மே 22-ம் தேதி நடைபெற்ற தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் தொடங்கி இன்றுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் + போலீசு கூட்டாட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகரும், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலருமான வழக்கறிஞர் அரிராகவன் மீது 92 கிரிமினல் வழக்குகளைப் போட்டு அவரை பாளையங்கோட்டை சிறையில் அடைத்தது தூத்துக்குடி போலீஸ்.

போலீசு முகத்தில் கரி
வழக்கறிஞர் அரிராகவன் – இடமிருந்து மூன்றாமவர். ஸ்டெர்லைட் நஞ்சை எதிர்த்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ளப் போராடிய தூத்துக்குடி மக்களுடன் மட்டுமின்றி, பார்ப்பனியத்தை எதிர்த்துப் போராடிய அர்ச்சக மாணவர்களுடனும் நிற்கிறார். எனவேதான் அவருக்கு தேசிய பாதுகாப்பு சட்டம்.

மேற்சொன்ன 92 வழக்குகளிலும் அவருக்கு பிணை வழங்கி மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பிணையில் விடுவிக்கப்போகும் நேரத்தில், அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒரு ஆண்டுக்கு தடுப்புக் காவலில் வைப்பதாக உத்தரவு பிறப்பித்தார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.

இந்த உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு இன்று மதுரை உயர் நீதிமன்றக்கிளையில், நீதிபதிகள் சி.டி.செல்வம், பஷீர் அகமது ஆகியோர் கொண்ட அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. மூத்த வழக்கறிஞர் அஜ்மல் கான், வழக்கறிஞர் அழகுமணி, வாஞ்சிநாதன் ஆகியோர் ஆஜராகினர்.

“ஜூலை 23-ம் தேதியன்று உயர் நீதிமன்றம் பிணை வழங்கியது. 26-ம் தேதி மாலை 6.30 மணிக்கு பிணைப் பத்திரத்துடன் அவரை விடுவிக்கச் செல்கிறோம். ஆனால் 6.10 க்கு அவருக்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டம் பிறப்பிக்கப்படுகிறது. இது நீதிமன்றத்தின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும் செயல் என்பது மட்டுமல்ல, மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த தடுப்பாணையில், 23-ம் தேதி அரிராகவனுக்கு எல்லா வழக்குகளிலும் பிணை வழங்கப்பட்டிருக்கிறது என்ற உண்மையும் மறைக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த தடுப்பாணையை ரத்து செய்ய வேண்டும்” என்று வாதிட்டார் மூத்த வழக்கறிஞர் அஜ்மல் கான்.

“மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தை மதிக்க மாட்டாரா? அரசியல் சட்ட நீதிமன்றத்தைவிட உயர்வானதா உங்கள் அதிகாரம்? இன்று மதியம் இரண்டு மணிக்கு மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்” என்று உத்தரவிட்டது நீதிமன்றம்.  அரசுதரப்பு வழக்கறிஞரின் கோரிக்கைக்குப் பின், “நாளை காலை 10.30-க்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். நாங்கள் கடுமையாக அபராதம் விதிக்கப் போகிறோம்” என்று நீதிமன்றம் எச்சரித்தது.

போலீசு முகத்தில் கரி
போலீசின் புதிய பலிகடா – சந்தீப் நந்தூரி

நாளை காலை மாவட்ட ஆட்சியர் வருவார். “மாண்புமிகு நீதிமன்றம் அரிராகவனுக்கு எல்லா வழக்குகளிலும் பிணை வழங்கியிருக்கிறது என்ற உண்மையை போலீசார் எனக்கு சொல்ல..வே இல்லை” என்று சமாளிப்பார்.

சில நாட்களுக்கு முன் குமரெட்டியாபுரத்தை சேர்ந்த போராட்ட முன்னணியாளர் மகேஷையும் இதேபோலத்தான் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். அந்த குண்டர் சட்டத்தை இரண்டே நாட்களில் உடைத்தெறிந்தனர் எமது வழக்கறிஞர்கள். “அது போன வாரம்” என்று அடுத்தபடியாக அரிராகவனை தே.பா.சட்டத்தில் கைது செய்து, மாவட்ட ஆட்சியரை கூண்டில் ஏற்றிவிட்டது தூத்துக்குடி போலீசு.

மே 22-ம் தேதி 13 பேரைப் படுகொலை செய்து விட்டு, துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டதாக மூன்று துணை தாசில்தார்களை கை காட்டி விட்டது போலீசு. இன்று துணை தாசில்தாரின் இடத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.

ஆட்டம் இன்னும் மிச்சமிருக்கிறது.

ஒரு குற்றத்துக்கு 250 முதல் தகவல் அறிக்கை போட்ட முறைகேட்டை நீதிமன்றத்தில் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறோம். அது குறித்த ஆவணங்களையும், கேஸ் டயரிகளையும் கேட்டிருக்கிறது நீதிமன்றம்.

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நேரம், அது தொடர்பாக பின்பற்றப்பட்ட முறைகள் ஆகியவை குறித்த விவரங்களையும், துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டது யார் என்பது குறித்த ஆவணங்களையும் நீதிமன்றம் கேட்டிருக்கிறது.

99 நாட்கள் அமைதியாக நடந்த போராட்டத்தில் 100 வது நாள் சமூகவிரோதிகள் புகுந்த வன்முறையை தூண்டியதாக போலீசு கூறுகிறதல்லவா, அந்த 99 நாட்களின் உளவுத்துறை அறிக்கைகளையும் நீதிமன்றம் கேட்டிருக்கிறது.

நீதி எவ்வளவு கிடைக்கும், எப்போது கிடைக்கும் என்பதெல்லாம் இருக்கட்டும். இவர்கள் நடத்திய கிரிமினல் சதிகள், முறைகேடுகள் ஆகியவற்றை ஒவ்வொன்றாக வெளியே கொண்டு வருவோம். இந்தப் படுகொலைக்குப் பொறுப்பான அதிகாரிகளை – ஸ்டெர்லைட்டின் கூலிப்படையை – அடையாளம் காட்டுவோம்.

“போலீசு ராச்சியமா நடத்துகிறீர்கள்?”என்று நீதிமன்றம் இன்றைக்கு கேள்வி எழுப்பியது. நடப்பது போலீஸ் ராச்சியம் என்று சொல்லலாம், மோடி ராச்சியம் என்று சொல்லலாம். ஸ்டெர்லைட் ராச்சியம் என்றும் சொல்லலாம்.

 • மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு

2 மறுமொழிகள்

 1. விரைவில் இந்த ஆளும் அமைப்பும்(SYSTEM) குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படும் என்பதை உங்களின் உன்னதமான செயல்பாடுகள் மூலம் உணரமுடிகிறது!

 2. இந்த தந்தூரி, சாரி நந்தூரி சாதாரண மக்களுக்கு கலெக்டராக இருந்ததை விட முதலாளிகளுக்கு விசுவாசமான எடுபிடி !
  ஓசூர் கமாஸ் வெக்டரா தொழிலாளர்கள் உரிமைக்காக போராடியபோது , முதலாளிகள் நலனே என் நலன் என செயலாற்றியவர்.
  கந்து வட்டி கொடுமையால் பிஞ்சுகள் வெந்தததிற்கு காரணமானவர்.

  இப்போது, போலி சின் வாக்குமூலத்தை நிறைவேற்ற முயற்சி செய்கிறார்.

  மக்கள் போராட்டத்தின் மூலம் , இது போன்ற எடுபிடிகள் ஒதுங்குகின்ற காலம் வெகு விரைவில் வரும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க