மணிப்பூர் கொடூரம்: பா.ஜ.க அரசே முதல் குற்றவாளி

பிரச்சினை தீவிரமாக நடந்துகொண்டிருந்த காலகட்டங்களில் வெளிநாட்டு பயணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாரே அன்றி மணிப்பூர் பக்கம் தலை வைத்து கூட படுக்கவில்லை. மன் கீ பாத் நிகழ்ச்சியில் "மனம் திறக்கும்" மோடி மணிப்பூர் பற்றி வாய் திறக்கவில்லை. முடிந்த அளவு தனக்கு வாய்ப்பூட்டு போட்டுக்கொண்டு வலம் வந்தார்.

ணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே 3-ஆம் தேதி முதல் குக்கி மற்றும் மைதேயி சமூகத்தினரிடையே வகுப்புவாத அடிப்படையிலான கலவரம் நடைபெற்று வருகிறது. பரவலான வன்முறை மற்றும் தீ வைப்பு சம்பவங்களால் 150-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர், பல நூற்றுக்கணக்கான வழிப்பாட்டுத் தளங்கள் இடிக்கப்பட்டன. சுமார் 60,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். உயிர் பிழைப்பதே சிரமமான சூழலில் பலரும் அம்மாநிலங்களை விட்டு வெளியேறிய சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.

இவற்றையெல்லாம் திட்டமிட்டுத்  தொடங்கி வைத்த பா.ஜ.க அரசாங்கம் கலவரங்களை அடக்க முயற்சிக்காமல் அவற்றை வளர விட்டு வேடிக்கை பார்த்து ’ரசித்தது’. அது மட்டுமல்லாமல் ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்ட மதவெறி அமைப்புகளுக்கு ஆதரவு அளித்து கலவரங்களை தீவிரப்படுத்தியது. அதனுடைய இறுதி விளைவு மாநில அரசோ, மத்திய அரசோ இக்கலவரங்களை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மணிப்பூர் மக்களிடையே இன ரீதியிலான பிரச்சினை வேகமெடுத்தது.

அதன் வெளிப்பாடாக மைதேயி இனவெறியர்கள் தங்கள் கண்களில் பட்ட குக்கி மக்கள் பலரையும்  துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதோடு நூற்றுக்கும் மேற்பட்டோரை அடித்தே கொலை செய்தனர். இதுபோன்ற கொடுஞ்செய்களில் ஈடுபட்ட கலவரக்காரர்களின் உச்சக்கட்ட மனித தன்மையற்ற செயல்தான் தற்போது காணொளியாக வெளியாகி  நம் அனைவரையும் நிலைக்குலைய வைத்திருக்கிறது. சரியாக கூற வேண்டுமெனில் அதுதான் தற்போது  மணிப்பூர் பிரச்சினை பற்றி நம் அனைவரையும் வாய் திறக்க வைத்திருக்கிறது.

அந்த காட்டுமிராண்டித்தனமான செயல் என்னவென்றால் மெய்தி இனவெறியர்கள் திரண்டு  குக்கி பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்து ரத்தம் சொட்ட சொட்ட அவர்களை ஊர்வலமாக கூட்டிச் சென்று பட்டப்பகலில் பொதுவெளியில் கூட்டுப் பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். பல முறை அப்பெண்கள் கெஞ்சியும் விடாது தொடர்ந்து அனைவராலும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த கொடுமையான செயலை எதிர்த்த அப்பழங்குடியின பெண்களின் தந்தையும், சகோதரனும் சம்பவ  இடத்திலேயே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

“இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர்கள் எங்களை மீட்டு செல்வதாக கூறினார்கள்.  நம்பி அவர்களுடன் சென்றோம். கிராமத்தின் எல்லையில் வழிமறித்த கலவரக்காரர்கள் எங்களை இறங்கச் சொல்லி மிரட்டியதும் போலீஸ்காரர்கள் எங்களை இறங்கும்படி கூறி அவர்களிடம் ஒப்படைத்துச் சென்றுவிட்டார்கள்” என்கிறார் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர். இதுதான் அங்கு போலிஸ்துறை செயல்பட்ட லட்சணம்.


படிக்க: இனியும் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வை விட்டு வைக்கலாமா?


இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை தொடர்ந்து உடனடியாக தேசிய மகளிர் ஆணையத்தில் இரண்டு முறை புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் அவற்றையெல்லாம் ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை. உச்சநீதிமன்றமோ மணிப்பூர் பிரச்சினையில் தலையிட வலியுறுத்தி பழங்குடி அமைப்பினர் வழக்கு தொடுத்தபோதும் அதை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தவிர்த்தது. இப்படி அனைத்து அரசு நிறுவனங்களும் கண்களை இறுக்க மூடிக்கொண்டன.

