும் 299 கோடிகள்.

ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் என் கட்சிக்கு இரண்டு நிரந்தர மந்திரி பதவி மட்டும் போதும் என்ற உயரிய கொள்கையுடன், தொடர்ந்து மத்திய அரசில் பங்கெடுத்து வருகிறது பா.ம.க. பா.ம.க.வின் ஆர். வேலு ரயில்வே அமைச்சராக இருந்து தன்னை செழுமைப்படுத்திக் கொண்டார். ராமாதாசின் அருந்தவப் புதல்வன் பின்வாசல் பேர்வழி அன்புமணி தேர்தலிலேயே நிற்காமல், ராஜ்யசபா மூலம் சுகாதாரத்துறை மந்திரியாகி எவ்வளவுமுடியுமோ அவ்வளவு சேவை செய்தார். இந்த தேர்தலிலும் இதே உயரிய கொள்கையை நடைமுறைப்படுத்த ராமதாசின் பா.ம.க. முதலீடு செய்து களம் இறங்கியுள்ளது.

இந்திய மக்களில் 77% பேர் ஒருநாளைக்கு ரூபாய் 20இல் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் நாட்டில், பத்து ராஜ்யசபை உறுப்பினர்கள் கணக்குக் காட்டியுள்ள அவர்களின் மொத்த சொத்து மதிப்பு 1,500 கோடி ரூபாய் என்று இந்தியா டுடேபத்திரிகை நடத்திய ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. பொய்க் கணக்கில் கூட ஏழைகளாக வேசம் கட்ட முடியாத அளவுக்கு சொத்துக் குவித்துள்ள, பண முதலைகளும், திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளும் தேர்தல் கமிசனால் ஒன்றும் செய்ய முடியாது என்ற தைரியத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் தங்களது சொத்துக் கணக்கை குறைத்துக் காட்டியுள்ளனர்.

அரசியல் அநாதைகளாகிப்போன சமத்துவ நாயகன் சரத், நடிகர் கார்த்திக் எல்லாம் ஒருவருக்கொருவர் ஆறுதலாக கூட்டுச் சேர்ந்து மொத்தமாக ஒரு ரேட்டுக்கு பேரம் பேசி வருகிறார்கள். இவர்களுக்கும், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி போன்றவர்களுக்கும் தமிழகத்தில் ஓரங்கட்டப்பட்ட பா.ஜ.க. ஆதரவளித்து வருகிறது. சமத்துவ நாயகன் சரத்திடம் ஒரு கோடி பேரம் பேசியது பா.ஜ.க., தொகுதிக்கு ஒரு கோடியா என்று வாயைப் பிளந்த நாட்டாமையை, மொத்தமாகவே ஒரு கோடிதான் என்று வாயடைத்தது பா.ஜ.க. கிடைத்த வரை அமுக்கலாம் என்று கமுக்கமாக ஒத்துக் கொண்டார், “மிஸ்டர்சமத்துவம்.

எல்லாக் கட்சியும் இவ்வாறு பணநாயகத்தில் மூழ்கி இருந்தாலும் சி.பி.எம். கட்சி மட்டும் எளிமை என யாரும் எண்ணி விட வேண்டாம். மதுரை மோகனும், நாகர்கோவில் பெல்லார்மினும் ஐந்தாண்டுகளாக நாடாளுமன்றத்தின் பல்வேறு நிலைக்குழுக்களில் பதவியில் இருந்தவர்கள்தான் .

பெரும் தொழில்நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் கருப்பட்டிப்பானைதான் இந்த நிலைக்குழுக்கள் என்பதும், சி.பி.எம். உறுப்பினர்களும் இந்தப் பானைக்குள் 5 வருடம் கைகளை வைத்திருந்தனர் என்பதும் ஆழ்ந்த பொருள்கொண்டது.

