தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை: தேசிய கல்விக் கொள்கை 2020-இன் மாறுபட்ட வடிவமே!

தமிழ்நாட்டில் எந்த அரசாங்கம் அமைந்தாலும் அவை அமைக்கும் குழுக்களில்  ஆதிக்கம் செலுத்துபவராக இருக்கும் பேராசிரியர் இராமனுஜத்தை இந்த குழுவில் நுழைத்த போதே தி.மு.க-வின் வேடம் கலைந்து விட்டது.

பா.ஜ.க அரசால் 2020-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட “புதிய கல்விக் கொள்கை”க்கு எதிராக தமிழ்நாட்டின் தனிச்சிறப்பான அம்சங்களை கணக்கில் கொண்டு மாநில கல்விக் கொள்கை ஒன்றை வகுக்கப் போவதாக தி.மு.க அரசு கூறி வந்தது. அதனடிப்படையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை உருவாக்க குழுவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் அக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஜவஹர் நேசன். இது மாநிலம் முழுவதும் பேசுபொருளாகி உள்ளது.

2021-22ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்த போது, இந்த குழுவின் உருவாக்கம் பற்றி அறிவிக்கப்பட்டது. ஆனால் அறிவிப்பு வெளியான சுமார் 8 மாதங்களுக்கு பின்னர் தில்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் புதிய கல்விக் கொள்கைக்கான குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது.

குழு அமைக்கப்பட்ட ஓராண்டு காலத்திற்குள் தனது பரிந்துரையை அரசுக்கு அளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த குழு “தமிழ்நாடு மாநிலத்தின் எதிர்கால கல்விக் கொள்கையை வகுப்பதில் பெரும் பங்காற்றும்” என்று பலவாறாக பேசப்பட்டது. ஆனால், இந்த குழு ஜனநாயகமற்ற முறையில் செயல்படுவதாக கூறித்தான் ஜவஹர் நேசன் தனது ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த கடிதத்தில், “ரகசியமாகவும், ஜனநாயகமற்ற முறையிலும் செயல்படும் தலைமையைக் கொண்டதாலும், சில மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் அதிகார எல்லைமீறல்களாலும், முறையற்ற தலையீடுகளாலும், உயர்நிலைக் கல்விக் குழு சரியாகச் செயல்பட முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. தேசியக் கொள்கை 2020-இன் அடியைப்பின்பற்றி மாநிலக் கல்விக்கொள்கையை வடிவமைக்கும் திசையில் குழு முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்.


படிக்க: தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படும் புதிய கல்விக் கொள்கை : ஆசிரியர் உமா மகேஷ்வரி உரை !


இதற்கிடையில், ”தலைமை செயலகத்திலேயே ஒரு மீட்டிங் நடத்தி தேசிய கல்வி கொள்கையில் உள்ள அம்சங்களை இதில் இணைத்து கொள்கை உருவாக்குங்கள்” என அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி நிர்பந்தித்ததாகவும்,  இதை கேள்விகேட்ட ஜவஹர் நேசனை முதல்வரின் முதன்மை செயலாளர் உதயசந்திரன் ஒருமையில் பேசியும் குழுவை கலைத்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதை அறம் ஆன்லைன் அம்பலப்படுத்தி செய்தி எழுதியுள்ளது.

இந்த அளவு ஒன்றிய அரசுக்கும் அதன் கொள்கைகளுக்கும் விசுவாசத்தை காட்டும் அதிகாரிகளின் கை குழுவில் ஓங்கியுள்ளது. ஆனால் இந்த குழுவும் கூட தி.மு.க அரசு செய்யும் கண்துடைப்பு வேலைதான் என்பதையும் நாம் அம்பலப்படுத்த வேண்டும்.

