ரோந்து போகும் மக்களால் இருவர் மரணம் ! குற்றவாளி யார் ?

சக மனிதனை சந்தேகக் கண் கொண்டு பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதன் விளைவு இம்மரணம். இதில் யார் குற்றவாளி - திருடர் என்பதை அலசுகிறது இக்கட்டுரை.

திருடர் என்று கொல்லப்படும் அப்பாவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த தென்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு. இவரது மகன் சதாசிவம் தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அதேபகுதியை சேர்ந்த சமையல் தொழிலாளி ஆனந்தன் இவரது நண்பர். இந்நிலையில், ஆனந்தன் 21-ம் தேதி சமையல் வேலையாக வெம்பாக்கம் கிராமத்திற்கு சென்று, இரவு 11 மணியளவில் வீட்டுக்கு புறப்பட்ட போது,  பேருந்து கிடைக்காததால் சதாசிவத்துக்கு போன் செய்து தன்னையும் அழைத்து செல்லும்படி கூறியிருக்கிறார். சதாசிவம், அவரது நண்பர்கள் மாதவன், யுவராஜ் ஆகிய 3 பேர் ஒரே பைக்கில் வெம்பாக்கம் நோக்கி சென்றனர்.

நள்ளிரவு 12 மணியளவில் சுமங்கலி கிராமம் அருகே அவர்கள் மூவரும் பைக்கில் வந்த போது, அதே கிராமத்தை சேர்ந்த சிலர் நிறுத்த முயன்றனர். தங்களை மடக்குபவர்கள் ‘கொள்ளையர்களாக’ இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பைக்கை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளனர் அந்த இளைஞர்கள்.

நிறுத்தியவர்களோ பைக்கை நிறுத்தாமல் சென்றதால் அவர்கள்தான்‘திருடர்கள்’ என சந்தேகப்பட்டனர். உடன் சுமங்கலி கிராம இளைஞர்கள் 6 பேர், 2 பைக்குகளில் அவர்களை விரட்டிச் சென்றனர். இவர்களின் சத்தம் கேட்டு மேலும் சிலர் வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்து அவர்களை விரட்டியுள்ளனர். சிலர் பைக் மீது சரமாரியாக கற்களை வீசியதால் சதாசிவத்தின் மார்பு மீது கல் விழுந்ததில், நிலைதடுமாறிய 3 பேரும் கீழே விழுந்தனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த சதாசிவம் மயங்கி விழுந்துள்ளார்.

பொதுமக்கள் விரட்டி வருவதை பார்த்து பயந்துபோன மாதவன், யுவராஜ் ஆகியோர் சதாசிவத்தை பைக்கில் ஏற்றிக்கொண்டு பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சதாசிவம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சதாசிவம் (உள்படம்) மரணமடைந்ததைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபடும் உறவினர்கள் ( படம் : நன்றி – தினகரன் )

பின்தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்த சுமங்கலி கிராம இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள், மாணவர்கள் இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் விசாரிக்கையில் சதாசிவத்தின் நண்பர்கள் தாங்கள் வந்த காரணத்தை தெரிவித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் 22ம் தேதி காலை 6 மணியளவில், கல்லூரி மாணவனை கல்லால் தாக்கி கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் செய்யாறு அண்ணா சிலை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த டிஎஸ்பி குணசேகரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் ஏழு பேரை கைது செய்திருக்கிறார்கள்.

இதே போன்று வேலூரிலும் நடந்துள்ளது. அப்பகுதியில் குழந்தைகள் கடத்தப்படுவதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இதனால் யாரைப் பார்த்தாலும் குழந்தை திருடர்களாக இருப்பார்களோ என மக்கள் பதட்டத்தில் இருக்கின்றனர். சமீப காலமாக பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை – கொலையும் சேர்ந்து இப்பதட்டத்தை அதிகரித்திருக்கின்றது.

வடமாநிலத்தைச் சேர்ந்த 30 வயது இளைஞர் குடியாத்தம், சுண்ணாம்பு பேட்டை பகுதியில் சென்றபோது மக்கள் சந்தேகப்பட்டு தாக்கியிருக்கின்றனர். பிறகு போலீசார் அவரை மீட்டு விசாரித்ததில் அவர் வழி தவறி வந்தவர் என்பது தெரிந்தது. விடுவிக்கப்பட்ட அவர் கடந்த சனிக்கிழமை இரவு பரசுராமன் பட்டியில் சென்றிருக்கிறார். இங்கேயும் மக்கள் சந்தேகப்பட்டு தாக்கினர். ஆனால இம்முறை அந்த அப்பாவி இளைஞர் இறந்து போனார். அவர் யார் என்ற விவரம் தெரியவில்லை.