தேர்தல் என்பது இன்றைக்குப் பணம் முதலீடு செய்து அபரிமிதமாக லாபம் எடுக்கும் ஒரு தொழிலாக பயன்படுகிறது என்பதைத்தான் இந்த நிலைமைகள் காட்டுகின்றன. கட்சிகளெல்லாம் கார்ப்பொரேட் நிறுவனங்களாகவும், வேட்பாளர்களெல்லாம் அதன் முதலீட்டாளர்கள் போலவும், தேர்தலே ஒரு தொழிலாகவும் பரிணாமம் அடைந்துள்ளதுதான் 60 வருட இந்தியப் போலி ஜனநாயகம் கண்ட வளர்ச்சி. அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் ஊழல் படுத்தி முதலாளிகள் காரியம் சாதித்த காலம் போய், அரசு அதிகாரத்தில் நேரடியாக உட்கார்ந்து கொள்வதன் மூலம் தொழிலை இலாபகரமாக நடத்துவதற்காக அதிகார வர்க்கத்துடன் நெருங்குவதற்கும், தொழிலில் ஏகபோகமாக உருவாகத் தடையாக இருக்கும் விதிகளையே மாற்றிவிட நிலைக்குழுக்களில் ஒட்டிக்கொண்டு காரியம் சாதிக்கவும் தேர்தல் பயன்படுவதாலேயே தரகு முதலாளிகள் இந்தத் தேர்தலில் வகை தொகையின்றிக் களமிறங்கியுள்ளனர்.

இன்னொரு பக்கம் எந்த தொழிலும் பார்க்காமல் முதலாளிகளுக்கு அநீதியான ஒப்பந்தங்களை போட்டுக் கொடுப்பதன் மூலமும், நாட்டைக் கூட்டிக் கொடுக்கும் தரகு வேலை பார்ப்பதன் மூலமும் பல ஆயிரம் கோடிகளில் சுருட்டலாம் என்ற வாய்ப்பு சர்வ கட்சி கேடிகளையும், தரகு முதலாளிகளையும் ஒருங்கே ஈர்க்கிறது. பல கோடிகளைத் தேர்தலில் முதலீடு செய்யும் இக்கும்பல் மக்கள் பிரச்சினையைத் தீர்க்கும் என்று நம்பிக் கொண்டு இனியும் ஏமாற முடியாது.

பணம் காய்ச்சி மரமாக மாறி அம்பலமாகி நிற்கும் இந்தப் போலி ஜனநாயகத் தேர்தல் முறையையும் அது உறுதிப்படுத்தும் அதிகாரவர்க்க ஆட்சியையும் ஒழித்துக் கட்டினால்தான், உண்மையான மக்கள் ஜனநாயகத்தை உருவாக்க முடியும்.

புதிய ஜனநாயகம், மே’ 2009

தமிழிஷில் வாக்களிக்க…
தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க…
தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க….
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

  1. //தேர்தலில் வெற்றி பெறுவதற்காகப் போட்டியிடுவது என்றில்லாமல், ஓட்டுக்களைப் பிரிப்பதற்காகப் பணம் வாங்கிக்கொண்டு போட்டியிடும் பினாமி அரசியலை, ஒரு கிளைத் தொழிலாகவே, தே.மு.தி.க. உருவாக்கியுள்ளது. காங்கிரசின் பினாமியாக தேர்தலில் நின்று ஓட்டுக்களைப் பிரிப்பதற்குக் கூலியாக வாங்கிய பணத்தில் தனது பல கோடி கடனை அடைத்தது தே.மு.தி.க., தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் 21 தொகுதிகளில் போட்டியிட ஆள்தேடிக் கொண்டிருந்த போது, 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துச் சூடு கிளப்பினார், விஜயகாந்த். //

    என்டிடிவி ‘எக்ஸிட் போல்’: திமுக கூட்டணி-20: அதிமுக கூட்டணி-18: விஜய்காந்தால் கருணாநிதிக்கு லாபம்!
    http://thatstamil.oneindia.in/news/2009/05/14/india-ndtv-exit-poll-vijaykanth-saves-dmk-alllian.html
    வியாழக்கிழமை, மே 14, 2009, 9:07 [IST]
    இலவச நியூஸ் லெட்டர் பெற மக்களவைத் தேர்தல்-2009 Post/Read All Comments

    NDTV
    RSS
    Twitter thatsTamil Bookmarks
    டெல்லி: மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணியே அதிக இடங்களில் வெல்லும் என என்.டி.டி.வி நடத்திய ‘எக்ஸிட் போல்’ கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

    வாக்களித்துவிட்டு வந்தவர்களிடம் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக் கணிப்பில் அதிமுக கூட்டணிக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி[^] கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் விவரம்:

    கடந்த 2004ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் திமுக கூட்டணிக்கு மக்களிடையே 15 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. (2004ம் ஆண்டு தேர்தலில் திமுகவுடன் இருந்த பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை விலகி அதிமுகவில் இணைந்துவிட்டன).

    திமுக இழக்கும் இந்த 15 சதவீத வாக்குகளில் அதிமுகவுக்கு வெறும் 5 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன. மிச்சமுள்ள 10 சதவீத வாக்குகளை விஜய்காந்தின் தேமுதிக[^] சுருட்டிவிட்டது.

    இதனால் மொத்தத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 42 சதவீத வாக்குகளும், அதிமுக-பாமக-மதிமுக-இடதுசாரிகள் கூட்டணிக்கு 40 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன.

    தேமுதிக[^] 10 சதவீத வாக்குகளையும் மற்ற கட்சிகள் 8 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளன.

    இதன்மூலம் தமிழகத்தில் மொத்தமுள்ள 39 இடங்களில் திமுக கூட்டணிக்கு 20 இடங்களும், அதிமுக கூட்டணிக்கு 18 இடங்களும் கிடைக்கும் என இந்த எக்ஸிட் போல் தெரிவிக்கிறது.

    மீதமுள்ள ஒரு இடத்தில் வேறு கட்சி வெல்லும் என்று அந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது. இது எந்தக் கட்சி என்பதை தெரிவிக்கவில்லை.

    இது பாஜகவாக இருக்கலாம் என்று தெரிகிறது. ராமநாதபுரத்தில் பாஜக சார்பில் போட்டியிட்ட திருநாவுக்கரசர், திமுக வேட்பாளர் ரித்தீஷ், அதிமுக வேட்பாளர் சத்தியமூர்த்தி ஆகியோரை வெல்வார் என்று தெரிகிறது.

    அதே நேரத்தில் 10 சதவீத வாக்குகளைப் பெற்றாலும் தேமுதிக[^] வுக்கு ஒரு இடமும் கிடைக்காது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக தேர்தல்[^] களம் கண்ட தேமுதிக[^] 8.33 சதவீத வாக்குகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இம்முறை மேலும் கூடுதலாக 10 சதவீதம் வரை வாக்குளை அந்தக் கட்சி பெறும் என என்டிடிவி எக்ஸிட் போல் தெரிவிக்கிறது.

    கடந்த மக்களவைத் தேர்தலில் எத்தனையோ தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள் கருத்துக் கணிப்பு, எக்ஸிட் போல் ஆகியவற்றை வெளியிட்டாலும் தேசிய அளவில் சரியான முடிவை வெளியிட்டது என்டிடிவி தான் என்பது நினைவுகூறத்தக்கது.

  2. //தேர்தலில் வெற்றி பெறுவதற்காகப் போட்டியிடுவது என்றில்லாமல், ஓட்டுக்களைப் பிரிப்பதற்காகப் பணம் வாங்கிக்கொண்டு போட்டியிடும் பினாமி அரசியலை, ஒரு கிளைத் தொழிலாகவே, தே.மு.தி.க. உருவாக்கியுள்ளது. காங்கிரசின் பினாமியாக தேர்தலில் நின்று ஓட்டுக்களைப் பிரிப்பதற்குக் கூலியாக வாங்கிய பணத்தில் தனது பல கோடி கடனை அடைத்தது தே.மு.தி.க., தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் 21 தொகுதிகளில் போட்டியிட ஆள்தேடிக் கொண்டிருந்த போது, 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துச் சூடு கிளப்பினார் விஜயகாந்த்.//

    meyyalumaa? captain aa apputi!!!

  3. இது பற்றி பேசும் போது ஒருவர் சொன்னார் பணக்காரர்கள் வந்தால்தான் பணத்தின் மேல் ஆசைப்படமாட்டர்களாம். புள்ளிவிபரங்களோ, நிகழ் வரலாறு காட்டும் குறிப்புகளோ அவருக்கு நிலையை விளக்க பயன்படாது. பணக்காரர்கள் மேன்மக்கள் நாகரீகவாதிகள் எனும் மாயையை விலக்கவே பயணப்படவேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது.

    தோழமையுடன்
    செங்கொடி

  4. அரசியல் கட்சியும், தேர்தலும் கறுப்பு பணத்தை வெள்ளையாக்க ஒரு நல்ல முறை..சுவிஸ் பாங்கில் இருந்த கணிசமான பணத்தை கட்சிகள் இப்பொழுது வெள்ளையாக்கியிருக்கும்….அரசியல்வாதிகல் ஓட்டுக்காக பணம் கொடுபதை ஏன் மறுக்க வேண்டும் , அவர்கள் வீட்டில் புழுங்கியிருந்த மக்களின் பணம் தானே அது, என்ன சாலையாகவும், உணவகாவும் வர வேண்டிய பணத்தில் 2 சதவீதம் நேரடி பணமாக வந்திருக்கிறது…… பணம் வாங்கிகொண்டு நேர்மையாக உங்களுக்கு விருப்பமான கட்சியில் ஓட்டு போடலாம். ஓட்டு மெஷினில் பட்டனாக மாறாத வரையில் 49ஓ ஒரு வெத்து கத்தி, அதை வைத்து ஒன்றும் செய்ய முடியாது.

    ////பணம் காய்ச்சி மரமாக மாறி அம்பலமாகி நிற்கும் இந்தப் போலி ஜனநாயகத் தேர்தல் முறையையும் அது உறுதிப்படுத்தும் அதிகாரவர்க்க ஆட்சியையும் ஒழித்துக் கட்டினால்தான், உண்மையான மக்கள் ஜனநாயகத்தை உருவாக்க முடியும்.
    ////

    இது பல பேருக்கு தெரியும் ஆனால் , நீங்கள் சொல்ல வேண்டியாது அந்த மாற்று முறை என்ன? மாறா வேண்டும், எது? உங்களிடம் உள்ள மாற்று முறை என்னா? அதை தெரியபடுத்தினாலும் விவாதிக்கலாம்

      • தமிழீழ விடுதலைப்புலிகளைப்போல தமிழக விடுதலைப்புலிகள் உருவானாலும் ஆச்சர்யப்ப்டுவதற்கில்லை.

  5. தமிழினத்தைப் படுகொலை செய்த காங்கிரசு வெற்றி பெற்றுள்ளது. போனமுறை 10 இடங்கள். இந்த முறை 9 இடங்கள். ஆகவே அவர்கள் தோற்றார்கள், காங்கிரசுக்குத் தமிழ்மக்கள் பாடம் புகட்டினார்கள் என்றெல்லாம் யாராவது சொன்னால் நான் நகைப்பேன். தமிழினத்தை அழித்த காங்கிரசுக்குத் துணை போன திமுக 18 இடங்களில் வென்றுள்ளது. போனமுறை 16 இடங்கள். “துரோகம் பழகு; நக்கிப் பிழை” என்றே இது தமிழ்நாட்டுக் குமுகத்திற்குப் போதிக்கிறது. தமிழ், தமிழினம் என்றாலே கேலியும் நக்கலுமாக ஆக்கியதில் பெரிய பங்கு வகித்த இன்னொரு திராவிடக் கட்சியான அ.தி.மு.கவிற்கு 9 இடங்கள் கிடைத்துள்ளன. போனமுறை சுழித்துப் போன அ.தி.மு.கவிற்கு இம்முறை 9 இடங்கள் கிடைத்திருக்கின்றன.எப்படியாவது வடக்கை நக்கிப் பிழைக்கும் பண்பாட்டை” வளர்த்த இரண்டு கழகங்களின் அடியொற்றியே இன்றைக்கு எல்லாக் கட்சிகளும் இருக்கின்றன. ஆகவே பா.ம.கவின் தோல்வியை நான் வரவேற்கும் அதே நேரத்தில் தமிழ்நாட்டின் இரண்டு கழகங்களும், காங்கிரசும் எந்த வகையிலும் உயர்ந்தவர்கள் அல்ல. பா.ம.கவின் தன்னலத்தால் அது இன்று தோற்றது என்றால், “இதே நிலை” பா.ம.கவை விட பல மடங்கு தன்னல அரசியல் செய்யும் கழகங்களுக்கும் வரும் என்றுதானே பொருள்? பா.ம.கவாவது சொல்லிக் கொள்ளுமாறு தனது தொலைக்காட்சியில் தமிழை வைத்திருக்கிறது. ஆனால், தி.மு.க, அதிமுக, காங்கிரசு கட்சிகளின் தொலைக்காட்சியில் தமிழைத் தேடித் தேடிக் களைத்துப் போனவர்கள்தான் தமிழ்நாட்டு மக்கள். ஆகவே தமிழ்நாட்டில் கிடைத்த தேர்தல் முடிவுகளுக்கும் இனவுணர்வுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ஏனென்றால் இங்கே இனவுணர்வு ஏற்பட்டு விடாதபடி, தமிழுணர்வு ஏற்பட்டு விடாதபடி காங்கிரசை நடுவமாக வைத்து இரண்டு கழகங்களும் பிடாரிகளாகக் காவல் இருக்கின்றன இன உணர்வு என்றால், கோயில் வாசலில் இருக்கும் பிச்சைக்காரனுக்கு ஐந்து பைசா பத்துப் பைசா பிச்சை போடும் பெருவள்ளல் மனநிலையில் “ஈழத்தமிழன்” பற்றி இரண்டு வார்த்தைகள் பேசிவிடுவது மட்டுமே தமிழ்நாட்டில் இன உணர்வு. இவை இரண்டுமே பிழைப்பு அரசியல். இதைத் தவிர சீமான், பாரதிராசா, நெடுமாறன், மணி போன்ற விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரிடம் இருக்கும் தன்மான உணர்வும் தமிழன் என்ற உணர்வும் இலம்பாடிக் கடலில் கரைத்த பெருங்காயம்தான் என்று தெளிவு படுத்துவதே இந்தத் தேர்தல். இந்தத் தேர்தலின் குற்றவாளிகள் மக்களல்ல. அவர்கள் அறியாமையில் மூழ்கடிக்கப்பட்டவர்கள். இவர்களால் இனி எழவே முடியாது, வெந்ததைத் தின்று விதி வந்தால் சாகும் இவர்களைக் காப்பாற்ற இவர்களுக்குத் தன்மானமும் இன உணர்வும் வர வாய்ப்பே கிடைக்காமல் செய்ய கழகங்களும், காங்கிரசும் அவர்களை அண்டியோர்களும் ஆயிரமாயிரமாய் இருக்கிறார்கள்.

    தமிழினம் என்ற தொன்மை தமிழ்நாட்டில் 2009 தேர்தலோடு அறுந்து போனது. 600, 700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழினம் என்ற தொன்மை செத்து மலையாளம் ஆனதைப்போல தமிழ்நாட்டைத் தமிழ் என்ற பெயரை வைத்தே அழித்து நாசமாக்கி விட்ட கழகங்கள் ஒழியும் நாளே தமிழ் நாட்டில் தமிழும் உணர்வும் மீளும் காலமாக இருக்கும் ஆகவே இந்தக் கால கட்டமும் ஒரு “வரலாற்றுக் கால கட்டம்”. தன்மானமும், இனவுணர்வும் அற்ற ஒரு கால கட்டம். தமிழ் மொழி வியாபாரப் பொருளாகவும் கேலிப் பொருளாகவும் ஆகிப் போயிருக்கிற கால கட்டம். தமிழ்நாடும் மலைநாடு போல திரிந்து போயிருக்கிறதை அறிவிக்கிற கால கட்டம். ஊனிலும் உயிரிலும் கலந்து கிடந்த தமிழ் தற்போது தமிழன்… மன்னிக்கவும், தமிழ்நாட்டார் நாவில் மட்டும் வாழ்கின்ற கால கட்டம். தமிழ் தமிழ்நாட்டாரின் நாவை விட்டு நீங்கியும் நீங்காமலும் இருக்கிற கால கட்டம். கூன்போட்டுக் கிடந்த தமிழ்க் கூட்டம் நிமிர்ந்து நின்றும், நிமிர்ந்து நடந்தும், மீண்டும் வடக்கின் வெள்ளைக் கால்களை வேண்டி ஓடும் கால கட்டம். அடிமையாய் வாழ்ந்த தமிழ்க் கூட்டம் இன்று ஆண்டையாய் மாறிவிட்ட கால கட்டம். அதற்காக அடிநத்தவும் ஆரம்பித்து விட்ட கால கட்டம். இதில் இருந்து தமிழ்நாடு சில தலைமுறைகளுக்கு மீளவே மீளாது என்பது கசப்பான உண்மை.

