05.10.2023

இந்த நாட்டின் மிகப்பெரிய பிரிவினைவாதி நரேந்திர மோடி!

பிரிவினையையும் கலவரத்தையும் உருவாக்கும்
பாசிச ஆர்எஸ்எஸ் – பாஜக தடை செய்யப்பட வேண்டும்!

உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து நரேந்திர மோடி மீது
வழக்கு பதிவு செய்ய வேண்டும்!

பத்திரிகை செய்தி

பீகாரில் நடத்தப்பட்ட சாதி வாரி மக்கள் கணக்கெடுப்பு இந்துராஷ்டிரக் கனவில் மிதக்கும் நரேந்திர மோடி அமித்ஷா பாசிச கும்பலுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நாடு முழுவதும் கலவரங்களை ஏற்படுத்தி அதன் மூலமாக ஆட்சியைப் பிடிக்கும் மோடி – அமித்ஷா பாசிச கும்பல், வட மாநில மக்களுக்கு தமிழ்நாட்டை எதிரியாக காட்டி பேசத் தொடங்கி இருக்கிறது. கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ” தமிழ்நாட்டில் இந்தி படிக்க அனுமதி இல்லை, சமஸ்கிருதம் அனுமதி இல்லை ” என்று தமிழ்நாட்டின் மீதான பொய் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி “எத்தனை மக்கள் தொகையோ அத்தனை உரிமை என்று சொல்கிறார்கள். நான் காங்கிரஸிடம் கேட்கிறேன். தெற்கில் குறிப்பாக தமிழ்நாட்டில் கோவில்கள் மீது அரசின் பிடி இருக்கிறது. அரசு அவற்றை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டுள்ளது. கோவில்களின் சொத்துகள் அரசின் கூட்டு சதி மூலம் அபகரிக்கப்பட்டு வருகிறது. கோவில்கள் சூறையாடப்படுகின்றன. கோவில் சொத்துகள் அபகரிக்கப்படுகின்றன. ஆனால் சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்கள் மீது கை வைக்கப்படுவதில்லை. அவற்றின் கட்டுப்பாட்டை தன்வசம் எடுத்துக் கொள்வதில்லை” என்று தெரிவித்திருக்கிறார். ஒரு நாட்டின் பிரதமர் என்ற முறையில் தான் இந்த நாட்டின் மிக மோசமாக ஆகக் கேடான பிரிவினைவாதி என்பதை மீண்டும் இந்த நாட்டு மக்களுக்கு தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறை மட்டுமல்ல வக்ப் வாரியமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.


படிக்க: செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழ்நாட்டிலிருந்து விரட்டியடி! | மக்கள் அதிகாரம்


தமிழ்நாட்டில் எப்பொழுதுமே கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்திருக்கின்றன. அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல் மடங்கள் ஆதீனங்கள் கட்டுப்பாட்டில் பல கோயில்கள் தற்பொழுதும் செயல்பட்டு வருகின்றன.

1817-இல் முதல்முறையாக மதராஸ் நிலைக்கொடைகள் மற்றும் வாரிசு இன்மையால் அரசுப் பொருட்கள் ஒழுங்குறுத்தும் சட்டம் உருவாக்கப்பட்டது. கோயில்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க, கோயில்களுக்கு வழங்கப்படும் அறக்கொடைகள் முறையாக செயல்படுகிறதா என கண்காணிக்க வழிவகை செய்தது. அப்பொழுது தமிழ்நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன.

1858-இல் இந்திய நிர்வாகம் கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து பிரிட்டிஷ் அரசுக்கு சென்றபோது ஏற்கனவே கோயில் மூலமாக கொள்ளை அடித்த பார்ப்பன கும்பல், மீண்டும் கோயில்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. பழையபடி கோயில் சொத்துக்களை அனுபவிக்கத் தொடங்கியதுடன், மீண்டும் முறைகேடுகள் கொள்ளைகள் அரங்கேறத் தொடங்கின.

இந்தச் சூழலில்தான் 1920-இல் பனகல் அரசர் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, அப்போது மதராஸ் மாகாணத்தில் இருந்த அனைத்து கோயில்களையும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயற்சித்தார். இதற்காக 1922-இல் இந்து பரிபாலன சட்டத்தை முன்மொழிந்த அவர், 1925-இல் இந்து பரிபாலன சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தினார். 1927-இல் ‘இந்து சமய அறநிலைய வாரியம்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. 1950-ஆம் ஆண்டு இந்து கோவில் சொத்து தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று இந்திய சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது. அரசியலமைப்பு பிரிவு 25(2) ஆனது மத விவகாரங்களில் வரையறுக்கப்பட்ட கட்டுப்பாட்டைப் பயன்படுத்துவதற்கு அரசுக்கு அதிகாரங்களை வழங்கியுள்ளது.1960-ஆம் ஆண்டு அன்றைய மெட்ராஸ் மாகாணத்தை ஆண்ட காங்கிரஸ் அரசு அமைத்த ராமசாமி ஐயர் கமிட்டி, இந்து பொது சமய நன்கொடை நிர்வாக சீர்கேடை தடுக்க அரசின் கட்டுப்பாடு அவசியம் என்றே வலியுறுத்தியது. தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறை உருவாக்கப்பட்ட பிறகு தென்னிந்தியா முழுவதுமே இந்து அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது. அதன்மூலம் இந்துக் கோயில்கள் தற்பொழுது அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.