இதிலிருந்து  காவிக் கொள்கையில் பா.ஜ.க-வும் தி.மு.க-வும் வேறுபட்டிருந்தாலும் கார்ப்பரேட் கொள்கையில் பா.ஜ.க-வும் தி.மு.க-வும் ஒன்றுதான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சமீபத்தில் வெளியான மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 140 கோடி மக்கள் வாழ்கின்றனர். இதில் கணிசமான எண்ணிக்கையில் பள்ளிக் கல்வி, உயிர் கல்வி, தொழில்க் கல்வி என பயின்று வருகின்றனர். இந்தியாவின் 2022-ஆம் ஆண்டுக்கான பள்ளிக் கல்விக்கான சந்தை மதிப்பு மட்டுமே 43 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். வருங்காலத்திலும் இந்த கல்வியின் சந்தை மதிப்பு மிக அதிகமாகும். இதனைக் கணக்கில் கொண்டு தான், கார்ப்பரேட்கள் கல்விச் சந்தையை கைப்பற்ற துடிக்கின்றன.

இந்த கார்ப்பரேட்களின் ஆதரவை பெற்று கட்சியை வளர்த்து அதன் மூலமாக தங்களது வயிறு வளர்க்கத்தான் கல்வியை தனியார் கார்ப்பரேட்களின் கைகளில் ஒப்படைக்கும் கொள்கையை அனைத்து ஓட்டுக் கட்சிகளும் செய்து வருகின்றன. ஏனெனில் இந்த அத்தனை ஓட்டுச் கட்சிகளும் புதிய தாராளவாத கொள்கையை ஏற்றுக்கொண்டவைதான். எந்த கட்சிகளிடமும் புதிய தாராளவாத கொள்கைக்கு மாற்று ஏதுமில்லை. அதனால் அந்த கட்சிகளால் கார்ப்பரேட்களின் நிதி மூலதன ஆதிக்கத்தை எதிர்க்க முடியாது. அதனால் தான்  இந்த ஓட்டு அரசியல் அமைப்புக்குள் மக்களின் எந்த அடிப்படை உரிமையையும் பெறமுடியாது என்று சொல்கிறோம்.

ஆனால் தி.மு.க ஆட்சிக்கு வந்த கடந்த இரண்டு ஆண்டுகளாக புதிய கல்விக் கொள்கையை வெவ்வேறு பெயர்களை வைத்து அமல்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது. இதை இந்த சமூகத்தில் ஓட்டுப் கட்சிகளுக்கு பரிவாக பேசும் தாராளவாதிகளே ஒப்புக்கொள்கிறார்கள்.


படிக்க: புதிய கல்விக் கொள்கையை கமுக்கமாக அனுமதிக்கும் தி.மு.க !


“ஒருபக்கம், மாநிலத்திற்காக தனித்துவமான கல்வி கொள்கையை உருவாக்க குழுவை அமைத்துவிட்டு, மற்றொரு பக்கம், யு.ஜி.சி, என்.சி.இ.ஆர்.டி ஆகியவை கொடுக்கும் பரிந்துரைகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. 2020-ஆம் ஆண்டில் தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது 3 ஆண்டுகள் முடியப்போகிற நிலையில், புதிய கல்விக் கொள்கையின் பல கூறுகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இதை அரசும், குழுவும் கருத்தில் எடுத்துகொண்டனவா என்று தெரியவில்லை,” என்கிறார் மாநிலக் கல்விக்கான பொது மேடையைச் சேர்ந்த பிரின்ஸ் கஜேந்திரபாபு.

ஆனால், இப்படி புதிய கல்விக் கொள்கையின் அம்சங்களை நடைமுறை படுத்துவது அதிகாரிகள் தானே தவிர தி.மு.க அரசு இல்லை என்ற வகையில் வாய் கூசாமல் பேசுகிறார் “மதிப்பிற்குரிய தாராளவாதியான” பிரின்ஸ் கஜேந்திரபாபு.

“நான் முதல்வன் திட்டம் ஆகட்டும், இல்லம் தேடி கல்வி ஆகட்டும் கடந்த மூன்று ஆண்டுகளாக புதிய கல்விக் கொள்கை என்பது தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வந்துவிட்டது. ஆனால், இல்லை என்று சொல்லி அதிகாரிகள் அமைச்சரையும் அமைச்சரவையையும் நம்ப வைக்கின்றனர். எனவே, உடனடியாக அமைச்சரவை இது குறித்து விவாதிக்க வேண்டும். அப்போதுதான், அமைச்சர்களுக்கு தெரிந்து இது நடக்கிறதா அல்லது தெரியாமல் நடக்கிறதா என்று தெரியவரும்” என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

