01.03.2023

பத்திரிகை செய்தி

கார்ப்பரேட் கைக்கூலி மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, வீட்டு உபயோக சிலிண்டருக்கு ரூ 50 – ம், வணிக உபயோகத்திற்கான சிலிண்டருக்கு ரூ 351 – ம் விலையை ஏற்றியிருக்கிறது. ஏற்கனவே விலைவாசி உயர்வு எனும் தீ பற்றி எரிந்து கொண்டிருக்கையில், அதன் மேல் பெட்ரோலை ஊற்றியதற்கு, சமமாக இந்த விலை உயர்வு இருக்கிறது.

உழைக்கும்  மற்றும் நடுத்தர மக்கள் நெருப்பின் நடுவே சிக்கிக் கொண்டு வாழ்க்கையை ஒட்டுகின்றனர்.

சர்வதேச சந்தையின் தாக்கம் மற்றும் ரூபாயின் மதிப்பு சரிவு ஆகிய காரணங்களால் விலையேற்றம் தவிர்க்க முடியாததாகி விட்டது என எண்ணெய் நிறுவனங்கள் சாக்குபோக்கு சொல்கின்றனர். சில மாதங்களுக்கு முன் இந்தியா உலகின் ஐந்தாவது பொருளாதார வல்லரசாகி விட்டது எனவும், ஜி – 20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு ஏற்றிருக்கிறது எனவும் பீற்றிக் கொண்டு “சிறந்த ஆட்சி” நடப்பதாக தனக்கு தானே பாராட்டு பத்திரம் வாசித்துக் கொண்டது, பி.ஜே.பி கும்பல்.

ரூபாயின் மதிப்பு சரிந்தாலும் கவலையில்லை; ஏனெனில் இந்திய பொருளாதாரம் வலுவாக இருப்பதாக சில நாட்களுக்கு முன் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சவடால் அடித்தார்.

இந்த பீத்தல்களின் ஈரம் காய்வதற்கு முன்னரே இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது.


படிக்க: எஸ்.ஆர்.எஃப் சங்கத்தேர்தல்: மகத்தான வெற்றி! | பு.ஜ.தொ.மு


கடந்த 2022 ஜூலையில் நடந்த விலை உயர்வுக்குப் பின்னர் தற்போது பேரிடி போல விலை ஏற்றப்பட்டிருக்கிறது. முன்பு ரூ.5 அல்லது ரூ.10/ விலை உயர்வு நடந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. எல்லாவற்றிலும் பெரும் தாவல் தான்.

பெட்ரோல்,டீசல், எரிவாயு சிலிண்டர், அரிசி, பருப்பு, உள்ளிட்ட உணவு பொருட்கள், உயிர்காக்கும் மருந்துகள் என அனைத்தும் விலை உயர்ந்துள்ள நிலையில் ; விலைவாசி உயர்வுக்கு சமமாக ஊதிய உயர்வு இல்லாத நிலையில் ; நிரந்தர வருவாயே கேள்விக்குள்ளாகி உள்ள நிலையில் தொழிலாளர்களோ, ஏனைய மக்கள் மக்களோ தாங்கவொண்ணா துயரத்துக்குள்ளாகி நிற்கிறார்கள். விலைவாசி உயர்வு என்பது, நிரந்தரமான நிகழ்ச்சிப் போக்காக மாறி இருக்கிறது. உலகமயமாதல், ஆன்லைன் வர்த்தகம் ஜி.எஸ்.டி வரி விதிப்பு, சில்லறை வணிகத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் அனுமதி, ஆகியவை விலைவாசி உயர்வை தீவிரப்படுத்தும் காரணிகளாக உள்ளன.

மற்றொருபுறத்தில், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரிச்சலுகை, வட்டியில்லா கடன் உதவி, வராக் கடன் தள்ளுபடி இன்னும் எண்ணற்ற வகையில் வாரி வழங்கப்படுகிறது. அரசின் கொள்கை யாவும் கார்ப்பரேட் முதலாளிகளை கொழுக்க வைப்பதை தனது வாழ்நாள் இலட்சியமாக வைத்துக் கொண்டுருக்கிறது.

கார்ப்பரேட்டுகளுக்கு வெண்ணெயும்,உழைக்கும் மக்களுக்கு சுண்ணாம்பும் அப்பி விடுகின்ற அணுகுமுறையே மோடி அரசின் அணுகுமுறை. எரிவாயு சிலிண்டர் விலை உயர்வும் இந்த அணுகுமுறைகளில் ஒன்றுதான்.

நிலவுகின்ற விலைவாசி உயர்வை மக்கள் தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு சிலிண்டர் விலையை ஏற்றி, மக்கள் மீது மேலும் சுமையை திணிக்கும் நடவடிக்கையை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாநில ஒருங்கிணைப்புக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

எரிவாயு சிலிண்டர் மீதான விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துவதோடு, உழைக்கும் மக்கள் தங்கள் எதிர்ப்பை சாத்தியப்பட்ட வகையில் தெரிவிக்க கோருகிறோம்.

இவண்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
மாநில ஒருங்கிணைப்புக்குழு
தமிழ் நாடு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க