“காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடகாவிற்கு பாசிச பாஜக அனுமதி! தமிழகத்தை பாலைவனமாக்கும் கார்ப்பரேட் முதலாளிகளின் சதித்திட்டத்தை முறியடிப்போம்!” எனும் முழக்கத்தோடு ஓசூர் தேன்கனிக்கோட்டை வட்டம் அஞ்செட்டி பேருந்து நிலையம் அருகே மக்கள் அதிகாரம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. நாள் 30.12.2018.

ஆர்ப்பாட்டத்தில் அப்பகுதி மக்கள் அதிகாரத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் சரவணன் தலைமை தாங்கினார். மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகிகளான தோழர் இராமு, தோழர் சங்கர், தோழர் செல்வி மற்றும் தருமபுரி மண்டல பொருளாளர் தோழர் கோபிநாத் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக, தோழர் சென்னப்பன் நன்றியுரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக ஆயிரக்கணக்கில் துண்டறிக்கைகளும், நூற்றுக்கணக்கில் சுவரொட்டிகளையும் தயாரித்து கொண்டு நாட்றாம்பாளயம், அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, மற்றும் ஒசூர் முழுவதும் பரவலாக பிரச்சாரம் செய்திருந்தனர்.

தோழர் கோபிநாத் தனது கண்டன உரையில், “மேகதாதுவில் அணைக் கட்டுவதை ஆதரித்து கர்நாடக அமைச்சர் சிவக்குமார் முழங்குகிறார். ஆனால், மத்தியிலே இருக்கிற பிரதமர் மோடி, அமைச்சர் நிதின் கட்கரி இவர்கள் என்ன சொல்லுகிறார்கள்? நிதின்கட்கரி எதிர்க்கட்சியினருக்கு விடுத்த அறிக்கையில் கர்நாடக அமைச்சர் சிவக்குமார் என்ன சொன்னாரோ அதையேச் சொல்லி காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்டும் திட்டம் என்பது தமிழ் நாட்டுக்கு நன்மை பயக்கும் திட்டம். அதனால நீங்கள் பாராளுமன்றத்தை முடக்காதீர்கள், மக்கள் நலத்திட்டங்கள் விவாதிக்கப்படாமல் போய்விடும் என்று நிதின் கட்கரி பேசுகிறார்.

தமிழ்நாடு என்றாலே எப்பவுமே பி.ஜே.பி-க்கு பிடிக்காது. இது பெரியார் பிறந்த மண், பார்ப்பன எதிர்ப்பு கொண்ட மண். ஆக, தமிழ்நாட்டை எப்போதுமே வெறுப்பாக பார்த்துக் கொண்டிருக்கும் பி.ஜே.பி தமிழ் நாட்டின் மீது கரிசனை கொள்ளுமா? இங்கே நம்ம தமிழ்நாட்டில ஓட்டு வாங்கி ஜெயிக்க முடியாது. ஆனால், கர்நாடகாவில் ஓட்டு வாங்கி ஜெயிக்கிறதுக்கான வாய்ப்பாக இந்தப் பிரச்சினையை பார்க்கிறது. கர்நாடகாவில் இருக்கிற பி.ஜே.பி என்ன சொல்லுது? சுப்ரீம் கோர்ட்டு சொல்றதெல்லாம் இருக்கட்டும், எங்களுடைய மோடி கோர்ட்டு என்ன சொல்லுது? கார்ப்பரேட் கோர்ட் என்ன சொல்லுது என்று மட்டும்தான் அவன் பார்க்கிறான்.

மேகதாதுவில் 65 டி.எம்.சி தண்ணீர் தேக்கி வைத்தால்… கர்நாடகாவிற்கு மின்சாரம் கிடைக்கும், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கிடைக்கும் என்ன சொல்ற என்று கேட்கிறான்? இதனை மேலோட்டமாக பார்க்கும்போது சரிதான் என்று தெரிகிறது. ஆனால் இது உண்மையா?

கர்நாடகாவில் உள்ள சமூக ஆர்வலர்களில் பலரும் இது தவறான திட்டம் என்று பேசுகிறார்கள். எதிர்க்கிறார்கள்.  ஆனால் இவர்களோ, இந்த திட்டத்தை அமல்படுத்தியே தீரவேண்டும் என்று வெறித்தனமாக துடிக்கிறார்கள். அதற்கு என்ன காரணம்? இதன்பின்னே மிகப்பெரிய சதித்திட்டம் இருக்கிறது. இந்த அணையை கட்டுவதன் மூலமாக இரண்டு விதமான லாபம் பார்க்கலாம் என்று நினைக்கிறார்கள்.

