மதக் கலவரத்திற்கு அழைப்பு விடுக்கும் காவி பயங்கரவாதி பிரக்யா சிங் தாக்கூர்!

“உங்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருக்க வேண்டும். அவற்றைக் கூர்மையாக வைத்திருங்கள். நம் மகள்கள் கடத்தப்பட்டு அவர்களின் உடல்கள் சாலையில் வீசப்படும்போது அது மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது. அந்த வலியிலிருந்து மீள்வதற்கு எதிரி (இஸ்லாமியர்கள்) வரும்போது அவர்களைப் பாதியாக வெட்ட வேண்டும்” என்று கூறி இஸ்லாமிய மக்களைப் படுகொலை செய்வதற்கும் மதக்கலவரத்திற்கும் வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார்.

0

டந்த செப்டம்பர் 28 அன்று மத்தியப்பிரதேசத்தின் தலைநகர் போபாலில் உள்ள சோலா மந்திர் பகுதியில் விஸ்வ ஹிந்து பரிஷத் காவி குண்டர் படை சார்பாக மத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

அதில் கலந்துகொண்டு பேசிய காவி பயங்கரவாதி பிரக்யா சிங் தாக்கூர், இஸ்லாமியர்கள் ‘லவ் ஜிஹாத்’ மூலம் இந்துப் பெண்களை வஞ்சகத்தால் சிக்க வைப்பதாகவும் ரக்ஷா பந்தன் (சகோதர) உறவுகளைக் கெடுப்பதாகவும் கூறி அப்பட்டமாக இஸ்லாமிய வெறுப்புணர்வைத் தூண்டியுள்ளார்.

மேலும், அங்கு கூடியிருந்த பெண்கள் மற்றும் சிறுமிகளைப் பார்த்து, “அவர்கள் (இஸ்லாமியர்கள்) தங்கள் சொந்த சகோதரிகளையே மதிக்கவில்லை என்றால் உங்களை எப்படி தங்கள் சகோதரியாக மதிக்க முடியும்? ஒருபோதும் இஸ்லாமியர்களின் சகோதரிகளாக மாறாதீர்கள்” என்று இஸ்லாமியர்களை இழிவுபடுத்தி மதநல்லிணக்கத்தை சிதைக்கும் விதமாகப் பேசினார்.

“இந்துக்கள் கோயில்களுக்கு அருகில் இஸ்லாமியர்கள் நடத்தும் கடைகளில் உணவு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அத்தகைய கடைகளை அடையாளம் கண்டு அவர்களை அடித்து சட்ட அமலாக்க நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும்” என்று இஸ்லாமிய மக்களை சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளார்.

அத்துடன், “இந்து மத நம்பிக்கையற்றவர்களை (Vidharmis) உங்கள் வீடுகளுக்குள் நுழைய விடாதீர்கள். நாங்கள் அவர்களிடமிருந்து எதையும் வாங்கவோ சாப்பிடவோ மாட்டோம். இந்த சிறிய உறுதிமொழிகள் சமூகத்தைப் பாதுகாப்பதற்கு மிகப்பெரியவை” என்று பெண்களை உறுதிமொழி எடுக்குமாறு வெறுப்பைக் கக்கினார்.

இதன் உச்சமாக, “உங்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருக்க வேண்டும். அவற்றைக் கூர்மையாக வைத்திருங்கள். நம் மகள்கள் கடத்தப்பட்டு அவர்களின் உடல்கள் சாலையில் வீசப்படும்போது அது மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது. அந்த வலியிலிருந்து மீள்வதற்கு எதிரி (இஸ்லாமியர்கள்) வரும்போது அவர்களைப் பாதியாக வெட்ட வேண்டும்” என்று கூறி இஸ்லாமிய மக்களைப் படுகொலை செய்வதற்கும் மதக்கலவரத்திற்கும் வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார்.


படிக்க: இந்து பயங்கரவாதத்தின் நிரூபணங்கள்: மாலேகான், அஜ்மீர், மெக்கா மசூதி, சம்ஜவ்தா குண்டு வெடிப்புகள்!


பிரக்யா சிங் தாக்கூரின் இந்து மதவெறி பேச்சைக் கண்டித்துள்ள மத்தியப்பிரதேச எதிர்க்கட்சித் தலைவர் உமாங் சிங்கர், “பிரக்யா தாக்கூர் மீண்டும் மீண்டும் குற்றத்தில் ஈடுபடுபவராக இருக்கிறார். மத்தியப்பிரதேசம் வேலையின்மை, பணவீக்கம் மற்றும் ஆட்சேர்ப்பு மோசடிகளால் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில், பொதுமக்களைத் தவறாக வழிநடத்த பா.ஜ.க. இதுபோன்ற சொல்லாடலைப் பயன்படுத்துகிறது” என்று கூறியுள்ளார்.

மத்தியப்பிரதேசத்தில் மதக் கலவரத்திற்கு அழைப்பு விடுத்துள்ள இந்த பிரக்யா சிங் தாக்கூர்தான் 2009-இல் மகாராஷ்டிராவின் மாலேகானில் மசூதியருகே குண்டுவெடிப்பை நிகழ்த்தி ஆறு இஸ்லாமியர்கள் படுகொலை செய்தவர். பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட காவி பயங்கரவாதிகளின் குற்றம் நிரூபிக்கப்பட்ட போதிலும், வழக்கை என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சமீபத்தில் இப்பயங்கரவாதிகளை விடுதலை செய்தது மோடி அரசு.

ஆனால், விடுதலையான சில நாட்களிலேயே மீண்டுமொரு படுகொலைக்கு அழைப்பு விடுத்தும், இஸ்லாமிய வெறுப்பையே மூலதனமாகக் கொண்ட பாசிச மோடி அரசும் மத்தியப்பிரதேச பா.ஜ.க. அரசும் பிரக்யா மீது வழக்குப் பதியவில்லை. ஆனால், உத்தரப்பிரதேசத்தின் பரேலியில் முகமது நபியின் பிறந்தநாளான மீலாடி நபி அன்று “நான் முகமதை (முகமது நபி) நேசிக்கிறேன்” (I Love Mohammad) என்ற தலைப்பில் அமைதியாக கூட்டம் நடத்திய இஸ்லாமியர்களைக் கைது செய்து ஒடுக்கியுள்ளது. அவர்களுக்கு ஆதரவாகப் போராடியவர்களும் போலீசால் கைது செய்து ஒடுக்கப்பட்டுள்ளனர். இதுவே, இந்துராஷ்டிரத்தின் இரட்டை நீதியாகும்.

எனவே, இஸ்லாமிய மக்களைப் படுகொலை செய்வதற்கு அழைப்பு விடுத்த காவி பயங்கரவாதி பிரக்யா சிங் தாக்கூரைக் கைது செய்து சிறையிலடைக்க வலியுறுத்தி அனைத்து சமூக இயக்கங்களும் புரட்சிகர – ஜனநாயக சக்திகளும் குரலெழுப்ப வேண்டும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க