அதாவது அமைச்சருக்கும் அமைச்சரவைக்கும் தெரியாமலே அதிகாரிகள் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் நடைமுறை படுத்திவருகிறார்கள் என்றும் இதனை தனி ஆணையம் அமைத்து விசாரணை செய்தால் தான் உண்மை வெளிவரும் என்று பேசியுள்ளார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

மாதச் சம்பளம் வாங்கிக்கொண்டு, குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து கொண்டு தி.மு.க அரசு செய்யும் அத்தனை வேலைகளுக்கும் இணையத்தில் முட்டுக்கொடுக்கும்  இணைய உ.பி-கள் கூட தி.மு.க ஆட்சிக்கு இத்தனை விசுவாசமாக நடந்துகொள்ள மாட்டார்கள்.

விதவிதமான பெயர்களில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதும்; அதனை மறைக்க மாநிலத்திற்காக தனித்துவமான கல்வி கொள்கையை உருவாக்க குழு அமைப்பதும்; அதை உயர்மட்ட அதிகாரிகளின் கைகளில் ஒப்படைப்பதும் எல்லாம் கல்வியைத் தனியார்மயப்படுத்தும் தி.மு.க-வின் கார்ப்பரேட் விசுவாசமே. அதே நேரத்தில் மக்களிடம் தனது முகமூடி அம்பலப்பட்டுவிடாமல் இருக்க அது செய்யும் ஜோடிப்பு வேலைகள் தான் இது என்பதும் நமக்குத் தெரியாமலில்லை.


படிக்க: இல்லம் தேடிக் கல்வி கொள்கை என்ற பெயரில் திணிக்கப்படும் புதிய கல்விக் கொள்கை! | புமாஇமு கண்டனம்!


தமிழ்நாட்டில் எந்த அரசாங்கம் அமைந்தாலும் அவை அமைக்கும் குழுக்களில்  ஆதிக்கம் செலுத்துபவராக இருக்கும் பேராசிரியர் இராமனுஜத்தை இந்த குழுவில் நுழைத்த போதே தி.மு.க-வின் வேடம் கலைந்து விட்டது. இந்த பேராசிரியர் இராமனுஜம் தான், தற்போது தி.மு.க அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வரும் தேசிய கல்வி கொள்கையின் ஒரு அங்கமான எண்ணும், எழுத்தும் திட்டத்தின் மூளையாக செயல்படுபவர். இதிலிருந்து கார்ப்பரேட்களுக்கு கல்வியை படையல் வைக்கும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதையே தனது ஆட்சியின்  நலனுக்கு உகந்தது என்று ‘சரியான முடிவில்’ தி.மு.க அரசியல் செய்கிறது. ஆனால் இந்த so called அப்பாவி தாராளவாதிகள் தான் தி.மு.க ஆட்சியாளர்களுக்கு எதுவும் தெரியாது என்று முட்டுக்கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்படி முட்டுக் கொடுக்கும் தாராளவாதிகளுக்கு தெரிவான‌ நோக்கமிருக்கிறது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இவை அனைத்தையும் கடந்து நாம் கவனிக்க வேண்டியது, “இந்த உயர்நிலைக் குழு உருவாக்கும் மாநிலக் கல்விக் கொள்கை, பெயரில் மட்டும் மாற்றம் கொண்ட தனியார்மய, வணிகமய, கார்ப்பரேட், சந்தை, சனாதன சக்திகளின் நலன்களைக் கொண்டிருக்கின்ற தேசிய கல்விக் கொள்கை 2020-இன் (புதிய கல்விக் கொள்கை) மற்றொரு வடிவமாகவே இருக்கும்” என்று ஜவஹர் நேசன் வெளியிட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த வார்த்தைகளைத்தான். இவை கார்ப்பரேட்களுக்கு கல்விச் சந்தையை திறந்துவிடுவதையே நோக்கமாக வைத்து இந்த மத்திய மாநில அரசுகளும் அதிகார வர்க்கமும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்ற அபாயமான உண்மையை சொல்வதாக உள்ளன.


ராஜன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க