படிக்க: காவிரி – கர்நாடகா பந்த்: பாசிச பாஜகவை தடைசெய்!


தற்பொழுது பாரதிய ஜனதா ஆண்டு கொண்டிருக்கக்கூடிய மகாராட்டிரத்திலும் அரசின் கட்டுப்பாட்டில் கோயில்கள் உள்ளன.

குஜராத்தில் புகழ்பெற்ற சோம்நாத் கோயில் அறக்கட்டளையானது 50 சதவீதம் அரசு கட்டுப்பாடும் மீது 50 சதவிகிதம் தனியார் கட்டுப்பாட்டில் இருக்கின்றது.

இதெல்லாம் ஏதும் அறியாதவர் அல்ல மோடி. எதிரி நாட்டின் மீது போர் தொடுப்பது போல, எதிரி நாட்டை குற்றம்சாட்டுவது போல, தமிழ்நாட்டின் மீது பொய்யான ஒரு குற்றச்சாட்டை மற்ற மாநிலங்களில் கூறி வருகிறார்.

மணிப்பூரிலே இனக்கலவரத்தை ஏற்படுத்தி மனித மாண்புகளை கேள்விக்கு உள்ளாக்கியவர் பாரதிய ஜனதா கட்சியின் மாநில முதல்வர் பைரன் சிங் .இன்று வரை அந்த மாநில முதல்வர் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படவில்லை. பட்டினி குறியீட்டில் இந்தியா முன்னிலை, மகிழ்ச்சி குறியீட்டில் பின்னடைவு, டாலர் ஆதிக்கம் காரணமாக இந்தியாவின் ரூபாய் மதிப்பு சரிவு, அம்பானி – அதானி பாசிச கும்பலுக்காக இந்த நாட்டையே தாரை வார்த்தது என எல்லா இடங்களிலும் அம்பலப்பட்டு போன நரேந்திர மோடியின் ஆட்சி, நாட்டு மக்களால் காரி உமிழப்பட்டு கொண்டிருக்கிறது. இச்சூழலில் தான் தமிழ்நாட்டை பொது எதிரியாக காட்டுவதன் மூலம் தன்னுடைய இழந்து போன பிம்பத்தை மீட்டுருவாக்க செய்ய முயல்கிறது அமித்ஷா – மோடி பாசிச கும்பல். அதன் ஒரு பகுதியாகவே இந்து கோயில்கள் அபகரிப்பு என்ற பொய்ப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.

வெறுப்பு பேச்சுக்களுக்கு எதிராக பலமுறை உச்ச நீதிமன்றம் தன்னுடைய கடும் கண்டனத்தை தெரிவித்து இருக்கிறது.

பசுவையும் கன்றையும் வாங்கிக்கொண்டு சென்ற முஸ்லிம் பால் வியாபாரி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இணையானது தமிழ்நாட்டு மக்கள் மீது நரேந்திர மோடி நடத்தியுள்ள தாக்குதல்.

தொடர்ந்து தமிழ்நாட்டின் மீதும் தமிழ்நாட்டு மக்களின் மீதும் வெறுப்பு பேச்சை உமிழக்கூடிய இந்த நாட்டின் பிரதமராக சொல்லிக் கொள்கின்ற நரேந்திர மோடி இந்த நாட்டின் மிகப்பெரிய பிரிவினைவாதியாக தன்னை நிரூபித்து இருக்கிறார். அவர் மீது உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும். இந்த நாட்டின் பிரதமராக நீடிப்பதற்கு நரேந்திர மோடிக்கு இனியும் தகுதி இல்லை என்பதே உண்மை.

ஒரு நாட்டின் பிரதமரும் அமைச்சரவையும் ஒரு மாநிலத்துக்கு எதிராக திட்டமிட்டு வன்மத்தையும் வஞ்சத்தையும் கக்குவார்கள் என்றால், அதற்கு அடித்தளமாக இருக்கக்கூடிய ஆர்எஸ்எஸ் – பாஜக என்பது ஒரு கட்சி அல்ல. அது ஒரு பயங்கரவாத இயக்கம். நாடு முழுவதும் பிரிவினைகளை ஏற்படுத்தி கலவரங்களை உருவாக்கி ஆட்சியைப் பிடிக்கும் ஆர்எஸ்எஸ் – பாஜக என்ற பயங்கரவாத இயக்கம் தடை செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து மக்கள் போராடுவது மிக முக்கியமான கடமையாகும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் மருது,
செய்தி தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை,
9962366321



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க