பேச்சுரிமை, கருத்துரிமை போராடுகிற உரிமை எல்லாம் சட்டப்படியே ஜனநாயக உரிமை என்று பீற்றிக் கொள்ளும் இந்த அரசமைப்பில் ஒரு அரங்கத்தில் கூட்டத்தை நடத்துவதற்கு கூட பல போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது.

தருமபுரியில், “கார்ப்பரேட் – காவி பாசிசம் ! எதிர்த்து நில் !” என்ற தலைப்பில் மார்ச் – 31 அன்று அரங்கக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி தேர்தல் அதிகாரியிடம் கடந்த மார்ச் 18-ம் தேதி மனு கொடுத்தோம். அரசு அதிகாரிகளோ 27-ம் தேதி பதில் மனு கொடுத்தனர். அதில் போலீசாரை அணுகுமாறு தெரிவித்தனர். அதன்படி தருமபுரி மாவட்ட கண்காணிப்பாளரை அணுகினோம். அங்கிருந்த ஆய்வாளர் ”நீங்கள் நடத்திக் கொள்ளுங்கள்” என்று வாய்மொழியாக தெரிவித்தார். ”பதிலை எழுத்துப் பூர்வமாக கொடுக்க வேண்டும்” என்று கூறினோம். ”அது தேவையில்லை நான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி விடுகிறேன்” என்றார்.

இதனைத் தொடர்ந்து கூட்ட வேலைகளை செய்து வந்தோம். அனுமதி இல்லை என்று கடைசி வரையில் தேர்தல் ஆணையமோ, போலீசோ தெரிவிக்காமல் கூட்டம் நடத்துவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பாக வந்து அனுமதி இல்லை என மண்டப நிர்வாகிகளை தொடர்பு கொண்டு தெரிவிக்கிறார் போலீசு ஆய்வாளர்.

தருமபுரி பெரியார் மன்றம் எதிரில் தடையை கண்டித்து கண்டனக் கூட்டம் நடத்தப்பட்டது.

”இது ஜனநாயக உரிமை பறிப்பு” என்று தேர்தல் நடத்தும் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தோம். தருமபுரி தேர்தல் நடத்தும் அலுவலர் ”தேர்தல் முடிந்த பிறகு வாருங்கள் அனுமதி தருகிறோம்” என்றார். ”ஏன் எங்களுக்கு ஜனநாயக உரிமை இல்லையா? நீங்கள் ஏன் சட்டப்பூர்வமாக நடக்க மறுக்கிறீர்கள்?” என்றதற்கு ”எனது வாய் கட்டப்பட்டு இருக்கிறது” என்றார்.

”உங்கள் வாய் கட்டியே இருக்கட்டும் எங்கள் வாயை ஏன் கட்டுறீங்க?” என்று கேட்டதற்கு திமிராக ”இவ்வளவு தான் பதில் சொல்ல முடியும்” என்று பதிலளித்தார். ”எங்களுக்கு ஜனநாயக உரிமை என்பது நீங்கள் போடும் பிச்சையல்ல” என்று கூறியதும் உடனே, ”போலீசை கூப்பிடு” என்றார் தேர்தல் அதிகாரி

படிக்க:
தேர்தல் 2019 : கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல ! கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு !
அடக்குமுறைதான் ஜனநாயகமா ? அடங்கிபோனால் மாறிடுமா | கோவன் பாடல்

தேர்தல் அதிகாரி, போலீசாரை தொடர்பு கொள்ளச் சொல்வதும், போலீசார் தேர்தல் அதிகாரியை தொடர்பு கொள்ளச் சொல்வதுமாக அலைக்கழித்தனர். தலைவர் சிலைக்கு மறைப்பு கட்டுவதுத் தொடங்கி, அங்கு போகாதே இங்கு வராதே, அதை செய்யக் கூடாது, இதனை பேசக்கூடாது என்று எண்ணற்ற உத்தரவுகளைப் போட்டு ஆட்டு வியாபாரிகூட ஆட்டை விற்க முடியாத நிலையை உருவாக்கிவிட்டு, ஜனநாயகத்தைப் பாதுகாக்கத்தான் இதைச் செய்வதாக தெரிவிக்கிறார். ஜனநாயகம் என்பது என்ன? அதனை ஒரு குடிமகனுக்கு எப்படி வழங்க வேண்டும் என்பதைப் பற்றி சட்டம் ஒன்றை சொல்கிறது, அரசு அதிகாரிகள் ஒன்றை நடைமுறைபடுத்துகிறார்கள்.

ஆட்டு வியாபாரியை வழி மறித்து கணக்கு கேட்கும் அதிகாரிகள், ஓட்டுக் கட்சிகள் தினந்தோறும் நடைபெறும் பிரச்சாரக் கூட்டங்களில் மக்களுக்கு பண வினியோகம் செய்து வருவதைத் தடுப்பதில்லையே. சொல்லப் போனால் அதிகாரிகளும் போலீசும் இந்த செயலை பாதுகாத்து வருகின்றனர் என்பதே மறுக்க முடியாத உண்மை. இவர்களைப் போன்ற ஜனநாயாக விரோதிகளை அம்பலப்படுத்தி பேசிவிடுவார்கள் என்பதாலேயே மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகளுக்கு அனுமதி கொடுப்பதில்லை.

ஒரு அரங்கக் கூட்டத்தை நடத்துவதற்கு தாம் பொறுப்பில்லை எனக் கைகழுவும் அதிகாரிகள், ஜனநாயக ஆட்சி என்ற பெயரில் போலீசின் ஆட்சியைத்தான் நடத்துகிறார்கள்.

ஜனநாயகத்தைக் காப்பதற்காகவே நடத்தப்படுவதாக சொல்லப்படும் தேர்தலை நடத்துகின்ற தேர்தல் ஆணையத்திடம் ஒரு அரங்கக் கூட்டத்துக்கான கருத்துச் சுதந்திரம் படும்பாடே, இந்தக் கட்டமைப்பின் தோல்விக்கு உதாரணம்!


தகவல்:
மக்கள் அதிகாரம்,
தருமபுரி மண்டலம்.
தொடர்புக்கு: 9790138614.


இதையும் பாருங்க …

மலர்ந்தே தீரும் … தாமரை மலர்ந்தே தீரும்

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க