மிழகத்தில் சத்துணவு ஊழியர்களின் போராட்டம் பலவடிவங்களில் நடைபெற்றது. கடந்த நவம்பர்  இரண்டாம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ரமேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தூத்துக்குடியில் கடந்த  31 ஆண்டுகளாக சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். பட்டய மேற்படிப்பு முடித்துள்ள அவர் இன்றுவரை பதவி உயர்வு பெறாமல் சத்துணவு அமைப்பாளராகவே காலத்தை கழிக்கிறார்.

“என்னுடன் ஒரே பேட்ஜில் ஊராட்சி செயலாளராக வேலைக்கு சேர்ந்தவர்கள் எல்லாம் இன்று இளைநிலை உதவியாளராக பதவி உயர்வு பெற்று எங்களுக்கு பொறுப்பாளராக இருக்கிறார்கள். ஆனால் இன்னமும் நாங்கள் அதே நிலையில்தான் இருக்கிறோம்” என்ற கண்ணில் வடிந்த துயரத்தை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

நவம்பர் 2, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் போராடும் சத்துணவு ஊழியர்கள்.

“தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தில் 63 துறைவாரி சங்கம் உள்ளது. அதில் எங்கள் சங்கமும் இருக்கிறது. ஆனால் அவர்கள் எங்களை கூட்டம் சேர்ப்பதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இரண்டரை லட்சம் பேர் தனித்துவமாக இருக்கிறோம். எங்களை தவிர்த்து அவர்களை மட்டுமே வைத்துக் கொண்டு போராடினால் வெறும் 3 லட்சம் தான் வரும். அதனாலயே எங்களை வைத்திருக்கிறார்கள்.

படிக்க :
சத்துணவு ஊழியர்களை வஞ்சிக்கும் எடப்பாடி அரசு
பள்ளிக் குழந்தைகளை பட்டினி போட்ட அமெரிக்கா!

மத்திய அரசுக்கு நிகரான சம்பளம் எங்களை வைத்துதான் அவர்களுக்கு கிடைத்தது. அதனால் நாங்களும் பலனடைந்தோம். இல்லையென்று சொல்லவில்லை. இருந்தாலும் கடந்த மூன்று நாட்களாக எங்கள் பகுதியில் போராட்டம் செய்து வருகிறோம். முக்கியமாக தாலுக்கா, யூனியன் அலுவகம் அருகில்தான் நடத்தினோம்.  எங்களை கைது செய்து மண்டபத்தில் அடைத்தார்கள். அதற்காக அவர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை. எங்களை வந்து சந்திக்கவில்லை. சந்திக்கவில்லையென்றாலும் பரவாயில்லை. அவர்கள் அலுவலகத்திலேயே எங்களுக்கு ஆதரவாக மாலை நேர ஆர்ப்பாட்டம் கூட செய்யவில்லை.

இன்னைக்கு நடக்கிற போராட்டத்தில் பெரிய கூட்டம் எதுவும் இல்லை. நாலாயிரம், அய்யாயிரம் சம்பாதிக்கிறார்கள். அவர்களால் இந்த கூட்டதிற்கு வர முடியாது. வந்தால் கடன் வாங்கி வரவேண்டும் என்ற நிலைதான் உள்ளது.

விழுப்புரத்தில் இருந்து ஒருவர் வந்திருந்தார்… மனைவியை பிரசவத்திற்கு மருத்துவமனையில் விட்டு விட்டு, மோதிரத்தை அடகு வைத்து இந்த கூட்டதிற்கு வந்ததாக என்னிடம் சொன்னார். வீட்டுல எல்லோரும் திட்டினார்கள்… ஆனால் நான் போராட்டத்துக்கு போனால்தான் வழ்க்கை என்று வந்துவிட்டேன்“ என்றார். இப்படித்தான் எங்க எல்லோருடைய வாழ்க்கையும் இருக்கு.

