30.10.2024
சென்னை மாநகராட்சி பூங்காக்கள், மைதானங்கள், அரங்கங்களை
தனியாருக்குத் தாரைவார்க்கும் திமுக அரசு!
பத்திரிகை செய்தி
சென்னையில் உள்ள பூங்காக்களுடன் இணைந்தும், தனியாகவும், விளையாட்டு மைதானங்கள் உள்ளன. இவற்றில் உள்ள டென்னிஸ் திடல், ஷெட்டில் பேட்மிண்டன் திடல்களை கடந்த ஆண்டு 2023 அன்றே சென்னை மாநகராட்சி தனியாருக்குக் கொடுத்து விட்டது. இதன் தொடர்ச்சியாக, செவ்வாயன்று (அக்டோபர்.29) நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில், 9 செயற்கை புல் கால்பந்து விளையாட்டு மைதானங்களுக்கும் கட்டணம் நிர்ணயித்து, தனியார் வாயிலாகப் பராமரிக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மக்கள் இலவசமாகப் பயன்படுத்தி வந்த மைதானங்களுக்கு இனி ஒருவர் ஒரு மணி நேரத்திற்கு 120 ரூபாய் செலுத்த வேண்டும். இரண்டு அணிகள் (5+5) ஒரு மணி நேரம் விளையாடினால் 1200 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வாறாக 9 மைதானங்களில் இருந்து ஆண்டுக்கு 2 கோடியே 33 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயை தனியார் கட்டணமாக வசூலித்து, மாநகராட்சிக்கு 40 விழுக்காடு (93 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய்) தொகையைத் தர வேண்டும்.
மேலும், மாநகராட்சியில் உள்ள 871 பூங்காக்களில் 98 பூங்காக்கள் தத்தெடுப்பு முறையிலும், 168 பூங்காக்கள் மாநகராட்சி மூலமும் பராமரிக்கப்படும் நிலையில், எஞ்சியுள்ள 595 பூங்காக்களையும் 55.60 கோடி செலவில் தனியார் மூலம் பராமரிப்புக்கு விடவும் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும், செனாய் நகர் அம்மா அரங்கத்தின் வாடகை 3.40 லட்சம் ரூபாயிலிருந்து 5.43 லட்சம் ரூபாயாகவும், தியாகராயர் நகரில் உள்ள சர்.பிட்டி. தியாகராயர் அரங்கத்தின் வாடகை 20 ஆயிரத்து 650 ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாகவும் (18 விழுக்காடு ஜிஎஸ்டி தனி) உயர்த்தி தனியாருக்கு 5 ஆண்டுகளுக்கு குத்தகை விடும் தீர்மானமும் கொண்டு வரப்பட்டது. இதிலிருந்து மாநகராட்சிக்கு ஆண்டுக்கு 2.22 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை மட்டுமின்றி பிற மாநகராட்சிகளிலும் பணியில் உள்ள தூய்மை பணியாளர்கள் தற்போது வரை நிரந்தர பணி வழங்க வேண்டும் என்று பல்வேறு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு முறையாக ஊதியமும் அவர்களுக்கான அடிப்படை வசதிகளையும் வழங்காமல் அவர்களை சுரண்டும் தனியார் ஒப்பந்ததாரர்களிடம் மீண்டும் ஒப்படைப்பது எந்த விதத்தில் ஏற்புடையதாக இருக்கும்? இது ஒட்டுமொத்த அரசுத் துறையையும் கார்ப்பரேட் கும்பலிடம் ஒப்படைக்கும் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்கிற மறுகாலனியாக்க நடவடிக்கையின் ஒரு அங்கமாகும். இதனை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழக அரசே, சென்னை மாநகராட்சி நிர்வாகமே!
தனியாருடனான ஒப்பந்தங்களையும், தனியார்மயமாக்கும் தீர்மானத்தையும்
உடனடியாக திரும்பப் பெறு!
கார்ப்பரேட் கும்பலுக்கான சேவைகளைக் கைவிடு!

மக்கள் அதிகாரம்,
கோவை மண்டலம்,
9488902202.
(கடும் எதிர்ப்பு கரணமாக அக்டோபர் 30 அன்று மாநகராட்சி சார்பில் 9 விளையாட்டுத் திடல்களை தனியாருக்கு வழங்க அனுமதித்து மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 56-வது எண் கொண்ட தீர்மானத்தை மட்டும் ரத்து செய்வதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram