மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

பத்திரிக்கை செய்தி                          நாள்: 15.12.2018

  • கிரானைட் கொள்ளை கிரிமினல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக பாஜக நடத்தும் கிரானைட் தாமரை யாத்திரையை தடை செய்!

துரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகளை மீண்டும் திறக்கக் கோரி குவாரி மீட்பு தாமரைப் பயணத்தை டிச.16,17 தேதிகளில் மேலூர் பகுதி கிராமங்களில் பாஜக நடத்தப் போவதாக செய்தி வெளியாகியுள்ளது.கிரிமினல் குற்றச் செயல்களில் ஈடுபட்ட கிரானைட் குவாரி உரிமையாளர்களுக்காக பாஜக களம் இறங்கியிருப்பது அதிர்ச்சிகரமாக உள்ளது. தமிழகத்தின் எந்தக் கட்சியும் செய்யத் துணியாத காரியத்தை பாஜக செய்கிறது.

பிரண்ட்லைன் பத்திரிக்கையில் வெளிவந்த கிரானைட் குவாரி ஊழல் தொடர்பாக உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணையர் திரு. சகாயம் அறிக்கையின்படி, கடந்த இருபது ஆண்டுகளில் கிரானைட் கற்களின் உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றில் நடந்துள்ள முறைகேடுகள் மற்றும் வரி ஏய்ப்பால் தமிழக அரசிற்கு ஏற்பட்ட இழப்பு 65,154.60 கோடி . இந்த முறைகேடுகளின் மீது அபராதம் விதிக்கப்பட்டிருக்குமானால், அரசிற்கு 44,283.12 கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருக்கும். ஆக, மதுரை மாவட்டத்தில் மட்டும் நடந்துள்ள கிரானைட் சுரங்க ஒதுக்கீடு, உள்ளூர் விற்பனை, ஏற்றுமதி ஆகியவற்றால் அரசிற்கு ஏற்பட்டுள்ள இழப்பு 1,09,437.72 கோடி என்கிறார் சகாயம்.இந்த அறிக்கையை தமிழக அரசு இன்னமும் வெளியிடவில்லை.

“அதிகார வர்க்கத்தின் துணையோடு கிரானைட் குவாரி குத்தகைதாரர்கள் நடத்திய முறைகேடுகளிலேயே மிகப்பெரும் முறைகேடு கிரானைட் கற்களை ஏற்றுமதி செய்வதில் நடந்த அந்நியச் செலாவணி மோசடிதான்” மேலும், “இந்த ஏற்றுமதி மோசடிகள் ரூபாயின் மாற்று மதிப்பைப் பாதிக்கக்கூடிய வகையில் அபாயகரமானதாக இருந்தன”.

மதுரை மாவட்டத்தில் வெட்டியெடுக்கப்பட்ட கிரானைட் கற்களில் எழுபது சதவீதம் அந்நிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. ஏற்றுமதி செய்யப்பட்ட கற்களின் அளவையும், மதிப்பையும் குறைத்துக் காட்டி, அதன் மூலம் அமெரிக்க டாலர்களாகக் கிடைத்த கருப்புப் பணத்தை, குவாரி குத்தகைதாரர்கள் அந்நிய நாடுகளில் பதுக்கியிருக்கின்றனர்.

படிக்க:
♦ கிரானைட் கொள்ளை : ஒரு பயங்கரவாத நடவடிக்கை !
♦ கிரானைட் கொள்ளையை அம்பலப்படுத்தும் ஆவணப்படம்!

“இம்மோசடியைத் தாய்நாட்டின் பொருளாதார நலன்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்” எனக் குற்றஞ்சுமத்தியிருக்கும் சகாயம், “இந்தத் துரோகத்திற்கு தூத்துக்குடி, கொச்சி, சென்னை, மங்களூர் துறைமுகங்களின் அதிகாரிகளும், சுங்கத் துறையும், அரசு வங்கிகளும் உடந்தையாகச் செயல்பட்டிருப்பதோடு, விசாரணையின்போது தகவல்களைத் தர மறுத்தும், ஆவணங்களை அழித்தும் பி.ஆர்.பி., துரை தயாநிதி உள்ளிட்ட குத்தகைதாரர்களைக் காப்பாற்றும் விசுவாசத்தோடு நடந்து கொண்டனர்” என்கிறார்.

கிரானைட்டுக்காக வெட்டி எடுக்கப்பட்ட மலை

தேசப்பற்று பேசும் பாஜக, தேசத்தின் பொருளாரத்தையே நாசம் செய்த “தேசத் துரோக கிரானைட் முதலாளிகளுக்கு” ஆதரவாக களம் இறங்கியிருப்பது ஏன்? இதன் பின்னணி என்ன? குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு மேலூர் நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்துவரும் நிலையில் பாஜக யாத்திரை நடத்துவதன் நோக்கம் என்ன? பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசனின் இந்த அறிவிப்பு தொடர்பாக தமிழக அரசு மவுனம் காப்பதேன்? மோடி-எடப்பாடி அரசுகள் தேர்தல் நிதிக்காக கிரானைட் குவாரிகளைத் திறக்க முடிவு செய்து விட்டதா?

எனவே, சகாயம் அறிக்கையை தமிழக அரசு உடனே வெளியிட வேண்டும்.அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைத்து அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேசத்தின் பொதுச் சொத்தை, விவசாயத்தை, சுற்றுச் சூழலை நாசம் செய்த கிரானைட் கிரிமினல் குற்றவாளிகளுக்கு ஆதரவான பாஜக கிரானைட் யாத்திரையைத் தடை செய்ய வேண்டும். இல்லையேல் பாதிக்கப்பட்ட மக்களைத் திரட்டி “விவசாயம், சுற்றுச் சூழல் காப்புப்” பயணத்தை நாங்கள் நடத்துவோம்.

இவண்,
வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
பேச: 9443471003

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க