பாவம், விதவை பெண்கள், அபலையாக இருக்கும் சமையலர், சத்துணவு அமைப்பாளர் எல்லாம் கடும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். உழைப்பு சுரண்டல், பாலியல் தொந்தரவு எல்லாம் அவர்களுக்கு இருக்கிறது.  அதனை  எல்லாம் தாங்கிக் கொண்டு இந்த வேலையை செய்கிறார்கள்.

அரசின் திட்டங்கள் எல்லாம் “சீனி சக்கர சித்தப்பா.. சீட்டெழுதி நக்கப்பான்னு” ஏட்டளவில்தான் உள்ளது. அதுவும்கூட சத்துணவு பணியாளர்களுக்கு கிடையாது. சென்ற 25-ம் தேதி எங்க போராட்டம் தொடங்கியது. யாரும் எங்கள கண்டுக்கல. 29-ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினோம்.

அப்பொழுதுதான் சமூக நலத்துறை இயக்குனர் பேச்சு வார்த்தைக்கு அழைத்து “போராட்டத்தை கைவிடுங்கள்” என்றார். அதற்கு நாங்கள் உடன்படவில்லை. மறுநாள் 30-ம் தேதி சமூக நலத்துறை அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் அதையே வலியுறுத்தினார். “துணை முதல்வர் பன்னீர்செல்வம் பசும்பொன்தேவர் பிறந்த நாளுக்கு சென்றிருக்கிறார். அவர் வந்தவுடன் பேசிவிடுகிறேன்  நீங்கள் போராட்டத்தை கை விடுங்கள்” என்றார்.  நாங்கள் ஏற்கவில்லை.

கடந்த ஆகஸ்டில் 6-ம் தேதி நடந்த போராட்டத்தில் பேச்சு வார்த்தைக்கு போனபோது, “சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா முட்டை ஊழலில் மாட்டிக்கொண்டார். தலைமைச் செயலகத்துக்கு ரெய்டு வருவதாக சொல்லி வராமலே இருக்கிறார். ஆகவே இந்த பிரச்சனை முடிந்த பிறகு பேசிக்கொள்ளலாம்” என்றார்கள்.

நாங்கள் மறுக்கவே போலிசு எங்களை கைது செய்தது. பிறகு சத்துணவு சார்பு செயலாளர் பேசினார். “13-ம் தேதிக்குள் முதலமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக சொன்னார்கள். ஆனால் இன்று வரை எதுவும் செய்யவில்லை. போராட்டத்தை தொடர்கிறோம்.

நாங்க பேச்சுவார்த்தைக்கு போனாலே எதாவது காரணம் சொல்லி ஒளிந்து கொள்கிறார்கள். அமைச்சர்கள் வந்தால் நாங்கள் ஓடி ஒளிந்த காலம் போயி, நாங்க போனால் அவர்கள் ஓடி ஒளியும் காலமாகி விட்டது.

இன்னைக்கு (நவம்பர் 2) பெருந்திரள் போராட்டம் என்றால் கூட்டத்தை பார்த்து பேச்சு வார்த்தைக்கு அழைப்பார்கள் என நினைத்தோம். ஆனால் இன்னும் அவர்கள் கூப்பிடவே இல்லை. சங்க உறுப்பினர்கள்தான் அவர்களை சந்திக்க சென்றிருக்கிறார்கள்.  என்ன முடிவு வரும் என்று தெரியவில்லை. முன்பே உணவு மானியத்தை உயர்த்தி தருவதாக சொன்னார்கள். எவ்வளவு என்று சொல்லவில்லை.

பருப்பை சுரண்டுவதற்கு கலவை சாதம் திட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். 14 வகையான கலவை சாதம் என்பது ஒரு மோசடி. ஒரு மாதத்தில் வேலைநாட்கள் 22 நாளில் 7 நாட்கள் மட்டும் பருப்பு ஒதுக்கி, 15 நாட்கள் பருப்பு இல்லாமல் கலவை சாதம் போடச் சொல்கிறார்கள். அதுவும் 7 நாட்களுக்கு பருப்பு பட்டாணி பருப்பு.  அது வேக வைப்பதற்குள் போதும் என்று ஆகிறது.