ஒன்று தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கனிமவளங்கள் மற்றொன்று கர்நாடகாவில் உள்ள பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள், மல்டி நேஷனல் கம்பெனிகளுக்கு எல்லாம் தாராள தண்ணீர் சப்ளை. இந்த சதித்திட்டங்களை மறைத்துக்கொண்டு மொக்கையான காரணம் சொல்லி அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்ய 6,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளனர். இதனை சென்று பார்வையிடுகிறேன் என்று சொல்லி முன்னாள் பிரதமர் தேவகவுடா போய் பார்வையிட்ட பிறகு, ஆமாம் இந்த அணை அவசியமானது. இருமாநிலத்திற்குமே நன்மை பயப்பது என்று பேசுகிறார்.

megathathu dam issue pp protest (2)
தோழர் கோபிநாத்

காவிரியை தடுத்து நிறுத்தி வைப்பது என்பது கர்நாடகாவில் உள்ள கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும், தமிழ்நாட்டின் 22 மாவட்டங்களை பாலைவனமாக்கி அந்த பகுதியை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்ப்பதற்காத்தான்.

இந்த நீதிமன்றங்களோ, இந்த மத்திய அரசோ அல்லது இவர்கள் அமைத்த காவிரி மேலாண்மை ஆணையமோ நமக்கு எதுவும் செய்யாது. இந்நிலையில் நம்ம தமிழ்நாட்டில் இருக்கிற ஆட்சியாளர்கள் நமக்கு தண்ணீரைப் பெற்றுத் தருவார்கள் என்று நம்பிக்கை கொள்ள முடியுமா? அமைச்சர் ஜெயக்குமார் சொல்லுகிறார், நாங்க சட்டப்போராட்டம் நடத்தி உங்களுக்கு தண்ணீரைப் பெற்றுத்தருகிறோம் என்று மேடையிலே சவால் விடுகிறார். இவரது சட்டப் போராட்டத்தை கடுகளவும் கூட எவனும் மதிக்க மாட்டான்.

படிக்க:
♦ மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி : அரசியல் சட்ட விரோதமானது !
♦ மேக்கேதாட்டு அணை : மீண்டும் அநீதி!

உன் சட்டப் போராட்டத்தின் யோக்கியதையை நாங்க தூத்துக்குடியில பாத்தோமே. தூத்துக்குடியில் மக்கள் என்ன கேட்டார்கள்? ஸ்டெர்லைட் ஆலையை மூடு. எனக்கு சுத்தமான தண்ணீர், சுத்தமான காற்று வேணும் என்று தூத்துக்குடி மக்கள் சொல்கிறார்கள். ஆனால், நீ என்ன பண்ணிட்டிருக்க? நான் போட்டிருக்கற தடையை எல்லாம் யாரும் மீறமுடியாது. வலுவான இந்த ஆளும் அரசாங்கத்தை எவராலும் ஒன்னும் பண்ண முடியாது, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது. ஐ.நா சபைக்கு போனாலும் செல்லாது. அவ்வளவு ஸ்ட்ராங்ன்னு சொன்ன. இப்ப பல நாள் கழித்து எனக்கு அதெல்லாம் தெரியாது என்று சொல்லுகிறார்கள் இந்த தமிழக அமைச்சர்கள். இவர்களை நாம் இந்த மேகதாது விசயத்திலும் நம்பத்தான் முடியுமா? இவர்கள் ஒவ்வொருவரும் எப்படி இருக்கிறார்கள்? ஒருவர் குட்கா புகழ், ஒருவர் தெர்மாகூல் புகழ், கேவலம் முன்னால் முதலமைச்சர் முதன்மை குற்றவாளி ஜெயாவை அப்பல்லோவில் கிடத்திவிட்டு இரண்டு இட்லி சாப்பிட்டு ஒருகோடியே பதினேழு லட்சம் செலவாகியிருக்கிறதாக கணக்கு காட்டி கொள்ளையடிப்பதையே தொழிலாக கொண்டிருக்கும் இவர்களை நாம் நம்பத்தான் முடியுமா?