    இப்படியான உண்மைகள் தமிழ்நாட்டார்க்கும் தி.க உள்ளிட்ட மூன்று கழகக் குஞ்சுகளுக்கும் கசக்கும். ஓராண்டு முன்பு வரை கூட ஈழத்தமிழர்கள் என்ற உணர்வும் பாசமும் தமிழ்நாட்டில் இருந்தது. ஆனால் திமுகவின் பரப்புரைகளும், ‘நீ செத்தாலும் பரவாயில்லை என்னை ஆள விடு’ என்ற நிலைப்பாடும் இன்றைக்கு ஈழத்தமிழன், இந்தியத் தமிழன் என்ற பிரிவினையை மனத்தளவில் தமிழ்நாட்டில் விதைத்து விட்டது. சோவும் இராமும் பல காலம் செய்த வேலைகளை திமுக சில மாதங்களிலே செய்து முடித்து விட்டது. இதனை நம்ப மறுக்கிற தமிழ்நாட்டாரைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. ஏனெனில் இவர்கள் இதனை நம்பியும் ஒன்றும் ஆகப் போவதில்லை. இதனை நம்ப மறுக்கும் ஈழத் தமிழர்கள், இந்தத் தமிழ்நாட்டையும், இந்த மண்ணில் ஒரு காலத்தில் இருந்த தமிழ் உணர்வையும் கருத்தில் கொண்டு, இன்னும் அதை நம்பிக் கொண்டு இருப்பார்களேயானால், தமிழ்நாட்டின் இந்தியாவையும் மதித்து “இன உறவு கொள்ள” எண்ணுவார்களேயானால் அவர்களுக்கு அது தொடர் ஏமாற்றங்களையே தரும் என்ற வேதனையான உண்மையை வெளிப்படையாகச் சொன்ன தேர்தலே இந்தப் பாராளுமன்றத் தேர்தல். ஆகவே எங்கோ ஓரிருவர் முழங்கும் தமிழ் வசனங்களைக் கேட்டு தமிழ்நாட்டாரை நம்பும் தவறை ஈழத்தமிழர்கள் இனிமேல் செய்ய மாட்டார்கள் என்பதனை அழுத்தந் திருத்தமாகச் சொல்லும் தேர்தலே இந்தப் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்.