இவர்களுக்கெல்லாம் ஒருபடி மேல் செயல்பட்டது மணிப்பூர் மாநில பா.ஜ.க அரசாங்கம். நடக்கும் பிரச்சினைகளை பாதுகாப்பு படை கொண்டு நிறுத்துவதற்கு பதில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை குறித்து வெளியிடும் இணையதள சேவைகள் அனைத்தையும் துண்டித்து மணிப்பூரை தனி தீவாக மாற்றி கலவரத்தின் பாதிப்பை வெளி உலகிற்கு தெரியவிடாமல் மூடி மறைத்தார்.

இதுபற்றி தற்போது வாய்திறந்த முதல்வர் பிரேன் சிங் இது போன்ற சம்பவங்கள் 100-க்கும் மேற்பட்டவை நடந்துள்ளன. அதில் ஒரு காணொளி தற்போது பொதுமக்களிடம்  பகிரப்பட்டு வருகிறது. இதுபோன்று காணொளி வெளியே வரக்கூடாது என்பதற்காகத்தான் மாநிலம் முழுவதும் இணைய சேவைகளை முடக்கினோம் என வெளிப்படையாக பேசுகிறார்.

ஒருபுறம் கலவரத்தை தூண்டிவிட்டு கைகட்டி வேடிக்கை பார்க்கும் மணிப்பூர் மாநில அரசாங்கம். மற்றொரு பக்கம் நாட்டில் ஒரு மாநிலம் பற்றி எரிகிறதே என்ற கவலையற்ற பிரதமர். பிரச்சினை தீவிரமாக நடந்துகொண்டிருந்த காலகட்டங்களில் வெளிநாட்டு பயணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாரே அன்றி மணிப்பூர் பக்கம் தலை வைத்து கூட படுக்கவில்லை. மன் கீ பாத் நிகழ்ச்சியில் “மனம் திறக்கும்” மோடி மணிப்பூர் பற்றி வாய் திறக்கவில்லை. முடிந்த அளவு தனக்கு வாய்ப்பூட்டு போட்டுக்கொண்டு வலம் வந்தார்.


படிக்க: மணிப்பூர்: பாசிஸ்டுகள் கலவரங்களை விரும்பலாம்! மக்கள் அமைதியை விரும்புகிறார்கள்!


தற்போது 77 நாட்கள் கழித்து  இந்த காணொளி புகைப்படங்கள் வெளியானதும் “இது இந்திய நாட்டிற்கே அவமானம்,குற்றவாளிகளை உடனே கைது செய்யுங்கள் மணிப்பூர் சகோதரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என முதலைக்கண்ணீர் வடிக்கிறார்”. திட்டமிட்டு மெய்தி குக்கி இனப் பிரச்சனையை உருவாக்கி அவர்களின் உயிரை பறித்த முதல் குற்றவாளியே மோடிதான். தற்போது  ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் பெண்களுக்கு இதுபோன்ற சம்பவங்கள் எங்கு நடந்தாலும் அது மணிப்பூர் ஆனாலும் ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆனாலும் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளத் தயங்கமாட்டோம் என்றார்.

அவர் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களை மேற்கோள் காட்டுவதற்குக் காரணம் அது காங்கிரஸ் கட்சி  ஆட்சி செய்யும் மாநிலம் என்பதே. அங்கேயும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது, ஏதோ இங்கு மட்டும் நடக்கவில்லை என மணிப்பூர் பிரச்சினையை மடை மாற்றும் நரித்தனத்தில் இறங்கிவிட்டார்.

இப்படி ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பையும் தனக்கு இசைவாகப் பயன்படுத்திக் கொண்டு இணக்கமாக இருந்த மெய்தி குக்கி மக்களிடையே பிளவை உண்டாக்கி அதை மத, இனக்கலவரமாக மாற்றி அம்மாநில மக்களின் நீண்டகால ஒற்றுமையையே சீர்குலைத்து விட்டது காவி பாசிச மோடி அரசு. அவர்களுடைய இந்துராஷ்டிர கனவை நிறைவேற்றுவதற்கு எந்த எல்லைக்கும் செல்வார்கள் காவி பயங்கரவாதிகள் என்பதற்கு மணிப்பூர் சம்பவமே துலக்கமான சான்று.


சித்திக்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க