கஜா புயலால் தங்களது 30 ஆண்டுகால உழைப்பு எல்லாமே வீணாகிப்போய் விட்டதே, இனி  சாப்பிடுவதற்குகூட ஒன்னும் இல்ல, அரிசி இல்லைன்னு தட்டேந்தி நிற்கிறார்கள் நமது விவசாயிகள். இந்த நிலையில் ஓ எஸ் மணியன் போன்றவர்கள் அவர்களிடம் சென்று திமிர்த்தனமாக பேசுகிறார்கள். மக்களே ஆத்திரப்பட்டு துரத்தி செருப்பைத்தூக்கி அடித்தார்கள். திருடன் சுவரேறி குதித்து ஓடுவதுபோல ஓடிச்சென்றார். இவர்களைப் பொறுத்தவரை இவர்களுக்கு வந்தாதான் ரத்தம், மற்றவர்களுக்கு அப்படி அல்ல என்று கருதுபவர்கள். எனவே,  அணையைக் கட்டினால் தான் நாம கமிஷன் வாங்கமுடியும், 8 வழி சாலை போட்டால்தான் ஓபிஎஸ் – ஈபிஎஸ் போன்றோர் காண்ட்ராக்ட் எடுத்து, மணல் கொள்ளையடித்து கமிசன் பெற்று கொள்ளையிடமுடியும் என எதிர்பார்க்கிறார்கள். அப்படித்தான் மேகதாது அணை கட்டினால் என்ன கமிஷன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள காவிரிப் படுகையில் தாதுப்பொருட்கள் இருக்கிறது, வாயுப்பொருட்கள் இருக்கிறது. இவைகளை கொள்ளையிடவே காவிரியின் குறுக்கே அணை கட்ட வேண்டும் என்ற முதலாளிகளின் திட்டத்தை அமுல்படுத்துவதற்கான அதிகாரிகளின் கூட்டம் தான் இந்த அதிகாரிகள் அமைச்சர்கள் எல்லாம். இன்னைக்கு மீத்தேன் எடுக்காதே ஹைட்ரோகார்பன் எடுக்காதே என்று பல நாட்களாக கிராமங்களில் மக்கள் போராடுகிறார்கள். அந்தப் போராட்டத்தை இவர்கள் துளியாவது மதிக்கிறார்களா ?

என் ஊர்ல என்னுடைய விவசாயத்தை அழிக்காதே! என்னுடைய வாழ்வாதாரத்தை பறிக்காதே என்று பேச முடியல. அப்படியே பேசினால் உடனே வரிசை வரிசையாக போலீசை குவிக்கிறார்கள். நீ அத பேசாத இத பேசாத என தடை விதிக்கிறார்கள். இப்ப இங்க அசோக் லேலண்ட் நிறுவனம் தண்ணி எடுத்து விற்பதற்கு நாட்றம்பள்ளிக்கு வருது. வந்து என்ன பன்ன போறான். ராட்சத போர்வெல் போட்டு இந்த காடுகளில் கொஞ்சம் நஞ்சம் இருக்கிற பசுமையும் இந்த கார்ப்பரேட் முதலாளிக்கு பொறுக்க முடியல. இப்ப சேசுராஜபுரத்துல வந்து அடிக்கல் நாட்டிருக்கிறான். ஆக, இன்றைக்கே மேகதாது விஷயம் ஆகட்டும் அல்லது எட்டு வழி சாலை ஆகட்டும் எந்த பிரச்சனையும் மக்கள் பிரச்சினையை தீர்ப்பதற்கு லாயக்கற்று இந்த அரசமைப்பு தோற்றுப்போய் இருக்கிறது. அதனுடைய வெளிப்பாடுதான் இந்த மேகதாது அணை கட்டும் திட்டம்.

ஆர்ப்பாட்டத்தை நின்று கவனித்து செல்லும் மக்கள்

மேகதாதுவில் அணை கட்டினால் டெல்டா மட்டும் பாதிக்கும் என்று புரிந்து கொள்ளக் கூடாது தமிழகம் முழுவதும் பாலைவனமாக, சுடுகாடாக மாறிவிடும். தமிழ்நாட்டுல இருக்கிற 22 மாவட்ட மக்களின் குடிநீர், விவசாயம், உயிர், நாடி, நரம்பு எல்லாம் ரத்தமும் சதையுமாக மக்கள் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும். மத்திய அரசாகட்டும், மாநில அரசாகட்டும் இவர்கள் காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது என்பது இவங்க போடுகிற பிச்சை இல்லை. அது தமிழ்நாட்டினுடைய உரிமை.

உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு போட்டால் என்ன நடக்கும்? அந்த வாழ்க்கை மீண்டும் ஒரு நாற்பது வருஷம் இழுத்துச் செல்லும். அதனால இனி நீதிமன்றங்களோ. மத்திய மாநில அரசோ, அதிகாரிகளோ, இந்த அமைப்பு முறைகளில் உள்ள யாருடைய வாக்குறுதிகளையும் பாதிக்கப்படும் மக்களாகிய நாம் நம்பி ஏமாறமுடியாது. மக்கள் தாங்களே அணிதிரண்டு அதிகாரத்தை கைப்பற்றுவது கையிலெடுப்பது ஒன்றுதான் தீர்வு. நீதிமன்றமோ, சட்டமன்றமோ நீங்க யாரும் எந்த ஆணியையும் பிடுங்கத்தேவையில்லை. நீங்க இயங்காமல் சும்மா இருந்தாலே போதும். மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.

எளிய உழைக்கின்ற மக்களுடைய போராட்டம் மட்டும்தான் காவிரியின் குறுக்கே அணை கட்டக்கூடிய இந்த சதித் திட்டத்தை தடுக்கும், என்று கூறி தனது பேச்சை முடித்துக் கொண்டார்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தருமபுரி மண்டலம். தொடர்புக்கு : 97901 38614.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க