  6. மிகவும் சரி கடவுள். ஆனால் தமிழனுக்கு தமிழுணர்வே இல்லாதபோது ஈழவுணர்வு எப்படி வரும்? தன் இனவுணர்வே அற்றுப்போகும் எம்தமிழர் ஈழத்தோடு இனவுறவு கொள்வது எப்படி? தமிழர் இந்திய எல்லைக்குள் தம்மை அடையாளப்படுத்தும்வரை தற்போதைய வாக்கெடுப்பு அரசியலை தமிழகத்திலிருந்து விரட்டமுடியாது. இது அவநம்பிக்கைகான காலமே…
    ஆனால் உணர்வாளர்கள் இணையங்களிலும் இன்னும் பிற ஊடகங்களின் மூலமும் கருத்துப்பரிமாறுவதோடு நில்லாமல், பெருந்திரளான பாமரமக்களை முழுவீச்சில் அணுகவேண்டும்.
    பொதுவாக தமிழ்மக்களை அமைப்புரீதியில் ஒன்றுதிரட்ட வழியில்லை எனும் நிலையுள்ளது. அதனை மாற்றும்விதமாக செயல்தொடக்கம் இருக்க வேண்டும். அதற்கான வழிமுறைகள் பழையனவாயிருந்தாலும் சரி, புதியனவாயிருந்தாலும் சரி.
    இப்போதே அனுபவத்தோடு இருக்கும் ம.க.இ.க. போன்ற இயக்கங்கள் இவ்வளவு காலமாய் களப்பணியாற்றியும் இச்சாதனைகள் நிகழாமல் இருப்பதற்கான காரணங்கள் ஆராயப்பட்டு, விவாதிக்கப்பட்டு தடைகளையுடைக்கும் வழிவகைகள் நடைமுறைப்பட வேண்டும். அது மிகவிரைவில் நடந்தாகவேண்டும்.
    குறிப்பாக புதிய ஜனநாயகம் என்று பொதுவில் மக்களை அணுகுவதைவிட குறிப்பிட்டு சொல்லும்படியான யோசனைகளோடும், திட்டங்களோடுமே அணுகுவது வீரயமான வழி என்பது என் எண்ணம். மேலும் ஒத்தணர்வுடைய இயக்கங்களை ஒருங்கிணைப்பதோ அல்லது இணைந்து பணியாற்றுவதோ நிகழவேண்டும். ம.க.இ.க.வே இதனை முன்னெடுக்கலாம்.
    வறுமையிலும் வேதனையில் வாடுபவர்களை கிருத்துவராக மாற்றுவது சாத்தியமென்றால் அவர்களை தமிழர்களாகவே புரியவைப்பதும் சாத்தியம்தானே?
    ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. போன்ற எதிர்மறை இயக்க வளர்ச்சிகளையும் அவை வெற்றி பெரும்விதத்தினையும் ஆராய்ந்து பார்க்கவேண்டும். இவர்கள் மாணவர்களையும், சிறுவர்களையும் எப்போதும் குறிவைத்து வென்றவர்கள்.
    இவ்விருவுதாரணங்களில் ஆயுதப்பட்ட பணத்திற்கோ மதத்திற்கோவுள்ள போதை இனவுணர்விக்கில்லைதான். போதை தேவையுமில்லை. அதனைத்தெளியவைப்பதுதானே நம் வேலை.
    இளைய சமுதாயத்தையும், பெண்களையும் உணர்வுறச்செய்தாலே புரட்சி சாத்தியம். இதெல்லாம் இங்கே விவாதிப்பவர்களுக்கு தெரியாதென்பதல்ல என் வாதம். ஆனால் வாதப்பிரதிவாதங்களுக்கே நம் காலம் செலவாகிவிடக்கூடாதென்பது என் அச்சம் அவ்வளவே. இனி எப்படி செயலற்றுவது என்பதனை விவாதிக்கத்தொடங்குவோமே…
    நிதானப்பட்டு செயலாற்றினால் தமிழனே தமிழை மொத்தமாகச்சாகடித்து தமிழனென்ற இனமே இல்லாதொழிந்துவிடுவான். அப்புறம் தமிழகத்தமிழராவது, ஈழத்தமிழராவது….

  7. Has LTTE leader Prabhakaran embraced death? புலிகளின் பகுதியில் பாரிய வெடிப்புக்கள்!; இறுதிக்கட்ட நடவடிக்கைகளில் புலிகள்?

    http://dbsjeyaraj.com/dbsj/archives/545

    Speculation is rife among knowledgeable circles in Colombo that Liberation Tigers of Tamil Eelam (LTTE) leader Velupillai Prabhakaran is no more among the living.

    • In one of the interviews Prabakaran gave to Father.Jagath Kaspar, he told that he would have got freedom to tamil eelam much before if he would have joined hands with forces that were against india. Do he deserve the position of a freedom movement? He was trusted to get freedom from the racist Sinhalese. But, knowing all the atrocities done by the Sinhalese to Tamils for decades, he gave an excuse for not getting outside help, “India is our father nation”. Does Srilankans hesiate to get help from countries that were enemies of India? Does India pose a toughline with Srilanka for maintaining relatinships with indisa’s enemies? No!. But it embraces Srilanka!! What a stupidity from the indian side!. And hundred times more stupid Tigers! So, it clearly shows one thing: Pirabakaran wanted to fight,fight,fight……for no reason in the name of Tamil Eelam. If his aim is only Tamil Eelam, he should have got it with whatever help he got. A big country like India will manage whatever be the threat posed by enemy countries like China and Pakistan , even if a new threat come from south. Milliions of dollars donated by table cleaning, toilet cleaning Tamils from abroad had gone in vain. If he is so loyal to India, he should not have come to fight. He should have escaped to India as a refugee even before Rajiv was killed. He assumed the responsibility of freedom movement, and waged a war against racist sinhalese only to show is heroism.

  8. மனது சோர்ந்து போகிறது.இது கையாலாகத்தனம் எனத் தெரிந்தும்…………..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க