ஐந்து நட்சத்திர ஓட்டலில் வேலை செய்த “செஃப் தாமு” பேச்சை கேட்டுக் கொண்டு கலவை சாதம் கொண்டு வந்திருக்கிறார்கள். மந்திரி வாயில் தாமு ஊட்ட, தாமு வாயில் செயலாளர் ஊட்ட எல்லாரும் சாப்பிட்டு நல்லா இருக்குன்னு சொன்னதால கலவை சாதம் போடுறாங்க.  எப்படி உருப்படும்?

இன்னொரு திட்டமும் போட்டார்கள்.. ஒன்றிய அளவில் பெரிய சமையல் கூடம் கட்டி ராட்சத அடுப்பு  மூலம் கலவை சாதம் கிண்டி எல்லா பள்ளிகளுக்கும் அனுப்பி விடலாம் என்று சொன்னார்கள்.  இதன்மூலம் தொழிலாளர்களை குறைத்து விடலாம். செலவும் மிச்சம் என்று நினைக்கிறார்கள். இப்பவும் அதைத்தான் செய்ய முயற்சி செய்கிறார்கள். 25 பிள்ளைகள் இல்லையெனில் அதனை மூட சொல்கிறார்கள். அங்கு வேலை செய்பவர்கள் உபரி பணியாளர்கள். அவர்களை பொறுப்பாளர் இல்லாத சத்துணவு மையத்திற்கு பொறுப்பாக்கி விடுவது. ஒரே இடத்தில் சமைத்து வாகனம் மூலம் சாப்பாட்டை கொண்டு செல்ல வேண்டும். இப்படி ஒரு பெரிய திட்டம்போட்டு வேலையை செய்து வருகிறார்கள்.

25 பிள்ளைகளுக்கு 2 ஆசிரியர்கள் இருக்கலாமாம். ஆனால் சத்துணவு பணியாளர்கள் இருக்கக் கூடாதாம். இதனைக் கேட்டால், “கல்வித்துறை வேறு;நீங்கள் வேறு” என்று சொல்கிறார்கள்.  ஓராசிரியர்-ஈராசிரியர் பள்ளியை மூட சொல்வது போல் நடக்கிறது. இத்தனை ஆண்டுகள் சாப்பிட்ட மாணவர்களுக்கு சோறு இல்லை என்றால் எப்படி இருக்கும்?

அதுமட்டுமில்லாமல் எங்களுக்கு என்று ஒரு துறையே இல்லை.  எங்களுக்கு சமூக நலத்துறையில் இருந்து பண்டு ஒதுக்கி ஊரக வளர்ச்சி துறை மூலம் நிர்வகிக்கப்படுகிறோம். ஊரக வளர்ச்சித்துறை சம்பளம் தருகிறது. ஆனால் எங்களை கல்விசார் துறை என்கிறார்கள். அப்படியானால் எங்களுக்கு தாய் அமைப்பு எதுவென்றே தெரியாமல் இருக்கிறோம்.

பஞ்சாயத்து செயலாளருக்கு இளைநிலை உதவியாளர் பதவி உயர்வு பெற்று விட முடியும். ஒரு ஆசிரியர், தலைமையாசிரியராகவும், அவர் தொடக்க கல்வி அலுவலராகவும் ஆக முடியும். ஆனால் நாங்கள் கடைசி வரை சத்துணவு அமைப்பாளர்தான். துறை இருந்தால்தானே துறைவாரியாக உயர முடியும்… அதுவே இல்லாமல் எங்கே உயருவது சொல்லுங்கள்??? இதைக் கேடால் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? அதான்….சத்துணவு மற்றும் சமூக நலத்துறை உள்ளதே..! என்பார்கள். அது வெறும் முத்திரைக்காக வைத்திருக்கிறான் அவ்வளவுதான்.

