த்தர பிரதேச மாநிலம் புலந்தசாகர் மாவட்டத்தில் ‘பசு பாதுகாவலர்கள்’ என்ற பெயரில் காவிகள் நடத்திய வெறியாட்டத்தில் ஒரு போலீசு அதிகாரி கொல்லப்பட்டார்.  நாடு முழுவதும் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசு அதிகாரியை திட்டமிட்டு காவிகள் கொன்றதும் அம்பலமானது.  சர்வதேச சமூகம் கண்டனங்களை பதிவு செய்த நிலையில், காவி ரவுடி சாமியார் ஆதித்யநாத்தின் ஆட்சியில் கொலை வழக்கில் கைதான காவி குண்டர்கள் கதாநாயகர்களாக போஸ்டர்களில் கொண்டாடப்படுகின்றனர்.  இன்னொரு பக்கம்,  மாட்டை வெட்டிய குற்றச்சாட்டின் கீழ் கைதான மூவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது!

வன்முறைக் கும்பலைக் கூட்டிய முதல் குற்றவாளி யோகேஷ் ராஜ்

மகர சங்கராந்தி (பொங்கல்) விழா வாழ்த்து போஸ்டரில் வன்முறையை ஏவியது, போலீசை கொன்றது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் கைதாகியுள்ள விசுவ இந்து பரிசத் அமைப்பைச் சேர்ந்த யோகேஷ் ராஜ் மேற்கண்ட சுவரொட்டிகளில் கதாநாயகனாக சிரிக்கிறார். இதே வழக்கில் கைதாகியிருக்கும் சதீஸ் லோதி, ஆசிஸ் சவுகான், சத்யேந்திர ராஜ்புத், விஷால் தியாகி ஆகியோரின் படங்களும் இடம்பெற்றுள்ளன.

வயல்வெளியில் இறந்த மாட்டின் மிச்சங்கள் இருந்ததாகக் கூறி வன்முறையையில் இறங்கியது சுமார் 600-க்கும் மேற்பட்ட காவி குண்டர் படை. இந்தப் படைக்குத் தலைமை தாங்கியவர் யோகேஷ் ராஜ்.  இந்த வன்முறை வெறியாட்டத்தில் காவல் நிலையம், வாகனங்கள் தாக்கப்பட்டு, எரிக்கப்பட்டதோடு, போலீசு அதிகாரி சுபோத்குமார் சிங் சுட்டுக்கொல்லப்பட்டார். காவிகளே எடுத்த வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் கையும் களவுமாக அவர்கள் சிக்கினர். வேறு வழியில்லாமல் அவர்கள் மீது வழக்கு போட்டு, சம்பவம் நடந்து ஒரு மாதம் கழித்து கைது செய்தது உ.பி. அரசு.

படிக்க:
மோடியின் ஆட்சி இந்து ராஷ்டிரம்தான் !
ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க சதி : முன்னணியாளர்கள் சட்ட விரோத கைது !

இந்த நிலையில், வன்முறை கும்பலை கொண்டாடும் போஸ்டர்கள் சம்பவம் நடந்த புலந்தசாகரில் ஒட்டப்பட்டுள்ளன என செய்தி வெளியிட்டுள்ளது டெலிகிராப் நாளிதழ். இந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ள பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த பிரவீன் பாடி, “போஸ்டரில் இடம்பெற்றுள்ளவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள்தான், குற்றவாளிகள் அல்ல” என்கிறார். மத்தியிலும் மாநிலத்திலும் நடந்து கொண்டிருக்கும் தங்களுடைய ஆட்சியே என்பதை கோடிட்டு காட்டும் இவர்,  “பிரபலமான எங்களுடைய தலைவர்களை குற்றவாளிகள் என சொல்லும் விதமாக அவர்கள் எந்த குற்றத்தையும் செய்யவில்லை. அவர்கள் அப்பாவிகள், நாங்கள் அவர்களை ஆதரிக்கிறோம்” என ‘வெளிப்படையாக’ பேசுகிறார் பிரவீன் பாடி. காவிகள் கொண்டாடப்படும் நிலையில், மாட்டை கொன்றதாக  நால்வர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.

புலந்த்சாகர் மாவட்ட நீதிபதி அனூஜ் குமார், “பொதுமக்கள் கருத்தின் அடிப்படையில், அவர்களை சிறையில் வைத்திருக்க முடிவு செய்துள்ளோம்” என்கிறார்.  அசார் கான், நதீம் கான், மகபூப் அலி ஆகியோர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதானவர்களுக்கு 12 மாதங்கள் ஜாமீன் பெற முடியாது.

ஆனால், கொலை வழக்கில் கைதான காவி குண்டர்கள் மீது இந்தச் சட்டம் பாயவில்லை. விரைவில் அவர்கள் ஜாமீனில் வெளிவருவார்கள். அவர்களை முதலமைச்சர் ஆதித்யநாத் வரவேற்று மாலை அணிவிப்பார் எனவும் எதிர்ப்பார்க்கலாம். அக்லக் கொலை வழக்கில் கைதாகி வெளியே வந்த குற்றவாளிகள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டார்கள் என்பது நினைவு கூறத்தக்கது.  மாட்டு மூளை காவிகளின் ஆட்சியில் மனித உயிர்களுக்கு மயிரளவுகூட மதிப்பில்லை என்பதை உத்தர பிரதேசத்தில் நடந்துவரும் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றன.


கலைமதி
செய்தி ஆதாரம்: டெலிகிராப்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க