குதி வாய்ந்த கிராமப்புற குழந்தைகளுக்காக மைய அரசு நடத்தும் உறைவிடப் பள்ளியான ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் (Jawahar Navodaya Vidyalayas) கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 49 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.

தற்கொலை செய்த மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தலித் மற்றும் பழங்குடியினர் மேலும் அவர்களில் பெரும்பான்மையானோர் ஆண் குழந்தைகள் என்ற தகவலை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இந்தியன் எக்ஸ்பிரஸ் பெற்றுள்ளது. அவர்களில் எழுவரை தவிர அனைவரும் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளதாகவும் அவர்களது உடல் சக மாணவர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களால் கண்டெடுக்கப்பட்டதாகவும் அது கூறுகிறது.

Navodaya vidyalaya school1985-86-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட நவோதயா பள்ளிகள் பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் பெறும் அதிக மதிப்பெண்களுக்காக பெயர் பெற்றவை. இப்பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 10-ம் வகுப்பில் 99 விழுக்காடாகவும் 12-ம் வகுப்பில் 95 விழுக்காடாகவும் இருக்கிறது. மேலும் இத்தேர்ச்சி விகிதம் தனியார் மற்றும் சி.பி.எஸ்.சி பள்ளிகளை விட மிக அதிகம் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் கூறுகிறது.

நுழைவுத் தேர்வு அடிப்படையில் இயங்கும் இப்பள்ளிகள் ஆறாவது வகுப்பு முதல் தொடங்குகின்றன. அதில் 75 விழுக்காடு இடங்கள் கிராமப்புற மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.  போட்டி அடிப்படையிலான சேர்க்கையில் தேர்வு எழுதும் மாணவர்களில் வெறும் 3% மாணவர்களுக்கே இடம் கிடைக்கும். மைய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான நவோதயா வித்யாலயா சமிதி (Navodaya Vidyalaya Samiti), நாடு முழுவதும் கிட்டதட்ட 635 பள்ளிகளை நடத்தி வருகிறது.

படிக்க:
அனிதாக்களை 5 -ஆம் வகுப்பிலேயே தூக்கிலிடும் நவோதயா பள்ளிகள் !
♦ மையஅரசு மாதிரிப் பள்ளிகள் : கேள்விக்குறியாகும் தமிழ்வழிக் கல்வி

ஆனால் இப்பள்ளிகளில் உள்ள சூழ்நிலைகள் வெளியிலிருந்து பார்ப்பது போல அவ்வளவு சிறப்பானதாக இல்லை. இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆய்ந்த  46 பள்ளிகளில் 41 பள்ளிகளில் கடுமையான பிரச்சினைகளை மாணவர்கள் சந்தித்து வருவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறுகிறது. இப்பள்ளிகளில் நடந்த கொடூரமான தற்கொலை புள்ளிவிவரங்களில் இப்பிரச்சினைகள் எதிரொலிக்கின்றன:

“..இப்பள்ளிகளில் படிக்கும் ஒவ்வொரு இலட்சம் மாணவர்களில் கிட்டத்தட்ட ஆறு மாணவர்கள் 2017-ல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது 2015-ல் 6 முதல் 17 வயது வரம்பில் உள்ளோருக்கான தேசிய தற்கொலை விகிதமான ஒரு இலட்சத்திற்கு 3 தற்கொலைகள் என்பதை விட அதிகமானது”.

கடந்த ஐந்தாண்டுகளில் நவோதயா பள்ளிகளில் தற்கொலை செய்து கொண்ட 49  மாணவர்களில் 16 மாணவர்கள் அட்டவணைப்பிரிவை சேர்ந்தவர்கள். மொத்த எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (25 பேர்கள்) தலித் மற்றும் பழங்குடி வகுப்பை சேர்ந்தவர்கள்.

