தேர்தல் விதிமுறை என்ற பெயரில் மக்கள் பிரச்சினைக்கு காது கொடுத்து தீர்க்க முன்வராத அரசு, சாராய விற்பனையை அதிகரிக்கும் வேலையை மட்டும் சரியாக பார்த்து வருகிறது. கிராமம் கிராமமாக இலட்சக்கணக்கில் டாஸ்மாக் சாராய பாட்டில்களை வாங்கி குவித்து வருகின்றனர் சாராய வியாபாரிகளும் ஒட்டுக் கட்சி பிரமுகர்களும். ”தேர்தலை நேர்மையாக நடத்துகிறோம்” என்று வாய்கிழிய பேசும்  தேர்தல் ஆணையம் இதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் உள்ள கரியம்பட்டி கிராமத்தில் இலட்சக் கணக்கான ரூபாய்க்கு சாராய பாட்டில்கள் பதுக்கி வைத்துள்ளனர் சாராய வியாபாரிகள்.   இதனை பிடித்தால் இலட்ச கணக்கான ரூபாய் வருமானம் பார்க்கலாம் என்று ஊரில் சோதனை போட்டனர். தருமபுரி மது ஒழிப்பு போலீசார், சாராய பாட்டில் பதுக்கி வைத்துள்ள நபர்கள் யார் என்று தெரிந்தும், அவர்கள் வீட்டை சோதனை செய்யாமல்  சாராயத்தை எதிர்த்துப் போராடி வரும் மக்கள் அதிகாரம் தோழர் சரவணனின் உறவினர் வீட்டில்  சாராய பாட்டில்களை தேடிவதாகக் கூறி பூட்டை உடைத்துள்ளனர்.

மக்களால் சிறைபிடிக்கப்பட்ட போலீசார்.

தகவல் கிடைத்து வீட்டிற்கு வந்த சரவணன், போலீசாரை பார்த்து ”ஏன் எங்க வீட்டை உடைத்தீர்கள்” என கேட்டுள்ளார். முறையாக பதில் சொல்லாத போலீசாரை பார்த்து, ”பதில் சொல்லாமல் செல்ல விடமாட்டேன்” என்று கிராமத்திற்கு வெளியே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளார். ”நீங்களே சாராயம் விற்பவர்களை கைது செய்வதில்லை. நீங்களே அவர்களிடம் மாமுல் வாங்க வருகிறீர்கள். தற்போது நடவடிக்கை எடுப்பதாக நடிக்கிறீர்கள்” என அம்பலப்படுத்திய போது போனில் யாரிடமோ பேசுவது போல் இன்ஸ்பெக்டர் முத்து செல்வன் போனை காதில் வைத்து கொண்டார். மக்கள் அங்கு கூடி போலீசைக் கண்டித்தனர். அதில் ஒரு போலீசு மட்டும் மன்னிப்பு கேட்டார். மற்றவர்கள் என்ன பேசுவது என்று தெரியாமல் திருதிருவென விழித்தனர். கேள்விக்கு பதிலே சொல்ல முடியாமல் அமைதியாக ஒரிடத்தில் அமர்ந்து கொண்டனர்.

படிக்க:
நிலாவுக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லயே | டிவிட்டர் லந்து !
கார்ப்பரேட் – காவி பாசிசம் ! எதிர்த்து நில் : மார்ச் 30 சென்னையில் விளக்கப் பொதுக்கூட்டம் !

மக்கள் பெருமளவில் கூடிய பின் போலீசார், ”நாங்கள் என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டனர். ”பூட்டை உடைத்ததற்கு தண்டம் கட்டி விட்டு செல்லுங்கள்” என்றார் தோழர். உடனே ஆளை விட்டால் போதுமடா சாமி என்று நினைத்த போலீசு ரூ.500 எடுத்து நீட்டினர். அதற்கு அந்த பூட்டின் விலையான ரூ.100-ஐ மட்டும் பெற்று கொண்டு போலீசாரை மக்கள் எச்சரித்து விடுவித்தனர்.


தகவல்:
மக்கள் அதிகாரம்,
பென்னாகரம்.
தொடர்புக்கு – 97901 38614.