அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
சர்வதேச அளவில் கட்டமைப்பு மேம்பாடுகள் வேகமாக வளர்ச்சி பெறும் தொழில் நகரமாகிறது ஓசூர். அதேசமயத்தில், கார்ப்பரேட் திட்டங்கள் தொடர்ந்து அமல்படுத்தப்படும் நகரமாகவும் ஓசூர் உள்ளது.
10 இரு வழிச் சாலைகள் தற்போது நான்கு வழிச்சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. நகரத்தின் மூன்று ஆறு வழிச் சாலைகளுடன் உள்கட்டமைப்பு வசதிகள் வளர்ந்து வருகிறது. மேலும், சர்வதேச விமான நிலையம், அறிவு சார் வழித்தடம், புதிய சிப்காட், தொழிற்பேட்டை, தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள், வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் என ஓசூர் பகுதியில் நிறைவேற்றப்படும் திட்டங்களுக்காக சுமார் 3,500 ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதாகத் தகவல் கிடைக்கிறது.
மேலும், சர்வதேச விமான நிலையம் மற்றும் அறிவு சார் வழித்தடம் உள்ளிட்ட தொழிற்சாலை வளர்ச்சிப் பணிகளுக்கு சுமார் 120 கிராமங்கள் 39 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது. இது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயத்தை முழுவதுமாக அழித்துவிடும் நிலைமையை உருவாக்கியுள்ளது.
தமிழ்நாட்டின் தோட்டக்கலை மற்றும் விவசாயத்தின் மையமாக கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ளது. இங்கு மாம்பழம், தென்னை தக்காளி, வாழை, ரோஜா, கேழ்வரகு, துவரை, கொள்ளு, நிலக்கடலை, சோளம், தட்டைப் பயறு, காய்கறிகள் மற்றும் மரவள்ளிக் கிழங்கு, பீன்ஸ், முட்டைகோஸ், காலிஃபிளவர், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, மற்றும் பூண்டு, ஏலக்காய், மிளகு, பருத்தி, புளி போன்றவை விளைவிக்கப்பட்டு உற்பத்தியில் முக்கிய இடம் பங்கு வகிக்கிறது.
மேற்குறிப்பிட்ட திட்டங்களுக்காக விவசாய நிலங்கள் கைப்பற்றப்பட்டால் இத்தகைய விவசாய நிலங்களை இழக்க நேரிடும். ஏற்கெனவே, பல கார்ப்பரேட் திட்டங்களுக்குப் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை இழந்து தற்போது மீதமுள்ள 30 சதவிகித நிலங்களில் மட்டுமே விவசாயம் நடைபெறுகிறது. இந்நிலையில், ஓசூர் சுற்றுவட்ட பகுதியில் சர்வதேச விமான நிலையம் மற்றும் அறிவுசார் வழித்தடம் அமைக்கப்பட்டால் மீதமுள்ள விளைநிலங்களையும் இழக்க நேரிடும்.
இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கார்ப்பரேட் திட்டங்களை இரத்து செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறது.
விளைநிலங்களை அழிக்கும் கார்ப்பரேட் திட்டங்களைக் கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அனைத்து விவசாய சங்கங்களும் இணைந்து பல்வேறு கட்ட போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்ட விவசாய சங்கங்களின் இப்போராட்டத்திற்கு மக்கள் அதிகாரக் கழகம் ஆதரவளிக்கிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள்:
சர்வதேச விமான நிலையம் வேண்டாம்!
அறிவுசார் வழித்தடம் திட்டம் வேண்டாம்!
புதிய தொழிற்பேட்டைகள் வேண்டாம்!
எஸ்.டி.ஆர்.ஆர். ரோடு (Satellite Town Ring Road) திட்டங்கள் வேண்டாம்!
கார்ப்பரேட் திட்டங்களுக்காக விவசாய விளைநிலங்களை அபகரிக்க வேண்டாம்!
ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட பகுதியை விவசாய மண்டலமாக அறிவிக்க வேண்டும்!
வேண்டாம் கார்ப்பரேட் திட்டங்கள்! வேண்டும் ஜனநாயகம்!
பதிவு
தோழர் இரஞ்சித்,
மாவட்டச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