தற்கொலை செய்தவர்களில் 70 விழுக்காட்டினருக்கும் அதிமானோர் ஆண் மாணவர்கள் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறுகிறது. 49  தற்கொலைகளில் 43  மாணவர்கள் 9-ம் வகுப்பையும் அதற்கடுத்த வகுப்புகளையும் சேர்ந்தவர்கள். ஒருதலைக்காதல், குடும்ப சிக்கல்கள், பள்ளிகளில் வழங்கப்பட்ட உடல்ரீதியிலான தண்டனைகள் அல்லது ஆசிரியர்களால் இழிவுப்படுத்தப்படுதல், கல்வி தொடர்பான அழுத்தம், மன சோர்வு மற்றும் நண்பர்களுடனான சண்டை ஆகியவையே தற்கொலைக்கு காரணங்களாக செய்தித்தாள்கள் கூறுகின்றன. கோடை விடுமுறைக்கு அடுத்த மூன்று மாதங்களில் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

2016-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நவோதய வித்யாலயா சமிதி ஒரு அறிவிப்பை அதன் பள்ளிகளுக்கு அனுப்பியது. “எந்த அறிகுறியையும் காட்டாமல் எந்த ஒரு குழந்தையும் இது போன்ற தீவிர நடவடிக்கையில் ஈடுபடமாட்டார்கள். இந்த அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிய வித்யாலயா நிர்வாகம் தவறிவிட்டது. ஏற்கனவே இந்த அறிகுறிகளை நிர்வாகம் அறிந்திருந்தாலும் மாணவர்களால் தெரிய வந்திருந்தாலும் எளிதாகவே நிர்வாகத்தால் அணுகப்பட்டிருக்கின்றன” என்று அனைத்து நவோதயா பள்ளிகளுக்கும், சமிதி சுற்றிக்கை அனுப்பியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் கூறுகிறது.

நவோதயா பள்ளிகள் தமிழ்நாடு நீங்கலாக அனைத்து மாநிலங்களிலும் செயல்பட்டு வருகின்றன. 2018-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மைய அரசின் உதவியுடன் ஒரு நவோதயா பள்ளியை தொடங்க ஏதுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்படத்தக்கது.

ஆனால் கல்வி உரிமை சட்டத்தின் படி இந்தியாவில் அனைத்து மாணவருக்கும் நுழைவுத்தேர்வு இல்லாமல் கல்வியளிக்கப்பட வேண்டும். மாறாக நவோதயா பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் நுழைவுத்தேர்வு வைத்து வகுப்புக்கு வெறும் 80 மாணவர் மட்டுமே சேர்த்து கொள்ளப்படுவார்கள். இத்தகைய போட்டி மனப்பான்மை முதல் பிரச்சினை. அடுத்து ரோகித் வெமுலா முதல் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களிலேயே ஒடுக்கப்படும் சாதிகளைச்  சார்ந்த மாணவர்கள் சாதிரீதியிலான ஆதிக்கத்தை எதிர்கொள்கின்றனர். இன்னொரு புறம் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக வின் இந்து ராஷ்டிர அரசியல்படியும் கல்வி நிறுவனங்களில் சாதி-மதத் துவேசம் காட்டப்படுகின்றது. ஜே என் யூ போன்ற உயர்கல்வி மாணவர்களே அவற்றை எதிர் கொள்ள முடியாத போது இந்த பள்ளி மாணவர்கள் என்ன செய்வார்கள்? ஒரு முன்மாதிரிப் பள்ளியிலேயே நமது மாணவர்கள் இப்படி தற்கொலை செய்வதை இந்த அரசு தடுக்க முடியவில்லை. இத்தகைய சூழலில் மாணவர்களுக்கு அரசியல் பிரச்சாரம் கொண்டு போவதை இடது சாரி முற்போக்கு அமைப்புகள் அதிகம் செய்ய வேண்டியது அவசியம்.

தமிழாக்கம் : சுகுமார்
நன்றி: த வயர்

 

 

சந்தா செலுத்துங்கள்

உங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா? வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.