திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறுக்கு அருகில் உள்ள வெம்பாக்கம் பகுதியில், டி.வி.எஸ். குழுமத்தை சேர்ந்த ஆக்சில்ஸ் இந்தியா (Axles India) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. டி.வி.எஸ். அய்யங்கார் குழுமத்தைப் போலவே, தன்னிடம் பணியாற்றும் தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்துவதும் அதன் உழைப்புச் சுரண்டலும் ‘பாரம்பரிய’மானது.
காண்ட்ராக்ட் தொழிலாளர்களை தொடர்ந்து இரண்டு ஷிப்ட் பார்க்குமாறு கட்டாயப்படுத்துவது; மறுத்தால் பழிவாங்குவது என, இக்கும்பலின் தொடர் அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட காண்டிராக்ட் தொழிலாளர்கள் கடந்த 2009-ஆம் ஆண்டு சங்கமாக அணி திரண்டனர். காண்டிராக்ட் தொழிலாளர்கள் மத்தியில் செயல்பட்டுவரும், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் துணையோடு, நிர்வாகத்தின் அடக்குமுறை – அடாவடித்தனத்தை எதிர்த்து நின்றனர்.
நேற்றுவரை அடங்கிப்போன தொழிலாளர்கள், இன்று நேருக்குநேர் நின்று நிர்வாகத்தை எதிர்த்துக் கேள்விகேட்பதை அக்கும்பலால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
முன்னணியாளர்கள் பலர் வேலைநீக்கம் செய்யப்பட்டார்கள். சங்கத்தில் செயல்படும் தொழிலாளர்களுக்கு ஒரு அளவுகோல்; சங்கத்தைச் சேராதவர்களுக்கு ஒரு அளவுகோல் என்று பல்வேறு வகைகளில் முன்னணியாளர்கள் பழிவாங்கப்பட்டார்கள். இன்றளவும் தொடர்கிறது.
இந்நிறுவனம் அமைந்துள்ள பகுதிக்கு அருகிலுள்ள நமண்டி பகுதியில் இருந்து கணிசமான அளவு தொழிலாளர்கள் இங்கு காண்ட்ராக்ட் முறையில் பணிபுரிந்து வருகின்றனர்.
தொடர்ந்து 16 மணிநேரத்திற்கு மேலாக, இரண்டு ஷிப்ட் சேர்த்து பார்க்குமாறு தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்படுவதால் பல்வேறு உடல்ரீதியிலான பிரச்சினைகளை சந்திக்க நேரிடுவதாக நிர்வாகத்திடம் முறையிட்டனர் அத்தொழிலாளர்கள்.
“முன்ன எல்லாம் எதுவும் சொல்லாமல் வேலை செஞ்சிகிட்டு இருந்தீங்க… இப்பல்லாம் லீவு வேனும்னு கேக்குறீங்க… சேர்க்கை சரியில்லாம போச்சு..” எனத் திமிர்த்தனமாக பதிலளித்தது நிர்வாகம்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அவர்களது சொந்த ஊரான நமண்டியில் தொழிலாளிகள் இணைந்து நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். அதற்காக விடுப்பு எடுத்துள்ளனர்.
ஊரில் நடைபெறும் ஒரு பொது நிகழ்ச்சியில் தொழிலாளர்கள் கலந்து கொள்வதைக்கூட சகித்துக்கொள்ள முடியாமல், “ எங்களுக்கு எதிராக சதித்திட்டம் போடுறீங்களா..’’ என அத்தொழிலாளர்களை அழைத்து மிரட்டியது நிர்வாகம். அதோடு மட்டுமில்லாமல், இதுகுறித்து விசாரிக்க ஹெச்.ஆர்.களைக் கொண்டு ஒரு ‘விசாரணைக் கமிசனே’ அமைத்துவிட்டது.
இது தொழிலாளர்களின் சுயமரியாதையை சீண்டிப் பார்க்கும் நடவடிக்கை என கண்டித்தது பு.ஜ.தொ.மு. “ஊரில் நடக்கும் விவகாரங்கள் எங்கள் சொந்த விசயம். தொழிற்சாலைக்குள் நாங்கள் ஏதும் தவறாக நடந்தால் தான் விசாரனை நடத்த வேண்டும்” எனத் தமக்கேயுரிய தன்மானத்துடன் எதிர்த்து நின்றனர் தொழிலாளர்கள்.
இதனால் ஆத்திரம் தலைக்கேறிய, ஆக்சில்ஸ் இந்தியா நிர்வாகம் ஏப்ரல்-23 அன்று காலை, பணிக்கு வந்த தொழிலாளர்களை வாயிலிலே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியது.
நிர்வாகத்தின் தொடர் அடக்குமுறையால் வெகுண்டெழுந்த தொழிலாளர்கள், காண்டிராக்ட் தொழிலாளர்கள் நிரந்தரத் தொழிலாளர்கள் என வேறுபாடின்றி தங்கள் குடும்பத்தினருடன் இன்று காலையில் அணிதிரண்டனர். ஆலைக்கதவை மறித்துக் கொண்டு முற்றுகையிட்டனர். இத்தொழிலாளர்களுக்கு ஆதரவாக பு.ஜ.தொ.மு. தோழர்களும் போராட்டக் களத்தில் உடனிருந்தனர்.
”காண்டிராக்ட் தொழிலாளர்களை பணியமர்த்தும் பொழுது, அப்பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். 3 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரதொழிலாளியாக்க வேண்டும். தொழிலாளர்களை கூடுதல் நேரம் பணி செய்ய சொல்லிக் கட்டாயப்படுத்தக்கூடாது” என்பது உள்ளிட்ட தமது கோரிக்கைகளை கண்டன முழக்கங்களாக ஆலை வளாகம் அதிர முழங்கினர்.
தொழிலாளர்களின் உறுதியைக் கண்டு அஞ்சிய நிர்வாகம், தற்காலிகமாகப் பின்வாங்கியது. ’பேசித்தீர்த்துக்கொள்ளலாம்’ என்று நைச்சியமாக சமாதானம் பேசி தொழிலாளர்களை ஆலைக்குள்ளே அழைத்துச் சென்றுள்ளது நிர்வாகம்.
‘’ஆலைக்கு வெளியில் கூட தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்துவிடக்கூடாது’’ – என்று நிர்வாகம் நினைப்பதும்; அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றதைக்கூட விசாரணைக் கமிசன் வைத்து விசாரிக்கத்தக்க கிரிமினல் குற்றமாகச் சித்தரிப்பதும்; அதற்காகத் தொழிலாளர்கள் பழிவாங்கப்படுவதும், தொழிலாளர்களுக்கு உணர்த்தும் செய்தி இது ஒன்றுதான்,
‘’உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்!’’
தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளுர் மாவட்டம் ( மேற்கு ), 94453 68009.