ஏன் எங்களுக்கு துறை இல்லை? ஏனென்றால் ஊராட்சியில் இருந்து நிதியை சுரண்ட முடியாது. இந்த துறையால் ஆள்பவர்களுக்கு லாபம் இல்லை. எங்களை செலவினத் துறையாக கணக்கில் வைத்திருக்கிறார்கள்.

முட்டை ஊழல் புகழ் சரோஜா

அரசு ஊழியர் சங்கத்துல ஊரக வளர்ச்சித்துறையும்தானே இருக்கு. அவர்களாவது எங்களுக்கு ஆதரவா போராட்டத்தில் ஈடுபடலாம். ஆனால் அவர்கள் நிதி முறைகேட்டில் ஈடுபடுவதால் அவன் போராட்டமே நடத்த மாட்டேங்கிறான். இன்னைக்கு அவனை வைத்து பிள்ளைகளுக்கு சோறு போடுகிறார்கள். ஊராட்சி செயலாளர்கள், கிளார்க்குகள் கையில் உள்ள பணத்தை போட்டு செய்கிறார்கள். அவர்கள் செய்யலாம். அவர்களுக்கு தேவை இருக்கிறது. பணம் வரும்!

எங்களுக்கு ஆதரவாக அவர்களால் இருக்க முடியவில்லை என்றால் அத்தனை துறையும் ஊழல்மயமாகி விட்டது. ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை….அத்தனையும்…! அதானல்தான்  எங்களை கண்டு கொள்வதில்லை. நாங்கள் ஊழல் செய்வதற்கு வழி இல்லை. எங்களை என்ன சொல்வார்கள், அரிசி பருப்பை வித்துட்டான்னு சொல்லுவாங்க…. இன்னைக்கு இருக்க நிலைமையில இது சாத்தியமா’ன்னு நீங்களே நெனச்சி பாருங்க.

அதிகாரிகள் எல்லாம் எங்களை பார்வையிட வந்தார்கள் என்றால் களவானி பயலை பார்ப்பது போலவே வருகிறர்கள்.. தலை கீழாக நின்று ஆய்வு செய்வார்கள். சத்துணவு இணைச் செயலாளர் ஒரு முறை எங்கள் மையத்திற்கு வந்தசமயம், புளியோதரை  செய்திருந்தோம். கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு…. புளி சரியா இல்லை.. நீ புளியே போடலன்னு  சொல்லிடாங்க. சமையகாரம்மா பயப்படுறாங்க. போட்டதா சொல்லுறாங்க… அதை காதுல வாங்காம மாவட்ட சத்துணவு அதிகாரி, பி.டி.ஓ இவர்கள் எல்லாம் புளி தோலை தேடியிருக்கிறார்கள். இதுவே இந்த அன்புநாதனிடம் போயிட்டு ஏன் தேடவில்லை.?  விஜயபாஸ்கர் குட்கா ஊழல், அவரிடம் சென்று ஏன் தேடவில்லை… அவர்களிடம் அடங்கிப் போவது…… எங்களிடம் மட்டும் சட்டதிட்டம் சரியாக அமல்படுத்தப்படுகிறது….. சரியாக அமல்படுத்துவதில் தவறில்லை. ஆனால் அவர்களுக்கு மட்டும் வளைந்து கொடுப்பதன் காரணமென்ன?

படிக்க :
பாஜக ஆளும் மும்பையில் குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து கிடையாது
மீரட்டில் தொடரும் மதிய உணவுப் பணியாளர்கள் போராட்டம் !

எங்களை பணி நிரந்தரம் செய்ய சொன்னால் பணம் இல்லை என்கிறார்கள். “பல்வேறு துறைகளில் வரி ஏய்ப்பு உள்ளது.  அதனை வசூலித்தால் இந்த பிரச்சனையை தீர்க்க முடியும்” என்று சுட்டி காட்டினார் முன்னாள் தலைவர் பழனிசாமி. ஆனால் அதை எந்த அரசும் கண்டு கொள்ளவில்லை.