குடியாத்தம் காக்காதோப்பு பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்டுள்ள சந்திரபானு எனும் 40 வயது பெண்ணும் இதே போன்று பகுதி மக்களால் தாக்கப்பட்டு பின்னர் மீட்கப் பட்டிருக்கிறார்.

உண்மையில் படிக்கும் எவரையும்  இந்த செய்தி ஒரு கணம் உலுக்கி எடுக்கும் என்பதில் ஐயமில்லை. இன்று அறிமுகம் இல்லாத ஒரு ஊருக்கு சென்றால் நமக்கும் இதுதான் கதி என்பது அவலமான உண்மை. இப்படிப்பட்ட மரணங்களும், கொலைகளும் நம்மை விபத்து போன்று சூழ்ந்திருக்கின்றன. அடித்துக் கொன்ற கிராம மக்களும்கூட குற்ற உணர்வால் மனம் குமுறிக்கொண்டிருப்பார்கள். ஏனெனில், அவர்கள் திட்டமிட்டோ, அல்லது உள்நோக்கத்துடனோ அடித்ததாக தெரியவில்லை. பைக்கில் வந்தவர்கள் திருடர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அடித்திருக்கிறார்கள். அலைந்து திரிந்தவர்கள் திருடர்கள் என்று தாக்கியிருக்கிறார்கள்.

“திருடர்களாக இருக்கலாம்”  என்று சந்தேகிப்பதற்கான  பின்னணியை பார்க்கலாம். தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை,செயின் திருட்டு, வழிப்பறி என்று அசாதாரண சூழல் நிலவி வருகிறது. அன்றாடம் செய்தித் தாள்களில் இதுபோன்ற செய்திகளே அதிகம் ஆக்கிரமித்திருகின்றன. தங்கள் கணவரோடு நடந்து செல்லும் பெண்களின் பாதுகாப்பிற்கு கூட உத்திரவாதமில்லை. அந்த அளவிற்கு திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

முன்பை விட வேலை கிடைப்பதும், கிடைத்த வேலையில் வாழ்க்கை நடத்துவதும் கடும் போராட்டமாக இருப்பதாலும், சுற்றியிருக்கும் வண்ணமயமான நுகர்வுக் கலாச்சாரத்தின் போதையாலும் சிலர் தவறான வழியில் செல்கின்றனர். ஓரிரு முறை திருடிய பின்பு அவர் தொழிற்முறை திருடர்களாக மாறுகின்றனர். அவர்களை கட்டுப்படுத்தும் அளவுக்கு போலீசும் நேர்மையாக இருப்பதில்லை. அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்குமளவு அரசும் அக்கறையோடு இருப்பதில்லை.

மேலும் இரவு நேர பாதுகாப்பு பணியில் போலிசு அனைத்து இடங்களிலும் ஈடுபடுவதில்லை. அரசாங்க உயர்பதவியில் இருப்போருக்குத்தான் பாதுகாப்பு இருக்கிறது. ஒரு அதிகாரி அல்லது அமைச்சர் பகுதியில் வாழ்ந்தால் திருட்டு பயமின்றி இருக்கலாம். மற்ற இடங்களில் மக்களே தமது பாதுகாப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

இச்சூழலில் மக்களே தங்களை பாதுகாத்துக் கொள்வதைத்தவிர வேறு வழியில்லை என்ற முடிவிற்கு வரும்பொழுது இதுபோன்ற எதிர்பாராத ‘துர்பாக்கிய’ மரணங்கள் நிகழ்கிறது.  இந்த மரணத்திற்கு அரசு தான் முதன்மைப் பொறுப்பு! இன்று திருடர்களிடமிருந்து பாதுகாக்கும் பொருட்டு ரோந்து போகும் மக்கள், கார்ப்பரேட் திருடர்களிடமிருக்கும் அரசாங்க அதிகாரம், உள்ளூராட்சி அதிகாரத்தையும் சேர்ந்து கைப்பற்றும் போது இந்த அவல மரணங்கள் நடக்காது.

– வினவு செய்திப் பிரிவு

செய்தி ஆதாரம் :

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க