சரி…! ஊரக வளர்ச்சிதுறையில் 2 லட்சம் பணியிடம் காலியாக உள்ளது.  அதன்மூலம் எங்களை நியமனம் செய்தால் அதற்கு ஒதுக்கிய பணத்தை சம்பளமாக கொடுக்க முடியும்! எங்களை மட்டுமல்ல…. எல்லா துறையிலும் இருக்கும் பகுதிநேர ஊழியர்களையும் கூட நிரப்பலாம்.  அதனையும் செய்ய மறுக்கிறது என்பதுதான் மனவேதனை அளிக்கிறது.

வினவு களச் செய்தியாளர் தற்பொழுது ஐந்து அம்ச கோரிக்கையை வைத்திருக்கிறோம். இதில் சாத்தியம்-சாத்தியமில்லாதது என்பதை மட்டும் பரிசீலிக்கிறோம் என்று அரசு இழுத்தடிக்கும். “மத்திய அரசுக்கு நிகரான சம்பளம் வேண்டும்” என்ற அரசு ஊழியர்கள் சங்கத்தின் ஒற்றைக் கோரிக்கையைபோல் “பணி நிரந்தரம்” என்ற கோரிக்கையை தீவிரப்படுத்தி போராடினால் மட்டும்தான் அரசு அடி பணியும்  என்பதை உணர்ந்துள்ளேன். எங்கள் சங்கமும் இதனை பரிசீலிக்க வேண்டும்!

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

2 மறுமொழிகள்

  1. அரசு ஊழியர்கள் என்னும் இந்த கூட்டத்திற்கு போராட்டம் கீராட்டம் என்பதே பிழைப்பாக போய்விட்டது. நாட்டில் உள்ள மக்களில் 90 சதவீதம் பேர் தனியார் துறையில் பணியாற்றுகிறார்கள் அல்லது சுயதொழில் செய்து சீரழிகிறார்கள். அவர்கள் போராட்டம் என்பதை பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாது. பிடிக்கவில்லை என்றால் வேலையை விட்டு விட்டு போக வேண்டியது தான். இல்லையெனில் தற்கொலை தான் வழி. ஆனால் அரசு ஊழியர்கள் என்னும் இந்த கும்பலுக்கு எவ்வளவு கொடுத்தாலும் போதவில்லை என ரகளைதான். நாட்டில் உள்ள இளைஞர்கள் பிஇ, எம்இ என விடிய விடிய மண்டி போட்டு படித்து விட்டு வெறும் 12000, 13000 என சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பத்தாண்டுகளுக்கு வேலை செய்தால்கூட சம்பளம் 50 ஆயிரத்தை தாண்டாது. நாட்டின் பொருளாதாரத்தையும் வளர்ச்சியையும் கெடுப்பது முதலாளிகள் மட்டுமல்ல இந்த அரசு ஊழியர்கள் என்னும் கூட்டமும் தான். அரசுக்கு வருகின்ற வருவாயில் அறுபது சதத்திற்கும் மேல் இந்த கூட்டத்திற்கு சம்பளம் கொடுப்பதற்கும் அந்தப்படி இந்தப்படி என வழங்குவதற்கும் சரியாக போய்விடுகிறது. இருந்தும் இவர்களுக்கு போதவில்லை. இந்தக் கும்பல் நடத்தும் போராட்டம் என்னும் சமூக விரோத செயலை ஆதரித்து கட்டுரை வேறு. உருப்பட்ட மாதிரிதான்.

  2. தம்பி

    அவங்க தான் சம்பளம் 6000 7000 ரிடையர் வரைன்னு சொல்ராங்களே

    தனியார் விபசாரம் பண்றான். கவர்மெண்ட்டும் பண்ணலாமா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க